11.9.12

பாரதியார் சில நினைவுகள் - படித்ததன் பகிர்வு



81 ல் குமுதத்தில் "நான் பாரதியாரைச் சந்தித்தால்?" என்ற தலைப்பில் குமரி அனந்தன், கி ஆ பெ விஸ்வநாதன், கி வீரமணி, கமலஹாசன், அப்துல் சமத் என்று பலரும்  பாரதியார் செய்திகளுடன் தத்தம் கற்பனைகளைக் கலந்து எழுதி இருந்தார்கள். அதில் குமரி அனந்தன் 'வாஞ்சி பற்றி குறிப்பிட்டதும் பாரதியின் முகம் மலர்ந்தது'என்று எழுதி இருப்பதை மறுத்து, பாரதியார் வன்முறைக்கு எதிரானவர் என்று எட்டயாபுரம் பா.நா கணபதி,  பாரதியார் அது குறித்து எழுதியிருந்த கட்டுரையை எடுத்துப் போட்டிருக்கிறார். இதை மறுத்து ரகமி பாரதியார் ஆஷ் கொலை வழக்கில் மறைமுகமாக சம்பந்தப் பட்டவர் என்பது போல அப்போது நடந்த வாதங்களை எடுத்து அடுக்கியிருக்கிறார். 'எழுத்தாளன்' பத்திரிக்கை ஆசிரியர் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்  கி. ஆ. பெ எழுதியுள்ள பாரதி பற்றிய கட்டுரையில் பல முரண்பாடுகள் இருப்பதைப் பட்டியலிடுகிறார். கி ஆ பெ சொல்லியுள்ள சில வரிகள் குறித்தும் மற்றும் பொதுவாகவும்  அப்புறம் ஒரு இதழில் பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி "என் பாட்டனாரை இப்படியெல்லாமா இளக்காரப் படுத்துவது?" என்ற தலைப்பில் கடிதம் ஒன்றும் எழுதி இருக்கிறார். அதைக் கீழே பகிர்கிறோம்...

"மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா பெருமைப்படும் விதத்தில் அரசினரால் தொடங்கப் பட்டது என்பது நாடறிந்த விஷயம். ஏராளமான பெரியவர்களும் அறிஞர்களும் தத்தம் அன்பு உரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. எனினும், பாரதியாரின் பேத்தி-தங்கம்மாளின் புதல்வி என்ற உரிமையிலே அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

பாரதியார் வறுமையில் வாடியது உண்மைதான் என்ற போதிலும் வறுமையை துச்சமென உதறியவர் அவர். "சாப்பிட்டால் பொரித்த அப்பளத்துடன் நல்ல சாப்பாடு, இல்லையெனில் பழமும் பாலுந்தான்" என்று என் பாட்டியார் செல்லம்மா பாரதி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி இன்று பேசுவோர் சற்று நாகரிகமாக இருக்க வேண்டுமென வேண்டுகிறேன். கிழிசல் கோட்டு, எலி கடித்த மாதிரி பொத்தல்கள், அதை மறைக்க மனைவியினுடைய கருப்புசீலை, சாயப்பூச்சு என்றெல்லாம் வர்ணிக்கும் அளவுக்கு அவர் ஒருநாளும் இருந்ததில்லை என்று என் பாட்டியார் கூறக் கேட்டிருக்கிறேன்.

என் தாயார் தங்கம்மாள் பாரதி உயிருடன் இருந்த காலத்தில் அவர் கீரைத்தண்டைத் தெருவிலே  விற்றார் என்று பத்திரிகையில் எழுதி இருந்ததையும் பார்த்திருக்கிறேன்.

தன் பெண்ணுக்குத் தன் கைப்பட தாரை வார்த்துக் கல்யாணம் செய்து கொடுத்தவர் பாரதியார். அப்படியிருக்க, 'பாரதியார் தன் மகள் கல்யாணத்துக்கு வர மறுத்து விட்டார். நான்தான் கல்யாணத்துக்கு வேண்டிய வேஷ்டி புடைவைகளை கடனாகக் கொடுத்துதவிக் கல்யாணத்தை நடத்தி வைத்தேன்' என்று என் காதுபடவே அன்பர் ஒருவர் கூறினார்.

புதுவை அரசு நடத்திய பாரதி விழாவிலும் ஒரு செய்தி கேள்விப் பட்டேன். 'பாரதியார் என் மடிமீது படுத்து உயிரை விட்டார்' என்று ஒரு அன்பர் கூறியிருக்கிறார். இப்படிப் பட்ட உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கேட்கும்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எல்லாம் அன்பின் மிகுதியால் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் என்ற போதிலும் எங்கள் குடும்பத்தினரால் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாரதியார் இறந்த பிறகுதான் நான் பிறந்தேன் என்றாலும், என் பாட்டியாரால் முழுக்க முழுக்க வளர்க்கப் பட்டவள் நான். 'பாரதியார் ஒரு அலங்காரப் பிரியர். இறப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பு கூடத் தான் அணிந்திருந்த அல்பாகக் கோட்டையும், தலைப்பாகையையும் சரி செய்து கொண்டார். நல்ல ஆடைகள் அணிவதில் அவருக்கு விருப்பம் மட்டுமல்ல, அதை அனைத்திலும் மிகுந்த கவனமும் செலுத்துவார்' என்றெல்லாம் என் பாட்டியார் கூறக் கேட்டிருக்கிறேன். எனவே பாரதி அன்பர்கள் எது சொன்னாலும் சரி, எழுதினாலும் சரி அவரது சொந்த வாழ்க்கையைப்பற்றிக் குறிப்பிடும்போது அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். பசியின் கொடுமை காரணமாகப் பாரதியார் 'ரோட்டில் கிடந்த எச்சிலையைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்' என்ற அளவிற்குக் கூட நாளை யாரும் சொல்லி விடுவார்களோ என்று பயமாயிருக்கிறது"

நெஞ்சில் 'புற'மும்..!
 



