புதன், 10 செப்டம்பர், 2014

திகில்வரிகள்



முக நூலில் என் தங்கையின் பெண் இந்தப் பக்கத்தைப் பகிர்ந்திருந்தாள்.

இரண்டு வரிகளில் திகிலை உருவாக்க வேண்டுமாம்!

எழுத்தாளர் சுஜாதா ஒரு ஒற்றைவரி திகில் கதை ஒன்றை முன்பு சொல்லியிருந்தார். 


உலகில் மிச்சமிருந்த ஒரே மனிதன் வீட்டுக்குள் இருந்தபோது கதவு தட்டப் பட்டது என்று எழுதி இருப்பார். அதை முன்பு ஒருமுறை இங்கே எங்கள் ப்ளாக்கில் பகிர்ந்திருந்தபோது ஜீவி ஸாரா யாரென்று நினைவில்லை, 'கதவு வெளியே தாழிடப் பட்டது' என்று இருந்தால் இன்னும் திகிலாக இருக்கும் என்று எழுதி இருந்தார். உண்மைதான். திகில் கூட்டும் வரி அது.

இரட்டை வரித் திகில் வரிகளைப் படித்தபோது எனக்குத் தோன்றியவற்றை உடனே எழுதி வைத்தேன். பேஸ்புக்கிலும் பகிர்ந்தேன். 
அவற்றை இங்கேயும் பகிர்கிறேன்!

'லிங்க்' க்ளிக் செய்து அங்கு சென்று படித்தீர்களா?


உங்களுக்குத் தோன்றும் திகில்வரிகளை இங்கே பின்னூட்டத்தில் பகிரலாமே.



                                                
                                                                                          கொஞ்சம் மெதுவாகத்தான்

மூச்சு விடேன்...
உறங்க முடியவில்லை என்னால்...

பக்கத்துக் கல்லறைப்
பெண்ணிடம்
சொல்லி விட்டுத்
திரும்பிப் படுக்க முயன்றேன்.


நெஞ்சு அடைக்கிறது
என்றேன்
அருகில் படுத்திருந்த
மனைவியிடம்
புரண்டெழுந்து சட்டை அகற்றி
நெஞ்சுக்குள் விரல் விட்டு
வெளியே எடுத்துப் போட்டாள்
பென் டிரைவ் ஒன்றை.


நள்ளிரவில்
சத்தம் கேட்டு விழித்தேன்
செத்துப் போன பெரியப்பா
கதவுக்கு வெளியே
நிற்பது தெரிந்தது.
இருளில்
மரக்கதவின்
பின்னே
நிற்கும் உருவம்
கண்ணில் தெரியுமா என்ன?

       
 வெளியே நின்று
கதவைத் திறந்து
உள்ளே போக முடியவில்லை
என்று சொன்ன
பொன்னுமணிக்காகக்
கதவைத் திறந்து கொடுத்தபோது
உள்ளேயிருந்து வந்த பொன்னுமணியும்
அதையே சொன்னதுதான் ஆச்சர்யம்.
எங்கள் வீட்டில்
ஒரே ஒரு
பொன்னுமணிதான்.


குழாய் திறந்ததும்
நீர் கொட்டும் வேகம் பார்த்து
அதிர்ச்சியாக இருக்கிறது.
நான் இன்னும்
மேல் நிலைத் தொட்டி
கட்டவும் இல்லை,
இணைப்பும் தரவில்லை  



'கீழே' இருந்து
இறந்த என் அம்மா
கூப்பிடும் குரல் கேட்டு
தூக்கத்திலிருந்து
எழுந்து இறங்க
முற்படுகையில்தான்
நினைவுக்கு வருகிறது
என் வீட்டுக்கு மாடியே இல்லை!



 ஒற்றை அறை
கொண்ட என் வீட்டில்
எத்தனை கதவுகளைத்
திறந்தாலும்
வரமாட்டேன் என்கிறது
என் அறை மட்டும்.



முழுவதும்
மூடி விடாதீர்கள்
கொஞ்சமாவது
காற்று வேண்டும்
எனக்கு...

 
தினம் தினம்
எழுந்து வருவதே
சிரமமாயிருக்கிறது.
யாரோ
என் கல்லறையை
மறுபடி மறுபடி
மூடி விடுகிறார்கள்.

23 கருத்துகள்:

  1. உட்கார வேற இடமா கிடைக்கலை ,கல்லறையின் மேல் உட்கார்ந்து இருக்கீங்களேன்னு கேட்டவன் அரண்டுபோனான் .உள்ளே புழுக்கமா இருக்கேங்கிற பதிலைக் கேட்டு !

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    பதிவையும் படத்தையும் பார்த்தவுடன் எனக்கும் திகிலாக இருந்தது.....
    திகிலை வரவைக்க சொல்லிச் சென்ற விதம் நன்று

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. கையில் மெழுகுவர்த்தியுடன் கிச்சன் செல்ல, காஸ் அடுப்பு எரிந்து கொண்டிருக்க, சிலிண்டர் மூடியிருக்க, மூடியிருந்த கிச்சன் பைப்பில் தண்ணீர் கொட்ட, வாசல் கதவு தட்டப்பட்டது, கரண்ட்ட் இல்லாத காட்டு பங்களாவில் ஒற்றை ஆளாய் நான். ஏதோ எங்கள் முயற்சி!

