Moral Instructions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Moral Instructions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.4.12

கர்ணனும் பட்டாக்கத்தி பைரவனும் - ரத்தக் காட்டேரி, நம்பிக்கைகள்.... வெட்டி அரட்டை.

                          
புதுக்கோட்டை இடைத் தேர்தல் ஆளும் கட்சி சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி விட்டது என்றும் கம்யூனிஸ்ட் பார்ட்டி திகைத்து முதல்வரிடம் பேசுவோம் என்றும் சொல்வதாகச் செய்தி! எங்களுக்குத் தோன்றுவது...
                 
ஆளும் கட்சி: விட்டுக் கொடுக்க வேண்டும்
                            
ஏற்கெனவே போட்டியிட்டு வென்றிருந்த கட்சி : ஆளும் கட்சியைக் கூட்டணிக்குக் கெஞ்சாமல் மறைந்த தன் கட்சி வேட்பாளரின் எளிமையை நம்பி தைரியமாக தனியே நிற்க வேண்டும். 
                            
முக்கிய எதிர்க் கட்சி : இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் ஆகாமலிருக்க எதிர்த்து வலுவான ஆளை நிறுத்த வேண்டும். ...
                             
தேர்தல் ஆணையம் : ஆளும் கட்சி உட்பட எந்தக் கட்சி விதிமுறைகளை மீறினாலும் பணம் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.    


(இந்தப் பதிவு வலையேற்றிய பின் ஆளும் கட்சி வேட்பாளரையே அறிவித்து விட்ட செய்தி வந்துள்ளது!)
--------------------------------------------------------------------------------------

வெட்டி அரட்டையில் கர்ணன் செய்தி வராவிட்டால் எப்படி?

கர்ணன் திரைப்படம் தமிழகமெங்கும் அரங்குநிறைக் காட்சிகளாக ஓடுவது ஆங்காங்கு படிக்கும் செய்திகளில் தெரிகிறது.  
  
கர்ணன் திரைப் படத்தின் நவீனக் கதையாக 79 களில் வந்த படம் சிவாஜி நடித்த 'பட்டாக் கத்தி பைரவன்'  
  
மறுபடியும் அதே கதையை மணிரத்னம் எடுத்தார் 'தளபதி'யாக. இந்த இரண்டு நவீன கர்ணனுக்கும் இசை இளையராஜா... பட்டாக் கத்தி பைரவன் பாடல்கள் இனிமையானவை. (எங்கெங்கோ செல்லும், யாரோ நீயும் நானும் யாரோ, தேவதை ஒரு தேவதை) பொதுவாகச் சொல்லப் போனால் மூன்று படங்களிலுமே பாடல்கள் பெரிய ஹிட்.     
========================================================

ரத்தக்காட்டேரி விஜயம்...
  
செய்தித்தாள் செய்தி.... அப்பாதுரை கவனிக்கவும்.  வேலூர், ஆம்பூர் என்று முன்னேறிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரி காஞ்சிபுரம் வந்து விட்டது. . சென்னைக்குள் புக சில நாட்களே உள்ளன போலும்.... கதவில் எழுத வேண்டும்...

அதைத் தடுக்க நடந்த பூஜையில் நாற்பது பவுன் நகையுடன் பெண் கடத்தல் என்றும் செய்தி மேலும் கூறுகிறது!               
====================================================

நம்பிக்கைகள்...
 
   
நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பேசிக் கொண்டிருந்தோம். திடீரென அவர் அலைபேசி உள்ளே எங்கேயோ அடிக்கும் சத்தம் கேட்டது. விரைந்து எழுந்து சென்றவர் வழியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த  அவர் மகனைத் தாண்டிக் குதித்துச் சென்று அலைபேசியை எடுத்துப் பேசினார். 

அவர் தாண்டிச் செல்லும்போதே "அப்பா" என்று குரல் கொடுத்த மகன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். 

பேச்சு நீண்டு கொண்டே போனது. அப்போது மகனின் நண்பன் வந்து இவனை அழைக்க, அவன் சற்றுத் தயங்கி தன் அப்பாவைப் பார்த்துக் கொஞ்சம் காத்திருந்தவன் அப்புறம் அவனிடம் பேசப் போனான். 

