முன் காலத்தில், ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வந்தவுடன், நானும் என்னுடைய அண்ணனும் முதலில் படிப்பது, அதில் சிறுவர் கதைப் பகுதியில் வருகின்ற 'காட்டிலே தீபாவளி' அல்லது 'கரடியார் வெடித்த கேப்பு' அல்லது 'கபீஷ் கொளுத்திய கம்பி மத்தாப்பூ' போன்ற கதைகளைத்தான்! (எழுதியவர் வாண்டு மாமா? ராஜி?) இங்கே அசோக் லேலண்டு தீபாவளி! - கதையல்ல நிஜம்!
ஆயுத பூஜை போல - தீபாவளி நாட்களும் அசோக் லேலண்டில் இனிமையானவை, இனிப்பானவை. எழுபதுகளில், கம்பெனி சார்பில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் இலவசமாக கிடைக்கும். மேலும் குறைக்கப் பட்ட விலையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் - வேண்டும் என்று எழுதித் தருபவர்களுக்கு, சம்பளத்தில் இருபது ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு, தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக ஸ்வீட் பாக்ஸ் கொடுப்பார்கள்.
எனது ஆபீசில், அனந்தநாராயணன் என்று பெயர் கொண்ட (காது கேளாதவர், பேச இயலாதவர்) நண்பர் ஒருவர் எங்களுடன் பணிபுரிந்து வந்தார். (இவருக்காகவே நான், காது கேளாதோரின் சைகை மொழியை, வேறு ஒரு நண்பரிடமிருந்து கற்றுக் கொண்டேன்) இவர், தனக்கு வருகின்ற குறைந்த விலை ஸ்வீட் பாக்ஸ் கூப்பனை / விண்ணப்பத்தை எங்கள் அலுவலகத்தில் இருந்த தலைமை வரைவாளர் ஒருவருக்காக விட்டுக் கொடுப்பது உண்டு. தலைமை வரைவாளர், அதற்குரிய தொகையை சம்பளம் வந்தவுடன் அனந்தநாராயணனுக்குக் கொடுத்துவிடுவார். குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கின்ற தரமான ஸ்வீட் என்பதால், அதற்கு அவ்வளவு டிமாண்ட்!
தீபாவளி மாதத்தில், பெஸ்டிவல் அட்வான்ஸ் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டு, பிறகு பத்து மாதங்களில் அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும்.
பெஸ்டிவல் அட்வான்ஸ் கையில் கிடைத்தவுடனேயே பெரும்பாலான டிபார்ட்மெண்ட்களில் இருக்கின்ற நண்பர்கள் செய்யும் ஒரு வேலை (நாங்களும் செய்ததுதான்!) என்ன தெரியுமா? ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு, தீபாவளி வெடி நிதி (Diwali Crackers Fund) ஒன்றை ஆரம்பிப்பார்கள். இருபது நபர்கள் ஒரு நிதி அமைப்பில் இருந்தார்கள் என்றால், இரண்டாயிரம் ரூபாய் மொத்த வசூல்.இந்த நிதி அமைப்பின் உறுப்பினர்களுக்கு, இந்தத் தொகையிலிருந்து அவசரத் தேவைகளுக்கு கடன் அளிக்கப்படும்.
நூறு ரூபாய் கடன் பெறுபவர்கள், மாதம் ஒன்றுக்கு, ஐந்து ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். (ஆரம்பத்தில் மாதத்திற்கு மூன்று ரூபாய் வட்டி என்று வைத்திருந்தோம். பிறகு நான்கு ரூபாய் ஆகி, பல வருடங்களுக்கு ஐந்து ரூபாய் வட்டியாகவே இருந்தது என்று ஞாபகம்) நூறு ரூபாய் கடன் கேட்பவர்களுக்கு, தொண்ணூற்றைந்து ரூபாய்தான் கடன் கொடுப்போம். அவர் மறுநாள் தொடங்கி, ஒரு மாதத்திற்குள் எப்பொழுது கடன் திருப்பிக் கொடுத்தாலும் நூறு ரூபாயாகக் கொடுக்கவேண்டும்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் - இருபது உறுப்பினர்களில், மூன்று அல்லது நான்கு நபர்கள் மொத்தத் தொகையையும் கடனாக வாங்கிவிடுவார்கள். மாதா மாதம் வட்டித் தொகை செலுத்திக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் குறைந்தது நான்கு தீபாவளி வெடி நிதிக் குழுவாவது இருக்கும்.
