ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரைபகுதி 3


கோவில் நுழைவாயிலைத் தொடர்ந்து த்வஜஸ்தம்பப் பகுதி. அதைத் தாண்டி இன்னொரு நுழைவாயில். த்வஜஸ்தம்ப பகுதியின் இரு புறங்களில் மண்டபங்கள் இருக்கின்றன. அவற்றில் அழகிய தூண்களைப் பார்த்தேன். வலதுபுறத்தில் இருக்கும் மண்டபத்தில், இந்தக் கோவில் எந்த நிலையில் இருந்தது, எப்படி அதனை சரிசெய்திருக்கிறார்கள் என்று படங்களுடன் கூடிய விளக்கப் பலகைகளை வைத்திருக்கிறார்கள். அவற்றைச் சென்று பார்க்க நேரம் இல்லை.

இதனைப் பற்றி எழுதும்போது, ஜனவரி ஆரம்பத்தில் நான் சென்றிருந்த ஸ்ரீரங்கம் கோவில் நினைவுக்கு வந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவில் கணக்குகளை ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்திருந்தது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஓலையில் எழுதி, அதனை இன்னொருவர் சரிபார்த்து, பிறகு மற்றவர்கள் அதனைச் சரிபார்த்து, அவற்றைப் பாதுகாத்து என்று எத்தனை வேலைகள் இருந்திருக்கும். எந்த நிலையிலும் ஏமாற்றுதல் இருக்கக்கூடாது என்று எத்தகைய கண்காணிப்புகளை மேற்கொண்டிருப்பார்கள்? கோயில்களுக்கு எத்தனையோ சொத்துக்கள் இருந்திருக்கவேண்டும். அவற்றில் எவ்வளவு யார் யார் களவு கொண்டார்களோ. அசையாச் சொத்தான கோவில்கள் அப்படியே இருக்க, அசையும் சொத்துக்களான தங்கம் முதலியவைகள் எவ்வளவு களவு போனதோ..யாருக்குத் தெரியும்.  நான் அந்த கணக்கெழுதிய ஓலைகள் சிலவற்றைப் பார்த்தேன். அவற்றை கெமிக்கல் சேர்த்துச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். எவ்வளவு செலவு மற்றும் உழைப்பு பிடிக்கும் வேலை. சிதைந்த கோயில்களை மீட்டெடுப்பதும் மிகவும் கடினமான வேலை.

இரண்டாம் நுழைவாயிலைத் தாண்டியதும் ரங்க மண்டபம் வருகிறது. அதற்கு வெளிப்பகுதியில், கோவில் தரிசனத்திற்கு வருபவர்கள் 10 ரூ கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்குமாறு அமைத்திருக்கிறார்கள். இதனை அஹோபிலத்தில் உள்ள 4-5 நரசிம்ஹர் கோவில்களிலும் பார்த்தேன். இது கோவிலைப் பராமரிக்க ஒரு சிறு உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது. நம் கோவில்களிலும் உள்ளூர்காரர்களைத் தவிர பிறருக்கு 10 ரூபாயாவது நுழைவுச் சீட்டு வைக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

இந்த ரங்கமண்டபத்தில், யாளிச் சிற்பங்களும், கோவிலை மீட்டுக்கொடுத்த மற்றும் அதன் சீரமைப்புக்கு உதவிய 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலரின் சிலைகளையும் பார்த்தேன். இது தவிர நவ நரசிம்ஹர் சிலைகளும் (ஆனால் 8 தான் இருக்கிறது) அங்குள்ள தூண்களில் செதுக்கப்பட்டிருக்கிறது.

மண்டபத்தின் வெளிப்பகுதியில் உள்ள சிற்பங்களும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தன. ஒரு மண்டபத்தை நிர்மாணிக்கவே எத்தனை எத்தனை உழைப்பு தேவையானதாக இருந்திருக்கிறது. அத்தகைய சிற்ப நேர்த்திதான் இப்போதும்கூட அவர்களைப் பற்றி பார்வையாளர்கள் நினைத்துப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

மண்டபத்தில் நிறைய சிற்பங்கள் இருக்கின்றன. மண்டபத்தைத் தாங்கும் பீடத்திலும் மிக அழகாக போர்க்காட்சிகள் போன்றவை சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்) 

75 கருத்துகள்:

 1. கோயிலுக்கு வருபவர்களில் உள்ளூர், வெளியூர் என்று பிரிக்க முடியாது. சில கோயில்களில் உள்ள நுழைவு சீட்டு நீக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம், முக்கியமாக திருப்பதி, ஸ்ரீரங்கம், பழனி, போன்ற பெரிய கோயில்கலில். 

  படங்கள் அழகு. கமெரா கொண்டு போய் எடுத்தீர்களா? 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜெயகுமார் சார்

   கோவில்களில் உள்ள நுழைவுச்சீட்டு முறை, என்னைப் பொறுத்தவரையில் சரியானதுதான். இதில் பணக்கார்ர்கள் என்ற பேதம் கிடையாது. கோவிலுக்கு ஏதாவது செய்ய நினைப்பவர்கள், இல்லை, சாதாரண வழியே போதும் என நினைப்பவர்கள் என்றே பிரிக்கவேண்டும். நீங்கள் குறிப்பிட்ட கோயில்களிலும் சாதாரண தரிசன வரிசை உண்டு.

