சனி, 24 செப்டம்பர், 2011

இந்த வார செய்தி அரட்டை

                               
வண்டலூர் ஜூவில் சமீபத்தில் ஒரு மலைப் பாம்பு பெற்ற செல்வங்களில் ஒன்று தப்பித்துச் சென்றது. 'குட்டிதான், பயம் வேண்டாம் ஒன்றும் செய்யாது' என்கிறது வண்டலூர் நிர்வாகம். கேமிரா வைத்து அதன் நடமாட்டத்துக்குக் காத்திருக்கிறார்களாம்!.
  
பள்ளிக்கரணையில் ஒரு தனியார் மருத்துவமனையில் செல்போன்கள், 'பென் டிரைவ்'கள் தொடர் திருட்டுக்குப் பின் மருத்துவமனை நிர்வாகம் தந்த புகாரில் நடவடிக்கை எடுத்த போது திருடன் சிக்கினானாம்... ஸாரி, திருடர் சிக்கினாராம். அவர், அங்கு பணி புரியும் ஒரு டாக்டராம்.
   
ஒருநாள் போட்டிகளை 25 , 25 ஓவர்களாக நான்கு இன்னிங்க்ஸ் விளையாடவும் வேறு சில மாற்றங்களைச் சொல்லியும் யோசனை சொன்ன சச்சினின் கோரிக்கையை ஐ சி சி ஏற்க மறுத்து விட்டது!
   
இந்தியாவின் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாப் வியாழக்கிழமை அன்று சுவாசக் கோளாறு காரணமாக காலமானார். வயது எழுபது. மிக இளம் வயதில் கேப்டனான பெருமை, அயல் மண்ணில் இந்திய அணியை முதல் முறை வெற்றி பெற வைத்த பெருமை (நியூசிலாந்துக்கு எதிராக) முதல் முறை ஆட்டத்தில் மூன்று ஸ்பின்னர்களை வைத்து ஆடச் செய்த பெருமை என்று ஏகப் பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.அவருக்கும் நடிகை ஷர்மிளா டாகூருக்கும் நடந்த காதல், திருமணம் பற்றி சேனல்களில் பார்த்தது சுவாரஸ்யமாக இருந்தது.
    
Controversially yours என்ற தனது சுய சரிதையில் சோயப் அக்தர் சில வம்புப் பந்துகள் வீசியுள்ளதாகத் தெரிகிறது! புத்தகம் விற்க வேண்டுமே....! 'முதல் முறை சச்சின் எனக்கு பயந்து பந்து பேட்டில் படா விட்டாலும் வெளியேறினார், அப்புறம் எப்போதுமே என் பந்து வீச்சுக்கு அவர் பயப்படுவார், இவர் ராகுல் டிராவிட் எல்லாம் மேட்ச் வின்னர்கள் இல்லை, பவுன்சர்களுக்கு பயப்படுவார்கள்' என்றெல்லாம் சொல்லியுள்ளாராம். 'இதற்கெல்லாம் பதில் சொல்லி என் மதிப்பைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை' என்பது சச்சினின் பதில்!
   
வெளிநாட்டவர், வெளியூர்க்காரர்களுக்குப் புரியும் வகையில் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் சார்பில் ஒரு சிறப்பு வழிகாட்டிக் கையேடு வெளியிடப் போகிறார்களாம். அது தவிர கோவில் வரலாறு, திருவிழாக்கள் பற்றியெல்லாம் சொல்லி 45 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு குறும்படம் ஒன்றும் தயாரிக்கிறார்களாம்.

திருக்கோவிலூர் பக்கத்தில் பசுமாட்டுக்கு ஆண்குழந்தை பிறந்ததாகக் கிளம்பிய வதந்தியால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் வாசலில் வெற்றிலை, பாக்கு வைத்துக் கற்பூரம் காட்டி தேங்காய் உடைத்து 'பரிகாரம்' செய்த வகையில் பல்லாயிரக் கணக்கான தேங்காய்கள் நாசம் என்கிறது ஒரு செய்தி. "என்று மறையும் இந்த ......"
     
