Dream or reality? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dream or reality? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.4.10

இது கதையா? இறுதிப் பகுதி.


முன்னர் எழுதப்பட்ட மூன்று பகுதிகளையும் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் (அல்லது படித்திருக்க மாட்டார்கள்) என்று நினைக்கிறேன்.

இதோ முன் கதைச் சுருக்கம்.

1) கனவும் விழிப்பும் ... பகுதி ஒன்று. பெப்ரவரி பதின்மூன்று 
பதிவு.

"நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்." விழித்துக் கொண்டேன். வியப்புடன் யோசித்தேன்.


2) பகுதி இரண்டு : பெப்ரவரி பதினேழு பதிவு.
ஒன்று : கார் துடைப்பவர்.
இரண்டு : ஈ
மூன்று : ஜாகிங் செல்லும் பெண்ணுருவம்.
நான்கு : ?

3) பகுதி மூன்று : (பெப்ரவரி இருபத்தைந்தாம் தேதி பதிவு) 
நான்காவதாகக் கண்ணில் பட்டவர், எதிர்ப் பக்கம் கட்டப்படும் வீட்டின் வாட்ச்மேன் - ஆமாம், இவருக்கு என்ன குறை? இவர் ஏன் கடவுளாக இருக்க முடியாது?

இனி இறுதிப் பகுதி.
பெப்ரவரி இருபத்தைந்தாம் தேதி தொடங்கி மார்ச் இருபத்தேழாம் தேதி வரை கடவுள் என் கண்ணுக்கோ கனவுக்கோ வரவில்லை. அல்லது கனவில் வந்தவர்கள் யாரும் கடவுள் இல்லை. 

மார்ச் இருபத்தேழு அன்று இரவு பூமி மணிக்காக தேவை இல்லாத விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டுக்கு வந்திருந்த சகோதரன் மகன், மற்றும் வீட்டில் உள்ள மற்ற இருவர் என்று சேர்ந்து ஒரு மணி நேரம் ஐம்பத்தாறு (சீட்டாட்டம் - வாசகர்களில் யாராவது இதை ஆடியிருக்கிறீர்களோ? கேரளத்துப் பக்கம் உதயமான சுவாரஸ்யமான ஆட்டம்) ஆடி,பிறகு தூங்கப் போனேன், தூங்கிப் போனேன்.

கனவில் முதலில் கங்குலி வந்து, அமபயரிடம் போய், "ஃபார்ட்டி கிளப்ஸ்" - என்றார். அம்பயர் உடனே வலது கையை உயர்த்தி, அவரை அவுட் என்றார். கங்குலி அழுதுகொண்டே பெவிலியன் பக்கம் போனார். 

என்ன ஆச்சரியம்! அம்பயர் உடனே கடவுள் உருவமாக மாறினார். அட முதல் பதிவில் நான் பார்த்த அதே கடவுள்! சுற்றிலும் இருந்த மக்கள் கூட்டம் எங்கே மாயமாய் மறைந்ததனர்? நானும் கடவுளும் மட்டும்தான் அங்கே. கடவுள் என்னைப் பார்த்து, "நான் யாரென்று தெரிந்துகொண்டாயா?" என்று கேட்டார்.