நண்பர் பேசி முடித்து விட்டு என்னிடம் வந்து விட, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நண்பனிடம் பேசி விட்டுப் பழைய இடத்துக்குத் திரும்பிய அவர் மகன் அங்கிருந்தே தன் அப்பாவுக்குக் குரல் கொடுத்தான். 

இவர் கவனிக்காது பேச்சில் ஈடுபட்டிருந்தார். போதிய இடைவெளிகளில் அவர் மகன் அழைத்துக் கொண்டே இருந்தான். 

"பையன் கூப்பிடறான் போலேருக்கே.." என்றேன்.

"அவன் கிடக்கான்.." என்றவர், அவன் பக்கம் திரும்பி "உதைக்கப் போறேன்" என்று குரல் கொடுத்தார். 

அவன் எழுந்து வந்து விட்டான். 
          
"வாப்பா.... ஒரு தரம் தாண்டிட்டே.... போய் அங்கேயே உட்கார்றேன் மறுபடி அந்தப் பக்கத்துலேருந்து தாண்டிடுப்பா..." என்றான்.
            
விஷயம் இதுதான்...... உட்கார்ந்திருக்கும் நபர்களின் காலைத் தாண்டக் கூடாதாம். தாண்டினால் மறுபடி இந்தப் பக்கம் தாண்டி விட வேண்டுமாம்! 
                   
அவன் மறுபடி பழைய இடத்தில் உட்கார்ந்து,  நண்பர் மறுபடி அந்தப் பக்கத்திலிருந்து தாண்டும் வரை அவன் அவரை விடவில்லை! 
                 
அப்புறம் இதற்கு விளக்கமாக நண்பர் சொன்ன தகவல் இது. சிரிப்பாய் வந்தது.
                         
"எங்கேருந்துதான் கிடைக்குதோ இவனுக்கு இது மாதிரி விஷயங்கள்.... இது பரவாயில்லை.... கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும், 'மிதிச்சிட்டேன், கால் பட்டிடுச்சி'ன்னுட்டு தாண்டிட்டுப் போற எல்லாத்தையும், எல்லாரையும் தொட்டுத் தொட்டுக் கும்பிடுவான்...நிறுத்தவே முடியாது. பேசும்போது எச்சல் தெறிச்சிடுச்சின்னுட்டு அவங்களை ஸாரி கேட்டே கொன்னுடுவான்...   அவங்களைத் தொட்டுத் தொட்டு தன்னோட தாவாங்கட்டையைத் தொட்டுக்குவான்.... அப்புறம் ஏதாவது வேலையைத் தொடங்குமுன் கழுத்தில் இருக்கும் டாலரை ஆயிரம் முறை தொட்டுத் தொட்டுக் கண்ல ஒத்திக்குவான்... ஐயோ திட்டித் திட்டி இப்போ இது மட்டும்தான் மிச்சம்..."  
=========================================
   
கல்விமுறையில் மாற்றம் செய்ய வேண்டுமா, மாணவர்களுக்கு மனவுறுதிப் பாடம் எடுக்க வேண்டுமா தெரியவில்லை... இந்த வாரம் இன்னொரு மாணவி கல்வியின் கனத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை. செய்த செயலுக்கு பொருத்தமில்லாத பெயர். தைரியலட்சுமி. 
   
இவ்வாறு செய்பவர்கள் மற்ற மாணவ, மாணவியருக்கு மோசமான முன்னுதாரணம் ஆகிறார்களா, தெரியவில்லை. கல்விக் கூடங்களும் பெற்றோர்களும் உடனே கவனிக்க வேண்டிய விஷயம்.
      
நன்னெறி வகுப்புகள் இப்போதெல்லாம் நடக்கின்றனவா தெரியவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே மாணவர்களின் மனவுறுதியைக் கூட்ட முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது.


இந்தப் பதிவு எழுதி நான்கைந்து நாட்கள் ஆன நிலையில் இன்றைய செய்தித் தாள் செய்தி உட்பட எல்லா நாட்களிலும் பத்தாம் வகுப்பு மாணவர், பொறியியல் கல்லூரி மாணவர் (பைக் வேகமாக ஓட்டக் கூடாது என்று மாமா சொன்னாராம்) ப்ளஸ் டூ மாணவி என்று தினமுமே ஒரு தற்கொலையாவது நடந்து வருகிறது. இதற்கு எப்படி உடனே முற்றுப் புள்ளி வைப்பது?
                   

