15.8.26

வாரம் ஒரு பாசுரம் பகுதி 33 மற்றும் நான் படிச்ச கதை

  

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 33 

பிள்ளை உறங்காவல்லி தாசரைப் போன்று சிறந்த அடியார்களை நாம் குருபரம்பரையில் காண்கிறோம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களா என்று நமக்கு வியப்பைத் தரும். ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் பிராமணர்கள் மாத்திரம்தான், அதிலும் ஐயங்கார்கள்தாம் என்ற எண்ணமே பெரும்பாலானவர்கள் மனதில் இருக்கும். அப்படி அல்ல. ஆழ்வார்களிலும் ஆச்சார்யார்களிலும் குலம் என்பது ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆச்சார்யர்கள், ஸ்ரீவைணவர்கள் என்பதுதான் அவர்களின் அடையாளம். நமக்குத் தெரியாத அப்படிப்பட்டவர்கள் இன்னும் நம்மிடையே இருக்கிறார்கள். அவ்வப்போது அத்தகையவர்களைச் சந்திக்கும்போது என் மனம் ஆச்சர்யமடையும். (எதனால்? அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் இவர்கள் இவ்வளவு பக்தியோடும், இறைவனைப் பற்றிய சிந்தனையோடும், ஆழ்வார்கள் நூல்களைக் கற்ற தெளிந்த அறிவினோடும் இருக்கிறார்களே… நாம் அப்படி இல்லையே என்று) 

அதில் ஒருவர், மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த காக்கூர் கண்ணன் இராமானுஜ தாசன் என்பவர். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். அவருடைய தந்தையார் பெயர் மாயா விநோத மாயழகு. தாயார் கன்னியம்மாள் ஆண்டாள். துணைவியார் தனபாக்யம் ராமானுஜதாஸ்யை. மகள் மகன் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. 

அவருடைய ஆச்சார்யர், ஸ்ரீவேதவியாசர் திருமாளிகை, வடக்கு உத்தரவீதி, திருவரங்கத்தில் இருக்கும் ஸ்ரீ. உ.வே. லக்ஷ்மிநரசிம்ம பட்டர் ஸ்வாமி (உ.வே என்றால் உபய வேதாந்தி என்று அர்த்தம். வடமொழியில் அமைந்த வேதசாஸ்திரங்கள், தமிழ் மொழியில் அமைந்த பிரபந்தங்கள் போன்றவை நன்கு கற்றுத் தேர்ந்தவர்) உருப்பட்டூர் ஸ்ரீ உ.வே. ராஜகோபால ஸ்வாமியிடம் நாலாயிர திவ்யப்ரபந்தங்கள் வியாக்கியா காலக்ஷேபம் ஆகியிருக்கிறது. சென்னை அயநாவரத்தில் உள்ள ஸ்வாமி குருபரநந்தா அவர்களிடம் ஸ்ரீமத் பகவத்கீதை, முண்டக உபநிஷத், ட உபநிஷத், கேனோபநிஷத், சாந்தோக்ய உபநிஷத், உத்தவகீதை முதலியவைகளை பன்னிரண்டு வருடங்கள் வியாக்கியா காலக்ஷேபம் கேட்டிருக்கிறார்.ஸ்வாமி வேளுக்குடி அவர்கள் நடத்திய ஸ்ரீ முமுக்ஷுப்படி திருமந்திர ப்ரகரண பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, அவர் வைத்த தேர்வில் 74 மதிப்பெண்கள் பெற்று, அவருடைய திருக்கையால் ‘திருமந்திரைப் பிரணவர்’ என்ற சான்றிதழைப் பெற்றிருகிறார். வைணவ மாநாட்டில் ‘வைணவ ரத்னா’ என்ற விருதைப் பெற்றிருக்கிறார். 

(வியாக்கியான காலக்ஷேபம் அல்லது கிரந்த காலக்ஷேபம் என்றால் என்ன? பிரபந்தங்களுக்கு, நூல்களுக்கு விளக்க உரையாக மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்ட நூல் உண்டு. உதாரணமாக திருவாய்மொழிக்கு முப்பத்தாறாயிரப்படி அல்லது ஈடு என்று அழைக்கப்படும் நூல் விளக்கவுரையாக அமைந்துள்ளது. கிரந்த காலக்ஷேபத்தின்போது, பிரபந்தத்தைப் படித்து, அதனுடைய விளக்க உரை நூலையும் படித்து வரிக்கு வரி அர்த்தம் சொல்லுவார்கள். திருவாய்மொழிக்கு ஈடு காலக்ஷேபம் சொல்லவேண்டும் என்றால் அதற்குப் பல வருடங்கள் ஆகும். 

முன்பு படித்தது இப்போது நினைவில் இருக்காது என்பதால் திரும்பவும் எழுதுகிறேன். நம்பிள்ளை திருவாய்மொழிக்கு பேருரை தினமும் சொல்லிக்கொண்டு வந்தபோது, இரவோடு இரவாக, அதில் கேட்டவற்றை ஏடுபடுத்தி, அது மொத்தம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஏடுகள் வந்தது என்றும், தம் அனுமதி பெறாமல் எழுதியது என்பதாலும், இவ்வளவு விளக்கமாக புத்தகம் அமையக்கூடாது என்பதாலும், அதனை நீரிட்டு கரையான் புற்றுக்கு உணவாக்கிவிட்டார் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்) 

நாலாயிர திவ்ய ப்ரபந்தம், தென்கலை நித்யாநுஸந்தானம், வடகலை நித்யாநுஸந்தானம் இவற்றை அர்த்தம் மாறாமல், சந்தம் மாறாமல் பதம்பிரித்து, எல்லோரும் எளிதாகச் சேவிக்கும்படி புத்தககங்கள் வெளியிட்டுள்ளார்.  நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு எல்லோருக்கும் புரியும்படியாக எளிமையான தமிழில் விளக்கவுரை எழுதி வாட்சப்பில் பலருக்கும் பகிர்கிறார் (நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு). வாட்ஸப் மூலமாக ஸ்ரீவைஷ்ணவ கட்டுரைகள், முமுக்ஷுப்படி, ஸ்ரீவசநபூஷணம் இவற்றில் உள்ள முக்கியமான சூத்திரங்களுக்கு எளிமையான வி்ளக்கவுரை போன்றவற்றையும் எழுதிப் பகிர்கிறார். நிறையபேரை வைணவ திவ்யதேச யாத்திரைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நிறைய அடியார்களுக்கு பஞ்சம்ஸ்காரம் செய்துகொள்ள உதவியிருக்கிறார். இத்தனையும் இவர் தினப்படி தன் தொழிலான ஆட்டோ ஓட்டிக்கொண்டு கிடைத்த நேரத்தில் செய்துவருகிறார். சவாரிக்காக காத்திருக்க நேரிட்டால் உடனே பிரபந்தத்திற்கான அர்த்தங்களை எழுத ஆரம்பித்துவிடுகிறார். 

