11.8.26

எ போ சிறுகதை :: மணி காட்டிய வித்தை ராஜி -- முத்தண்ணா குகப்ரியை


மணி காட்டின வித்தை

‘முத்தண்ணா ’

“சங்கரா, ராஜா, கிட்டு, ராமா, இங்கே வாருங்கள். நான் ஒரு வித்தை காட்டப்போகிறேன்” என்றான் மணி.

எல்லாரும் வந்தார்கள். “என்ன வித்தை?” என்றார்கள். “இதோ காட்டுகிறேன் பார். சங்கரா, நீ பத்துக்குள்ளே ஒரு லக்கம் சொல்லு.”

“பதினைந்து.”

“விளையாடாதே; நிஜமாகவே சொல்லு.”

“சரி, ஒன்பது.”

தன் கையிலிருந்த துண்டுக் காகிதத்தில் ‘9’ என்று எழுதிக்கொண்டான் மணி.

“நீ சொல்லு, ராஜா.”

“நாலு.”

ஒன்பதுக்கு அடுத்தாற்போல் ‘4’ என்று எழுதிக்கொண்டான் மணி. காகிதத்தில் ‘94’ என்று ஆயிற்று.

“நீ, கிட்டு.”

“நானா? ஏழு.”

மணி தன்னுடைய காகிதத்தில் ‘7’ என்று சேர்த்து எழுதிக் கொள்ளவே ‘947’ என்று ஆயிற்று.

“நீ சொல்லவில்லையே, ராமா?”

“ஆறு என்று வைத்துக்கொள்ளேன்.”

மணி ‘6’ என்று எழுதினான். ‘9476’ என்று இருந்தது.

“சரி, நானும் ஒன்று சொல்லவேண்டாமா? எட்டு” என்று சொல்லிக்கொண்டே ‘94768’ என்று எழுதி முடித்தான்.

இன்னொரு காகிதத் துண்டை எடுத்தான். இந்தத் தொகையில் கடைசி லக்கமாகிய எட்டில் இரண்டைக் கழித்தான். ஆறு என்றாயிற்று. எட்டுக்குப் பதிலாக ஆறு என்று எழுதிக்கொண்டான். கழித்து எடுத்த இரண்டை முதலில் எழுதினான். மற்ற லக்கங்களை முன் இருந்தபடியே எழுதிக்கொண்டான். ஆகவே அவன் இரண்டாவது காகிதத் துண்டில் எழுதிய தொகை ‘294766’ என்று இருந்தது. அந்தத் துண்டைத் தன்னுடைய சட்டைப் பையில் மடித்துப் போட்டுக்கொண்டான். முதல் துண்டை ராஜாவிடம், “இதைக் மடித்து வைத்துக்கொள். இது ஐந்து பேருமாக எழுதியது” என்று சொல்லிக் கொடுத்தான். அதை ராஜா மடித்து வைத்துக்கொண்டான்.

“இப்பொழுது, சங்கரா, நீ மட்டிலும் தனியாக ஐந்து ஸ்தானத் தொகை ஒன்றை இந்தத் துண்டுக் காகிதத்தில் எழுது, பார்ப்போம்” என்றான்.

‘64381’ என்று எழுதினான் சங்கரன். அதைப் பார்த்துக்கொண்டே, அதற்கு அடியில் ‘35618’ என்று மணி எழுதினான். அதாவது, சங்கரன் எழுதிய தொகையிலுள்ள ஒவ்வொரு லக்கத்தையும் தனித்தனியே ஒன்பதிலிருந்து கழித்து அதற்கு நேர் நேராக எழுதிக்கொண்டான். “இந்தக்காகிதத்தையும் மடித்து வை” என்றான்.

“நீயும் ஒரு தொகை எழுதுகிறாயா, கிட்டு?” என்று இன்னொரு காகிதத் துண்டைக் கொடுத்தான்.

‘73904’ என்று எழுதினான் கிட்டு. அதைப் பார்த்துக்கொண்டே முன்போலவே, ஒன்பதிலிருந்து கழித்து, ‘26095’ என்று அதற்குக் கீழே எழுதினான் மணி. “இதையும் மடி, ராஜா” என்றான்.

“இதோ உங்களிடம் மூன்று காகிதத் துண்டுகளைக் கொடுத்திருக்கிறேன். அவற்றிலே நாம் எல்லாருமாக எழுதின தொகை ஒன்று. சங்கரன் தனியாக எழுதின தொகை ஒன்று. கிட்டு தனியாக எழுதின தொகை ஒன்று. நான் எழுதினது இரண்டு. ஆக ஐந்து. சரிதானே? நீயும் கிட்டுவும் என்ன தொகை எழுதப் போகிறீர்களென்று முன் எனக்குத் தெரியுமா, சங்கரா?”

“தெரியாது.”