   ஆனால் கோவிலுக்குச் செல்வது இறை தரிசனத்திற்குத்தான். அதனால் எல்லோரும் முன்மண்டப வரிசையில் சேர்ந்துவிடுவார்கள். இறைவன் நம்மைக் காண்பது நாம் எப்படி வந்தோம், எவ்வளவு அருகில் பக்தன் இருக்கிறான் என்பதைப் பொருத்ததல்ல

   நீக்கு
  2. என்னிடம் பல கேமராக்கள் உண்டு. அவற்றை கோயில்களுக்கு, யாத்திரைக்கு (கடந்த சில வருடங்களாகவே) எடுத்துச் செல்வதில்லை. அதை டெபாசிட் பண்ணுவது போன்ற காரணங்களுக்காக. அலைபேசியில்தான் அனைத்துப் படங்களும்.

   நீக்கு
 2. முதலில் கண்ணில் பட்டவர் ஆஞ்சு!! கடைசியாக இருப்பவற்றுள். அழகான வடிவத்தில் இடக்கை இப்படி உடைந்திருக்கிறதே....பார்க்க கஷ்டமாக இருக்கிறது. வயிற்றுப் பகுதியிலும் சிதைந்திருக்கிறது போல இருக்கு..அதன் மேலே விஷ்ணுக்கு அடுத்தாப்ல துவாரபாலகர்? கைகளைக் காணலை

  சிற்பங்கள் அழகு என்றால் நீங்க எடுத்த விதம் அருமை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கோவில் முஸ்லீம் படையெடுப்பில் அழிந்தது. அவர்களின் ஆக்கிரமிப்பில் சில காலம் இருந்தது

   நீக்கு
 3. தூண் சிற்பங்கள் வாவ்!!! செமையா இருக்கு..

  ஆமாம் பெண்ணின் உடையலங்காரம், அரசரின் கிரீடம், இடுப்பின் மடிப்பு ....எத்தனை நுணுக்கமா ஒவ்வொரு உடற்கூறும் செதுக்கியிருக்காங்க இல்லையா....

  வாய்ப்பு கிடைச்சா நானும் சுற்றி சுற்றி எடுத்துத் தள்ளிடுவேன்...

  செமையா இருக்கு நெல்லை, பாராட்டுகள்

  அப்பால வாரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா ரங்கன். சிற்பிகளின் திறமை வியக்கத் தக்கது. எனக்கென்னவோ, ஸ்பான்சர்கள் செலவு பட்ஜெட் பொருத்து, நல்ல சிற்பிகளை வைத்து கோவிலைச் செதுக்கியிருப்பார்கள் எனத் தோன்றுகிறது

   நீக்கு
 4. அசையாச் சொத்தான கோவில்கள் அப்படியே இருக்க, அசையும் சொத்துக்களான தங்கம் முதலியவைகள் எவ்வளவு களவு போனதோ..யாருக்குத் தெரியும். //

  ஹாஹாஹ நீங்க வேற...அதையும் எங்க வம்சத்துச் சொத்துன்னு, அந்தப்பரம்பரையில் வந்தவங்கன்னு சொன்னாலோ?!!!....அப்படி இல்லைனாலும் கொள்ளைஅடிக்காமலா இருக்காங்க? அதான் அரசின் கீழ் னு/தேவஸ்தானம் அது மறைமுகமா சொந்தம் கொண்டாடுவது போலத்தானே?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருவல்லா அல்லது திருக்கடித்தானம்... இது மிக் பெரும் செல்வமுள்ள கோவிலாக இருந்தது. இதற்காகவே திருவிதாங்கூரிலிருந்து படையெடுத்து வந்து டன் டன்னாக தங்கத்தை எடுத்துச் சென்றார்கள் எனப் படித்திருக்கிறேன். அதற்கு முன்பு தினமும் ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் கோவிலில் நடைபெற்றுக்கொண்டு வந்ததாம். அந்தப் பகுதி வரும்போது மேலும் பார்ப்போம்.

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 6. ஓலையில் எழுதுவதே கடினம். அதுவும் அதை நிறைய படி எடுத்தல் என்பது இன்னும் கடினம்.

  அத்தனை சிற்பங்களும் மிக அழகு. அனைத்து நரசிம்மர்களும் மிக அருமை.

  அரசரின் தலை கிரீடம் கிருஷ்ணதேவராயர் கிரீடம் போல் உள்ளது.
  தூண்களின் சிற்பங்கள் அத்தனையும் பார்த்து கொண்டே இருக்கலாம்.
  ஒரு குதிரையில் கிருஷ்ணர் வெண்ணையை வைத்து கொண்டு அமர்ந்து இருப்பது போல இருக்கிறது, அட்டை அலங்காரம், தலை கொண்டை எல்லாம். கடைசி படம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. நிற்பது எதன் மேல்? இரண்டு பக்கம் முகம் தெரிகிறது, நடுவில் மிருகத்தின் கால் போல இருக்கிறது.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிருஷ்ணதேவராயருக்கு அடுத்த மன்னர். அவர்தாம் கோயிலை முஸ்லீம்களிடமிருந்து மீட்டுக் கொடுத்தவர். பின்பு இது வரும்.