நான் 106 வைணவ திவ்யதேசங்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் தரிசனம் செய்திருக்கிறேன், அதற்கான வாய்ப்புகள் இறைவன் அருளால் கிடைத்திருக்கிறது. பாண்டிய நாட்டு திவ்யதேசங்களைப் பல முறை தரிசித்திருந்தாலும், குருபரம்பரை போன்றவற்றைப் படித்த பிறகு, ஆச்சார்யர்களுள் ஒருவரான பிள்ளைலோகாச்சாரியாரின் திருவரசு மதுரை அருகில் கொடிக்குளம் என்ற இடத்தில் இருப்பதை அறிந்த பிறகு அதனைச் சேவிக்கச் செல்லவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. பொதுவாக நான் யாத்திரை குழுக்களோடு சென்றால் இத்தகைய இடங்களைக் காணும் சந்தர்ப்பம் வராது. நான் எப்போதும் செல்லும் (சென்ற) யாத்திரை நடத்துபவர், பாண்டிநாட்டு யாத்திரையின்போது, காலையில் திருமோகூர், கூடலழகர், திருமாலிருஞ்சோலை மற்றும் திரும்பிவரும்போது ஒத்தக்கடை நரசிம்மரைச் சேவித்துவிட்டு, மதியம் 1 மணிக்கு திருமோகூர் திரும்புவார். பிறகு மதிய உணவு, கொஞ்சம் ஓய்வு. அதன் பிறகு 4 மணிக்கு திருத்தண்கால் நோக்கிச் செல்வோம். அதன் பிறகு இரவு திருவில்லிபுத்தூர் கோயில் தரிசனங்களுக்குப் பிறகு, இரவு உணவு, அதன் பின்பு இரவில் பயணித்து அதிகாலையில் ஆழ்வார் திருநகரியை அடைவோம். 

கடந்த முறை இந்த யாத்திரையில் கலந்துகொண்டபோது, முன்னதாகவே அவரிடம், மதியம் உணவு உட்கொள்ளாவிட்டாலும், கிடைத்த நேரத்தில் பிள்ளைலோகாச்சார்யார் திருவரசுவை நாங்கள் இருவரும் சேவித்துவிட்டு வருகிறோம், அதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தேன். அவர், எங்களை கமுக்கமாகச் சென்று வரும்படியும், வேறு யாருக்கும் சொல்லவேண்டாம் என்றும் சொல்லியிருந்தார். காரணம், பலருக்கு நடப்பது கஷ்டமாக இருக்கும், சிலர் கலந்துகொண்டு பலர் கலந்துகொள்ள முடியவில்லை என்றால் வருந்துவார்கள்.  

அப்போதுதான் இவரைத் தொடர்புகொண்டேன். 1 ½ மணி நேரத்துக்குள் திருமோகூரிலிருந்து ஆட்டோவில் கூட்டிக்கொண்டுபோய் தரிசனம் செய்துவிட்டு திரும்ப திருமோகூரில் கொண்டுவந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார். அதன்படி நாங்கள் தயாராக இருந்தபோது இவர் வந்து எங்களைக் கூட்டிச்சென்று, மிக அருமையாக தரிசனம் செய்துவைத்தார். அது மட்டுமல்ல, பல தொடர்புடைய பிரபந்தங்கள், பிள்ளை லோகாச்சார்யார் இயற்றிய ஸ்ரீவசன பூஷணம் போன்றவற்றைப் பற்றியும் நிறையச் சொன்னார். எங்கு பிள்ளைலோகாச்சார்யார் பள்ளிப்படுத்தப் பட்டிருப்பார் என்பதையும் அவர் உணர்ந்தவாறே சொன்னார். மனதுக்கு மிகவும் நிறைவான பயணம் அது. மனைவிக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. எங்களைத் திரும்பவும் திருமோகூருக்கு மதியம் 3 ½ க்குள் கொண்டுவந்து விட்டுவிட்டார்.

கொடிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளைலோகாச்சார்யார் திருவரசு. அங்கு இருக்கும் மரத்தினைப் பற்றி விளக்கும் காக்கூர் கண்ணன் அவர்கள்.

காக்கூர் கண்ணன் அவர்கள். மதுரை பக்கத்தில் சேவை செய்துவரும் அவரைத் தொடர்புகொள்ள 9994395957.

நம்மிடையே எத்தனையோ கற்றறிந்தவர்கள், பக்திமான்கள் இருக்கக்கூடும். உருவத்தை, பிறப்பை, தொழிலை வைத்து யாரையும் எடைபோட இயலாது. இதை எழுதும்போதே சமீபத்தில் கர்நாடக யாத்திரையின்போது எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் எழுத விழைகிறேன். 

பேளூர் சென்னகேசவப் பெருமாள் கோயில் மிகவும் புகழ் பெற்றது. ஹொய்சாள சிற்பக்கலைகள் நிரம்பியது. யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட இடம். இங்கு நாங்கள் சென்றிருந்தபோது காலை நேரம். பெருமாளுக்கு சாற்றுமுறை நடந்துகொண்டிருந்தது. (பிரபந்தப் பாசுரம் சேவாகாலம்). நான் அதற்கான பாரம்பர்ய உடையில் இல்லை. அதனால் வெளியிலிருந்து சேவித்தேன். பிறகு அர்ச்சகர் சடாரி வைக்க வெளியில் வந்தபோது கட கடவென பட்டும் படாமலும் சிலருக்கு சடாரி வைத்தார். அருகில் இருந்த மனைவியின் தலையில் அது படவில்லை என்பதால் அவரை சடாரி வைக்குமாறு கேட்டதற்கு சட் என்று உள்ளே திரும்பிச் சென்றுவிட்டார். மற்றவர்கள் கலைந்த பிறகு அவரிடம் இன்று சிரவணம், சடாரி வைக்க முடியுமா என்று விண்ணப்பிக்க, சாற்றுமுறை முடிவில்தான் சடாரி வெளியே வரும். பிறகு எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் பிறப்பால் ஸ்ரீவைஷ்ணவர் (சென்னகேசவப் பெருமாள் அர்ச்சகர்). பெருமாள் திருமுன்பு வேதம் சொல்லிக்கொண்டிருந்த இன்னொரு ஸ்ரீவைஷ்ணவர், நான் சாற்றுமுறை சேவிப்பதைப் பார்த்து என்னிடம் பூவும் துளசியும் பிரசாதமாகத் தந்தார். 