8.9.12

பாசிட்டிவ் செய்திகள் 2/9/12 To 8/9/12


கோவை அருகே கிணத்துக்கடவில் இயங்கும் 'சரணாலயம்' என்ற அமைப்பை நடத்தும் வனிதா கல்லூரிப் பேராசிரியையாக இருந்தவர். குழந்தையிலிருந்து முதியவர் வரை எய்ட்சால் பாதிக்கப் பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். அரசே கூட நிதியுதவி செய்து நோயாளிகளையும் இங்கு செல்லச் சொல்லிப் பரிந்துரைக்கிரதாம். சரணாலயத்துக்குள்ளேயே  கிராமச் சூழ்நிலையில் ஒரு வீட்டில் வசிக்கிறாராம் வனிதா. தீபாவளி போன்ற முக்கிய நாட்களில் நல் இதயம் கொண்டோரின் நன்கொடைகள் பெரிய அளவில் உதவுகின்றனவாம். நல்மனம் படைத்த மக்களும் அந்நாட்களில் வந்து குழந்தைகளைப் பார்த்து இருந்து திரும்புகின்றனராம். (தினமலர் ஞாயிறு)
====================

நகர்ப்புறக் கழிவிலிருந்து 1700 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது. இப்போது 2.3 சதவிகிதம்தான் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறதாம். சென்னைக் கருத்தரங்கில் தகவல்.(தினமணி-திங்கள்)
======================

6,000 லிட்டர் 400 ரூபாய் என்று நல்ல குடிதண்ணீரை விற்கிறது சென்னைக் குடிநீர் வாரியம். ஃபோன் செய்தால் போதும் வீடுதேடி வந்து விடும் என்று கூறி பகுதிவாரியாக எந்தெந்த ஏரியாவுக்கு எந்தெந்த எண்களில் தொடர்புகொள்ள வேண்டும் என்று தொலைபேசி எண்களும் தந்திருக்கிறது குடிநீர்வாரியம். தரமற்ற குடிநீரை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்குவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.(தினமலர்)
====================

மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சந்தோஷ் என்ற வாலிபர் வெறும் 4 கிலோ மட்டுமே எடை கொண்ட பைக் ஒன்றை வடிவமைத்து அதில் ஒரு ரவுன்ட் வந்தும் அசத்தியிருக்கிறார். 'மூஷிகா' என்று பெயரிடப் பட்டிருக்கும் இந்த பைக் 12 இன்ச் அகலமும், 18 இன்ச் உயரமும் கொண்டதாம். மணிக்கு 12 முதல் 15 கிமீ வரை செல்லக் கூடியது. 4 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 70 கிலோ எடை கொண்டவர் அமர்ந்து ஒட்ட முடியுமாம். யூடியூபில் இதன் வீடியோ இருக்கிறதாம். லிம்கா சாதனைப் புத்தகத்திலும், இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறதாம். (முகப் புத்தகம்)
==========================

கோவை பீளமேடு பகுதியிலிருந்து ஒருவருடத்துக்கு முன்னர் காணாமல் போன பதினாறு வயது ஆதித்யா என்னும் சிறுவன்
Facebook உதவியுடன் மீட்கப் பட்டிருக்கிறார். தந்தை உமாபதி கட்டிடப் பொறியாளர். தாய் செந்தாமரை சூலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். ஒருவருடத்துக்கு முன்னர் வீட்டை விட்டுச் சென்று விட்ட அந்தப் பையன் முகப் புத்தகத்தில் தன்னுடைய நண்பர்களோடு தொடர்பில் இருந்தது அவன் நண்பர்களை விசாரித்தபோது தெரியவர, போலீசார் முகப்புத்தகத்தின் அமெரிக்க தலைமை அலுவலகத்திலும், அயர்லாந்து துணை அலுவலகத்திலும் தொடர்புகொண்டு உதவி பெற்று, ஆதித்யாவின் மும்பை இருப்பிடம் தெரிந்து அங்கு சென்று பேசி அழைத்து வந்துள்ளனர். (தினமலர், தினமணி...)
======================

அரசு விரைவுப் பேருந்துகளில் முப்பது நாட்களுக்குமுன் முன்பதிவு செய்யலாம் என்றிருந்த நிலையை மாற்றி 60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஏறுமிடமும் தங்கள் வசதிக்கேற்ப தெரிவு செய்து கொள்ளலாம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. தீபாவளிக்கு முன்பதிவு செய்பவர்கள் நாளை - செப்டம்பர் 9 ம் தேதி - முன்பதிவு செய்யலாம். (தினமணி)

====================

விரைவு ரயில்கள், வண்டி எண் 16854 திருச்சி-சென்னை எழும்பூர், செப்டம்பர் ஐந்து முதல் அக்டோபர் ஆறுவரை,

ரயில் எண் 16853 சென்னை எழும்பூர்-திருச்சி ரயிலில் செப்டம்பர் எட்டு முதல் அக்டோபர் ஏழு வரை,
ரயில் எண் 16107 சென்னை எழும்பூர்-மங்களூர் ரயிலில் செப்டம்பர் ஐந்து முதல் அக்டோபர் நான்கு வரையிலும்,
ரயில் எண் 16108 மங்களூர்-சென்னை ரயிலில் செப்டம்பர் ஏழு முதல் அக்டோபர் ஆறு வரையிலும்
முன்பதிவு செய்த பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்கப் படுகின்றன. (தினமணி)
=======================

சென்னையில் ராயப்பேட்டை ஐயாப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்த நூர்ஜஹான் என்ற பெண்மணி ஒரு பையில் வைத்திருந்த, 5.50 லட்சம் மதிப்புள்ள, 25 பவுன் நகையைத் தனது ஆட்டோவிலேயே விட்டு விட்டுச் சென்றதை அறிந்த ர. செந்தில் என்ற முப்பத்தி நாலு வயது ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பையை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.(தினமணி)
==================

1937 இல் தொடங்கப் பட்ட பஞ்சாப் அசோசியேஷன் ஏழைகளுக்காகக் குறைந்த கட்டணத்தில் பள்ளிகள் தொடங்க திட்டமிட்டுள்ளது. சங்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் சங்கச் செயலர் ரமேஷ் லம்பா இதை அறிவித்து விட்டு, ஏற்கெனவே நடைபெற்றுவரும் ஐந்து மெட்ரிக் பள்ளிகள், ஆறு சுகாதார மையங்கள், ஒரு கல்லூரி விடுதி, ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு டெய்லரிங், நோட்புக் தயாரித்தல், போன்ற தொழிற்பயிற்சி வழங்கப் படுவது போன்ற சேவைகளையும் நினைவுகூர்ந்து பேசினார்.

