செவ்வாய், 10 மே, 2011

பார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை 2

         
இப்போதைய மாணவச் செல்வங்களைப் பற்றி கேள்விப்படும் செய்திகள் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. கொஞ்ச நாள் முன்பு காபி அடித்ததை தட்டிக் கேட்ட ஆசிரியையை தட்டி வைக்கச் சொல்லி பெற்றோர் ஆர்ப்பாட்டம் பண்ணிய செய்தி வந்தது. அதில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா இல்லையா என்று நினைவில்லை. சமீபத்தில் அதே போல இன்னொரு சம்பவம். பொறியியல் கல்லூரி மாணவன் ஒருவன் யூனிட் டெஸ்ட் ஒன்றில் காப்பி அடிக்கும்போது பிடிபட்டுவிட, மனம் வெறுத்துப் போன மாணவன் குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்து மாய்ந்து போனதாகக் கேள்விப்பட்ட போது அந்த மாணவனை நினைத்து மனம் பதறவில்லை. அவனைப் பெற்று வளர்த்து செலவு செய்து படிக்க வைத்த பெற்றோரை நினைத்துதான் மனம் பதறியது.
        
"காலம் நமக்குத் தோழன்...காற்றும் மழையும் நண்பன்..."

தேர்வுகளில் காபி அடிப்பது குற்றம் என ஏன் இவர்கள் உணரவில்லை? நல்வழி சொல்லிக் கொடுத்தால் உயிரை மாய்த்துக் கொள்ளும் வெறுப்பும், தோல்வி மனப்பான்மையும் ஏன்? கல்வியில் தவறா? வளர்ப்பில் தவறா? என்ன தோல்வி என்றாலும் மீண்டு வரும் துணிவு ஏன் இவர்களுக்குக் கற்று தரப் படவில்லை? வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பேசுகிறார்களா? அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் நட்பு வைத்திருக்கிறார்கள் என்று கொஞ்சமாவது பார்க்கிறார்களா? திரைப் படங்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் பார்த்துக் கெட்டுப் போகிறார்களா?
      
முன்பெல்லாம் மாரல் சயன்ஸ் என்று ஒரு வகுப்பு இருக்கும். வாழ்க்கைக் கல்வி போல சில விஷயங்கள் கற்றுத் தருவார்கள். நாங்கள் படிக்கும்போது கிராஃப்ட் (craft) என்றொரு வகுப்பு கூட இருந்தது. கைத் தொழில்கள், கலைகள் கற்றுத் தருவார்கள். இப்போதெல்லாம் அபபடி ஏதும் வகுப்பு எடுத்து டைம் வேஸ்ட் செய்வதில்லை பள்ளிகள். காசு பார்க்கும் வழி மட்டும்தான்!

---------------------------------------------------------

சென்னைச் சாலைகளில் போகும்போது ஒரு காட்சி - வெறுப்பேற்றும் காட்சி - அடிக்கடி பார்க்கலாம். முன்னால் போகும் வண்டிக்காரர் (அல்லது பக்கத்தில் வரும் டூ வீலர்க்காரர்) காரின் ஜன்னலைத் திறந்து அல்லது இரு சக்கர வாகனத்திலிருந்து,  அல்லது பஸ் ஜன்னலிலிருந்து அப்படியே வாந்தி எடுப்பது போல சாலையில் 'பான்-பராக்' மழை பொழிவார். பெரும்பாலும் கால் டாக்ஸி டிரைவர்கள்தான் இப்படிச் செய்வோரில் அதிகம். வயதும் அதிகமிருக்காது. இருபத்தைந்துக்குள் இருக்கும். சாலையை அசிங்கப் படுத்துகிறோம் என்ற உணர்வோ, சுற்றிலும் பார்க்கும் பொது மக்களுக்கு இடைஞ்சலாகவோ, அருவெறுப்பாகவோ இருக்கும் என்று யோசிப்பதில்லை.    
     
நம் நாடு, நாம்தான் சுத்தமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கூட யோசிக்க வேண்டாம். இது நம் உடல் நலத்திற்குத் தீங்கானது என்று கூடவா தெரியாது? மேலும் இந்த பான்-பராக், குட்கா போன்ற சமாச்சாரங்களை அரசாங்கம் தடை செய்திருந்ததாகவும் நினைவு. யார் கேட்பது? யார் இவர்களுக்கெல்லாம் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் போதிப்பது? "எங்கள் திராவிடப் பொன் நாடே...!"
    ------ x ------- x ---------- x --------
அதே போல இன்னொரு சம்பவம். நல்ல டிராஃபிக். விரையும் வாகனங்கள். பகல் நேரம். முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஸ்லோ வாகிறது. பின்னால் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டி இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம். விதி! அதை ஓவர்டேக் செய்ய முனைகிறார். அப்போது காரின் வலப் பக்க கதவு திறக்கிறது.  அதில் மோதும் பைக் இளைஞர் தூக்கி எறியப் படுகிறார், விதி விளக்குக் கம்ப ரூபத்தில். அதில் மோதி மண்டை பிளந்தவரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.  
                   