சிருங்கேரி கோயிலை நாங்கள் அடைந்தபோது மணி மதியம் 1:50. இரண்டு மணிக்கு நடை சார்த்திவிடுவார்கள் என்பதால் அன்னை சாரதாம்பாளை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தோம். அங்கு இருந்த ஒருவர், என்னைப் பார்த்து மதியம் உணவு உட்கொள்ள வேண்டாமா? 2 ½ மணிக்கு முடிந்துவிடும். வருகிறீர்களா? போஜனாலயத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றார். அவர்தான் நான் அங்கிருந்த பழைமையான கோயிலைப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த போது, என் மனைவியிடம் அச்சடித்த பேப்பரைக் கொடுத்து அதில் ஸ்ரீராமஜெயம் முழுவதும் கொடுத்திருந்த இடத்தில் எழுதச் சொல்லியிருந்தார் (எங்களுடன் வந்திருந்த அனைவரையும் அப்படிச் செய்யச் சொன்னார்). இப்படியும் மனிதர்கள், அப்படியும் மனிதர்கள். 

பக்தியும், பிறரிடம் பரிவும், இறைவனின் அடியார்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையும்,  ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமும், பிறப்பால் வருவதில்லை, அதனை ஒழுகுவதால்தான் வரும். (Bபேளூர் சென்னகேசவா கோயிலில் நடந்தது ஜூலை 4ம் தேதி காலை) 

இப்போது இராமானுஜர் வரலாற்றைத் தொடர்வோம். 

இராமானுஜர் திருவரங்கம் கோயிலில் சீர்த்திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தார். பெருமாளுக்கு திருமேனிக் காவலாக பிள்ளையுறங்காவில்லி தாசரை நியமனம் செய்தார். இந்த வரலாற்றைச் சென்ற சில வாரங்களாகப் பார்த்தோம். வண்டர் செண்டர் இவர்களது பக்தியையும் கண்ட அகளங்கன், இராமானுஜரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டான் (பணிந்தான்). இந்த அகளங்கன், முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகன். அகளங்கச் சோழன், திருவரங்கக் கோயிலின் மேற்பார்வை அதிகாரியாக ஆனார். 

இடைப்பட்ட காலத்தில் திருவரங்கக் கோயிலில் வைகாநச முறைப்படி திருவாராதனங்கள் நடைபெற்று வந்தன. அந்த முறையை மாற்றி, பாஞ்சராத்ர ஆகமப்படி வழிபாடுகளை இராமானுஜர் மாற்றினார். இதற்குக் காரணமாக அமைந்தது ஆளவந்தார் அருளிச் செய்த ஆகமப்ரமாண்யம் என்ற கிரந்தம். 

இராமானுஜரின் வரலாற்றை அடுத்த வாரம் தொடர்வோம். 

இராமானுஜர் திருவரங்கத்திற்கே வந்துவிட்டதாலும், அவருடைய பணி இப்போது திருவரங்கம் கோயிலில் ஆரம்பித்துவிட்டதாலும், இன்றைக்கு திருவரங்கம் சம்பந்தமான பாசுரத்தை எடுத்துக்கொள்வோம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலை என்ற பிரபந்த த்தில் வரும் பாசுரம் இது. இதில் ஆழ்வார், திருவரங்கத்தின் பெருமையைச் சொல்கிறார். 

வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை,*

கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை,*

அண்டர்கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா,*

மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை* விலக்கி நாய்க்கு இடுமினீரே 

பொருள்: வண்டினங்கள் ரீங்காரமிடும் சோலைகளையும், மயில்கள் நடனமாடும் சோலைகளையும் கொண்டது. மேகங்கள் தவழும் சோலைகளையும், குயில்கள் கூவுகின்ற சோலைகளையும் கொண்டது. தேவர்களின் தலைவரான ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளியிருக்கும் அந்தத் அழகிய திருவரங்கம் என்னும் திருப்பதியின் பெயரை வாயாரச் சொல்லாத நன்றியில்லாத மூர்க்கர்களின் உணவை, நாய்க்கு இட்டுவிடுங்கள். 

ஆழ்வார் கோபமாகச் சொல்லுகிறார் என்று தோன்றுகிறதா? திருமாலையில் பல பாசுரங்களில் ஆழ்வார் கொஞ்சம் கண்டிப்புடனேயே சொல்லுகிறார்.  பரமபதத்தில் இருக்கும் ஸ்ரீவைகுண்ட நாதர், நமக்காக திருவரங்கதில் அறிதுயில் அமர்ந்த நிலையில் தரிசனம் தருகிறார். அந்தத் திருவரங்கத்தின் பெயரைப் பெருமையுடன் சொல்லாமல் இருப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். அவர்களுக்கு உணவு கொடுப்பதை விட, நன்றியுள்ள நாய்களுக்கு அந்த உணவைப் போட்டுவிடுங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். 

விளக்கம்: முரலும் – ரீங்காரமிடும். திருவரங்கத்தில் உள்ள சோலைகளில் நிறைய தேன் இருப்பதால் தேனீக்கள் கூடம் கூட்டமாக வந்து, கழுத்தளவு தேனை அருந்தியதால் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. மயிலினம் ஆலும் – குளிர்ந்த சோலைகளையும் அங்கு ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் தேனீக்களையும் பார்த்து பருவமழை வரப்போகிறதோ என்று எண்ணி மயில்கள் நடனமாடுகிறன.  கொண்டல் மீது அணவும் சோலை – சோலையில் உள்ள மரங்கள் நெடிது உயர்ந்து மேகங்களின் நிலைக்கு உயர்ந்துவிட்டன. இன்னொரு அர்த்தம், பரந்து விரிந்த இந்தச் சோலைகளையும் அங்கு எழும் ரீங்கார சப்தத்தையும் கண்டு, இது பெரிய கடல் என்று எண்ணி, மழை பொழியும் மேகங்கள் கூட்டமாக வந்து, இந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டுள்ளன. குயிலினம் கூவும் – வண்டுகள் தேனைப் பருக சோலைக்கு கூட்டமாக வருகின்றன. அவற்றைக் கண்டு சோலையில் இருக்கும் மயில்கள் ஆடுகின்றன. ஆனால் குயில்கள் இந்த இடத்தின் குளிர்ச்சி காரணமாக அவை இருக்கும் இடத்திலிருந்தே கூவுகின்றன. அணி திருவரங்கம் இத்தகைய பெருமை வாய்ந்த சோலை, திருவரங்கம் கோயிலுக்கு ஒரு அணி போல விளங்குகிறது. மிண்டர் – அத்தகைய திருவரங்கத்தையும் ரங்கநாதரையும் நினைக்காதவர்கள் நன்றி கெட்டவர் என்கிறார் ஆழ்வார். நாய்க்கு இடுமின் – அவர்களுடைய உணவை நன்றியுள்ள நாய்களுக்குப் போடுங்கள் என்கிறார். 

இன்றைய பதிவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதரைத் தரிசனம்செய்துகொள்வோம்.