“இதோ பார். நீங்களும் நானுமாக எழுதின ஐந்து தொகைகளும் சேர்ந்து மொத்தம் எவ்வளவு ஆகுமென்று எனக்கு முன்னமேயே தெரிந்துவிட்டது. அதை இதோ எழுதிவைத்திருக்கிறேன். பாருங்கள்” என்று தன் சட்டைப் பையிலிருந்து தான் முதலில் எழுதிவைத்திருந்த சீட்டை எடுத்து நீட்டினான்.

அவர்கள் “294766” என்று படித்தார்கள். “மொத்தம் இதுதானா?” என்றார்கள்.

“சந்தேகமே வேண்டாம். நீங்கள் வேண்டுமானால் கூட்டிப் பாருங்கள்” என்றான்.

அவர்கள் ‘94768, 64381, 35618, 73904, 26095’ என்று எழுதிக் கூட்டிப் பார்த்தார்கள். மொத்தம் ‘294766’ என்று தெரிந்துகொண்டார்கள்.

“நான் வித்தை காட்டியா, இல்லையா?” என்றான் மணி.

“பலே. வித்தைகாட்டிதான் நீ. சந்தேகமில்லை; அது கிடக்கட்டும், உனக்கு இதை யார் சொல்லிக் கொடுத்தார்கள்?”

“நான் எங்கேயோ படித்தேன்.”

“எங்களுக்கும் சொல்லிக்கொடேன்.”

“ஆகா” என்று தான் செய்ததைச் சொல்லிக் கொடுத்தான் மணி. “ஆனால் ஒன்றே ஒன்று. முதலில் நாம் ஐந்து பேருமாக எழுதிக்கொள்ளுகிற தொகையில் கடைசி லக்கம் இரண்டுக்குக் கீழ்ப்படக்கூடாது. இரண்டுக்குக் கீழ்ப்பட்டால் கணக்குச் சரியாக வராது. வித்தை ஏமாந்து போகும்” என்று எச்சரிக்கை செய்தான்.

அவர்களும் போட்டுப் பார்த்தார்கள். சரியாக வந்ததைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

- கலைமகள் பிப்ரவரி 1935 - 
===============================================================================================

இன்று இன்னொரு சிறுகதையும்...   அதுவும் இதே இதழிலிருந்து...

நடுநிசி. மிகவும் சோர்ந்து வாடிக்கிடந்தாள் ராஜி. வழக்கத்திற்கு மாறாக அன்று அவள் விழித்திருப்பதையும், படுக்கையிற் புரண்டு புரண்டு சிந்திப்பதையும் கண்டு பொன்னம்மாள் அவள் அருகில் வந்து, “ராஜி! ராஜி! உனக்கு என்னசெய்கிறது? ஏன் இப்படித் தவிக்குறாய்? மாப்பிள்ளையிடம் சொல்லி டாக்டரைக் கூப்பிடச் சொல்லட்டுமா?” என்று மிகுந்த பரிவுடன் கேட்டாள்.

“டாக்டரும் வேண்டாம், மண்ணங்கட்டியும் வேண்டாம்; எனக்கு வேண்டிய மருந்து எந்த மனிதவைத்தியன் கையிலுமில்லை, நீ படுத்துக்கொள்” என்று வெடுவெடுத்தாள் ராஜி.

அவள் பேசிய அதிர்ச்சியினால் தொட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிறு குழந்தை வீரிட்டெழுந்தது. பொன்னம்மாள் மெதுவாய்த் தொட்டிலை ஆட்டியவண்ணம் தணிந்த குரலில், “ராஜி! நீ கொஞ்சநாட்களாகவே ஒருமாதிரியாகத்தான் இருக்கிறாய். நானும் என்ன என்னவோ செய்துபார்த்தாயிற்று. நீயோ உன் மனத்திலிருப்பதைச் சொல்லமாட்டேனென்கிறாய். உடம்போ நாளுக்கு நாள் தரும்பாய்ப் போகிறது. உனக்கென்னதான் கவலை? நாய்க்கொளித்த சூடுண்டா? ஏன் என்னிடம் சொல்லமாட்டேன் என்கிறாய்? மாப்பிள்ளை ஏதாவது அதிருப்திப்படுகிறாரா? எதுவாயிருந்தாலும் வாயைத் திறந்து சொன்னால்தானே ஏதாவது பரிகாரம் செய்யலாம்? இப்படியே மூதேந்திரமாய் வைத்துக்கொண்டு தவித்தால் நான்தான் என்னசெய்யமுடியும்? ஆயிற்று; இன்னும் கொஞ்சநாளில் நானும் ஊருக்குப் புறப்படவேண்டியது தானே? பிறகு அடிக்கடி வருவதென்றால் முடியுமா? இப்படி 'பச்சை உடம்பில்' சோறுதண்ணீரில்லாமற் கிடந்தால் பிறகு என்னவாகும்? குழந்தைக்கு இன்னும் அறுபது நாளாகவில்லை; அதன் உடம்புதான் எதற்குாகும்?” என்று பெருமூச்செறிந்தாள்.

ராஜி சற்றுநேரம் ஒன்றும் பேசவில்லை. பிறகு குப்புறப் படுத்து விம்மி விம்மி அழலானாள்.