பிரபல மருத்துவமனை. மூன்று நாள் 'வைத்திருக்கிறார்கள்'. பிழைக்க வாய்ப்பில்லை என்பது பாமரனுக்குக் கூட தெரிந்த நிலை. ஆனாலும் 'சில' காரணங்களுக்காக அறிவிப்பு தாமதமானது. பிறகு மூளைச் சாவு என்று அறிவிக்கப் பட்டது. உறுப்புகள் தானத்துக்குக் கேட்கப் பட்டது. 'போஸ்ட் மார்ட'த்துக்கு தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுமதி இல்லை. அரசாங்க ஆஸ்பத்திரி போக வேண்டும். ஆனால் இவர்கள் உண்டு என்றார்கள். லேட் செய்தார்கள். பின்னர் ராயப் பேட்டை அனுப்பினார்கள். யாரைக் குறை சொல்வது? நல்ல டிராஃபிக்கில் வலது பக்கம் கதவைத் திறந்த மாது சிரோன்மணியை என்ன சொல்வது? (பின்னர் விசாரித்த போது நகரின் ஒரு பிரபல பள்ளியின் சொந்தக்காரரின் மனைவியாம் அவர். விஷயம் வெளியில் வராமல் அமுங்கி விட்டது. உயிரிழந்தவர் நண்பரின் நண்பர். பிழைக்க மாட்டார் (மண்டை பிளந்தவர் எங்கே பிழைப்பது?) என்று தெரிந்தும் சிகிச்சை செய்த வகையில் மூன்று லட்சங்களுக்கு மேல் செலவானதைச் சொல்வதா... அப்புறமும் உறுப்புதானம் என்ற வியாபாரத்தின் பேச்சுவார்த்தையைச் சொல்வதா... எல்லாமே வியாபாரமாகி விட்ட இந்நாளில் இதைப் பற்றி பேசி என்ன பயன்?

"கண்டதைச் சொல்லுகிறேன்...உங்கள் கதையைச் சொல்லுகிறேன்...இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எமக்குண்டோ....?"

--------------------------------------------------------------------

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கவிஞருக்கு பெயில் வழங்க நீதிபதியே பதிமூன்றைத் தாண்டி பதினான்காம் தேதிதான் நாள் குறித்திருக்கிறார். என்ன நிர்ப்பந்தமோ..! தேர்தல் முடிந்து அதன் முடிவை அறிய இவ்வளவு நீண்ட இடைவெளி இதுவரை இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.
      
தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை விரல் பின்னி காத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட ஹேஷ்யங்கள், அனுமானங்கள். எல்லோரும் அவரவர் விருப்பத்தைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும் இடங்களைப் பார்க்க வேண்டுமே...இரவு நேரங்களில் கிரிக்கெட் மேட்ச் நடப்பது போல ஒளி வெள்ளத்தில் கட்சிக்காரர்கள் வெளியே பெஞ்ச் போட்டு அமர்ந்து சுழற்சி முறையில் இரவு பகலாக காவல் காக்க, சகாக்கள் காவல் காப்பவர்களுக்கு பிரியாணி பொட்டலம் முதல் அரட்டை கம்பெனி வரை தர, போலீஸ் பாதுகாப்பு சுற்றிலும் பலவகையில் செய்யப் பட்டிருக்க...கோலாகலம்தான். வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும் பகுதிகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாள் வரை மின்வெட்டு கிடையாது!
                       

15 கருத்துகள்:

  1. காப்பி அடித்தல் தவறு, பொது இடங்களில் அசுத்தம் செய்வது தவறு என்பதெல்லாம் தெரியாத விஷயங்களா. எல்லாமே அலட்சியத்தின் காரணமாக. அவரவர்களாக உணர்ந்து திருந்தினால் தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. 1. When I try to open the blog in IE 8 its giving Operation aborted and not able to read

    2. There is one popup coming up when I open your blog

    பதிலளிநீக்கு
  3. தற்கொலை விஷயம், மன உறுதி இல்லாமையே காரணம். அவர்களை வழி நடத்த தவறிய ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இருவரும் பொறுப்பு.

    பதிலளிநீக்கு
  4. ஒரு உயிருக்கு மதிப்பே இல்லையா? தற்கொலை - விபத்து - ஆபத்து - என்று எந்த பெயரில் இழந்து போனாலும்......

