புதன், 22 பிப்ரவரி, 2023

பங்குச்சந்தையில் பணத்தை இழந்தது உண்டா?

 

ஜெயகுமார் சந்திரசேகரன் : 

1. உருசியா, உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்?

# யாருக்குத் தெரியும் ? மீண்டும் ஒரு  வியட்நாம் போர் ?

& மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது என்று சில நாட்களுக்கு முன் படித்தேன். பார்ப்போம். 

2. சீனா ஏன் பலூன் விட்டு வேவு பார்க்கிறது? அதனால் என்ன லாபம்? 

# எட்டிப் பார்த்தால் என்ன தகவல் கிடைக்குமோ அது எல்லாம் கிடைக்குமே. 

& இந்த பலூன் டெக்னாலஜி என்ன என்று எனக்குப் பிடிபடவில்லை. பலூன் வழியாக பார்த்தால் எல்லாம் கலங்களாக அல்லவா தெரியும்? மேலும் பலூனை, டிரோன் போல இயக்க இயலுமா? 

3. அண்டை நாடுகள் ஸ்ரீலங்கா, மற்றும் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனவே. இது கர்மவினை என்று கொள்ளலாமா? 

#  சிறிய நாடுகளில் ஊழலின் தீமை விரைவில் வெளிப்பட்டு விட்டது.  இது கூட கர்ம வினைதான்.  நம் ஊழல் இப்போதுதான் உச்சத்தை நோக்கி விரைகிறது. விளைவுகள் விரைவில் வெளிவந்து நம் சாயமும் வெளுத்துப் போகலாம். அற்பப் பதவிகளில் உள்ள அரசியல் புள்ளிகள் அச்சம் இன்றி நூற்றுக் கணக்கான கோடிகளை குவித்திருப்பதைப் பார்த்தால் ஃப்ரெஞ்ச் புரட்சி மாதிரி ஒன்று இங்கும் நிகழ்ந்து விடுமோ என்னும் அச்சம் தோன்றவில்லையா ?

4. உங்களுக்கு வருமான வரி கணக்கீட்டில் புதிய முறை (கிழிவுகள் இல்லாதது) லாபமா, அல்லது பழைய முறை லாபமா? அப்படி உங்களது வருமானத்தையும் கண்டு பிடிக்கலாம் அல்லவா? 

# எனக்கு கிட்டத் தட்ட இரண்டுமே ஒன்றுதான்.  என் வருமானம் எவ்வளவு என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லயே  ! 

& என்னுடைய வருமான வரி எல்லாமே TDS (Tax deducted at source) மூலமாகத்தான் அரசுக்கு செல்கிறது. நான் எதையும் கணக்கிடுவது இல்லை அல்லது திரும்பக் கொடுக்கவேண்டும் என்று கேட்பதும் இல்லை. 

5. பங்குச்சந்தையில் பணத்தை இழந்தது உண்டா? நான் கொஞ்சம் கையைச் சுட்டுக்கொண்டது உண்டு. 

# பங்குச் சந்தையில் 5% பேர் மட்டுமே லாபம் பார்க்கிறார்களாம்.

& முன்பு இழந்தது அதிகம். அந்த அனுபவங்கள் மூலம் பாடம் கற்றுக்கொண்டு, இந்த ஆண்டில்தான் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க ஆரம்பித்துள்ளேன். சில சோதனை ஓட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. பார்ப்போம். 

6. மக்கள் வாழ்க்கைத்தரம் வளர்ச்சி அடைய அடைய கழிவுகளும் அதிகம் உண்டாகின்றன. கழிவுகள் இல்லாத வளர்ச்சி உண்டா? எப்படி?

# ஒரு 70 ஆண்டு முன் வரை கழிவுகள் அதிகம் பிரச்சனை ஏற்படுத்தாத  வளர்ச்சி இருந்திருக்கிறது. காரணம் குறைந்த உற்பத்தி, குறைந்த கழிவு. இப்போது நிலையே வேறு. விகிதம் எக்குத் தப்பாக ஆகாத வரை, வளர்ச்சியும் கழிவும் நிர்வகிக்கக் கூடியவையாக இருக்கும். 

நெல்லைத்தமிழன் : 

இவர் செத்தார், மக்கள் அதிர்ச்சி,  அரசின் இந்த அறிவிப்பைக் கண்டு மக்கள் உற்சாகம், இந்த நடிகை மறைந்தார்  திரையுலகத்தினர் சோகம் என்றெல்லாம் எழுதறாங்களே. இப்படி எப்படி கூசாம பொய் சொல்லமுடிகிறது இந்தப் பத்திரிகைகளால்?

# வாணிஜெயராம் மறைந்த போது, "சோகம்" வெளிப்பட்ட மாதிரி இதெல்லாம் ஒரு சடங்கு. இப்படியெல்லாம் பதிவிடுவது சம்பிரதாயம். பக்கம் நிரப்ப packing straw.

= = = = = 

கேள்வி பதில் பகுதியை கொஞ்சம் வித்தியாசமாக கொண்டு செல்லலாம் என்று யோசித்தோம். 'எங்கள் Blog ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள்' என்னும் வாட்ஸ் அப் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் சிலருக்கு வெவ்வேறு கேள்வி அனுப்பி அவர்கள் சொல்லும் பதிலை இங்கே பகிர்வது என்று ஒரு யோசனை கிடைத்தது. 

அதன் படி அவ்வப்போது கேள்வி கேட்டு, பதில் பெற்று, இங்கே ஒவ்வொரு வாரமும் வெளியிட உள்ளோம். 

படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். 

= = = = 

எங்கள் கேள்வி : 

' கோலம் அரிசி ' என்று அமேசான் பக்கத்தில் பார்த்தபோது, கோலம் போடுவதற்கு வேண்டிய கோலமாவு தயாரிக்கும் அரிசி என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லையா?

இந்தக் கேள்வியை, 'நெல்லைத்தமிழன்' அவர்களுக்கு அனுப்பினோம். 