====================

மதுரையில் நடந்த, தென்மண்டல அளவிலான யோகா போட்டியில் மதுரை அருப்புக்கோட்டை ரோடு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்கள் 9 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். பதஞ்சலி யோகா, மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தரணீதரன், அபகீதா, கார்த்திகா, கார்த்திகேஷ், காவியா, நிஷா லட்சுமி, விஜயசாரதி, கீர்த்திகா, ஹரிஹரன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றவர்கள். (தினமலர்)

=====================

இந்தியாவின் 100 வது ராக்கெட் நாளைக் காலை 9.51 க்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப் படுகிறது. 1975, ஏப்ரல் 19 முதல் விண்வெளிப் பயணம். 62 செயற்கைக்கோள்கள், 37 (பிறநாடுகளின் செயற்கைக் கோள்களைத் தாங்கிச் செல்லும்) ராக்கெட்டுகள் இதுவரைச் சாதனை. (தொலைகாட்சி, மற்றும் செய்தித்தாள்கள்)

===================

இன்றைய T20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கேன்சரை எதிர்த்துப் போராடிய 'தன்னம்பிக்கை யுவராஜ்' களமிறங்குகிறார். 

===================

தர்மபுரி: மருத்துவ துறையில், சேவை மனப்பான்மை குறைந்து வரும் நிலையில், தர்மபுரியில், தனியார் கண் மருத்துவர், ஏழைகளுக்கு, இலவச கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் கண் மருத்துவர் பாரிக்குமார், 45. திருப்பத்தூரில் பள்ளி படிப்பையும், செங்கல்பட்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பும், சென்னையில் கண் மருத்துவத்துக்கான உயர் படிப்பையும் படித்துள்ளார். படிக்கும் போதே சேவை மனப்பான்மை கொண்ட பாரிக்குமார், 2000ம் ஆண்டு கண் மருத்துவர்கள் குறைவாக இருந்த தர்மபுரியில், கண் மருத்துவமனை தொடங்கி ஏழைகளுக்கு தொடர்ந்து இலவச சிகிச்சை அளித்து வருகிறார். தர்மபுரி கண்தான மையத்தினருடன் இணைந்து இறந்தவர்களின் கண்களை இலவசமாக ஆப்ரேஷன் செய்து, கண் இல்லாதவர்களுக்கு கண் ஒளி கொடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது வரை, இறந்த, 240 பேரின் கண்களை இலவசமாக ஆப்ரேஷன் மூலம் தானமாக பெற்று, பெங்களூரு மற்றும் கோவை கண் மருத்துவ மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், கண் அலர்ஜி மற்றும் பிறவி குறைபாடு, கிருமிகளால் கண் பார்வை பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, கண் பரிசோதனை, அறுவை சிக்சைகளை, 12 ஆண்டாக இலவசமாக செய்து வருகிறார். இவர் இது வரை, 15 ஆயிரம் கண் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில், 7,000 சிகிச்சை இலவசமாக செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட, 300 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்திருப்பது குறிப்பிடதக்கது. இவரது மருத்துவமனையில், 2008ம் ஆண்டு முதல் ஏழைகளுக்கு மட்டும் முழு நேர இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.
மனித நேயத்துடன் மருத்துவ பணிக்கு பெருமை சேர்க்கும் கண் மருத்துவர் பாரிக்குமார், கண் தான தினத்தில், கண் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என வலியுறுத்தி கூறியதாவது: மனிதனுக்கு, கண் மிகவும் முக்கியமான உறுப்பு. இதை மனிதர்கள் தங்கள் இருக்கும் வரை பாதுகாக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை செய்து கண்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மதுவினால் கண்பார்வை பாதிக்கும் நிலையுள்ளதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு, கண்கள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் கண்தானம் வழங்க முன் வர வேண்டும். இதன் மூலம் நாம் மண்ணை விட்டு மறைந்தாலும், நம் கண்கள் பார்வையற்ற பலருக்கு ஒளியாய் அமையும், மண்ணில் தொடர்ந்து வாழும். இவ்வாறு அவர் கூறினார்.
=======================

ஜெர்மனியின் எம்டன் போர்க்கப்பலின் பீரங்கிக் குண்டு வீச்சிலும் தப்பிய, லட்சக் கணக்கான மக்களுக்கு நீதி வழங்கிக் கொண்டிருக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று.

==============================

மரபணு நோயால் பதிக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கு  நடிகர் கார்த்தி -  நடிகர் சிவகுமாரின் இளைய மகன் - 17.5 லட்சம்

ரூபாய் வழங்கினார்.
=============================

சென்னைப் பல்கலைக் கழகக் கண்டுபிடிப்பான ஆளில்லா விமானம் 'நட்ஷா' முதல் ஆய்வைத் தொடங்கியது. இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க 25 லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. 1.8 கிலோ எடையுள்ள இந்த விமானம் ஒரு கிலோமீட்டர் உயரத்தில் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் பறந்து படங்களை எடுத்து அனுப்பும் திறனுள்ளது. மனிதனால் செய்யப் படும் ஆய்வுகளுக்குப் பலமணிநேரம் செலவு செய்ய வேண்டிய நிலையில் ஆளில்லா விமானத்தில் உள்ள கேமிராவில் பதிவாகும் காட்சிகளில் எத்தனை கற்கள் உள்ளன, அதன் பரப்பளவு போன்றவற்றைத் துல்லியமாக அறிய முடியும் என்கின்றனர். மேலும் இதில் சில நுண்ணிய ஜி பி எஸ் கருவிகளைப் பொருத்தி விமானத்தைப் பறக்கவிட்டு தரைக்கு அடியில் என்னென்ன உள்ளன என்பதையும் கண்டறிய முடியும் என்கின்றனர் வல்லுனர்கள். (தினமணி)
==============

சென்னை குளிர்ந்து.... மழையில் குளித்தது...!   நேற்றிரவு முதல் விடா மழை! 
=================  

கொச்சி: சிவகாசி, பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, முதலிப்பட்டியில், தனியாருக்கு சொந்தமான, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 38 பேர் பலியாகினர்; 44 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர் மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில், காயமடைந்தவர்களுக்கு, "அக்னி ஜித்து' என்ற, மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும். சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், நேற்று முன்தினம் இரவு, சிவகாசி சென்றடைந்தன. இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில்,  "நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன்,'' என்றார்.
======================

6.9.12

ரா கி ரங்கராஜன்


 

ப்ரொபசர் மித்ரா, இருபத்து மூன்றாவது படி.