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம்.. 'பெற்று வளர்த்து..' - காபி அடித்ததும் தற்கொலைக்குத் துணிந்ததும் வளர்த்த விதமாகுமா? அல்லது மெடல் வாங்கினால் மட்டும் வளர்த்த விதமாகுமா? இங்கே பரிதாபம் அந்த மாணவன் தான், பெற்றோர் அல்ல என்று நினைக்கிறேன். ..செலவு செய்து? யார் செய்யச் சொன்னது? பெற்ற கடனுக்குச் செய்ததை பெரிது படுத்துவது சரியென்று தோன்றவில்லை.

    எல்கே வழிமொழி.

    பதிலளிநீக்கு
  6. ஓடும் போது கதவைத் திறந்தாரா? முட்டாள்தனத்துக்கு அளவே இல்லையா? இதை அடக்கி விட்டார் என்று தெரிந்தும் சும்மா இருப்பது சரியா? யாரென்று தெரிந்தால் குறைந்த பட்சம் அவர் வீட்டு வாசலில் நின்று அமைதிப் போராட்டமாவது நடத்தலாமே?

    பதிலளிநீக்கு
  7. அவசரமான முடிவுகளால்தான் எல்லாமே சிதறுகிறது !

    பதிலளிநீக்கு
  8. டெல்லி போய் பாருங்கள் !! வெள்ளை சட்டை சிவப்பாகும் வரை துப்பி வைப்பார்கள்.

    இந்தியாவில் இருக்கும் ஜனதொகைக்கு நாம் நடந்தால் நலம். காரில் போனால் தானே கதவை திறப்போம் !!

    பதிலளிநீக்கு
  9. கல்வி, வளர்ப்பு இரண்டுமே பிரச்சனை தான். இரண்டிலும் மதிப்பெண்களைத் துரத்துவதே குறிக்கோளாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. மாணவர்களின் மன உறுதியின்மைக்கு காரணம் மித மிஞ்சிய எதிர்பார்ப்பு ..நேருக்கு நேர் ஒப்பிடல்.. தோல்வியை வெற்றிப்படியாக்கும் சரியான பயிற்சி இல்லாதது ...

    வெத்தல பாக்கு துப்பலுக்காகவே ஹெல்மெட் அணிய வேண்டும்..

    பதிலளிநீக்கு
  11. வாகனங்களில் செல்லுபவர்கள் சாலையோர தடுப்புசுவர்களில் பான்பராக் துப்புவது சென்னையில் அதிகமாகிவிட்டது . வேலையின் பொருட்டு நிறைய வட இந்தியர்கள் வருகையும் ஒரு காரணம். இவர்கள் பான்பராக்கை மென்று துப்புவது மிக சாதாரணமான ஒன்று. முன்பெல்லாம் மும்பையில் செலும் இடமெல்லாம் செங்காவி நிறத்தில்தான் இருக்கும் இப்போது துப்புவதை அங்கு தடை செய்துள்ளனர். ஆங்காங்கே அதற்கு போர்டுகள் வைத்து அறிவுரைகள் வேறு.

    பதிலளிநீக்கு
  12. மாணவரின் தற்கொலை, சாலை விபத்து பதற வைக்கும் நிகழ்வுகள். இப்போது மாரல் சயின்ஸும் இல்லை. வாழ்க்கை கல்வி அவசியம் எனும் விழிப்புணர்வும் இல்லை. மருத்துவமனையின் செயல்பாடு மனிதநேயம் என்பதையே அர்த்தமற்றதாக்கி விட்டது.

    பதிலளிநீக்கு
  13. எப்போவெல்லாம் மாணவ, மாணவிகளின் இறப்புச் செய்தி பார்க்கிறேனோ, அப்போவெல்லாம் பெற்றோர்கள் மட்டுமே என் கண்ணுக்குத் தெரிகிறார்கள். கல்லூரி படிக்கும்போது, சக மாணவன் ஃபெயிலானதால் தற்கொலை செய்தபோது, வந்த அவனின் பெற்றோர்களின் கதறல் இப்போதும் காதுக்குள் இருக்கிறது. :-((((

    //வழி நடத்த தவறிய ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இருவரும் பொறுப்பு.//
    உண்மை. எனினும், இன்றைய ஊடகங்களுக்கும் - முக்கியமாக சினிமா/சீரியல்கள் - பங்குண்டோ இதில்?

    பதிலளிநீக்கு
  14. துப்பிய காரணத்துக்காக நேற்று ஒருவருக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார்கள் சிகாகோவில். போலீஸ்காரர் மேல் துப்பியதற்காக.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!