பாதி கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதி கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.9.16

பலாத்காரம்... ஸாரி கொஞ்சம் ஓவர்.


 
"வேண்டாம்..  விட்டுடுங்க... எனக்கு இதெல்லாம் பிடிக்காது.."  கெஞ்சினேன்.

இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.  

ஏழு மணிக்கே வேலை முடிந்து கிளம்பியிருக்க வேண்டும். ஒரே ஒரு வேலை, ஒரே ஒரு வேலை என்று சொல்லியே இந்த மூவரும் என்னைக் கிளம்ப விடாமல் லேட் செய்து கொண்டே இருந்தார்கள்.  'அதை எடுத்து வா, இதை எடுத்து வா' என்று அலைய விட்டுக் கொண்டே இருந்தார்கள்.

ஒன்பது  மணிக்கு மேல் அவர்கள் அருகே சென்ற போதே மதுவின் வாடை தெரிந்தது.  


வெறுப்பாக இருந்தது.  கிளம்பி விடலாம் என்று வெளியில் வந்தால் மறுபடி அழைத்து மாற்றி மாற்றி ஏதாவது ஒரு வேலை சொல்லி என்று ஒரே ரோதனை.


கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வேலை விஷயமாக என்பதிலிருந்து திசை மாறத் தொடங்கியபோதே என்னுள் அபாய மணி ஒலித்தது.

"இந்தா... அறிவே இல்லையா?  நாம மூணு பேர் மட்டுமே குடிக்கிறோமே...  வித்யாவுக்கும் தர வேண்டாமா?"

"ஓ... எஸ்..  இந்தா வித்யா..  தயங்காம நீயும் ஒரு பெக் எடுத்துக்கோ"

"வேண்டாம்..  எனக்குப் பழக்கமில்லை.  நான் கிளம்பறேன்" 

"பழகிட்டா எல்லாம் தானா பழகிடலாம்..வா.. இதுக்கே முடியாதுன்னா எப்படி?  இன்னும் எவ்வளவோ இருக்கே..."

"கையை விடுங்க..  எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. நான் கிளம்பறேன்"

"பிடிக்காதா?  ஹா...ஹா....ஹா...  இதெல்லாம் பிடிக்காமக் கூட இருக்குமா?  வா இங்கே.."

என் மேல் விழுந்த கைகளை வெறுப்புடன் தட்டி விட்டேன். எளிதாகத் தப்பி விடலாம் என்று போட்ட கணக்கு தப்பாயிருந்தது.

அவர்கள் மூன்று பேர்.   நான் ஒரே ஆள்.  

திட்டம் போட்டேதான் தாமதப் படுத்தி இருக்கிறார்கள் போலும்.. வெளியில் தண்ணி அடிப்பார்கள் என்று தெரியும்.  அலுவலகத்திலேயே ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.  மது உள்ளே போனால் அதுவரை நல்லவர்களாய் இருப்பவர்கள் கூட என்ன செய்கிறோம் என்று அறியாமல் மாறி விடுகிறார்கள்.  அல்லது அப்படி நினைத்துக் கொள்ளட்டும் என்று அவர்கள் சுயரூபம் வெளிவருகிறதோ என்னவோ! 


இப்போது தப்பிக்க வேண்டும்.  

என்னுடைய கைகளை இறுகப் பற்றினார்கள்.  அவர்கள் கைகளைத் தட்டி விட்டு விட்டு மூவரையும் ஒரே தள்ளாகத் தள்ளி விட்டு வெளியே ஓடி வந்தேன்..

வெளியே வந்து மெயின் கேட்டுக்கு வரும்வரை படபடப்பு ஓயவில்லை.  செக்யூரிட்டி என்னைப் பார்த்ததுமே புன்னகைத்தான்..

"என்ன வித்யாபதி ஸார்?  பதட்டமா இருக்கீங்க?  உடம்பு சரியில்லையா?"

ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து விட்டு வெளியில் சென்றேன்.  என்ன சொல்ல முடியும்?  


 'மது அருந்தும் பழக்கத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற பதட்டம்' என்றால் சிரிப்பார்கள்!  நீண்ட நாட்களாக என்னையும் அவர்கள் குழுவில் சேர்த்து விடத் துடிக்கிறார்கள்.  இன்று தப்பித்து விட்டேன்.  இனியும் தப்பிக்க வேண்டும்.  கடவுளே.. மனா உறுதியைத் தா!  மனம் வேண்டிக் கொண்டது!