நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 37
சென்ற வாரம், ஐந்தாம் பிராகாரத்தில் பெரியவாச்சான் பிள்ளை சன்னிதி வரை பார்த்திருந்தோம். பெரியவாச்சான் பிள்ளை சன்னிதியிலிருந்து சிறிது கிழக்கு நோக்கிச் சென்று பிறகு தெற்கு நோக்கி நடந்தால் பிள்ளைலோகாச்சார்யார் சன்னிதி வரும். ஆச்சார்யார்கள் வரலாறு வரும்போது இவரைப் பற்றி விவரமாக எழுதுவேன். இவர் எழுதிய ஸ்ரீவசன பூஷணம் என்பது ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவர்களும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைப் பற்றியது. மிக மிக அருமையான கிரந்தம்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்முடைய உபதேச ரத்தினமாலை என்ற நூலில், ஸ்ரீவசன பூஷணத்தின் ஆழ்ந்த பொருள் எல்லோருக்கும் தெரியாது, அப்படியே தெரிந்தவர்களாலும் அதனைக் கடைபிடிப்பது மிக மிகக் கடினம். உலகத்தில் அப்படி ஓரிருவர் இருந்தால் அதுவே பெரிய விஷயம் என்கிறார். ஆச்சார்யர்களுள் பிள்ளை லோகாச்சார்யார் மிக மிக முக்கியமான ஒருவர். இவரது காலம் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியும், 14ம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும். மாலிக்காபூர் திருவரங்கம் நோக்கி 1311ல் படையெடுத்து வந்தபோது, நம்பெருமாள் விக்கிரகத்தையும் ஆடை ஆபரணங்களையும் சிறிய பல்லக்கில் வைத்து காட்டு வழியாக மதுரை நோக்கிப் பயணம் மேற்கொண்டார் பிள்ளை லோகாச்சார்யார். வயது முதிர்வின் காரணமாக ஜோதிஷ்குடி என்று அழைக்கப்படும் கொடிக்குளம் பகுதியில் மறைந்தார்.
இவரது சன்னிதிக்கு அடுத்து, கோதண்டராமர் சன்னிதி உள்ளது. (நாம் ஐந்தாம் பிராகாரத்தை பிரதட்சணமாக வலம் வந்துகொண்டிருக்கிறோம். ஆனால் கோதண்டராமர் சன்னிதி சேஷராயர் மண்டபப் பகுதியில் உள்ளது). இந்தச் சன்னிதியில் இராமர், லக்ஷ்மணர், சீதை, அனுமான் ஆகியோரின் மூலவர் திருவுருவம் அமைந்திருக்கிறது.
பிள்ளை லோகாச்சார்யார் சன்னிதிக்கு தெற்கில், பார்த்தசாரதி கோயில் அமைந்துள்ளது. தேரில் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம் செய்யும் முறையில் இந்தத் திருவுருவம் அமைந்துள்ளது.
இந்தச் சன்னிதிக்கு அடுத்து இராமானுஜர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய வரதராஜரும், ஆதிசேஷனுடன் கூடிய நர்தன கிருஷ்ணரும், ஒரே சாளக்கிராமத்தினாலான ஐந்து தலை நாகப் பாம்புடன் கூடிய யோக நரசிம்மர் திருவுருவங்களும் உள்ளன. இராமானுஜர் காஷ்மீர் சென்றிருந்தபோது சரஸ்வதியே அவரிடம் கொடுத்த ஹயக்ரீவர் திருவுருவமும் இங்கு உள்ளது.
இந்தக் கோயில், இராமானுஜர் காலத்தில் வசந்த மண்டபமாக இருந்தது. இராமானுஜர் மறைந்தபோது, அரங்கனின் கட்டளை காரணமாக, அவரது சரம உடலை இங்கு பள்ளிப்படுத்தி அதன் மீது இராமானுஜர் சுதைச் சிற்பம் வைத்துள்ளனர். இராமானுஜர் சுதைச் சிற்பத்தையே, இராமானுஜரின் பூத உடல் என்று நம்புகின்றனர். இதனைத் தானான திருமேனி என்பர். திருமேனியில் தலைமுடி, விரல், நகம் போன்றவை இயற்கையில் மனித உடலில் இருப்பது போலவே இருக்கிறது என்கின்றனர். குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை அரைத்து, மூலவர் திருமேனியில் ஆண்டுதோறும் சாத்துகின்றனர். (அந்தச் சமயத்தில் சன்னிதியே மிகுந்த வாசனையுடன் இருக்கும்)
உடையவரின் தானான திருமேனி
நான்காம் பிரகார வாயில். இதன் வெளியில்தான் நாம் கோபுரத்தைப் பார்த்து நின்றால், நமக்கு வலதுபுறம் கடைசியில் இராமானுஜர் சன்னிதியும், இடதுபுறம் கடைசியில் சக்கரத்தாழ்வார் சன்னிதியும் இருக்கும்.
நான்காம் பிராகாரத்தில் நுழைந்தால், கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது. இது பெருமாளைப் பார்த்த நிலையில் இருக்கிறது. இங்கு கருடர் 2 மீட்டர் உயரமுள்ள மேடையில் 4 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறார். கருடாழ்வாருக்கான உற்சவர் நின்ற நிலையில் உள்ளது. அதற்கு தினமும் திருமஞ்சனம் உண்டு.
பெரிய கருடாழ்வார் (இணையத்திலிருந்து)
கருடாழ்வார் சன்னிதியை நாம் பார்த்துக்கொண்டிருந்தால் இடது புறம் தற்போது பிரசாத ஸ்டால் உள்ளது. கோவில் மடப்பள்ளியிலேயே தயார் செய்வது என்று சொல்கிறார்கள். முன்பு வைகுண்ட ஏகாதசி சமயத்தில் நான் மூன்றாம் திருச்சுற்றின் பின்புறம் (வடக்கு திசை- நாம் மூலவரைச் சேவித்துவிட்டு பிறகு பின்புறம் வழியாக வெளியேறுவோம். அந்தப் பாதை முடியும் இடம்) பெட்டி பெட்டியாக லட்டு பிரசாதம் இறங்கிக்கொண்டிருந்தது. அதே லட்டுவை நான் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலிலும் பார்த்தேன். இந்தத் தடவை பல பிரசாதங்கள் – பிரசாத ஸ்டாலில் இருப்பவை, பிள்ளைலோகாச்சார்யார் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் உள்ள பெரிய இடத்தில் தயார் செய்கிறார்கள் என்று அறிந்துகோண்டேன். இது பற்றி எழுதுகிறேன். காரணம், இந்தத் தடவை, பெருமாளுக்கு கண்டருளப்பட்ட பிரசாதங்கள் எங்களுக்குக் கிடைத்தன (தோசை, நெய் ரொட்டி, அதிரசம் தன்வந்திரி சன்னிதி சுக்கு வெல்லம் மருந்து)
நமக்கு வலதுபுற மூலையில் நம்மாழ்வார் சன்னிதி இருக்கிறது (நினைவில் கொண்டுவர இயலவில்லை). அங்கு நம்மாழ்வார் மூலவர் திருவுருவமும், அவர் காலடியில் இராமானுஜர் மூலவர் திருவுருவமும் இருக்கிறது. இவை தவிர, திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார் திருவுருவங்களும் இருக்கின்றன. கருவறையின் இடது புறத்தில் ஆதிநாதப் பெருமாள் மூலவரும் (ஆழ்வார் திருநகரியில் உள்ளது போல), நம்மாழ்வார் உற்சவ விக்கிரகமும் இருக்கின்றன.