அவருடைய பதில் : 

நல்லவேளை மைசூர்பாக் என்பது மைசூரில் கிடைக்கும் பாக்கு என்று சின்ன வயதில் நினைத்திருந்தேன் என்று சொல்லாமலிருந்தீர்களே. என் நண்பன் ராஜேந்திரன், Blood sugarரினால் 25 வயதிலிருந்தே, இன்ஸுலின் எடுத்துக்கொண்டிருந்தான். டயபடிக்ஸினால், காரில்கூட அவன் சாக்லேட் வைத்திருப்பான். அவன் பிற்பாடு கோலம் அரிசி மாத்திரமே உபயோகித்தான். அவனிடம் காரணம் கேட்டதற்கு, அது டயபடீஸுக்கும் மற்றும் அதனால் கிட்னி பிரச்சனை வராமலிருக்கவும் உபயோகம் என்றான். பஹ்ரைனுக்கு அவன் (கடைசியாக) வந்திருந்தபோது என் வீட்டில் அவனுக்கு சமையல் செய்தேன். அவன் சொன்ன நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பு வந்துவிட்டான். அவனிடம் சிறிது நேரம் காத்திருந்தால் வெண்டைக்காய் கறி செய்துவிடுவேன். மற்ற எல்லாமே தயார் என்றேன். அதற்கு அவன், வெண்டைக்காயில் பொட்டாஷியம் அதிகம். அதுவும் தன் உடலுக்கு நல்லதில்லை என்பதால் அதனை விட்டுவிட்டதாகக் கூறினான். அவன் எப்போது கோலம் அரிசி உபயோகிக்கிறேன் என்று சொன்னானோ அப்போதிலிருந்து நானும் அதனையே வாங்கி உபயோகிக்கத் தொடங்கினேன். (நிறைய எழுதவேண்டியிருக்கிறது.... ஆனால் ஒரு கேள்விதானப்பா கேட்டேன்...அதுக்கே இவ்வளவா என்ற குரல் எனக்குக் கேட்பதால் நிறுத்திக்கொள்கிறேன்)

நான் பஹ்ரைன் சென்றதிலிருந்து மேங்கோ பிராண்ட் பாஸ்மதி அரிசி (பாகிஸ்தான்) மாத்திரம்தான் உபயோகித்துக்கொண்டிருந்தேன். காரணம் சல்லிசான விலையில், அதாவது 40 ரூ கிலோ, விலையில் பாஸ்மதி கிடைத்ததுதான். பிறகு எங்கள் கம்பெனி டிஸ்டிரிபியூட் செய்துகொண்டிருந்த இந்திய பாஸ்மதி அரிசியை (டில்டா) விலை அதிகமென்றாலும் அவ்வப்போது வாங்குவேன். பிறகு பாஸ்மதி அரிசி உடல் நலத்துக்கு நல்லதில்லை என்று பலரும் சொன்னதால் தஞ்சை பொன்னி அரிசி அல்லது சோனா மசூரிக்கு மாறிவிட்டேன்.  இந்தியா வந்த பிறகு சோனா மசூரி, கோலம் அரிசி என்று வாங்கிக்கொண்டிருந்தேன். இப்போ பையனுக்கு ப்ரௌன் அரிசி (தீட்டாத சோனா மசூரி), எனக்கு கோலம் அரிசி, சோனா மசூரி புழுங்கலரிசி, இராஜமுந்திரி அரிசி என்று சொல்லப்படும் அரிசி போன்றவற்றை வாங்குகிறேன். நாங்கள் அதிக அரிசி நுகர்வதில்லை என்பதால், விலையைப் பற்றி ரொம்பவே அலட்டிக்கொள்வதில்லை. இப்போது கைக்குத்தல் அரிசி ட்ரை பண்ணலாமா என்று தோன்றுகிறது. பையன் ப்ரௌன் அரிசி தவிர வேறு சாப்பிடுவதில்லை.  எல்லாப் பயலுவளும் டயட் என்று இருப்பதாலும், மனைவி எப்போதுமே எல்லாவற்றையும் சிறிது சிறிது அளவே சாப்பிடுவதாலும் வாங்கும் பழங்கள் போன்றவற்றை நானே சாப்பிட்டு என் எடை அதிகரிக்கின்றது.

எங்கள் கேள்வி : 

சிவராத்திரி கொண்டாட்டங்களுக்கு சமீப காலமாக அதிக அளவு விளம்பரங்கள், ஆரவாரங்கள் உள்ளனவே இது பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்தக் கேள்வியை திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு அனுப்பினோம். 

அவருடைய பதில் : 

சிவராத்திரி மட்டுமல்ல எல்லாமே இக்காலகட்டத்தில் விளம்பரங்களும் ஆடம்பரமும் நிறைந்தே காணப்படுகின்றன. இதற்குக் காரணம் சொல்லுவது கஷ்டம் தான். பக்திக்குக் கூட விளம்பரமும் ஆடம்பரமும் இல்லாமல் செய்ய முடியலை. ஒரு சிலர் சொல்லும் காரணம் இந்துக்கள் ஒற்றுமை இல்லை என்பதே! மற்ற மதங்களில் இருப்பது போல் ஒருமித்த சிந்தனையோ, அல்லது ஒன்றாய்க் கூடிக் கொண்டாடுவதோ நம்மிடம் இல்லை என்பது உண்மைதான். ஏனெனில் நமக்கு இறைவனைக் கும்பிட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முடிஞ்சால் வணங்கலாம். இல்லைனா வணங்காமலும் இருக்கலாம். அதுக்காக இறைவன் தண்டிப்பது என்பதெல்லாம் இல்லை. ஆனால் மற்ற மதத்தவர்கள் கட்டாயமாய் அவங்க கோயிலுக்குப் போவது இறைவனை வணங்குவதுனு வைச்சிருக்காங்க. இப்படி இருக்கையில் இளைஞர்களையும் இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் இறை சக்தியின் பால் இழுக்க வேண்டி இப்படியான ஆடம்பரக் கொண்டாட்டங்கள், விளம்பரங்கள் உதவுகின்றன. அனைவரையும் ஒருங்கிணைத்து இறைவன் நெருங்கக் கூடியவனே! நம்மில் ஒருவனே! என இளைஞர் சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டவெனவும் ஏற்பட்டிருக்கலாம். எல்லோரும் ஒன்றாகக் கூடி இறைவனை வணங்கும்போது ஏற்படும் நல்ல அதிர்வலைகள் மனதைத் தூய்மைப் படுத்தும் சக்தி கொண்டது.   பொதுவாக சந்நியாசிகளும், அகோரிகளும், கடுமையான சிவ பக்தி கொண்ட சாமியார்களும் வணங்கி வந்த இறைவனை சகலருக்கும் இணக்கமானவனாக மாற்றியது இதன் மூலம் கிடைத்த வெற்றி எனலாம்.

