அடுத்து நாம் பார்க்கப் போவது பிரியாணி. இந்தச் செய்முறை அந்தக் காலத்தில் உண்டா என்றால் இருந்திருக்கு. "நளவீமபாக சாஸ்திரம்" என்னும் நூலில் பிரியாணி செய்முறை பத்திப் போட்டிருக்கு. முதலில் அதைப் பகிர்கிறேன். 1922 ஆம் வருடத்தைய பதிப்பு!
பின்னர் நாம் செய்யும் முறைகள் பற்றி. இதைப் பல விதங்களில் பண்ணலாம். வெங்காயம், பூண்டு சேர்த்தும், சேர்க்காமலும் பண்ணலாம். காய்களில் குறிப்பிட்ட காய்கள் தான் நன்றாக இருக்கும். என்றாலும் கூடியவரை காய்கள் சேர்த்தும், காய்கள் சேர்க்காமல் பட்டாணி, பயறு, போன்றவை மட்டும் போட்டும் கூடப் பண்ணலாம். இதில் செய்முறைகளும் மாறுபடும். மசாலா சாமான்களைப் பாரம்பரிய முறையில் அரைத்து விடுவது ஒரு வகை. மசாலா சாமான்களைத் தாளிப்பில் போட்டுவிட்டுப் பண்ணுவது ஒரு முறை. மசாலா சாமான்கள் எல்லாவற்றையுமே பொடியாகப் பண்ணி வைத்துக் கொண்டு பண்ணுவது ஒரு முறை. இப்படிப் பல முறைகள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் "நளவீமபாக சாஸ்திரத்தில்" இருந்து!
அதிலே இது ப்ரைட் ரைஸ் என்னும் வகையிலே வருதுனு நினைக்கிறேன். அவங்க தாளித்த அன்னம் எனத் தலைப்புக் கொடுத்திருக்காங்க. அதிலே உள்ளதை அப்படியே இங்கே கொடுக்கிறேன். அளவுகளைப் பார்த்துப் பிரமிக்க வேண்டாம். அந்தக் காலத்துக் கூட்டுக் குடும்பத்துக்கானதுனு நினைக்கிறேன்.
புலவுகளுக்குச் சொல்லிய அரிசி வகையில் ஓர் வகையில் ஓர் ஐந்து படி எடுத்துக் கல், மணல், உமி இல்லாமல் தீட்டிப் புடைத்து ஆய்ந்து மூன்று கழுநீர் போக்கி ஓர் புதுக்கூடையிற்கொட்டி ஓர் பலகையின் மேல் வைக்க வேண்டும். ஐந்து படி வேகும்படியான தேக்சாவில் 11/4 படி நெய் வார்த்து அடுப்பிலேற்றித் தீயையெரித்து நெய் கொதித்து வரும்போது இரண்டு கைப்பிடி வெண்காயம் உரித்து அரிந்து கொண்டு 11/2 ரூபாயெடை கிராம்பு, ஒரு ரூபாயெடை ஏலக்காய், கறுவாப்பட்டை இம்மூன்றுடனே சேர்த்து அதிற்போட்டு அவை சிவந்து வருகையில் சரியாயளந்த பத்துபடிச் சுத்த ஜலத்தை மெள்ள ஊற்றித் தாளித்து சிறுகைப்பிடியாக ஐந்து பிடி உப்பையுஞ் சேர்த்து மூடியினால் மூடித் தீயை நன்றாய் எரிக்க வேண்டும். நீர் கொதித்து ஆவி வரும் பக்குவத்தில் 3 பலம் திராட்சிப்பழத்தையும், வாதுமைப்பருப்பையும், முந்திரிபருப்பும், 3/4 பலம் இலவங்கப்பத்திரியும் தூவி உடனே புதுக்கூடையரிசியை அதிற்கொட்டிச் சட்டுவத்தால் செவ்வையாய்க் கிண்டி மூடி அரைநாழிக்கொருதரம் இப்படியே கிண்டி வர வேண்டும். இந்தப் பிரகாரம் மூன்று நாலு தரம் செய்து வருகையில் நீர் வற்றிச் சாதம் அடியில் அமுங்கியபின் மறுபடியும் சட்டுவத்தின் காம்பால் கீழுமேலுமாகத் துழாவிக் காய்ச்சின பால் ஒரு படி அதன் மேல் பரவலாக ஊற்றி நாலுமுழ வெள்ளைக்கைக்குட்டையை நனைத்துப் பிழிந்து தேக்சாவின் தங்கில் வட்டமாகச் சுற்றி வைத்து மூடியால் அழுத்தி மூடித் தணலை மூடியிலும் தேக்சாவின் அடிப்பக்கங்களிலும் போட்டு இரண்டு நாழிகை வரைக்கும் அடுப்பிலேயே வைத்திருந்து சுற்றிய குட்டையிலிருந்து ஆவி புறப்படும்போது திறந்து பக்குவமாயிருந்தால் எடுத்துவிடலாம். சிறிது வேறுபட்டிருந்தால் மூடியால் மூடி இன்னும் அரை நாழிகை வைத்திருந்து பின்பு இறக்கிவிடவேண்டும். இதைச் சுடுகையாகவே புசிக்க வேண்டும்.