நான்காம் பிராகாரத்தின் வட மேற்கில் (கோயிலை நாம் பார்த்தால், நமக்கு இடப்புறம்), மேலப்பட்டாபிராமர் கோயில், தீர்த்தக்கரை வாசுதேவர் கோயில் மற்றும் முதலாழ்வார்கள் கோயில் (சன்னிதி) உள்ளன. இவை மூன்றுமே நூற்றுக்கால் மண்டபத்திலிருந்து பிரித்த சன்னிதிகளாகும்.
மேலப்பட்டாபிராமர் கோயிலில் இலக்குமணர், சீதை, சத்ருக்னன் ஆகியோரோடு பட்டாபிஷேகக் கோலத்தில் இராமர் காட்சி தருகிறார். அவர்களின் உற்சவ விக்கிரகங்களும் இங்கு உள்ளன. மேலப்பட்டாபிராமர் கோயில் அருகில் நந்தவனமும் நல்ல கிணறும் உள்ளன.
மேலப்பட்டபிராமர் கோயிலுக்கு வட கிழக்கில், முதலாழ்வார்களுக்கான கோயில் உள்ளது. இங்கு ஆதிநாராயணப் பெருமாள் திருவுருவம் ஒரு புறத்திலும், அதன் எதிர்புறத்தில் முதலாழ்வார்கள் மூவரின் உற்சவ விக்கிரகங்களும் ஒரே வரிசையில் உள்ளன (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)
முதலாழ்வார் கோயிலுக்கு வடகிழக்கில் தீர்த்தக்கரை வாசுதேவர் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி சந்திரபுஷ்கரணிக்கு எதிரில் (அருகில்) இருப்பதால் தீர்த்தக்கரை வாசுதேவர் சன்னிதி என்று சொல்லப்படுகிறது. ருக்மணி சத்யபாமா சமேதராக வாசுதேவப் பெருமாள் திருவுருவம் உள்ளது (வசுதேவரின் புதல்வர் என்பதால் வாசுதேவர் என்ற திருநாமம்)
தீர்த்தக்கரை வாசுதேவர் சன்னிதிக்கு வடகிழக்கில் தன்வந்திரி சன்னிதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு படியேறிச் செல்லவேண்டும். தன்வந்திரி பகவான் கைகளில் சங்கு சக்கரம் அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சி உள்ளது. முன்காலத்தில் இங்கு வைத்தியசாலை செயல்பட்டு வந்தது (என்று நம்புகிறார்கள்). காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கோயிலுக்குள் தண்ணீர் வந்துவிடும் என்பதால் இதனை உயர்த்திக் கட்டியிருக்கிறார்கள் (மருத்துவமனை. தற்போது தன்வந்திரி சன்னிதி). அட்டைப் பூச்சியை நோயாளிகளின் மேலே விட்டு, கெட்ட இரத்தத்தை உறிஞ்சும் முறை ஆயுர்வேதத்தில் உண்டு.
தன்வந்திரி கோயிலை அடுத்து, வடமேற்கில் சிறு கோயில் உள்ளது. இங்கு சந்தான கோபால கிருஷ்ணர் திருவுருவம் நின்ற நிலையிலும், அதற்குக் கிழக்கில் ராதா ஆலிங்கன கிருஷ்ணர் திருவுருவம் நின்ற நிலையிலும் உள்ளது.
இந்தக் கோயிலுக்குக் கிழக்கில் சிறிய கோயிலாக வியாசருக்கு கோயில் உள்ளது.
வியாசர் சன்னிதிக்குக் கிழக்கில் வராகப் பெருமாள், வரதராஜப் பெருமாள் மற்றும் புருஷோத்தமர் திருவுருவங்கள் அமைந்த சிறிய சன்னிதி உள்ளது.
தன்வந்திரி சன்னிதிக்குக் கிழக்கே, இராமர் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு இராமர், இலக்ஷ்மணர், சீதை மற்றும் அனுமான் திருவுருவங்கள் உள்ளன. இந்தச் சன்னிதிக்கு மேற்கில், கிழக்கை நோக்கியவாறு குலசேகரப் பெருமாள் மற்றும் வரதராஜர் திருவுருவங்கள் உள்ளன.
இராமர் சன்னிதிக்குச் சற்று கிழக்கே பரமபதநாதர் சன்னிதி அமைந்துள்ளது. இந்தச் சன்னிதியில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவியுடன் பரமபதநாதர் தெற்கு திசை நோக்கி இருக்கிறார். இந்தச் சன்னிதியில் ஆண்டாள் திருவுருவம் கிழக்கு நோக்கியும், விஸ்வக்ஷேணர், நாதமுனிகள், இராமானுஜர், பிள்ளைலோகாச்சாரியார் திருவுருவங்கள் மேற்கு நோக்கியும் இருக்கின்றன.
எந்தப் பிராகாரத்தில் என்ன என்ன கோயில்கள்/சன்னிதிகள் எங்கு அமைந்துள்ளன என்று விவரமாக எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. நாம் பெரும்பாலும் கோயிலுக்குள் சென்றால், நடக்கும் பாதையில் திடுமென சில சன்னிதிகளைக் காண்போம், சில திறந்திருக்கும். மூலவரைச் சேவித்துவிட்டு தாயார் சன்னிதிக்குச் சென்று பிறகு நேராக இராமானுஜர் சன்னிதி பிறகு சக்கரத்தாழ்வார் சன்னிதி என்று சென்றுவிடுவோம். ஆனால் வழியில் சில பல சன்னிதிகள் இருக்கும். அவைகளைச் சேவிக்க நேரமிருக்காது, அல்லது நிறைய நடந்திருப்பதால் கால்கள் கெஞ்சும், சீக்கிரம் வெளியில் போகலாமா என்று. நமக்குமே எந்தச் சன்னிதி எங்கு இருக்கிறது என்று சொல்லத் தெரியாது (பல பிராகாரங்களும் இணைக்கப்பட்டிருப்பதாலும், மண்டபங்களில் பல சன்னிதிகள் அமைந்திருப்பதாலும். இங்கு எழுதியிருக்கும் சில பதிவுகளைத் துணையாகக் கொண்டு ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒரு பிராகாரத்திலுள்ள கோயில்களைச் சேவிக்க முடியும். என்று நம்புகிறேன்)
நான்காம் பிராகாரத்தில் மீதமுள்ள சன்னிதிகளையும் பார்த்துவிடுவோம்
பரமபதநாதர் கோயிலை அடுத்து, மேலப்பட்டாபிராமர் கோயிலைப் போன்றே, அதன் எதிரே மேற்கே பார்த்தவாறு கீழப்பட்டாபிராமர் கோயில் இருக்கிறது. இந்தச் சன்னிதியில் லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர், சீதை, அனுமான் ஆகியோருடன் இராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். உற்சவத் திருவுருவங்களும் இங்கு உள்ளன.