எங்கள் கேள்வி : 
சமீபத்தில் நீங்கள் பார்த்த / படித்த / கேள்விப்பட்ட வித்தியாசமான செய்தி எது?
இந்தக் கேள்வியை திரு அப்பாதுரை அவர்களுக்கு அனுப்பினோம். 
அவர் அனுப்பிய பதில் :

திருநாள் திருடன்

தினம் நிறைய செய்திகள் வாசிக்கிறேன்.. பார்க்கிறேன்.. கேள்விப்படுகிறேன். சில சப்பையானவை (பீகாரில் வெள்ளம் சென்னை வெயில் உக்கிரம் வகை) சில வித்தியாசமானவை (மோடி தமிழ் பேசி பாரதியை மேற்கோள் காட்டினார் வகை - ஹிஹி). அந்த வகையில் வித்தியாசமென்று தோன்றியது இது.  

ஈஸ்டர் திருநாளின் அடையாளம் எதுவென்றால் சாக்லெட் முட்டை என்று பெரும்பாலோர் சொல்வர் (நவராத்திரியின் அடையாளம் சுண்டல் என்கிற மாதிரி).
அந்த அடையாளத்தை அழித்து விட்டால்? பூனை கண்ணை மூடினாற் போல் என்றாலும் பூனையைப் பொறுத்த மட்டில் உலகம் இருளும் தானே? 

இங்கிலாந்தின் டெல்பர்ட் நகரத்தில் ஜோபி என்பவர் அந்த ஊர் கடைகளுக்கு வர வேண்டிய அத்தனை ஈஸ்டர் சாக்லெட் முட்டைகளையும் வழிப்பறி செய்து திருடிப் பதுக்கிவிட்டார். ஈஸ்டர் கொண்டாட்டத்தை நிறுத்திவிடும் எண்ணத்தில். 

கிட்டத்தட்ட இரண்டு லட்சம் சாக்லெட் முட்டைகளை அபேஸ் பண்ணிக் கொண்டு ஊரை விட்டு ஓடுகையில் பிடிபட்டார்.  

ஐம்பதாயிரம் பவுண்ட் அபராதம் கட்டி ஒரு வாரம் சிறை சென்றார்.
திருட்டு முட்டைகள் சேர வேண்டிய கடை விவரம் தெரியாததால் இரண்டு லட்சம் சாக்லெட் முட்டைகளை போலீசார் அந்த ஊர் சுற்றுவட்டார வீட்டுப் பிள்ளைகளுக்கு வாரி வழங்கினர்.

திருநாளைத் திருட முடியுமா என்று உள்ளூர் பாதிரிகள் எல்லாம் வல்லவரைத் துதிக்க, 'Eggstravagant' என்றார் உள்ளூர் பள்ளிக்கூட முதல்வர்.

இது போன வாரச் செய்தி.
(எனக்கென்னவோ இதில் உள்ளூர் பல் வைத்தியர்கள் உடந்தை என்று தோன்றுகிறது)

அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். 

71 கருத்துகள்:

  1. பார்த்தீங்களா. வசமா மாட்டிகிட்டீங்க. பதில் கேட்டால் ஒவ்வொருவரும் கட்டுரையே தந்திருக்காங்க. 

    வாசகரால் தரப்பட்ட பதில்களில் அப்பாதுரை சார் கொடுத்த "eggstravagant" சிரிப்பை மூடியது. சீப்பை ஒளித்து வைத்த கதை மாதிரி. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்து வித்தியாசமான திருடன், திருட வந்துட்டு திருடி முடிச்சதும் குடிச்சுட்டு அங்கேயே படுத்துத் தூங்கினவர் தான். கடைசியில் அகப்பட்டுக் கொண்டார். :)))))

      நீக்கு
  2. இந்துக்கள் இந்துக்கள் என்கிறார்களே யார் இந்து?

    சிந்தித்துப் பார்த்தால் எல்லா மனிதர்களும் இந்துவே என்று தோன்றும். ISKCON வெளி நாட்டினரும் இந்து தான். கடவுள் மறுப்பு கருப்பு சட்டையும் இந்து தான். இந்து என்பதற்கு ஒரு அடையாளமும் இல்லை. இந்து இல்லை என்பவனும் இந்து தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்துக்கள் என்றால் திருடர்கள் இல்லையா?!!

      நீக்கு
    2. // இந்துக்கள் என்றால் திருடர்கள்..//

      நான் இந்துவும் அல்ல.. திருடனும் அல்ல - என்று சொல்ல முடிய வில்லையே!..

      நீக்கு
    3. J C ஐயா... "நான் யார்...?" எனும் கேள்விக்கு "இ/ஹிந்து" என்று பதில் சொல்வீர்களா...?

      குறிப்பு : இந்த கேள்விக்கான விடைக்கும், ஒரு திருக்குறள் கணக்கியல் உண்டு...(!)

      நீக்கு
    4. @ஸ்ரீராம் மனிதர்கள் எல்லோரும் இந்துக்கள். இந்து என்பது இங்கு இந்தியாவில் வசிக்கும் மனிதர்கள் மட்டுமே.

       இந்துக்கள் எல்லோரும் திருடர்கள் அல்ல. திருடர்கள் எல்லோரும் மனிதர்கள் அல்ல. திருட்டு காக்காய், திருட்டுப் பூனை, திருட்டு குரங்கு என்று விலங்குகளும் உண்டு. 


      @DD  இந்துவோ இல்லையோ சட்டத்துக்கு முன் அப்படி ஒரு வேஷம் போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் குடியுரிமை கிடைக்காது. அப்படி ஆக்கிவிட்டார்கள்.  

      Jayakumar

      நீக்கு
  3. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்றைய பதிவு புதிய கோணம்..

    கீதாக்கா அவர்களது கருத்து சிந்திக்க வைக்கின்றது..

    ஆனாலும்,
    // சந்நியாசிகளும், அகோரிகளும், கடுமையான சிவ பக்தி கொண்ட சாமியார்களும் வணங்கி வந்த இறைவனை சகலருக்கும் இணக்கமானவனாக மாற்றியது //

    என்று சொல்கின்றார்...

    இறைவன் சகலருக்கும் இணக்கமானவனே..

