16.8.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - பிரம்மதேசம்-சோமஸ்கந்தர் கோயில் : நெல்லைத்தமிழன்

 

 பிரம்மதேசம்-சோமஸ்கந்தர் கோயில்

தமிழகத்தில் பிரம்மதேசம் என்ற பெயரில் பல கோயில்கள் இருக்கின்றன. அவை எல்லாமே, பிரம்மாவின் பேரனான ரோமச முனிவருடன் தொடர்புள்ளவை.  அப்படிப்பட்ட ஒரு பிரம்மதேசம்தான் நாம் இந்த வாரமும் அடுத்த வாரமும் பார்க்கப்போகிற, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் அமைந்துள்ள பிரம்மதேசம் சோமஸ்கந்தர் கோயில்.

முதன் முதலில் நாங்கள் மன்னார்கோயில் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் கல்லிடைக்குறிச்சி அருகே பிரம்மாண்டமான கோபுரத்தைப் பார்த்தவுடன், இந்தக் கோயிலுக்குள் செல்லலாம் என்று நினைத்துச் சென்றோம்.  ராஜகோபுரத்தைப் பார்த்தாலே மிகப் பழமையான கோயில் என்பது தெரியும்.

கோயிலில் நாங்கள் சென்ற சமயங்களில், பக்தர்கள் வருகை மிகவும் குறைவு என்று புரிந்துகொண்டோம். சில நேரங்களில் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால் மிகப் பெரிய கோயில். ரொம்பவே பழமையானது. 

இந்தக் கோயில் பாண்டிய நாட்டு வைப்புத் தலமாகும். தட்சயாக காலத்தில் ஏற்பட்ட சாபம் தீர பிரம்மா இந்தத் தலத்து ஈசனை வழிபட்டாராம். அவரது பேரன் ரோமச முனிவரும் இந்த ஈசனைப் பூஜித்திருக்கிறார்.  ரோமச முனிவர் பல தலங்களில் சிவனை வழிபட்டு இந்த இடம் வரும்போது இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளியிருந்த ஈசனை வழிபட்டாராம். திருக்குளத்தையும் அமைத்தாராம்.

இந்த ஊர் நான்மறைகளில் வல்லவர்களான அந்தணர்களுக்கு தானமாக ராஜாவினால் வழங்கப்பட்டது. அதனால் இந்த ஊர் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் (ராஜராஜ சோழன் நினைவாக) என்ற பெயர் பெற்றது.  இது பிர்மதாயம் என்றும் பெயர் பெற்றிருந்தது எனவும், அதுவே மருவி பிரம்மதேசம் என்றாயிற்று என்றும் சொல்கின்றனர். தமிழில் அயனீச்வரம்.

அனுசூயாவுடனான அத்ரி மஹரிஷியிடம் சிவன், தாம், சிவசைலம், திருவாலீச்வரம், பிரம்மதேயம் ஆகிய மூன்று தலங்களில் உறையும் லிங்கேஸ்வரராக அருளுகிறோம் என்று சொன்னார் என பிரம்மாண்ட புராணத்தில் இருக்கிறது.

இந்தக் கோயில் பிரம்மாண்டமானது. கோயிலின் சிற்பங்கள், அமைப்பு ஆகியவை மிகச் சிறப்பானது. இருந்தாலும் இங்கு உள்ள கங்காளநாதர் சன்னிதி மிகவும் விசேஷமானது. 250 கிலோ எடையுள்ள கல்லால் ஆன கங்காளநாதர் சிலை, 7 அடிக்கும் மேல் உயரம் உள்ளது. பாதத்தை தரை மீது வைத்து நின்ற நிலையில் இருக்கும் சிலை இது. வேறு பிடிப்புகள் கிடையாது.

நவகைலாயத் தலங்களில் இது சூரியத் தலமென்று சொல்லப்படுகிறது.

இந்தக் கோயிலுக்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் விஸ்வநாத நாயக்கர்களும் பல திருப்பணிகளைச் செய்திருக்கின்றனர்.