கீழப்பட்டாபிராமர் கோயிலை அடுத்து ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னிதி உள்ளது. இங்கு உற்சவ விக்ரஹம் மாத்திரமே உள்ளது.
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலை அடுத்து போஜ ராமர் சன்னிதி உள்ளது. இங்கு இராமர், சீதை, லக்ஷ்மணர் மற்றும் அனுமான் ஆகியோரின் உற்சவத் திருவுருவங்கள் உள்ளன.
இந்த மூன்றாம் பிராகாரத்தில் மாத்திரம் ஐந்து இடங்களில் இராமருக்கு சன்னிதி இருக்கிறது. இதன் காரணம், இங்கிருந்து விபீஷணரிடம் கொடுத்துவிட்ட அரங்க விமானத்தைப் பார்க்கலாம் என்பதால் என ரசமாகச் சொல்கின்றனர்.
போஜராமர் சன்னிதிக்குத் தெற்கில் வேணுகோபாலர் சன்னிதி அமைந்துள்ளது. கோபாலர், எட்டுக்கைகளுடன், புன்னை மரத்தின் கீழ், கையில் புல்லாங்குழலுடன், ஆதிசேஷன் படமெடுக்க அதன் கீழ் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருவடியில் பசு ஒன்று காணப்படுகிறது.
வேணுகோபாலர் சன்னிதியை அடுத்து திருமழிசை ஆழ்வார் சன்னிதி உள்ளது. யதோத்தகாரி பெருமாள் மூலவர் மற்றும் உற்சவர் ஆகியோரும் இங்கு உள்ளனர். (யதோத்தகாரி-சொன்னவண்ணம் செய்த பெருமாள், மற்றும் திருமழிசையாழ்வார் சம்பவம் நினைவில் இருக்கிறதா? பொருத்தமான இடத்தில் எழுதுகிறேன். திருமழிசை ஆழ்வார் திருவரங்கம் பற்றி பதினான்கு பாசுரங்கள் பாடியிருக்கிறார்.) இங்கு ‘எம்பார்’ சன்னிதியும் உள்ளது.
இதனை அடுத்து, மேற்கில் உள்ள நம்மாழ்வார் கோயிலுக்கு நேர் எதிரே கிழக்கில், மேற்கு நோக்கியவாறு திருக்கச்சி நம்பிகள் சன்னிதி உள்ளது. திருக்கச்சி நம்பிகள், ஆளவந்தாரின் பசுக்கூட்டங்களை மேய்த்து அவரைக் கவர்ந்து அவரது சீடரானதை முன்பே எழுதியிருக்கிறேன். அதை நினைவுபடுத்தும் விதத்தில் அவரது திருவுருவம் அருகே பசுக்களின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இத்துடன் நான்காம் பிராகாரம் நிறைவு பெறுகிறது. இந்த நான்காம் பிராகாரத்தில்தான் ஆயிரங்கால் மண்டபமும் சேஷராயர் மண்டபமும் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் மணல் வெளி உள்ளது.
ஆயிரங்கால் மண்டபம். இந்த மண்டபத்தில் 953 தூண்களே உள்ளதால், உற்சவ சமயத்தில், 47 தென்னைமரத் தண்டுகளை நட்டு, ஆயிரங்கால் மண்டபமாக ஆக்குகின்றனர்.
சேஷராயர் மண்டபம். அழகிய சிற்பங்கள் இங்கு உள்ளன.
பதிவு நீண்டுவிட்டாலும், இந்த வாரத்திற்கான பாசுரம் பார்க்காமல் இருக்கமுடியாது அல்லவா? நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி ஏழாம் பத்தில், இரண்டாம் திருவாய்மொழி ‘கங்குலும் பகலும்’ எனத் தொடங்கும் திருவாய்மொழி. இது கோயில் திருவாய்மொழி. இதில் 7ம் பாசுரம், இன்றைக்கான பாசுரம்.
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!*
பற்றிலார் பற்றநின்றானே,*
காலசக்கரத்தாய்! கடலிடங் கொண்ட*
கடல்வண்ணா! கண்ணணே!' என்னும்,*
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!'
என்னும்* என்தீர்த்தனே!' என்னும்,*
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*
என்னுடைக் கோமளக் கொழுந்தே
திருவரங்க நாதனை நினைத்து, நம்மாழ்வார் தலைவி என்ற நிலையில் பாடிய திருவாய்மொழி இது.
பொருள்: என்னுடைய பெண்ணானவள், உலகத்தின் உயிர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப இன்பங்களையும் துன்பங்களையும் படைப்பவனே!, வேறு புகலிடம் இல்லாத உன் அடியார்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பவனே!, காலச்சக்கரத்திற்கு அதிபதியே, பாற்கடலைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவனே, கடல் நிற வண்ணனே, என்னுடைய கண்ணனே!, கயல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் இருக்கும் பெருமானே!, என்னுடைய பாபங்களைப் போக்கி என்னைத் தூய்மைப்படுத்துபவனே! என்று தலைவி தலைவனை அழுது அழைக்கிறாள். அவளுடைய அழகிய குளிர்ந்த கண்களில் இருந்து கண்ணீர் வரும்படியாக, என்னுடைய மென்மையான இளம் தளிரே என்று அரங்கனை நினைத்து ஏங்குகிறாள்.
விளக்கம்: அவரவர்களால் எவ்வளவு துக்கத்தைப் பொறுக்க முடியுமோ அவ்வளவில்தானே துக்கம் தரவேண்டும். உம்மைப் பிரிந்த எல்லாரும் அனுபவிக்கும் துக்கத்தை இவள் ஒருத்திக்கே தரலாமோ என்று கேட்கிறார். பால துன்பங்கள் இன்பங்கள் – இடம் அறிந்து சுக துக்கங்கள் படைப்பவன். கால சக்கரத்தாய் – காலத்தை நிர்வகிக்கிறவன். இன்னொரு பொருள் யமனாகிய சக்கரத்தைக் கொண்டவன். சேல் கொள் தண் புனல் சூழ் – இது திருக்காவிரியைக் குறித்தாலும், ஏன் அதை இங்கு சொல்கிறாள் என்றால், தண்ணீரில் இருக்கும் மீனைத் தரையில் போட்டால் அது எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கும். அத்தகைய துன்பத்தைத் தான் அனுபவிப்பதாகக் குறிப்பால் உணர்த்துகிறாள்.
இன்றைக்கு பதிவு ரொம்பவே நெடியதாகிவிட்டது. இனி அடுத்த வாரம் தொடர்வோம்...
===============================================================================
இது போன்ற உரையாடல்களை கதை என்று சொல்லாமல் "கண்டதும் கேட்டதும்" என்ற தலைப்பில் போடலாம்.
