நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 32
பிள்ளை உறங்காவல்லி தாசரைப் பற்றி வியாக்கியானங்களில் வேறு என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை அடுத்த வாரமும் தொடர்வோம் என்று சென்ற வாரம் முடித்திருந்தேன். குருபரம்பரையில் வரும் ஒருவரைப் பற்றி முழுமையான செய்திகளை அவ்வப்போதே பார்த்துவிட்டால்தான் நல்லது என்பது என் எண்ணம். இராமானுஜர் வரலாற்றில் பிற்பாடு பிள்ளை உறங்காவில்லி தாசர் வரப்போவதில்லை. அதனால் பிள்ளை உறங்காவில்லி தாசரைப் பற்றி வியாக்கியானங்களில் என்ன என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றித் தொடர்ந்து பார்க்கிறோம்.
நாச்சியார் திருமொழி (ஆண்டாள் இயற்றிய பிரபந்தப் பாடல்கள், திருப்பாவை தவிர மற்றவை-143 பாசுரங்கள், நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன) 3.9ல் (கோழி அழைப்பதன் முன்னம் என்று தொடங்கும் திருமொழி. அதில் ஒன்பதாவது பாசுரம்), வியாக்கியானத்தில் பிள்ளை உறங்காவில்லி தாசரைப் பற்றி வருகிறது. (திருப்பாவைக்கான விரிவுரையை ஏடுபடுத்தியது). முதலில் பாசுரம் என்ன என்பதைப் பார்த்துவிடுவோம்.
கஞ்சன் வலை வைத்த அன்று* காரிருள் எல்லில் பிழைத்து*
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்* நின்ற இக் கன்னியரோமை*
அஞ்ச உரப்பாள் அசோதை*ஆணாட விட்டிட்டு இருக்கும்*
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட* மகிமையிலீ! கூறை தாராய்*
இதில், ஆண்டாள், கோபிகைகளின் உடைகளைக் கவர்ந்து மரத்தின் மீது அமர்ந்துகொண்டு அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய கண்ணனை நோக்கி கோபிகைகள் சொல்வதுபோல எழுதியிருக்கிறார்.
பொருள்: உன்னை அழிக்க உன்னுடைய மாமனான கம்சன், பல சூழ்ச்சிகள் செய்து உனக்கு வலை விரித்தான். அன்று கம்சனின் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க கரிய இருள் சூழ்ந்த நள்ளிரவில் நீ தப்பித்தாய். தப்பிப் பிழைத்த நீ, ஆற்று நீரில் நீராட வந்த இந்தக் கன்னிப் பெண்களின் நெஞ்சில் வேதனை ஏற்படுத்தவா இங்கு வந்தாய்? ஆண் பிள்ளைதானே, என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று நினைத்து உன் தாய் யசோதை, நீ பயப்படும்படியாக உன்னைக் கண்டிப்பதில்லை. வஞ்சகப் பெண்ணான பூதனையின் பாலைக் குடித்து அவள் உயிரை மாய்த்த வெட்கமில்லாதவனே, எங்கள் உடைகளைத் தந்துவிடு.
விளக்கம்: கஞ்சன் – கம்சன், வலை விரித்த – கொல்லச் செய்த சூழ்ச்சிகள், காரிருள் எல்லில் – அடர்ந்த கரிய இருள் சூழ்ந்த நள்ளிரவில், அஞ்ச உரப்பாள் – பயப்படும்படியாக உரத்துச் சொல்வாள், மகிமையிலீ – லஜ்ஜை/நாணம் இல்லாதவன், பெண்ணான அரக்கியின் பாலைக் குடித்ததால், கூறை – புடவை, உடை
இதற்கு வியாக்கியானம் எழுதும்போது, எம்பெருமானுக்கு என்ன நேர்ந்துவிடுமோ என்று எப்போதும் அஞ்சும் மனப்பான்மை உடைய பிள்ளை உறங்காவில்லி தாசர், “கண்ணன் அப்போதுதான் பிறந்த குழந்தை. கம்சனால் அவனுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைப் போக்கிக்கொள்ளும் வயது இல்லை. அவனது பெற்றோர்களோ சிறையில் அகப்பட்டிருப்பதால் அவர்களாலும் அவனைக் காக்க இயலாது. அந்த நிலையில் கம்சனிடமிருந்து அவனைக் காத்தது அந்தக் காரிருளே. அதனால் நாம் அந்த இருளையே சரணாகப் புக வேண்டும்” என்பாராம். சிறையில் விலங்குகள் உடைபட, வசுதேவர், கண்ணனைத் தன் தலைமேல் தூக்கிக்கொண்டு யமுனை ஆற்றைக் கடந்து கோகுலத்திற்குச் சென்று நந்தகோபர், யசோதை இல்லத்தில் விட்டுவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பினார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆழ்வார்களின் பாசுர விளக்கங்களைச் சொல்லும்போது, பிள்ளை உறங்காவில்லி தாசரைப் பற்றிக் கூறவேண்டுமானால் (பல இடங்களில்) அவர் எத்தனை பெருமை பெற்றவராக இருந்திருக்க வேண்டும்? அவருடைய குலமோ அல்லது கல்வியறிவோ இல்லை வேறு எதுவோ அவரது பெருமையைக் கூறுவதற்குக் குறுக்கே வரவில்லை. இதுதான் அந்தக் காலத்தைய நடைமுறையாக இருந்தது (விதிவிலக்குகள் இருந்தபோதும். பெரிய நம்பியின், விளாஞ்சோலைப் பிள்ளையின், நம்பிள்ளையின் வாழ்க்கையில் இதனைக் காண்போம்.)
பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து, ஒன்பதாம் திருமொழியில் இரண்டாவது பாசுரத்திற்கான வியாக்கியானத்தில் உறங்காவில்லி தாசர் பற்றிக் குறிப்பு வருகிறது. 9ம் திருமொழி ‘வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை’ என்று ஆரம்பிக்கும். கண்ணன் வெண்ணெய் திருடுடல் போன்ற சிறுபிள்ளை விளையாட்டுகளைப் பற்றிச் சொல்லும் திருமொழி. முதலில் பாசுரத்தைப் பார்த்துவிடுவோம்.
வருக வருக வருக இங்கே* வாமனநம்பீ! வருக இங்கே*
கரியகுழல் செய்யவாய் முகத்துக்* காகுத்தநம்பீ! வருக இங்கே*
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்!* அஞ்சனவண்ணா! அசலகத்தார்*
பரிபவம்பேசத் தரிக்ககில்லேன்* பாவியேனுக்கு இங்கே போதராயே
பொருள்: இந்தச் சிறுவனை (கண்ணன்) என்னால் இன்று அடக்க முடியவில்லை.எனக்குக் கட்டுப்படாதவனாக இருக்கிறான். மை போன்ற கருமையான நிறத்தை உடையவனே, பக்கத்து வீட்டார்கள் இவன் செய்யும் குறும்புகளால் பழித்துப் பேசும் அவமானமான வார்த்தைகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. யசோதையே.. பாவியான எனக்கு உதவ, நீ உடனே இங்கு வந்து உன் மகனை அழைத்துச் செல்லவேண்டும்.
விளக்கம்: நங்காய்-அழகிய பெண், யசோதையைக் குறிப்பது. அசலகத்தார்-பக்கத்து வீட்டுக்காரர்கள். இந்தப் பாடலில் பெரியாழ்வார், கண்ணனின் திரு அவதாரங்களான வாமன அவதாரம், இராமாவதாரம் (காகுத்தன்) போன்றவற்றைக் குறிக்கிறார்.
இந்தப் பாடலுக்கான விளக்கவுரையைக் கேட்ட பிள்ளை உறங்காவில்லி தாசர், கண்ணபிரான் என்ன செய்துவிட்டான்? எதையேனும் உடைத்துவிட்டானா? மாணிக்கத்தைத் திருடிவிட்டானா? இப்படியெல்லாம் அவனைக் குறை சொல்லுகிறார்களே. அவனுக்கே தன்னுடைய வீட்டில் அதிகமாகவே பால், வெண்ணெய் போன்றவை இருக்கும்போது இன்னொரு வீட்டில் எதற்காக அவன் திருடினான் என்று கூசாமல் குறை கூறுகிறார்கள்? என்று சிறு பிள்ளையைப் போலப் புலம்புவாராம். இத்தகைய குறிப்புகள் அவருடைய பக்தியையும், இறைவனிடத்தில் ஒன்றிய மனத்தையும் பெற்றிருந்ததைக் குறிக்கின்றன.
ஒரு தடவை, இடையர் சிறுவன் ஒருவன், அரசருக்கு எடுத்துச் செல்லவேண்டிய பாலைக் களவாடியதற்காக, படைவீரர்கள், அச்சிறுவனை அடித்துக்கொண்டிருந்தார்கள். அதைக்கண்ட பிள்ளை உறங்காவில்லி தாசர், அந்தச் சிறுவனையே ஆயர்குல கிருஷ்ணனாகப் பாவித்து, அந்தப் படைவீரர்களிடம் சென்று, அவர்கள் கொடுக்கும் தண்டனையைத் தாமே ஏற்றுக்கொள்வதாகவும் அந்தச் சிறுவனை விட்டுவிடும்படியாகவும் சொன்னாராம். இந்தச் சம்பவத்தை பெரியவாச்சான் பிள்ளை, திருவிருத்தம் 95ம் பாசுரத்திற்கான வியாக்யானத்தில் குறிப்பிடுகிறார்.
பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் அந்திமக் காலத்தில், ஸ்ரீவைணவர்களை அழைத்து அவர்களுக்கு விருந்து அளித்தார் (இதனை ததீயாராதனம் என்பர். ததீயா என்றால் இறைவனிடம் தொடர்பு உள்ளவர், அவன்மீது உள்ளார்ந்த பக்தி செலுத்துபவர்கள் என்று அர்த்தம். அவர்களுக்கான ஆராதனம் என்பது அவர்களை உள்ளார்ந்த அன்போடு உபசரித்து அவர்களுக்கு உணவளிப்பது). அவர்களது கால்களை அலம்பி அந்த நீரைத் தன் தலையில் தெளித்துக்கொண்டார். தன்னுடைய மனைவியான பொன்னாச்சியாரிடம், தான் பரமபதிக்கப் போவதாகத் தெரிவித்துவிட்டு, தன் மனைவி தன் காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து வாழவேண்டும் என்று சொன்னார். இராமானுஜரின் பாதுகைகளைத் தன் தலைமேல் வைத்துக்கொண்டே உயிர் நீத்தார். திருவரங்கத்தில் ஸ்ரீவைணவர்கள்திருக்காவிரியிலிருந்து தீர்த்தம் கொணர்ந்து உடலைச் சுத்தப்படுத்தி, திருமண் காப்பு இட்டு அந்திமச் சடங்குகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். பொன்னாச்சியாரும், தன் திருமாளிகையை நன்றாக அலங்கரித்து, வந்திருந்தவர்களை உபசரித்து, தாஸரின் திருமேனி பல்லக்கில் தெரு முனையை அடைந்ததும், அவருடைய பிரிவைத் தாளாமல் உயிர் நீத்தார். அதைக்கண்டு திகைத்த ஸ்ரீவைணவர்கள்,பொன்னாச்சியாரின் சரம உடலையும் தாஸருடனே வைத்து அந்திமக் கிரியைகளைச் செய்து முடித்தனர்.
