எலி ஒரு தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலி ஒரு தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.9.16

எலியும் நானும்... நானும் எலியும்..


      Image result for rat images   ஃபேஸ்புக்கில் சின்னப் பதிவாகப் போடவேண்டிய விஷயத்தை வலைப்பதிவில் பதிவாகப் போடவேண்டி விஷய தானம் செய்த எலியார் வாழ்க!





    
Image result for rat images    எனக்கும் எலிக்கும் உறவுகள் விடுவதில்லை என்று நினைக்கிறேன்.  போதிய இடைவெளியில் அவ்வப்போது வீட்டுக்குள் நுழைந்து மிரட்டி விடுகிறார்.  அவர் என் கண்ணில் பட்டதுமே என் மனக்கண்ணில் கம்பியூட்டர், ஃப்ரிஜ், ஏஸி, தொலைக்காட்சிப்பெட்டி  ஆகியவற்றின் ஒயர்கள் மனக்கண்ணில் வந்து ஆடத் தொடங்கி விடும்.





    
Image result for rat images   முதல் எலிப்பதிவில் கொஞ்சமான சஸ்பென்ஸும், இரண்டாவது ஒரு எலியின் சபதத்தில் சற்று அதிகமான சஸ்பென்ஸும் வைத்துப் பதிவிட்டிருந்தேன்.  எலிப்பதிவுக்கு எப்பவுமே வரவேற்புதான்.  ஏனென்றால், அவரால் பாதிக்கப் படாதவர் யார்!





   
Image result for rat images முந்தைய பதிவிலேயே ஹுஸைனம்மா ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள்.  "ஆமா, உங்க வீட்டில இத்தனை எலிகளா? இல்லை எலிவளையில் நீங்க ஷேரிங்கா? ;-)))))))"





    
Image result for rat images    யானையின் பாதையில் மனிதன் ஆக்ரமித்து அதன் பாதையை வழிமறிக்கிறானாம்.  தன் பாதை என்று வருடா வருடம் வலசையில் வழி மாறாமல் வரும் யானை அங்கு மனிதனைக் கண்டு மிரள்கிறதாம்.  அதே போல எலியின் பாதையில் நான்தான் குறுக்கிட்டிருக்கிறேனோ என்னவோ!


 


     Image result for rat images   என்னுடைய சிறு வயதிலேயே எலியுடனான அனுபவங்கள் ஆரம்பிக்கின்றன!  அப்போதெல்லாம் என் அப்பா பாஹேதான் எலி பிடிக்கும் கடமையைச் செய்து வந்தார்.  குடும்பத்த தலைவரின் பொறுப்புதானே அது!




     Image result for rat images    முதல் கொஞ்ச நாட்கள் ஒரு கொடூரமான பொறி ஒன்றில் எலியைப் பிடித்துக் கொண்டிருந்தோம்.  'ட' போன்ற ஒரு பலகையில் படுக்கை வசத்தில் இறுக்கமாக இருக்கும் கெட்டியான கம்பியை எடுத்து, நிமிர்ந்திருக்கும் பக்கம் இருக்கும்  கொக்கியில் மாட்ட வேண்டும்.  அந்தக் கம்பி அந்த ட வடிவத்தின் பின்பக்கமாகச் செல்லும்.  அதனுடன் இணைந்திருக்கும் சிறு கொக்கி ஓட்டை வழியே முன்னால் உள்ளே வந்து நடுவில் உள்ள இடத்தில் இருக்கும் சிறு பள்ளத்தில் முடிந்திருக்கும்.  அதில் வடையை வைப்போம்.  அதைச் சாப்பிட வரும் எலி வடையைக் கடித்ததும், கொக்கி நகர்ந்து, கம்பியை விடுவிக்கும். அப்போது "டமார்" என்றுஒரு பயங்கர சத்தத்துடன்  அடிக்கும் கம்பியில் அந்த எலி மாட்டி சிதிலமாகி ஸ்பாட்டிலேயே பரலோகம் போகும்!  

     Image result for rat images   இந்தக் கொடூர மரணத்தைப் பார்க்கப் பொறுக்காமலும், அப்புறம் அந்தப் பொறியைச் சுத்தம் செய்யும் கஷ்டத்துக்காகவும் முறையை மாற்றி, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தோம்!