    சிவகோசரியார் வழி அவருக்கு..
    திண்ணப்பரின் வழி அவருக்கு..
    இதன் உட்பொருளை உணர்த்துவது கஷ்டம்.. உணர்ந்து கொள்வதும் கஷ்டம்..

    தன்னொப்பார் இல்லாத் தலைவன் என்னொப்பில் என்னை ஆட்கொள்கின்றான்..

    நீயே நினைவின்றி என்னை ஆண்டு கொண்டாய்!.. - என்பவர் அபிராம பட்டர்..

    ஈச்னுக்கு நான் எப்படி வேண்டுமோ அப்படி என்னை அவன் ஆக்கிக் கொள்வான்..

    அருணகிரி நாதர் தான் திருப்புகழ் பாடினார்..

    கடையனும் கடைத்தேறலாம்.. இந்து சமயத்தில்..

    மற்ற சமயங்களுடன் இதை ஒப்பிடுவதே தவறு..

    இறைவனை நான்கு வழிகளில் அடைந்து நான்கு நிலைகளை எய்தலாம்..

    புறவழி அவ்வாறிருக்க
    இவை எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு -

    அவனுக்கே பிச்சியானாள்
    தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்.. தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே..

    என்னும் அக வழியும் இங்கே இருக்கின்றது..

    தவிரவும்,

    பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
    மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம்..

    என்று மூவர் காலத்திலும் அதற்கு முன்பும் வழிபாடுகள் இருந்திருக்கின்றன..

    அன்றைய நிலை வேறு..
    இன்றைய நிலை வேறு..

    இரப்பவர்க்கு கொடுக்க என்னிடம் ஏதுமில்லையே.. என்று வருந்துகின்றார் திருநாவுக்கரசர்..

    மக்கள் துயர் தீர்ப்பதற்கு இறைவனிடம் கையேந்தியிருக்கின்றனர் - நாவுக்கரசரும் ஞான சம்பந்தரும்...

    பசியில் மயங்கிய சுந்தரர்க்கு தானே உணவு இரந்து கொடுத்திருக்கின்றான் இறைவன்...

    நாத்தழும்பு ஏறும் படிக்கு நாத்திகம் பேசியிருக்கின்றனர் - மாணிக்க வாசகரிடம்..

    நால்வரும் நமக்கு குருமார்கள் என்று கொண்டால் வீண் ஆடம்பரக் கூச்சல் ஓய்ந்து விடும்...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இந்தக் கேள்விக்கு ஒரு கட்டுரையே எழுதிட்டுப் பின்னர் சுருக்கினேன். இந்த இடத்தில் சாமியார்களையும், அகோரிகளையும் நான் சொன்னதன் காரணம் பொதுவாக சிவராத்திரியில் அவர்களே இரவு முழுவதும் கடுமையான வழிபாடுகளில், கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும், ஈடுபடுவார்கள். ஆடுவது/பாடுவது எல்லாமும் அவர்களிடம் அன்று நிறையவே காணப்படும். வட மாநிலங்களில் இது அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்போது சாமானிய மக்கள் அதிலும் இளைஞர்கள், இளம்பெண்கள் கூடப் பங்கெடுத்துக் கொண்டு ஆடிப்பாடிக் குதூகலிக்கிறார்கள். இவங்களுக்கெல்லாம் "ஓம் நமசிவாய" வின் உள்ளார்ந்த பொருள்/தத்துவம் புரியுமா எனவும் நினைத்துக் கொள்வேன். மற்றபட் ஈசனே "அம்மையே!" என அழைத்த காரைக்கால் அம்மையாரில் இருந்து பல சிவனடியார்கள் இருந்தார்கள்; இப்போவும் இருப்பார்கள் தான்.

      நீக்கு
    2. ரொம்பவே விரிவாக எழுதினால் படிக்க அலுப்புத்தட்டும் என்பதாலும் கூடியவரை சுருக்கமாகவே எழுதுவோம் என நினைத்ததாலும் மேல்கண்டபடி எழுதி இருக்கேன். இதைக் குறித்தும் "இந்து" என்னும் சொல்லைக் குறித்தும் எழுதப் போனால் பக்கங்களாக எழுதும்படி இருக்கும். இங்கே அடையாளத்தைக் குறிக்கவே "இந்து" என்னும் சொல்லைப் பயன்படுத்தினேன். மற்றபடி இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவருமே இந்துக்கள் தான் எந்த மதத்தினராக இருந்தாலும் என்னும் கருத்து எனக்குள் உண்டு.. சநாதன தர்மம் என எழுதிட்டுப் பின்னர் அதையும் நீக்கினேன். சைவர்கள் எனப் பொதுப்படையாக எழுதினாலும் சரியாகத் தெரியலை. ஏன் எனில் ஈசன் அனைவருக்கும் பொதுவானவன்.

      நீக்கு
    3. மாதுளம் பழத்தை பிரித்து முத்து மணிகளை வெளிக்காட்டியது போல உங்கள் மனம் மலர்ந்து ஞானப்பழப் பெருமைகளைப் பகிர்ந்து கொண்டது
      மனத்திற்கு இசைவாய் இருந்தது தம்பி.

      நான் அத்வைத சித்தாந்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். நம் உயிரோடும் உணர்வோடும் ஒன்றெனக் கலந்திருக்கும் இறைவனைத் தொழுபவன். பூசலார் எழுப்பிய மனக்கோயிலின் மாண்பு நினைத்து நினைத்து உருகித் திளைத்துத் தெளிய வேண்டியது என்று
      தெரிகிறது.
      தங்கள் கருத்துரை கண்டு மனம் தழுதழுத்தது. நன்றி சொல்வது கூட சஹ்ருதயர்களை அன்னியப்படுத்தி விடுமோ என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

      நீக்கு
    4. // உங்கள் மனம் மலர்ந்து ஞானப் பெருமைகளைப் பகிர்ந்து கொண்டது
      மனத்திற்கு இசைவாய் இருந்தது.. //

      அன்பின் அண்ணா.. வணக்கம்..

      பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி இருக்கின்றீர்கள்..
      நெஞ்சை நெகிழ்வித்தது தங்களுடைய கருத்து..
      ஆன்றோர் தம் கருத்துகள் தானே தவிர இதில் எதுவும் என்னுடையதல்ல..

      தேவாரத் திருப்பதிகங்களில் மனதை வைத்திருக்கின்றேன்.. அவையே தற்போது உறுதுணை..

      நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. //இறைவன் சகலருக்கும் இணக்கமானவனே..// இறை வழிபாடுனு சொல்லி இருக்கணுமோ? ஏனெனில் இறை வழிபாடே கட்டுப்பாடுகள் நிறைந்து விரதம், பசி, மூடத்தனமான பக்தி, இறைவன் தண்டித்துவிடுவான் எனச் சொல்லி பயமுறுத்துதல் என்றே பலருக்கும் எண்ணங்கள் இருந்தன/இருக்கின்றன. அவற்றை நீக்கி அனைவராலும் செய்யக் கூடியதே இறைவழிபாடு. நம் வழிபாட்டால் இறைவன் நம் அருகில் தான்ன் இருக்கிறான் என்பதை உணர்கிறோம் எனப் புரிந்து கொள்ளக் கூடியதே! கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே போதும் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் விதத்தில் தற்போதைய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனவும் எடுத்துக்கலாம்.

      நீக்கு
    6. இறைவன் சகலருக்கும் இணக்கமானவனே..//

      துரை அண்ணா இதை நான் மிகவும் ரசித்தேன். என் கருத்தும்...

      கீதா

      நீக்கு

    7. இறைவன் சகலருக்கும் இணக்கமானவனே..

      // பின்னை என் பிழையைப் பொறுப்பானை..//

      சுந்தரர் திருவாக்கு அது..

      தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  5. இன்னும் சொல்லலாம்...

    இப்போதைக்கு இது போதும்!..

    பதிலளிநீக்கு
  6. பாண்டவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றபோது அங்கே துரியோதனன் கும்பலும் இருந்திருக்கின்றது என்பதே நமது சமயம்!...

    பதிலளிநீக்கு
  7. அபிராமி பதிகத்தில் ஆழ்ந்தால் கூட அக வழி திறந்திடும் ..

    ஆன்ம ஒளி பெருகிடும்...

    பதிலளிநீக்கு
  8. புதிய பகுதி நன்றாக உள்ளது... பதில்களும் சுவையானவை...

    பதிலளிநீக்கு
  9. யாவருக்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை.. - திருமூலர்..

    இதனாலேயே இது திரு மந்திரம்..

    படமாடக் கோயில் பகவற்கொன்று ஈயில்
    நடமாடக் கோயில்
    நம்பர்க்கு அங்கு ஆகா.. -

    என்றுரைத்தவர் இவரே!..

    பதிலளிநீக்கு
  10. கொண்டாடுதல் வேறு..

    கொண்டு ஆடுதல் வேறு...

    பதிலளிநீக்கு
  11. ஆடை அணிகலன்
    ஆடம்பரங்கள் ஆலய வழிபாடில்லை..

    - கவியரசர்..

    பதிலளிநீக்கு
  12. மன்னனின் மாடக் கோயிலைத் தவிர்த்து பூசலாரின் மனக்கோயிலினுள் பொலிந்தவன் ஈசன்..

    உண்மை
    இப்படியிருக்க - உணர்ந்து கொள்வது அவரவர் விருப்பம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுவுமே நாம் மனதில் நினைப்பதைப் பொறுத்துத்தான் பலன். நானும் கொடுத்தேன் என்று கொடுக்கும் 100 ரூபாய், தன் இரு வேளை உணவை தியாகம் செய்து கொடுக்கும் 100 ரூபாய், என் பெயரை விளம்பரத்தில் போடுங்கள் என்று கொடுக்கும் 1000 ரூபாய், பிறரிடம் யாசிப்பவர் கொடுக்கும் 50 ரூபாய் - இவற்றிர்க்கான பலன் வெவ்வேறு அல்லவா?

      நீக்கு
    2. இதுவும் என் தனிப்பட்டக் கருத்து. பலனை எதிர்பார்த்து எதுவும் செய்யக் கூடாது இல்லையா? புண்ணியம் உட்பட! இதைச் செய்தால் புண்ணியம், அதைச் செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்பதற்காகச் செய்யும் போது அதிலும் உண்மையான அதாவது மனம் உவந்து செய்யும் உணர்வு மங்கிப் போய்விடுகிறது இல்லையா? கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ன்னுதானே தத்துவம் அதுவும் பகவத் கீதை சொல்கிறதாகச் சொல்கிறோம்....

      கீதா

      நீக்கு
    3. நீங்க சொல்வது உண்மை கீதா ரங்கன் ஸ்வாமி. இந்தச் சிறு குழந்தை சொன்ன தவறை பெரிய மனது பண்ணி மன்னித்துவிடும் (மனதுக்குள்: இவ்வளவு வயசான சாமியாரைப் போய்ப் பார்க்க வந்தோமே இவ்வளவு சின்ன வயசுக்குள்)

      நீக்கு
  13. பங்குச் சந்தையில் விளையாடுவது கூட ஒரு சூதாட்டம் போலத்தானே?

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    கேட்டு வாங்கி பகிர்ந்த கேள்வி பதில்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. இன்றைய கேள்விகளும் பதில்களும் வித்தியாசமான முறையில் அவையும் சுவையே.
    பலவிதமான அலசல்கள் கண்டோம்.

    பதிலளிநீக்கு
  17. பங்குச்சந்தையில் நான் 35 இழந்திருக்கிறேன். ஆனால் அது என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  18. கீதா சாம்பசிவம் மேடத்தின் பதில் (சிவராத்திரி) என்னைக் கவர்ந்தது. அதுபோல துரை செல்வராஜு சாரின் பின்னூட்டமும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களது கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. அப்பாதுரை சொல்லியிருக்கும் திருடன் பற்றியது நம்மூர் சிரிப்புத் திருடன் போல இருக்கோ!!!!!!

    கீதாக்காவின் பதில் பாசிட்டிவ். நல்ல பதில். இளைஞர்களை கவர பல இப்படி வேண்டித்தான் உள்ளன என்றாலும்
    எனக்கு ஏனோ ஒருவர் சிவராத்திரி அன்று நடத்தும் 'மேளா' மனதிற்கு ஏற்க முடியலை...கோடிக்கணக்கான செலவு!! பிரம்மாண்டம் என்று சங்கர் படடத்தைச் சொல்லுவது போன்று ....இந்த பிரபஞ்ச சக்திக்குக் கூட 'செட்' போட்டுத்தான் செய்ய வேண்டி உள்ளது போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த பிரபஞ்ச சக்திக்குக் கூட 'செட்' போட்டுத்தான் // மாடர்ன்... மக்களை அவரவர் மதத்தோடு ஒன்றியிருக்க. இது பக்தியில் போய் முடியும் என்ற நம்பிக்கையில்

      நீக்கு
    2. மே பி! நெல்லை....கார்ப்பரேட் பக்தி என்று சொல்லலாமா?!!!