ராஜியின் அழுகையைக் கண்ட பொன்னம்மாளின் மனம் உருகிவிட்டது. அவள் ராஜியின் அருகே குனிந்து, “ஏடி, ராஜி!  என்னதான் சங்கதி, சொல்லேன்?” என்று கெஞ்சிக் கேட்கலானாள்.

ராஜி தலை நிமிர்ந்தாள். அவள் கண்களினின்றும் கண்ணீர் தாராதாரையாய்ப் பெருகிற்று; துன்பம் தாளாதவள் போல் இரு கைகளையும் மார்பிற் சேர்த்துக்கொண்டாள்; “முதலில் மாப்பிள்ளை தூங்குகிறாராவென்று கவனி” என்றாள்.

“விடியற்காலையில் எழுந்திருக்கவேண்டுமென்று கூறி அவர் பத்தடித்ததுமே படுக்கப் போய்விட்டாரென்று காஸீசரன் சொன்னான். வருஷா வருஷம் ஆறு மாதங்களுக்குொரு முறை ஆபீஸில் கணக்கு முடிவுசெய்வார்களென்றும், அதனால் இன்னும் ஒரு மாதம் அதிக வேலையிருக்குமென்றும் குமாஸ்தா சொன்னான். அவன் ஒருவனுக்குத்தான் தமிழ் தெரிகிறது. 
 அவனுமில்லாவிட்டால் பாஷை தெரியாத இவர்களுடன் பேசுவதே கஷ்டம். இன்னும் இரண்டொரு மாதமிருந்தால் உனக்கும் சுமாராய், பேசாவிட்டாலும், பங்காளியும், ஹிந்துஸ்தானியும் சொல்லுவதையாவது புரிந்துகொள்ளும் சக்தி வரலாம்.”

“அது கிடக்கட்டும், மாப்பிள்ளையின் அறையில் விளக்கு எரிகிறதா பார்.”

“இல்லை.”

“சரி, இப்படி உட்கார். நான் சொல்லுகிற வார்த்தைகள் உன் நெஞ்சக்கும் என் நெஞ்சக்குந்தான் தெரியும். கவனமாய்க் கேள். மேலைத்தெரு பாலகோபாலனை நினைவிருக்கிறதா?”

“ஏன்? நினைவில்லாமலென்ன? நீ இங்கே, கல்கத்தாவுக்கு வந்த இரண்டொரு மாதங்களுக்கெல்லாம் பம்பாயிலிருந்து கப்பல் படிப்பு முடிந்ததும் ஊருக்கு வந்திருந்தான். அகத்துக்குக்கூட ஒருநாள் வந்திருந்தான். உன்னைப்பற்றி ரொம்ப விசாரித்தான். காபி போட்டுக்கொடுத்தேன். வேண்டாமென்றான்.”

“சரி, சரி; வந்திருந்தானா? நீ ஏன் அதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லை?”

“அது அவ்வளவு முக்கியமென்று எனக்குத் தோன்றவில்லை. நாமிருந்த நிலைமையில் திடீரென்று இவ்வளவு நல்ல வரன் வந்து வாய்த்ததையும் உன்னுடைய அதிர்ஷ்டத்தையும் பற்றி எல்லோருமேதான் ஆச்சரியப்பட்டார்கள். அது போலவேதான் அவனும் ஆச்சரியப்பட்டு வந்திருக்கிறானென்று எண்ணினேன்.”

“சரிதான் நீ வேறெப்படி எண்ணுவாய்! என்னுடைய மடத்தனம்தான் என்னைக்கெடுத்தது. அவன் டப்ரின் கப்பலுக்குப் போவதற்கு முன்பு நானும் அவனும் கலியாணம்செய்து கொள்வதாய் ஏற்பாடு செய்துகொண்டோம். அப்பொழுது அவனுக்கு வயது பதினெட்டும் எனக்குப் பதினான்கும் என்று உனக்கு ஞாபகமிருக்கலாம். அதற்கு இரண்டொரு மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்திலிருந்து வரும்பொழுது குதிரைவண்டியில் அகப்பட்டுக்கொள்ளவிருந்த என்னைத் தப்புவித்தானே, இதையொட்டிச் சில நாட்களுக்குப் பிறகு ‘என்னை மணந்துகொள்ளுகிறாயா?’ என்று கேட்டான்; கெஞ்சினான்.

“பணமில்லாமல் உலகத்தில் என்ன சுகம்? நீயும் ஏழை நானும் ஏழை. நாமிருவரும் மணந்துகொண்டால் ஏழைமையிலேயே திண்டாடி மடியவேண்டியதுதான். உன்னால் அப்படிப் கஷ்டப்பட முடியாது; நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என்றேன்.