இத்தோடு இல்லாமல் அவர் எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவுக்கும் பரிச்சயம் ஆகி இருந்ததால் அங்கே வாரா வாரம் சனியன்று வரும் பாசிடிவ் பக்கங்களுக்காக எழுத ஆரம்பித்ததோடு ஒவ்வொரு வாரமும் தேர்ந்தெடுத்த பல கதைகளை விமரிசனமும் செய்து வந்தார். இதிலிருந்து அவர் கதைகள் படிப்பதின் நோக்கம் சும்மா வெறும் பொழுதுபோக்குக்கு அல்ல என்பதும் ஆழமாக எதையும் படிப்பார் எனவும் புரிந்தது. இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்றுத் திருவனந்தபுரத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டதும் என் சித்தி மாப்பிள்ளை ஸ்ரீரவியைத் தெரியுமானு கேட்டிருந்தேன். உடனேயே அவர் புகைப்படத்தைப் பகிர்ந்தார். சமையல் செய்வதிலும் அதைப் படம் பிடித்துக் குறிப்புக்களோடு வலைப் பக்கம் பகிர்வதிலும் ஆர்வம் உண்டு. பல சமையல் குறிப்புக்கள் எல்லாம் கேரள பாணி பகிர்ந்திருக்கார். அவருக்கும் ஓர் வலைப்பக்கம் இருக்கு. அதன் பெயரே "கதை வாசிப்பு" என்பதாகும். ஒரு மகன் அமெரிக்கானு நினைவு. அல்லது ஒரே மகனா அது தெரியவில்லை.
அவருடைய இஸ்ரோ அனுபவங்களும் எங்கள் ப்ளாக் வலைப்பக்கத்தில் பிரமாதமாக எழுதி இருந்தார். . பல்சுவை வித்தகர் எனலாம். பழகுவதற்கும் எளிய மனிதர். சமீபத்தில் என் சித்தி மாப்பிள்ளை ரவியின் மனைவி இறந்தப்போ தி/கீதா மூலம் கேட்டு அறிந்து கொண்டு என்னிடம் தன் இரங்கலைத் தெரிவித்தார். நுணுக்கமாகக் கவனிப்பவர். வெளியில் பார்த்தால் தெய்வ நம்பிக்கை இல்லாதவர் போல் தோன்றினாலும் ஆழமான நம்பிக்கை உடையவர். சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவர் மறைவு எதிர்பார்க்காத ஒன்று. உண்மையில் ஓர் மூத்த சகோதரரை இழந்தாற்போல் வெறுமையாக இருக்கிறது. அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திப்போம்.
சனிக்கிழமையின் "நான் படிச்ச கதை"...
சுவடுகளாகும் நினைவுகள்!
தொடர்ந்து சில வருடங்களாக சனிக்கிழமைப் பதிவுகளின் ஒரு பகுதியைப் பெரும்பாலும் தன் வசம் வைத்துக் கொண்டிருந்த ஜெ கே அண்ணாவின் "நான் படிச்ச கதை" இல்லாத சனிக்கிழமை.
ஒரே வாரத்தில்
தான் எத்தனை மாற்றங்கள் இல்லையா?!
நான்
படித்த மனிதரைப் பற்றிய "நான் அறிந்தவை, படித்தவை". ஆரம்பம் முதல் சொல்லிவிடுகிறேன்.
ஜெ கே
அண்ணா, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் தான் பணிபுரிந்தார் என்பது
வலைத்தளத்தில் அவர் கருத்துகளில் தெரிந்தது. என் கணவரும் அங்குதான் 8 வருடங்கள் பணிபுரிந்தார்.
அதனால்...
2021ல்,
நான் திருவனந்தபுரத்திலுள்ள என் தங்கை வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்குதானே ஜெ
கே அண்ணா இருக்கிறார் என்று ஸ்ரீராமிடம் மெயில் ஐடி வாங்கிக் கொண்டு அண்ணாவைத் தொடர்பு
கொண்ட போது தனக்குக் காது கேட்காது எனவே மொபைலில் பேசுவது சிரமம், தன் மனைவிதான் எடுப்பார்
பேசுவார் என்று சொல்லி தன் மொபைல் எண், தன் மனைவியின் மொபைல் எண், கொடுத்திருந்தார்.
அக்கா (அவர் மனைவி. நான் அக்கா என்று அழைப்பது வழக்கம்) அப்புறம் அண்ணாவிற்குச் சைகையாலும்,
எழுதியும் காட்டி விவரங்களைச் சொல்வார்.
அப்போது
அண்ணாவும் அவர் மனைவியும் என்னைப் பார்க்க என் தங்கை வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்தார்.
ஆனால் அவர் மனைவிக்கு அப்போதுதான் புற்றுநோய் சிகிச்சை முடிந்து சில நாட்களே ஆகியிருந்ததால்,
அக்கா தயங்கியதால் அண்ணா தன்னால் வர இயலவில்லை என்றார். சரி நான் சென்று பார்க்கலாம்
என்று நினைத்தும் நடக்கவில்லை, என் தங்கைக்கு உதவிக்கு நான் சென்றிருந்ததால்.
அதன்
பின், ஸ்ரீராமிற்கு ஜெ கே அண்ணா அனுப்பிய "நான் படிச்ச கதை"களை ப்ளாகரில்
போடுவதில் ஃபான்ட், ஃபார்மாட் என்ற பிரயத்தனங்கள் இருந்தன. ஜெ கே அண்ணாவும் அதை எனக்கு
மெயிலில் குறிப்பிட்டிருந்தார். நான் அவரிடம் கதையை எனக்கும் அனுப்பினால் நான் ஹெச்
டி எம் எல் போட்டு ஸ்ரீராமிற்கு அனுப்பிவிடுவேன் என்றிட, அப்படித் தொடங்கியது எங்கள்
மெயில் போக்குவரத்து.
அப்படிப்
பேசிய போது என் கணவரும் VSSC யில் எட்டு வருடங்கள் பணியாற்றினார் என்றதும், அவர் பார்த்திருந்தாலும்
பரிச்சயமில்லை என்றார். அண்ணா, தன்னைப் பற்றியும், தன் குடும்பம் பற்றியும் VSSC பற்றியும்,
அதில் பணியாற்றியவர்கள் பற்றியும் மெயிலில் அவ்வப்போது சொல்லிக் கேட்பார், விஷயங்களும்
சொல்வார். கீதாக்காவின் உறவினர் கூட அங்குதான் என்றும், அவர் இருந்த இடம் பற்றியும்
அண்ணா சொல்லியதுண்டு.
தன்
உடல் உபாதைகள், மனைவியின் உடல் உபாதைகள் குறித்தும் சொல்லியதுண்டு. அவர் வீட்டில் செய்யும்
சமையல் முதல், உலகச் செய்திகள் இந்தியச் செய்திகள் என்றும் அவ்வப்போது மெயிலில் பகிர்வார்.
கூடவே அவர் வாசித்த நல்ல கட்டுரைகள், கதைகள், புத்தகங்களின் பிடிஎஃப் என்றும் அனுப்பியதுண்டு.
