Tuesday, January 22, 2013

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.. இன்னும் இருக்கா?"

             
சங்கீதக் கச்சேரிகளில் இந்தமுறை நிறையப் பாடப்பட்ட ராகம் ஹம்சானந்தியாக இருக்கும் என்று தோன்றியது. அடுத்தது பெஹாக். அப்புறம் கேதாரகௌளை.
                                                

கச்சேரிக்குச் சென்று எப்படி / ஏன் பாட்டுக் கேட்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பாட்டை ரசிக்கும் ஒரு குழுவினருடன் இணைந்து ரசிக்க முடிகிறது. வேறு தொல்லை இல்லை, பேச்சுகள் இல்லை, குறுக்கீடுகள் இல்லை, (அலைபேசியைக் கூட அனைத்து வைத்து விடுகிறோம்). அப்புறம் அந்த ஹாலின் கேட்க்கும் சூழல்.ஆனால் வீட்டில் கேட்கும்போது ஏகப் பட்ட குறுக்கீடுகள். வேறு சத்தங்கள். அத்தனை மனதுக்குப் பிடித்த பிரபலங்கள் பாடுவதை இலவசமாகவும், காசு கொடுத்தும் கேட்கலாம். போதுமா காரணங்கள்?! 
                                        

இரண்டரை மணிநேரக் கச்சேரியாக இருந்தால் ஏதாவதொரு ராக வர்ணத்துடன் தொடங்கப் படும் கச்சேரியில் ஆலாபனைக்கு ஒரு பாடல், ராகம் தானம் பல்லவி, விஸ்தாரமாக ஆலாபனை தனி ஆவர்த்தனம் என்று பாடுவதால் கன ராகம் ஒன்று, அப்புறம் சில துக்கடாக்கள்,  விருத்தம் என்று 7 முதல் 9 பாடல்கள் வரை பாடுவார்கள். மதியங்களில் சுருக்க நேரமாகத் தரப்படும் கச்சேரிகளில் இதே கிரமம் நான்கைந்து பாடல்களுடன் அமையும்.
                                         

பாடப்படும் எல்லாப் பாடல்களும் நன்றாக அமைந்து விட்டால் ராசிதான். நன்றாக அமைவது என்பது ரசிகர்களின் விருப்பத்தையும் ரசனையையும் பொறுத்ததுவும் கூட என்றாலும் சில ராகங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ரஞ்சனி காயத்ரி (என்று நினைவு), பாடிய ஷண்முகப்ரியா (தந்தை தாய்) கண்ணில் நீரை வரவழைத்தது. ஒவ்வொரு கச்சேரியிலும் கச்சேரியில் நிச்சயம் ஒரு பாடல் மிகச் சிறந்ததாக அமைந்து கச்சேரி முடிந்த பிறகும் கூட மனதில் நிற்கும்.
           
                                 
 

பார்த்த, மன்னிக்கவும் கேட்ட கச்சேரிகளில் இந்த முறை (நாங்கள் கேட்டவரை) முதலிடம் பாம்பே ஜெயஸ்ரீ. அடுத்து சஞ்சய் சுப்பிரமணியம் அல்லது அபிஷேக் ரகுராம். (இரு மாறுபட்ட கருத்துகள்) மூன்றாமிடம் ரஞ்சனி காயத்ரி. பாம்பே ஜெயஸ்ரீ குரல் மனதுக்குள் ஊடுருவி என்னவோ செய்கிறது.

                                                           

ரித்விக் ராஜா, இன்னொருவர் பெயர் நினைவில்லை, அப்புறம் நிஷா ராஜகோபால் ஆகியோர் எதிர்பாராத இனிய ஆச்சர்யம். பொதுவாக ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் அன்றைய ஆட்டத்தைப் பொறுத்து அமைவது போல, கச்சேரிகள் பாடுவோர் தெரிவு செய்யும் ராகங்களிலும், அவர்களின் கல்பனாஸ்வரம் பாடும் திறமைகளிலும் இருக்கிறது என்று சொல்லாம்(மா?)