அடுத்து இன்னொரு வகை. இதுக்குப் புலவுச் சாதம்னே பெயர் கொடுத்திருக்காங்க. அரிசி வகைகளில் புலவு பச்சையமுதும் பருப்புகளும், கரமசால்களும், முந்திரிப்பருப்பும், பூண்டு, வெண்காயம்(வெங்காயம்), மஞ்சள் இவைகளில் அரிசி ஒரு படி, பருப்பும் 1/4 படி, கரமசால் பலம் 21/2, முந்திரிப்பருப்பு பலம் பத்து, நெய், பலம் 15. இதுகளைச் செய்யும் விதம்.
முதலில் தேக்சாவில் பிரமாணமாய்ச் சலம் விட்டு அடுப்பிலேற்றி கரமசால்களைத் துணியில் கட்டி அந்த சலத்திற்போட்டு நன்றாய்க் காய்ந்தபிறகு அந்தப் பொட்லத்தை யெடுத்துவிட்டு அரிசியையும் பருப்பையும் 5 தரம் சலம் விட்டுக் கழுவி அந்த தேக்சாவிலிருக்கும் நீரிற்போட்டு அறை வேக்காடு வேகிறதற்குள் மேற்சொன்ன சாமான்களை வேறேயடுப்பில் வெண்காயம், பூண்டு, மஞ்சள் இவைகளைச் சேர்த்து அதையும் அரை வேக்காடு வேகவைத்து முன்சொன்ன சாதத்திலிதுகளையெடுத்துக் கொட்டி மேற்கண்ட நெய்யை விட்டுக் கிளறி இறக்கி அதன் மேலொரு தட்டு போட்டு மூடி அதற்கு மேல் நெருப்பைப் போட்டு வைத்தால் உள்நீரையெல்லாம் வறட்டிக்கொள்வதுமல்லாமல் சாதமும் நன்றாய் மலர்ந்திருக்கும். பிறகு அதை எடுத்துச் சாப்பிட்டாலதினாலுண்டாகும் பலாபலன்.
சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் சுத்த இரத்தத்தையுண்டாக்கும் அதிக வுணவாம் சௌக்கியம். குடலுக்கு வலிவுண்டாகும். தேகத்தழைப்பும் தாது விர்த்தியும் அதிகரிக்கும். யோகிகளுக்கும் தாது நஷ்டப்பட்டவர்களுக்கும் அநுகூலமுண்டாகும். இருதய கமலத்துக்கு வலிவுண்டாகி தைரியமுண்டாகும். வியாதி, தலை நோவு, மயக்கம் இவைகளுண்டாகும். பரிகாரம் எலுமிச்சம்பழச் சாற்றை வெந்நீரில் விட்டு சர்க்கரை கலந்து குடிக்கவும்.
இனி நம் செய்முறைகள் தொடரலாம்! :)
பின் குறிப்பு
பழங்கால அளவுகள் - நவீன மாற்றங்கள்
• 1
படி = சுமார் 1.2 முதல் 1.5 கிலோ (அரிசி) / 1.5 லிட்டர் (திரவம்)
• 1
பலம் = சுமார் 35 கிராம்
• 1
ரூபாயெடை = சுமார் 11.6 கிராம் (அந்தக்கால வெள்ளி ரூபாயின் எடை)
• 1 நாழிகை = 24 நிமிடங்கள்
1. "தாளித்த அன்னம்" (பழங்கால தம் புலவு) - 4 முதல் 6 பேருக்கான எளிய செய்முறை
மூல நூலில் 5 படி அரிசிக்குச் சொல்லப்பட்டதை, 4-6 பேர் சாப்பிடும் வகையில் 500 கிராம் (2 கப்) அரிசிக்கு ஏற்ப குறைத்துத் தரப்பட்டுள்ளது.