இதனைப் பற்றி எழுதும்போது கோவிட் சமயத்தில் என்னுடைய மாமனார் இறந்தது நினைவுக்கு வருகிறது. அதுவரை அவர் ஆஸ்பத்திரி பக்கமே தலைவைத்துப் படுத்ததில்லை. அவருக்கு கோவிட் ஆக இருக்குமோ என்று சந்தேகம் வந்து மருத்துவமனைக்கு செக்கப்புக்குச் சென்றபோது, அவர்கள் கோவிட் என்று உறுதி செய்து தனி வார்டில் வைத்துவிட்டார்கள் (பெரிய தனியார் மருத்துவமனை). ஏழு நாட்கள் கழித்து வீடியோ காலில் அவருடன் எல்லோரும் பேசினோம். அப்போது ஒரு பேப்பரில், தன்னுடைய காலம்முடிந்துவிட்டது, மனதில் நாராயணனே நிலைத்திருக்கிறான் என்று எழுதிக் காட்டினார். சில நாட்களில் அவர் மறைந்த பிறகு, அவரது உபயோகத்டிற்காக வைத்திருந்த வெள்ளி தம்ளர் மற்றும் பொருட்கள், அவர் எழுதிக்காட்டிய பேப்பர் என்று ஒன்றையும் அவர் மகன் எடுத்துவரவில்லை. பேப்பரை நான் விரும்பிக் கேட்டேன். கோவிட் மரணம் என்பதால், நாங்கள் எல்லோரும் சென்று பார்த்த பிறகு, நேரே மின் மயானத்திற்குச் சென்றுவிட்டது. அங்கு எங்களை அவருக்கான சடங்குகளைச் செய்ய அனுமதித்தார்கள். யாரையும் பக்கத்தில் அனுமதிக்கவில்லை. வாய்க்கரிசியை உயரத்திலிருந்து போட அனுமதித்தனர். அவருக்கு திருமண் காப்பு இட்டுவிடாமல் இருந்துவிட்டேனே என்று இன்றளவும் எனக்கு வருத்தம்தான். அந்த நடைமுறை எனக்குத் தெரியும். இயல்பாகவே எனக்கு இதிலெல்லாம் பயம் கிடையாது. (அசட்டுத் தைரியம்) ஆனாலும் அதனைச் செய்யாமல் விட்டுவிட்டேன். இந்த நடைமுறை இந்துக்களிடத்தில் உண்டு. வாலிக்கு நெற்றியில் திருமண் இட்டுவிட்டிருப்பார்கள், சமீபத்தில் பாரதிராஜாவுக்கும் திருநீறு பூசியிருப்பார்கள். இதன் காரணம் என்ன என்றால், இந்த சரீரம் இறைவன் அந்தராத்மாவாக வசித்தது. கோயிலுக்குச் சமமானது. அதனால் மறைவுக்குப் பிறகு அந்தச் சரீரத்தைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து, குல அடையாளம் இட்டு, புது உடையுடன் எரிப்பது அல்லது கடைசி காரியங்களைச் செய்வது என்பது சனாதன தர்மத்தின் நடைமுறை.
திருமூலர் அருளிய திருமந்திரத்தின் முதல் பாடல் நினைவுக்கு வருகிறதா? அது என்ன பாடல்?
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே
பொருள்: நம்முடைய உள்ளமே பெரிய கோயில். அதனைக் கட்டமைத்துள்ள இந்த மாமிச உடம்பே அந்தக் கோயிலின் வெளிப்புறக் கட்டி டம். உயிர்களுக்கு அருள் புரியும் அந்த இறைவனுக்கு நம்முடைய வாய்தான் கோபுரத்தின் வாசலாக அமைந்துள்ளது. இறைவனைப் பற்றிய ஞானத்தை அடைந்தவர்களுக்கு அந்த உடலின் உள்ளே இருக்கும் உயிரே சிவலிங்கமாகும். நம்மைத் தவறான வழியில் செல்லவைக்கும் ஐந்து புலன்களுமே அத்தகைய ஞானிகளுக்கு அறியாமை என்ற இருளைப் போக்கும் மணி விளக்குகளாக அமைகின்றன.
பாடலின் சுருக்கமான பொருள், இறைவன் வேறு எங்கும் இல்லை. தூய்மையான நம் உள்ளத்திலும் உடலிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே.