அவர்கள் வீட்டில் செய்யும் செய்முறைகள், புதன் கேள்விகள், சனிக்கிழமை "நான் படிச்ச கதை", வியாழனில் ஸ்ரீராம் எழுதும் கவிதையை விமர்சித்துவிட்டு எதிர்க்கவிதைகள் எழுதுவது என்று அவரது பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. வியாழன் பதிவொன்றிற்கான கருத்தை அத்தனை பகுதியையும் சேர்த்து ஒரு கவிதையாகவே தன் கருத்தைப் பகிர்ந்திருந்ததை மறக்க முடியாது.
பொதுவாக அவரைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். காரணம் அவர் பெரும்பான்மையின் எண்ண ஓட்டங்களில் இருந்து வித்தியாசமாகப் பேசுபவர். எதிலும் ஒரு குறை இருக்கிறதா என்று தேடிப் பார்த்தவர்! மக்களின் பொதுவான எண்ணங்களிலிருந்து வேறுபட்டவர். அவரே அதை வெளிப்படையாகத் தன்னைப் பற்றி எபியில் கருத்துகளில் சொல்லியிருக்கிறார்.
அப்படி weird ஆகக் கருத்துகள் கொடுத்தாலும் எப்படி அவரது தாக்கம் என்னில் என்று யோசித்தால், ஒரு வேளை நம் வீட்டிலும் இப்படியான கதாபாத்திரம் உண்டே அதனால் இருக்குமோ என்றும் நானே ஆச்சரியக் குறிக்கு ஆளாவேன். ஒரு ஆச்சரியக் குறியுடன் கேள்விக் குறியும் முற்றுப்புள்ளியும் வைத்துக் கொள்வேன்!
நாட்பட நாட்பட, எனக்கும்
ஸ்ரீராமிற்கும் அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் அப்படிக் கருத்துகள் சொன்னாலும்
highly
authentic! அப்படியானவர்களைப் புரிந்து கொள்வது என்பது
மிகவும் கடினம். ஆனால் He was not a hypocrite! என்பதை அவர் கருத்துகளிலும், தனிப்பட்ட முறையில்
மெயிலிலும் உரையாடியதால் நான் அவரைப் பற்றித் தெரிந்து கொண்டவற்றுள் அதுவும் ஒன்று என்பதை இங்கு பதிய விரும்புகிறேன்.
இது என்னை மிகவும் கவர்ந்தது என்று சொல்லலாம். அவர் கருத்துகள் அப்படி இப்படி இருந்தாலும்,
மனதளவில் கொஞ்சம் கூட வன்மம் இல்லாதவர். சொல்லப் போனால், கல்லுக்குள் ஈரம் என்று சொல்வது
போல் அவர் மனம்.
ஏதோ ஒரு படத்தில் தனுஷ் ஒரு வசனம் சொல்வாரே..."என்ன ஆரம்பத்துல யாருக்கும் பிடிக்காது... ஆனா, பழகப் பழகப் பிடிக்கும்!" என்று அப்படித்தான் என் அனுபவமும்.
எனக்கும்
சரி, மற்றவர்களுக்கும் சரி, அவர் கொடுத்த கருத்துகளை வலைத்தளத்தில் பார்த்துவிட்டு, உங்கள்
கருத்தில் உடன்பாடில்லை என்றோ, அல்லது இப்படிக் கொடுக்காமல் வேறு விதமாக நீங்கள் கொடுத்திருக்கலாம்
என்று உளவியல்படி நான் மெயிலில் அவருக்குத் தனியாகச் சொல்லியிருக்கிறேன். சில சமயம்,
கருத்தை எடுத்துவிடவா என்றும் கூட அவர் கேட்டதுண்டு. அப்படியான புரிதல் உள்ளவர், தவறாக எடுத்துக் கொள்ளாதவர், அது உன் கருத்து இது என் கருத்து என்று அசால்டாகக் கடந்து விடுவார் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
அவரைக்
கலாய்த்ததுண்டு, பாராட்டியதுண்டு, ஏன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவர் சொல்வது
சரியாக இல்லை என்றால் அதைச் சுட்டிக் காட்டி, நேரடியாகவே கூடச் சொன்னதுண்டு மெயிலில்.
ஆனால்
எதையுமே தவறாக எடுத்துக் கொண்டதில்லை. பாசத்தைக் காட்டினால் அவர் டபுள் மடங்கு பாசத்தைக்
காட்டினார் என்பதையும், நினைவுகூர்கிறேன்.
சென்ற
05-09-2026 சனிக்கிழமைக்கான அவர் பதிவை எனக்கு அனுப்பியதை நான் வாசித்து ஃபார்மாட் செய்து ஹெச் டி எம் எல் ஆக ஸ்ரீராமிற்கு அனுப்பிய பின், அக்கதை பற்றி, சுஜாதா அவர்களின்
முதல் கதையும் இதே கருவை ஒத்ததுதான் என்றும் ஸ்ரீராமும் கூட இதே கருவில் எழுதியிருக்கிறார்
என்றும் நான் அவருக்குக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து சில உரையாடல்கள் போக்குவரத்திற்குப் பிறகு, அவர்
எனக்கு அனுப்பிய கடைசி மெயில் செப்டம்பர் 1
ஆம் தேதி.
//நன்று. ஆனால் எ பி வாசகர்களுக்குப் பிடிக்காது (அவர் சொல்லியிருந்தது சென்ற வார நான் படிச்ச கதை பற்றி). அப்பா எப்படி இருக்கிறார். எனக்கு நாலு நாளா வயிற்றுப்போக்கு. மருந்து சரியாகவில்லை. லங்கனம் பரம அவுஷதம் என்று தோன்றுகிறது.//
நான் அதற்கு அவருக்குச் சில யோசனைகள்
சொல்லி அனுப்பியிருந்தேன் ஆனால் பதில் இல்லை. அதுவே அவரது கடைசி மெயிலாக இருக்கும்
என்று நான் சத்தியமாக இம்மி அளவு கூட நினைக்கவில்லை.
செப்டம்பர் 5 ஆம் தேதி கோமதி அக்காதான்
என்னிடம் கேட்டார், கௌ அண்ணா எபியில் கருத்தினிடையில் இப்படி ஒரு செய்தி சொல்லிப் போட்டிருக்கிறார்,
"உங்களுக்குத் தெரியுமா" என்று.
எனக்கு உண்மையிலேயே டக்கென்று புரியவும்
இல்லை அதிச்சியாகவும் இருந்தது. நான் உடனே
ஸ்ரீராமிற்கு வாய்ஸ் மெசேஜ் விட்டிருந்தேன். ஸ்ரீராமிற்குத் தெரிந்திருந்தால்
எனக்கு உடனே சொல்லியிருப்பாரே என்று. ஸ்ரீராமிற்குமே தெரிந்திருக்கவில்லை. அதன் பின்
தான் அவரும் முகநூலில், JKC அண்ணாவின் மகன் போட்டிருந்ததை எனக்கும் அனுப்பியிருந்தார்.
நான் உடனேயே, அண்ணாவின் மனைவியை
அழைத்துப் பேசி, மெதுவாகச் சொல்லிக் கேட்டேன். "ஆமாம் சரிதான் உண்மைதான்."
என்று விவரங்கள் சொன்னார்.