“ஆனால் ராஜி!  ஒரே ஒரு வாரம். நான் டப்ரின் கப்பலுக்குப் போய் நான்கு வருடங்களில் படிப்பை முடித்துக்கொண்டு நல்ல சம்பளமுள்ள ஒரு கப்பற் தலைவனாக வருவேன். அப்பொழுது நீ மறுக்கமாட்டாயே! கப்பற்படிப்புக்குப் போகலாமா வேண்டாமா வென்று தயங்கினேன். கஷ்டம்தான். உன்னை அடைவதற்காக, நான் எப்படியாவது எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக்கொள்ளுகிறேன். அதுவரையில் நீ எனக்காகக் காத்திருப்பாயா? அப்பொழுது உனக்கு வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது ஆகலாம். அதுவரையில் கலியாணமாகாத பெண்கள்தான் இப்பொழுது எவ்வளவோ பெயர்கள் இருக்கிறார்களே. நீ காத்திருந்தால் நாலுவருஷமல்ல; நாற்பது வருஷங்களானாலும் நான் சித்தமாயிருக்கிறேன்; ஆனால் என் இருதயத்தை நீ உள்ளபடி உணர்ந்திருக்கிறாயாவென்றுதான் பயப்படுகிறேன். ஆனால், நீ மனம் வைத்துக்காத்திருப்பதாய் உறுதி கூறு;  நான் கட்டாயம் வந்துவிடுகிறேன்’ என்று அன்பு ததும்பும் குரலில் ஆவேசங் கொண்டவன்போல் கூறினான்.

“என்நெஞ்சு உருகிவிட்டது. உறுதிகூறினேன். என் கைகளைப் பற்றிப் புறங்கைகளை நெற்றியின்மீது வைத்துக்கொண்டான். கரங்களை மீளவும் தன் கன்னங்களின்மீது வைத்துக்கொண்டான். அதற்குள் நீ எங்கிாிருந்தோ என்னைக் கூப்பிட்டாய், உடனே மருண்டவன்போல் திகைத்து என் புறங்கைகளை முத்தமிட்டுவிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டான்” என்று பெருமூச்செறிந்தாள்.

“அடிபாவி! கெடுத்தாயே. இது மாப்பிள்ளைக்குத் தெரியுமா?” என்று பயமும் திகிலும் கொண்டவளாய்க் கேட்டாள் பொன்னம்மாள்.

“அதற்குள் அவசரமா? முழுவதும் கேட்டுத் தொலையேன். பிறகு நான் அவனுக்கு நாலைந்து கடிதங்கள் எழுதியதுண்டு. அவன் பதிலே எழுதவில்லை. கடந்த நான்கு வருஷமாய்த்தான் அவனைப்பற்றி ஒருதகவலும் நமக்குத்தெரியவில்லை.

“பிறகுதான் இவரை நிச்சயித்தீர்கள். சீ, நான் இவருக்கு ஏற்றவளா. இவருடைய நல்லொழுக்கத்திற்கும், பெருந்தன்மைக்கும், புத்திசாலித்தனத்திற்கும் என்னைவிட எவ்வளவோ உயர்ந்த உத்தமியல்லவா வந்திருக்கவேண்டும். பாவம்! இந்தவிஷயத்தில் கொடுத்தவைக்காத மனிதர் இவர். நானா இவருக்கு ஏற்றவள்! ஒரு நாளுமில்லை. மனைவி என்று சொல்லிக்கொள்வதற்குக் கூட எனக்கு யோக்யதை இல்லை. அழகையும் குணத்தையும் பற்றித்தான் வாய்கொண்டமட்டும் புகழ்ந்தீர்கள். வேலையோ பெரியவேலை. சம்பளம் ஆறுநூறு. பவானிபூரில் அழகிய வீடு. இவைகளையெல்லாம் கேட்டபிறகு இந்த வரனைத் தட்டிவிட மனம் வருமா? பாலகோபாலனிடமிருந்து ஏதாவது தகவல் வந்திருந்தால் என்னமோ? அவன் என்ன ஆனானோ ஒன்றுமே தெரியவில்லை. இந்த நெருக்கடியில் நான் இசைவதைத் தவிர வேறென்னசெய்ய முடியும்? கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன், மறுமாதம் வருவதாக அவனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் ‘மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான்’ என்றெழுதி யிருந்ததேயன்றி, எங்கிருக்கிறான், என்ன அந்தஸ்திலிருக்கிறான் என்று தெரியவில்லை. அதை நம்பி நான் இவ்வளவு நல்லவரனைத் தட்டிவிட்டு, அவன் எளியவனாய்த் திரும்பிவந்தால் என்னசெய்வது என்று துணிந்தேதான் கல்யாணத்திற்கு இணங்கினேன்.

“இங்கே வந்த மறுநாள் மாப்பிள்ளை என்னருகில் வந்துட்கார்ந்து, ‘என்னை உனக்குப் பிடித்துத்தான் கல்யாணத்திற்கு இணங்கினாயா, அல்லது தாய்தந்தையின் விருப்பமா, பலவந்தமா?’ என்று கேட்டவாராய்க் குனிந்திருந்த என் தலையை நிமிர்த்தினார்.

“ ‘கல்யாணவிஷயத்தில் பலவந்தப்படுத்துவதானால் இவ்வளவு வயதுவரையில் காத்திருக்கவேண்டிய அவசியமில்லையே’, என்றேன்.

