சனி, 22 ஜனவரி, 2011

விட்டுப் போன பதிவு... புத்தகச் சந்தை விஜயம்..!


முப்பத்து நான்காவது (சென்னை) புத்தகக் காட்சி.
கூட்டம் வராத நாளில் ஒரு நாள் விஜயம்... விஜயம் செய்த ஆசிரியர் பார்வையில்:   
        

இந்த முறை வந்த 12 லட்சம் பேர் பார்வையாளர்களில் நாங்கள் மூவரும் கூட...இல்லாவிட்டால் 11,99,997 என்றுதான் கணக்கு வந்திருக்கும் இல்லையா...!

"என்ன பெரிசாக இருந்தாலும் நாங்க டெல்லி பிரகதி மைதானத்தில் பார்த்த காட்சி மாதிரி இல்லை" என்றாள் என் அக்கா பெண்!
 
புத்தகக் கண்காட்சி வரலாற்றில் உச்சத்தைத் தொட்ட விற்பனையாம்... 7.5 கோடி என்கிறது செய்தித் தாள். 
   
ஒவ்வொரு முறையும் வாசகர்கள் வருகை கூடுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. இந்த முறை பள்ளிகளிலிருந்து மாணவ மாணவியர் வருகையும் அதிகமாம்.  
 
நடுவில் வலையுலகப் பதிவர்களை தினமணி தாக்கியிருந்த நாளில்தான் எங்கள் விஜயம்...!
1.76 லட்சம் (நோ..நோ..நீங்கள் நினைப்பது இல்லைங்க...) சதுர அடி அரங்கில் 646 அரங்குகளாம்...புத்தகத் தலைப்புகள் கோடிகளில் சொன்னார்கள். கோடிகளிலா லட்சங்களிலா...25 லட்சம் புத்தகங்கள் விற்றனவாம். 
           
ஸ்பெக்ட்ரம் ஊழல், ராஜராஜன், காலப்பெட்டகம், வரலாற்றுச் சுவடுகள், பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவை அதிகம் விற்ற நூல்களாம்.  
     
நான் இந்த முறை அதிகம் நூல்கள் வாங்கவில்லை. பதிப்பகங்களில் எப்போது வேண்டுமானாலும் போய் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரே இடத்தில் இவ்வளவு பதிப்பகங்களையும் பார்ப்பதே ஆனந்தமாக இருக்கிறது. சுஜாதா இல்லாத குறை நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் அவர் புத்தகங்கள் கிட்டத் தட்ட எல்லா ஸ்டால்களிலும்... விற்றதும் அவர் புத்தகங்கள்தான் நிறைய இருக்கும்...சுஜாதாவினாலேயே புத்தகங்கள் வாங்க வந்தவர்கள் நிறைய இருக்கும். 

  
 சில படங்களைக் கிளிக்கிப் பார்த்தால், அதில் உள்ள கமெண்டுகளை படிக்க முடியும் (வயதான வாசகர்களுக்கு) - அதுக்காக கிளிக்காமலேயே படித்தேன் என்று சில வாசகர்கள் ஃபிலிம் காட்டாதீர்கள்!
 




   
படைப்பாளியும் வாசகர்களும் கலக்க இந்த மாதிரி இடங்கள்தான் நல்ல வாய்ப்பு என்றாலும் கூட அவை சரியாகச் செய்யப் படுவது இல்லை, இன்னும் பரவலாக நன்றாகச் செய்யலாமோ என்று தோன்றுகிறது. 
   
கடைசி ஸ்டாலில் முக்தா சீனிவாசன் இருந்ததாகச் சொன்னார்கள். பார்க்க வேண்டும் என்று நினைத்து மறந்து போன விஷயம்.   
முத்துச்சரம் ராமலக்ஷ்மி முதலில் சொன்ன புத்தகம் மறந்துபோன இன்னொன்று. இப்போது அவர் சொல்லியிருக்கும் நிலா ரசிகன் புத்தகம் கூட வாங்க ஆவல் பெருகுகிறது.  
      