பாலச்சந்தர் விகடன் மேடையில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தனக்கு மிகவும் பிடித்த தனது கேரக்டர்களாகப் பிரசன்னாவையும் கவிதாவையும், பிடித்த படமாக புன்னகையையும் சொல்லியிருக்கிறார்.
  
அவர் படத்தில் அடிக்கடிக் காட்டப்படும் கடல் சம்பந்தப் பட்ட காட்சிகள் பற்றிய கேள்விக்கு அவர் பதில் கவர்ந்தது.
   
"The language of eternal questions என்று கடலை வர்ணிப்பார் ரவீந்த்ரநாத் தாகூர். ஏன்? கடல், நமது கேள்விகளை விழுங்கி விடுகிறது. மற்றபடி, கேள்விகளுக்கு இறுதியான விடைகள் கிடையாது என்பதைத்தான் ஓயாத அலைகள் ஒழிவின்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. சிலர் தினமும் மெரீனாவுக்குப் போகிறார்கள். கடலைப் பார்த்தால் உங்களுக்கு பிரமிப்பாக இல்லையா? பாறைகளின் கன்னத்தில் அறையும் கடலின் சக்தி என்னை பிரமிக்க வைக்கிறது. ஜப்பானில் சமீபத்தில் தோன்றிய சுனாமியின் வீரியத்தை டிவியில் பார்த்த போது, கொஞ்சம் பயம் வந்தது. நாம் வாழும் நிலம் என்பது கடலின் பிச்சை. கொஞ்சம் காலாற நடப்போம் என்று அது உள்ளே வந்தால், நாம் என்ன ஆவது?

கடல், மனதைப் போல் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கடலில் அது அலைகளாகவும், மனதில் அது உணர்ச்சிகளாகவும் தெரிகின்றன. பின், கடலை விட வேறு எது என்னைக் கவர்ந்து விட முடியும்?"

படம் எடுக்கா விட்டாலும் பாலச்சந்தர் புத்தகம் எழுதலாம்!
  
நாகேஷுக்கு ஏன் எந்த விருதும் தரப் படவில்லை என்ற ஒரு கேள்விக்கு,
"அதேதான் என் கேள்வியும். நாம் இருவருமே சேர்ந்து கேட்போம்... யாரிடம் கேட்பது? THE POWERS THAT BE. இது ஒரு மகா சரித்திரத் தவறு. ஒரு புறக்கணிப்பு என்று சொல்லிக் கொள்வதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்? என் மனதில் ஆறாத காயங்களில் இதுவும், எம் எல் வி அவர்களுக்கு பெரிய அளவில் விருது வழங்கப் படாததும் உறுத்திக் கொண்டே இருக்கின்றன." என்று சொல்லியிருக்கிறார்.
  
ஒரு நாகேஷ் பாடலை இங்கு இணைக்க விழைந்தேன். இணைக்கும் வசதி நிறுத்தப் பட்டு, பகிரும் வசதி மட்டுமே தரப் பட்டுள்ளதால் லிங்க் கீழே...

                            

22 கருத்துகள்:

 1. நல்ல தொகுப்பு.

  // "என்று மறையும் இந்த ......" //

  மறையாது:))!

  கடல் பற்றி பாலச்சந்தர் சொல்லியிருப்பவை சுவாரஸ்யம்.

  நாகேஷ்..

  தகுதியானவர்களுக்கு போய் சேராத வகையில் அந்த விருதுகளே தம் பெருமையை இழக்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. அக்தர் உண்மையை தான் சொல்லி இருக்கிறார் என்று கருதுகிறேன்.

  கே.பியின் படங்களை மட்டுமல்ல, அவரது பதில்களையும் ரசிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. செய்திக் கதம்பம் கலக்கல்.. பாலசந்தர் மேடை களை கட்டி இருந்தது.. அதென்னவோ டெல்லிக்கு நாகேஷுக்கு கடைசி வரை விருது கொடுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமலே போய்விட்டது.....

  பதிலளிநீக்கு
 4. செய்தி குறிப்புகளின் தொகுப்பு அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. தேர்ந்தெடுத்த செய்திகள்,டாக்டர் செல்போன் திருடி சிசி டி.வி மூலம்மாட்டிக்கொண்டதை நானும் படித்தேன்.கொடுமை.