சீரகச் சம்பா அல்லது பாஸ்மதி அரிசி: 500 கிராம் (சுமார் 2 கப்)
• நெய்: 125 மிலி (1/2 கப்)
• வெங்காயம்: 2 (மெலிதாக நறுக்கியது)
• கிராம்பு: 3-4
• ஏலக்காய்: 3-4
• கறுவாப்பட்டை: 2 சிறிய துண்டு (பட்டாணி இல்லை)
• இலவங்கப்பத்திரி (பிரியாணி இலை): 2
• முந்திரிப்பருப்பு: 10-12
• திராட்சைப்பழம்: 10-12
• வாதுமைப்பருப்பு (பாதாம்): 10-12
• காய்ச்சின பால்: 100 மிலி (நூலில் கூறப்பட்டுள்ளபடி தம் போடுவதற்கு முன் ஊற்ற)
• சுத்தமான தண்ணீர்: 1 லிட்டர்
• உப்பு: தேவையான அளவு (மூல உரையில் 5 சிறுகைப்பிடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது)
செய்முறை:
அரிசி ஆயத்தம் செய்தல்:
அரிசியை கல், மணல் இல்லாமல் சுத்தம் செய்து, 3 முறை தண்ணீரில் நன்றாகக் கழுவி, 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்து வைக்கவும்.
தாளித்தல்:
ஒரு கனமான பாத்திரத்தை (தேக்சா/அடிகனமான பாத்திரம்) அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். நெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம், கிராம்பு, ஏலக்காய் மற்றும் கறுவாப்பட்டை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக சிவக்கும் வரை வதக்கவும்.
தண்ணீர் கொதிக்க வைத்தல்:
வெங்காயம் சிவந்ததும், அளந்து வைத்துள்ள 1 லிட்டர் தண்ணீரை மெதுவாக ஊற்றி, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி நன்றாகக் கொதிக்க விடவும்.
நட்ஸ் சேர்க்கை மற்றும் அரிசி போடுதல்:
தண்ணீர் ஆவி பறக்கக் கொதிக்கும் பக்குவத்தில், முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் இலவங்கப்பத்திரியைத் தூவவும். உடனே வடித்து வைத்துள்ள அரிசியைச் சேர்த்து கரண்டியின் காம்பால் மெதுவாகக் கிளறி மூடி வைக்கவும்.
வேகவைத்தல்:
அடுப்பை மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்களுக்கு ஒருமுறை அரிசி உடையாமல் மெதுவாகக் கிளறி விடவும். நீர் வற்றி, சாதம் முக்கால் பாகம் வெந்து அடியில் அமுங்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.
தம் போடுதல் (பழங்கால முறை):
சாதத்தின் மேல் காய்ச்சிய பாலைப் பரவலாக ஊற்றவும்.
நனைத்துப் பிழிந்த ஈர வெள்ளைத்துணியை பாத்திரத்தின் விளிம்புகளில் ஆவி வெளியேறாதவாறு சுற்றி அமுக்கி மூடவும்.
பாத்திரத்தின் மூடியை மூடி, அதன் மேல் சிறு தணல் (அல்லது தோசைக் கல்லை அடியில் வைத்து சிறு தீயில்) வைக்கவும்.
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே 'தம்'மில் விடவும்.
பரிமாறுதல்:
துணியின் ஓரங்களில் இருந்து நறுமணத்துடன் ஆவி புறப்படும்போது மூடியைத் திறந்து பார்க்கவும். சாதம் நன்றாக மலர்ந்து வெந்திருந்தால் இறக்கிவிடலாம்.