கோயிலும் அதன் சுவர்களும் கோட்டை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தப் பகுதி பெரிய வளமான நகரமாக இருந்தது. அதனால் படையெடுப்புகளும் திருட்டுக்களும் நடைபெறும் இடமாக இருந்தது. முதலாம் ராஜராஜ சோழன், இந்தப் பகுதியைப் பாதுகாக்க நாலாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படையை நிறுவினான். அது மட்டுமன்றி காவல் தெய்வமாக நாலாயிரத்து அம்மன் என்ற சன்னிதியை நிறுவினான்

இந்த கோவிலில் ஐந்து சிவலிங்கங்கள் வழிபடப்படுகின்றன: காசி விஸ்வநாதர், சொக்கநாதர், அண்ணாமலையார், லந்தை ஆதிநாதர் மற்றும் கைலாசநாதர். இங்குள்ள நடராஜர் புனுகு நடராஜர் என்று அழைக்கப்படுகிறார், அவருக்கு திருவாதிரை நாளில் மட்டுமே (மார்கழி மாத திருவாதிரை) புனுகு எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இதனை எழுதும்போது எனக்கு சமீபத்தில் தரிசித்த உத்திரகோச மங்கை மரகத நடராஜர் நினைவுக்கு வருகிறார். உத்திரகோச மங்கை என்பது உலகில் சிவனுக்கு ஏற்பட்ட முதல் கோவில் என்று கருதப்படுகிறது. இங்குள்ள நடராஜர் ஒற்றை மரகதக் கல்லினால் ஆனவர். பச்சைத் திருமேனி. அதற்கு அதிர்வு ஏற்படக் கூடாது என்பதற்காக வாத்தியம் வாசிப்பது, உரக்கப் பேசுவது போன்றவை அவரது சன்னதி முன்பு கிடையாது.  ஆறடி உயரமுள்ள நடராஜர், வருடம் முழுவதும் சந்தனக் காப்பில்தான் இருப்பார். மார்கழி மாத ஆருத்ரா நட்சத்திரத்தன்றுதான் சந்தனைத்தைக் களைந்து அன்று மாத்திரம் மூலத் திருமேனியை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தக் கோயிலை ஆதி சிதம்பரம் என்று சொல்கின்றனர். முதல் தடவை சென்றபோது மரகத நடராஜர் தரிசனம் மாத்திரம்தான் கிடைத்தது.  இரண்டாவது தடவை எல்லா சன்னிதிகளுக்கும் சென்றிருந்தோம்.

RT @Lovekrishna127: உத்திரகோசமங்கை மரகத ...

உத்திரகோசமங்கை மரகத நடராஜர்.

பிரம்மதேசம் கோயிலில் காணவேண்டிய பல சிறப்புகள் இருந்தாலும்,  நாங்கள் போனபோதெல்லாம் ஆளரவமற்று இருந்தது. அதனால் பல சன்னிதிகளை நாங்கள் காணவில்லை. அடுத்த முறை அதிகாலையில் நேராக இந்தக் கோயிலுக்குச் செல்லலாமென நினைத்திருக்கிறேன்.

வரலாற்றுச் செய்தியாக நாம் காணப்போவது, சோழ சாம்ராஜ்யத்தின் கடைசி எழுபது ஆண்டு செய்திகளை. வெவ்வேறு இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளையும், அதிலுள்ள மன்னர்கள் பெயரையும், அவருடைய மெய்கீர்த்தி, ஆட்சி தொடங்கி எத்தனையாவது ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு என்பதையெல்லாம் வைத்து வரலாற்றை ஓரளவு அனுமானிக்கிறார்கள் என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம். இராஜேந்திரன் வரலாற்றை புதிய கோணத்தில் கல்வெட்டுச் செய்திகளைக் கொண்டு எழுதியிருப்பதைப் படித்தேன். அதில் உள்ள முக்கியச் செய்திகளை இன்றைய பதிவில் தருகிறேன்.

 

 

 

 

நான்2024 ஜனவரியில் சென்றிருந்தபோது கோபுரம். 

 

ராஜராஜ சோழன் தன்னுடைய மகனுக்கு 1012ல் பட்டம் சூட்டினான். அப்போது ராஜராஜ சோழன் அரசியல் நிர்வாகத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். இருபது வருடங்களாகவே ராஜேந்திர சோழன், தளபதியாக இருந்து வந்தான். சோழப் பேரரசுக்குப் பல வெற்றிகளையும் பெற்றுத் தந்திருந்தான். ராஜராஜன் காலத்திலேயே பாண்டிய நாடு சோழர்கள் வசம் இருந்தது. ஆனாலும் பாண்டிய அரசு வாரிசுகள் ஆங்காங்கே கலகம் விளைவித்துக்கொண்டிருந்தனர்.