“ ‘வேறு எவரேனும் நீ நேசித்ததுண்டா? சங்கோஜப்படாதே. ராஜீ, நிஜத்தைத் தாராளமாய்ச் சொல்லலாம். உண்மையினால் கெடுதி நேராது’, என்றார்.

“என் உடல் விலவிலத்தது. என்ன சொல்வதென்றறியாதவளாய்த் திகைத்தேன்.

“ ‘இதிலென்ன தயக்கம்’, என்று கூறியவராய் இளநகை தோன்ற, என் கண்களைக் கூர்ந்து நோக்கினார்.

“தூக்கிவாரிப்போட்டது. என் கண்களை அவர் பார்த்தது என் இதயத்தையே அவர் பார்த்துப் பார்ப்பதுபோல் தோன்றிற்று. ஆனாலும் மெதுவாய்ச் சமாளித்துக்கொண்டு, ‘இல்லை, கிடையாது’, என்றேன். அவ்வளவுதான், மேலொன்றும் கேட்கவில்லை.”

"நாசமாய்ப்போக, நாசமாய்ப்போக, பீடை” என்று வயிற்றிலடித்துக் கொண்டவளாய்ப் பற்களை நற நற வென்று கடித்தாள் பொன்னம்மாள்.

“நாலைந்து மாதங்களுக்குமுன் இங்கே பிரசாத் பாபு வீட்டில் ஒருவிசேஷம் நடந்தது. நானும் போயிருந்தேன். அங்கே பாலுவைக் கண்டேன். பிரசாத் பாபு அவனை இவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார். கல்கத்தா—ரங்கூன் செல்லும் கப்பலில் வேலையாயிருப்பதாகத் தெரியவந்தது. நான் பாராதவள் போல் உள்ளே போய்விட்டேன். அவன் சென்னை வாசியாயிற்றே என்ற அபிமானத்தினால் நம்மகத்திற்கு ஒரு நாள் சாப்பிடா வரும்படி அழைத்து விட்டார்; என்னிடமும் சொன்னார்.  நான் பாவி அப்பொழுதே சொல்லியிருக்கக் கூடாதா? சொல்லிவிடலாம், சொல்லிவிடலாம் என்று பலமுறை தொடங்கியும் முடியவில்லை.

“தவிர, வேலைக்காரர்கள் ஏதாவது சிறு பொய் சொல்லிவிட்டால் கூட மிகவும் கடுமையாய் நடந்துகொள்ளுகிறார்; ‘ஏன் என்னிடம் பொய் சொன்னாய்?’ என்று கேட்டால் என்ன பதிலுரைப்பேன்?

“மறுநாள் மாலை பாலு சாப்பிட வந்தான். அவன் முகத்திற் சந்தோஷம் குடிகொண்டிருந்தது. நான்வந்து வரவேற்பேனென்று எதிர்பார்த்திருப்பான். எனக்கு எதிரில் வரத் தைரியமில்லை. என்ன பேச்சு வருமோ, என்னவாகுமோவென்று பயந்தேன். அவசரமாய் மாடிக்குப்போய் அமிருதாஞ்சனத்தை எடுத்து முகமுழுவதும் தடவிக்கொண்டு இழுத்துப் போர்த்துப் படுத்துவிட்டேன்.

“ ‘வந்தவரைப் பேசாமல் அனுப்புவது மரியாதையன்று’, என்று சொல்லி இவரேவந்து என்னையழைத்தார். போனேன். முன்னிலும் பன்மடங்கு அழகாய்க் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தான் பாலு. என்நெஞ்சு படபடவென்றடித்துக்கொண்டது.

“தற்செயலாய் மாப்பிள்ளை வெளித்தாழ்வாரத்திற்குச் சென்றார். பாலு வெற்றிலையை மென்றவண்ணம் என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

“ 'அம்மா! அம்மா! அந்தப்பார்வை என்னை நோக்கி ‘என்னை ஏமாற்றினையல்லவா? உன்னைப் பழிவாங்குகிறேன்’, என்று சொல்வதுபோலிருந்தது. மறுநாட்காலை அவன் இரங்கூன் போவதாகத் தெரிந்தது. என் இருதயத்தின் மேலிருந்த பளு கீழேவிழுந்தது போல் தோன்றிற்று. அவன் மறுமுறை வருவதற்குள் என்சங்கதிகளை இவரிடம் சொல்லிவிடவேண்டுமென்று பலதடவை யோசித்தேன்.”

“ஹூம், கர்மம்!” என்று தலையிலடித்துக்கொண்டாள் பொன்னம்மாள்.