2. "புலவுச் சாதம்" (பொட்லி புலவு முறை) - 4 முதல் 6 பேருக்கான எளிய செய்முறை
தேவையான பொருட்கள்:
• பச்சரிசி / சீரகச்சம்பா அரிசி: 500 கிராம்
• பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு: 125 கிராம் (1/4 பகுதி)
• கரம் மசாலா பொருட்கள் (பட்டை, கிராம்பு, ஏலக்காய்): 20 கிராம்
• முந்திரிப்பருப்பு: 50 கிராம்
• வெங்காயம்: 1 (நறுக்கியது)
• பூண்டு: 10 பற்கள்
• மஞ்சள்தூள்: 1/2 தேக்கரண்டி
• நெய்: 100 கிராம்
• உப்பு: தேவையான அளவு
செய்முறை
1. மசாலா பொட்டலம் (Potli): ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளைத் துணியில் கரம் மசாலா பொருட்களை வைத்து முடிச்சாகக் கட்டிக் கொள்ளவும்.
2. மசாலா நீர் தயாரித்தல்: பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, இந்த மசாலா பொட்டலத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். சாறு நீரில் இறங்கியதும் பொட்டலத்தை வெளியே எடுத்துவிடவும்.
3. அரிசி, பருப்பு வேகவைத்தல்: கழுவிய அரிசி மற்றும் பருப்பை அந்த மசாலா நீரில் போட்டு அரை வேக்காடு (50%) வேகவைத்து வடிகட்டவும்.
4. தாளிப்பு: வேறொரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து அரை வேக்காடு பதத்திற்கு வதக்கவும்.
5. ஒன்றாகச் சேர்த்தல்: அரை வேக்காடு வெந்த சாதம்-பருப்புக் கலவையுடன், வதக்கிய வெங்காயம்-பூண்டு, முந்திரி மற்றும் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.
6. தம் வைத்தல்: தட்டு போட்டு மூடி, அதன் மேல் தணல் (அல்லது மிதமான தீயில் தோசைக்கல் மீது) வைத்து நீரெல்லாம் வற்றி சாதம் மலரும் வரை தம்மில் வைத்து இறக்கவும்.
===============================================================================================
குக்கர் காலத்தில் தம் போடுவது எல்லாம் இல்லாமல் குக்கரில் பிரியாணி புலவு ஆகியவற்றை செய்வார் மனைவி. தற்போது பிரியாணி செய்வதை நிறுத்தி விட்டு பிரைட் ரைஸ் பக்கம் தாவி விட்டார்.
பதிலளிநீக்குபடங்கள் AI ஆனாலும் அழகாக உள்ளன.
Jayakumar
வாங்க JKC ஸார்...
நீக்கு// படங்கள் AI ஆனாலும் அழகாக உள்ளன.//
கீதா ரெங்கனுக்கு நன்றி. இதைச் செய்து கொடுத்தவர் அவர்தான்!
So many thanks to G.R. _/\_
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅந்தக்காலத்திலேயே(1922) இந்த மாதிரியான சமையல் வகைகள் இருந்திருப்பது ஆச்சரியம். மேலும் இதன் பிரதிகள் 1880 போன்ற காலத்திலேயே பிரசித்தி என்பதை கூகுள் மூலமாக சென்று படித்து வந்தேன். ஒவ்வொன்றின் அளவுகள் பிரமிக்க வைக்கின்றன. சிறந்த பதிவு. இங்கு இதை, இந்த நூலை அறிமுகப்படுத்திய சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மிக்க நன்றி.
கவிஞர் வாலி.பற்றிய செய்தியும் படித்தறிந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
__/\__
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலம் வாழ்க..
பதிலளிநீக்குவாழ்க.. வாழ்க..
நீக்குஇன்றைய பதிவு சிறப்பு..
பதிலளிநீக்குஅந்தப் பெருமை இரண்டு கீதாக்களுக்கு சொந்தம்
நீக்குதம் போடுதல் பழங்கால முறை அல்ல ஆங்காங்கே நடைமுறையில் உள்ளது
பதிலளிநீக்குஓ.. அப்படியா?
நீக்குபடங்களில் குறை சொல்லாவிட்டால் நான் எப்படி jkc ஆவேன்.
பதிலளிநீக்குபுத்தகம் ஒரு படத்தில் ஓலைச்சுவடி, மற்ற இரண்டு படங்களில் வெவ்வேறு முகப்புகள்.
விறகு அடுப்பு நான்கு பக்கமும் அடைக்கப்பட்டிருக்கிறது. எப்படி விறகு வைப்பார்கள்.
முதல் படத்தில் நெய்க்கு பெயர் சீட்டு வைக்கவில்லை.