அதற்கு முன்னான ஒரு
வாரமாகவே அவர் சரியாக இல்லையாம். "இதயத்தில் Stent இருக்கு, ஆனா டாக்டர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிடாம, தானாகவே
ஏதோ எடுத்துக்குவாரு. நாம சொல்றத கேக்கமாட்டாரு" என்றார். வாயுத் தொல்லையாக இருக்கும் என்று கஷாயம் எல்லாம்
கொடுத்ததாகவும் தூங்குவதற்கு இரவு 1 மணி ஆகிவிடும் என்றும், ஆனால், தான் 6 மணிக்கு எழுந்து
சமைக்க வேண்டும், அண்ணாவிற்குச் சரியாக நேரத்திற்குச் சாப்பாடு வேண்டும் என்றெல்லாம்
சொன்னார்.
அந்த இரவுதான் அண்ணா அழுதிருக்கிறார்,
"என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடு" என்று. மகன்களுக்குச் சொன்னதும்
மறுநாள் அவரது மூத்த மகன் வந்ததும், ஜெ கே
அண்ணா மகனைக் கட்டிக் கொண்டு முத்தமழை பொழிந்தாராம். அத்தனை சந்தோஷப்பட்டார் என்று
சொன்னார்.
மகன்களைப் பற்றிய மகிழ்ச்சியும்,
அவர்கள் மீதான பாசத்தையும் மெயிலில் பகிர்ந்ததுண்டு.
கூடவே மருத்துவவமனைக்குச் சென்று
எமர்ஜன்சியிலிருந்து ஐசியுவிற்கு வந்ததும், தனக்குள்ளாகவே, இந்தக் கதை சரிவராது வேறு
கதை பார்க்க வேண்டும் என்றெல்லாம் அதாவது இந்தச் சனிக்கிழமைக்கான கதை பற்றி போலும்,
பேசியதை, அக்காவோ, அவருக்கு ஏதோ சித்தம் கலங்கிவிட்டதோ என்றும் கூட நினைத்தாராம்.
லாப்டாப்பை கொண்டுவரச் சொல்லியும்
கூட கேட்டாராம்! தன்னைக் காணவில்லை என்று நாம் தேடுவோமே என்று சொல்வதற்காக. "ஐசியுவிலும்
கூட ப்ளாக், உங்க எல்லாரைப் பற்றியும்தான் நினைப்பு" என்றார் அக்கா.
மருத்துவர்கள், நிறைய அடைப்புகள்
இருக்கின்றன, ஆஞ்சியோ பண்ணலாம் ஆனால் ரிஸ்க் கூடுதல் என்று சொல்லி குடும்பத்தினரை முடிவு
செய்யச் சொன்னார்களாம். அக்காதான், கடவுள் விட்ட வழி, ஆஞ்சியோ செய்து பார்த்துவிடலாம்
ஒரு வேளை சரியாகி வந்துவிட சான்ஸ் இருக்கே என்று செய்யச் சொல்லிட, அந்த ப்ரொசீஜரில்
அண்ணாவின் கடைசி மூச்சு.
அக்கா, அவர் ஏதோ மயக்கத்தில் இருக்கிறார்
என்றே நினைத்தாராம். மகன்கள் உடனே சொல்லவில்லையாம். தாமதமாகத்தான் சொல்லியிருக்கின்றனர்.
ஆங் ஒன்று விட்டுப் போய்விட்டதே,
ஜீவி அண்ணா, கீதா அக்கா (அவருக்கு மாமி), நெல்லைத்தமிழன் குறிப்பாக சனி ஞாயிறு பதிவுகள், பாவெ மேடம்,
கோமதிக்கா, கமலாக்கா, வெங்கட் - பயணப் பதிவுகள், துளசிதரன், துளசி அக்கா - பயணப் பதிவுகள்
என்று என்னிடம் ரொம்ப பாசிட்டிவாகப் பேசியதுண்டு. குறிப்பாக, சனிக்கிழமைக்கு ஜீவி அண்ணாவை அவர் ரொம்ப எதிர்பார்ப்பார். அதை என்னிடம் மெயிலிலும் தெரிவித்ததுண்டு. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பதும் எனக்குத் தெரியும். அவர் மனைவியிடமும் நம்மைப் பற்றி
எல்லாம் சொல்லுவாராம். "எப்போதும் லாப்டாப், ப்ளாக், உங்க எல்லாரும் பத்திதான்"
என்று சொன்னார் அக்கா.
என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.
இந்த வாரம் கூட, "என்ன இந்த அண்ணா இன்னும் "நான் படிச்ச கதை" அனுப்பலையே"
என்றுதான் டக்கென்று தோன்றியது. ஸ்ரீராமிற்கு அனுப்ப வேண்டுமே என்று. இன்னும் மெயிலில்
அவர் பதில் வருமோ என்று எதிர்பார்க்கும் அளவு மனம் இன்னும் நிதர்சனத்தை ஏற்கவில்லை.
வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை.
யட்சன், தர்மர் உரையாடல்தான் நினைவுக்கு வந்தது.
கேள்வி : உலகிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் (உண்மை) எது? தர்மரின்
பதில் : "ஒவ்வொரு நாளும் எண்ணற்ற உயிர்கள் மரணமடைந்து எமலோகம் செல்வதை மனிதர்கள் தங்கள் கண்களால் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்த பிறகும், பூமியில் மீதமிருக்கும் மனிதர்கள் தாங்கள் மட்டும் எப்போதும் அழியாமல் நிலையாக வாழப்போவதாக நினைத்துக் கொள்கிறார்களே, இதைவிடப் பெரிய ஆச்சரியம் உலகில் வேறு எதுவுமில்லை!"
===========================================================================================
துளசிதரன் :
ஜெயகுமார் சந்திரசேகரன்
சாரின் மறைவு குறித்துக் கேட்டதும், அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எனக்கு அவரை அவரது
கருத்துகளின் மூலம் தான் அறிமுகம் ஏற்பட்டது. அவருடைய முதல் கருத்தே பாராட்டியும் அதே
சமயம் சர்காஸ்டிக்காகவும் வந்ததும், "யாருடா இவர்? இப்படி ஒரு கருத்தைக் கொடுத்திருக்காரு?"
என்று கீதாவிடம் கேட்டேன். பலர் கொடுக்கும் கருத்துகளில் இருந்து வித்தியாசமாக, கொஞ்சம்
Strange ஆக இருக்கும் அவருடைய கருத்து. தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள, தான் மற்றவர்களிலிருந்து மாறுபட்டவர் என்பதைச் சொல்ல அப்படிச் செய்தாரோ என்றும் கூட நினைத்ததுண்டு. கூடவே ஒரு மூத்த சேட்டன் போன்று சஜஷன்ஸும் கொடுப்பார்.
முதலில் கோபமும் எரிச்சலும் வந்தாலும், பின்னர் அதை யோசித்துப் பார்த்த போது அதை எடுத்துக்
கொள்ளலாமே என்றும் தோன்றி மாற்றி திருத்திக் கொண்டதும் உண்டு. நெல்லிக்கனி போன்று என்றே
தோன்றியது.
