RKR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RKR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.9.12

ரா கி ரங்கராஜன்


 

ப்ரொபசர் மித்ரா, இருபத்து மூன்றாவது படி.

70 களில் குமுதத்தில் வந்த கதைகள் . கிருஷ்ணகுமார் என்ற பெயரில் எழுதியிருந்தார். 

                
ப்ரொபசர் மித்ரா பத்மஸ்ரீ பட்டத்துக்கு பரிந்துரைக்கப் பட்டிருப்பதில் தொடங்கும் கதையில் அவர் பேச்சை மீறி நடந்து கதவிடுக்கில் மாட்டி தவிக்கும் பூனை உயிரிழப்பதை அவர் குரூரப் புன்னகையுடன் ரசிப்பதில் அவர் கேரக்டர் சொல்லப் படுகிறது. இந்தியாவின் தலை சிறந்த மேஜிக் நிபுணர் ப்ரொபசர் மித்ரா அந்தக் கலையை தன் நண்பர் நீலகண்டனிடமிருந்து கற்றுத்தான் வாழ்வின் அடித்தட்டிலிருந்து மேலே வந்திருக்கிறார். வாழ்வின் ஆரம்ப நாளிலிருந்தே நண்பன் நீலகண்டனுடன் இணைத்து தன் மனைவியின் மேல் சந்தேகப்படும் அவர் அதை உறுதி செய்து கொள்வதற்காகவே மனைவி ஜெகதாவின் விருப்பத்தையும் மீறி மகள் நிம்மிக்கு ஹிப்னாடிசம் கற்றுத் தருகிறார். வார்த்தைகளிலும் செயல்களிலும் மனைவி ஜெகதாவைச் சித்திரவதைச் செய்யும் அவர், நீலகண்டனையும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக்கி தன் வீட்டிலேயே பூட்டி வைத்திருக்கிறார். நிம்மியின் அப்பாவித்தனம் கல்யாணம் என்ற இளைஞன் மேல் வரும் காதலால் மாற, அவளால் ஹிப்னாடிசத்தில் மனதை ஒருமுகப் படுத்த முடியாமல் போகிறது. காரணம் கல்யாணம்தான் என்று அறிந்த மித்ரா அவனைக் கொல்லச் செய்யும் சதி கடைசியில் அவர் மனைவி ஜெகதா குற்றமற்றவர் என்று அறியும் தருணம் சந்தர்ப்பவசத்தால் அவர் செய்த சதி ஜெகதாவையே கொல்கிறது. நிம்மி மூலம் அறிய நினைத்த ரகசியத்தை கல்யாணம் மூலம் தெரிந்து மித்ரா திருந்தும் சமயம்தான் அந்த மரணம் நிகழ்கிறது. 
                  
நிமிடத்தில் தன்னை மாற்றிக் கொள்ளும் கேரக்டராக, குரூரத்தை உள்ளே மறைத்து, வெளியே தேன் தடவி பேசுபவராக மித்ரா. அவரிடம் பயப்படும், பணியும், அதே சமயம் மகளிடம் தாய்மைப் பாசம் காட்டும் ஜெகதா, இளம் கல்லூரிப் பெண் நிம்மி....



மாருதியின் ஓவியங்கள் இவர்களுக்கெல்லாம் உயிர் கொடுத்து உலவ விட்டன.



ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சில ஆங்கில வரிகள்... உதாரணத்துக்கு,
 

While some people can not be made to carry out hypnotic suggestions contrary to their principles, there are certainly some, who can..... இப்படி. 

ஜெகதாவை ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்த்தி சோதனை செய்யும்போது நாற்பது வயதை நெருங்கும் ஜெகதாவின் குரல் ஆறு வயது நினைவுகளை மீட்டும்போது சிறுமியின் குரலாகவும், இருபது வயதை சோதனை செய்யும் போது யவ்வனப் பெண்ணின் குரலாகவும் ஒலித்தது என்கிறார் ஆசிரியர்.  
  


அந்த நாவலிலிருந்து சில வரிகள்....(கிளைமேக்சில்) நிம்மி மனதில் ஊறும்  காதலை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்...


மல்லாந்த வண்ணம் அவனைப் பார்த்தாள் நிம்மி. அவனுடைய கம்பீரமான தோற்றம், காதலும் கருணையும் ததும்பும் கண்கள், அவனுடைய  உள்ளத்தின் ஆழம்-அத்தனையும் அவளை மனம் நெகிழச் செய்தன. அவளுடைய பாதத்திலிருந்து ஒரு சிலிர்ப்பு புறப்பட்டு, நாடி நரம்புகளில் புகுந்து, ரத்தத்தில் கலந்து, கால்களின் வழியே மேலேறி, மார்பில் வியாபித்து, கைகளில் புளகம் ஏற்படுத்தி, தோள்களில் படர்ந்து, நெஞ்சில் குழைந்து, நாவில் இனித்து, பற்களில் பிரகாசித்து, உதடுகளில் துடித்தபோது, அவ்வளவையும் திரட்டி ஒற்றைச் சொல்லாக்கி-
       
"கல்யாணம்" என்றாள்.
            
"எப்போது?" என்றான் அந்தக் குறும்புக்காரன். 
                   
