செவ்வாய், 16 ஏப்ரல், 2024

சிறுகதை : திரட்டுப்பால் - துரை செல்வராஜூ

 திரட்டுப் பால்

துரை செல்வராஜூ

*** *** *** *** ***

" என்னம்மா.. கீரைக்கட்டு எவ்வளவு?.. " - சுந்தரம் ஆவலுடன் வினவினார்..

மாலை மயங்கிக் கொண்டிருந்தது... 

பரபரப்பான சாலை.. இந்தப் பக்கமும்  அந்தப் பக்கமும் பேருந்துகளின்  அலறல்..

சாலையின் ஓரத்தில் ஏதேதோ விற்பனை ஆகிக் கொண்டிருக்க சிறியதொரு வண்டியில் ஈரமான சாக்கை விரித்து அதன் மீது கீரைக் கட்டுகளை வைத்து மூடியிருந்தாள் அந்தப் பெண்... 

திருத்தமான முகம்.. எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.. 

மனது குழம்பிப் போய் எல்லா முகங்களும் பார்த்த மாதிரியே இருக்கின்றன..

அம்பது வயசைக் கடந்த எல்லாருக்கும் இப்படித் தான் பெரும்பாலும் இருக்குமோ..

" கட்டு இருபது ரூபா ங்க.. "

" இருபது ரூபாயா.. முத்தையன் நீங்க வாங்கறீங்களா.." 

" வாங்கணும் தான்.. கட்டு சின்னதா ஒரு பிடி தானே இருக்கு.. அங்கே திருவையாத்துல இது பத்து ரூபா தான்.. " 

" ஆனா போக வர பஸ்டிக்கெட் இருக்கே.. "

"  ரோஜா கலர் டவுன் பஸ் ல அக்கா போய் வாங்கிக்கிட்டு  வந்தா இருபது ரூபா மிச்சம் ஆச்சே... அதுவுமில்லாம இன்னும் நாலு காய்கறிய சேர்த்து வாங்கிட்டு வரலாம்.. ஆனா இது விலை அதிகம் தான்.. "

கீரை பறிக்கப்பட்டு ஒரு மணி நேரம் தான் ஆகியிருக்கும்.. பசுமை கொஞ்சிக் கொண்டிருந்தது..

முத்தையன் இப்படிச் சொல்ல சுந்தரத்தின் மனது பரபரத்தது..

" இது உரம் போட்ட வெளச்சல் இல்லீங்க... ஆட்டுப் புழுக்கையும் சாணியும் தான்.. இயற்கை சாகுபடி.. "

மெல்லிய குரலில் அந்தப் பெண்..

" என்னமோ சொல்லிட்டனே தவிர திருவையாத்துக்கு டவுன் பஸ் ஏற வந்தாத் தான் தெரியும்.. நாலு பொம்பளைங்க நின்னா போதும்.. லொட லொட  வண்டி கூட  றெக்கை ய கட்டிக்கிட்டு பறக்குது.. அடுத்ததா வர்ற தனியார் பஸ்ஸுக்குத் தான் ஆதாயம்.. பேசாம இதையே வாங்கிக்கிட்டு போய்டுவோம். நாளைக்கு வெள்ளிக் கிழமையா இருக்கு.. அங்க போய்ட்டு வர்றதுக்குள்ள இங்க சமையலயே முடிச்சுடலாம்!.. "

" இப்ப சொல்றது தான் சரி.. இந்தாம்மா.. நாலு கட்டு எடுத்துக்கறோம்... " - என்றபடி நூறு ரூபாயைக் கொடுத்தார் சுந்தரம்..

புன்னகையுடன் நாற்பது ரூபாயைத் திருப்பிக் கொடுத்தாள் அந்தப் பெண்.. 

" திருவையாறா.. திருக்காட்டுப்பள்ளியா... எங்கேருந்தும்மா வருது கீரை?.. "

" இங்கே.. நம்ம வெண்ணாத்தங்கரை நடுத்திட்டு!.. "

" நடுத்திட்டா?.." - சுந்தரத்துக்கு ஆச்சர்யம்..

" ஆமாங்க.."