தெரிந்த, அல்லது பிரபல ராகங்களில் தெரிந்த பாடல்கள் காதில் விழுந்தால் என் போன்ற பாமரர்களுக்கு ஒரு சந்தோஷம். ஆனால் அது குறைவாகத்தான் கிடைத்தது. பெரிய பாடகர்கள் என்று அறியப் படுபவர்கள் புது ராகத்தில், அல்லது தெரிந்த ராகத்தில் புதிய கீர்த்தனைகளைப் பாடுவதுதான் பாண்டித்தியம் என்று நினைக்கிறார்கள். தமிழில் பாடல்கள் ரொம்பக் கேட்க முடியவில்லை.

              
சஞ்சய் சுப்பிரமணியம் இப்போது இருக்கும் பாடகர்களில் நிச்சயம் பெரிய உயரங்களைத் தொடும் திறமைசாலி. அபிஷேக் ரகுராம், சிக்கில் குருசரண், பரத் சுந்தர், பிரசன்னா வெங்கட்ராமன், சாகேதராமன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், அப்புறம் அடுத்த தலைமுறைப் பாடகர்களில் நிஷா ராஜகோபால், ரித்விக் ராஜா, ஆகியோர்  நம்பிக்கை நட்சத்திரங்கள்.


                                                


சாகேதராமன் இந்த சீசனில் கேட்க விட்டுப் போனது. காயத்ரி வெங்கட்ராகவனும். இதுவரைக் கேட்காத, கேட்கவேண்டும் என்று நினைத்து விட்டுப் போனது திருச்சூர் சகோதரர்கள்.

சங்கீத வேட்டைகளுக்குப் பிறகு நேரத்தைப் பொறுத்து, நாடகத்தைப் பொறுத்து
தேர்ந்தெடுத்து 3 நாடகங்கள் பார்த்தோம். எஸ் வி சேகர், வொய் ஜி மகேந்திரா, கிரேசி மோகன் நாடகங்கள். 

          


எஸ் வி சேகர் நாடகம் (காதுல பூ) துணுக்குத் தோரணம். படிக்க, சிடியில் போட்டு ரசிக்க ஓகே. அங்கு உட்கார்ந்து ரசிக்க முடியவில்லை. ரிஹர்சலோ என்று சந்தேகப்படும் வண்ணம் பேசினார்.

"நீ பாட்டுக்கப் பேசிகிட்டு இருக்கே.. உன் மைக் வேலை செய்யலை... அவர் கிட்ட சொல்லு..." சவுண்ட் எஞ்சினியரைக் காட்டுகிறார்.

"ரிஹர்சல்லதான் குழப்புவே... இங்கயுமா"


"பல்செட்டை சரி செஞ்சுகிட்டு பேசுங்க... அப்பவே சொன்னேன் இல்ல... நீங்க பேசறது அவங்களுக்கு ஒண்ணுமே புரியலையாம்" ஆடியன்ஸைக் கை காட்டுகிறார்.

நாற்காலியில் அவர் அமர்ந்திருக்க யமதூதர்கள் வந்து பேச, யார் எப்போது பேசுவது என்ற வரிசைக் கிரமம் மறந்த மாதிரி மாற்றி மாற்றிப் பேசத் தொடங்கி, நிறுத்திக் குழப்பினார்கள்.

கிரேசி நாடகத்தில் (மாது +1) வழக்கமாக வரும் 'சீனு'வைக் காணோம். ஆரம்பித்தது லேட். மாது, மோகன் தவிர வேறு யாரையும் தெரியவில்லை. ஒத்துக் கொண்ட நாடகம் போட வேண்டுமே என்று போட்டது போல சட்டென்று முடித்தார்கள்.


வொய் ஜி மகேந்திரா நாடகம் (இது நியாயமா சார்) அரங்க அமைப்பிலும் சரி, கதையிலும் சரி, ஒன்றிப் பார்க்க முடிந்தது.