1014ல் ராஜராஜ சோழன் மறைந்தான். அதன் பிறகு சோழச் சக்கரவர்த்தியாக ராஜேந்திர சோழன் ஆனான். முதல் முதலாக, ராஜேந்திர சோழனே, தன்னுடைய மகனை பாண்டிய நாட்டுக்கு மன்னனாக, சோழப் பேரரசின் கீழ் நியமித்தான். அந்த முறையே அதற்கு அடுத்த அறுபது ஆண்டுகளுக்குப் பின்பற்றப்பட்டது. அந்த வரலாறையே நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

ராஜேந்திரனுக்குப் பிறகு அவனது நான்கு மகன்களும் ஆட்சிப் பொறுப்பில் ஒருவரை அடுத்து மற்றொருவர் அமர்ந்தனர். கடைசி மன்னனுக்கு வாரிசு இல்லை என்பதால், ராஜேந்திரனின் மகள் வயிற்று வாரிசு சோழ சாம்ராஜ்யத்தின் தலைவராக ஆகி முதலாம் குலோத்துங்கச் சோழன் என்ற பெயரில் 1070ல் ஆட்சிக்கு வந்தார். அவனிடமிருந்து சாளுக்கிய சோழர்குலம் ஆரம்பித்தது.

அதுபோலவே ராஜேந்திரனின் காலத்தில் சோழ பாண்டியர் குலம் ஆரம்பித்தது. சடாவர்மன் சுந்தரச் சோழ பாண்டியன், மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன், சடாவர்மன் சோழ பாண்டியத் தேவன், மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன் ஆகியோர் சோழர் குலத்து வாரிசுகள், ஆனால் பாண்டிய நாட்டை அரசாண்டவர்கள். (பாண்டிய அரச குலத்து வழக்கப்படி ஜடாவர்மன், மாறவர்மன் என்ற பெயர்கள் மாறி மாறி வருவதைக் கவனித்தீர்களா? இதுபோலவே சோழர் குலத்து அரசர்களும் இராஜகேசரி, கோப்பரகேசரி என்று பெயர்கள் வைத்துக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கும்)

ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திரன் தவிர இன்னொரு மகன் இருந்தான். 

பொதுவாக சோழர் வரலாறு என்று தேடினால், அவர்களின் மன்னர் வரிசை கீழ்க்கண்டவாறு இருக்கும்.

ராஜராஜ சோழன்  -               கிபி 985 – கிபி 1014

ராஜேந்திர சோழன் –              கிபி 1012 – கிபி 1044

ராஜாதிராஜ சோழன் -             கிபி 1018 – கிபி 1054

இரண்டாம் ராஜேந்திர சோழன் – கிபி 1051 – கிபி 1063

வீர ராஜேந்திர சோழன் -         கிபி 1063 – கிபி 1070

அதி ராஜேந்திர சோழன் -        கிபி 1067 – கிபி 1070

இதற்குப் பிறகு, கிபி 1070ல், குலோத்துங்கச் சோழன், சாளுக்கிய சோழ வம்சத்தின் முதலாம் அரசனாக ஆகிறான்.

ராஜராஜனுக்கு பட்டத்தரசி உலகமாதேவியின் மகன் ராஜேந்திரன்.  பட்டத்து அரசி இல்லாது மற்றைய அரசிகளில் ஒருவருக்கு மகன் இருந்தான். அவனுக்கு ‘கங்கை கொண்டான்’ என்ற பெயர். இவன் அரசுக் கட்டிலில் ஏறவில்லை.  ராஜேந்திர சோழன், தன்னுடைய சிற்றன்னையான பஞ்சவன் மாதேவிக்கு மாத்திரம் பள்ளிப்படை எடுத்துள்ளதால், இந்த ‘கங்கைகொண்டான்’ பஞ்சவன் மாதேவியின் மகனாக இருக்கவேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். (நம் பாலகுமாரன், பஞ்சவன் மாதேவி குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று எழுதியிருக்கிறாரே என்று சந்தேகம் வருகிறதா? நான் எழுதியிருப்பது வரலாற்றுச் சான்றுகளில் உள்ளது)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு காலத்தில் முஸ்லீம்களின் உடையாக இருந்த கைலி/சாரம்/லுங்கி தற்போது பெரும்பாலும் ஏழை மக்களின் உடையாக ஆகிவிட்டது. வேஷ்டி போல அழுக்காவதில்லை, அழுக்கானாலும் வெளியில் தெரியாது. மூட்டிவிடுவதால் (அதாவது இரண்டு ஓரங்களையும் சேர்த்துத் தைத்து விடுவதால்), அணிந்துகொண்டு படுத்துக்கொள்ளவும் சுகமானது. அதன் காரணமாகத்தான் இந்த அறிவிப்பு. ஐயா… கோயிலுக்கு உள்ள மரியாதையைக் கொடுங்கள். சாரத்தை அணிந்துகொண்டு நுழைந்துவிடாதீர்கள்.

