வியாழன், 23 டிசம்பர், 2010

மார்கழித் திங்கள் அல்லவா.

கோல நினைவுகள்....




மாதங்களில் சிறந்தது மார்கழி...

மார்கழி மாதம் வந்தால் ரெண்டு விஷயம் விசேஷம்..


ஒன்று பனியும் குளிரும்... அடுத்து கோலம்!




அந்த நாளில் வீட்டு வசதிக் குடியிருப்பில் குடியிருந்த போது சுமார் ஐநூறு வீடுகளின் நடுவே இருந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. அதற்கும் முன்னால் நீண்ட தெருக்கள் இருந்த இடங்களில் வசித்த காலங்களும்...


வரிசையான தெருக்களில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் விதம் விதமான கோலங்கள்...முதலில் காவி மட்டும் பூசப் படும் காலங்கள் போய் கலர்ப் பொடிகள் வந்து கலர்ப் பொடிகளை கோலத்தில் இட்டு வண்ண மயமான தெருக்களைப் பார்த்த காலம். கோலத்தில் கால் மிதிக்காமல் காலை தெருவில் நடப்பதே ஒரு கலை. அலுவலகம் போகும் பெண்கள், பள்ளி கல்லூரி போகும் பெண்கள் எந்த வீட்டின் முன் கோலம் புது மாதிரியாகவோ, கஷ்டமான கோலமாகவோ இருக்கிறதோ அங்கு நின்று அளவெடுப்பார்கள். மறு நாள் அவர்கள் வீட்டின் முன் அந்தக் கோலம் காணப்படும். பெரும்பாலும் இந்தக் கோலக் கடத்தல்கள் ஏரியா விட்டு ஏரியா தான் போடப் படும். பின்னே, பக்கத்து வீட்டில் போட்டதை நம் வீட்டில் மறுநாள் போடுவதில் சுவை இல்லையே...!


இந்தக் கோலம் போடப் படும் முன் முதல் நாள் வீட்டுப் பெண்கள் பேப்பரிலும் தரையிலும் புள்ளிகள் வைத்து கோடுகள் இழுத்து சிந்தனையுடன் கோல ஆராய்ச்சியில் இருப்பார்கள். ஏதோ கஷ்டமான கணக்கு ஃபார்முலாவுக்கு விடை கண்டு பிடிக்கும் கணித மேதை போலத் தோன்றுவார்கள்.


நாங்களும் கூட புள்ளிகளை இஷ்டத்துக்கு வைத்து விதம் விதமாக டிசைன் போட்டு கோல உற்பத்தி செய்ய முயற்சி செய்வோம்!


என்ன கோல ஆராய்ச்சி என்கிறீர்களா...ஓய்வு கிடைத்ததே என்று வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது பழைய கோல நோட்டு கிடைத்தது..அதை வைத்து ஒரு பதிவு ஒப்பேற்றி விடலாமே என்று தோன்றியது..! அதில் பார்த்த கோலங்களைத்தான் அங்கங்கே தெளித்திருக்கிறோம்.


ஒருமுறை அதிகாலைக் குளிரில் தங்கை தலையில் துணி சுற்றிக் கொண்டு கர்மசிரத்தையாக கோலம் போட்டுக் கொண்டிருக்க, அதிகாலை ஊரிலிருந்து வந்த மாமா தொந்தரவு செய்யாமல் பின்னால் நின்று (அவரும் மஃப்ளருடன்) ரசித்துக் கொண்டிருக்க, புள்ளியிட்டு கோலத்தைப் பெரிதாக்கப் பின்னால் நகர்ந்த தங்கை அரைகுறை இருளில் பின்னால் நின்ற உருவத்தைப் பார்த்து அலற, அதுவரை அங்கு காவலுக்கு நின்றிருந்து அப்போதுதான் உள்ளே சென்றிருந்த நாங்கள் ஓடிவர...மறக்க முடியாத சம்பவம்.


இன்றைய கான்க்ரீட் காடுகளின் நடுவே கோலங்களை எதிர்பார்ப்பது ரொம்பக் கஷ்டம். இன்றைய ஐடி யுகத்தில் கோலம் போடும் பெண்களும் குறைவு. போடும் இடம் அமைந்திருக்கும் இடங்களை யோசித்தால் மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பும் குறைவு.


அப்போது மார்கழிக் கோலம்..இப்போது காலத்தின் கோலம்!



13 கருத்துகள்:

  1. எங்க எல்லோரும் ஸ்டிக்கர் கோலம்தான்

    பதிலளிநீக்கு
  2. அருமை. பத்திரமாக வைத்துள்ளீர்களே கோல நோட்டுகளை. மகிழ்ச்சி. பெண்கள் கல்யாணமாகி போகும் போது, இந்த கோல நோட்டுகளை மறக்காமல் எடுத்து போவார்கள்.

    பதிலளிநீக்கு
  3. ரெம்ப நல்லா இருக்குங்க கோலங்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி
    ஒரு முறை நானும் என் அத்தை பெண்ணும் நூறு புள்ளி கோலம் போட்டே தீருவோம்ல வீட்டை ஒரு வழி பண்ணின நினைவு வந்தது... கோலம் ஒரு பெரிய கலை.... எனக்கு அவ்ளோ நல்லா வந்ததில்ல எப்பவும்... பெரிய பெரிய நெளி கோலம் கம்பி கோலம் போடறவங்களை admire பண்ணி பாத்து இருக்கேன்... இப்போ ஸ்டிக்கர்க்கு கூட வழி இல்ல இங்க...