தவறான தீர்ப்பால் வாழ்க்கையைத் தொலைத்த ஆயுள் தண்டனைக் கைதி தப்பி வந்து ஜட்ஜ் வீட்டில் புகுந்து நியாயம் கேட்கும் கதை. கொஞ்சம் 'நாணல்' பட வாடை, லேசாக 'மேஜர் சந்த்ரகாந்த்' வாசனை கூட. ஆனாலும் வெங்கட் ரசிக்கும்படி கதை எழுதி இருந்தார். வொய் ஜி மகேந்திரா தவிர வேறு யாரையும் தெரியாது என்றாலும் ரசிக்க முடிந்தது. அவர் மகளும் நடித்திருந்தார்.


                                                 


ஆர் எஸ் மனோகர் நாடகங்கள் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் மனதில் வந்தது.  நீண்ட நாட்களுக்குப் பின் நாடகங்கள் பார்த்தது புதிய அனுபவம்.

16 comments:

s suresh said...

நல்லதொரு இயல் இசை நாடகப்பகிர்வு! நன்றி!

கோமதி அரசு said...

கச்சேரிக்குச் சென்று எப்படி / ஏன் பாட்டுக் கேட்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பாட்டை ரசிக்கும் ஒரு குழுவினருடன் இணைந்து ரசிக்க முடிகிறது. வேறு தொல்லை இல்லை, பேச்சுகள் இல்லை, குறுக்கீடுகள் இல்லை, (அலைபேசியைக் கூட அனைத்து வைத்து விடுகிறோம்). அப்புறம் அந்த ஹாலின் கேட்க்கும் சூழல்.ஆனால் வீட்டில் கேட்கும்போது ஏகப் பட்ட குறுக்கீடுகள். வேறு சத்தங்கள். அத்தனை மனதுக்குப் பிடித்த பிரபலங்கள் பாடுவதை இலவசமாகவும், காசு கொடுத்தும் கேட்கலாம். போதுமா காரணங்கள்?! //

நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.
பாட்டை ரசிக்கும் குழுவினருடன் இருந்தால் மேலும் இசையை ரசிக்கலாம்.

மனோ சாமிநாதன் said...

சங்கீதக் கச்சேரிகள் பற்றி சுவாரசியமாக எழுதியிருந்தீர்கள்! பாடகர்க‌ள் பிரபல ராகங்கள் அமைந்த‌ பாடல்களை ஏன் பாடுவதில்லை என்று இப்போது தான் புரிகிறது! சென்னையில் இருப்பது இதற்கெல்லாம் செளகரியம். பிரபல சபாக்களில் எல்லாம் டிக்கட்டுகள் அதிக விலையில் விற்கப்படுவதாய் என் தோழியர் சொன்னார்கள், அது உண்மையா?

T.N.MURALIDHARAN said...

சங்கீதக்கும் நமக்கும் ரொம்ப தூரம் ஆனாலும் நீங்க எழுதிய விதம் சுவாரசியமா இருக்கு

Madhavan Srinivasagopalan said...

smiley

சீனு said...

// வழக்கமாக வரும் 'சீனு'வைக் காணோம்// சார் இதுல எதுவும் உல் குத்து இல்ல்லையே .....

சங்கீதம் கேட்கத் தெரியும் உணரத் தெரியும், புரிந்து கொள்ள சத்தியமாகத் தெரியாது. எத்தனையோ ராகங்களைப் பற்றி பேசினீர்கள், படிக்கும் பொழுது புரிந்தது கேட்டல் புரியுமா சர்வேஸ்வரா ....
நாடகங்கள் சீக்கிரம் பார்த்து விடுவேன்...அடுத்த முறை கண்டிப்பாக என்னை கூடிச் செல்வதாக நண்பன் ஒருவன் கூறியுள்ளான்

bandhu said...