திருவரங்கம் ரங்கநாதரை (மூலவர்) நீங்கள் எல்லோரும் சேவித்திருப்பீர்கள். நன்கு கவனித்தால் காலத்தால் மூலவரின் முகம் மற்றும் அவயம் மழுமழுவென இருக்காது. வருடத்திற்கு ஒரு முறை ஜேஷ்டாபிஷேகத்தின்போது, தைலக் காப்பு சார்த்துவார்கள் (அப்போது முக தரிசனம் மாத்திரமே கிட்டும்.) அதன் பிறகு மூலவர் மிக அழகாகக் காட்சிதருவார். 

அரங்கநாதரை தரிசித்துவிட்டு ரங்க விமானத்தைத் தரிசிக்காமல் இருக்கலாமா?


அடுத்த வாரம் தொடர்வோம்...
===============================================================================

நான் படிச்ச கதை

அகநக நட்பு

கதையாசிரியர்: ரஞ்சனி நாராயணன்

எனது பெயர் ரஞ்சனி நாராயணன். திருமணத்திற்கு முன் ஒரு ஸ்டெனோ-டைப்பிஸ்ட். திருமணம் ஆன பின் முழு நேர இல்லத்தரசி. பல வருடங்கள் கழித்து ஆங்கிலம் பேசச்சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர் ஆக ஒரு வாய்ப்பு கிடைக்கவே அதையும் ஏற்று செம்மையாக செய்தேன். திறந்தவெளிப் பல்கலைகழகத்தில் படித்த சமூகவியல் முதுகலைப் பட்டதாரி நான்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து திருமணம் ஆகி, இப்போது இருப்பது பெங்களூரில். முதலில் இல்லத்தரசி என்று சொல்லிக் கொள்வதை விரும்பினாலும் எழுத்தாளர் என்ற அடையாளம் என்னை ரொம்பவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. பல வருடங்களாக பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தாலும் இணையத்தில் சில ஆண்டுகளாகத்தான் தீவிரமாக இயங்க ஆரம்பித்திருக்கிறேன். இணையத்தில் எனக்கென ஒரு இடம் பிடித்திருப்பது சந்தோஷமான விஷயம். இணையத்தில் என் எழுத்துக்களைப் படித்துவிட்டு தங்கள் தளத்தில் எழுதும்படி சில இணைய இதழ்கள் கேட்டுக்கொண்டதும் நான் எழுத்தினை தீவிரமாகத் தொடரக் காரணம்.

இந்த சுட்டியிலும் சென்று பாருங்கள்.

======>ரஞ்சனி நாராயணன்

======>ரஞ்சனி நாராயணன்

முன்னுரை

பேரன் அவனுடைய நண்பனைக் காண சென்னை வந்தது பற்றி பாட்டியிடம் சொல்ல  பாட்டி தன் பால்ய கால சினேகிதிகளை நினைவு கூறுகிறார். அன்றைய சிநேகிதம் இன்றும் தொடர்வதையெண்ணி சிலாகிக்கிறார்.

இரண்டு பள்ளித் தோழிகளை சந்தித்து பேசியது பற்றி சுவை பட கதைத்திருக்கிறார் ஆசிரியர். சொல்ல வந்ததை அழியாத கோலங்களாய், மலரும் நினைவுகளாய், அதனுடன் சில சம்பவங்களையும் கோர்த்து  கதையை ஒரு நீரொழுக்கு போல்  திறம்பட கூறுவதில் ஸ்ரீராமுக்கு அக்கா. (அப்பாடி வம்பிழுத்தாயிற்று)

எனக்கும் இரண்டு பள்ளி தோழர்கள், மற்றும் ஒரு கல்லூரி தோழர், தற்போது வரை தொடர்பில் உள்ளார்கள் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆசிரியரே கூறுவது போல் சில பழைய தோழர்களை கண்டுபிடிக்க இணையம் உதவுகிறது என்பது உண்மை, குறிப்பாக முகநூல்

கதை வழக்கம் போல் sirukathaigal.com இல் இருந்து பெறப்பட்டது.

கதை என்று சொல்வதை விட ஒரு டைரி குறிப்பு என்று சொல்லலாம்.

அகநக நட்பு 

‘நான் சென்னைக்கு வந்ததே என் சிநேகிதன் கரண் பரத்வாஜை பார்க்கத்தான், பாட்டி!’

பெங்களூரிலிருந்து வந்திருந்த என் பேரன் தேஜஸ் குரலில் இருந்த உற்சாகம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இருந்தாலும் அவனை சீண்டும் குரலில் கேட்டேன்:

‘ஏண்டா! என்னைப் பார்க்க வரவில்லையா?’

‘அதில்லை பாட்டி! உன்னைப் பார்ப்பதில், உன் கை சமையலை ருசிப்பதில் எனக்கு எப்பவும் ஆர்வம் உண்டு. இந்த தடவை இவையெல்லாவற்றையும் விட சந்தோஷமான விஷயம் கரண் சென்னையில் இருக்கிறான் என்பது தான். உனக்குக் கரண் தெரியுமில்லையா?’

‘ஓ! நன்றாகத் தெரியும். உன்னோட கூடப் படித்தவன் தானே? இருவரும் எல்கேஜியிலிருந்து தோழர்கள் ஆயிற்றே!’

‘ஆமாம் பாட்டி! பத்தாம் வகுப்பு வரை நானும் அவனும் ஒரே பள்ளிக்கூடம் தான். ப்ளஸ் ஒன் படிக்கும்போது நானும் அவனும் வேறு வேறு ஸ்கூலில் சேர்ந்துவிட்டோம். நடுவில் ஒரே ஒரு முறை அவனை ஒரு வினாடி வினா நிகழ்ச்சியில் பார்த்தேன். பிறகு அவனுடன் தொடர்பு விட்டே போய்விட்டது. இப்போது சமூக வலைத்தளம் மூலம் அவன் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்தாலும், நேரில் பார்க்கும் சந்தோஷம் வருமா?’

அவனுடைய இந்த வயதில் நட்பு என்பது மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றுதான். நானும் இந்த வயதினை தாண்டி வந்தவள் ஆகையால் எனக்கும் அவனது உற்சாகம் புரிந்தது. எனக்கும் பள்ளிப்பருவத்தில் நிறைய தோழிகள் உண்டு. ‘இவளைச் சுற்றி எப்பவும் பத்துபேர்! பைத்தியத்தை சுற்றி பத்துப்பேர் என்பார்களே, அதுபோல..!’ என்று என் அக்கா என் அம்மாவிடம் என்னைப் பற்றிப் புகார் கூறும் அளவிற்கு பள்ளியில் தோழிகள். எல்லாம் பள்ளிவரை தான். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் கல்லூரிக்குப் போக நான் மட்டும் கையில் வெள்ளைப் பேப்பரைச் சுற்றிக் கொண்டு புரசைவாக்கம் ‘மீனா இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ்’ போனேன் – டைப் ரைட்டிங், ஷார்ட்ஹேண்ட் கற்றுக் கொள்ள. அந்தக் காலத்தில் எஸ்எஸ்எல்ஸி மற்றும் டைப்பிங், ஷார்ட்ஹாண்ட் தகுதி இருந்தால் ஸ்டெனோக்ராபர் வேலை எளிதாகக் கிடைத்துவிடும். எனக்கும் கிடைத்தது. பள்ளித் தோழிகள் எல்லாம் காலப்போக்கில் நினைவிலிருந்தும் மறைந்தே போனார்கள்.