      கீதா

      நீக்கு
  20. நானும் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்.

    //இந்த நடிகரும், நடிகையும் விவாகரத்து ரசிகர்கள் பேரதிர்ச்சி//

    என்று...

    வேசித்தனமான ஊடகங்கள்.

    நெல்லைத் தமிழரின் கேள்வி சிறப்பானவை.

    பதிலளிநீக்கு
  21. நெல்லை, நியூஸ் பேப்பர் மட்டுமா என்ன? வலைத்தளத்தில் எழுதுபவர்கள் கூடசிலர்அப்படி எழுதுகிறார்கள். எனக்கும் இது எப்போதும் தோன்றும். எல்லாரும் அவங்கவங்க வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்காங்க இதுக்கெதுக்கு தமிழகமே கொந்தளித்தது ஆ ஊன்னு பெரிசுப்படுத்தறாங்கன்னு..

    அதாவது அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றாலும், அது வழக்காகியிருக்கிறது. பதிலில் ஆசிரியர் சொல்லியிருப்பது போல சம்பிரதாயமாக...

    ஏன் நாமளும்தான் வாழ்த்துச் சொல்வது, துக்கப்படுவது எல்லாமே சம்பிரதாயம் தானே!!?!!! (நம் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு உரைப்பது தவிர)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாமளும்தான் வாழ்த்துச் சொல்வது, துக்கப்படுவது எல்லாமே சம்பிரதாயம்// ஹா ஹா ஹா. உண்மைதான். RIP, May his/her soul rest in peace, வாழ்த்துகள், பாராட்டுகள், நல் வாழ்த்துகள் - எதாவது மனதிலிருந்து வருகிறதா இல்லை கை விரல்களிலிலிருந்து தட்டச்சும்போதா?

      நீக்கு
  22. பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தி எல்லோர் மனதிலும் இருக்கிறது. அதை எவ்வளவுக்கெவ்வளவு நெருங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் அந்த நிலையை நெருங்கிவருகிறோம் என்பதுதான்...

    அந்த சக்தியை அடைவதற்கும் நம்மை நாமே உணர்வதற்கும் பேரமைதிதான் உதவுமே அல்லாமல் சத்தமும் அதிரலும் ஆட்டமும் பாட்டமும் அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. சிவராத்திரி எனும் நாளில் அந்த மாபெரும் சக்தியை நினைத்து மனதை அமைதிப்படுத்தி தியானிப்பதுதானே அல்லாமல் கொண்டாட்டங்கள் என்று வரும் போது நம் மனம் சிதறி அதுவும் இறைவனைத் துதிக்காமல் அதை யார் நடத்துகிறார்களோ அவர்களைத் தொழுதல், புகழுதல், அதுவும் பல சர்ச்சைகளுக்கு உள்ளான ஒருவரை இறைவன் போன்று வணங்குவது அதுவும் அதற்குத் தகுதியே இல்லாத ஒருவர் என்பதால் மனம்ஒப்ப மறுக்கிறது.

    நிஜ ஆன்மீகம் என்பது அரசியல் பிரமுகர்கள், அரசியல், ஊடகப் பிரமுகர்கள், புகழ் பெற்றவர்கள் என்று எந்தப் பக்கமும் மனம் செல்லாது. சாயாது. எந்தப் பிரமுகரையும் தன் வட்டத்திற்குள் அனுமதிக்காது. லேட்டஸ்ட் காரில் பவனி வரமாட்டார்கள். லேட்டஸ்ட் பைக்கில் பவனி வரமாட்டார்கள், இப்போது குருஜி என்றும், சாமிஜி என்றும் சொல்லப்படுபவர்கள் சொல்பவர்கள் எவரும் ஆன்மீகவாதிகள் இல்லை, ஆன்மீகத்தை விடுங்கள் பக்தியை வளர்ப்பவர்கள் என்பதும் கிடையாது என்பதே என் தாழ்மையான கருத்து.

    எப்போது ஆன்மீகம் என்று சொல்வதில், பக்தி என்பதில் பணம் புகுகின்றதோ, அரண்மனை போன்ற வீடு, சொகுசுக் கார், அரசியல் நுழைகிறதோ அப்போதே அது நீர்த்துவிட்டது, என்பதே என் தாழ்மையான கருத்து. அது ஆன்மீகமே அல்ல. பக்தியும் அல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னெல்லாம் எல்லா பக்தி இலக்கியங்களும், (அப்படிச் சொல்வதே தவறுனு படிச்சேன்.)பள்ளியிலேயே சொல்லிக் கொடுத்தார்கள். இப்போதோ திருக்குறள் தவிர்த்து மற்றவை பள்ளிப்பாடங்களில் இல்லை. இளைஞர்கள் மனதில் உண்மையான பக்தியும், பொறுப்பும், சகிப்புத் தன்மையும் தோன்றாததற்கு இதுவும் ஒரு காரணம். ஆகவே இதற்குப் பொறுப்புக் கல்வித் திட்டம் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது இல்லையா?

      நீக்கு
    2. முகநூலில் நேற்று நண்பர் ஜெயராமன் ரகுவின் பதிவில் அவர் நண்பர் ஆன மருத்துவர் ஒருவர் திருக்குறளின் அனைத்துக்குறள்களையும் மருத்துவரீதியாக உடல் நலனோடு சம்பந்தப்படுத்தி விளக்கங்கள் கொடுத்திருப்பதாகவும், அதைப் புத்தகமாக வெளியிட்டிருப்பதையும் சொல்லி இருக்கார். இது எவ்வளவு கடினமான முயற்சி! திருக்குறளை எத்தனை ஆழமாகப் படித்திருப்பதால் தானே இப்படி ஒரு புத்தகம்! மருத்துவத் தொழிலில் எந்நேரமும் பணியில் ஈடுபட்டிருப்பவர் இதற்காக எவ்வளவு உழைத்திருப்பார்!