70 களில் குமுதத்தில் வந்த கதைகள் . கிருஷ்ணகுமார் என்ற பெயரில் எழுதியிருந்தார். 

                
ப்ரொபசர் மித்ரா பத்மஸ்ரீ பட்டத்துக்கு பரிந்துரைக்கப் பட்டிருப்பதில் தொடங்கும் கதையில் அவர் பேச்சை மீறி நடந்து கதவிடுக்கில் மாட்டி தவிக்கும் பூனை உயிரிழப்பதை அவர் குரூரப் புன்னகையுடன் ரசிப்பதில் அவர் கேரக்டர் சொல்லப் படுகிறது. இந்தியாவின் தலை சிறந்த மேஜிக் நிபுணர் ப்ரொபசர் மித்ரா அந்தக் கலையை தன் நண்பர் நீலகண்டனிடமிருந்து கற்றுத்தான் வாழ்வின் அடித்தட்டிலிருந்து மேலே வந்திருக்கிறார். வாழ்வின் ஆரம்ப நாளிலிருந்தே நண்பன் நீலகண்டனுடன் இணைத்து தன் மனைவியின் மேல் சந்தேகப்படும் அவர் அதை உறுதி செய்து கொள்வதற்காகவே மனைவி ஜெகதாவின் விருப்பத்தையும் மீறி மகள் நிம்மிக்கு ஹிப்னாடிசம் கற்றுத் தருகிறார். வார்த்தைகளிலும் செயல்களிலும் மனைவி ஜெகதாவைச் சித்திரவதைச் செய்யும் அவர், நீலகண்டனையும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக்கி தன் வீட்டிலேயே பூட்டி வைத்திருக்கிறார். நிம்மியின் அப்பாவித்தனம் கல்யாணம் என்ற இளைஞன் மேல் வரும் காதலால் மாற, அவளால் ஹிப்னாடிசத்தில் மனதை ஒருமுகப் படுத்த முடியாமல் போகிறது. காரணம் கல்யாணம்தான் என்று அறிந்த மித்ரா அவனைக் கொல்லச் செய்யும் சதி கடைசியில் அவர் மனைவி ஜெகதா குற்றமற்றவர் என்று அறியும் தருணம் சந்தர்ப்பவசத்தால் அவர் செய்த சதி ஜெகதாவையே கொல்கிறது. நிம்மி மூலம் அறிய நினைத்த ரகசியத்தை கல்யாணம் மூலம் தெரிந்து மித்ரா திருந்தும் சமயம்தான் அந்த மரணம் நிகழ்கிறது. 
                  
நிமிடத்தில் தன்னை மாற்றிக் கொள்ளும் கேரக்டராக, குரூரத்தை உள்ளே மறைத்து, வெளியே தேன் தடவி பேசுபவராக மித்ரா. அவரிடம் பயப்படும், பணியும், அதே சமயம் மகளிடம் தாய்மைப் பாசம் காட்டும் ஜெகதா, இளம் கல்லூரிப் பெண் நிம்மி....



மாருதியின் ஓவியங்கள் இவர்களுக்கெல்லாம் உயிர் கொடுத்து உலவ விட்டன.



ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சில ஆங்கில வரிகள்... உதாரணத்துக்கு,
 

While some people can not be made to carry out hypnotic suggestions contrary to their principles, there are certainly some, who can..... இப்படி. 

ஜெகதாவை ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்த்தி சோதனை செய்யும்போது நாற்பது வயதை நெருங்கும் ஜெகதாவின் குரல் ஆறு வயது நினைவுகளை மீட்டும்போது சிறுமியின் குரலாகவும், இருபது வயதை சோதனை செய்யும் போது யவ்வனப் பெண்ணின் குரலாகவும் ஒலித்தது என்கிறார் ஆசிரியர்.  
  


அந்த நாவலிலிருந்து சில வரிகள்....(கிளைமேக்சில்) நிம்மி மனதில் ஊறும்  காதலை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்...


மல்லாந்த வண்ணம் அவனைப் பார்த்தாள் நிம்மி. அவனுடைய கம்பீரமான தோற்றம், காதலும் கருணையும் ததும்பும் கண்கள், அவனுடைய  உள்ளத்தின் ஆழம்-அத்தனையும் அவளை மனம் நெகிழச் செய்தன. அவளுடைய பாதத்திலிருந்து ஒரு சிலிர்ப்பு புறப்பட்டு, நாடி நரம்புகளில் புகுந்து, ரத்தத்தில் கலந்து, கால்களின் வழியே மேலேறி, மார்பில் வியாபித்து, கைகளில் புளகம் ஏற்படுத்தி, தோள்களில் படர்ந்து, நெஞ்சில் குழைந்து, நாவில் இனித்து, பற்களில் பிரகாசித்து, உதடுகளில் துடித்தபோது, அவ்வளவையும் திரட்டி ஒற்றைச் சொல்லாக்கி-
       
"கல்யாணம்" என்றாள்.
            
"எப்போது?" என்றான் அந்தக் குறும்புக்காரன். 
                   
நிறைய கதைகள் அதுவும் வெவ்வேறு பெயர்களில் எழுதித் தள்ளும்போது அவ்வளவுக்கும் கதைக்கரு வேண்டுமே.... இதை எப்படி யோசித்திருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன். நடுவில் ஓரிடத்தில் நிம்மியைக் கடத்தி விட்டு நிம்மி கொடுத்த அடியில் கால் உடைந்து அவளுடனேயே ஆஸ்பத்திரிக்குச் செல்லும்போது வரும் உரையாடலில்,
              
"நெவில் சூட் என்பவற்றின் நாவல்களைப் படித்திருக்கிறீர்களா நிம்மி? ஆஸ்திரேலிய எழுத்தாளர்" என்றான் கல்யாணம்.
                