எங்கள் பதிவுகளில் அவர் பாராட்டிய கருத்துகளும் உண்டு என்பதையும் குறிப்பிட வேண்டும். கொஞ்சம் வித்தியாசமான மனிதர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் ஏதோ ஒரு வகையில் அவர் கருத்தைக் காணவில்லையே என்று கேட்க வைத்ததும் உண்டு. மரணம் என்பது எல்லோருக்கும் ஒரு நாள் நிகழத்தான் போகிறது என்றாலும் இவர் மறைந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். அவர் குடும்பத்தார் அவர் மறைவிலிருந்து மீண்டு வந்திட இறைவனிடம் பிரார்த்திப்போம்.
= = = = = = = = = = = = = = = = = =
பானுமதி வெங்கடேஸ்வரன் :
JKC சாருடன் நேரிடையாக பார்த்து,பேசி பழகியதில்லை. எ.பி.மூலம்தான் பழக்கம். என்னுடைய பழைய பதிவுகளுக்கும் பின்னூட்டமிப்டிருக்கிறார்.
பின்னூட்டம் என்றால் உபசாரமாக 'நன்று', 'சிறப்பு' என்றெல்லாம் எழுதாமல் மனதில் பட்டதை அது எதிர்மறை விமர்சனமாக இருந்தாலும் தயங்காமல் வழங்கக் கூடியவர். பாராட்டவும் தயங்க மாட்டார். அவரிடம் பாராட்டும் வாங்கியிருக்கிறேன்.
ISRO வில் அவர் பணி புரிந்த அனுபவங்களை சுவாரஸ்யமாக எ.பி.யில் எழுதினார். சனிக்கிழமைகளில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. அந்த இடம் வெற்றிடமாகத்தான் இருக்கும்.
= = = = = = = = = = = = =

எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லும் ஸ்ரீவசன பூஷணம் இணையத்தில் கிடைக்குமா என்று பார்த்தேன். ஸ்ரீவசன பூஷண ப்ரமாண திரட்டு என்று திருக்குடந்தை திருப்புறம்பியம் TB இராமஸ்வாமி இராமா னுஜதாசரால் இயற்றப்பட்டு, பண்டிதர்களால் பரிசோதிக்கப்பட்ட 1822 ஆம் வருட புத்தகம் ஒன்று கிடைத்திருக்கிறது.
பதிலளிநீக்கு// இராமானுஜர் சுதைச் சிற்பத்தையே, இராமானுஜரின் பூத உடல் என்று நம்புகின்றனர். //
பதிலளிநீக்குஅப்படியா? அப்போது அந்தக் கூற்று சரியில்லையா?
கோவில் பற்றிய நுண்ணிய விவரங்கள் நன்று. ஆனால் அதைப் படிக்கும்போது 'நான் தரிசித்த கோவில்கள்' கட்டுரை இடம் மாறி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளா தேவியா, நீலா தேவியா?
பதிலளிநீக்குசென்ற வாரமும், இந்த வாரமும் ஸ்ரீரங்கம் கோவிலை நிதானமாக, அழகாக சுற்றிக் காட்டியிருக்கிறீர்கள், நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல சன்னதிகளை தரிசித்திருந்தாலும், சிலவற்றை தரிசன்ம செய்திருக்கிறோமா? என்றௌ சந்தேகம் வந்தது. உ.ம். வியாசர் சன்னதி. ஆண்டாள் சன்னதி மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அழகான சிற்பங்களின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கலாம்.
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். திருவரங்கம் கோயில் படங்களை ஒரு ஞாயிறு பகிர்கிறேன் (ஓரிரு).
நீக்குபல சன்னிதிகள் பெயர்க்குழப்பம், தரிசித்திருக்கிறோமா என்ற சந்தேகம் வருவது இயற்கை.
ஆதி வெங்கட் அவர்கள் (இருவரையும் சமீபத்தில் அவர்கள் வீட்டில் போய்ப் பார்த்தோம்), சேஷராயர் மண்டபத்தில் ஒரு சிற்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் போலவே இன்னொரு இடத்திலும் அந்தச் சிற்பம் உண்டு என்றார். மறுநாள் தேடிக் கண்டுபிடித்தோம். பல சிற்பங்கள் புராண இதிஹாச கதைகளை அடிப்படையாக்க் கொண்டவை. எல்லாம் பகிர்கிறேன்
*தரிசனம் செய்திருக்கிறோமா என்ற சந்தேகம் வந்தது. என்று வாசிக்கவும்.
பதிலளிநீக்கு// எந்தப் பிராகாரத்தில் என்ன என்ன கோயில்கள்/சன்னிதிகள் எங்கு அமைந்துள்ளன என்று விவரமாக எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது.//
பதிலளிநீக்குஉண்மைதான். பெரிய கோவில்களில் நிறைய சிறு சிறு சந்நிதிகள் இருக்கும் நிலையில் நாம் அங்கு செல்வதே காலில் வெந்நீரை கொட்டிக் கொள்வது போலதான் செல்வோம். அப்படிச் சென்று கோவிலுக்குரியவர் சன்னதி அவர் துணைவர் சந்நிதி என்று பார்த்து விட்டு ஓடி வருவோம். எல்லாமே அவசரம்!
// நான்காம் பிராகாரத்தில் மீதமுள்ள சன்னிதிகளையும் பார்த்துவிடுவோம் //
பதிலளிநீக்குமறுபடியும் நிமிர்ந்து ஒருமுறை தலைப்பை சரிபார்த்துக் கொள்கிறேன்!!!
// ஆயிரங்கால் மண்டபம். இந்த மண்டபத்தில் 953 தூண்களே உள்ளதால்//
பதிலளிநீக்குஏன்? அப்படித்தான் கட்டப்பட்டிருந்ததா? இல்லை காலவெள்ளத்தில் சிதைந்து விட்டதா?
வாங்க ஶ்ரீராம். இந்த ஆயிரங்கால் மண்டபமே மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்டது. அதனால் முதலிலேயே ஆயிரங்கால் மண்டபம் எனத் தீர்மானித்துக் கட்டப் பட்டது போலத் தெரியவில்லை.
நீக்குதிருப்பதியில் கோயில் முன்பு ஆயிரங்காலோ இல்லை நூற்றுக்கால் மண்டபமோ பாழடைந்து கிடந்ததைப் பார்த்த நினைவு இருக்கிறதா? எனக்கு மங்கலாக அங்கு ஓர் மண்டபம் சிதைந்த நிலையில் இருந்த நினைவு.
அப்பாடி பாசுரதம் வந்து விட்டது..
பதிலளிநீக்குஅழகான பாசுரம்..
.
பற்றிலார் பற்றநின்றானே - அருமை.
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் - ஆஹாஹா
இன்றைய பாசுரம் எனக்கு "காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்" வரிகளை ஏனோ நினைவூட்டுகிறது.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நண்பர் நெல்லைக் தமிழன் என்ன எழுதினாலும் ஆர்வமாக ரசித்துப் படிப்பவன் நான். எனவே அவர் என்ன சொன்னாலும் எனக்கு உடன்பாடாக மட்டுமே இருக்கும்.