      நீக்கு
    3. ..முன்னெல்லாம் எல்லா பக்தி இலக்கியங்களும், (அப்படிச் சொல்வதே தவறுனு படிச்சேன்.//

      ஆமாமா. பக்தின்னு சொன்னா தவறு. இலக்கியம்னு சொன்னால் மேலும் தவறு. வாயைத் திறந்து ஏதும் சொன்னாலே தவறு என்பர் சிலர். திறந்த வாயை மூட மறந்த மூடர்.

      நீக்கு
  23. மதியச் சாப்பாடு முடிந்து ஓய்வாகப் படுத்திருக்கையில் இன்ஷூரன்ஸ், ட்ரேடிங், டெபாசிட்கள்,மனைகள் விற்பனை என வரும் தொலைபேசி அழைப்புக்களால் கஷ்டப்பட்டிருக்கீங்களா? எங்களுக்கு அநேகமா தினமும் வரும். அதுவும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸும் பெண்களூரில் உள்ள ஒரு ட்ரேடிங் கம்பெனியும் விடாமல் அழைப்பாங்க. நம்பரை ப்ளாக் செய்தும் கூட எப்படியோ வேறொரு நம்பரில் அழைச்சுடறாங்க! உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? (அடுத்த புதன் கேள்வி)

    பதிலளிநீக்கு
  24. ஓடிடியில் திரைப்படங்கள் பார்க்கும் அனுபவம் உண்டா?

    பதிலளிநீக்கு
  25. பார்த்ததும்..கேட்டதும் ….இல்லை, இல்லை, இந்த முறை, படித்ததும்
    டாக்டர் வள்ளுவர்
    ”கவிதைகள்ல இண்டரஸ்ட் உண்டா?”
    ”ஓ ஏன் இல்லாம?”
    “அப்ப அப்துல் ரகுமான் ஞானக்கூத்தன் கவிதை பத்தி என்ன நினைக்கிறே?”
    “இவங்கள்ளாம் யாரு!”
    “அடப்பாவி! கவிதையில் இண்டரஸ்ட் உண்டுன்னியே?”
    “ஆமாம் உண்டு. திருவள்ளுவர் கம்பரெல்லாம் பெரிய கவிஞர்கள் இல்லியா? ஸ்கூல்ல படிச்சோமே?”
    தொண்ணூறுகள் வரை தமிழ்நாட்டு அரசுப்பள்ளியில் படித்த எவருக்குமே திருவள்ளுரையும் கம்பரையும் நினைவில் இருந்து எடுக்க முடியாது. அதுவும் 67க்குப்பின்னர் திருவள்ளுவர் பற்றி ஒவ்வொரு நாளும் எங்காவது பார்த்துக்கொண்டோ கேட்டுக்கொண்டோ இருப்போம். சமீபத்திய பிரதமர் வரை திருவள்ளுவரைப்பற்றிப்பேசாதவர்களே இல்லை எனலாம்.
    ஆனால் திருக்குறளைப்பற்றி சிந்தித்திருக்கிறோமா?
    இந்தக்கேள்விக்கு முக்கால்வாசிப்பேரிடம் கிடைப்பது ஓரவாய் அசட்டுச்சிரிப்புதான்!
    ஆனால் ஒரு மருத்துவர் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார்.
    அதுவும் எப்படி?
    தன் தொழில் சார்ந்து குறளைப்படித்து ஆய்ந்திருக்கிறார். அதோடு மட்டுமின்றி அதை மிக அழகாக சுருக்கமாக மருத்துவத்துடன் இணைத்து அழகிய புத்தகமாக கொணர்ந்திருக்கிறார்.
    என் குடும்ப டாக்டர்களில் ஒருவரான டாக்டர் முருகு சுந்தரம் அவர்களின் “டாக்டர் வள்ளூவர்” என்னும் அபார புத்தகத்தில் உடல் நலம் பேணுவது பற்றி மட்டுமல்லாமல் மன நலம் பேணுவது குறித்தும் சின்னச்சின்ன வாக்கியங்களாய் அழகு தமிழில் குறளையும் மருத்துவ நலன்களையும் இணைத்து அபார கட்டுரைகள். ஒவ்வொரு குறளுக்கும் ஒரு சின்ன விளக்கம் கூடவே உடல் நலம் பற்றிய குறிப்பு.
    ”அடுத்தது காட்டும் பளிங்குபோல்
    கடுத்தது காட்டும் முகம்”
    அவரது ஸ்பெஷாலிட்டியான தோல் முடி நகம் நலன்களை இணைத்து டாக்டர் எழுதியிருக்கும் வரிகள் நம்மையறியாமல் சபாஷ் போட வைப்பவை.
    ”செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானும் கெடும்”
    இந்தக்குறளுக்கு விளக்கம் சொல்லும்போது டாக்டர் செய்யத்தகாதவை என்பதில் அதீத சமூக ஊடக நேர விரயம் என்று இன்றைய காலகட்ட செய்யத் தாகாதவைகளையும் சேர்த்து தன் எழுத்தின் காலம் தாண்டிய நிதரிசனத்தின் மதிப்பைக்கூட்டியிருக்கிறார்.
    அதேபோல இன்னொரு இடத்தில் junk food பற்றியும் சொல்லி குறள் விளக்கத்தின் இன்றைய relevanceஐயும் உவப்பாகக்கொண்டு வருகிறார்.
    டாக்டர் முருகு சுந்தரத்தின் ஆழ்ந்த குறள் வாசிப்பும் அதன் உட்பொருளை கிரகித்து உடல் மன நலன்களுடன் இயைந்து கொடுத்திருப்பது இந்தப்புத்தகத்தை சாதாரண வாசிப்பிலிருந்து மேலே உயர்த்துகிறது.
    ”The purpose of writing is to keep civilization from destroying itself” என்று ஆல்பெர்ட் காமு சொல்லுவது போல டாக்டர் முருகு சுந்தரம் எழுதுவது வாசிப்பவர்களின் மனதில் மதிப்பைக்கூட்டும் எழுத்தாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. முக்கியமாக திருக்குறள் இன்றைக்கும் நம் தினப்படி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய செய்திகளைச்சொல்லும் காலம் கடந்த இலக்கியம் என்பதை உறுதி செய்கிறார் டாக்டர்.
    ”ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்விரு வாசகரும் திருக்குறளைக்கற்க வேண்டும், கூடவே திருக்குறள் மருத்துவப்பாடத்திட்டத்திலேயே வைக்கப்பட வேண்டும் என்று டாக்டர் முருகு சுந்தரம் சொல்வதற்கேற்பத்தான் அவர் இந்தப்புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  26. டாக்டர்கள் முருகுசுந்தரம், வள்ளுவர் பற்றித்தானே இங்கே பேச்சு. ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் எதற்கு ஊடாலே!