  பதிலளிநீக்கு
 6. //கடைசிப் படப்பெண்மணி யார்?//
  நடிகை ஸ்ரீவித்யாவின் தாயார்.

  பதிலளிநீக்கு
 7. நானும் ஒரு கேள்வி கேட்டுக்கறேன்.

  /கேரக்டர்களாகப் பிரசன்னாவையும் கவிதாவையும்/

  கவிதா தெரியும். பிரஸன்னா யார்?

  பதிலளிநீக்கு
 8. //பிரஸன்னா யார்?//
  பாலச்சந்தர் குறிப்பிட்ட நடிகர், 'ஆரம்ப கால விசு படங்களில் நடித்தவர், சென்னை தொலைக்காட்சி ஆரம்பித்த புதிதில், சில தொலைகாட்சி நாடகங்களிலும் பார்த்த ஞாபகம். மேடை நாடகங்களில் நடித்தவர்' என்று நினைக்கின்றோம். மேற்கொண்டு விவரங்கள் தெரிந்தவர்கள் பகிரலாம்.

  பதிலளிநீக்கு
 9. // தனக்கு மிகவும் பிடித்த தனது கேரக்டர்களாக//

  நீங்கள் சொல்லுபவர் ‘சிறை’ படத்தில் நடித்தவர். பாலச்சந்தர் குறிப்பிட்டிருப்பது நடிகர்களின் பெயர்களை அல்லவே. தான் படைத்த கதாபாத்திரங்களின் பெயர்கள். கவிதா ‘அவள் ஒரு தொடர்கதை’யில் சுஜாதா செய்த பாத்திரம். அது போல பிரஸன்னா எந்தப் படத்தில் யார் நடித்த பாத்திரம் என்பதற்கு யாராவது விடை சொல்கிறார்களா காத்திருப்போம்.

  பதிலளிநீக்கு
 10. அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் கேரக்டர் பெயர் 'பிரசன்னா' என்று ஞாபகம்.

  பதிலளிநீக்கு
 11. விடை சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 12. சுவாரசியமான செய்தி தொகுப்பு.
  'பிரசன்னா' கதாபாத்திரம் அபூர்வ ராகங்கள் படத்தில் வரும் கமலஹாசனின் கதாபத்திரம்தான். பாலசந்தர் படங்களிலேயே நான் மிக மிக ரசித்து பார்க்கும் படம் இது.

  பதிலளிநீக்கு
 13. கடல், நமது கேள்விகளை விழுங்கி விடுகிறது. மற்றபடி, கேள்விகளுக்கு இறுதியான விடைகள் கிடையாது என்பதைத்தான் ஓயாத அலைகள் ஒழிவின்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன..//

  ஆசையே அலை போலே...

  அருமையான தொகுப்புக்கள் அனைத்தும் மனம் கவர்ந்தன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 14. //குட்டிதான், பயம் வேண்டாம் ஒன்றும் செய்யாது'//
  குட்டி தான் ஒன்றும் செய்ய கூடாது என்று பாம்பு குட்டிக்கு தெரியுமா?

  தலைப்பு செய்திகளிலிருந்து தப்பித்த செய்திகளின் தொகுப்பு. நன்றாக இருந்தது!

  பதிலளிநீக்கு
 15. //பசுமாட்டுக்கு ஆண்குழந்தை//

  மாட்டுக்கு காளைக்கன்று பிறந்ததற்கும் கொண்டாட்டமா? ;-))))

  நாகேஷ் - விருது: சமீபத்தில ஒரு பதிவில் படித்தது ஞாபகம் வருகிறது: ஒரு படப்பிடிப்பில் சிவாஜியின் ஓவர்-ஆக்டிங்கைப் பிடிக்கவில்லை என சோ சொல்ல, “அது ஓவர் ஆக்டிங் என்று எனக்கும் தெரியும். ஆனால், நான் இயல்பாக நடித்திருந்தால் நீ மட்டும்தான் கை தட்டியிருப்பாய். அப்படி நடித்தத்தால் நீ ஒருவன் மட்டுமே கைதட்டவில்லை” என்றாராம்.
  (என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்)

  தனியார் மருத்துவமனைகள் டாக்டர்களுக்கு கொடுக்கும் சம்பளம் அப்படிச் செய்ய வைக்கீறதோ என்னவோ? (குற்றம் குற்றமே..)