என்னுடைய பதின்மவயதுத் தோழிகள் என்று இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் இரண்டு பேர்கள்தான். ஜெயா மற்றும் ஜெயந்தி. ஜெயா உடனான நட்பு மறைந்ததே இல்லை. இருவரும் ஒரே பள்ளி. என்னுடன் அவளும் மீ.இ.கா –விற்கு கையில் வெள்ளைப் பேப்பருடன் வந்தவள். எங்கள் இருவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை. அதனால் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆன பிறகும் நட்பு தொடர்ந்தது. எனக்கும் அவளுக்கும் இடையே இருந்த ஆழமான புரிதலினால் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வதில்லை என்றாலும் கூட மனதிற்குள் ஒரு நெருக்கம் இருந்தது. பல மாதங்கள் பேச மாட்டோம்; சந்தித்துக் கொள்ள மாட்டோம். ஆனாலும் எப்போது தொலைபேசியில் பேசினாலும், ஏதோ நேற்றுத்தான் பேசி முடித்தது போல இயல்பாக தொடரும் எங்கள் பேச்சு. ஒருவரையொருவர் குற்றம் சொல்லவே மாட்டோம். அவரவர் வீட்டு விசேஷங்களில் இருவரும் நிச்சயம் சந்தித்து கொள்வோம்.

ஜெயந்தி எனது பேருந்துத் தோழி. அவளது அலுவலகத்தைத் தாண்டி என் அலுவலகம். காலையில் நான் சீக்கிரம் அலுவலகத்திற்கு வந்துவிடுவேன். மாலை வேளைகளில் மட்டும் இருவரும் ஒரே பஸ்ஸில் வருவோம். இருவருக்குமே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அலுவலகம். நான் எந்த பேருந்தில் வருகிறேன் என்று பார்த்துவிட்டு அதில் ஏறுவாள் அவள். அவள் ஏறும் நொடியிலிருந்து பேச ஆரம்பிப்போம். புரசைவாக்கம் தாசப்ரகாஷ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே அவரவர் இல்லங்களுக்குச் செல்வோம். முதலில் எங்கள் வீடு வரும். எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்போம். விடுமுறை நாட்களில் இருவரும் கங்காதரேச்வரர் கோவில், புரசைவாக்கம் டேங்க் என்று சுற்றிக் கொண்டே பேசுவோம்; பேசிக்கொண்டே சுற்றுவோம். எனது திருமணத்திற்குப் பிறகு நான் புரசைவாக்கத்திலிருந்து அசோக் நகர் போய்விட்டதால் ஜெயந்தியுடனான என் நட்பு புரசைவாக்கத்திலேயே தங்கி விட்டது.

ஆனால் என்ன அதிசயம் எங்கள் நட்பில் என்றால் 33 வருடங்களுக்குப் பிறகு எனது எழுத்தின் மூலம் அவளை மறுபடியும் சந்தித்தேன். எனது வலைத்தளத்திற்கு யதேச்சையாக வந்து படித்துவிட்டு, ‘புரசைவாக்கம் ரஞ்சனி தானே நீ?’ என்று கேட்டு எழுதியிருந்தாள். விட்டுப் போன நட்பை தொலைபேசி மூலம் தொடர்ந்தோம். நேரிலும் சந்தித்தோம்.

நாங்கள் இருவரும் மீண்டும் சந்தித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அவள் அப்போது பெங்களூரில் இருந்தாள். அவளுக்கு சென்னை புதிதல்ல என்றாலும் அவள் என் வீடு வரும் வரை எனக்குப் பொறுமையில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் சென்றேன். அவள் வரும் சதாப்தி ரயில் சென்ட்ரலில் நுழைந்ததுமே என் பரபரப்பு அதிகமானது. அவள் இறங்கும் வரை காத்திருக்காமல் அவள் சொல்லியிருந்த கம்பார்ட்மெண்டில் நானே ஏறிப் போய்ப் பார்த்தேன். அவள் இல்லை. கடைசி நிமிடத்தில் பிரயாணத்தை ரத்து செய்துவிட்டாளோ, இல்லை வேறு ஏதாவது காரணத்தால் வரமுடியாமல் போய்விட்டதோ என்று மனது அலைபாயத் தொடங்கியது.

ரயிலில் அவளைக் காணாமல் ஏமாற்றத்துடன் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தபோது அவள் அடுத்த கம்பார்ட்மெண்டிலிருந்து இறங்குவது தெரிந்தது. ‘ஜெயந்தி!’ என்று கூவியவாறே ஓடிப்போய் அவளை அணைத்துக்கொண்டேன். அப்பா! அவளைப் பார்த்துவிட்டேன்! என்ன ஒரு ஆசுவாசம்! எங்களது 33 வருடப் பிரிவையும் அந்த ஒரே அணைப்பில் தீர்த்துக் கொள்ளப் பார்ப்பது போல இருவரும் அந்த அணைப்பின் இறுக்கத்தில் நெகிழ்ந்து போயிருந்தோம்.

‘என்ன பாட்டி! பழைய நினைவுகளா?’ பேரனின் குரலில் நிஜ உலகிற்கு வந்தேன். குளித்துவிட்டு வெளியில் கிளம்பத் தயாரான நிலையில் இருந்தான்.

சிரித்துக் கொண்டே, ‘ஆமாம்டா!’ என்றேன்.

‘கரணை அழைத்துக் கொண்டு மெரீனா பீச் போகவேண்டும்; கன்னிமாரா போக வேண்டும். அவனும் என்னை மாதிரி தான் நிறைய புத்தகங்கள் படிப்பான்……!’

என்னைப்போலவே பேரனும் தனது தோழனின் நினைவிலேயே திளைத்துக் கொண்டிருப்பது புரிந்தது.

‘டிபன் சாப்பிட வா முதலில். எப்போது அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறாய்?’

‘அவன் அசோக் நகரில் இருக்கிறான். நான் மதிய உணவிற்கு அவனை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன்….’

‘அசோக் நகரிலா?’

‘ஆமாம் பாட்டி? அசோக் நகர் பில்லர் அருகில் தான் அவனது அலுவலகம் இருக்கிறது……..’

நான் யோசனையுடன், ‘ஓ!……….’ என்றேன்.

‘என்ன பாட்டி! அசோக் நகரில் உன் தோழிகள் யாராவது இருக்கிறார்களா? மறுபடியும் பழைய நினைவுகளுக்குள் போய்விட்டாயா? சரி, சாயங்காலம் நான் வரும்வரை மலரும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிரு. நான் என் சிநேகிதனைப் பார்த்துவிட்டு வருகிறேன்…’ என் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் உற்சாகத்துடன் வெளியேறினான் தேஜஸ்.