அந்த எதிர்பாராத கேள்வியைக் கேட்டுத் திகைப்புற்றவளாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்  நிம்மி. ஆனால் ஏதும் பேசவில்லை. 
                 
""டவுன் லைக் ஆலிஸ் என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார் அவர். மலேயாவில் யுத்த காலத்தில் நடந்ததாகக் கதை. இரண்டு ஜப்பானிய சோல்ஜர்களிடம் யுத்த கைதிகளாக இருக்கிறார்கள் சில வெள்ளைக் காரப் பெண்கள். சோல்ஜர்களுக்கு மேலதிகாரிகள் எந்தவிதமான உதவியும் செய்யாமல் ஓடி விடுகிறார்கள்.இந்தக் கைதிகளை என்ன செய்வதென்று தெரியாமல் ஊர் ஊராக அலைகிறார்கள் அந்த ஜப்பானிய சோல்ஜர்கள். சாப்பாட்டுக்குக் கூட லாட்டரி. நடுவே காய்ச்சலில் வேறு படுத்து விடுகிறார்கள்.கடைசியில் அந்தக் கைதிப் பெண்கள்தான் அந்த சோல்ஜர்களைக் காப்பாற்றி அழைத்துப் போகிறார்கள்..."
                  
அடிபட்ட நிம்மியுடனேயே ஆஸ்பத்திரிக்குச் செல்வதைப் பற்றிச் சொல்ல வரும் கல்யாணம் சொல்லும் உரையாடல் இது. ரா கி ர ஏகப் பட்ட ஆங்கில நாவல்கள் படித்து மொழிபெயர்க்கவே கஷ்டம் என்று சொல்லப் படுபவற்றைக் கூட ((2/9/12 தேதியில் தினமலர் வாரமலரில் பாக்கியம் ராமசாமி ரா.கி.ர பற்றிய தன் நினைவுகளைச் சொல்லியிருக்கிறார்.அதில் இந்த விவரமும் வருகிறது!) தமிழில் மொழிபெயர்த்து கலக்கி இருக்கிறாரே.... இந்நாவலின் இந்தப் பகுதியை வைத்து டெவலப் செய்யத் தொடங்கியிருக்கலாம் என்று தோன்றியது! அல்லது மெஸ்மரிசம் ஹிப்னாடிசம் பற்றி ஒரு கதை எழுத நினைத்ததில் இதைச் சேர்த்திருக்கலாம் என்று தோன்றியது. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா... கதைக் கருவுக்கு என்னை மாதிரி அல்பங்கள் அலைவதைப் பற்றி நினைத்துக் கொண்டபோது வந்த சிந்தனை! எனவே  இதையும் எழுதி விட்டேன்!
                   
இன்னொரு ரங்கராஜன் - சுஜாதா ரங்கராஜன் - ஹிப்னாடிசம் தொட்டு (எனக்குத் தெரிந்து) இரண்டு கதைகள் எழுதி இருக்கிறார். ஒன்று நில்லுங்கள் ராஜாவே, இன்னொன்று பின்னூட்டத்தில் பதில் சொல்லும் வாய்ப்புக்கு!! ரங்கராஜன் என்ற பெயரின் சிறப்பைப் பற்றியும் கொஞ்சம் எழுத வேண்டும்! ரங்கராஜன் வாலியின் சிறப்பு, ரா கி ர., சுஜாதா ரங்கராஜன், இன்று வந்த கணையாழியில் அசோகமித்திரன் மணக்கால் ரங்கராஜன் பற்றி எழுதி இருக்கிறார்.  அதில் அவர் உபயோகப் படுத்தியுள்ள ஒருவார்த்தை கவர்கிறது! 'வரலாறு ஒரு சமயத்தில் ஒரு வீரனுக்குத்தான் வணக்கம் செய்கிறது!' ரங்கராஜன் என்று பெயர் வைத்தால் எதாவது ஒரு திறமையாவது வந்து விடும் போல! ரங்கராஜன் குமாரமங்கலத்தைக் கூட சேர்த்துக் கொள்ளவேண்டும்!

         
நடுவில் ஒரு விளம்பரம் தெரிகிறதா... அடுத்த இதழில் தொடர்கதைத் தொடக்கம் பற்றி.....!


பதிவு ரா கி ரங்கராஜன் பற்றி என்று மனதைத் திருப்பிக் கொண்டு வருகிறேன். இவர் இதே கிருஷ்ணகுமார் என்ற பெயரில் எழுதியுள்ள இன்னொரு கதையான 'இருபத்தி மூன்றாவது படி' கதாநாயகி மோனி மேல் எனக்கு இன்றும் கோபம் குறையவில்லை!   

                      

5.9.12

ஆஜர்

          
நாகை:       
ஒன்று : திருமதி பங்காரு டீச்சர் - 'அ ' எழுதச் சொல்லிக் கொடுத்தார்.  
          
இரண்டு : லில்லி புஷ்பம் டீச்சர் - எனக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்க மிகவும் முயன்றார்.  
               
மூன்று : சண்முகம் சார், சந்திரசேகர் சார்.  எனக்கு ஏதோ ஒரு பாடத்தில் (சமூக பாடம்?) நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் போட்டவர்! 
             
நான்கு: விஸ்வநாதன் சார். இவருடைய வகுப்பில், நானும் என் நண்பன் முத்துவும், சட்டைப் பையில் காய்ந்த நார்த்தங்காய் ஸ்டாக் வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக விண்டு, வாயில் போட்டுக் கொண்டு உலகையே மறந்து இருந்த நாட்கள் ஞாபகம் வருகின்றது. ("சீசீ கர்மம், கர்மம் - எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வாங்கடா!") 
            
ஐந்து: சண்முகசுந்தரம் சார். ஒவ்வொரு வாரமும் நீதி போதனை வகுப்பில் அதே கதையைச் சொல்லி, அதே ஈசாப் கதைப் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்து, (யாருடனும் அந்தப் புத்தகத்தை மாற்றிக் கொள்ளகூடாது என்று கண்டிப்பு வேறு!) அந்த நாட்களில் மிகவும் போர் அடிக்க வைத்தவர். 
           