ஒரு முறை, நான், என்னுடன் இரயிலில் வந்த குரோம்பேட்டை நண்பர் ஒருவரிடம் கேட்டேன், 'நூறு ரூபாய்க்கு, ஒரு மாதத்திற்கு ஐந்து ரூபாய் வட்டி என்பது அதிகம் இல்லையா?' என்று. அவர் சொன்னார், "நாளை திங்கட்கிழமை, நமக்கு லீவுதானே, காலை நாலரை மணி சுமாருக்கு, ஸ்டேஷன் ஓவர் பிரிட்ஜ் மேலே வந்து கொஞ்சம் நின்று பாருங்கள்."
சென்று பார்த்தேன். அவரும், அவருடைய நண்பர் ஒருவரும், அங்கு நின்றிருந்தனர். அவருடைய நண்பரிடமிருந்து, பத்துப் பதினைந்து பேர் பணம் வாங்கிச் சென்றனர். என்ன விஷயம் என்று பிறகு அவர்கள் சொன்னார்கள். வந்து பணம் வாங்கிச் சென்றவர்கள் எல்லோரும் நடைபாதை காய்கறி வியாபாரிகள். ஒவ்வொருவரும் தொண்ணூற்றைந்து ரூபாய்கள் பெற்றுக் கொண்டு, ரயிலிலோ பஸ்சிலோ கொத்தவால் சாவடி (அப்போ கோயம்பேடு மார்க்கட் கிடையாது) சென்று காய்கறி வாங்கி வருபவர்கள். காய்கறி வாங்கிக் கொண்டு வந்து,கடை வைத்து, விற்பனை செய்து, வீடு திரும்பும்போது, தொண்ணூற்றைந்து ரூபாய் கொடுத்தவருக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை தங்கள் குடும்பச் செலவுக்காகக் கொண்டு செல்வார்கள்.
காலைக் கடன் கொடுத்து, மாலை வரவு வைக்கின்ற இவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தில் அது குறைந்த பட்சம் முப்பத்தாறாயிரத்து நானூறு ரூபாய் ஆகிவிடுமே!
அடுத்த தீபாவளி முன்பணம் பெறும் காலம் வரும்பொழுது, ஒவ்வொரு உறுப்பினர் கணக்கிலும், குறைந்தபட்சம் நூற்று அறுபது ரூபாய் இருக்கும். சிவகாசியிலிருந்து ஒரு லாரி லோடு வெடி வாணம் வாங்குகின்ற ஏஜெண்ட் - சென்னை ஒன்று பகுதியைச் சேர்ந்தவர் (பலர் இருப்பார்கள்), கம்பெனிகளில் இந்த மாதிரி தீபாவளி நிதி நடத்துபவர்களிடம், வெடிகள் வாணங்கள் பட்டியல் கொடுத்து, பட்டியல் நிரப்புகின்ற உறுப்பினர்களின் தேவைகளை ஒன்று சேர்த்து, வரவழைத்துக் கொடுத்துவிடுவார். ஒவ்வொரு நிதிக் குழுவும், உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வீட்டில் வெடிகளைக் கொண்டு வந்து, பட்டியல் பார்த்து, பிரித்து, கட்டி, மேலே உறுப்பினர் பெயரை எழுதி வைத்துவிடுவார்கள். அந்தந்த குழு உறுப்பினர்கள், அவரவர்களின் வெடி பாக்கிங்கை அங்கிருந்து பெற்றுச் செல்வார்கள்.
தீபாவளி முடிந்த மறுநாள், அலுவலகத்திற்கு வருகின்ற, (தீபாவளி கொண்டாடிய) எல்லோருமே அவரவர்களின் புது உடையணிந்து வருவார்கள். குடும்பஸ்தர்கள், தங்கள் இல்லங்களில் செய்த இனிப்பு, கார வகைகளை தாராளமாக எடுத்து வந்து, தங்கள் பகுதிகளில் பணிபுரிகின்ற தீபாவளி கொண்டாடாத மற்ற மதத்துத் தோழர்களுக்கும், குடும்பம் இல்லாத பேச்சிலர் மக்களுக்கும் கொடுப்பது உண்டு. ("வீட்டுல செஞ்ச பட்சணம்! - சாப்பிடுங்க!")