வைணவ ஆச்சார்யர்களின் ஒருவரான ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு உத்ஸவ காலங்களின் முடிவில் இயல் சாற்றுமுறை சேவிப்பார்கள். பல்வேறு ஆச்சார்யர்களின் பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டது அது. அதில் முதலில் இடம்பெற்றுள்ளது பிள்ளை உறங்காவில்லி தாசர் இயற்றிய பாசுரம்தான். அதுவே வைணவ சம்பிரதாயத்தின் சாரம்.
நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறை இல்லை ஓதினோம் - குன்றம்
எடுத்தான் அடிசேர் ராமானுசன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி
பொருள்: கோவர்தன மலையைத் தூக்கிப் பிடித்து ஆய்ப்பாடி மக்களைக் காத்த கண்ணனின் திருவடியைப் பற்றிய அடியவரான இராமானுஜரும், அவருக்கு அடியவர்களான ஸ்ரீவைணவர்களுக்கு அடியவர்களாக இருப்பதால் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. இந்த உலகில் மிகுந்த செல்வம் பெற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம். அதாவது, அடியார்க்கு அடியார்க்கு அடியாராக இருப்பதே பெரும் செல்வம் என்கிறார்.
இதன் மூலம் பிள்ளை உறங்காவில்லி தாசர் சொல்லுவதென்ன? ஸ்ரீவைணவர்களின் சிறந்த செல்வம் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே. அவர்கள் உலகியல் விவகாரங்களில் கருத்துச் செலுத்தக் கூடாது. ஆச்சார்ய பரம்பரையின் மூலமே ஸ்ரீவைணவர்கள் இறைவனை அடைகிறார்கள்.
இந்தப் பாசுரமே பிள்ளை உறங்காவில்லி தாசரின் மனநிலையையும் மேன்மையையும் குறிக்கப் போதுமானது. இன்றும் அவரது வம்சத்தார் திருவரங்கக் கோயிலில் சேவைகள் செய்துவருகிறார்கள். தற்போது உள்ள வம்சத்தாரின் படம் கீழே கொடுத்துள்ளேன்.
பிள்ளை உறங்காவில்லி தாசர் பரம்பரையைச் சேர்ந்தவர் இப்போதும் சிறு கத்தியுடன் பெருமாளுக்கு திருவரங்கத்தில் தொண்டு செய்கிறார்.
இன்றைய பகுதி நெடும் பகுதியாக அமைந்துவிட்டது. ஒரே அமர்வில் படிக்க முடியாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போது படித்துவிடுங்கள். இனி இராமானுஜர் வரலாற்றை அடுத்த வாரம் தொடர்வோம்.
===============================================================================
நான் படிச்ச கதை
தீர்ப்பு
கதையாசிரியர்: ஜே.எம்.சாலி
ஜே.எம்.சாலி (பிறப்பு:
ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த
இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த
தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி
ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள்,
தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின்
வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார்.
அவருடைய சுய அறிமுகம்.
தீர்ப்பு
(1983ல் வெளியான சிறுகதை)
ஆபத்துக்குப் பாவமில்லை!
காரணம் சொல்லி ஷகீலாவை அழைக்கிறார்கள். காலையில் இருந்து நாலைந்து
பேர் வந்து விட்டார்கள். “அல்லா மேலே பாரத்தைப் போட்டுட்டு வாம்மா…!”
கடைசியாக வந்து இப்பொழுது அழைப்பது ஹலீம் ஹாஜியாரின் மனைவி மீரா
உம்மாள். மிகவும் வேண்டிய மாது.
“போகலாமா? போக முடியுமா?”
“யோசனை பண்றதுக்கு இப்ப நேரமில்லே ஷகீலா. எந்த நேரத்திலேயும் உன்
வாப்பாவுக்கு எதுவும் ஆவலாம்… கடைசியா ஒரு தரம் பார்த்துக்க வேணாமா? நாளைக்கி நீ
அழுவப்புடாது, பாரு. ம்… பெறப்படும்மா!”
”கடைசியாகவா? அப்படியென்றால்…?”
“சக்கராத்து ஹால்லே இருக்காங்க உன் வாப்பா… இந்த நிமிசமோ அடுத்த
நிமிசமோன்னு இருக்கு!’
மரணப் போராட்டத்தில் இருக்கும் தகப்பனாரைப் பார்க்க, யார் யாரோ
வந்து ஷகீலாவை அழைக்கிறார்கள். சொந்த மகள் கல்லாக நிற்கிறாள்.
“இல்லை… கல்லாக இருக்கவில்லை. உடைந்த தக்காளிப் பழமாகியிருக்கிறது
உள்ளம். வெளிக்காட்டிக் கொள்ள முடியாதபடி வேதனை பிழிந்து எடுக்கிறது.
தோளிலும், மடியிலும் போட்டு, செல்வச் செழிப்பில் சீராட்டிப்
பாராட்டிய தந்தை முடிவை நோக்கிக் கொண்டிருக்கிறாராம்.
ஷகீலாவின் சகோதரிகள், குழந்தைகள், மச்சான்மார் களும் ஒருவர்
பாக்கியில்லாமல் வந்து விட்டார்கள். இவள் தான் பாக்கி என்று, மீரா உம்மாள்
சொல்கிறாள். “வீட்டுப் படியைத் தாண்டினால் நீ வேறு, நான் வேறு!” என்று கட் டின
புருஷன் சட்டம் போட்டிருக்கிறான், அதை மீறிச்செல்ல முடியுமா?