   கோவில் மண்டபங்களில் யாளிச் சிற்பங்கள் சகஜம். அவற்றை எவ்வளவு அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள், எந்தெந்த மாதிரி சிற்பங்களையும் அதே கல்லில் செதுக்கியிருக்கிறார்கள், வெறும் கல்பகுதியாக விடாமல் கிடைத்த இடங்களில் எப்படிப் பொருத்தபான சிற்பங்கள் அமைந்துள்ளது என்பதில்தான் கோவிலுக்குக் கோவில் வித்தியாசப்படுகிறது

   நீக்கு
 7. எந்த ஒரு பழம்பெரும் கோவிலுக்குள்ளும் போகுமுன்னர், அதைக் கட்டிய மன்னனையும், உழைத்த கட்டடக்கலை நிபுணர்கள், சிற்பிகள், பிற்காலத்தில் பாதுகாத்தவர்கள் போன்றோரையும் ஒரு முறை மனதில் நினைத்து நன்றிகூறிவிட்டு உள்ளே பிரவேசிப்பது நல்லது எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. ஏகாந்தன் அவர்களது இந்தக் கருத்தினை ஐம்பது வருடங்களுக்கு முன்பே எங்களது தமிழாசிரியர் திரு. பாலசுந்தரம் ஐயா அவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்..

   நீக்கு
  2. உண்மை ஏகாந்தன் சார்... ஒரு கோவில் உருவாவதற்கு ஸ்பான்ஸர்களான அரசர்கள், கோவிலை எழுப்பிய சிற்பிகள் மற்றவர்கள், அதனைப் பாதுகாத்த அரசர்கள் போன்றோரையும் மனதில் ஒரு முறை நிச்சயம் நினைக்கவேண்டும். கோவிலை தற்போது பாதுகாத்துவரும் கைங்கர்யபரர்கள் (தூய்மை செய்வோர், கோலம் போடுவோர் என்று பலர்) இவர்களையும் மனதால் நினைத்து நன்றி கூறவேண்டும். எல்லோருக்கும் தெரிந்ததுதான், சந்நிதிக்குள் நுழைவதற்கு முன்பு துவாரபாலர்களிடம் அனுமதி பெற்றுத்தான் நுழையவேண்டும். அதனால்தான் துவாரபாலகர்களின் சிலை அங்கு உள்ளது.

   நீக்கு
  3. சிறப்பான கருத்து.. என் நெஞ்சில் எப்போதும் இருப்பவை..

   சென்ற வருடம் மணிக்குன்ற பெருமாள் கோயிலில்
   வைபவத்தின் போது நாயனக்காரர்களை கையெடுத்து வணங்கி சிறு தட்சணையை வழங்கி விட்டு வந்தேன்..

   ஐயாறு கோயிலில் தேவாரம் இசைத்தவர்களையும் வணங்கி காணிக்கை செய்திருக்கின்றேன்..

   திருவாசகம் முற்றோதல் செய்த அடியார்கள் முன்பு சாஷ்டாங்கம் செய்திருக்கின்றேன்..

   வைணவ நம்பிகளுன் முன்பு தண்டனிட்டு வணங்கத் தான் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை..

   மகிழ்ச்சி.. நன்றி..

   ஓம் ஹரி ஓம்..

   நீக்கு
  4. இவ்வளவு கஷ்டங்கள் அரசு கொடுத்தும் இன்னமும் கோயிலிலேயே இருந்து அதனைப் பாதுகாப்பவர்கள் வெகுசிலரே. அவர்களில் நாயனம், தவில் போன்றவர்களும், கோயில் காப்பாளர்களும், சுத்தம் செய்பவர்களும், கோயில் மூர்த்தங்களைப் பார்த்துக்கொள்பவர்களும் அடங்குவார்கள். அவர்களுக்குத்தான் அரசு செலவு செய்வதில்லை. தங்கள் கட்சிக்காரர்களை, மாற்று மதத்தினரை அரசு வேலை என்ற பெயரில் கோயில்களுக்கு அனுப்புகிறது.

   நீக்கு
  5. //வைணவ நம்பிகளுன் முன்பு தண்டனிட்டு வணங்கத்// - பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத செய்தி. வைணவத்தைப் பின்பற்றுபவர்கள், வைணவப் பெரியார்களை (அவர்கள் எந்தப் பிரிவினராக இருந்தாலும், முக்கோலை வைத்திருப்பவர்களாக இருப்பார்களாகில்) தெண்டனிட்டு வணங்கவேண்டும் (தண்டம் எனப்படும் தடியை அப்படியே நிறுத்தினால் அது உடனே விழுந்துவிடும். அதுபோல எண்சாண்கிடையாக விழுந்து வணங்கவேண்டும்). - இதுதான் மரபு. திருப்பதி போன்ற இடங்களில் மாடவீதியும் சுத்தமாக இருப்பதால் சட் என்று விழுந்து வணங்க முடிகிறது. மற்ற இடங்களில், உடை கெட்டுப்போயிடுமே என்று தோன்றுவதால் வெளியில் கண்டவுடன் வணங்க மனது வருவதில்லை, ஆனால் மடங்களில் விழுந்து வணங்குவேன். கோயில்களில் த்வஜஸ்தம்பத்தைத் தாண்டி யாரையுமே விழுந்து வணங்குதல் முறையில்லை.