“பிறகு ஐந்தாறு மாதங்களாய் அவனைக் காணவில்லை. குழந்தைக்குத் தொட்டிலிடும் அன்று மாலையில் ஆபீஸ் அறையில் அவன் குரல்போல் கேட்டது. ராம்பாபியையைப் (வேலைக்காரி) போய்ப் பார்த்துவரச் சொன்னேன். அவன்தானென்று அவள் சொன்னாள். தற்செயலாய், காசீசரன் கீழேவந்திருந்தான். அவனைக் கூப்பிட்டு அவர்கள் பேசுவதைக் கவனித்துவரும்படி சொன்னேன். அவன் போனபொழுது ஆபீஸ் அறைக்கதவு ஒருக்கணித்திருந்ததாகவும், இங்கிலீஷிலேயே மிகவும் தணிந்த குரலில் இருவரும் பேசியதாகவும், கடைசியில் எஜமானர், ‘சீசீ, இவ்வளவுதானா! நீ ஏதோ பெரியமனிதன் என்றெண்ணியிருந்தேன். இவ்வளவு நீசனா! நல்லது, நீவந்தவிஷயம் முடிந்ததலவா, போகலாம்’, என்று கூறி ஏதோ ஒரு சத்தைக் கடிதங்களை மேஜையில் வைத்துப்பூட்டிய சத்தம் கேட்டதும் தான் வந்து விட்டதாகவும் அவன் சொன்னான்.

“நான் எட்டிப்பார்த்தேன். அதற்குள் பாலு தாழ்வாரத்தைக் கடந்து போய்விட்டான்” என்று சொல்லிக் கண்ணீர் விட்டாள்.

“உஸ்! அழாதே. அழுதழுது என்ன பிரயோஜனம்! இப்பொழுதாவது போய் அவர்காலில் விழுந்து மன்னிப்புக் கேள்.”

“மன்னிக்கக்கூடிய விஷயமா? என் கடிதங்களைப் படித்திருப்பார். ஒப்புக்காவது மன்னித்தேனென்று சொல்லமுடியுமா? சொன்னாலும் ஒவ்வொரு கணமும் ஏற்கனவே நடந்த விஷயங்கள் தோன்றித்தோன்றி ‘நம்பாதே நம்பாதே’ என்று எச்சரிக்கை செய்யுமல்லவா? இந்தப் பாழும் உடம்பை எதற்காகச் சுமக்கவேண்டும். என் குற்றத்திற்குத் தண்டனையை நானேதான் அனுபவிக்கவேண்டும். டாக்டரும் மருந்தும் எனக்கு வேண்டாம்” என்று கூறிக்கூனிக் குறுகி அழலானாள் ராஜி.

* * *
“ஸார்! ரொம்பவும் பயங்கரமான ரக்தசோகை. ஆகாரக் குறைவினால் ஏழை எளியவர்களுக்குத்தான் வருவது வழக்கம். ரொம்பவும் ஜாக்கிரதையாய்ப் கவனியுங்கள். நோயாளிக்கு வேறு தாதியும் குழந்தைக்கு வேறு தாதியும் ஏற்பாடு செய்துவிடுங்கள். இன்னும் ஒருவாரம் பார்ப்போம். பித்தகோசம் அடியோடு கெட்டுவிட்டது. பிறருடலிலிருந்து ரத்தம் பாய்ச்சும்படி நேர்ந்தாலும் நேரிடலாம்; எதற்கும் முன்ஜாக்கிரதையுடினிருப்பது நல்லது” என்று கூறினார் வைத்தியர்.

சீனிவாசன் மிகுந்த கவலையில் ஆழ்ந்தான். என்ன காரணத்தினால் தன் மனைவிக்கு இத்தகைய கொடிய நோய் வந்ததென்று பலவாறு யோசித்துப்பார்த்தான். அவனுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. வைத்தியரோ போஷணைக்குறைவு என்கிறார். அவளை எவ்விதம் கவனிப்பது, என்னசெய்வது என்று அவனுக்கு விளங்காமல் பலசரக்குக்காரனுக்குப் பைத்தியம்பிடித்த கதைபோல் தவியாய் தவிக்கலானான்.

புரளவும் சக்தியற்றவளாய் வெறும் எலும்பும் தோலுமாய்க் கிடந்தாள் ராஜி. முகமும் ஒளியிழந்து வாடிக்கிடந்தது. சீனு கலைவில் ஆழ்ந்தவனாய் அவ்வறையிலேயே உட்கார்ந்துவிட்டான். பொன்னம்மாள் திகைத்துத் திகைத்து நிற்கலானாள்.

கடந்த இரண்டு மாதகாலமாய் வேலைமிகுதியினால் தான் அவளைச் சரியானபடி கவனிக்கவில்லை என்று மனத்துள் தன்னையே நிந்தித்தவனாய் கண்களை மூடினான் சீனு.

எவ்வளவு நேரம் அப்படியிருந்தானோ அவனுக்கே தெரியாது. “அம்மாடி!” என்று பெருமூச்சுடன் ராஜி கூறிய சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டான். ராஜியின் கண்கள் சற்றே மூடியிருந்தன. இளமுறுவல்; கண்கள் மூடியிருந்தன. அவளருகிற் சென்று, அவள் கன்னங்களையும் புருவத்தையும் தொட்டுத் தடவினான். அச்சமயம்தான் அவளைக்கவனியாதிருந்ததற்குப் பரிகாரம் செய்து கொள்ளவேண்டுமென்று அவனம்னம் இச்சித்தது. “கடவுளே, ராஜியைக் காப்பாற்றும்” என்ற வார்த்தைகள் அவன் இதயத்துள் எழுந்தன. கைகள் குவிந்தன. கண்களில் கண்ணீர் துளித்தது. அதை மறைக்கும்பொருட்டு எழுந்து தொட்டிலை நெருங்கினான்.