" அங்கே சுப்பையனத் தெரியுமா?.. பால் வியாபாரம் செய்றாரே.. "

" அவங்க எனக்கு மாமனார் ங்க.. "

சுந்தரத்துக்கு அதிர்ச்சி..

" பெரியவன் மனைவியா நீ!.. "

" ம்.. "

" என்னம்மா இது மூனு வருசத்துக்கு முன்னால கல்யாணத்து ல பார்த்த பிள்ளையா நீ.. சகுந்தலா தானே உம்பேரு .. இப்படி ஆள் அடையாளம் தெரியாம... அடக் கடவுளே!.. ஏன் என்ன ஆச்சு?.. "

அந்தப் பெண்ணின் விழியோரங்களில்  முணுக்கென்று நீர் முத்துகள்..

" கண்ணத் தொடச்சுக்கோ.. கண்ணத் தொடச்சுக்கோ.. டே.. தம்பி.. " - திரும்பிப் பார்த்துக் கையசைத்தார்.. அந்த டீக்கடையில் இருந்து சிறுவன் ஓடி வந்தான்..

" ரெண்டு வடை.. ஒரு டீ.. "

" வேணாங்க... "

" வேணாம் ன்னு சொல்லக் கூடாது.. நாங்க மூனு பேரும் சத்ரம் ராஜா ஸ்கூல் ல ஒன்னா படிச்சவங்க.. சுப்பையனுக்கு மருமக ன்னா எங்களுக்கும் மருமக தான்.. " முத்தையனின் குரல் கம்மியது.. 

" எத்தனை நாளா இங்கே விக்கிறே ம்மா.. "

" ரெண்டு நாளாத் தாங்க.. " 

" அந்தத் தடிப்பயலுக்கு என்ன.. அவனுக்கு இதெல்லாம் முடியாதாமா?.. "

" மாமாவுக்கு ரெண்டு நாளா காச்சலு... "

' சரி.. உம் புருசனுக்கு என்ன?.. "

குரலை தாழ்த்திக் கொண்டு - " அவரால தாங்க பிரச்னையே.. " - என்றாள் அந்தப் பெண்..

" சரி.. சரி.. இங்க வச்சி ஒன்னும் சொல்ல வேணாம்.. இதோ பாரும்மா .. கிழக்கால போற இந்த ரோட்டு ல புள்ளையார் கோயில்.. அதுக்கு ரெண்டாவது வீடு என்னோடது.. இங்கே கடை போடறப்போ.. அங்கே ஒரு எட்டு வந்து பாத்துடு... அவசரம் ஆத்திரத்துக்கு ஆகும்.. நாங்க நாளக்கி அங்க வந்து பேசிக்கிறோம்... என்ன முத்தையன்!.."

" அதான் சரி.. "

" உங்ககிட்ட ஏவாரம் செஞ்சது தெரிஞ்சா மாமா வைவாங்க.. 
காச திருப்பி வாங்கிக்கங்க.. " - என்றபடி பணத்தை எடுத்து நீட்டினாள்..

" அட் என்ன பொண்ணும்மா.. கால் கடுக்க நிக்கிற உங்கிட்ட
ஏவாரம் பண்ணாம வேற யார்கிட்ட பண்றதாம்?... பேசாம பணத்தை வை.. நாங்க நாளக்கி அங்க வந்து பேசிக்கிறோம்... "

" சரிங்க.. "

அந்தப் பெண்ணின் முகத்தில் கொஞ்சம் திருப்தி..

மறுநாள் வீட்டுக்கு வந்த் சுந்தரம் முத்தையன் இருவரையும் ஒன்றாகப் பார்த்த சுப்பையனிடம் உற்சாகம்..

மடை  கடந்த வெள்ளம் போலப் பேசினார்.. 

" நாட்டு மாடு ரெண்டு நிக்கிது.. தினசரி கறக்கிற பாலை கொண்டு போய் சிவானந்த மடத்துல கொடுத்துட்டு பத்து நாளைக்கு ஒரு தரம் பணம் வாங்குவான்..  அத அப்படியே அவஞ்செலவுக்கு வைச்சிக்கிட்டா இங்க வீட்ல மத்த செலவுக்கு என்னா செய்றது.. கேட்டா வம்பு தான்.. வழக்கு தான்...  ஏதோ ஆடு கோழி வளர்க்கறதுனால அதுகள வித்து வர்ற காசில காலம் ஓடிக்கிட்டு இருக்கு.. "

" சரக்கு அடிக்கிறானோ.."