 

 

 

 

புற்கள் வளர்ந்திருக்கின்றன. உழவாரப் பணிகள் நடைபெற்றால், மக்கள் நிறைய வர ஆரம்பித்தால் இன்னும் பளிச் என்று கோயில் இருக்கும்.

 

 

அடுத்த வாரமும் இந்தக் கோவிலில்தான். தொடர்ந்து இணைந்திருங்கள்.

(தொடரும்) 

35 கருத்துகள்:

  1. எவ்வளவு பெரிய, எவ்வளவு வனப்பான கோவில்...  சென்று பார்க்க ஆவல் மிகுதியாக வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம்.. கல்லிடைக்குறிச்சி அருகே இருக்கும் இந்த சிவன் கோயிலை இப்போது போய் தரிசிக்காவிட்டால் வேறு எப்போது வாய்ப்பு கிடைக்கும்?

      நீக்கு
    2. நான் திருநெல்வேலி பார்த்ததே இல்லை நெல்லை.  கல்லூரி முடிந்ததும் மார்த்தாண்டத்தில் நடந்த நண்பன் திருமணத்துக்கு திருநெல்வேலி வழியாக சென்றிருக்கிறேன்.  அங்கு பஸ்ஸ்டான்ட் பக்கத்தில் இருக்கும் மெர்லின் மெடிக்கல்ஸ் என் நண்பனின் கடை.  அவன் வீட்டில் இரவு தங்கி மார்த்தாண்டம் சென்று வந்ததோடு சரி.

      நீக்கு
    3. முற்றமூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து.....

      இதுக்கெல்லாம் முன்னர் நெல்லை சென்று, நெல்லையப்பர், குற்றாலம் மற்றும் பல தலங்களைத் தரிசித்து (திருச்செந்தூர் உட்பட), நெல்லை அல்வா, மிக்சர், உடன்குடி கருப்பட்டிலாம் சாப்பிட்டுப் பிறந்ததன் பயனை அடையுங்கள் ஸ்ரீராம்

      நீக்கு
  2. சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் பிராமணர்களுக்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்ட கிராமங்கள், நிலங்களை பிரம்மதேசம் என்ற பெயரில் அழைத்தனர். காஞ்சீபுரத்திலிருந்து செய்யார் பஸ் போகும் வழித்தடத்தில்
    பிரம்மதேசம் என்ற பெயரில் சிற்றூர் ஒன்று உண்டு. அங்கு சந்திரமெளலீஸ்வரருக்கு அற்புதமாத கோயில் உண்டு. இதே மாதிரியான நாலைந்து பிரம்மதேசங்கள் தமிழகத்தில் உண்டு. 'ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்ற பூதாகரமான கேள்வியில் பிறந்த தற்கால கையடக்க நாவல் ஒன்றில் இந்த மாதிரியான பிரம்மதேசத்தைப் பிணைத்து எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. தகுந்த தடயங்கள் கிடைத்தும் அநிருத்த பிரம்மராயரே சொந்த ஜாதிக்காரனை காட்டிக்கொடுக்காது மறைத்த மாதிரி கதை நகர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கதை?  யார் எழுதியது?  ஏதாவது ஆதாரத்துடன் எழுதப்பட்டுள்ள கதையா?

      நீக்கு
    2. வாங்க ஜீவி சார்.

      இறையிலி கிராமங்கள் பிரம்மதேயமாக மாத்திரம் அழைக்கப்படவில்லை. சதுர்வேதி மங்கலம், மங்கலம் என்ற பெயருடன் முடியும் இடங்கள் மற்றும் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. ஆனால் பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்ட ஊர்களில் பிரம்மாண்டமான சிவன் கோயில்கள் இருந்தன.

      நீக்கு
    3. இந்தக் கதையில் வரும் பிரம்மதேசம் நெல்லைக்கு அருகில் இருந்ததாக வாசித்த நினைவு! காந்த்ளூர்சாலை கல்வெட்டு வரிகளுடன் முடிச்சு போட்டு கதை அட்டகாசமாக எழுதப்பட்டிருக்கும், நெல்லை.

