செவ்வாய், 27 செப்டம்பர், 2011

ஜே கே - 21:: தீங்கை நியாயப் படுத்துதல்.

                         
உலகெங்கிலும் தற்சமயம் உள்ள நெருக்கடி நிலைமை அசாதாரணமானது. இதற்கு முன் இது போல நிலைமை இருந்ததே இல்லை. சமுதாய ரீதியாக, தேசிய ரீதியாக, அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடி நிலைமைகள் வரலாறின் பல கால கட்டங்களில் ஏற்பட்டிருக்கிறது.
         
பிரச்னைகள் ஏற்படும், பின் மறையும். பொருளாதார நலிவு, மந்தம் ஏற்படும், பின்பு மாறுபட்டு வேறு விதத்தில் தொடரும். அதை நாம் அறிவோம். அது நமக்குத் தெரிந்த இயக்கம். நிச்சயம் தற்போதய நிலை வேறுபட்டதல்லவா? அது முதலில் மாறுபட்டது ஏனெனில், நாம் பணத்தையோ, பொருளையோ கையாளவில்லை, கருத்துகளைக் கையாள்கிறோம். இந்நெருக்கடி நிலை அசாதாரணமான ஒன்று. ஏனெனில் அது கருத்துக்கள் என்ற வெளியில் நடைபெறுகிறது.
            
நாம் கருத்துக்களால் சண்டையிடுகிறோம். கொலையை நியாயப் படுத்துகிறோம். உலகெங்கிலும், நியாயமான முடிவிற்குக் கொல்வதை நியாயப் படுத்துகிறோம். இதுவே இதற்கு முன் நடந்ததில்லை. முன்பு தீயதை தீயது என்று நாம் ஒத்துக் கொண்டோம்; கொலையைக் கொலை என்று கூறினோம். ஆனால் தற்போது உயர் நோக்கத்தை அடைய கொலை ஒரு கருவியாகப் பயன் படுத்தப் படுகிறது.
                
ஒரு மனிதனைக் கொலை செய்வதோ, ஒரு குழுவைக் கொலை செய்வதோ நியாயப் படுத்தப் படுகிறது. ஏனெனில், அக்கொலை மனித சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் என்று கொலையாளியாலும், அவன் கூட்டத்தினாலும் நியாயப்படுத்தப்படுகிறது. எனவே நிகழ்காலத்தை எதிர்காலத்துக்கு பலியிடுகிறோம்.

   
மனிதனுக்குப் பயனுள்ளது என்று நாம் கருதும் நம் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருப்பின் எவ்வித வழிமுறையை நம் நோக்கத்திற்கு நாம் பயன்படுத்துகிறோம் என்பது நமக்கு முக்கியமல்ல. தவறான வழியினால் சரியான முடிவை உருவாக்குதல் என்பதே இதன் பொருளாகும். நாம் அத்தவறான வழிமுறையை கருத்துக்களால் நியாயப் படுத்துகிறோம். தீயதை, நியாயப்படுத்த கருத்துக்கள் என்ற பிரம்மாண்டமான அமைப்பு நம்மிடம் உள்ளது. நிச்சயம் இதுபோல முன்பு நடைபெற்றதே இல்லை. தீயது எப்போதும் தீயதுதான். அது நன்மையை அளிக்காது. போர் அமைதிக்கான வழியல்ல.
           
(The Book of Life)
                         

9 கருத்துகள்:

 1. எது தீயது என்ற வரை முறையில் தான் கேள்வியே எழுகிறது...

  பதிலளிநீக்கு
 2. ஜே.கே.வின் சிந்தனைகளில்,வார்த்தைகளில் எப்போதும் மனதை பறி கொடுப்பேன்.பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. மிக மிக அருமையான கட்டுரை. எப்போதையும் விட மிக ஆபத்தான சூழலில் தான் உலகம். உலகம் சுருங்கி விட்ட காரணமாக இருக்கலாம். அதை நாம் கண்ணால் பார்த்து கொண்டிருக்கிறோமே. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

  பதிலளிநீக்கு
 4. இனிய இரவு வணக்கம் நண்பா,
  தீமையினை நியாயப்படுத்துவது தவறென்னும் தத்துவத்தினையும், போர் மனித மனங்களுக்குத் தீரிவினைத் தராது என்பதனையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 5. கூட்டத்தை குவித்து கூவினால் தீதும் நன்றாகும் எனும் தவறான சித்தாந்தத்தில் உலகம் போய்க் கொண்டிருக்கிறது...இதற்கு ஜே.கே இந்த மொழி சரியான பதில் ‘’ தீயது எப்போதும் தீயதுதான். அது நன்மையை அளிக்காது’’

  பதிலளிநீக்கு
 6. ஜேகே மறைந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இந்தப் பதிவும் இன்னும் இதுபோல் பலவும் இன்றைய நிலவரத்துக்கும் பொருந்துவதாக இருப்பது அவருடைய சத்திய தரிசனத்தின் மாட்சியைக் காட்டுகிறது. கருத்துரைகளும் போதனைக்களுமாக அல்லாமல் உள்ளது உள்ளபடி நோக்குதல் என்பதன் மேன்மையை ஜேகே உணர்த்த பெரிதும் முயன்றார். வெற்றி?

  பதிலளிநீக்கு
 7. மிகவும் அருமையான கட்டுரை எது தீயது என்கிர வரை முறைதான் புரியல்லே.

  பதிலளிநீக்கு
 8. பாதிக்கப்படுவோரின் எண்ணிகையை பொறுத்துதான் ஒரு தீயதை எதிர்ப்பதும், நியாப்படுத்துவதும் அமைகிறது.

  பதிலளிநீக்கு
 9. உண்மைதான் suryajeeva.

  நன்றி shanmugavel.

  நன்றாகச் சொன்னீர்கள் தமிழ் உதயம். நன்றி.

  நன்றி நிரூபன். சொன்னது நாங்களில்லை.ஜேகே. அவர் அறுபது வருடங்களுக்கு முன்னால் சொன்னதை எடுத்துப் போடுகிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  நன்றி பத்மநாபன்.

  நன்றி அனானி.

  நன்றி Lakshmi.

  நன்றி meenakshi.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!