" அதெல்லாம் இல்லை சுந்தரம்.. பக்கத்து தோட்டம்  ஜமீந்தாரோடது.. அங்க பாழடைஞ்ச கட்டடம் ஒன்னு இருக்கு.. அதுல வெடுவெட்டிப் பயலுங்க பத்து பேரு கூடிக்கிட்டு சூதாடுறானுங்க.. அந்தக் கூட்டத்துல இந்தப் பயலும் ஒருத்தன்..  "

" ஜமீன்தாருக்கு இது தெரியுமா?.. "

" அவங்க வேற வேற புழக்கத்துல மும்முரமா இருக்காங்க.. இதையெல்லாம் கவனிக்க இப்போ அவங்க கிட்ட ஆள் அம்பு ஒன்னுங் கிடையாது.. சும்மா பேருக்காக பரம்பரை சொத்து ன்னு வெச்சிருக்காங்க... "

கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார் சுந்தரம்..

" அப்படியா.. ரொம்ப நல்லது..   இன்னும் ரெண்டு மாசத்துல உம்மவன் உங்கிட்ட அலுங்காம குலுங்காம  வந்துடுவான்.. பாரு.. "

" மந்திரவாதி மாதிரி பேசறியே சுந்தரம்!... "  சுப்பையனிடம் ஆச்சர்யம்

பேசிக் கொண்டிருக்கும் போதே காவல் துறை வாகனம் ஒன்று வந்து நிற்க பாழடைந்த கட்டடத்தில் இருந்த சூதாட்டக் கும்பல் தலை தெறிக்க ஓடியது.. அந்தக் கும்பலில் சுப்பையனின் மகனும் ஒருவன்..

சுந்தரம் முத்தையனிடம் புன்னகை..  காவல் துறையின் கையில் சிக்கிய ஒருவனுக்கு நாலு அறை விழவே 'வாள்.. வாள்.. ' என்று கத்தினான்..

" அப்படிச் சாத்துங்க... "  சுப்பையனிடம் இரட்டை உற்சாகம்.. 

" சரி.. நாங்க கிளம்பறோம்... "

" இருங்க.. இருங்க.. பணியாரம் செஞ்சிருக்கோம்..  ஒரு வாய் சாப்டுட்டுத் தான் போகணும்.. " 

சுப்பையனின் மனைவியும் சகுந்தலாவும் வீட்டிற்குள் இருந்து வந்தனர்..

" இன்னும் ரெண்டு பசு  வாங்கிக் கட்டினா நல்லா இருக்கும் தானே.. "

" இருக்கும் தான்.. ஆனா பார்த்துக்கறது யாரு?.. "

" பெரியவன் இன்னும் கொஞ்ச நேரத்துல இருந்து  குட்டி போட்ட பூன மாதிரி இங்கேயே கிடப்பான்.. இனிமே அவன் எல்லாத்தையும் பார்த்துக்குவான்.. "  சுந்தரத்திடம் புன்னகையுடன் அருள்வாக்கு.. 

" அதெப்படி?... " - சுப்பையனிடம் வியப்பு..
 
" அதான் போலீஸ் வந்து பூசை போட்டுருக்கே.. அது இருக்கட்டும்.. காடு கரைய சின்னவன் பார்த்துக்க மாட்டானா?.. "

" சின்னவன் தான் துபாய் ல இருக்கானே.. போயி ஒரு வருசம் ஆச்சு.. அந்தப் பொண்ணும் அவங்க அம்மா வீட்டுக்கே போய்டுச்சு... அவன் அனுப்புறதை அங்கேயே வரவு செலவு பண்ணிக்கிறாங்க..
குடியான வீட்டுப் பொண்ணுக்கு புகுந்த எடத்துல காடுகரை வெள்ளாமை எல்லாம் நெறஞ்சு இருந்தும் இங்க வசதி பத்தலையாம்..  நாலு எழுத்து படிச்சுட்டா பெரிய கெவுனர் ன்னு நெனப்பு.. "  சுப்பையனிடம் ஆற்றாமை..