    பதிலளிநீக்கு
  4. கோலங்கள் பழைய நினைவுகளைக் கிளறின. நேர் புள்ளி, சந்து புள்ளி கோலங்கள் என்று என் அக்காமார்களிடம் கற்றது. நீங்கள் சொன்னது போல் புது கோலங்களைப் பார்த்தால் புள்ளிகளை எண்ணி வீட்டில் வந்து போட்டுப் பார்த்ததும் உண்டு.இப்போ அதிக கோலங்கள் நினைவில் இல்லை. போடுவதும் இல்லை

    பதிலளிநீக்கு
  5. அருமை ஸ்ரீராம். என்னுடன் கூகுளில் சாட் செய்துக்கொண்டே இதை எழுதிக்கொண்டு இருந்தீர்களோ ? சூப்பர்.

    என் சிறு பிள்ளை காலத்திற்கு உங்கள் எழுத்து கொண்டு செல்லுகின்றது. என் அம்மா (ஏன் எல்லோரும் அதை தான் சொல்லுவார்கள் என்று நினைக்கின்றேன்) சூப்பர் ஆகா கோலம் போடுவார்கள். அக்கா கூட. நீங்கள் மறந்தது கோலத்தின் நடுவில் கொஞ்சம் சாணியை வைத்து அதில் ஒரு பூ !! அண்ணா நகரில் இருந்தபோதும் கூட அம்மா எங்கள் மூன்றாம் மாடி வீட்டில் இருந்து கிழே வந்து போடுவார்கள். அப்படி போட்டு போட்டு தான் முதுகு தண்டு ப்ரோப்ளேமோ ? அதில் சில நாதாரிகள் ஸ்கூட்டர் / சைக்கிள் விட்டு அழிக்கும்போது கோவம் கோவமாக வரும்.

    வடிவேலுவின் "இருப்பத்து மூணாம் புலிக்கேசி" டயலாக் நினைவுக்கு வருகின்றது !

    பதிலளிநீக்கு
  6. இலங்கையைப் பொறுத்தவரை இப்போது கோலம்போடும் பழக்கம் மறைந்து வருகின்றது... கோலம் போடுவதை காண்பதே அரிது...

    பதிலளிநீக்கு
  7. அருமை ஸ்ரீராம். நாங்களும் கோலநினைவுகளுக்குள் சென்று விட்டோம்:)! இப்போது ஸ்டிக்கர் கோலங்களும் அச்சுக் கோலங்களுமாய் பட்டணத்தில் மார்கழிக் காலைகள்.

    பதிலளிநீக்கு
  8. பிறந்தது வளர்ந்தது கும்பகோணம் என்பதால் நிறையக் கொடுப்பினை.

    கோலம் (பெண்கள்) போடும் கோலம் கோலமாக (அழகாக இருக்கும்)இருக்கும். இதைப் பார்க்கவே அதி காலையில் எழுந்து தெருத் தெருவாக சுற்றி வருவோம். ஒருசில தாவணிகள் முகம் சுளிப்பதுண்டு. ஆனால் அதைக் கொண்டு எந்தக் கோலத்தையும் அழிக்க மனம் வருவதில்லை.

    வீட்டம்மாவிற்கு morning sickness இருந்த காலங்களில் நானே கோலம் போட்டிருக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  9. /மார்கழி மாதம் வந்தால் ரெண்டு விஷயம் விசேஷம்../

    மூணு. காலையில பெருமாள் கோவில் பொங்கல் பிரசாதம்.

    பதிலளிநீக்கு
  10. எங்கள் வீட்டு (அலங்)கோலங்களை பார்க்கும் போது உங்கள் கோலங்கள் பிரமிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  11. இழை கோலங்களைப் போல பளிச்சென்று ஒரு நெளிதல் நசுங்கல் இல்லாமல் அற்புதமாக இருக்கின்றன நோட்புக் கோலங்கள்!

    தினப்படிக் கோலக் கதையே தனி.அதுவும் பிளாட் வீடுகளில் கேட்கவே வேண்டாம். அது என்னவோ தெரியவில்லை, காலை பேப்பர் போடும் பையனிலிருந்து கூரியர் ஆசாமிவரை அந்த பொடிக் கோலத்தின் மீது நின்று...

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி,

    எல். கே.,

    தமிழ் உதயம்,

    அப்பாவி தங்கமணி,

    geetha santhanam,

    சாய்,

    சந்ரு,

    Gopi, Ramamoorthy,

    வானம்பாடிகள்,

    மோனிஷா, (அடிக்கடி வாங்க)

    ஜீவி.

    பதிலளிநீக்கு
  13. டைரிகள் சமையல் குறிப்புப் புத்தகமாக மட்டுமல்ல, கோலப் புத்தகமாகவும் கைகொடுக்கும் என்று ‘கண்டு’ கொண்டேன்!! :-))))))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!