திருமணம் ஆகி நான் வந்து சேர்ந்த இடம் அசோக் நகர். அங்கு எதிர்பாராதவிதமாக அம்முடுவை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. என் அக்காவின் மூலம் தான் விமலா மாமி, சதாசிவம் மாமா குடும்பம் அசோக்நகரில் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. மாமா இல்லை. மாமி மட்டும் அம்முடுவுடன் இருக்கிறாள் என்று என் அக்கா சொன்னாள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சரியாக அக்காவிற்கும் தெரியவில்லை.

கணவருடன் வெளியே போகும்போதெல்லாம் என் கண்கள் என் பால்யகால சிநேகிதியைத் தேடும். திருமணத்திற்குப் பிறகு நான் நிறைய மாறிவிட்டேன். அது போலவே அவளும் மாறியிருக்கலாம், இல்லையா? இத்தனை வருடங்களுக்குப் பின் பார்த்தால் அடையாளம் தெரியுமா? நிச்சயம் தெரியும் என்று எனக்குள் ஒரு அசையாத நம்பிக்கை!

விமலா மாமியின் இரண்டாவது பெண் தான் அம்முடு என்கிற கல்யாணி. நாங்களும் அவர்களும் திருவல்லிக்கேணியில் ஒரே வீட்டில் பக்கத்துப் பக்கத்து போர்ஷனில் பல வருடங்கள் இருந்தோம். அவர்கள் வீட்டில் நான்கு குழந்தைகள் – மூன்று பெண்கள் ஒரு பிள்ளை; நாங்களும் நால்வர் – இரண்டு பிள்ளைகள்; இரண்டு பெண்கள். நாங்கள் எல்லோருமே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். பள்ளி முடிந்து மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் எட்டு பேரும் அடித்த லூட்டிகள் இப்போது நினைத்தாலும் இனிப்பவை.

அதுவும் அம்முடுவை யாராலும் மறக்க முடியாது. பிற்காலத்தில் சரிதாவின் திரைப்படங்களைப் பார்க்கும்போது எனக்கு அம்முடு நினைவுதான் வரும். பெரிய கண்கள். குண்டுக் கன்னங்கள். படபடவென்று வாய் ஓயாத பேச்சு. சரிதா போலவே சற்று இரட்டைநாடி அம்முடுவும். சுருட்டைத் தலைமுடி. சுருட்டைத் தலைமுடி என்றால் பொதுவாக குட்டையாகத்தான் இருக்கும். ஆனால் அம்முடுவிற்கு முழங்காலுக்குக் கீழ் தொங்கும். அவளுக்குத் தலைவாரிப் பின்னுவது என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அதுவும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தால் என் அம்மா மணிக்கணக்கில் அவளது கூந்தலை நிதானமாக இழைய இழைய வாரி, வாரி சிக்கெடுத்து மணிமணியாகப் பின்னி விடுவாள்.

அந்தக் கூந்தலுக்காகவே சிலப்பதிகாரம் நாடகத்தில் அவள் கண்ணகியாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆ! இந்த நாடகம் நாங்கள் போட்டது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. வருடாவருடம் கோடை விடுமுறையில் எங்களைக் கட்டி மேய்ப்பது எங்கள் பெற்றோர்களுக்குப் பெரும் சவால். அதுமாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒருமுறை சதாசிவம் மாமா வீட்டில் இருந்த சமயம். நாங்கள் போடும் சத்தம் அவரை சற்றுக்கூட ஓய்வு எடுக்கமுடியாமல் செய்துவிட்டது. வந்து ஒரு சத்தம் போட்டார் பாருங்கள். நாங்கள் எல்லோரும் சகல நாடியும் அடங்கி உட்கார்ந்துவிட்டோம். சற்று நேரம் கழித்து அவரே எங்களை அழைத்தார். ‘இப்படி நேரத்தை வீணாக்கலாமா? ஏதாவது உருப்படியாகப் பண்ணுங்களேன்’ என்றார். நாங்கள் எல்லோரும் அவரே ஒரு ஐடியா கொடுக்கட்டும் என்று பேசாமல் அவர் முன்னே நின்று கொண்டிருந்தோம். இந்தக் காலம் போல சம்மர் கேம்ப், பாட்டு வகுப்பு, நடன வகுப்பு என்பதெல்லாம் அப்போது அபூர்வம். வீட்டிற்குள்ளேயே ரகளை செய்துகொண்டிருப்போம். மாமா சற்று நேர யோசனைக்குப் பிறகு ஏதாவது நாடகம் போடுங்கள் என்று சொன்னார். மாமாவே கலைத்துறையைச் சார்ந்தவர் தான். அதுவும் திரைப்படத்துறை கலைஞர்களுடன் நெருங்கிப் பழகுபவர். அவர் நாடகம் போடுங்களேன் என்று சொன்னதுதான் தாமதம் ‘ஓ’ என்று சந்தோஷக் கூச்சலிட்டோம்.

என்ன நாடகம் போடலாம் என்று எங்களுக்குள் பலத்த வாக்குவாதம். கடைசியில் ஏகமனதாக சிலப்பதிகாரம் போடலாம் என்று முடிவு செய்தோம். இந்த முடிவுக்கு வர மிகப்பெரிய காரணம் பத்தாம் வகுப்புப் புத்தகத்தில் இந்த நாடகம் இருந்தது தான். புதிதாக நாடகம் எழுதுவது என்பது எங்கள் யாருக்குமே கை வராத கலை! என் அக்காவும், அம்முடுவின் அக்கா லல்லு என்கிற லலிதாவும் அப்போது நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தனர். அதனால் அந்த நாடகத்தைத் தேர்ந்தெடுத்தோம். பாண்டியன் அரசவையில் கண்ணகி நீதி கேட்கும் காட்சி மட்டும் இருந்தது பாடப்புத்தகத்தில்.

யார் யார் என்ன என்ன பாத்திரத்தில் நடிப்பது என்பதும் பெரிய சண்டையுடன் முடிவு செய்யப்பட்டது. எனக்கு கண்ணகியாக நடிக்க வேண்டும் என்று ஆசை. நான் இதைச் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தனர். நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ‘ச்சே! நீ ரொம்ப சின்னவடி….!’ என்று ஒருமனதாக எல்லோராலும் ஒதுக்கப்பட்டேன். எனக்கு ஒரே கோவம். என் அண்ணா என்னை சமாதானப்படுத்தினான். ‘நீ பாண்டிய ராணியாக நடி. ராணின்னா கிரீடம் வைச்சுக்கலாம்; கால்ல சிலம்பு போட்டுக்கலாம். அம்மாவோட பட்டுப்புடவையைக் கட்டிக்கலாம். கண்ணகி பாரு தலையை விரிச்சுப் போட்டுண்டு வரணும். நீ அழகா ராணியா நடி. சூப்பரா இருக்கும்’ என்றான். அந்த சமாதானத்தை என்னால் ஏற்கமுடியவில்லை என்றாலும் அம்முடுவிடமிருந்து கண்ணகி பாத்திரத்தை வாங்க முடியாது என்று தெரிந்தது. கிடைத்த வேஷத்தை ஒத்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அன்றிலிருந்து அம்முடுவைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். பேசுவதையும் நிறுத்தினேன். அந்தக் கோபதாபங்களை இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. பாண்டிய ராஜாவாக அம்முடுவின் தம்பி குமார்.