" இதப் பார்த்துமா பெரியவனுக்கு புத்தி வரலை.. "

" அவனுக்கு கெரகம் சரியில்ல முத்தையா.. இந்தப் பங்குனியோட கஷ்டம் தீர்ந்துடுமாம்... "  சுப்பையனின் கண்கள் பளபளத்தன..

" சுப்பையா.. நீ சரின்னு சொல்லு.. எங்க பேங்க் ல இருந்து ரெண்டு லட்சம் லோன் வாங்கித் தர்றேன்.. பால் வியாபாரத்த விருத்தி பண்ணிக்கோ.. "

" மாடு கன்னு தாராளமா புழங்குறதுக்கு எடம் பத்தாதே சுந்தரம்!.. "

" இதோ காலியாத் தானே கிடக்கு ஜமீன்தார் வீட்டுத் தோட்டம்... "

" நீ பேசறது  நல்லாத் தான் இருக்கு.. ஜமீந்தார்க்கு பரம்பரை எடம்.. அவர் கிட்ட பேசணுமே.. நமக்கு அந்தத் தயிரியம் கெடையாது.. "

சுப்பையனிடம் நடுக்கம்..

" நான் பேசறேன்.. " - சுந்தரம் சிரித்தபடி எழுந்தார்..

முத்தையனிடமும் புன்னகை..

சுப்பையனின் மனைவி இருவரிடமும் ஆளுக்கு ஒன்றாக இரண்டு பைகளைக் கொடுத்து புன்னகைத்தார்..

பைகளுக்குள் நிலக்கடலை இருந்தது..

அடுத்த மூன்றாம் நாள் ஜமீன்தார் அனுப்பிய ஆட்கள் அந்தப் பழைய கட்டிடத்தை இடித்துத் தள்ளி விட்டு தோட்டத்தை ஒழுங்கு செய்து  கொடுத்தனர்.. 

சுப்பையன் குடும்பத்தினர் தங்களது தேவைக்காக தோட்டத்தைப் பய்ன்படுத்திக் கொண்டு தோட்டத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டியது.. என்ற ஷரத்துகளுடன் இரு தரப்பும் உட்கார்ந்து பேசி கையெழுத்து போட்டுக் கொண்டார்கள்..

ஆறு மாடுகள் நிற்கிற மாதிரி தொழுவமும் கட்டப்பட்டது.. எல்லாம் சுந்தரத்தின் ஏற்பாடு..

மூன்றாம் மாதத்தின் ஒரு நல்ல நாளில் சுப்பையன் வீட்டுப் பசு கன்று ஈன்றது.. 

முதன்முதலாகக் கறந்த சீம்பாலை மாரியம்மன் கோயில் புற்றுக்கு வைத்து விட்டு சாயங்காலம் கறந்த பாலில் திரட்டு செய்து  கை வாளிகள் இரண்டில் எடுத்துக் கொண்டு சகுந்தலாவும் அவள் கணவனும் ஸ்கூட்டியில் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்..

ஒன்று சுந்தரம் வீட்டுக்கு..

மற்றொன்று முத்தையன் வீட்டுக்கு..

***

38 கருத்துகள்:

  1. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு..

    தமிழ் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​எங்கள் நன்றியும் உங்களுக்கு...

      நீக்கு
    2. சித்திரச் செல்வர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் - சித்திரம் சேர்க்கவில்லை. மன்னிக்கவும்.

      நீக்கு
    3. தங்களது உடல் நலத்திற்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்..

      நீக்கு
  5. தமிழ்ப் புத்தாண்டின் முதல் கதை என்று எனது ஆக்கம்
    வெளியாகி இருப்பதில் மகிழ்ச்சி.. இறைவனுக்கு நன்றி..

    திக்கெல்லாம் பரவி தித்திப்பாய் விளங்கட்டும் எங்கள் பிளாக்!..

    பதிலளிநீக்கு
  6. என்றென்றும் இந்தத் தளம் அனைவருக்கும் இளமையாய் இனிமையாய் திகழ்வதற்கு வேண்டிக் கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் போலவே அரைத்த மாவை அரைக்கும் போது தீம்பாலாக திரட்டுப் பாலாக திரண்டு விட்டது..