   நீக்கு
  6. துவஜ ஸ்தம்பத்தைக் கடந்து அல்ல...

   நான் சொல்ல வந்ததது மடங்களிலும் திருவீதிகளிலும் தான்..

   நீக்கு
  7. கோயில் கைங்கர்யம் செய்பவர்களை, பக்தர்களை அவர்கள் யாராகிலும் அன்போடுதான் அணுகவேண்டும். மதிக்கவேண்டும். சிலரை மடங்களிலோ, கோயில் வளாகத்திலோ பார்க்கையில், அவர்களது பக்தித் தூய்மையை, மேன்மையை உணர நேர்கையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கத் தோன்றும். ஆனால் அப்படி செய்ய சூழல் சரியாக அமையாது போகலாம். அவ்வாறாயின், மனதில் இருத்தி மானசீகமாக வணங்கிச் செல்வது நல்லது எனத் தோன்றுகிறது.

   படங்கள், கட்டுரையோடு பின்னூட்டமாக வரும் அருமையான கருத்துகளும், அனுபவங்களும் ஆசையாக வாசிக்கவைக்கின்றன.

   நீக்கு
  8. உங்கள் பின்னூட்டம் மனதை நெகிழ்த்துகிறது ஏகாந்தன் சார். பிறருக்கு சட் எனப் பணம் (கொஞ்சமே ஆனாலும்) கொடுக்க மனம் வருவதே பெரிது. சில நேரங்களில் ஒருவருக்குக் கொடுத்தால் பெரிய வரிசை வந்துவிடுமே என்ற தயக்கம்.

   நீக்கு
 8. இந்த நாளும் இனிய நாளே..

  எல்லாருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாளென் செயும் கோளென் செயும். நன்றி துரை செல்வராஜு சார்.

   நீக்கு
  2. இதற்கான பதில்..

   மிகப் பெரியது... எளிதில் வசப்படாதது..

   மாம்பூவானது கனிவதற்கும் நாள் வேண்டும் .. கோள் வேண்டும்..

   ஸ்ரீ ராமனுக்கு உதவுவதற்குக் கூட சுக்ரீவனுக்கு நாளும் கோளும் தேவைப் பட்டிருக்கின்றது...

   வீட்டுக்குள் சென்று விட்டால் மழையில் நனையாதிருக்கலாம்..

   ஆனால் வீடு தான் இல்லையே!..

   குமரேசன் இரு தாள்களில் சரணாகதி ஆகி விட்டால் நாளும் கோளும் புஸ்ஸு தான்..

   இங்கே உள்ள மாயையில் குமரேசனே கண்ணில் படவில்லை. பிறகெங்கே சரணாகதி?...

   எனது தளத்தில் நாளைப் பொழுதுக்கென சென்ற வாரமே ஒரு பதிவை திட்டமிட்டு வைத்திருக்கின்றேன்..

   அதிலே கொஞ்சம் விளக்கம் கிடைக்கலாம்...

   நீக்கு
  3. துரை செல்வராஜு சார்... நாளும் கோளும் தேவை என்பதுதான் என் கட்சி. முழுவதுமாக பக்தியில் மூழ்கி, அவனே கதி என்ற எண்ணத்தோடு தன்னை முழுமையாக அவனிடத்தில் ஈடுபடச் செய்து, உலகில் செய்யும் செயலெல்லாம் கடவுளுக்கு அர்ப்பணமாக்கிச் செய்பவர்களுக்குத்தான் 'நாளென் செய்யும்' கதை. நமக்கெல்லாம் கிரக நிலை மாற மாற நம்ம உடல் நிலை, பணம், வேலை எல்லாமே affect ஆகுதே

   நீக்கு
  4. ஆகா..
   சரியான நடைமேடைக்கு வந்து விட்டீர்கள்...

   நீக்கு
 9. மீண்டும் ஒரு அழகான பதிவு.. கோயிலுக்குக் கோயில் வித்தியாசமான சிற்பங்கள் என்றாலும் அவற்றின் நேர்த்தியும் உயிர்ப்பும் உள்ளத்தை கொள்ளை கொள்பவை..

  இப்படி உயிர்ப்புடன் வெளிப்படுவதற்கு -
  சிற்பிகளின் மனதில் இவை எந்த அளவிற்கு பதிந்திருக்கும்!..

  சிற்பக்கலைஞர்களின் காலடி போற்றுவோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதைத் தான் செய்யும் செயலில் ஒன்றிருத்தி, கையும் கண்ணும் ஒத்திசைக்க, அருமையான சிற்பங்களைச் செதுக்கிய சிற்பிகளின் திறமைதான் என்னே... எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், தூண்களில், ஒவ்வொரு சிற்பத்தையும் செய்து பிறகு தெரியாதபடி அவற்றை ஒன்று சேர்த்திருக்கிறார்களா என்பதுதான். ஏனென்றால் ஒரு தூணில் எல்லாவற்றையும் பழுதில்லாமல் செய்வது என்பது மிகப் பெரிய கடினமான வேலை

   நீக்கு
 10. // கிருஷ்ணதேவராயருக்கு அடுத்த மன்னர். அவர்தாம் கோயிலை முஸ்லீம்களிடமிருந்து மீட்டுக் கொடுத்தவர். //

  நாட்டின் செல்வங்களை கடத்திக் கொண்டு சென்ற வெள்ளையர்கள்..

