பேங்கில் நின்று கொண்டிருந்த போது பக்கத்திலிருந்த ஒருவர் தன் கைப்பை ஜிப்பை 'சர்ர்' எனத் திறந்தார். அடுத்த நொடி என் நாசியில் போண்டா, வடை மணம், சட்னி மணம் என்று கலவையாய் உணர்ந்தது. அது அவர் பையிலிருந்து அல்ல, என் நினைவடுக்குகளிலிருந்து பற்பல வருடங்களுக்கு முன்னால் நுகர்ந்த வாசனையை இப்போதும் மனம் உணர்ந்த உணர்வு அது.


என் சிறு வயதில் அப்பா ஆபீசிலிருந்து வரும் போது பஜ்ஜி போண்டா சட்னியுடன் வாங்கி வருவார். பை திறந்தவுடனேயே வாசம் வந்து விடும். பிறகு தட்டில் வைத்து அம்மாவால் பரிமாறப் படும் அந்த போண்டாவின் சுவை கூட நாக்கில் ஒரு கணம் வந்து போகும்.
எப்படி?
எங்கே, எப்போது பேக் ஜிப் திறக்கும் ஓசை கேட்டாலும் இந்த நிகழ்வு சகஜம். அதுவரை நினைவிலேயே இல்லாத அந்த சமாச்சாரம் எப்படி இந்த ஓசைக்கு நினைவுக்கு வருகிறது என்பது குறையாத ஆச்சர்யம்.

கடைகளில் விற்கும் தாமரை இலைகளைப் பார்த்தாலும் சரி, இல்லை அதை நினைத்துக் கொண்டாலும் நாக்கில் உருளை மசாலாவின் ருசி நினைவில் இனிக்கிறது. மூலையில் எங்கோ அடியின் ஆழத்தில் புதைந்திருக்கும் நினைவு நரம்பை மீட்டி ருசியை இப்போதும் நாக்கில் உணர வைப்பது எது? மசாலா, 'புஸ்' பூரியில் பொதிந்து மொடமொடப்பும் , நனைந்த பூரியுமாக அகக் கண்ணில் தெரிவது பத்து வயதுக்குட் பட்ட ஞாபகம். அப்போதெல்லாம் ஹோட்டல்களில் பூரி மசால் காய்ந்த மந்தாரை இலையில்தான் கட்டி தருவார்கள். அந்த இலை வாசனையோடு இணைந்த பூரி மசால் வாசனையும் ருசியும் இப்போதும் உணர முடிகிறது!
அதே போல இன்னொரு விஷயமும் ஆச்சர்யம். பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும்போது எதிர் வரிசையில் அல்லது தாண்டிப் போகும் பஸ்ஸை கண்கள் பார்த்திருக்கும். மனதில் பதியவில்லை என்று தோன்றும். ஆனால் மனதில் திடீரென 'ஒரு காதல் தேவதை' என்று பாடல் வரிகள் ஓடும். கொஞ்ச நேரம் கழித்துதான் இது மனதில் உறைக்கும். ஏன் என்று யோசித்துப் பார்த்தால் எதிரில் மாமல்லபுரம் பஸ் சென்றது நினைவுக்கு வரும்.
என்ன தொடர்பு?
'ஒரு காதல் தேவதை' பாடலில் இரண்டாவது சரணத்தில் 'மாமல்லன் தன்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக...காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக...' என்று வரிகள் வரும். அந்த வரிகள் நினைவுக்கு வந்தாலும் பரவாயில்லை. ஏன் பாடலின் ஆரம்ப வரிகள் சட்டென மனதில் ஓடுகிறது என்பதும் புரியாத புதிர்.
உடல்நிலை சரியில்லாது வாந்தி எடுத்துக் கொண்டிருந்த ஓர் நாளில், திரும்பத் திரும்ப, பள்ளிப் பருவத்தில் பள்ளி லீவ் விட்டு, திறந்து சாப்பிடாமல் விட்டுப் போய், கெட்டுப் போன சாப்பாட்டை, ரெண்டு நாள் கழித்துத் திறந்து 'உவ்வே'வியது நினைவுக்கு வந்து கொண்டேயிருந்து, படுத்தியது. அந்த நினைவு எங்கிருந்து, எப்படி, ஏன் வெளியில் வந்தது?
ரோடில் போகும்போது யாரோ பேசிக் கொண்டு போகும் ஏதோ ஒரு வார்த்தை திடீரென ஏதோ பழைய நினைவை, அனுபவத்தை நினைவு 'படுத்தி' விடும்! சில சமயம் அது சரியாக நினைவுக்கு வராமல் பல்லிடுக்கில் மாட்டிய உணவுத் துகளாய் உறுத்தி, நினைவுக்கு சம்பந்தப் பட்ட விஷயம் வரும் வரை ஏதோ செய்து விடும். அதுபோல சில முகங்கள், சில கண்கள், சில குரல்கள் மனதில் மோதி எதையோ எங்கோ தேடுவதை உணர்ந்திருக்கிறீர்களா...
மறதி வரமா சாபமா?
மறதி என்பது சவுகர்யம்தான். ஆனால் மறக்க விரும்புவதை மறக்க முடிவதில்லை. மறந்து விட்டதாய் நினைக்கும் சில விஷயங்கள் ஆழ்மனக் கடலிலிருந்து மிதந்து மேலே மேலே ஏதோ ஒரு சுண்டுதலில் வரும் அற்புதம் பல சமயம் ஆச்சர்யத்தைத் தரும்.
சில இனிமையான கணங்களை மறுபடி வாழ்ந்து பார்க்க முடிந்தால்...
அல்லது அந்த அனுபவத்தை மூன்றாவது மனிதன் போல மறுபடி காட்சியாகப் பார்த்தால்...
இப்போதைய சோகங்கள் கூடலாம்...
சில கணங்களாவது மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.
அபபடி ஒரு காட்சி வரும் பாடல் ஒன்று கீழே....மனைவி ஷர்மிளா தாகூரை இழந்த வயதான சஞ்சீவ் குமார் தன் இளவயது அனுபவங்கள் உள்ள இடத்துக்கு வரும்போது அங்கு தானும் தன் மனைவியும் இளமையில் சந்தோஷமாக ஆடிப் பாடியதை நினைப்பது,
இளவயது சஞ்சீவும், ஷர்மிளாவும் இவர் கண்ணெதிரேயே ஆடிப் பாடி இவரைத் தாண்டிக் கொண்டு செல்வது போல காட்சி அமைப்பு... தற்கால சஞ்சீவின் முகத்தில் இருக்கும் சோகம்...இழந்ததைப் பார்க்கும் பரவச அனுபவம்... இந்தப் பாடலும் காட்சியும் எனக்குப் பிடிக்கும்.
(இதைத் தமிழில், 'வசந்தத்தில் ஓர் நாள்' என்று கெடுத்திருந்தார்கள்....ஸாரி, எடுத்திருந்தார்கள்.)