      நீக்கு
    4. கல்கி புண்ணியத்துல சோழர் வரலாறு பலருக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதை வைத்து நல்ல கதாசிரியர்கள் நிறைய நாவல்கள் எழுதலாம். ஏன் ராஜேந்திரன், பஞ்சவன் மாதேவிக்கு மாத்திரம் பள்ளிப்படை எழுப்பினான், ராஜராஜ சோழன் ஏன் சித்தப்பாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது?, உத்தம சோழன் அரசில் ஏன் ஆதித்த சோழனைக் கொன்றவர்களுக்கு தண்டனை தரப்படவில்லை?, குந்தவை ஏன் புத்தமதம் சார்ந்து நிறைய செய்தார்கள்?, ..சேர நாட்டைச் சேர்ந்த நம்பூதிரிகளுக்கு ஏன் ஆதித்தன் மீது கோபம்? எதனால் சோழ அரசின் முக்கியஸ்தர்கள் ஆதித்தனுக்கான காவலில் கோட்டை விட்டார்கள் (விட்டார்களா இல்லை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்களா?), ஆதித்தன் மிகக் கோபக்காரனா? அருண்மொழி போல பிறருடன் அனுசரித்துப்போகவில்லையா?.... என்று பல்வேறு கேள்விகளுக்கு விடை காணலாம்.

      நீக்கு
    5. நீங்களுமே ஒரு தொடர் எழுத முயலுங்கள் ஜீவி சார். This will keep you engaged and energetic

      நீக்கு
  3. இலவச வாசிப்பில் அந்த தளம் இருந்தது. நான் படித்த நேரத்து உங்களுக்கும் அந்த நாவலின் காப்பியை வாட்ஸாப்பில் அனுப்பி வைத்த நினைவு இருக்கிறது ஸ்ரீராம்.
    நாவலின் முடிவு தான் சுவரஸ்யம். கொலைக்குற்றம் அந்த ஆள் மீது நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கும் கட்டம். கொலைக்குறறத்திற்குத் தண்டனை அவன் கழுத்தை சீவுவது தான் என்ற நிலையில் பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் தன்னை பீடித்து விடுமே என்ற அச்சத்தில் சுந்தரசோழன் அவனை நாடு கடத்துவதாக தீர்ப்பளிக்கிறார்.
    சும்மா சொல்லக்கூடாது, அருமையான நடையில் விருவிருப்பாக நகரும் வகையில் நாவல் நகரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்ஸாப் வெள்ளத்தில் எங்கே போய்த்தேட?!!  மறுபடி அனுப்ப முடியுமா?

      நீக்கு
    2. பார்க்கலாம். ஹி..ஹி.. 'அந்த' ஞாபகம் வரும் பொழுதெல்லாம் நெல்லையும் கூடவே நினைவுக்கு வருவார். நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. பார்க்கலாம்.

      நீக்கு
    3. பிராமணனைக் கொல்வது பிரம்மஹத்தி தோஷத்துக்கு வழி வகுக்கும் என்பதால், பிராமணன் மீது பெரிய குற்றம் இருப்பின், நாடு கடத்துவது, அவனது சொத்துக்களைப் பறித்துக்கொள்வது என்பது வழக்கமாக இருந்தது. குடும்பத்தைச் சேர்ந்த அனைவரின் சொத்துக்களையும் பறித்துக்கொள்வார்கள். இதுதான் ரவிதாசன் போன்றோருக்கு நடந்தது.

      நீக்கு
    4. உஷ்! உரக்கச் சொல்லிவிடாதீர்கள்! பிராமணன் தனக்கு வசதியாக எப்படியெல்லாம் நீதி நேர்மைகளை வளைத்திருக்கிறான் என்று ஊர் சொல்லக்கூடும்!

      நீக்கு
    5. இவைகள் வேத சாஸ்திரப் பிரமாணப்படிதானே ஜீவி சார். வேத்த்தைத் தொகுத்த ரிஷிகளில் எத்தனை பேர் பிராமணர்கள்?

      நீக்கு
  4. உத்திரகோசமங்கை நடராஜர் பச்சையாக, வித்தியாச அழகோடு காட்சி தருகிறார்.