  சென்ற வாரம் சொன்ன காரணத்தால், விகடனில் ‘மேடை’ படிக்கவில்லை இதுவரை. நல்ல வேளை.

  பதிலளிநீக்கு
 16. நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் சொல்வது உண்மைதான்.
  நன்றி தமிழ் உதயம். அக்தர் சொல்லியிருக்கும் சில கருத்துகள் உண்மையானவையே.
  நன்றி பத்மநாபன். "நாகேஷுக்கு விருது கொடுக்க டெல்லிக்கு அதிருஷ்டம் இல்லை" சரியாச் சொன்னீங்க...
  நன்றி suryajeeva.
  நன்றி அப்பாதுரை.
  நன்றி RAMVI.
  நன்றி shanmugavel.
  நன்றி மீனாக்ஷி.
  நன்றி இராஜராஜேஸ்வரி.
  நன்றி HVL.
  நன்றி ஹுஸைனம்மா. சம்பளம் போதவில்லையோ என்னமோ..இப்படித் திருடுவது கூட ஒருவகை வியாதிதான். Kleptomania என்று சொல்வார்கள்!
  ராமலக்ஷ்மி said, "நானும் ஒரு கேள்வி கேட்டுக்கறேன்./கேரக்டர்களாகப் பிரசன்னாவையும் கவிதாவையும்/

  அவள் ஒரு தொடர்கதை கவிதாவும் அபூர்வராகங்கள் பிரசன்னாவும்தான் அந்த கேரக்டர்கள். 'உங்கள் டைரக்ஷனில் யார் நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும்' என்ற கேள்விக்கு கேபி பதிலளிக்கையில் "நீங்கள் நடிகர்களைப் பார்த்து அவர்கள் நடிப்பைப் பாராட்டுகிறீர்கள். உதாரணமாக நீங்கள் சரிதாவைப் பாராட்டலாம். ஆனால் எனக்கு அவள் என் கண்ணம்மாதான்" என்கிறார்.இன்னொரு விஷயம். அவர் சொல்ல நினைப்பது நாகேஷ் வாயிலாக அவர் சொல்கிறார் என்றும் அவர் முன்னர் ஒருமுறை சொல்லியிருக்கிறார். ஹிந்தி குல்சார் படங்களில் வரும் கதாநாயகர்கள் அவரைப் பிரதிபலிப்பதைப் பார்த்திருக்கிறீர்களோ?
  கொசுறுத் தகவல் ஒன்று. நாகேஷுக்காகவே தயாரிக்கப் பட்டவை 'சர்வர் சுந்தரம்' மற்றும் 'நீர்க்குமிழி' கேரக்டர்கள். இடையில் அவர்களிடையே சிறிது கால மனத்தாங்கல், பிரிவுக்குப் பின் அபூர்வராகங்கள்தான் அவர்கள் மறுபடி இணைத்த படமாம்!

  பதிலளிநீக்கு
 17. சம கால நிகழ்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த வாரச் செய்தி அரட்டை...

  பதிலளிநீக்கு
 18. என்ன இருந்தாலும் பிட் பிட்டா கொறிக்கிறதில இருக்கிற சுவாரஸ்யமே தனிதான்!

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 19. //ஒரு படப்பிடிப்பில் சிவாஜியின் ஓவர்-ஆக்டிங்கைப் பிடிக்கவில்லை என சோ சொல்ல, “அது ஓவர் ஆக்டிங் என்று எனக்கும் தெரியும். ஆனால், நான் இயல்பாக நடித்திருந்தால் நீ மட்டும்தான் கை தட்டியிருப்பாய். அப்படி நடித்தத்தால் நீ ஒருவன் மட்டுமே கைதட்டவில்லை” என்றாராம். //

  சமிபத்தில் என் பெரிய பிள்ளை சிவாஜிகணேசன் மற்றும் கே.ஆர்.விஜயா நடித்த படத்தின் பாடலை பார்த்துவிட்டு உடனே அடித்த கமெண்ட் "சிவாஜியே மேல் என்னும் அளவுக்கு இந்த பொம்பளை ஓவர் அக்டிங் பண்ணுது" என்றான் !!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!