  இவர்கள் தான் இந்த நாட்டை முன்னேற்றியவர்களாம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெள்ளையர்களான பிரிடிஷார், பிற நாட்டைச் சுரண்டி, அவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து தங்கள் நாட்டைக் கட்டியெழுப்பி, அமெரிக்காவில் காலடி எடுத்துவைத்த பிரிட்டிஷார் மற்றும் மற்ற நாட்டினர், அங்கிருந்த செவ்விந்தியர்களுக்கு அளவில்லாத கொடுமை செய்து, அவர்களின் கலாச்சாரத்தை அழித்து, அவர்களின் பெயரை, அவர்களைக் கொட்டடியில் அடைத்து மாற்றி, அவர்களின் பண்பாடுகளை அழித்து, பிறகு, தற்போது, பிற நாடுகளுக்கு கலாச்சாரம், பிற மதத்தினரைப் பொறுத்து எல்லோருக்கும் சமமாக நடந்து கொள்வது, அடக்குமுறை கூடாது என்றெல்லாம் பிறருக்குப் போதிக்கிறார்கள். ஒருவேளை பிபிசியின் தலைமைப் பொறுப்பில் ஜெனெரல் டயரின் சந்ததிகள்தாம் இருக்கின்றார்களோ?

   நீக்கு
  2. அதில் சந்தேகம் இல்லை..

   இங்கே வெங்காயத் தாள்கள் முளைத்து எழுகின்றவே..

   அதைப்போல!..

   நீக்கு
  3. //இங்கே வெங்காயத் தாள்கள் முளைத்து எழுகின்றவே..// இது அரசியல் பகுதி அல்ல. எபியும் அரசியல் பேச்சை அவ்வளவாக விரும்புவதில்லை. 1. கோவிட் மருந்து போன்றவற்றை நம் தலையில் கட்டி ஏராளமாகச் சம்பாதிக்க இந்த அரசு இடம் கொடுக்கவில்லை. மேற்கத்தைய நாடுகளுக்குப் போட்டியாக வளர்கிறது. இந்தியத் தலைமையை பிற நாடுகள் மதிப்புடன் பார்க்கின்றன, நடத்துகின்றன. இந்திய அரசியல் தலைமையை பணத்தால் மடக்கமுடியவில்லை. இதெல்லாம் அண்ணக் கண்ணை உறுத்துகிறது. 2. இந்தியா, தன் நலத்திற்காக மட்டும்தான் பாடுபடுகிறது. மேற்கத்தைய நாடுகளின் நெருக்கடிகளுக்குப் பயப்படவில்லை. இது ரஃபேல், ரஷ்ய பெட்ரோலியம் என்று பல்வேறு விஷயங்களில் தெரிகிறது. காஷ்மீர் இந்தியாவுடையது, அதற்கு ஒரு ஸ்பெஷன் அந்தஸ்தும் இல்லை என்று நிலைநாட்டிவிட்டது. அண்ணனால் ஒன்றும் செய்யமுடியாத நிலைமை. 3. முன்பு பாகிஸ்தானை அவர்களின் பயங்கரவாதத்தை நம்பி, அந்த நாட்டிற்குச் சாதகமாக நடந்து இந்தியாவிற்கு அண்ணன் பல பிரச்சனைகளைக் கொண்டுவந்தார். இப்போ பாகிஸ்தானும் காலி, அரபு நாடுகள் இந்திய சார்பு நிலையை எடுத்துவிட்டன. அதனால் அண்ணனுக்கு வேறு வழியில்லை. 4. இதே அரசு தொடர்ந்தால் அண்ணனுக்குப் பிரச்சனை. அதனால் இதனைக் கவிழ்த்து தன்னுடைய பொம்மை அரசை இங்கு கொண்டுவர அண்ணன் விரும்புகிறார். பிரிட்டனுடன் சேர்ந்து அவர்கள் நடத்தும் நாடகம்தான் பிபிசி ஆவணப்படம். இதற்கு சீனா மற்றும் காங்கிரஸின் துணை உண்டு. இதையெல்லாம் மீறி 2024ல் இதே அரசு தொடர்ந்தால், அண்ணன் எந்த மாதிரி பெரிய இடைஞ்சல்களை இந்தியாவிற்கு உண்டாக்குவார் என்று பார்க்கணும். இந்தியாவில்தான் சுலபமாக அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி நாட்டிற்கு எதிராகத் திருப்பலாம்.

   நீக்கு
  4. முளைத்துப் பரவும் வெங்காயத் தாள்கள்..அடடா!