10.5.11

பார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை 2

         
இப்போதைய மாணவச் செல்வங்களைப் பற்றி கேள்விப்படும் செய்திகள் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. கொஞ்ச நாள் முன்பு காபி அடித்ததை தட்டிக் கேட்ட ஆசிரியையை தட்டி வைக்கச் சொல்லி பெற்றோர் ஆர்ப்பாட்டம் பண்ணிய செய்தி வந்தது. அதில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா இல்லையா என்று நினைவில்லை. சமீபத்தில் அதே போல இன்னொரு சம்பவம். பொறியியல் கல்லூரி மாணவன் ஒருவன் யூனிட் டெஸ்ட் ஒன்றில் காப்பி அடிக்கும்போது பிடிபட்டுவிட, மனம் வெறுத்துப் போன மாணவன் குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்து மாய்ந்து போனதாகக் கேள்விப்பட்ட போது அந்த மாணவனை நினைத்து மனம் பதறவில்லை. அவனைப் பெற்று வளர்த்து செலவு செய்து படிக்க வைத்த பெற்றோரை நினைத்துதான் மனம் பதறியது.
        
"காலம் நமக்குத் தோழன்...காற்றும் மழையும் நண்பன்..."

தேர்வுகளில் காபி அடிப்பது குற்றம் என ஏன் இவர்கள் உணரவில்லை? நல்வழி சொல்லிக் கொடுத்தால் உயிரை மாய்த்துக் கொள்ளும் வெறுப்பும், தோல்வி மனப்பான்மையும் ஏன்? கல்வியில் தவறா? வளர்ப்பில் தவறா? என்ன தோல்வி என்றாலும் மீண்டு வரும் துணிவு ஏன் இவர்களுக்குக் கற்று தரப் படவில்லை? வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பேசுகிறார்களா? அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் நட்பு வைத்திருக்கிறார்கள் என்று கொஞ்சமாவது பார்க்கிறார்களா? திரைப் படங்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் பார்த்துக் கெட்டுப் போகிறார்களா?
      
முன்பெல்லாம் மாரல் சயன்ஸ் என்று ஒரு வகுப்பு இருக்கும். வாழ்க்கைக் கல்வி போல சில விஷயங்கள் கற்றுத் தருவார்கள். நாங்கள் படிக்கும்போது கிராஃப்ட் (craft) என்றொரு வகுப்பு கூட இருந்தது. கைத் தொழில்கள், கலைகள் கற்றுத் தருவார்கள். இப்போதெல்லாம் அபபடி ஏதும் வகுப்பு எடுத்து டைம் வேஸ்ட் செய்வதில்லை பள்ளிகள். காசு பார்க்கும் வழி மட்டும்தான்!

---------------------------------------------------------

சென்னைச் சாலைகளில் போகும்போது ஒரு காட்சி - வெறுப்பேற்றும் காட்சி - அடிக்கடி பார்க்கலாம். முன்னால் போகும் வண்டிக்காரர் (அல்லது பக்கத்தில் வரும் டூ வீலர்க்காரர்) காரின் ஜன்னலைத் திறந்து அல்லது இரு சக்கர வாகனத்திலிருந்து,  அல்லது பஸ் ஜன்னலிலிருந்து அப்படியே வாந்தி எடுப்பது போல சாலையில் 'பான்-பராக்' மழை பொழிவார். பெரும்பாலும் கால் டாக்ஸி டிரைவர்கள்தான் இப்படிச் செய்வோரில் அதிகம். வயதும் அதிகமிருக்காது. இருபத்தைந்துக்குள் இருக்கும். சாலையை அசிங்கப் படுத்துகிறோம் என்ற உணர்வோ, சுற்றிலும் பார்க்கும் பொது மக்களுக்கு இடைஞ்சலாகவோ, அருவெறுப்பாகவோ இருக்கும் என்று யோசிப்பதில்லை.    
     