ஆறு: வைத்தியநாதன் சார். மற்ற வகுப்புப் பையன்கள் அதாவது ஆறாம் வகுப்பு பி பிரிவு, சி பிரிவு .... எல்லோரும் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருப்பதாகப் பொருமிக்கொண்டே இருப்பார். (நாங்க ஏ பிரிவு) 
          
நஞ்சநாடு ஊட்டி. 
ஏழு: அட்டிபாயில் நஞ்சன் சார். பாடம் நடத்துவதில் மன்னர். கதை போல அவர் சொல்லும் விஷயங்கள் இரசனையாக, மனதில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். 
          
மீண்டும் நாகை  
எட்டு: லக்ஷ்மணன் சார். ஆங்கிலம், விஞ்ஞானப் பாடங்கள் - மிக அருமையாக சொல்லிக் கொடுத்தவர். நகைச்சுவை உணர்வும் அதிகம். எப்பொழுதாவது வரும் கோபம் தப்பு செய்த மாணவன் மீது புயலாக வீசும். 
              
ஒன்பது: இராமமூர்த்தி சார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜே டி எஸ் பள்ளியில், முப்பது பேர்களுக்கும் பெரிய அண்ணன் போல ஒரு ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, பாடம் நடத்தியவர். 
           
பத்து: மகாதேவன் சார். இராமமூர்த்தி சார் மாற்றல் பெற்றுச் சென்றதும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த ஆசிரியர். எனக்கு எப்பொழுதும் பௌதிக, இரசாயன பாடங்களில் முதல் மார்க் போட்டவர். 
              
பதினொன்று  தேவதாஸ் சார். கிணற்றுக்குள் விழுந்துவிட்ட என்னுடைய கணித அறிவை தோண்டி எடுத்து, புளி போட்டுத் தேய்த்து, பிரகாசமாக்கியவர். அப்புறம் அது மீண்டும் மங்கிப் போய்விட்டது என்பது வேறு விஷயம்! 
              
பாலிடெக்னிக் : வாஞ்சிநாதன் (பிசிக்ஸ்), சம்பத் & கணபதி (கணிதம்), குமரேசன்(இஞ்சினீரிங்), ராமநாதன்(ஹீட்  எஞ்சின்ஸ்), கோவிந்த ராஜுலு (இண்டஸ்ட்ரியல் எஞ்சினீரிங்)   
             .
சென்னை:  
ஏ எம் ஐ ஈ - சோசியல் சயின்ஸ் கிளாஸ் எடுத்த வி சுந்தரம் (பி எஸ் வீரப்பாவின் பையர்  என்று ஞாபகம்), ராகவன், ஸ்ரீனிவாசன். 
     
இவர்கள் எல்லோரையும் ஆசிரியர் தினத்தில் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளேன். 
                           

4.9.12

அலுவலக அனுபவங்கள் 07:: நகைப் படலம்

                 
சிலபல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு அனுபவம். இதே போன்ற அனுபவம் ஒன்றை சமீபத்தில் வேறெங்கோ படித்தபோதுதான் இந்த அனுபவம் நினைவுக்கு வந்தது. 

          
அன்று அந்த அலுவலகத்தில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கூடி எதையோ பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அலுவலகப் பெண் ஊழியர் ஒருவர் பன்னிரண்டு பவுனில் ஒரு நகை வாங்கியிருந்தார்.  கையில் ஏந்தி,  தன் மேனியில் வைத்து அழகு பார்த்து, என்று ஆளாளுக்கு அபிப்ராயம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 'ஸ்ரீராம் சிட்ஸ்'ஸில் சீட்டு போட்டு சேர்ந்த காசில் வாங்கியதாகக் கூறிக் கொண்டிருந்தார் அந்தப் பெண் ஊழியர்.
             
கடைசியாக என் கைக்கு,  பார்வைக்கு வந்தது. எனக்கு நகை பற்றி(யும்) ஒன்றும் தெரியாது. டிசைன், பிடி என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் சும்மா பார்த்து விட்டு "அருமையாயிருக்கு" என்று டெம்ப்ளேட் கமெண்ட்டுடன் திருப்பிக் கொடுத்தேன். 
           
ஒருமணி நேரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 
          
"நகையைக் காணோம்" 
              
எனக்கு பயம் வந்தது. கடைசியில் என் கைகளுக்குத்தான் வந்திருந்ததால்  அந்த ஊழியர் என்னை சந்தேகத்துடன் பார்ப்பது போல பிரமை. 
                   
முப்பது பேருக்கு மேல் வேலை பார்க்கும் இடம். எல்லா தரத்திலும் - மேல் நிலை முதல் கீழ் நிலை வரை - எல்லோரும் பணி புரியும் இடம். யாரைக் கேட்க... ? மத்திய உணவு யாருக்கும் உள்ளே செல்லவில்லை. என் பயம் எல்லோருக்குமே இருந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகம். என்னைப் போலவே நிம்மதி தொலைத்தவர்களையும் பார்த்தேன். கவலை இல்லாமல் யாராவது சாப்பிடுகிறார்களா என்றும் பார்த்தேன். துப்பறிகிறேனாம் :))) 
               
அன்று மட்டுமில்லை, அடுத்த இரண்டு நாட்களுமே அலுவலகத்தின் மூடை சொல்ல முடியவில்லை. நான் வேறொரு இடத்தில் கேள்விப் பட்ட ஒரு விஷயத்தை செயல் படுத்தத் தீர்மானித்தேன். அந்தப் பெண் ஊழியரை அழைத்துப் பேசினேன். 
             
மெல்ல ஒவ்வொருவரிடமும் பேச்சைப் பரவ விட்டேன். 
                 
"அவங்க ஒரு மலையாள மாந்த்ரீகரைப் பார்த்திருக்காங்களாம்...ஏதோ வெற்றிலையில் மை தடவிப் பார்த்தாங்களாம்... இந்த வாரம் டைம் கொடுத்துடு என்று அவர் சொல்லியிருக்காராம். அப்புறமும் கிடைக்கவில்லை என்றால் 'விஷயத்தை' ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருக்காராம்"
               
மனிதனுக்கு ஆசை இருக்கும் அதே அளவு பய உணர்ச்சியும் இருக்கும் போலும். அல்லது தப்பு செய்தவன் அலட்சியமாக இருப்பதில்லை. கவனமாக சுற்றிலும் ஆராயந்துகொண்டே இருக்கிறான். இது எதிர்பார்க்கக் கூடியதுதான். இதைத்தான் உபயோகித்துக் கொண்டேன். 
                 