ஒவ்வொரு பாதைக்கும் விவேகானந்தர் பாதை, பாரதியார் பாதை, ஷேக்ஸ்பியர் பாதை என்று பெயரிட்டிருந்தார்கள். சில பதிப்பகங்கள் கேட்ட உடன் முப்பது சதவிகிதம் வரை தள்ளுபடி தந்தார்கள். பதிப்பகங்களே ஸ்டால் வைத்திருக்கும்போது வெறும் பத்து சதவிகிதம் தான் தள்ளுபடி என்பது கஞ்சத் தனமாக இருக்கிறது. உள்ளே சர்க்கரை அதிகம் போட்ட காபி, ஊட்டி ஒரிஜினல் வர்க்கி, சாய் போன்றவை விற்றார்கள். ஆங்காங்கே நடுவில் உட்கார ஓரங்களில் (ஸ்டால் முடிவுகளில்) நீண்ட பெஞ்சுகள் அமைத்திருக்கலாம். நீ....ண்ட தூரம் நடக்கும் போது வரும் கால் வலிக்கு இதமாக இருக்கும். 

   
கிழக்கு பதிப்பகத்தில் நான் கேட்ட புத்தகங்கள் இல்லை. (அவர்கள் தந்த லிஸ்ட்டில் இருந்தவை) பணியாட்கள் நிறைய பேர் இருந்தும் சரியான பதில் இல்லை. ஒரு சீட்டைத் தந்து நிரப்பித் தரச் சொல்வதில் இருந்த ஆர்வம் தேடித் தருவதில் இல்லை...இல்லாதது சுப்ரமணிய ராஜு சிறுகதைகள், ஜென் கதைகள், ஆடியோ புத்தகங்கள்... பணியாளர்கள் நண்பர்களுடன் பேச கேட்லாக்கை கையில் வைத்தபடி அதில் கை வைத்து சுட்டிய படி "அம்மா நல்லாருக்காங்களா...அப்புறம் வந்து பார்க்கிறேன்.." என்று பேசியது திறமை......
    
உயிர்மையில் சுறுசுறுப்பு...ம.பு சுரேஷோடு பேசிக் கொண்டிருந்தார். நடுவில் எஸ்ராவைப் பார்த்து கை குலுக்கச் சென்ற போது, விலக்கி வேகமாக நடந்தார். அப்புறம் போய்ப் பார்த்தபோது மனுஷ்யபுத்திரன், சாருவுடன் சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்! 

பிரபஞ்சனைப் பார்த்தோம்; ஞானியுடன்  கை குலுக்கினோம்.

வயதானவர்கள் நடக்க முடியாது என்னும்போது ஒரு வீல் சேர் ஏற்பாடு செய்யலாமோ.. 


 

   
போன வருடம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் காரர்கள் சாப்பாட்டரங்கம்..இந்த முறை செட்டி நாடு...பொதுவாக எனக்கு செட்டி நாடு சுவை ரொம்பப் பிடிக்கும்..இங்கு அபபடி ஏதும் ஸ்பெஷலாக இருந்ததாக தெரியவில்லை. சரி..சரி... முக்கியத்துவம் புத்தகங்களுக்குதானே...! உணவகத்தில் தனியார் செய்து கொண்டிருந்த ஸ்வீட் மற்றும் கார போளிக்கு அமோக வரவேற்பு... இருபது ரூபாய்.

கூட்டம் இருந்த நாளில் சென்ற ஆசிரியர் எழுதுகிறார்:    

    
நடக்குமிடத்தில், கம்பளத்திற்குக் கீழே, சில இடங்களில் மரப் பலகை, கொஞ்சம் உள் வாங்கியது. என்னுடைய ஓவர் வெயிட் நண்பர் (நல்லவேளையாக) என்னுடன் புத்தகக் காட்சிக்கு வரவில்லை.   
       
நுழைவு வாயிலில், நான்கைந்து கவுண்டர்கள் இருந்தபோதிலும், ஏதேனும் ஒரு கவுண்டரில்தான் அனுமதிச் சீட்டு வாங்க முடிந்தது. பெரும்பாலும் வாங்கியவர்கள், நான்கு, ஐந்து என்று வாங்கினார்கள். வாங்கிய அனுமதிச் சீட்டின் கிழி பாதியில், பெயர், விலாசம், ஃபோன், ஈமெயில் போன்ற விவரங்களை எழுதி நுழைவு வாயிலின் அருகே ஒரு பெட்டியில் போடச் சொல்லி இருந்தார்கள். யாருக்காவது, எதற்காவது அது உபயோகப் பட்டிருக்குமா, விவரங்களை யாராவது சேகரித்திருப்பார்களா என்பதெல்லாம் மனதில் தோன்றிய வினாக்கள். (என்னுடைய நம்பருக்கு குலுக்கல் முறையில் பரிசு ஏதாவது விழுந்திருந்தால் சொல்லுங்கப்பூ!)
            