   நீக்கு
  5. எனக்கு வெங்காயத் தாள்கள் என்றதும் வெங்காயத்தில் காய்ந்துகிடக்கும் தோல்களே நினைவுக்கு வந்தது. ஒருவேளை துரை செல்வராஜு சார், ஆகாயத் தாமரைகளைச் சொல்லியிருப்பாரோ? அதுதான் சடசடவெனப் படர்ந்து, குளத்தை நீர்நிலைகளை மாசுபடுத்தும் தன்மை வாய்ந்தது

   நீக்கு
 11. மகர யாளியின் வாயுள்ளும் மங்கையர் விழுந்து எழுந்திருக்கின்றனர் போலும்!...

  என்னே கலை நயம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படீல்லாம் யோசித்து, அதைக் கலையாக நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர் நம் முன்னோர் என்பது வியக்கத்தக்கது. பலப் பல கோவில்களில் இத்தகைய சிற்பங்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன்.

   நீக்கு
 12. மிக அழகான சிற்பங்கள்! சிறப்பாக புகைப்படங்கள் எடுத்திருக்கிறீர்கள்! சிதைந்திருக்கும் சிற்பங்களைப்பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மனோ சாமிநாதம் மேடம். சிற்பங்கள் சிதைந்தது 15ம் நூற்றாண்டில், முஸ்லீம் படையெடுப்பினால். கற்சிற்பங்களைப் பிறகு சரி செய்வது இயலாது. அவை காலத்தைக் காட்டும் கண்ணாடியாக அப்படியே இருக்கின்றன

   நீக்கு
 13. அற்புதமான கலை நுணுக்கங்கள்
  எதை சொல்வது எதை விடுவது.

  தூணை பிளந்துவரும் நரசிம்ஹர். சண்டைபோடும் காட்சி.

  பெண்ணின் ஆடை இறுதிவரிகளின் அழகிய மடிப்புகள்என நுணுக்கங்களுடன்.

  நீங்கள் கூறியதுபோல அரசனின் உடை, நீண்ட முடி அற்புதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மாதேவி. பெண்ணின் ஆடை (பாவாடை போன்று) வரிவரி மடிப்புகளுடன் என்னை மிகவும் கவர்ந்தது.

   அதற்கு நான் முதலில், 16 வயதினிலே ஸ்ரீதேவி, டாக்டர் சொன்னதன் பேரில் தண்ணீரில் நடந்துவருவதைப் போல எனக்குப் பிறகு படத்தைப் பார்க்கும்போது தோன்றியது என எழுதியிருந்தேன். என் மனைவி, அதைப் பார்த்துவிட்டு, கோயில் உலாவில் இந்த வரிகளா, தூக்குங்கள் என்று சொல்லிவிட்டாள்.

   நீக்கு
  2. //16 வயதினிலே//

   முட்டாள் தனமான காட்சி அது..

   ஸ்ரீதேவி தொடையைப் பார்த்த கிறக்கத்தில் அன்று இருந்தவர்களோடு இருந்தேன்..

   நீக்கு
  3. துரை சார்.... திரைப்படம் என்பது காசு போட்டு காசு அள்ளுவதற்கான களம். அங்கி நேர்மை, நியாயம், நல்ல எண்ணம் என்றெல்லாம் பார்க்கமுடியாது. அந்தக் காலத்தில் அந்தக் காட்சி மனதைக் கவர்ந்தது. ஆனால் பிறகு அந்தப் படம் பார்க்கும்போது (மெச்சூரிட்டி வந்த பிறகு) என்ன மோசமான ரசனை என்று தோன்றியது (பாரதிராஜா படங்களிலேயே இந்த மாதிரி மலிவான ரசனைகள் நிறைய பார்க்கலாம்)

   நீக்கு
  4. // காசு போட்டு காசு அள்ளுவதற்கான களம். அங்கி நேர்மை, நியாயம், நல்ல எண்ணம் என்றெல்லாம் பார்க்கமுடியாது.. //

   இதெல்லாம் உண்மை தான்..

   இருந்தாலும்
   இன்றைய பதிவு நெஞ்சுக்கு நிம்மதி..

   நீக்கு
  5. //இன்றைய பதிவு நெஞ்சுக்கு நிம்மதி..// அதனால்தான் கௌதமன் சார், சில கோவில் ஏடாகூட சிற்பங்களைப் பகிரக்கூடாது என்று அபிப்ராயப்படுகிறார்.

   நீக்கு
 14. லக்ஷ்மி நரசிம்ஹர் வலப்புறம் தலையில் என்ன்வோ இடிபட்டிருக்கோ?

  யாளி எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு...ஒரு யாளியில் வீரன் சரி...இடப்புறம் உள்ளதில் தெய்வம் போல் உள்ளதே

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ல்க்ஷ்மி நரசிம்மர் சிற்பம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. நான் நிறைய யாளிச் சிற்பங்களைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொருவித அழகு. இதைப்பற்றியே பதிவு போடலாம். சிம்மம், மகரம், யானை உருவங்களில் யாளிகளை நான் கண்டிருக்கிறேன் (சிற்பத்தில்).