இளங்குழந்தை கைகாளைனை உதைத்தவண்ணம் வெறும் வெளியைப்பார்த்து ஆனந்தப்படுவதைக் கண்டான். அளவுகடந்த வாஞ்சையுடன் இருகைகளாலும் வாரிஎடுத்து அணைத்துக் கொண்டான். பிறகு குழந்தையை வைத்துவிட்டு மாடிக்குச் சென்றான். ஊர் ஓசை அடங்கிவிட்டது. கோபுரக்கடிகாரம் டாங் டாங் என்று மணி பன்னிரண்டு அடித்தது. ஆபீஸ் அறையில் கையில் கதைப்புத்தகத்தை வைத்தவண்ணம் சோபாவிற் சாய்ந்திருந்தான் சீனு. கையிற் புத்தகமிருந்ததே யன்றி அவன் சிந்தை புத்தகத்தைவிட்டு வெகுதூரம் சென்றிருந்தது. குழந்தையின் அழுகைச் சத்தமும் தொட்டிலை ஆட்டும் சத்தமும் கேட்டு நின்றுபோயின. பெருமூச்சுடன் யாரோ மாடிப்படி ஏறிவருவது போல் சத்தம் கேட்டது.

மறுவினாடி, ஒருசேலையிற் பாதியை உடுத்து, மற்றப்பாதியைத் தோளிற் போட்டவளாய்த் தோன்றினாள் ராஜி.

“என்ன ராஜி! எதற்காக இந்தப் பலஹீனமான நிலைமையில் மாடிப்படி ஏறிவந்தாய்?” என்று அவன் கேட்குமுன், அவன் காலடியில் தடாலென்று உட்கார்ந்துவிட்டாள். தன் கரங்களையும் முகத்தையும் அவன் மடிமீது வைத்தவளாய் மாலை மாலையாய்க் கண்ணீர் சொரிந்தாள்.

“ராஜி, என்ன சங்கதி? ஏன் அழுகிறாய்?” என்று மிகுந்த பரிவுடன் அவள் முகத்தைத் தன் கரங்களால் நிமிர்த்திக்கேட்டான்.

சீனுவின் வார்த்தைகள் அவள் அழுகையை அதிகரிக்கச்செய்தன. பதிலே சொல்லவில்லை. “ராஜி, இதென்ன அசட்டுத்தனம்” என்று சொல்லியவனாய் எழுந்து அவளைத்தூக்கிச் சோபாவில் உட்காரவைத்தான்.

“அன்றைக்கு, தொட்டிலன்றைக்கு” என்ற வார்த்தைகள் ஈனசுரத்துடன் அவள் வாயினின்றும் வெளிவந்தன.

“என்ன? தொட்டிலன்று என்ன?” என்று படபடப்புடன் கேட்டான் சீனு.

“பாலகோபால் வந்திருந்தானாமே?”

“ஆமாம், வந்திருந்தான்.”

சற்றுநேரம் இருவரும் பேசவில்லை.

“உங்களிடம் ஏதோ கொடுத்தானாமே?”

சீனுவுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. “ஒகோ! அந்தக் கடிதங்களா? டிராயரில்தான் வைத்தேன். அடாடா, பிறகு மறந்தே போய்விட்டது” என்றான்.

ராஜீக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. சீனு எழுந்து மேஜையின் இழுப்பதைத் திறந்தான். ராஜிக்கு உலகமே சுற்றுவது போல் தோன்றிற்று. அக்கடிதங்களை ஒவ்வொன்றாய்ப் படித்துத் தன்னை இடித்துக்காட்டி ஏசப்போகிறானோ, அல்லது தன்னையே படித்துக்கூறும்படி வற்புறுத்தப்போகிறானோ வென்று விளங்காமல் பரமசங்கடமான நிலையில் தவித்தாலானாள்.

சீனு கடிதக்கத்தையைக் கையிலெடுத்தவனாய் மறுபடி இழுப்பதைத் திறந்தான். அதுவரையில் அது பிரித்துப் பார்க்கப்படாமல் கட்டி வைத்தபடியே இருந்ததென்றும், கயிற்றை அறுக்கும் பொருட்டுக் கத்தியை எடுக்கப்போகிறானென்றும் எண்ணி, அதிலிருந்து பலவிபரீதமான கற்பனைகள் தோன்றி அவள் நெஞ்சைத் துளைக்கலாயின. உடல்முழுவதும் பயத்தால் வியர்த்தது. கைகளும் கால்களும் வெட வெட வென்று உதறலாயின.