நம் நாடு, நாம்தான் சுத்தமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கூட யோசிக்க வேண்டாம். இது நம் உடல் நலத்திற்குத் தீங்கானது என்று கூடவா தெரியாது? மேலும் இந்த பான்-பராக், குட்கா போன்ற சமாச்சாரங்களை அரசாங்கம் தடை செய்திருந்ததாகவும் நினைவு. யார் கேட்பது? யார் இவர்களுக்கெல்லாம் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் போதிப்பது? "எங்கள் திராவிடப் பொன் நாடே...!"
    ------ x ------- x ---------- x --------
அதே போல இன்னொரு சம்பவம். நல்ல டிராஃபிக். விரையும் வாகனங்கள். பகல் நேரம். முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஸ்லோ வாகிறது. பின்னால் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டி இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம். விதி! அதை ஓவர்டேக் செய்ய முனைகிறார். அப்போது காரின் வலப் பக்க கதவு திறக்கிறது.  அதில் மோதும் பைக் இளைஞர் தூக்கி எறியப் படுகிறார், விதி விளக்குக் கம்ப ரூபத்தில். அதில் மோதி மண்டை பிளந்தவரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.  
                   
பிரபல மருத்துவமனை. மூன்று நாள் 'வைத்திருக்கிறார்கள்'. பிழைக்க வாய்ப்பில்லை என்பது பாமரனுக்குக் கூட தெரிந்த நிலை. ஆனாலும் 'சில' காரணங்களுக்காக அறிவிப்பு தாமதமானது. பிறகு மூளைச் சாவு என்று அறிவிக்கப் பட்டது. உறுப்புகள் தானத்துக்குக் கேட்கப் பட்டது. 'போஸ்ட் மார்ட'த்துக்கு தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுமதி இல்லை. அரசாங்க ஆஸ்பத்திரி போக வேண்டும். ஆனால் இவர்கள் உண்டு என்றார்கள். லேட் செய்தார்கள். பின்னர் ராயப் பேட்டை அனுப்பினார்கள். யாரைக் குறை சொல்வது? நல்ல டிராஃபிக்கில் வலது பக்கம் கதவைத் திறந்த மாது சிரோன்மணியை என்ன சொல்வது? (பின்னர் விசாரித்த போது நகரின் ஒரு பிரபல பள்ளியின் சொந்தக்காரரின் மனைவியாம் அவர். விஷயம் வெளியில் வராமல் அமுங்கி விட்டது. உயிரிழந்தவர் நண்பரின் நண்பர். பிழைக்க மாட்டார் (மண்டை பிளந்தவர் எங்கே பிழைப்பது?) என்று தெரிந்தும் சிகிச்சை செய்த வகையில் மூன்று லட்சங்களுக்கு மேல் செலவானதைச் சொல்வதா... அப்புறமும் உறுப்புதானம் என்ற வியாபாரத்தின் பேச்சுவார்த்தையைச் சொல்வதா... எல்லாமே வியாபாரமாகி விட்ட இந்நாளில் இதைப் பற்றி பேசி என்ன பயன்?

"கண்டதைச் சொல்லுகிறேன்...உங்கள் கதையைச் சொல்லுகிறேன்...இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எமக்குண்டோ....?"

--------------------------------------------------------------------

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கவிஞருக்கு பெயில் வழங்க நீதிபதியே பதிமூன்றைத் தாண்டி பதினான்காம் தேதிதான் நாள் குறித்திருக்கிறார். என்ன நிர்ப்பந்தமோ..! தேர்தல் முடிந்து அதன் முடிவை அறிய இவ்வளவு நீண்ட இடைவெளி இதுவரை இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.
      
தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை விரல் பின்னி காத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட ஹேஷ்யங்கள், அனுமானங்கள். எல்லோரும் அவரவர் விருப்பத்தைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும் இடங்களைப் பார்க்க வேண்டுமே...இரவு நேரங்களில் கிரிக்கெட் மேட்ச் நடப்பது போல ஒளி வெள்ளத்தில் கட்சிக்காரர்கள் வெளியே பெஞ்ச் போட்டு அமர்ந்து சுழற்சி முறையில் இரவு பகலாக காவல் காக்க, சகாக்கள் காவல் காப்பவர்களுக்கு பிரியாணி பொட்டலம் முதல் அரட்டை கம்பெனி வரை தர, போலீஸ் பாதுகாப்பு சுற்றிலும் பலவகையில் செய்யப் பட்டிருக்க...கோலாகலம்தான். வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும் பகுதிகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாள் வரை மின்வெட்டு கிடையாது!