எல்லோரும் வசனங்களை நெட்டுரு போடத்துவங்கினோம். புத்தகத்தைப் பார்த்து அவரவர் பகுதிகளை எழுதிக்கொண்டோம். அம்முடு என்னிடத்தில் வந்து ‘உன் கையெழுத்து நன்றாக இருக்குடி. எனக்கு என் வசனங்களை எழுதிக்கொடுடி’ என்று சமாதானக்கொடி காண்பித்தாள். நானும் என் கோபத்தை மறந்து அவளுக்காக இன்னும் அழகாக எழுதிக் கொடுத்தேன்.

என் அம்மா தான் இயக்குனர். எல்லோரும் வசனங்களை நெட்டுரு பண்ண ஒருவாரம் ஆயிற்று. அதிலும் அம்முடுவின் வசனங்கள் தான் மிகவும் கடினமாக இருந்தது. அவள் பேசுவதைப் பார்த்த போது அப்பாடி, நான் தப்பித்தேன் என்று நினைத்துக் கொள்வேன். என் அம்மாவிடம் எல்லோரும் வசனங்களை ஒப்பித்துக் காண்பித்தோம். எங்கள் எல்லோருக்கும் எல்லா வசனங்களும் மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. நடிப்பு தான் வரவில்லை. அதுவும் முகத்தில் கோபம் வரவேண்டும்; கையை இப்படி நீட்டிப் பேசவேண்டும். தலையை திருப்பி அவ்வப்போது பார்வையாளர்களைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அம்மா எங்களுக்குப் பயிற்சி கொடுத்த வண்ணம் இருந்தாள். முகத்தில் பாவம் வந்தால் வசனம் தடைப்பட்டுப் போகும். பள்ளிப்பாடங்களை மனப்பாடம் செய்து செய்து பழகியதால், வசனங்களை மடமடவென்று சொல்லிக்கொண்டே போவது எல்லோருக்குமே எளிதாக இருந்தது பாவங்களுடன் பேசுவது கடினமாக இருந்தது.

எங்களில் அம்முடுவுக்குத்தான் கடுமையான ஒத்திகை. வாயில் நுழையாத வசனங்களை முகத்தில் பாவத்துடன் பேசுவதற்கு மறுபடி மறுபடி பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒரு கையில் சிலம்பை ஏந்தியிருப்பது போல கையை வைத்துக்கொண்டு பேசும்படி எங்கள் அம்மா சொன்னாள். கடைசி காட்சியில் சிலம்பை ஓங்கி தரையில் அடிக்க வேண்டும். ஒருநாள் அழுது கொண்டே ‘எனக்கு கண்ணகி பாத்திரம் வேண்டாம்……!’ என்று பின்வாங்கினாள். என் அம்மாவும், அவளது அம்மாவும் சேர்ந்து சமாதானப்படுத்தி, தைரியமூட்டி மறுபடியும் அவளைத் தயார் செய்தனர். வசனங்களைப் பேசிப்பேசி அம்முடுவிற்கு தொண்டை கட்டிக்கொண்டு விட்டது. சுக்குக் கஷாயம், அதைத்தவிர டாக்டரிடம் போய் மருந்து என்று வாங்கி வந்து வேளாவேளைக்கு மருந்துகளைக் கொடுத்து அவளைச் சரி செய்தார்கள் அம்மாவும் விமலா மாமியும். அவளுக்கு இரண்டு நாட்கள் முழு ஓய்வும் கொடுக்கப்பட்டது.

ஒருவழியாக அந்த நல்ல நாளும் வந்தது. எங்கள் வீட்டுக் கூடம் தான் அரங்கு. சதாசிவம் மாமா தலைமை வகித்தார். ஊரிலிருந்து வந்திருந்த என் மாமா அழகாக ஒரு மேடையைத் தயாரித்தார். எங்களுக்கு ஒப்பனையும் செய்துவிட்டார். கிரீடம், சிலம்பு, ராஜாவின் உடைவாள் எல்லாம் மாமாவின் கைத்திறமையால் வெகு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. எந்தவிதத் தடங்கல்களும் இல்லாமல் எல்லோருமே அவரவர் பங்கைச் சரியாகச் செய்தோம். பாண்டிய ராஜா தான் நடுநடுவில் வசனங்களை மறந்து போனார். எனக்கும் அந்த வசனங்கள் தெரியுமாதலால் நான் அவ்வப்போது எடுத்துக் கொடுத்தேன். ராஜா சமாளித்தார். 

கண்ணகியாகவே மாறியிருந்தாள் அம்முடு. அபாரமாக நடித்தாள். கடைசி காட்சியில் அம்முடு நிஜமாகவே உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டாள். அனைவரின் கைத்தட்டலும் அவளை நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது. பாண்டிய மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று சொல்லி கீழே விழுந்து உயிரை விட, ராணியும் அழுது கொண்டே உயிரை விட நாடகம் சுபமாக முடிந்தது.

இந்த நாடகத்தினால் இன்னொரு பலனும் கிடைத்தது. அத்தனை நாட்கள் ஒருவருடன் ஒருவர் ஏதோ ஒரு விஷயத்திற்கு சண்டை போட்டுக்கொண்டிருந்த நானும் அம்முடுவும் மிகவும் நெருக்கமானவர்கள் ஆனோம். எங்களுக்கிடையே புதுவிதப் புரிதல் ஏற்பட்டிருந்தது. நாடகத்திற்காக உதவி செய்ததை அதன் பிறகும் தொடர்ந்தோம். அடுத்த ஆண்டு என்ன நாடகம் போடலாம் என்று கூட யோசிக்க ஆரம்பித்திருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் வீட்டை புரசைவாக்கத்திற்கு மாற்றிக் கொண்டு வந்துவிடவே, எங்கள் நட்பு திருவல்லிக்கேணியுடன் முடிந்துவிட்டது.

எத்தனை நேரம் இப்படியே பழைய நினைவுகளுடன் உட்கார்ந்திருந்தேனோ, வாசலில் மணி அடிக்கவே எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். கூரியர் வந்திருந்தது. வாங்கி வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன். மறுபடியும் அம்முடு மனதில் வந்து நின்றாள்.