இந்த வசனங்கள் மெல்ல எல்லோரிடமும் பரவியது. சிலர் வரவேற்றார்கள். சிலர், "வேண்டாம் மேடம்... சில சமயம் அது ஏவுபவரையே திருப்பித் தாக்கும்னு சொல்லுவாங்க" என்று பயமுறுத்தினார்கள். அப்படிச் சொன்னவர்களை,சந்தேகத்துடன் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் நிறுத்திக் கொண்டார்கள்.
              
இந்த பயமுறுத்தலிலேயே கிடைத்து விடும் என்று நம்பவில்லைதான்... கிடைத்துவிடும் என்ற நப்பாசை இருந்தது. ஆனால் நடக்கவில்லை. 
                 
அடுத்த கட்டமாக மூன்று நாட்கள் கழித்து அவர்கள் இடத்துக்கு அருகில் ஒரு முட்டையில் மஞ்சள், குங்குமம் என்று கைக்கு வந்ததை எல்லாம் தடவி யாரும் வருமுன்னரே போட்டு வைத்தோம். பார்த்தால் மறைவாய் இருப்பது போல, அதே சமயம் ஓரளவு கண்ணில் படுவது போல.... ஒருவர் பார்த்து விட்டாலும் போதும், எல்லோருக்கும் பரவி விடும் என்பதுதான் ஐடியா! அருகிலேயே வெற்றிலை முழுசாய், பாதியாய்க் கிள்ளி, வாழைப் பழம் முழுதாய் ஒன்று, இரண்டாய் வெட்டி அதிலும் ரத்தக் கலரில் குங்குமம் தடவி என்றெல்லாம் கண்ணில் படுமாறு வைத்தோம். இது எல்லாமே கற்பனைதான். எங்கும் செல்லவில்லை, யாரையும் கேட்கவில்லை!
                  
அதற்கு ஒருவாரம் டைம் வைத்திருப்பதாய்ச் செய்தியைப் பரப்பி விட்டோம். ஒருநாளைக்கு மூன்று தரம் தனிமைச் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். யார் எடுத்திருந்தாலும் வைத்து விட்டுப் போய் விட்டால் தொல்லை இல்லை. யார் என்பதும் யாருக்கும் தெரியவும் தெரியாது. டைம் தாண்டி விட்டால் எடுத்தவர்களுக்கு என்னென்ன நேரும் என்பதை அவரவர்கள் கற்பனைக்கே விட்டோம். குறிப்பாக அவர்கள் குழந்தைகளைப் பாதிக்கும் என்றெல்லாம் பேசி பயத்தைக் கிளறினோம்! என்னுடைய யோசனைப் படி நகையைத் திருப்பி வைக்க வேண்டிய இடம் ஒரு ஜன்னலுக்கு அருகில் இருக்கும்படி வைக்கப் பட்டது. குறிப்பாக மூன்று பேரை சந்தேகப் பட்டோம். அவர்களுக்கு தனிமையில் அதைத் திருப்பி வைக்கும் சந்தர்ப்பம் அதிகமாகவே கவனமாக அளிக்கப் பட்டது. 
                
போலீசில் சொல்லியிருக்கலாமே என்று தோன்றலாம். அல்லது அன்றே எல்லோரையும் சோதனை செய்திருக்கலாமே என்றும் தோன்றலாம். வெளியாட்கள் வந்து போகும் இடம். கை மாறியிருந்தால் தெரியாது. சோதனையில் ஒன்றும் கிடைக்காமல் போனால் அலுவலகத்தில் அப்புறம் யார் முகத்தையும் பார்க்கவும் முடியாது என்றெல்லாம் பேசித்தான் இந்த ஏற்பாட்டுக்கு வந்திருந்தோம். 
              
பயம் வேலை செய்தது. இரண்டாவது நாளில் பொருள் வைக்கச் சொன்ன இடத்தில் இருந்தது! ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோருமே சம அளவில் ஆச்சர்யப் பட்டார்கள். எடுத்தது யார் என்பதைப் பற்றி ஓரளவு எங்களுக்கு ஐடியா இருந்தாலும் அதைக் கண்டு பிடிப்பதற்கு நாங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. பொருள் திரும்பக் கிடைத்த சந்தோஷமே பெரியதாக இருந்தது. 
              
பல வருடங்களுக்கு முன் இந்த டெக்னிக் செல்லுபடியானது!   

                

3.9.12

பெருமாள் கல்யாணமும், பிறந்த நாள் வாழ்த்தும், பி. சுசீலா பாடலும் வருண பகவானும் - வெட்டி அரட்டை.

                       
அப்பவே சொல்லியிருக்கலாம்....!      

பிறந்தநாள் வாழ்த்து உறவினர்களிடமிருந்தும் நட்புகளிடமிருந்தும் வந்து கொண்டிருந்தது. நாள் முழுதும் வெவ்வேறு நேரங்களில் யாராவது வாழ்த்திக் கொண்டே இருந்தார்கள். மாலை ஏழு மணி இருக்கும். மனைவி வழி உறவிடமிருந்து வாழ்த்து! வாழ்த்து சொல்லி முடித்து விட்டு, தொடர்ந்து மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.    
 
"காலைல உன் அம்மா எப்போ எழுந்திரிப்பாங்க.."