    பதிலளிநீக்கு
  27. ..பொதுவாக சந்நியாசிகளும், அகோரிகளும், கடுமையான சிவ பக்தி கொண்ட சாமியார்களும் வணங்கி வந்த இறைவனை சகலருக்கும் இணக்கமானவனாக மாற்றியது இதன் மூலம் கிடைத்த வெற்றி எனலாம்.//

    என்ன இது! புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கம் அவரே சொல்லட்டும்!

      நீக்கு
    2. பொதுவாக சின்ன வயசில் இருந்தே பக்தியில் பயத்தையும் சேர்த்தே ஊட்டி விட்டுடறாங்க. அதில்லாமல் இறைவன் நமக்கு நெருங்கியனே என்னும் எண்ணத்தில் நாம் இறைவனோடு உரிமையாகப் பேசுவதை பக்தி இல்லாமல்/நம்பிக்கை இல்லாமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாகச் சொல்லுவார்கள். அவ்வளவு ஏன்? எங்க வீட்டில் மாமியாருக்கும் எனக்குமே இதில் கடுமையான அபிப்பிராய பேதம் உண்டு. அவங்களுக்கு இஷ்ட தெய்வம் மாரியம்மன் என்பதால் எதுக்கெடுத்தாலும் இப்படிப் பண்ணலைனால் மகமாயி வந்து கண்ணைக் குத்திடுவா! சூலத்தால் விரட்டுவா என்றெல்லாம் சொல்லுவார்கள். அவங்க பக்தி என்பது பயம் கலந்த பக்தி. அதே சமயம் நான் பிள்ளையாருடன் சண்டை போடுவேன்; திட்டுவேன்/ அனுமனை
      "ஆஞ்சி" எனச் செல்லமாக அழைப்பேன். அவங்களுக்குக் கோபம் வரும். ஸ்வாமியிடம் பக்தியும் இல்லை; மரியாதையும் இல்லை; உனக்கு அப்படியே ஜுரத்தைக் கொண்டு கொட்டப் போறா மகமாயி என்பார்கள். நான் பொருட்படுத்தியதில்லை. அதோடு கந்த சஷ்டி கவசமெல்ல்லாம் வீட்டில் வைச்சுச் சொல்லக் கூடாது; துளசிக்குப் பூப்போட்டு நமஸ்காரம் பண்ணக் கூடாதுனு எல்லாவற்றிற்கும் தடா! மகமாயிக்குப் பிடிக்காததைச் செய்யக் கூடாது என்பார்கள். மகமாயி இதை எல்லாம் ஏத்துக்க மாட்டா என்பார். நாம தான் அடங்காப்பிடாரி ஆச்சே! ரகசியமாக எல்லாமும் செய்தோம். குழந்தைங்களிடமும் இறைவனை உற்ற துணையாக, வழி நடத்துபவனாக, எப்போது கூப்பிட்டாலும் அருகே இருப்பான் என்பதாக அறிமுகம் செய்து வைத்தேன்.

      கிட்டத்தட்ட இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் நிலையும் இப்படித்தான். அவங்களுக்கு பக்தி என்னும் பற்றுக்கோலைப் பிடிக்கக் கூடத் தெரியலை. ஞானிகளும், சாமியார்களும், அகோரிகளும் செய்யும் பூஜை முறைகளைப் பார்த்து இதெல்லாம் நம்மால் ஆகாதது என்னும் எண்ணம் அவங்களுக்குள் ஆழமாகப் பதிகிறது. இவற்றை எல்லாம் நீக்கி அவங்களையும் பக்தி மார்க்கத்தில் திருப்பவென ஏற்பட்டதே ஹரே ராமா இயக்கம், இப்போதைய குருமார்களான ஜக்கி வாசுதேவ்,ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும், வேதாத்திரி மஹரிஷி ஆகியோர். இதில் ஜக்கி வசுதேவ் அவர்கள் இளைஞர்களின் நாடியைச் சரியாகப் பிடித்துப் பார்த்து சிவராத்திரியா? அது இரவு முழுவதும் பக்தியில் திளைக்கும் ஓர் கொண்டாட்டம் என்னும் எண்ணத்தை இளைஞர்களிடையே விதைத்துத் தான் முன் மாதிரியாகவும் இருந்து செயலில் நடத்துகிறார். இம்மாதிரிக் கூட்டு வழிபாடு என்பது தமிழகத்துக்குப் புதியது. வடக்கே ஆங்காங்கே ஒன்றிரண்டு இடங்களில் இருந்தாலும் அவையும் நவராத்திரி, துர்கா பூஜை. ஹோலி போன்றவற்றில் தான். ஆகவே இளைய சமுதாயம் பாரம்பரிய வழிபாடுகளில் ஓரளவு ஈடுபடுவதற்கு இம்மாதிரியான குருமார்களின் ஆடம்பரமான வழிபாட்டு முறை உதவுகிறது.

      நீக்கு
    3. விரிவான பதிலுக்கு நன்றி

      நவீன குருக்களான ஜக்கி வாசுதேவ், ரவிஷங்கர் ஆகியோரது வழிபாட்டு முறைகளை ’ஆடம்பர’ வழிபாட்டு முறை என நான் நினைக்கவில்லை. ஒன்றும் தெரியாத, ஆனால் ஏதோ தெரிந்துகொள்ள விழையும் இளைஞர்கள், வெளிநாட்டவரை மெல்ல நமது ஞானமரபிற்குள் கொண்டு வரும் சீரிய முயற்சி -ஆனந்த வழிபாட்டு முறை அது. கேஷுவலாக எதையும் எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள், ஆடல், பாடல்களில் எளிதில் லயிக்கும் வெளிநாட்டவர்கள் போன்றோரின் மனதுக்கும் இது ஒத்துப்போகிறது. அத்தகையோரையும் இந்திய ஞான மரபினை நோக்கித் திரும்பவைக்கிறது. நல்லதுதான். விளைவும் நல்லதாகவே அமையும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!