பதிலளிநீக்குஸ்ரீரங்கம் கோயிலை அங்குலம் விடாமல் அவர் விவரமாகச் சொல்லியிருப்பது வழக்கம் போல எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு பெருமாள் கோயிலில் இத்தனை இராமர் சந்நிதிகள் எதற்கு என்று எண்ணத் தோன்றுகிறது. (இது பற்றி நெ.த என்ன நினைக்கிறார் ?) அதிகாரத்துக்கு வருகிற அரசர்கள் இது போல் நாமும் ஒரு சந்நிதியை கட்டி வைக்கலாம் என்று கருதினார்கள் போலும் !பிரமாண்டம் என்று சொல்லக் கூடிய எல்லாக் கோயிலும் தெய்வீக மணம் சூழ விளங்குவதில்லை.(தஞ்சாவூர் மாதிரி வெறும் கட்டட நுணுக்கம் மட்டுமே சிறப்பாக இருக்கும் பல பெரிய. கோயில்கள் உண்டுதானே.) எல்லாமே திருவரங்கமோ திருவண்ணாமலையோ ஆகிவிடுவதில்லை.
வாங்க யஜ்ஞராமன் சார். இப்போ நாங்கள் இங்கு ஆண்டவன் ஆஸ்ரம கோயிலுக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம். வந்த பிறகு விரிவாக்க் கருத்திடுகிறேன். உங்கள் கருத்து மகிழ்வை உண்டாக்குகிறது.
நீக்குஇஷ்வாகு குல தனமான விமானத்தை இராமர் பல திசைகளிலிருந்தும் பார்ப்பதாக இதனை இரசமாக விவரித்தாலும், ஒவ்வொரு அரசர் காலத்திலும் முக்கியஸ்தர்களோ இல்லை மந்திரி பிரதானிகளோ அந்த அந்தச் சன்னிதிகளைக் கட்டியிருப்பார்கள், தங்கள் வருகையை நினைவுகூற, தங்கள் அப்போதைய வெற்றியின் காணிக்கையாக என்ற காரணங்கள் இருக்கலாம்.
என்னுடைய கருத்தாக நான் எண்ணுவது, கருவறைக்கும் பக்தர்களுக்கும் நல்ல இடைவெளியிலும், மொபைல் போன் கொண்டுபோக முடியாத கோயில்களிலும், நமக்கு இனம் தெரியாத உணர்வைக் கொண்டுவரும் எஓயில்களிலும் சாந்நித்யத்தை உணர்ந்திருக்கிறேன். எல்லாக் கோயில்களிலும் என்னால் உணர முடியாமை என்னுடைய குறை.
தெய்வீக உணர்வு காஞ்சீபுரம் தேவப் பெருமாள் கோயில், திருப்பதி, ஶ்ரீரங்கம், என லிஸ்ட் போட்டுவிட முடியாத பலப் பல கோயில்களில் அனுபவித்திருக்கிறேன். இது கோயிலைப் பராமரிக்கும் சூழலினால் என்பதே என் எண்ணம். (பராமரிப்பு என்றால் ச்ரேஷ்டமாகப் பார்த்துக் கொள்ளுதல், ஆகம்ப் பிரகாரமான பூசைகள், கோயிலில் அமைதியைக் கடைபிடிப்பது போன்ற பல)
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குநலம் வாழ்க
பதிலளிநீக்குஎனது கைத்தலபேசியின் தொடு திரை பழுதாகி விட்டது.. நிலைமை சீராக சில தினங்கள் ஆகலாம்...
பதிலளிநீக்குகுரு பரம்பரை மற்றும் பாசுரம் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குஸ்ரீரங்கம் கோயில் விவரங்கள் அனைத்து சன்னதி பற்றிய விவரங்களும் படங்களும் அருமை.
பிள்ளைலோகாச்சார்யார் சன்னிதி பார்த்த நினைவே இல்லை.
இனி ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும்.
ஆயிரங்கால் மண்டபம் பற்றிய செய்தி தெரிந்து கொண்டேன்.
பாசுரமும் அதன் விளக்கமும் அருமை.
கர்மவினைகளுக்கு ஏற்ப இன்ப , துன்பங்களை தருபவர் தான் இறைவன்.
துன்பங்களை தாங்கும் மன பலத்தையும், அதிலிருந்து விடுபடவும் அவர்தான் அருள்புரியவேண்டும்.
பதிலளிநீக்குJKC ஸார் பற்றி எல்லோர் சொன்னதை படித்தேன்.
//படங்களும் விவரங்களும் நன்றாக உள்ளன. ஆனாலும் ஒரு கதை போன்ற கோர்வை கிட்டவில்லை. நீங்கள் கோர்வையாக எழுதுபவர். வயது காரணம் சிரத்தை அதிகம் செய்ய முடியாமல் இருந்திருக்கலாம். பதிவு ஒரு திருப்தி.//
என் குலதெய்வ பதிவில் அவர் இப்படி பின்னூட்டம் போட்டார் அதன் பின் தான் பதிவை மீண்டும் படித்துப்பார்த்து சில திருத்தங்கள் செய்தேன்.
சார் சொன்னது போல அந்த பதிவு போட்ட போது உடல் நிலையும், மன நிலையும் சரியில்லை இரவு நேரம் ஆகி விட்டது,
"நாலுபக்கம் மலைகள் நடுவில் ஏரி" பதிவுக்கு தான் கடைசியாக வந்தார் வந்து படங்களை பாராட்டி கருத்து சொன்னார்.
கீதா ரங்கனிடம் எங்கள் பதிவுகளை பற்றி பேசியதை கேட்கும் போது மனம் நெகிழ்ந்து போகிறது.
எல்லோரும் சொன்னது போல மனதில் பட்டதை சொல்லி விடுவார்.
சனிக்கிழமை கதை பகிர்வை மறக்க முடியாது. அவர் அனுப்பிய பாசிடிவ் செய்திகளையும் மறக்க முடியாது.
உடல் தொந்திரவுகள் நிறைய இருந்தாலும் பதிவுகள் எழுதி அனுப்பியும், பின்னூட்டங்கள் எழுதி வந்ததும் அவரின் மன உறுதியை சொல்கிறது.
என்றும் நினைவுகளில் இருப்பார் சார்.
///கர்மவினைகளுக்கு ஏற்ப இன்ப , துன்பங்களை தருபவர் தான் இறைவன்.
பதிலளிநீக்குதுன்பங்களை தாங்கும் மன பலத்தையும், அதிலிருந்து விடுபடவும் அவர்தான் அருள்புரிய வேண்டும்///
பதிலளிநீக்குசந்திரசேகர் ஐயா மறைந்தார்...
உண்மையில் உற்றார் ஒருவரை இழந்தாற்போல் வெறுமையாக இருக்கிறது. அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திப்போம்...
JK சந்திரசேகர் மறைவு விசனத்தைக் கொடுத்தது. நம்மை ஆழம் பார்ப்பது போல எடக்கு மடக்காக கேள்விகள் கேட்பார். நல்ல ரசிகர் என்பது அவருடைய ஒவ்வொரு எழுத்திலும் எனக்குப் புலப்பட்டது. அவர் நினைவைப் போற்றுகிறேன்.
பதிலளிநீக்கு