விளக்கு அவசியம் இல்லாமல் சமையல் பொருட்களை பாதுகாப்பது ஏன்
Jayakumar
இரண்டாவது படத்தில் அடுப்பின் வாய் நேராக இருக்கிரது. பாத்திர்த்தைப் பின்னால் உள்ள கொடி அடுப்பில் வைத்திருக்கிறார்கள். ஓலைச்சுவடியில் இருந்து புத்தகமக மாறி இருப்பதைச் சொல்லி இருப்பது ஒரு குறியீடு எனச் சொல்லலாம். ஆங்கிலத்தில் symbolic
நீக்குஇதற்கு பதில் சொல்லாவிட்டால் அப்புறம் நான் என்ன ஸ்ரீராம்!
நீக்குஹிஹிஹி..
நீங்கள் சொன்ன திருத்தங்களுடன் ஒரு படம் அனுப்புங்களேன் JKC ஸார்..
காஞ்சிபுரம் கோயில்கள் இன்று. பிரியாணிக்கு பிறகு வருகிறேன்
பதிலளிநீக்குயாராவது நல்ல வெஜ் பிரியாணி செய்து தந்தால் நல்லா இருக்கும்
கீதா ரங்கனை நம்பிப் போனால் மில்லெட்டில் செய்து பிரியாணி ஆசையைப் போக்கிவிடுவாரோன்னு அச்சம்
நல்ல வெஜ் பிரியாணி என்றால் என்ன?
நீக்குஎனக்குள்ள சந்தேகம் இப்படீல்லாம் கீதா சாம்பசிவம் மேடம் செய்திருக்கிறாரா இல்லை தியரெடிகல் முறைகளா?
பதிலளிநீக்குரொம்ப விளக்கமான செய்முறைகள் சூப்பர்
எல்லாம் தியரிட்டிகல்தான்.. !! அவரே சொல்லி இருக்கிறாரே....
நீக்குபிரியாணி "தம்" கட்டி நான் செய்ததில்லை எனினும் இம்மாதிரி மசாலாப் பொருட்கள் அரைத்துச் செய்வதை ந்ழுபதுகளின் ஆரம்பத்திலேயே ராஜஸ்தானில் ஒரு சிநேகிதி சொல்லிக் கொடுத்துச் செய்திருக்கேன். 74 ஆரம்ப நாட்களில் செய்தது. பெண்ணுக்கு ஒன்றரை வயது. பையர் பிறக்கவில்லை. ஆனால் பெண் விரும்பிச் சாப்பிடுவாள் என்பதால் அடிக்கடி பண்ணிக் கொடுப்பேன். பின்னால் இருவரும் விபரம் தெரிந்த பின்னர் தான் வீட்டிலும் (அப்போ கூட்டுக்குடும்பம் ஆரம்பம்) மாமனார் முதல் சாப்பிட ஆரம்பித்தனர். மாமியார் கிட்டேயே வர மாட்டார். யாருக்கானும் பரிமாறணும்னாக் கூட முகத்தைத் திருப்பிக் கொள்வார். மாமனாருக்கும்/மாமியாருக்கும் டிஷுண், டிஷுண் வரும். என்னமோ சாதம் என்பார் மாமியார். வீட்டில் ரகளையாக இருக்கும். அது ஒரு காலம். பின்னால் மாமியாரே வெங்காயம், பூண்டு இல்லாமல் இந்த வெஜிடபிள் சாதத்தைத் தனக்குனு பண்ணச் சொல்லுவார். அவரே பண்ணவும் ஆரம்பித்தார்.
பதிலளிநீக்குதம் கட்டி செய்யும் முறையில் செய்தால் ஒரு மாதிரி புகை வாசனை அடிக்காது?
நீக்குவந்தாலும், பிரியாணிக்கு செலவாக்கிய பொருட்களை எண்ணியபடி, நாமும் தம் பிடித்தபடி சாப்பிட வேண்டியதுதான்.:))))
நீக்கு"தம்" கட்டுவதில் ஒரு அகலமான பாத்திரத்தில் உணவு வேகும்போது அடியில் சிறு தீயும், மேலே அதை மூடினாற்போல் ஒரு தட்டில் எரியும் கரித்துண்டுகளையும் (தணல்) போட்டுப் பின்னர் அந்த மூடியையும், பாத்திரத்தையும் சேர்த்துக் கோதுமை மாவைப் பிசைந்து ஒட்டிவிட்டு அல்லது ஒரு வெள்ளைத் துணியால் சுற்றிலும் மூடிக் கட்டிவிட்டு வைப்பார்கள். இதில் புகை எல்லாம் வருவதற்கான வாய்ப்பே இல்லை.