"அஞ்சரைக்கெல்லாம் எழுந்துடுவாங்க.." - மனைவி. 
"உடனே காபி குடிச்சுடுவாங்களா.."
"இல்லை... பல் தேச்சுட்டுத்தான்..."
"அட, அதில்லைம்மா... உடனே காபி குடிச்சுடுவாங்களான்னு கேட்டேன்..."
"அதான ஆமாம்னு சொன்னேனே....ஓ... யாரு சித்தி...?"
"இப்போ வேணாம்... பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு.."
"பரவாயில்லை... அவர் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டார்..."
"வேணாம்மா... நியாயமில்ல அது... உடனே சொல்ல வேண்டிய அளவு நெருக்கமும் இல்ல.... காலைல சொல்றேன். ஒரு சொம்பு தலைக்கு ஊத்திட்டு காபி சாப்பிடச் சொல்லு  அம்மாவை..."    ஃபோனை வைத்து விட்டார்கள்.
அப்புறம் காலை வரை நடந்ததுதான் விஷயம்! யார் யாருக்கு உடம்பு சரியில்லை, யார் யார் மிக வயதானவர்கள், ரொம்பக் கிட்டிய சொந்தத்தில் யார், அடுத்த வட்டத்தில் யார், அதற்கடுத்த வட்டத்தில் யார்.. பேச்சில் பல பேர் வரிசையில் நின்று 'பெட்'டில் படுத்து எழுந்தார்கள்.    
யாரென்று பேசாமல் அப்போதே சொல்லியிருக்கலாம்!       
-----------------------------------------------------

கேட்டுச் சொல்லுங்க....
    
திருப்பதி பெருமாள் மேல் ஒருவர் கேஸ் போட்டிருக்கிறாராம். வெங்கடேசப் பெருமாள் தன் கல்யாணத்துக்கு குபேரனிடம் நிறையக் கடன் வாங்கியிருக்கிறார் என்று புராணம் சொல்கிறது. திருப்பதி உண்டியலிலும் பெருமாள் தன் கடனை அடைக்க உதவி செய்யுங்கள் என்ற அர்த்தத்தில் வாசகங்கள் எழுதி இருக்குமாம். அந்த ஊர்க்காரர் ஒருவர், "பெருமாள் குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? இன்னும் எவ்வளவு நிலுவையில் இருக்கிறது?" என்று கோர்ட்டில் கேஸ் போட்டிருப்பதாக சமீபத்தில் செய்தித் தாளில் படித்தேன்

   
இதே போல குஜராத்தில் இன்னொருவர் வருண பகவான் மீது பருவமழை பொய்த்துப் போனதன் காரணம் கேட்டு தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருக்கிறாராம். வேறு வழியில்லாத அதிகாரி, 'வருணபகவானைத் தொடர்பு கொள்ள முடியவில்லை' என்று பதிலளித்திருக்கிராராம்.   

------------------------------

கனவின் பலன்!
                
முன்பெல்லாம் யானை துரத்துகிற மாதிரி ஒரு கனவு வந்து எழுப்பி விட்டுக் கொண்டே இருக்கும். இரைக்க இரைக்க ஓடுவேன். முட்டுச் சந்தில் மறித்து அது தாக்க வரும் சமயம் திடீரென மலை முகட்டில் ஓடிக் கொண்டிருப்பேன். ஏதோ ஒரு கட்டத்தில் விழிப்பு வந்து விடும். வியர்த்திருக்கும்! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு லொகேஷனில் துரத்தும். நல்ல வேளை, இப்போதெல்லாம் அபபடி கனவு வருவதில்லை. ஆனால் 
காலை மூன்றரை மணிக்கு எழுப்பி  விட்டது கனவு.   

               
பி.சுசீலா பாடல் ஒன்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். உடன் என் மூத்த சகோதரர் இருக்கிறார். அப்பா "என்ன ராகம் இந்தப் பாடல்?" என்று கேட்கிறார்! அண்ணன், "என்ன ராகம்னு சொல்லத் தெரியவில்லை. ஆனால் இதே ராகத்தில் இன்னொரு பி.சுசீலா பாடல் இருக்கிறது.." என்கிறார். அப்பா,"என்ன பாடல் அது?" என்று கேட்க, இவர் "நவராத்திரி... சுபராத்திரி.." என்று பாடிக் காண்பிக்கிறார். நானும் பாடிப் பார்க்கிறேன். ஆமாம்... ஒரே மாதிரிதான் இருக்கிறது!    
               
விழித்துக் கொண்டேன். அப்புறம் தூக்கம் வரவில்லை. நவராத்திரி பாடல் நினைவு இருக்கிறது.... முதலில் பாடிக் கேட்ட, நவராத்திரிப் பாடலைப் போலவே இருக்கும், அந்த இன்னொரு பாடல் என்ன? மறந்து விட்டது. நினைவுக்கு வரவே இல்லை. இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறேன்... அபபடி நிஜமாகவே இருந்ததா என் கனவுப் பிரமையா என்றும் தெரியவில்லை! தலைவலிதான் மிச்சம்!!    

=====================   
   
பாட்டியும், பேத்தியும். 
        
பாட்டி: "மாலுக்கண்ணு ...."
பேத்தி: "என்ன பாட்டி?"
பாட்டி: "இன்னிக்கு வரலக்ஷ்மி விரதம். குளிச்சிட்டு வந்து, அம்மா கூட சேர்ந்து, அம்பாளுக்கு பூஜை பண்ணு."  
பேத்தி: "அப்புறம்?"
பாட்டி: "நல்ல புருஷனா வரணும்னு அம்பாள் கிட்டே வேண்டிக்கோ."
பேத்தி: "சின்ன வயசுல நீ அப்பிடி வேண்டிகிட்டியா?"
பாட்டி: (கொஞ்ச நேரம் யோசனை செய்து) "ஆமாம்"
பேத்தி: :"உனக்கு நல்ல புருஷனா வந்தானா?"
அம்மா: "மாலு - பாட்டி சொன்னா கேட்டுக்க, சும்மா எதிர் கேள்வி கேட்காதே."
பேத்தி: "அம்மா நீ சின்ன வயசுல நல்ல புருஷன் வரணும்னு வேண்டிகிட்டியா?"
அம்மா: "நான் வேண்டிக்கலை. என்னுடைய பாட்டி என்னை வேண்டிக்க சொல்லலை."
பேத்தி: " ஆனா என்னுடைய அப்பா நல்ல அப்பா... தாத்தா நல்லவரா பாட்டி?"
பாட்டி: "தாத்தா எல்லோருக்கும் நல்லவர்தான். ... ஆனால்.... "
பேத்தி: "உனக்கு மட்டும் நல்லவரா இல்லை. அடிக்கடி சொல்லியிருக்கியே பாட்டி !"
எந்தப் பாட்டியாவது தன்  கணவனை நல்லவர் என்று யோசனை செய்யாமல் ஒப்புக் கொண்டது உண்டோ?