சிக்கந்தர் அந்த விஷயத்தில் நெருப்பாக இருக்கிறான் என்பது
ஷகீலாவுக்குத் தெரியாதது அல்ல.
பத்துநாட்களுக்கு முன்னால்- “வாப்பா ரொம்ப முடியாம
கெடக்குறாங்களாம்…”
ஷகீலா முணுமுணுத்தாள்.
“நீ அங்கே போகணும்கிறியா?’ என்றான் சிக்கந்தர்.
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பேசறாங்க அதுக்கு எடங் குடுக்காமெ
ஒரு தடவை மட்டும்…”
“முடியாது…….முடியாது!’
ஆவேசமான மறுப்பு. மனைவியின் மீது அன்பைப் பொழிகிறவன், மாமனார்
விஷயத்தில் மட்டும் அக்னிப் பிழம்பாகி விடுகிறான்.
”ஷகீலா…எனக்கு மானம் மரியாதை முக்கியம். அது மாதிரியே நீயும்
எனக்கு முக்கியம். நான் உனக்கு முக்கியம்னு நீ நெனச்சா, அங்கே போறதைப்பத்தி
நெனக்கக் கூடாது. தகப்பனார் தான் முக்கியம்னு நெனச்சா, நீ தாராளமா அங்கேயே
போயிடலாம், நெரந்தரமா…!”
வேறென்ன சொல்ல வேண்டும்? இதற்கு மேலேயும் சொன்னான்.
தன் பேச்சை மீறி, தகப்பனார், வீட்டுக்கு ஷகிலா போனால், அந்த
நிமிஷமே அவர்களிடையே “தலாக்” ஏற்பட்டு விட்டதாக ஆகிவிடும் என்றானே! ஆறு வருட மண
வாழ்க்கை ரத்தாகி விடும் என்பது சாதாரண எச்சரிக்கையா?
ஷகீலா பிறந்த வீட்டை மிதித்து, இரண்டு வருடம் ஆகப்போகிறது.
மாமனாரின் முகத்தில் விழிக்கப் போவதில்லை என்று பிரமாணம் எடுத்துக்
கொண்டவன் போல், விலகி நிற்கிறான் சிக்கந்தர். ஷகீலா அவன் நிழலாகவே இருக்கிறாள்.
“படிச்ச பையன்னு ஷகீலாவைக் கட்டிவச்சேன். பையன் தேறமாட்டான் போல
இருக்கு, மத்த மருமகப் பிள்ளைங்க மாதிரி முன்னுக்கு வரமாட்டான் போல இருக்கு!”
சிக்கந்தர் காதில் விழுகிற மாதிரி, பலமுறை மாமனார் பேசியிருக்கிறார்.
“மத்த பொண்ணுங்க கண்ணுக்கு அழகா சீர் சிறப்பா குடும்பம் நடத்திக்
கிட்டிருக்காங்க. ஷகீலாவை இந்தப் பையனுக்குப்போய் கட்டி வச்சேனே…!” என்று அவர்
முணு முணுக்கவில்லையா?
சிக்கந்தர் பட்டதாரி. சுமாரான வசதியுள்ள குடும்பம் தான். கொஞ்சம்
நிலபுலன்கள் இருந்தன. பொருத்தமான வேலையை எதிர்பார்த்திருந்த போது தான் ஷகீலாவை
அவனுக்குக் கட்டி வைத்தார் காதிர் முகியிதீன்.
அவருடைய
மற்ற மாப்பிள்ளைகளைப்போல் சிக்கந்தர் பகட்டாகவும் பசையாகவும் இல்லை என்ற குறை
அவருக்கு.
மாமனாரின்
மனக்குறை பலமுனைகளில் சிக்கந்தரை தாக்கிக் கொண்டிருந்தது. ஷகீலாவை ஒரு நாள்
நிமிர்ந்து பார்த்து விட்டு வியந்து நின்றான் சிக்கந்தர். “என்ன ஷகீலா இது? நகை
நட்டெல்லாம் என்ன ஆச்சு?”
பதில்
சொல்லமுடியாமல் மிடறு விழுங்கினாள்.
”ஓ! நான்
நெனைக்கிற மாதிரிதான் நடந்திருக்கணும்!”
“என்ன
சொல்றீங்க?”-ஷகீலா தழுதழுத்தாள்.
“உன்னோட
நகைகளை ஒவ்வொண்ணா வித்து சாப்புட்டுடு வேன்னு நெனைச்சி பத்திரமா கழட்டி
வச்சிக்கிட்டார் உன் வாப்பா இல்லையா?”
ஷகீலாவின்
முகம் விழுந்து விட்டது.
“பொட்டில்
அடித்த மாதிரி இத்தனை கச்சிதமாக நடந்ததை உடைத்துச் சொல்லி விட்டானே! எப்படி
முடிந்தது இவனால்?”
கண்ணை
கசக்கிக் கொண்டாள்.
‘’பரவாயில்லை
ஷகீலா! இது நான் எதிர்பார்த்ததுதான். அதனாலேதான் சொல்ல முடிஞ்சது நடந்ததை.”