    ஸ்வாமியின், பெருமாளின் சிறிய முகம், நெற்றிக்கு ஏற்ப சந்தன அல்லது குங்குமப் பொட்டுக்களைப் பொருத்தமாக வைக்க என்றுதான் இந்தக் குருக்கள்கள், அர்ச்சகர்கள் கற்றுக்கொள்வார்களோ.. தெரியவில்லை.
    இவர்களில் சிலர், கோவில் விக்ரஹங்களுக்கு அலங்காரம் செய்வதற்கு லாயக்கற்றவர்கள் என்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் இதுபற்றி யாரும் வெளியில் முணுமுணுப்பதுகூட இல்லை. சாமியைக் குறை சொல்வதாக ஆகிவிடப்போகிறதே என்கிற பயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார்.

      சிலர் (அர்ச்சகர்கள்) பொறுமையா அழகா அலங்காரம் செய்வாங்க. பலருக்கும் ஆசை இருக்கும், ஆனால் அதற்குத் தேவையான பொருட்கள் இருக்காது.

      உங்க கவலை உங்களுக்கு. அவங்க கவலை அவங்களுக்கு. ஏதேனும் விஐபிக்கள் வருவாங்க... நடராஜர் நெற்றியில் இருக்கும் சந்தனத்தை ஒரு இலையிலோ இல்லை பாக்கெட்டிலோ கொடுத்தால் நூறு ரூபாய் கொடுப்பாங்க. அழகு என்பதற்காக இந்தக் காலத்துப் பெண்கள் வைத்துக்கொள்வதுபோல மிகச் சிறிய பொட்டை வைத்தால் அது விஐபிக்களின் ஆசையை நிறைவேற்றுமா?

      நீக்கு
    2. கோமதி துவாரகை கோயிலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன். அங்கு கிருஷ்ணரை நன்கு அலங்காரம் செய்து (அங்கெல்லாம் உலோக விக்கிரகங்கள் இல்லை. துணியில் அலங்காரம் என்று நினைவு), பொறுமையா கண்ணாடிலாம் கிருஷ்ணருக்குக் காண்பிப்பாங்க. எல்லா ஷோடச உபசாரங்களையும் ஆத்மார்த்தமா பண்ணுவாங்க. வடநாட்டில் பக்தி அதிகம் என்று உணர்ந்த தருணங்கள் நிறைய. (தமிழ் நாட்டில் ஆச்சாரம் அதிகம்)

      நீக்கு
  5. உத்தரவு மங்கை மரகத நடராஜர் தரிசனம் பெற்றோம். .

    எனது தாயார் உயிருடன் இருந்த போது தினமும் தேவாரங்கள் படித்து வணங்குவார் . உத்தரகோசை மங்கை பற்றியும் பாடுவார்.

    பிரம்மதேசம் சோமாஸ்கந்தர் கோவில் மிகப் பெரிய வளாகம் . நிறைந்த பல படங்களை எமக்குக் காணப் பகிர்ந்துள்ளீர்கள். கண்டுகொண்டோம் . வரலாறுகளுடன் படித்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள்.

      சமீப காலமாக, சொற்றுணை வேதியன் பதிகமும், ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே பதிகமும் அடிக்கடி கேட்கிறேன். பாடல்களின் பொருளை மனதில் கொண்டால் பக்தி உணர்வு தானே வரும்.

      இந்தக் கோயிலில் நான் சென்றிருந்த இரண்டு சமயங்களிலும் ஆள் அரவமில்லை.

      நீக்கு
  6. நவ கைலாயம் போனப்போப் பார்த்த நினைவு. ஏனெனில் நாங்க நவ கைலாயம், நவ திருப்பதி எல்லாம் போய்ப் பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. 19 அல்லது 20 ஆவது வருடமோ? ஆமாம் என நினைக்கிறேன். மறுபடி வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தாமிரவருணி புஷ்கரத்திற்குச் சென்றிருந்தபோது, நாலு கோயில்கள், நவ கைலாசத்தில் பார்த்தேன், கோடகநல்லூரில் ஆரம்பித்து. நவ திருப்பதி பொதுவா வருடத்துக்கு ஒரு முறை சென்றுவிடுவேன். போன நவம்பரில் போனது. இந்த வருடம் இன்னும் போகலை, நேரம் கிடைக்கலை.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. கோவில் விவரங்கள், மற்றும் வரலாறு அருமை.
    பிரம்ம தேசம் பார்த்தமாதிரியும் இருக்கிறது, பார்க்காது போலவும் இருக்கிறது. என் சித்தி அம்பாசமுத்திரத்தில் இருந்த போது போய் இருக்கிறேன் ,அவர்கள் வீட்டுக்கு சித்தப்பா ஒரு பெரிய கோயிலில் பணி புரிந்தார்கள் அங்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். அந்த கோயில் தானா தெரியவில்லை. அண்ணன் அம்பாசமுத்திரத்தில் இருந்த போது போய் இருக்கிறேன், அவர்களும் பெரிய சிவன் கோயில் அழைத்து சென்று இருக்கிறார்கள், நீங்கள் சொன்ன கோயில் தானா தெரியவில்லை.