சிறிய புத்தகக் கடைகளில், கார்ட் பேமெண்ட் என்று சொன்னாலே வெட்கப்பட்டு, வேண்டாம் என்றார்கள். சிலர் இருநூற்றைம்பது ரூபாய்க்கு மேல் வாங்கினால்தான் கார்ட் பேமெண்ட் ஏற்றுக்கொள்வோம் என்றனர். ஆங்காங்கே, கார்ட் தேய்க்கும் எந்திரங்களுடன் சிலர் இருந்த பொழுதும், புத்தகக் காட்சியில் பெரும்பாலான கடைகளில், அட்டை வழி பணம் செலுத்துதலுக்கு ஆதரவு காட்ட முன்வரவில்லை. அதனால், நான் வாங்க தேர்ந்தெடுத்த அதிக விலையுள்ள சில புத்தகங்களை வாங்க இயலவில்லை. எங்கள் ஆசிரியர்களில் ஒருவர், கிரெடிட் கார்ட் ஏற்றுக் கொண்டார்கள் - ஆனால் டெபிட் கார்ட் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினார். ஆனால், நான் எல்லா கார்ட் பேமெண்ட் வசதியுள்ள கடையிலும், என்னுடைய டெபிட் கார்ட் தான் உபயோகித்தேன். கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்களுக்கு அழகிய, பெரிய தூக்குப் பை கொடுத்தனர். என்னுடைய டெபிட் கார்டுகளில் ஒன்று காலாவதியாகிவிட்ட விவரம் கூட எனக்கு, கிழக்கு ஸ்டாலில், அட்டை காசாளர் சொல்லித்தான் தெரியவந்தது. எனக்கும், கே ஜி ஜவர்லால் எழுதிய ஜென் கதைகள் புத்தகம் கிடைக்கவில்லை.  

     
சாப்பிட என்று வாங்கியது, முதலில் ஒரு ஆப்பிள் ஜூஸ். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து, செட்டிநாடு உணவகம் பக்கம் போய்ப் பார்த்தேன். பெரிய க்யூ வரிசை ஒன்றில் பொறுமையாக நின்று நுழைவிடம் வரையிலும் வந்த பிறகு, அங்கே ஒருவர் என்னிடம் கையேந்தினார். 'என்ன' என்று கேட்டேன். 'டோக்கன் எங்கே?' என்று கேட்டார். அடக் கடவுளே - இது டோக்கன் வாங்கியவர்கள் - சாப்பிடுவதற்கு நிற்கும் க்யூவா? - சரிதான், டோக்கன் வாங்க வேறு ஒரு கியூவில் போய் நின்ற பின்தான் எனக்கு ஓர் உண்மை உறைத்தது. கார்ட் பேமெண்ட் இல்லாததால், கையில் கொண்டுவந்த எண்ணூற்றுச் சொச்சம் ரூபாயையும் செலவழித்து புத்தகங்கள் வாங்கிவிட்டேன். கையில் இருபது ரூபாய்கள் மட்டுமே இருந்தது!   
   
வேகமாக வெளிவாசல் வரையிலும் வந்து, ஒரு கடையில் ஒரு வெஜிடபிள் சூப்பும், இரண்டு சமொசாக்களும் சாப்பிட்டேன்.
   
கேரளா ப்ரூட் சாலட் ஸ்டாலில், எல்லா அறிவிப்பு நோட்டீசிலும் இருந்த விலை விவரத்தை கர்ம சிரத்தையாக அழித்து / கிழித்து வைத்திருந்தனர். என்ன விலை நிர்ணயம் செய்திருந்தனர், என்ன விலைக்கு விற்றார்கள் என்று தெரியவில்லை. கடை சொந்தக்காரருக்கே / விற்பனையாளருக்கே/ வாங்கித் தின்றவர்களுக்கே வெளிச்சம்.


புத்தகக் காட்சியில், கழிப்பிடப் பகுதி, நமக்கு பழைய கற்காலத்தைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
                  











  
                                      (இரண்டு ஆசிரியர்கள்தான் புத்தகங்கள் வாங்கினார்களா? ஐந்தில் ஒருவர்தான் புத்தகம் வாங்காதவர். இன்னும் இருவர் வாங்கியவை, வேற்று மொழிப் புத்தகங்கள். அதனால் இந்தத் தமிழ்ப் பதிவில் நாங்க போடவில்லை. அவங்க வாங்கிய புத்தகங்களிலிருந்து ஏதேனும் மொழி பெயர்ப்பு செய்து அடுத்த புத்தகக் காட்சிக்குள் எழுதுவார்கள் என்று எதிர் பர்ர்க்கின்றோம்.)
                    