    நீங்கள் மிகவும் அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்!

    பதிலளிநீக்கு
  4. ரஸித்தேன்.

    .............

    விழித்துக்கொண்டு இருப்பது போலக் கனவு கண்டேன்.

    கண் விழித்துப்பார்த்தபோது நான் தூங்கிக்கொண்டு இருந்தேன்.

    .............

    பதிலளிநீக்கு
  5. இரண்டாவதும் கடைசியும் திகிலாத்தான் இருந்தது. First-first படிக்கறச்சே தான்.

    ஒன்று பார்த்தீர்களா?.. இந்த திகில் சமாசாரமென்ல்லாம் முதல் முதலா படிக்கற போது தான். அடுத்த தடவை படிக்கும் பொழுது கொஞ்சம் குறைந்து. அதற்கு அடுத்த தடவை சுத்தமாய் திகிலே இல்லாமல். அதற்கடுத்த தடவை படத்திற்கான வார்த்தைகளை ரசித்தபடி லேசான சிரிப்புடன்.

    திகில் படத்திற்கு சிரிப்பா?.. ஆச்சரியமா இல்லை?.. உண்மை தான். நீங்கள் வேணா டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  6. வெட்டவெளியில் என் முதுகில் தட்டியது யாராக இருக்குமென்று திரும்பிப் பார்த்தால்.... யாருமே இல்லை.

    உங்களின் கற்பனைகள் சூப்பர்....!

    பதிலளிநீக்கு
  7. திகிலூட்டும் கற்பனை! :)

    ஆனாலும் முதல் முறை படிக்கும் போது மட்டும்!

    பதிலளிநீக்கு
  8. "உங்கள் ப்ளாக்" எனக்கு அப்டேட்டே ஆகறதில்லை. இத்தனை திகிலையும் படிச்சுட்டு நேத்தே தூங்கப் போயிருப்பேன் இல்ல? இப்போக் காலங்கார்த்தாலே படிச்சு திகிலே வரலை! :)

    பதிலளிநீக்கு
  9. ஆனா ஒண்ணு, உங்க பக்கத்தைத் திறக்கிறச்சே கொஞ்ச நேரத்துக்குத் "திகில் வரிகள்" என்ற தலைப்பு மட்டுமே வந்தது. மத்தது எதுவுமே வரலை.

    நிஜம்மாவே திகிலாப் போச்சு, மடிக்கணினிக்கு மந்திரிக்கணுமோனு நினைச்சேன். :)))))

    பதிலளிநீக்கு
  10. அருமை நண்பரே
    முழுவதும் மூடிவிடாதீர்கள்
    காற்று வரட்டும்
    ரசித்தேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  11. //குழாய் திறந்ததும்
    நீர் கொட்டும் வேகம் பார்த்து
    அதிர்ச்சியாக இருக்கிறது.
    நான் இன்னும்
    மேல் நிலைத் தொட்டி
    கட்டவும் இல்லை,
    இணைப்பும் தரவில்லை //

    suddenly there is urine smell everywhere.

    subbu thatha.

    பதிலளிநீக்கு
  12. ரொம்ம்ப்ப "அடக்கமான"
    புழுக்கம் நிரம்பிய பகிர்வுகள்.. !

    பதிலளிநீக்கு
  13. இன்று தங்கள் பதிவை நன்றியுடன் வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன

    நன்றி.

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  14. தூக்கதிலிருந்த எழுப்பிய மனைவி, "என்னங்க, யாரோ கொறட்டை விடுற சத்தம் கேக்குது" என்றாள். இருட்டில் மெதுவா எழுந்து லைட்டை போட்டு பார்த்தால் மனைவி நல்ல குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.

    பதிலளிநீக்கு
  15. முகநூலில் ஷான் என்பவர் இது போன்ற ஒரு தொடரை எழுதினார்.. இல்லை மொழிபெயர்த்தார் என்று நினைக்கிறன்.. அந்த சுட்டி கிடைத்தால் இங்கு பகிர்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. திகிலூட்டும் வரிகள்தான்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  17. // இரண்டு வரிகளில் திகிலை உருவாக்க வேண்டுமாம்! //

    Line 1: த் + இ
    Line 2: க் + இ + ல்

    # Gramatically !

    பதிலளிநீக்கு
  18. அனைத்தும் அருமை...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  19. ஆ.அந்தத் திகில் நிலைக்குப் போனால் மட்டுமே மனதின் படபடப்பு கேட்கும்.நல்ல தி திக் வரிகள்.

    பதிலளிநீக்கு
  20. திகில் வரிகள்தான் நீங்கள் அளித்த பகிர்வு.

    மரக்கதவில் ஒரு கண் விழித்து விழித்து பார்க்கிறதே!
    யார் யார் நீ?




    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!