The snuff stuff லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
The snuff stuff லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.10.10

பொடி விஷயம்...

அந்தக் காலத்தில் இருந்த எத்தனையோ விஷயங்கள் இந்தக் காலத்தில் கண்ணை விட்டு மறைந்து விட்டன. கண்ணை விட்டு மறைந்தாலும் கருத்தை விட்டு மறையாது. சிட்டுக் குருவி, பருந்து என்று பல உண்டு! அந்த வரிசையில்...

   
சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது. அதைப் பற்றி படிக்கும்போது பல வருடங்களுக்கு முன்னால் தஞ்சையில் இருந்த போது கொண்டாடப் பட்ட கும்பாபிஷேகம் என்று நினைக்கிறேன்... நினைவுகள் வந்து போயின. வேஷ்டி கட்டத் தொடங்கிய புதிது. அரசுக் குடியிருப்பில் இருந்தோம். மேம்பாலம் வழியாக இறங்கி இடது பக்கமாக போய் வலது பக்கம் போனால் கோர்ட்) புதாற்றை ஒட்டி இடது பக்கம் திரும்பினால் பெரிய கோவில். தாண்டிச் சென்று இடதுபுறமாகப் போனால் சிவகங்கைப் பூங்கா. ராஜராஜன் சிலையை ஒட்டி வலது புறம் திரும்பினால் மத்திய நூலகம், ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி வழியாக பஸ் ஸ்டேண்ட் அடையலாம். அந்த கும்பாபிஷேகம் சமயம் இந்தப் பாதையில் தான் பயங்கரக் கூட்டத்தில் மாட்டி, வேஷ்டி எப்போது எங்கே விழுந்தது என்று தெரியாமல் அலமலந்து ஓடி, திலகர் திடல் குட்டிச் சுவர் ஏறி, நரகல் குவியலில் குதித்து ஒரு ரிக்க்ஷா பிடித்து அப்பா, அண்ணன் தயவில் மானத்தை மறைத்து, பத்திரமாக வீடு வந்து சேர்ந்த நினைவுகள் எல்லாம் வந்தன...!     
   
ஆனால், இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல...!

அப்போதெல்லாம் இந்த மாதிரி விழாக்காலங்களிலும், இன்னும் ஏதேதோ கண்காட்சி போன்ற கூட்டம் கூடும் நாட்களிலும் மக்கள் கவனத்தைக் கவர்வது பல விளம்பரங்களுக்கு நடுவில் காணப் படும் (மூக்குப்) பொடி விளம்பரம். என் வி எஸ் என்று நினைக்கிறேன்,(டி ஏ எஸ்? ) வேஷ்டியை தார்ப் பாய்ச்சிக் கட்டியது போன்ற உருவகத்துடன் ஒரு மனிதன் உட்கார்ந்து பொடி இடிப்பது போன்ற விளம்பரம். பின்னர் விளக்குகள் போடப்பட்டு, மின் இணைப்பு தரப்பட்டு, கைகள் உரலில் இடிப்பது போல மேலும் கீழும் சென்று வரும் . இது அந்நாளில் புதுமை. அந்நாளில் குடைராட்டினத்துக்கு இணையாக இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் சேரும்.

இப்போது முதல் பாராவை மறுபடி படிக்கவும்.

நாகப்பட்டினத்திலிருந்து என் தாத்தா தஞ்சை வருவார். எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார். செம்மங்குடி பற்றியும் மதுரை மணி கச்சேரி சென்று வந்த அனுபவங்கள் பற்றியும் பேசுவார். சிறுவர்களிடம் அவர்களுக்கு இணையாகப் பேச்சு கொடுப்பார். ஒன்றும் தெரியாதது போல கேள்விகள் கேட்டு எங்கள் அறிவைச் சோதிப்பார். நான் அதில் ஒரு போதும் தேறியதில்லை! எங்களுடன் செஸ் விளையாடுவார். ஜோதிடம் பற்றி பேசுவார். மொத்தத்தில் சகலகலாவல்லவர். எதைப் பற்றி வேண்டுமானாலும், யாரிடம், எந்த வயதினரிடம் வேண்டுமானாலும் பேசுவார்.  அரசியலை விவாதிப்பார். பேச்சில் பொறி பறக்கும். என் அப்பாவுக்கும் அவருக்கும் குடுமி பிடி சண்டைக்கு இணையாக தடித்த பேச்சு வார்த்தைகள் பறக்கும். மாமனார் Vs மாப்பிள்ளை விவாதங்களை நாங்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். சண்டை கைகலப்பில் முடியுமோ, தாத்தா ஊருக்குக் கிளம்பி விடுவாரோ என்று பயமாக இருக்கும்.   

அவர் ஊர் சென்று விட்டால் சுவையான பொழுதுபோக்குப் பேச்சுகள் இல்லாமல் போய் விடும் என்பது மட்டுமில்லை, தாத்தா சுவைப் பிரியரும் கூட. சாப்பாட்டில் பக்குவம் சொல்வது, புதுப் புது காம்பினேஷன்களில் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்வது என்று கலக்குவதோடு அவர் ஒரு சிறிய அலுமினியப் பெட்டி வைத்திருப்பார். அதிலிருந்து காசு எடுத்து வெள்ளை அப்பம், பஜ்ஜி, காராச் சேவு மற்றும் இன்ன பிற நொறுக்குத் தீனிகளுக்கு மாலை நேரங்களில் வழி செய்வார். 'உன் கூட யார் பேசுவா' போன்ற இறுதிக் கட்ட வசனங்களுடன் கோபமாகப் பிரியும் மாமனாரும், மருமகனும் இரவு உணவின்போதோ, மறுநாளோ மிகச் சாதாரணமாகப் பேசிக் கொள்வதைக் கேட்கும் போது ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒருங்கே உண்டாகும். தாத்தா பற்றி தனிப் பதிவே போடலாம்!  ஆனால், பதிவு அவரைப்  பற்றியும் அல்ல...!