   அது வெண்ணெயைக் கையில் கொண்டிருக்கும் கிருஷ்ணரோ என்று எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

   நீக்கு
 15. சிற்பங்கள் யாவும் மிக அழகு. படங்களும் பகிர்வும் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
 16. ஒன்றை வாசித்தால் அது தொடர்பாக என் மனத்தில் எழும் எண்ணங்கள் எப்போதுமே ஏராளம்.
  யாளி என்று நினைக்கும் பொழுதெல்லாம் மெளனியின் அழியாக்கோலங்கள் கதைக் களம் என் நினைவு வராமல் தப்பாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் கதையை நான் வாசித்ததில்லை. யாளி சிற்பத்தைப் பார்க்கும்போது, அது மிகப் பெரிய மிருகம் என்பதைக் காண்பிக்க, நமக்கு உணர்த்த, அதன் அருகில் ஏராளமான சிறிய சிற்பங்கள் இருக்கும். அவற்றைக் கவனித்திருக்கிறீர்களா?

   நீக்கு
  2. நம்ம ஜெஸி ஸார் சனிக்கிழமைகளில் அழியாக்கோலம் என்ற தள சுட்டி கொடுத்து கதைகளை வாசிக்கச் சொல்வார் இல்லையா, அந்தத் தளம் அற்புத அந்தக் கதையின் நினைவுச் சுவடில் தான்.
   தமிழ் எழுத்தாளர்களின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் வர்ணித்த மெளனி அவர்கள் எழுதிய லேசில் மறக்க முடியாத கதை அது.
   தேடி வாசித்துப் பாருங்கள்

   நீக்கு
  3. நிச்சயம் நேரம் வாய்க்கும்போது வாசிக்கிறேன் ஜீவி சார். செவ்வாய்க்கு ஒரு கதை எழுதலாமா என்றொரு யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது.

   நீக்கு
  4. அழியா கோலங்கள் அல்ல, அழியாசுடர்கள்.
    https://azhiyasudargal.blogspot.com/Jayakumar

   நீக்கு
  5. அழியா கோலங்கள் அல்ல, அழியாசுடர்கள்.
    https://azhiyasudargal.blogspot.com/

   நீக்கு
  6. நன்றி ஜெயகுமார் சார். படிக்கிறேன்.

   நீக்கு
  7. மெளனியின் கதையின் பெயரும் 'அழியாச்சுடர்' தான்.
   லேசான நினைவுப் பிறழல்.

   80 வயசு நரம்பு மண்டலம் பாதிப்படைந்தவரின்
   கதையொன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். காரணத்தை அதில் சொல்கிறேன்

   நீக்கு
  8. நெல்லை,

   யோசனை என்ன?
   செயல்படுத்துங்கள்.
   வாசிக்கக் காத்திருக்கிறோம்.

   நீக்கு
 17. யாளியில் தான் எத்தனை வகை?
  முதலை உடல் அமைப்பு கொண்ட மகர யாளி.
  சிங்க முகம் கொண்ட சிம்ம யாளி
  யானை துதிக்கை கொண்ட கஜ யாளி.
  குதிரை முகம் கொண்ட அஸ்வ யாளி.
  நாய் முகம் கொண்ட ஸ்வன யாளி.

  -- இவற்றில் கோயில் சிற்பங்களில் பெரும்பாலும் சிம்ம யாளியைத் தான் பார்க்கலாம். சில கோயில்களில் கஜ யாளியும்.

  யாளி சிற்பம் என்றாலே
  நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான்.
  ம.மீ.அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டப
  யாளிக் கூட்டத்தை அடிச்சிக்க இதுவரை இன்னொரு கோயில் தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜீவி சார். யாளிகளைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். ஆனால் தூண்களுக்கு சிம்ம, கஜ யாளிகளைத்தான் நான் பார்த்த நினைவு.

   யாளிச் சிற்பங்கள் என்று நினைத்தால் என் நினைவில் ஏராளமான கோவில்கள் வரும். நான் அவைகளில் படங்களை எடுத்திருக்கிறேன். தொடர்ந்து ஞாயிறு பகுதிகளில் அவை வரும்.

   நீக்கு
 18. நாயக்க மன்னர்களின் காலத்தில் யாளி சிற்பங்களின் வேலைப்பாடுகள் தூக்கலாக இருந்த காலம்.
  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் மண்டியிருக்கும் யாளிகளைப் பார்த்தால் மலைத்துப் போவீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாயக்க மன்னர்கள் காலத்தில் கோவிலில் சிற்பக்கலைகள் மிகச் செழித்தோங்கின. கற்றளிகள் ஆரம்பித்தது பல்லவர்கள் காலத்தில். கோவில் கட்டிடக்கலை செழிப்புற்றது சோழர்கள் காலத்தில். இருவர் காலத்திலும் சிற்பக்கலை மேன்மைபெற்றது, உலோகச் சிற்பங்கள் சோழர் காலத்தில் உச்சத்தைத் தொட்டது. முஸ்லீம் படையெடுப்பினால் கோவில் சிற்பங்கள் அழிவும் தொய்வும் ஏற்பட்டன. பிறகு நாயக்கர் காலத்தில் புதிய சிற்பங்களால் கோயில்கள் பொலிவுபெற்றன. இது ஒரு பருந்துப் பார்வையான விமர்சனம். அதுபோல ஹொய்சாளர்கள் காலத்தில் கர்நாடகாவில் சிற்பக்கலை மேன்மைபெற்றது.