ஷகீலா
சங்கடப்பட்டாள். “இவ்வளவு நடந்தப்புறம் மாமனார், மருமகன்கிற பந்தத்துக்கு இடம்
இல்லை. அதனாலே புருஷனா, தகப்பனாங்கிறது இப்ப உனக்குப் பிரச்னை. எங்கே இருக்கிறது
பாதுகாப்புன்னு நீ நெனைக்கறியோ, அங்கே நீ இருக்கலாம், ஷகீலா. நான் சுயநலக்காரன்
இல்லே…ஆனா சுயமரியாதை உள்ளவன். உன்னுடைய சுகத்தையும் திருப்தியையும்தான் நான்
பெரிசா நெனைக்கிறேன்!” விவாதங்களுக்கு அவன் இடம் வைக்கவில்லை.
அவள்
தாண்ட முடியாதபடி ஒரு கோட்டைக் கிழித்து விட்டான்.
சிக்கந்தர்
ஊரிலில்லாத நேரத்தில் சோதனை ஏற்பட்டிருக்கிறது. அவன் வெளியூருக்குப் புறப்பட்டுப்
போய் நான்கு நாட்கள் ஆகிவிட்டன.
வெளிநாட்டுக்குப் போக வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஷகீலா அதை விரும்பவில்லை.
”ஷகீலா!
என் பேரிலே எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்வாப்பாகிட்டே நான் பணம் காசை
எதிர்பார்க்கலே. உன் நகைகளை கழட்டி வாங்கிக்கிட்டாரே அவர், அதைவிட ஒரு பெரிய
அவமதிப்பு எனக்கு இருக்க முடியாது… அந்த அளவுக்கு உனக்கு நகை பண்ணிப் போடற
வரைக்கும் எனக்கு நிம்மதி கெடையாது…” என்றான்.
அழுதாள்.
ஆதரவோடு கண்ணீரை
துடைத்துவிடப் போனான். கண்ணீரை இப்பொழுது கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரே யொரு
முறை, கடைசியாக, தந்தையைப் பார்த்து விட்டு கண்ணீரைக் கொட்டிவிட்டு வரவேண்டும்
என்று துடிக்கிறாள்.
முடிகிற
காரியமா?
“ஷகீலா !
யோசனை பண்ணிக்கிட்டிருக்கப் புடாது. இந்நேரம் அங்கே உன் வாப்பாவுக்கு என்ன ஆச்சோ
தெரியலே, இப்ப சிக்கந்தர் வீட்லே இருந்தா, ஆபத்துக்குப் பாவம் இல்லேன்னு உன்னை
அழைச்சிக்கிட்டுப் போயிருக்கும். நீ கெளம்பும்மா…”
மீரா
அம்மாள் தூண்டுகிறாள். தோளைப்பற்றி இழுக்கிறாள். எப்படியோ துணிவு வந்து விட்டது.
ஷகீலா
கிளம்பிவிட்டாள். வீட்டில் மற்றவர்களுக்கு இழப்புதான், ஆமாம், காதிர் முகியிதீன்
போய் விட்டார் என்ற துயரம்.
ஷகீலாவுக்கு
இரட்டை இழப்பு துயரத்திற்கு எல்லை இருக்கவில்லை.
தகப்பனாரை
அள்ளிக் கொடுத்தாகி விட்டது.
கணவனின்
ஆதரவும் அல்லவா போய்விட்டது!
செய்தி
ஊர் முழுவதும் பரவி விட்டது.
சிக்கந்தரின்
வார்த்தையை மீறி வாப்பாவைப் பார்க்க வந்ததால் அவனுடைய “தலாக்” எச்சரிக்கை ஷகீலா
விஷயத்தில் ஊர்ஜிதமாகி விட்டது என்று மூலைக்கு மூலை பேச்சு!
வீடு
விடியவில்லை. ஒரு துன்பம் போதாது என்று இன் னொரு துயரம், ஷகீலா கேள்விக் குறியாக
இருந்தாள். அவள் நிலைமை என்ன? அனாதையா? வாழா வெட்டியா?
கணவனிடம் திரும்பிச்செல்ல மார்க்கம் இல்லை என்கிறார்கள். ஏதோ ஒரு வேகத்தில் சிக்கந்தர் விவாகரத்து எச்சரிக்கை கொடுத்திருந்தாலும் அது செல்லுபடியாகும் என்று பெரியவர்கள் கூறுவதாகப் பேசிக் கொள்கிறார்கள். அத்தனை சுலபத்தில் அறுத்து எறியக்கூடிய உறவா அது?
ஷகீலா துவண்டு விழுந்திருக்கிறாள். சோறு தண்ணீர் கிடையாது. தூக்கம்
இல்லை. ஓயாத கண்ணீர்.
என்ன நடந்திருக்கிறது. சிக்கந்தருக்கு கண்ணைக் கட்டி விட்ட மாதிரி
இருந்தது.
ஷகீலா இல்லாத வீடு வீடாகத் தெரியவில்லை அவனுக்கு. வேலைகளை
முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பியவன் அப்படி ஓர் அதிர்ச்சியை
எதிர்ப்பார்க்கவில்லை. மாமனார் மண்ணறைக்குப் போய்விட்டார் என்ற தகவல் பஸ்ஸை விட்டு
இறங்கியதுமே அவனுக்கு எட்டி விட்டது.
ஷகீலா தாய் வீட்டுக்குப் போய் வாப்பாவின் கடைசி நேரத்தில்,
பக்கத்திலேயே இருந்தாள் என்பதும் செவியில் விழுந்தது.