டி எம் கிருஷ்ணா வை விட்டுவிட்டீர்களே? அதே போல், முன் தலைமுறை பிரபலங்கள் டி வி சங்கரநாராயணன், திருச்சூர் ராமச்சந்திரன் கச்சேரிகள் இருந்ததா? போயிருந்தீர்களா? பட்டாபிராம் பண்டிட் நன்றாக வரக்கூடியவர் என்று தோன்றுகிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கச்சேரி கேட்பதை பற்றி அருமையா எழுதி இருக்கீங்க.
// பாட்டை ரசிக்கும் ஒரு குழுவினருடன் இணைந்து ரசிக்க முடிகிறது. வேறு தொல்லை இல்லை, பேச்சுகள் இல்லை, குறுக்கீடுகள் இல்லை, (அலைபேசியைக் கூட அனைத்து வைத்து விடுகிறோம்). // அழகா சொன்னீங்க. ஒரே மாதிரி ரசனை உள்ளவர்களுடன் சேர்ந்து ரசிக்கும்போது அந்த ரசனையில் கிடைக்கும் நிறைவே தனிதான்.
// ஒவ்வொரு கச்சேரியிலும் நிச்சயம் ஒரு பாடல் மிகச் சிறந்ததாக அமைந்து கச்சேரி முடிந்த பிறகும் கூட மனதில் நிற்கும். // உண்மை.
பக்கவாத்தியங்களின் ஆலாபனையை நான் மிகவும் ரசிப்பேன்.
அடுத்த தலைமுறை பாடகர்களின் அறிமுகத்துக்கு நன்றி. இவர்கள் கச்சேரிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பானால்தான் என்னை போன்றவர்கள் பார்க்க முடியும். இல்லை என்றால் எப்பொழுது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதுதான்.

கிரேஸி மோகன் அவர்களின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தை சமீபத்தில் இங்கு பார்த்தோம். நீண்ட வருடங்களுக்கு பின் நாடகத்தை பார்த்தது நீங்கள் சொல்வது
போல் ஒரு புது அனுபவமாகதான் இருந்தது.

எங்கள் ப்ளாக் said...


நன்றி 'தளிர்' சுரேஷ்.

நன்றி கோமதி அரசு மேடம்.

நன்றி மனோ சாமிநாதன் மேடம். சபாக்களில் சாதாரணமாகவே விலை கொஞ்சம் கூடுதல்தான். அதிலும் இந்தமுறை இன்னும் கூடுதல்! சீசன் டிக்கெட் 5,000 ரூபாய் என்றால் இப்போது 5,500! ஆனால் அவ்வளவு பெரிய அரங்கில் உன்னி கிருஷ்ணன், நித்தியஸ்ரீ போன்ற பிரபலங்களுக்குக் கூட அரைவாசி கூட நிரம்பவில்லை என்றால் அவர்களும் என்னதான் செய்வார்கள்?! அரங்கு நிறையும் என்றால் அது சஞ்சய் சுப்பிரமணியம், அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ கே ஜே யேசுதாஸ் (இந்தமுறை இவருக்கும் கூட்டம் குறைவே) ஆகியோருக்குத்தான். இப்போதெல்லாம் அபிஷேக் ரகுராம், டி எம் கிருஷ்ணா, பரத் சுந்தர் கொஞ்சம் கூட்டம் சேர்க்கிறார்கள்.

நன்றி T N முரளிதரன்.

நன்றி மாதவன்.

நன்றி சீனு. மாது சீனு காம்பினேஷன் கிரேசி நாடகங்களில் பிரபலம். படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் (சி டி க்களில்). வழக்கமாக சீனு கேரக்டருக்கு வரும் நடிகருக்கு பதிலாக ஒரு இளைய புதுமுகம் வந்தார். அவரின் அனுபவமின்மை 'பளிச்'செனத் தெரிந்தது. அந்த சீனு பற்றிய குறிப்பு அது! நீங்கள் கலக்கும் சீனு ஆச்சே. அடுத்த வார வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். கலக்கு கலக்கு என்று கலக்குங்க...!