     Image result for rat images   நீள் சதுர டப்பா போன்ற இந்தப் பொறியில், எலி உள்ளே நுழைந்து கம்பியில் மாட்டியிருக்கும் உணவைத் தொட்டதும் கம்பி நழுவி, 'டப்' பென்று கதவு மூடிக்கொள்ளும் வகையில்  வைத்துப் பிடித்த எலியை வீட்டிலிருந்து சற்றுத் தள்ளிச் சென்று, பொறியின் மூடியை சற்றே கஷ்டப்பட்டுத் திறந்து விடுவார்.  விடுதலை பெற்ற எலி துள்ளிக் குதித்து எதிர்த் திசையில் ஓடியதும் உண்டு.  எக்குத்த தப்பாக ஷேன் வார்னே சுழற்பந்து போலத் திரும்பி அப்பாவின் காலடி பக்கமே குதித்து ஒடத் தொடங்கியதும் உண்டு.  


     Image result for rat images   முதல்முறை இப்படி நடந்தபோது பாஹே வேஷ்டி நழுவ, அலறி, துள்ளிக் குதித்து டான்ஸ் ஆடி நின்றதை பார்த்துச் சிரித்த எங்களையும் மிரள வைத்து அந்த எலி எங்களுக்கும் முன்னாலேயே வேகமாக ஓடி எங்கள் வீட்டுக்குள்ளேயே மறுபடியும் நுழைந்து மறைந்தது!  உள்ளயிருந்து வெளியில் வந்த அப்பாவின் அம்மா, அதாவது எங்கள் பாட்டி  "டேய் பாலு..  இங்கக் கூட ஒரு எலி இருக்குடா.. இதையும் பிடித்து வெளில போடு" என்று அப்பாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாள்.



     Image result for rat images    உழைப்பு வீணாய்ப் போன கடுப்பிலும், தெருவில் வேஷ்டி நழுவிய வெறுப்பிலும் இருந்த அப்பா பொறியை 'ணங்' கென்று ஸ்டூலின்மேல் வைத்துக் கோபத்தைக் காட்டிக் குளிக்கப் போனார்.



     Image result for rat images   அடுத்தடுத்த தடவைகளில் வெவ்வேறு முறைகளை முயற்சித்தார்.  யாரோ சொன்னார்கள் என்று  ஒரு சாக்கை எங்கிருந்தோ எடுத்து வந்து, அதைத் திறந்து, அதில் எலியை விடுவிக்க முயற்சித்தார்.  எலி அதற்குள் விழுந்ததும், அதை மூட்டையாகக் கட்டி சுவரிலோ, தரையிலோ மோதிச் சாகடிக்க வேண்டுமாம்.



     Image result for rat images    சாக்கைப் பிடிப்பது என்னுடைய வேலையாகத் தரப்பட,  அப்பா பிடிபட்ட அந்த எலியை ஏதேதோ முயற்சித்து சரியாக சாக்கினுள் விடுவித்ததும், நான் சாக்கின் வாயை மூட வேண்டும்.  ஆனால் பீதியில் நான் சாக்கை நழுவ விட, எலி 'ஆனந்தச் சுதந்திரம் அடைந்து விட்டோமே' என்று பாடாத குறையாக உள்ளே ஓடியது.  அப்பாவின் கையில் நான் என்ன ஆகியிருப்பேன் என்று சொல்லத்  தேவை இல்லை!


 


     Image result for rat images   அடுத்த முறையில் வாளியில் வெந்நீர் வைத்து, அதில் திறந்து விடச் சொன்னார்கள் என்று முயற்சித்தார்.  வாளியில் குதித்துப் பதமாக வெந்த எலியைத் தூக்கிப் போட்டபின், அந்த வாளியை வேறு யாரும் உபயோகிக்க மறுக்க, அந்த தடவையோடு அந்த முயற்சியும் நின்று போனது.  எவ்வளவு வாளி வாங்குவது!


                                                  

                                                                                                                                          - தொடரும் -



[ பதிவு நீண்டு விட்ட காரணத்தினால் இதன் இறுதி பாகம் நாளை "வெள்ளிக்கிழமை வீடியோ" வுடன் சேர்ந்து வெளியாகும்] 




படங்கள்  : நன்றியுடன் இணையத்திலிருந்து...