    உத்திர கோச மங்கை கோயிலுக்கு மார்கழி திருவாதிரைக்கு போய் இருக்கிறோம். சந்தனம் சாற்றியும், சந்தனத்தை களைந்து விட்டு அபிஷேகம் நடக்கும் அந்த சந்தனம் பெரிய தொட்டியில் சேகரிக்க படும். மீண்டும் சந்தனம் சாற்றி அலங்காரம் பூஜை பார்த்து இருக்கிறோம்.

    இன்று மரகத நடராஜர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்குச் சாத்தியிருக்கும் சந்தனம் அவ்வப்போது உதிரும். அதனை பிரசாதமாக பாக்கெட்டில் போட்டுக் கொடுப்பார்கள். களைந்தபோது தரிசனம் இன்னும் வாய்க்கவில்லை.

      நீக்கு
    2. மரகத நடராஜரை தரிசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி!

      நீக்கு
  9. எவ்வளவு அருமையான கோயில் ! இப்படி பாழ்பட்டு கிடப்பதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. உள்ளூர் மக்கள் கோயிலுக்கு வந்தாலே போதும். எங்கோ போய் எல்லாம் உழவார பணி செய்கிறார்கள். உழவார பணி செய்ய காத்து இருக்கும் மக்களிடம் சொன்னாலேபோதும் வந்து செய்து கொடுப்பார்கள்.
    அப்பர் பெருமான சொன்னது போல கோயிலில் உழவார பணியாக இரண்டு புல்லை பிடுங்கி எறிந்தாலே போதும். அவர் கையில் உழவார கருவியுடன் தான் காட்சி தருவார்.

    கோயில் சிலைகளும் கோபுரங்களும், விமானங்களும் அழகாய் இருக்கிறது. நீங்கள் அடுத்த முறை போகும் போது கோயில் சிறப்பாக சீர் அமைக்கப்பட்டு இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் உழவாரப்பணி தேவைப்படும் கோயில். தற்போது மாறியிருக்கலாம். இன்னும் சில மாதங்களுக்குள் நெல்லை செல்ல ஆசை. பார்க்கலாம்.

      உழவாரப் பணி என்பது உன்னதமானது. நம்முடைய கோயிலை நாம்தானே சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

      நீக்கு
  10. சாதாரணமாக கோவில் பற்றி எழுதும்பொழுது தல வரலாறுக்குதான் முக்கியத்துவம் அளிப்பார்கள். நீங்கள் அந்த கோவிலோடு சம்பந்தப்பட்ட சரித்திர தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பாக எழுதுகிறீர்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். இதைச் சாக்கிட்டு சரித்திரம் தெரிந்துகொள்வோம் என்ற ஆசைதான்.

      அதுவும் தவிர, தல வரலாறு என்பது அவ்வளவு ஆர்வத்துடன் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமா?

      நீக்கு
  11. வித்தியாசமான கோணங்களில் புகைப்படங்கள் அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. நவ திருப்பதி கோவில்களுக்கு மட்டும் செல்லலாம் என்று கிளம்பிய நாங்கள் கீதா அக்காவின் வழிகாட்டலினால் நவ கைலாசமும் சென்றோம். அதில் பாபாநாசத்தைதானே சூரிய ஷேத்திரம் என்பார்கள்?

    பதிலளிநீக்கு
  13. நவ திருப்பதி கோவில்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. நவ கைலாச கோயில்கள் அத்தனை சிறப்பாக பராமரிக்கப்படவில்லை. சில கோவில்களில் அர்ச்சகர் ஒரு வேளை மட்டும் வந்து பூஜையை முடித்துவிட்டு சென்று விடுவாராம். இப்போது ஒரு வேளை நிலமை மாறியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!