அசோக்நகரில் அவளை எங்காவது பார்ப்பேன் என்ற என் எண்ணம் பலித்தே விட்டது. ஒருநாள் 11 வது அவென்யூவில் இருக்கும் பழமுதிர்சோலைக்கு கணவருடன் சென்றிருந்தேன். காய்கறிகள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எங்கள் எதிரில் இரண்டு பெண்மணிகள் வந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட என் வயது இருந்த பெண்ணைப் பார்த்ததும் மனதில் ஒரு மின்னல். அவளும் என்னைப் பார்த்தாள். நான் சட்டென்று, ‘ஏய்! நீ அம்முடு தானே?’ என்று கேட்ட அதே நொடி அவளும், ‘நீ ரஞ்சனி தானே?’ என்றாள்.

என் மனம் முழுக்க மகிழ்ச்சி பொங்க அவள் கைகளைப் பிடித்தேன். ‘எப்படி இருக்கே? எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? நீ இங்கதான் இருக்கேன்னு என் அக்கா ரமா சொன்னாள். என்னிக்காவது உன்னைப் பார்ப்பேன்னு நினைத்தேன். அதேபோல இப்போது பார்த்துவிட்டேன்’. பேசிக்கொண்டே போன என்னை ஏற இறங்கப் பார்த்தாள். ‘என்ன நீ இப்படி குண்டாயிட்டே?’ என்றாள் முகத்தை சுளித்தபடியே. ஒரு கணம் மனம் சட்டென்று வாடியது. அம்முடு தன் பக்கத்தில் இருந்த பெண்மணியைப் பார்த்து, ‘சித்தி! இவ ரஞ்சனி. திருவல்லிக்கேணி கானாபாக் லேனில் எங்களுடன் குடியிருந்தாளே கமலம் மாமி, நினைவிருக்கா? அந்த மாமியின் பெண்’.

அப்போதுதான் எனக்கு நினைவிற்கு வந்தது, அது விமலா மாமியின் தங்கை மாதவி என்று. ‘அட! மாதவி சித்தியா? அம்முடுவைப் பார்த்த சந்தோஷத்தில் உங்களை கவனிக்கவே இல்லை. நீங்களும் அசோக் நகரில் தான் இருக்கிறீர்களா?’ என்றேன். அம்முடு என்னைப் பேசவிடாமல், ‘பாருங்களேன், எப்படிப் பெருத்துப் போயிருக்கிறாள்! சே! என்ன இப்படி ஆயிட்ட?’ என்றாள் மறுபடியும்.

‘அதைவிடு, நீ எப்படி இருக்கிறாய்? அம்மா சௌக்கியமா? அதையெல்லாம் சொல்லு’ என்றேன். அவளது பேச்சில் மனம் புண்பட்டிருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருக்க முயன்றேன். கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீரை வெளியே வந்துவிடாமல் சமாளித்தேன்.

‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன். நீ ஏன் இப்படி ஆயிட்ட? என்னால நம்பவே முடியல……அதுவும் இத்தனை குண்டா……!’

பக்கத்தில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் என் கையைப் பிடித்தார். ‘பேசுவதற்கு வேறு விஷயமில்லை என்றால் கிளம்பலாம், வா!’ அப்போதுதான் அவர் என்னுடன் இருந்ததே நினைவில் வந்தது. பேச்சை மாற்ற அம்முடுவை அவருக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தேன்.

‘இவ…….இவ…….தான் என் சின்ன வயதுத் தோழி அம்முடு. நான் சொல்வேனே திருவல்லிக்கேணியில் நாடகம் எல்லாம் போடுவோம்னு…….’ என்றவளை மேலே பேசவிடாமல் தரதரவென்று கையைப் பிடித்து அழைத்துச் செல்லத் தொடங்கினார்.

அம்முடு என்னைக் கூப்பிடுவாள் என்று அந்த நிலையிலும் ஒரு சின்ன ஆசை என் மனதில் தோன்றியதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

வீடு வரும் வரை இருவரும் மௌனமாகவே வந்தோம். இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பலநாட்கள் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். மிகுந்த ஆவலுடன், எத்தனை விஷயங்கள் அவளுடன் பேச வேண்டும் என்று இந்த சந்திப்பிற்காகக் காத்திருந்தேன்! அவளுக்கு என்னைப் போன்ற ஆவலாதிகள் இருந்திருக்காதோ?

ஏன் அவள் என் உருவத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்? நான் பெருத்துவிட்டது உண்மைதான். ஆனால் நட்பு என்பது இதையெல்லாம் கடந்தது இல்லையோ? ஜெயாவும், ஜெயந்தியும் என் உடல் பருமன் பற்றி பேசுவார்கள்.. ஆனால் உற்ற தோழிகளாக என் நலத்தின் மேல் அக்கறை உள்ளவர்களாக அறிவுரை கூறுவார்கள். சென்ற தடவை ஜெயந்தி சென்னை வந்திருந்த போது எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காவிற்குப் போய் ஒருமணி நேரம் நடந்துவிட்டு வந்தோம். ‘தினமும் இதுபோல நடைப்பயிற்சி செய். உடம்பிற்கு நல்லது’ என்று சொன்னாளே தவிர என் உருவத்தை பற்றி ஒருநாளும் என் மனம் புண்படப் பேசியதில்லை.

ஒருவரது உருவத்தைக் கேலிசெய்வது தவறு என்று அறியாதவளா அம்முடு? அதுவும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும்போது இப்படிப் பேசுவார்களா? எனக்கு நினைக்க நினைக்க இன்றும் கூட மனம் ஆறவில்லை. சிலர் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவேன் என்று சொல்லுவார்கள். அம்முடுவும் பட்பட்டென்று பேசுபவள் தான். இருக்கட்டுமே. என்னுடன் சுமுகமாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, பிறகு இப்படியாகி விட்டாயே என்று கேட்டிருக்கலாம்.

பலவருடங்கள் கழித்து சந்திக்கும்போது என் உருவம் தான் அவள் கண்ணுக்குத் தெரிந்ததோ? எங்களிடையே உண்மையான நட்பு இருப்பதாக நான் தான் நினைத்துக் கொண்டிருந்தேனோ? எங்களிடையே அகநக நட்பு என்றைக்குமே இருக்கவில்லையோ? வெறும் முகநக நட்பு தான் நிலவி வந்ததோ?

என் அலைபேசி மணி என் நினைவுகளைக் கலைத்தது. என் பேரன் தேஜஸ் தான் கூப்பிடுகிறான். அவனக்கும் கரண் பரத்வாஜுக்கும் இடையேயான நட்பு எப்படிப் பட்டதாக இருக்கிறதோ, தெரியவில்லை. பாவம் மிகவும் சின்னவன். இருவரது நட்பும் அகநக நட்பாகவே இருக்கட்டும் என்ற பிரார்த்தனையுடன் அலைபேசியை எடுத்தேன்.

சனிக்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!