"உம். கண்டுகிட்டேன்.  ஆனா எனக்குப் பிடிக்கலை" என்றேன்.
"என்ன? பிடிக்கலையா? ஏன்?"
"பின்ன என்ன? எல்லோருக்கும் எக்சாம்பிளா இருக்கவேண்டிய நீங்க இப்படி பீடி புகைத்து சுற்றுச் சூழலை பாதகம் செய்வது சரியா?"
"பீடி புகைப்பதா? நானா? உனக்கு என்ன பைத்தியமா? பார்க்கப் போனால் என்னால்தான் சுற்றுச் சூழல் சுத்தமாகிறது, மழை பெய்கிறது."
"கடவுளே - நான் அன்றைக்கு உன்னைப் பார்த்து ஹலோ சொன்னேன், சிரித்தேன், நீ ஒன்றும் மறுமொழி கூறாமல், என்னை முறைத்துப் பார்த்தாயே! அது ஏன்?"
"என்ன? ஹலோ சொன்னாயா? சிரித்தாயா? என்னைப் பார்த்தா? சரிதான். சாதாரணப் பைத்தியம் இல்லை; முற்றிப் போயிடுச்சு!"
"கடவுளே! இந்தக் காமெடி எல்லாம் என்னிடம் வேண்டாம். அன்று நான் பார்த்த நான்காவது உயிரினம் நீங்க தானே?"
"ஆமாம்."
"அந்த வாட்ச்மேன் தானே நீங்க?"
"இல்லை."
"கடவுளே - ஏன் இந்த விளையாட்டு?"
"சரி. அன்று நீ பார்த்த உறவினர் அல்லாத நான்கு உயிரினங்களையும் வரிசையாகச் சொல்லு."
"ஒன்று : கார் துடைக்கும் பணியாளர்."
"சரி"
"இரண்டு: ஈ "
(சிரித்தவண்ணம்) "சரி"
"மூன்று: ஜாகிங் சென்ற பெண்."
"அதுவும் சரி."
"நான்கு: வாட்ச் மேன்."
"அதுதான் சரி இல்லை. நீ வாட்ச் மேனைப் பார்க்கும்பொழுது என்ன செய்து கொண்டிருந்தாய்?"
                                                       

"வீட்டுக்கு வெளியே இருக்கும் மரத்திற்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தேன்."
"அந்த மரம் அங்கே எவ்வளவு நாட்களாக இருக்கிறது? "
"அது? அது .. வந்து .. வீடு காட்ட ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே ....இன்னும் பார்க்கப் போனால் .... நான் பூமி பூஜை பண்ணும் பொழுதே பார்த்த ஞாபகம்."
"ஆமாம் - அந்த நாளிலிருந்தே நானும் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!"
"அப்படீன்னா - கடவுளே நீங்க அந்த மரத்தின் உருவாக இருக்கிறீர்களா?"
"ஆமாம்டா மரமண்டை! எங்கே போகிறாய்?"
"கடவுளே - நீ அங்கே மரமாக இருக்கிறாய் என்றால், இப்பவே போயி... "
"போயி?"
"மரத்துக்கு பொட்டிட்டு, பூ வைத்து, ...."
"உண்டியல்  கட்டி, ஊதுபத்தி சொருகி, வருபவர் போபவர் எல்லோரிடமும், வசூல் பண்ணி - என்னைப் பிச்சைக்காரர் ரேஞ்சுக்குக் கொண்டுபோகப் போகிறாயா?"
"ஆ .... மா ...ம்....?"  
"வேண்டாம். நான் அந்த மரத்திலும்  இருக்கிறேன், மற்றும் உள்ள எல்லா உயிரினங்களிலும் இருக்கிறேன். உனக்காக, உன் வீட்டில் உள்ளவர்களுக்காக அந்த மரத்தில் தற்பொழுது ஓர் அங்கமாக இருக்கிறேன். அந்த மரம் பட்டுப் போனால், அல்லது வெட்டப்பட்டால், வேறொரு உயிரினம் என்று மாறிக்கொள்வேன்.   எனவே, அந்த மரத்தில் மட்டும்தான் நான் இருக்கிறேன். வேறு எங்கும் இல்லை அல்லது இருக்கமாட்டேன் என்று நினைக்காதே. போ...போய் வேலையைப் பார் (டா மரமண்டை!)"
                                    
விழித்தெழுந்தேன்.
முதல் வேலையாக மரத்திற்கு ஊற்றவேண்டிய வாளித் தண்ணீரை நிரப்பிக் கொண்டு - மரத்திற்கு அதை ஊற்றிக்கொண்டே கேட்டேன், "கடவுளே நான் கண்டது கனவா, கற்பனையா அல்லது உண்மையா?"


மரத்தின் கிளையில் இருந்த பல்லி ஒன்று, 'கிக்.. கிக்.. கிக்.. ' என்று சப்தமிட்டது. 


அழகு என்பது பார்ப்பவர் மனதில்தான் இருக்கிறது (Beauty lies in the eyes of the beholder) என்பார்கள். அழகு மட்டும் அல்ல, கடவுளும் கூட அப்படித்தானோ?