மறுவினாடி ஒரு சிறுவெளிச்சம் அவ்வறைமுழுவதும் பிரகாசித்தது. கையில் தீப்பெட்டியுடன் அவள் அருகில் சோபாவின் மேல் உட்கார்ந்தான் சீனு. "ப்பூ! இதற்குத்தானா இவ்வளவு பிரமாதம், வேறு ஒன்றும் கவலையில்லையே! அடி, அசடே! தெப்பலாய் வியர்த்திருக்கிறதே" என்று மிகுந்த பிரேமையுடன் கூறியவனாய்த் தனது கைக்குட்டையினால் அவள் முகத்தைத் துடைத்தான் சீனு.

இன்னதென்று சொல்லமுடியாத ஒரு நூதன உணர்ச்சியால் ராஜியின் உடல் பூரித்தது.

17 கருத்துகள்:

  1. இன்றைய பகுதிக்கு தலைப்பு போட்டதில் குழப்பம்.
    குகப்ரியை(-- யை எனக்குத் தெரியும். கலைமகளின் favorite எழுத்தாளர்.
    அவர் பெயருக்கு முன்னால் முத்தண்ணா எப்படி வந்தார் என்று குழம்பிப் போனேன்.
    கீழிறங்கி வந்ததும் தான் இரண்டு கதைகளைப் பிரசுரித்திருக்கிறீர்கள் என்று தெரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...  தலைப்பு குழப்புவதற்காகத்தான்!  ஹிஹிஹி...

      நீக்கு
  2. முத்தண்ணா என்ற பெயரில் எழுதியவர் பெ. நா. அப்புஸ்வாமி என்று நினைக்கிறேன்.
    தினமணி ஏட்டின் இணைப்பாக அந்த நாட்களில் 'சுடர்' என்று 16 பக்கங்களுக்கு
    முழு பேப்பரை இரண்டாக மடித்த நிலையில் வரும். அந்த தினமணி சுடரிலிலும்
    மஞ்சரியிலும் பெ.நா.அப்புசாமி நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
    பள்ளிப்படிப்பு படிக்கிற காலத்தில் இவரது விஞ்ஞான கட்டுரைகள் பாடப்புத்தகங்களைத் தவிர பெரிய அளவில் விஞ்ஞான ஞானத்தை வளர்ர்துக் கொள்ள எங்களுக்கெல்லாம் உதவியாக இருந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெ நா அப்புஸ்வாமி கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.  இங்கும் ஒரு கணக்கை கதை போல கொடுத்திருக்கிறார்.

      நீக்கு
  3. பத்தி பிரிக்கப்படாமல் பதிவு...

    படிப்பதற்குச் சிரமமாக இருக்கின்றதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்தி பிரிக்கப்பட்டிருந்தது.  சிறிய இடைவெளி.  மொபைலில் கடினமாக இருக்கிறது என்று புரிந்ததும் இப்போது மாற்றி இருக்கிறேன்.  பாருங்கள்.

      நீக்கு
  4. எனது நிலையை உத்தேசித்துச் சொன்னேன்...
    வேறு ஒன்றும் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விட்டேன். இப்போது பார்த்துச் சொல்லுங்கள்.

      நீக்கு
  5. ​குகப்பிரியை
    https://tamil.wiki/wiki/குகப்பிரியை

    முதல் கதை கொஞ்சம் அட்டகாசமாக தோன்றினாலும் சிந்தித்தால் மெத்தட் புரியும். ஒரு ஹிண்ட் தனித்தனியாக 2 பேரிடம் வாங்கும் எண்கள் பயனற்றவை அதாவது அவை 99999 இலிருந்து கழிக்கப்படுகின்றன. ஆக 4 எண்களின் கூட்டுத்தொகை 99999+99999 ஆகும் அதாவது 200000 க்கு 2 குறைவு. இந்த கூட்டுத்தொகையுடன் முதலில் எழுதிய எண்ணின் கடைசி 2 ஐ கழித்து விட்டு 200000+முதலில் எழுதிய எண் என்று இட்டுவிட்டால் சரியாகும். ஏன் என்றால் 200000 அடைய பாக்கி வேண்டிவந்ததை கடைசி இலக்கம் கொடுத்து விடுகிறது 2 க்கு கீழ் என்றால் கடன் வாங்க வேண்டி வரும். ஆகையால் சரிப்படாது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. ​குகப்பிரியை எழுதிய கதை அன்றைய காலகட்டத்தின் வழக்கத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட ஒன்று. அடுப்படியில் சுருங்கிய பெண் உலகம், பிற ஆண்கள் முன்பு வரக்கூடாது என்ற காலம், காதல் என்பது ஒரு அருவருக்கத்தக்க உணர்ச்சி என்ற காலம்.
    பொக்கிஷ கதைகளை எங்கிருந்து பிடித்தீர்கள்?

    Jayakumar​

    பதிலளிநீக்கு
  7. முத்தண்ணா குகப்ரியை. குகப்ரியை முத்தண்ணா.
    குகண்ணா! முத்தப்ரியை!

    நம்ம கையில பேனா இருக்கும்போது .. கவலை எதற்கு?விளையாடவேண்டியதுதான் !

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!