அவள் தந்தையை இழக்கப் போய், அவளைச் சிக்கந்தர் இழந்து விட்டானா?
மனம் தறிகெட்டு அலைந்தது வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
அறை, கட்டில், பெட்டிகள், பீரோ, கொடியில் ஷகீலா வின் புடவைத்
துணிமணிகள் எல்லாம் அப்படியப்படியே இருக்கின்றன.
இனி இவற்றின் கதி என்ன? திருப்பியனுப்பி விட வேண் டுமா? ஷகீலாவின்
நிழல் கூட இனி இந்த வீட்டில் படமுடியாதா?
ஆதரவாக யாராவது தன்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்ல
வேண்டும் போல் தவிப்பு, அவனுக்கு.
ஷகீலாவே போய்விட்ட பிறகு யார் வரப்போகிறார்கள்?
”சிக்கந்தர்!” வாசலில் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.
ஹலீம் ஹாஜியார்! மீராஉம்மாளின் கணவர். அவனுடைய மாமனாரின் நண்பர்.
வந்தவரை உட்காரச் சொன்னான்.
“நீ வந்தது கேள்விப்பட்டதும் கெளம்பி வர்றேன்..!'” நிரம்பப்
பேசுவார் போல் தெரிந்தது.
“அல்லா நாடினது நடக்கும் காதிர் முகியிதீன் போய்ச் சேர்ந்திட்டார்.
கடைசி வரைக்கும் அவருக்கு ஒரே கவலைதான்…!”
“என்ன பெரிய கவலை வேண்டியிருக்கிறது, அந்தக் கல் நெஞ்சக்
காரருக்கு!” அவனுக்கு குமுறலாகவே இருந்தது.
”’சிக்கந்தர்! காதிர் முகியிதீன் உனக்கு மாமனாக இருக்கலாம். எனக்கு
பால்யத்திலேருந்தே சிநேகிதர். என் யோசனை இல்லாமெ அவர் எதுவும் செய்ததில்லே!”
நிமிர்ந்து பார்த்தான்.
“மாப்பிள்ளையை பார்க்கணும் அழைச்சிகிட்டு வாங்கன்னு
புலம்பிக்கிட்டேயிருந்தார். வந்து பாத்தப்ப நீ ஊர்ல இல்லேன்னு ஷகீலா சொல்லிச்சு.
ஷகீலாவை அழைச்சிட்டுப் போக நெனைச்சி கூப்புட்டேன். வரமாட்டேன்னு சொல்லிட் டது.
அப்புறம் கடைசிநேரத்திலே என் வீட்டுக்காரங்களை அனுப்பி அழைச்சிட்டு வரச் சொன்னேன்.
மீரா உம்மாதான் பொறுப்பா பேசி கூட்டியாந்தது. இப்பவும் அது பக்கத்திலே அவங்கதான்
இருந்து கவனிச்சுக்கிறாங்க!” சிக்கந்தர் மனமுடைந்தான் தான்.
“எவ்வளவோ சொல்லனும் போல இருக்கு. ஆனா எப்படிச் சொல்றதுன்னு எனக்கே
சங்கடமா இருக்கு”
”சிக்கந்தர்! முதல்லே ஒரு உண்மையை நீ புரிஞ்சுக் கணும். நீ
நெனைச்சிருக்கிற மாதிரி உன் மாமனார் திமிர் பிடிச்சவரோ, உன் மேலே பிரியம்
இல்லாதவரோ இல்லே. மத்த மருமகப் பிள்ளைகளைப் பத்தி அவர் கவலைப்பட்டதே இல்லை.அவங்க
உன்னை இளப்பமா பார்க்கிறதாலே, உன்னை அவங்க அளவுக்கு உயர்த்தி வைக்கணும்னு
நெனைச்சிதான் ஒரு உபாயத்தைச் செய்து பார்த்தார்…”
சிக்கந்தர் நம்பத் தயாராக இல்லை.
“நான் இப்படி சொன்னா ஷகீலா கூட நம்பாது. ஆனா நடப்பு அதுதான்.
அப்பப்ப உனக்கு ஆத்திரம் வர்றமாதிரி அவர் பேசினது, நடந்துக் கிட்டதெல்லாம், உனக்கு
ஒரு வேகத்தை உண்டாக்கி விடுறதுக்காகத்தான்; அந்த வேகத் தில் மத்த மாப்பிள்ளைகளை
விட நீ மேலே வருவேன்னு நம்பினார்…!
”சே, இது உபாயமா? உத்தியா?” எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.
”பத்து நாள் முன்னாடி என்னைக் கூப்பிட்டனுப்பினார். உடல் நிலையைப்
பாத்தா சீக்கிரமே “மவ்த்து” வந்திடும் போல இருக்குன்னு சொன்னார். நான் சமாதானம்
சொன்னேன். ‘கண்ணை மூடுறதுக்கு முன்னாலே, ஒரு ஏற்பாட்டைச் செய்துடணும்னு சொல்லி,
அதன்படியே செய்து முடிச் சிட்டார். ஆமா ; அவருடைய வீடு, தோட்டம் நிலபுலன்லே பெரும்
பகுதி எல்லாத்தையும், ஷகீலா பேர்ல எழுதி வச்சிட்டார். ரொம்ப ரகசியமா…”
சிக்கந்தர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான்.
“அதிலேருந்து சதா, உன்னைப் பத்தி தான் பேசிக்கிட்டிருந்தார்.