நீக்குதி/கீதா தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள் அனைத்தும் அருமை. நானும் ஓலைச்சுவடியும், புத்தகங்களுமாகப் பார்த்தேன். முதலில் ஓலைச்சுவடியும் பின்னர் அட்டை இல்லாத புத்தகமும் பின்னர் அந்த காலிகோ பைன்டிங் புத்தகமுமாகக் கொடுத்திருந்தால் மெல்ல மெல்ல அச்சுத் துறையின் வளர்ச்சி புரியும்.
பதிலளிநீக்குகீதா நேற்று முழுவதும் ஜுரம். இன்று தேவலாம். உடல் களைப்பு மட்டும்.
நீக்குவணக்கம் கீதா ரெங்கன் சகோதரி
நீக்குஇப்போதுதான் இன்றைய பதிவில் மற்ற கருத்துக்கள் கண்டு தாங்கள் தேர்ந்தெடுத்த படங்கள் அருமையாக உள்ளதென பாராட்டுக்கள் சொல்ல வந்தேன். ஆனால், உங்களுக்கு உடல்நலமில்லை என சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் இக்கருத்தின் மூலம் அறிந்ததும் மிகவும் வருத்தமாக உள்ளது. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். உடல்நலம் முழுவதுமாக சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி. படங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தங்களது உழைப்பிற்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருமதி. கீதா ரங்கன் அவர்கள் விரைவில் நலமடைய வேண்டுகிறோம்.
நீக்குGet Well soon Thi/Geetha.
நீக்குஅந்தக்காலத்தில் இப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்பது ஆச்சரியமே. பகிர்வுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குசெய்முறை கள், படங்கள் நன்றாக உள்ளன.
தம் கட்டி பிரியாணி செய்வேன் . சிக்கன் பிரியாணியும்தான். பிள்ளைகள் பேரன் சாப்பிடுவார்கள்., நான் வெஜ் மட்டும் சாப்பிடுவேன்.
விவரமான பிரியாணி/புலாவ் விளக்கங்கள்..
பதிலளிநீக்குஒரு முறை நான் தஹி ஆலு செய்முறை பகிர்ந்திருந்த பொழுது கீதா அக்கா,"தஹி ஆலு முறையாக செய்வது எப்படி" என்று நேரம் இருந்தால் பகிர்கிறேன்" என்று எழுதியிருந்தார். இப்போது நேரம் இருக்கிறதா?
அப்படியா? நினைவில் இல்லை. உங்கள் தஹி ஆலு பதிவின் சுட்டியைக் கொடுங்கள். படிச்சுட்டு அதில் என்ன காரணத்தினால் நான் இப்படிச் சொல்லி இருந்தேன் என்பதைப் பார்க்கணும். ஆனாலும் தஹி ஆலு விரைவில் போடுகிறேன். பிரச்னை என்னன்னா ஸ்ரீராம் எல்லாத்துக்கும் படம் கேட்பார். மாமா இருந்தப்போ இதெல்லாம் நினைச்சால் பண்ணிடுவேன். இப்போ அப்படி எல்லாம் பண்ண முடியலை. அதோடு இப்போக் காலை சாப்பாடு, இரவு உணவு எல்லாமும் காடரர் கொடுப்பது தான். ஆகவே படத்துக்கு கூகிளாரைத் தான் கேட்கணும். :(
நீக்குவிடுங்க... படம் இல்லாட்டா பார்த்துக் கொள்ளலாம். அனுப்புங்க..
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநளவீமபாக சாஸ்திரம் புத்தகத்தில் உள்ள பிரியாணி செய்முறையும் படங்களும் அருமை. கீதா சாம்பசிவம்பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅனைத்து செய்முறைகளும் நன்றாக இருக்கிறது.
படம் பொருத்தமாக தயார் செய்து தந்த கீதா ரங்கனுக்கு பாராட்டுக்கள்.
கவிஞர் வாலி பகிர்வும் படித்தேன்.
பதிலளிநீக்குநல்ல நட்புகளை சொல்லி இருக்கிறார்.