    இதுவும்
    தற்செயல் தான்...
    நற்செயல் தான்

    பதிலளிநீக்கு
  8. மங்கலமாக கதைகள் அமைந்தால், அதனால் வரும் திருப்தியே தனிதான். சிறுகதைக்கு உள்ள சட்ட திட்டங்கள்லாம் அவசியமில்லை. ஆனால் இயல்பாக சாதாரண மனிதர்களின் வீட்டு நிகழ்வை, நல்ல மனதை, பிறர் கஷ்டத்தை நிவர்த்திக்கும்படியான போக்கில் கதை இருந்தாலே மனதுக்கு மகிழ்ச்சி வந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு நல்வரவு..
      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கௌதமன் சார் சில நாட்களிலேயே சரியாகிவிடும். கவலை வேண்டாம்.

    ஏப்ரல் 11லிருந்து தனுசு ராசிக்கு அனைத்துப் பிரச்சனைகளும் தீரும், இந்த வருடம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று சொல்லித் திரியும் ஜோசியர்களை, ஒன்றும் செய்யாமல் இங்க அனுப்பிவிடுகிறீர்களா? கர்லாக்கட்டையை உபயோகித்துப் பார்க்க ஆசையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  10. கீரைக்கட்டு, திரட்டுப்பால், பல எண்ணங்களை வரவழைக்குறது.இங்கு எழுத நேரமில்லை. இரண்டு வாரங்களில் பணிச்சுமை, டென்ஷன், பயணங்கள், அலைச்சல், கவலை, குழப்பம், எல்லாம் நல்லபடியா நடக்கணுமே என்ற ஓயாத நினைவு மன அழுத்தம் முடிவுக்கு வந்துடும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா பிரச்னைகளும் தீரும்.. தொல்லைகள் எல்லாம் இல்லை என்றாகும் நாள்..

      ஆனாலும், கர்லாக் கட்டை!.

      நீக்கு
    2. Sஎன்னுடையது, வீட்டின் நல்ல நிகழ்வு ஒன்றுக்காக நான் செய்கின்ற வேலைகள். இன்னும் பத்து நாட்களில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிடுவேன் என நினைக்கிறேன்.

      நீக்கு
    3. //இரண்டு வாரங்களில் பணிச்சுமை, டென்ஷன், பயணங்கள், அலைச்சல், கவலை, குழப்பம், எல்லாம் நல்லபடியா நடக்கணுமே என்ற ஓயாத நினைவு மன அழுத்தம் முடிவுக்கு வந்துடும் என நினைக்கிறேன்.//

      மன அழுத்ததிற்கு இடம் கொடுக்காதீர்கள். இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு உங்கள் வேலைகளை மகிழ்வுடன் செய்யுங்கள். நல்லபடியாக அனைத்தும் நடக்கும் நெல்லை.

      நல்ல நிகழ்வு நல்லபடியாக நடக்க பிரார்த்தனைகள் நெல்லை.

      நீக்கு
    4. நல்ல நிகழ்வு நல்லபடியாக நடக்க பிரார்த்தனை..

      நீக்கு
  11. /// சிறுகதைக்கு உள்ள சட்ட திட்டங்கள் லாம் அவசியமில்லை.. ///

    ஓ... இப்படியும் கூட இருக்கின்றதா?..

    காற்றுக்கென்ன வேலி..
    கடலுக்கென்ன மூடி!..

    கவியரசர் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. அருமையான கதை.
    நட்பு வாழ்க!

    //முதன்முதலாகக் கறந்த சீம்பாலை மாரியம்மன் கோயில் புற்றுக்கு வைத்து விட்டு சாயங்காலம் கறந்த பாலில் திரட்டு செய்து கை வாளிகள் இரண்டில் எடுத்துக் கொண்டு சகுந்தலாவும் அவள் கணவனும் ஸ்கூட்டியில் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்..//

    சகுந்தலாவின் கணவர் பொறுப்பனவர் ஆகி விட்டார். சுந்தரம் அவர்கள் உதவியால் சுப்பையன் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் இனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  14. கௌதமன் சார் உடல் நிலை சரியாக பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!