நிறைய கதைகள் அதுவும் வெவ்வேறு பெயர்களில் எழுதித் தள்ளும்போது அவ்வளவுக்கும் கதைக்கரு வேண்டுமே.... இதை எப்படி யோசித்திருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன். நடுவில் ஓரிடத்தில் நிம்மியைக் கடத்தி விட்டு நிம்மி கொடுத்த அடியில் கால் உடைந்து அவளுடனேயே ஆஸ்பத்திரிக்குச் செல்லும்போது வரும் உரையாடலில்,
              
"நெவில் சூட் என்பவற்றின் நாவல்களைப் படித்திருக்கிறீர்களா நிம்மி? ஆஸ்திரேலிய எழுத்தாளர்" என்றான் கல்யாணம்.
                
அந்த எதிர்பாராத கேள்வியைக் கேட்டுத் திகைப்புற்றவளாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்  நிம்மி. ஆனால் ஏதும் பேசவில்லை. 
                 
""டவுன் லைக் ஆலிஸ் என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார் அவர். மலேயாவில் யுத்த காலத்தில் நடந்ததாகக் கதை. இரண்டு ஜப்பானிய சோல்ஜர்களிடம் யுத்த கைதிகளாக இருக்கிறார்கள் சில வெள்ளைக் காரப் பெண்கள். சோல்ஜர்களுக்கு மேலதிகாரிகள் எந்தவிதமான உதவியும் செய்யாமல் ஓடி விடுகிறார்கள்.இந்தக் கைதிகளை என்ன செய்வதென்று தெரியாமல் ஊர் ஊராக அலைகிறார்கள் அந்த ஜப்பானிய சோல்ஜர்கள். சாப்பாட்டுக்குக் கூட லாட்டரி. நடுவே காய்ச்சலில் வேறு படுத்து விடுகிறார்கள்.கடைசியில் அந்தக் கைதிப் பெண்கள்தான் அந்த சோல்ஜர்களைக் காப்பாற்றி அழைத்துப் போகிறார்கள்..."
                  
அடிபட்ட நிம்மியுடனேயே ஆஸ்பத்திரிக்குச் செல்வதைப் பற்றிச் சொல்ல வரும் கல்யாணம் சொல்லும் உரையாடல் இது. ரா கி ர ஏகப் பட்ட ஆங்கில நாவல்கள் படித்து மொழிபெயர்க்கவே கஷ்டம் என்று சொல்லப் படுபவற்றைக் கூட ((2/9/12 தேதியில் தினமலர் வாரமலரில் பாக்கியம் ராமசாமி ரா.கி.ர பற்றிய தன் நினைவுகளைச் சொல்லியிருக்கிறார்.அதில் இந்த விவரமும் வருகிறது!) தமிழில் மொழிபெயர்த்து கலக்கி இருக்கிறாரே.... இந்நாவலின் இந்தப் பகுதியை வைத்து டெவலப் செய்யத் தொடங்கியிருக்கலாம் என்று தோன்றியது! அல்லது மெஸ்மரிசம் ஹிப்னாடிசம் பற்றி ஒரு கதை எழுத நினைத்ததில் இதைச் சேர்த்திருக்கலாம் என்று தோன்றியது. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா... கதைக் கருவுக்கு என்னை மாதிரி அல்பங்கள் அலைவதைப் பற்றி நினைத்துக் கொண்டபோது வந்த சிந்தனை! எனவே  இதையும் எழுதி விட்டேன்!
                   
இன்னொரு ரங்கராஜன் - சுஜாதா ரங்கராஜன் - ஹிப்னாடிசம் தொட்டு (எனக்குத் தெரிந்து) இரண்டு கதைகள் எழுதி இருக்கிறார். ஒன்று நில்லுங்கள் ராஜாவே, இன்னொன்று பின்னூட்டத்தில் பதில் சொல்லும் வாய்ப்புக்கு!! ரங்கராஜன் என்ற பெயரின் சிறப்பைப் பற்றியும் கொஞ்சம் எழுத வேண்டும்! ரங்கராஜன் வாலியின் சிறப்பு, ரா கி ர., சுஜாதா ரங்கராஜன், இன்று வந்த கணையாழியில் அசோகமித்திரன் மணக்கால் ரங்கராஜன் பற்றி எழுதி இருக்கிறார்.  அதில் அவர் உபயோகப் படுத்தியுள்ள ஒருவார்த்தை கவர்கிறது! 'வரலாறு ஒரு சமயத்தில் ஒரு வீரனுக்குத்தான் வணக்கம் செய்கிறது!' ரங்கராஜன் என்று பெயர் வைத்தால் எதாவது ஒரு திறமையாவது வந்து விடும் போல! ரங்கராஜன் குமாரமங்கலத்தைக் கூட சேர்த்துக் கொள்ளவேண்டும்!

         
நடுவில் ஒரு விளம்பரம் தெரிகிறதா... அடுத்த இதழில் தொடர்கதைத் தொடக்கம் பற்றி.....!


பதிவு ரா கி ரங்கராஜன் பற்றி என்று மனதைத் திருப்பிக் கொண்டு வருகிறேன். இவர் இதே கிருஷ்ணகுமார் என்ற பெயரில் எழுதியுள்ள இன்னொரு கதையான 'இருபத்தி மூன்றாவது படி' கதாநாயகி மோனி மேல் எனக்கு இன்றும் கோபம் குறையவில்லை!