அந்த தாத்தா தன்னுடைய வேட்டி மடிப்பில் ஒரு வாழை நார்ப் பொட்டலம் வைத்திருப்பார். பாடல் ராகம் இழுத்துக் கொண்டே அல்லது சுவையான விவாதங்களுக்கு நடுவே, அல்லது படித்துக் கொண்டிருக்கும் 'ஹிண்டு'வை லேசாக மடித்து இடுக்கிக் கொண்டு... மிக ஜாக்கிரதையாக அந்தப் பொட்டலத்தை உள்ளங்கையில் வைத்து லேசாக ரெண்டு தட்டுத் தட்டி, ஜாக்கிரதையாகப் பிரிப்பார். மெல்லத் திறந்து கட்டை விரலாலும், நடு விரலாலும் ஒரு சிமிட்டா அதிலிருந்து எடுப்பார். மூக்கின் இரு துளைகளிலும் சமமாகப் பங்கிட்டு கண்ணை மூடி 'சர்.ர்..ர், சர்..ர்...ர்..' என இழுப்பார். சிலபல தும்மல்கள். இதற்காகவே இடுப்பில் நிரந்தரமாகச் சொருகியிருக்கும், இப்படி துடைத்து துடைத்தே நிறம் மாறி பழுப்பாகிப் போன கைக்குட்டையை வைத்து துடைத்துக் கொள்வார். சில சமயங்களில் அது நார்ப் பொட்டலமாக இல்லாமல் நீள் உருளையாக தகர டப்பி ஒன்று வைத்திருப்பார். அதிலிருந்து எடுத்துப் போடுவார். அவருக்கு அவர் பெயர் போட்ட எவர்சில்வர் டப்பா ஒன்றை அவருடைய பையன் ஒருவர் செய்து கொடுத்திருந்தார் (தந்தைக்கு மகன் ஆற்றிய உதவி - பெயர் சொல்லும் டப்பா!) இன்னொரு பொடிப் பிரியர் அருகிலிருந்தால் அவருக்கு ஒரு சிமிட்டா கிடைக்கும். 'மூக்கு அடைப்பு, ஜலதோஷம்லாம் கிட்ட அண்டாதுடா' என்பார்.      
           
மூக்குப் பொடி எதனால் செய்யப் பட்டது என்று எங்களுக்குள் விவாதம் நடக்கும்.. 'காபிப் பொடியில் காரம் கலப்பார்கள்' என்பான் ஒருவன். 'காய்ந்த புகையிலைப் பொடிடா' என்பான் இன்னொருவன்...

அந்த பொடி மட்டையை இப்போதெல்லாம் காணோம்! இப்போதெல்லாம் யார் கையிலும் பொடி மட்டை வைத்து அல்லது பொடி போட்டுக் கூட நான் பார்க்க நேர்வதில்லை. எங்கேயும் பொடி விளம்பரங்களையும் காணக் கிடைப்பதில்லை. முன்பெல்லாம் தெருவுக்குத் தெரு கடைகளில் பொடி விற்பார்கள். தாத்தா இருபத்தைந்து பைசாவுக்கோ எட்டணாவுக்கோ பொடி வாங்கி வரச் சொல்வார். கடைக் காரர் இதற்கென்றே ஸ்பெஷலாக வடிவமைக்கப் பட்ட ஸ்பூன் ஒன்று வைத்திருப்பார். நீளக் குச்சியில் குழிந்த அடிப்பாகம் கொண்ட 'எடுப்பான்'. அதை மூக்குப் பொடி ஜாடிக்குள் விட்டு காசுக்கு தகுந்தாற்போல அளவில் எடுத்து, பதம் அல்லது பாடம் செய்யப் பட்ட நார்ப் பொட்டலத்தில் கட்டித் தருவார்கள். இதற்கென்றே வாழை மட்டைச் சருகு எடுத்து காய வைத்து அடித்து பதப் படுத்தி வைத்திருப்பார்கள். சமீப காலங்களில் எந்தக் கடையிலும் பொடி விற்பனை செய்யும் அரிய காட்சியைக் காண முடியவில்லை. நான் போகும்போது யாரும் வாங்குவதுமில்லை. வழக்கொழிந்து போய் விட்டதோ? என்று எண்ணுகின்ற அளவு என் கண்பட யாரும் பொடி போடுவதும் இல்லை...! நல்ல வேளை - நாடு முன்னேறிவிட்டது, ஒரு புகையிலைப் பழக்கத்தைக் கைவிட்டு. 
        
இன்றைய இளைய சமுதாயம் பொடியை புறக்கணித்து மறந்து விட்டதா?  அல்லது, 'உமிழ்தல், உறிஞ்சுதல், ஊதுதல்' (tobacco chewing and spitting, snuff, smoke) ஆகிய மூன்று கெட்ட பழக்கங்களில் இரண்டை மறந்து ஒன்றில் விழுந்துவிட்டார்களா? மூன்றையும் விட்டுவிட்டால் ஆரோக்கிய வாழ்க்கை வாழலாமே!