மாப்பிள்ளை மனசைப் புண்படுத்தியிருக்கேன்னு பல முறை புலம்பினார். ஷகீலாவையும்,
உன்னையும் இங்கே ஒரு வேளை கை நனைக்கணும்னு நெனைச்சிருந்தார். எல்லாம் தலை கீழாப்
போச்சு, சிக்கந்தர்!”
ஹலீம் ஹாஜியார் கண்கலங்கிப் போனார்.
“இப்ப ஊர்க்காரங்க உங்க விவகாரத்தைப் பத்தித்தான்
பேசிக்கிட்டிருக்காங்க… “தலாக் தலாக்”னு அவங்க பேசறது, என்னைச் சம்மட்டியாலே
அடிக்கிற மாதிரி இருக்கு…” என்றார். அந்த அடி, தன் மீது அல்லவா விழுகிறது என்று
ஓலமிடுகிறது, சிக்கந்தரின் உள்ளம். ‘உடைந்து வழிகிறது கண்ணீர். அநியாயமாக ஷகீலாவை
இழந்து விட்டேனே!” என்று அடித்துக் கொள்கிறது மனம்.
“சிக்கந்தர்,இப்ப நீ கண்ணீர் வடிக்கிற மாதிரிதான், நானும் மீரா
உம்மாவும் அழுதோம். நீ விதிச்சிருந்த நிபந்தனை, இவ்வளவு பெரிய சோதனையா முடியும்னு
நாங்க எதிர்பாக்கலே, உள்ளூர் ஆலிம்கள் கிட்டே யோசனை கேட்டப்ப, இந்த தலாக்
செல்லுபடியாகும்னு சொல்லிட்டாங்க. சேதி ஊர்பூரா பரவி விட்டது…”
சிக்கந்தர் நிலை குலைந்திருந்தான்.
“எனக்கும் மீரா உம்மாவுக்கும் நிம்மதி இல்லே.நித்திரை இல்லை. ஒரு
விதத்திலே இந்த நெலைமை ஏற்படுறதுக்கு நாங்க தான் காரணம் இல்லையா? மீரா உம்மா
ஷகீலாவைக் கூட்டிட்டு வந்ததினாலே தான் இவ்வளவும்! ரெண்டு பேரும் யோசனை பண்ணினோம்..
யார் கிட்டேயும் சொல்லிக்காம வெளியூர் மதராசுவுக்குப் போய், சரியான தீர்ப்பு
வாங்கிட்டு வரணும்னு முடிவு செஞ்சேன்… போன இடத்திலே…”
”ஏன் நிறுத்திட்டீங்க? சொல்லுங்க…”
“இதோ இருக்கு அவங்க குடுத்த பத்வா! நீயே படிச்சிப்பார் அந்தத்
தீர்ப்பை!”
காகிதத்தை வாங்கிக் கொண்டான், நடுங்கும் கரத்தில் பிரித்தான், ஊர்
ஜமாஅத்துக்கு எழுதப்பட்டிருந்த கடிதம் அது.
“பிரஸ்தாப தலாக் விவகாரத்தைப் பரிசீலித்தோம். இந்தத் தலாக் –
விவாகரத்து – செல்லுபடியாகும் என்று சிலர் சொன்னதாகத் தெரிய வந்தது. இது சிக்கலான
விஷயமாகப் பட்டாலும், தெளிவான ஒரு முடிவுக்கு வர இடம் இருக்கிறது. ஒரு பெண்ணின்
தந்தை இறந்து விட்டபிறகு, அந்த வீடு அவருடைய வீடல்ல. அது மட்டுமல்ல, ஷகீலாவுக்கு,
தான் இருந்த வீட்டையும் அவள் தகப்பனார் எழுதி வைத்து இருக்கிறார். எனவே அந்த வீடு
பெண்ணுக்குரிய வீடாகி விடுகிறது. ஆகவே, பிரஸ்தாப பெண் தன் வீட்டுக்குத்தான் சென்றிருக்கிறாளே
தவிர, தகப்பனாரின் வீட்டுக்கு அல்ல. ஆகவே, இந்த தலாக் செல்லாது தலாக் நிகழ்ந்து
விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் கணவன் மனைவியாக வாழலாம்!”
நெகிழ்ந்து போய் ஒரு குழந்தையைப்போல், தேம்பித் தேம்பி அழுதான்.
ஆதரவோடு அணைத்துக் கொண்ட ஹலீம் ஹாஜியாரைப் பின் தொடர்ந்து மனைவியை பார்க்கப்
புறப்பட்டான் சிக்கந்தர்.
ஒன்று– தினமலர்-வாரமலர்
ஒன்று– சாயல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1983, தமிழ் மன்றம். கல்ஹின்னை, கண்டி.
பின்னுரை
கருத்துக்கள் பல இருந்தாலும், அவை கடுமையான விவாதங்களை தோற்றுவிக்கும் என்று அச்சம்
எழுவதாலும் என்னுரையாக எதுவும் எழுதவில்லை. இருந்தாலும் ஒன்றே ஒன்று. .
அவரவருடைய மதத்தையே சீர்படுத்த முடியாமல் இருப்பவர்கள்/முடியாதவர்கள்/சீர்திருத்த விரும்பாதவர்கள் மற்ற மதங்களை விமரிசிப்பது முறையில்லை என்பது என் கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!