நன்றி bandhu சார்... ஆம்... டி எம் கிருஷ்ணா சொல்ல மறந்து விட்டது!. ஆனால் நாங்கள் இந்த சீசன் தொடங்கியது அவர் கச்சேரியுடன்தான். அருமையான கச்சேரி. எங்கள் ப்ளாக் முகப் புத்தகத்தில் பெரும்பாலான கச்சேரிகள் பற்றிப் பகிர்ந்துள்ளோம். இவரைப்பற்றியும் தனியாக எழுதி இருந்தோம்! அதே டி எம் கி. மயிலை சபாவில் எழுந்தும் ஓடச் செய்தார். நல்லதாகப் போச்சு. அருமையான நிஷா கச்சேரி அன்று கிட்டியது!

டி வி சங்கரநாராயணன் கச்சேரி அன்று 'எங்கள்' வீட்ல விசேஷம் காரணமாகத் தவற விட நேர்ந்தது! திருச்சூர் ராமச்சந்திரன், நெய்வேலி, டி என் சேஷகோபாலன் எல்லோரும் பாடினார்கள். நாங்கள்தான் கேட்கவில்லை.

நன்றி மீனாக்ஷி. நீங்கள் அங்கு பார்த்த சாக்லேட் கிருஷ்ணா வில் சீனு ப.முகமா, பு.முகமா?! தனி ஆவர்த்தனம் பற்றி தனியாக இன்னும் பத்து வரிகள் எழுதியிருக்க வேண்டும். அது ஒரு 'தனி' ரசனை! அந்த சமயம் எழுந்து போகிறவர்கள் பற்றி எங்களுக்கும் அதிருப்தி உண்டு, அபிஷேக் ரகுராம் கச்சேரியில் குறிப்பிடவும் செய்தார். பார்க்க: முகநூல் குறிப்புகள்!!

வெங்கட் நாகராஜ் said...

பாட்டு, நாடகம் - நேரில் பார்த்த அனுபவங்கள்.... அருமை....

எங்கள் ப்ளாக் said...


நன்றி வெங்கட் நாகராஜ்.

ஜீவி said...

மனதில் உணர்ந்ததை அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள், ஸ்ரீராம். ரசித்துப் படித்தேன்.

//இவர்கள் கச்சேரிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பானால்தான் என்னை போன்றவர்கள் பார்க்க முடியும்.//

-- மீனாக்ஷி

jeevagv.blogspot.in பதிவு தளப் பதிவுகள், உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம், மேடம்! முடிந்தால் சென்று பாருங்கள்.


வல்லிசிம்ஹன் said...

கச்சேரிக்ஜுப் போகாத குறையைத் தீர்த்துவைத்துவிட்டீர்கள். ரசனைக் குழுவோடு போனால் எதுவுமே ரசிக்கும். எனக்குக் குருசரண் மிகப் பிடிக்கும்.
சேகர்,மோகன் இவர்கள் நாடகம் போடுவதில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.
அலுப்பு தட்டுகிறது.
ஒய்ஜி மகேந்திரா கச்சிதமாகச் செய்கிறார் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

நன்றி ஜீ.வீ. நிச்சயம் பார்க்கிறேன்.

Ranjani Narayanan said...

நல்ல கச்சேரி கேட்க சூழல் மிகவும் முக்கியம். இரவு பத்து மணிக்கு வானொலியில் வரும் கச்சேரியை குறுக்கீடு இல்லாமல் கேட்டு மகிழலாம். ஆனால் வானொலியில் அப்படி கச்சேரி இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

//பிரபலப் பாடகர்கள் புது ராகத்தில் அல்லது தெரிந்த ராகத்தில் புதிய கீர்த்தனைகளைப் பாடுவதுதான் பாண்டித்தியம் என்று நினைக்கிறார்கள்.//

அப்படியே வழி மொழிகிறேன்.

நல்லதொரு அலசல்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!