   நீக்கு
  2. மீனாட்சியம்மன் ஆயிரம்கால் மண்டபம் - நிச்சயம் சென்று பார்க்கிறேன். (பார்க்காமலேயே நான் பார்த்த கோவில்களை வைத்துக்கொண்டு, மதுரைக் கோயில் அதைவிடச் சிறப்பானதாக இருக்கமுடியாது என்று சொல்வது சரியில்லை) நான் கல்லூரி நாட்களில் ஒரு நாள்தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன் (அன்று வைர முடி அலங்காரம் என்று நினைவு)

   நீக்கு
 19. இன்னொரு பக்கம் யாளி என்ற மிருகமே இருந்ததில்லை அது வெற்றுக் கற்பனை தான் என்ற கூற்றும் இருக்கிறது. டைனொசரை ஏற்றுக் கொண்ட ஆய்வாளர்கள் யாளியின் தொன்மை இருப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை டைனோசரையே யாளி என்ற மிருகமாக அவர்கள் கற்பனை செய்து செதுக்கியிருந்தால்? நீங்கள் சொல்லியிருப்பதுபோல, குதிரையை நினைவுகூறும் (இங்கு எழுதச் சங்கடம்) யாளிகளையும் நான் கண்டிருக்கிறேன். பிறகு படங்கள் பகிர்கிறேன்

   நீக்கு
 20. // சில கோயில் ஏடா கூட சிற்பங்களைப் பகிரக் கூடாது என்று அபிப்ராயப்படுகிறார்..//

  அதுவும் கலை தானே..

  கண்களிலும் முகத்திலும் கருணையைக் காட்டிய சிற்பி காமத்தைக் காட்டினானில்லையே...

  !??..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் எடுத்தவர் கலைக் கண்ணோடு பார்த்துத்தான் எடுப்பார். வெளியிடுபவர் படம் எடுத்தவரின் பார்வையோடு ஒத்துப்போகலாம். ஆனால் பார்ப்பவர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. சென்ற திங்கள் அன்று நம் பதிவில் வந்து அநாகரீக கருத்துகளை அள்ளித் தெளித்த B@$T@** ஞாபகம் உள்ளது அல்லவா?

   நீக்கு
  2. கேஜிஜி சார் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், ஏகப்பட்ட ஓவியங்கள், புகழ்பெற்ற சிற்பங்கள் (வெளிநாடு), மலம்புழா அணைக்கட்டில் உள்ள புகழ்வாய்ந்த சிற்பம் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்பது வருத்தம்தான்.

   நீக்கு
 21. நெல்லை,

  யாளி என்ற தொன்மை காலத்து விலங்கை இன்னும் கூர்மையாக அவதானிக்க வேண்டும் நீங்கள்.

  கால்களுக்கு சிங்கம், உடலுக்குக் குதிரை, யானையின் துதிக்கை, கூரிய பற்கள், வலிமை வாய்ந்த தோற்றம் -- இவற்றின் கூட்டுச் சேர்க்கையே யாளி.

  சிங்கமும், யானையும் யாளியைப் பார்த்தாலே பயத்தில் பம்மிப் பதுங்கும். சிம்மத்தையும், யானையுமே யாளிக்குப் பிடித்த உணவாகச் சொல்லப் படுகிறது.

  நற்றிணையில் ஒரு பாடல் உண்டு. போரில்
  அடிப்பட்டு வீழ்ந்த யானை ஒன்றை தன் பற்களால்
  துரும்பைப் போல இழுத்துச் செல்லும் யாளி என்று காட்சி படுத்தப் படுகிறது.

  //சிற்பிகள் டைனோசரையே யாளி என்று கற்பித்துக் கொண்டு... //

  ஹிஹி.. நெல்லை, அதுக்கும் வாய்ப்பில்லை..

  ஒன்று தெரியுமா, உங்களுக்கு?..

  டைனோசர் ஊர்வன இனத்தைச் சேர்ந்தவை.
  யாளியின் உருவ அமைப்போ பாலூட்டி விலங்கை ஒத்ததாக
  படைக்கப் பட்டிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜீவி சார். உடலுக்குக் குதிரை - மிகச் சரி. யானையின் துதிக்கை .... கண்ட நினைவு இல்லை. என் புகைப்படப் புதையல்களில் இன்று பார்க்கிறேன். கூரிய பற்கள் சரி. டைனசொரின் அமைப்பை ஒத்த கால்கள் பாதங்கள். ஆனால் அதனை மனிதன் அடக்குவதாக, சவாரி செய்வதாகவும் சிற்பங்கள் உண்டு. கற்பனை விலங்காக இருக்கலாம். ஆனால் யாளியுடன் கூடிய தூண்கள் வரிசை காண்பதற்கு அழகாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.

   நீக்கு
  2. யாளியிடம் நான் காணும் பிரமிப்பு இப்பொழுதும் அதை கற்பனை விலங்காக நினைக்க வைக்கவில்லை, நெல்லை. இது பற்றி இன்னொரு பதிவில் நிறைய பேசலாம்.
   கூட ஆர்வத்துடன் இந்த விஷயத்தை அலசியதிற்கு நன்றி, நெல்லை.

   நீக்கு
 22. யாளிபற்றிய விபரங்களுக்கு நன்றி ஜீவி சார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!