17 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. படங்கள் சூப்பர். கிழக்கு பதிப்பகம் அவ்ளோ மோசமாவா நடந்துகிட்டாங்க?

    பதிலளிநீக்கு
  2. Thiru thirumathi anaivarkkum Vanakkam
    All ,and every thig are good on site.
    Bakehouse appeal Win a kilo of gold for bread
    http://www.rajinikanth.org

    பதிலளிநீக்கு
  3. அட்டகாசம் போங்க! எவ்ளோ ரூபாய்க்கு வாங்கறோம் அப்படிங்கறத விட எவ்ளோ உருப்புடியான புக்ஸ் வாங்கறோம் அப்படிங்கறது முக்கியம். படங்களோட பதிவு அருமை.. ;-)

    பதிலளிநீக்கு
  4. அனுபவிக்சு எழுதியிருக்கீங்க. உங்க உதவியால அங்கயே போய் பாத்த மாதிரி ஆயிடுச்சு. போளி சாப்பிட்டு பாஹேனு ஏப்பம் விட்டேன். நன்றி.

    புத்தக அடுக்கு அழகு. ரொம்ப நேரமாகும் அடுக்க என்று நினைத்த போது கங்காராம்ஸ் கடையில் சர் சர்ரென்று இது போல் அடுக்கும் குயவர்களைப் பார்த்திருக்கிறேன்.

    தினமணியில் என்ன எழுதியிருந்தார்கள்?

    பதிலளிநீக்கு
  5. நேரில் பார்த்த நிறைவை தந்தது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  6. நேரடி வர்ணனை போல இருந்தது .

    1.76 என்ற எண்ணுக்கு நீங்கள் கொடுத்த விமர்சனம் சூப்பர் .

    இவண், இணையத் தமிழன் .
    http:\\inaya-tamilan.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. விட்டு போனவை.
    ஐநூற்றி ஐம்பதுக்கு அதிகமான பதிப்பகங்கள்.
    ஐந்து லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். கமெண்டுகளை பெரிது படுத்தி பார்த்து விட்டேன்.

    சுப்ரமண்ய ராஜு கதைத் தொகுப்பு புத்தகக் கடைகளில் வாங்கப் பாருங்கள். அப்படியே நான் சொல்லி மறந்து போனவற்றையும்:)! ஆனால் மறக்காமல் இங்கு குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  9. // நடுவில் வலையுலகப் பதிவர்களை தினமணி தாக்கியிருந்த நாளில்தான் எங்கள் விஜயம்...! //

    Details please

    பதிலளிநீக்கு
  10. //11,99,997 என்றுதான் கணக்கு வந்திருக்கும் இல்லையா...!//
    ஏன் இப்புடி?

    //வலையுலகப் பதிவர்களை தினமணி தாக்கியிருந்த//
    ??

    //ஸ்பெக்ட்ரம் ஊழல்//
    அதுக்குள்ள புத்தகமே வந்தாச்சா?!

    சாப்பாட்டரங்கம் பத்தி எழுதி ஃபோட்டோ எல்லாம் போட்டு - ஏன் இந்த கொலவெறி? :(

    பதிலளிநீக்கு
  11. //சுஜாதாவினாலேயே புத்தகங்கள் வாங்க வந்தவர்கள் நிறைய இருக்கும். //

    :D

    பதிலளிநீக்கு
  12. நிறைய படங்களுடன் நல்ல தொகுப்பு. நன்றி

    பதிலளிநீக்கு
  13. மிக நல்ல தொகுப்பு. மதுரையில் 3 மாதங்களுக்கு முன் நடந்த புத்தக கண்காட்சி இந்த அளவுக்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  14. எங்களை மாதிரி பார்ப்பதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த பதிவு ஒரு ஆறுதல்...உள்ளே சுத்திய அனுபவம் தந்தது..நன்றி

    பதிலளிநீக்கு
  15. நான் வாங்காமல் விட்டுப்போன பல புத்தகங்கள் உங்களிடம் இருக்கிறது :)

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு.அடிக்கடி வருகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!