ஆவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.10.14

திகில்வரிகள் II



திகில்வரிகளின் முதல் பாகம் ( ! ) பெற்ற ஆதரவினால் (சொன்னா நம்பணும்!) இப்போது இரண்டாம் பாகம்! ஆனால் இனி தொடராது என்று உறுதியளிக்கிறேன் - இப்போதைக்கு!



எல்லையற்ற வானில்
ஏகாந்தமாய்ப் பறக்கும்
கனவுக்கு நடுவே
ஏதோ சத்தம் கேட்டுக்
கண்விழித்தேன்.
கடைசிப் பகுதி மண்ணை
என் முகத்தின் 
மேலே போட்டு 
குழியை மூடினார்கள்.


=======================



குளிர்கிறதே
என்று போர்த்திக் கொள்ளத்
துணியைத் தேடியபோதுதான்
தெரிந்தது
பாவிகள்
துணிகளை உருவிக்கொண்டுதான்
புதைத்திருக்கிறார்கள் என்று!

======================= 


'இரவில்
தனியாக இருக்கிறோமே
விளக்கை அணைக்க வேண்டுமா என்ன?'
என்று யோசித்தபோது
'வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது'
என்றது
அருகில் ஒரு குரல்

=========================


காற்றேயில்லாமல்
இப்படிப் புழுங்கும்
என்று தெரிந்திருந்தால்
புதைக்க வேண்டாம்
எரித்து விடுங்கள்
என்று சொல்லியிருக்கலாம்.


=======================



கனவிலிருந்து
விழித்துக் கொண்டபோது
கரண்ட் இல்லை என்றுதான் நினைத்தேன்
கல்லறை என்று
பின்னர்தான் தெரிந்தது!


===================



திகில் கதை
படித்துக் கொண்டிருந்தேன்.
திகிலே இல்லை.
முதல் வரியை மறுபடி படிக்கவும்
என்றது
கடைசி வரி.
மீண்டும் மேலே சென்றேன்.
எந்த வரிகளையுமே காணோம்!


===============


அப்போ பரவாயில்லை!



குனிந்து பார்த்தபோது
என் உடலைக் காணோம்...
பதறி எழுந்து சென்று
கண்ணாடியில் பார்த்தேன்.
அட,
முகத்தையும் காணோம்!

10.9.14

திகில்வரிகள்



முக நூலில் என் தங்கையின் பெண் இந்தப் பக்கத்தைப் பகிர்ந்திருந்தாள்.

இரண்டு வரிகளில் திகிலை உருவாக்க வேண்டுமாம்!

எழுத்தாளர் சுஜாதா ஒரு ஒற்றைவரி திகில் கதை ஒன்றை முன்பு சொல்லியிருந்தார். 


உலகில் மிச்சமிருந்த ஒரே மனிதன் வீட்டுக்குள் இருந்தபோது கதவு தட்டப் பட்டது என்று எழுதி இருப்பார். அதை முன்பு ஒருமுறை இங்கே எங்கள் ப்ளாக்கில் பகிர்ந்திருந்தபோது ஜீவி ஸாரா யாரென்று நினைவில்லை, 'கதவு வெளியே தாழிடப் பட்டது' என்று இருந்தால் இன்னும் திகிலாக இருக்கும் என்று எழுதி இருந்தார். உண்மைதான். திகில் கூட்டும் வரி அது.

இரட்டை வரித் திகில் வரிகளைப் படித்தபோது எனக்குத் தோன்றியவற்றை உடனே எழுதி வைத்தேன். பேஸ்புக்கிலும் பகிர்ந்தேன். 
அவற்றை இங்கேயும் பகிர்கிறேன்!

'லிங்க்' க்ளிக் செய்து அங்கு சென்று படித்தீர்களா?


உங்களுக்குத் தோன்றும் திகில்வரிகளை இங்கே பின்னூட்டத்தில் பகிரலாமே.



                                                
                                                                                          கொஞ்சம் மெதுவாகத்தான்

மூச்சு விடேன்...
உறங்க முடியவில்லை என்னால்...

பக்கத்துக் கல்லறைப்
பெண்ணிடம்
சொல்லி விட்டுத்
திரும்பிப் படுக்க முயன்றேன்.


நெஞ்சு அடைக்கிறது
என்றேன்
அருகில் படுத்திருந்த
மனைவியிடம்
புரண்டெழுந்து சட்டை அகற்றி
நெஞ்சுக்குள் விரல் விட்டு
வெளியே எடுத்துப் போட்டாள்
பென் டிரைவ் ஒன்றை.


நள்ளிரவில்
சத்தம் கேட்டு விழித்தேன்
செத்துப் போன பெரியப்பா
கதவுக்கு வெளியே
நிற்பது தெரிந்தது.
இருளில்
மரக்கதவின்
பின்னே
நிற்கும் உருவம்
கண்ணில் தெரியுமா என்ன?

       
 வெளியே நின்று
கதவைத் திறந்து
உள்ளே போக முடியவில்லை
என்று சொன்ன
பொன்னுமணிக்காகக்
கதவைத் திறந்து கொடுத்தபோது
உள்ளேயிருந்து வந்த பொன்னுமணியும்
அதையே சொன்னதுதான் ஆச்சர்யம்.
எங்கள் வீட்டில்
ஒரே ஒரு
பொன்னுமணிதான்.


குழாய் திறந்ததும்
நீர் கொட்டும் வேகம் பார்த்து
அதிர்ச்சியாக இருக்கிறது.
நான் இன்னும்
மேல் நிலைத் தொட்டி
கட்டவும் இல்லை,
இணைப்பும் தரவில்லை  



'கீழே' இருந்து
இறந்த என் அம்மா
கூப்பிடும் குரல் கேட்டு
தூக்கத்திலிருந்து
எழுந்து இறங்க
முற்படுகையில்தான்
நினைவுக்கு வருகிறது
என் வீட்டுக்கு மாடியே இல்லை!



 ஒற்றை அறை
கொண்ட என் வீட்டில்
எத்தனை கதவுகளைத்
திறந்தாலும்
வரமாட்டேன் என்கிறது
என் அறை மட்டும்.



முழுவதும்
மூடி விடாதீர்கள்
கொஞ்சமாவது
காற்று வேண்டும்
எனக்கு...

 
தினம் தினம்
எழுந்து வருவதே
சிரமமாயிருக்கிறது.
யாரோ
என் கல்லறையை
மறுபடி மறுபடி
மூடி விடுகிறார்கள்.