செவ்வாய், 31 ஜனவரி, 2012

அலுவலக அனுபவங்கள் 04

    
அது ஓர் அரசு அலுவலகம்.
காலை ஏழு மணிக்கே சுறுசுறுப்பாகும் அலுவலகம். 
ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். 
கொஞ்ச நேரத்தில் கோவிந்தன் ஓடிவந்தார். 

"தொங்கறான் சார்.... தொங்கறான் சார்..."
"யாரு கோவிந்து?"
"சாரதி சார்.... தொங்கறான் சார்..."
"புரியலையே....."
"போய்ட்டான் சார்.... தூக்குல தொங்கிட்டான் சார்..."  

அதிர்ந்து போய் எல்லோரும் ஓடினார்கள். சாரதி குறைந்த உயரத்தில் காலை மடக்கி அசௌகர்யமாகத் தொங்கியபடி மரணித்திருந்தார். கடைசி நிமிடத்தில் கால் தரையைத் தொடும் உயரத்துக்குக் கால்கள் தாழ்ந்திருக்க வேண்டும். கொள்கைப் பிடிப்புடன் கால்களை மடக்கி முடிந்திருந்தார்.
     
மெல்ல இறக்கினார்கள். அருகில் ஒரு கடிதம். 
             
"என் குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறது.... என் மகனுக்கு எவ்வளவு முயன்றும் வேலை கிடைக்கவில்லை. எனவே நான் போகிறேன். என் வேலையை என் மகனுக்கு வாங்கித் தரும்படி அதிகாரிகளைக் கடைசியாகக் கேட்டுக் கொள்கிறேன்.  எனக்குச் சேர வேண்டிய தொகை வரும்போது கீழ்க் கண்ட வகையில் என் கடன்களை அடைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்..." என்றிருந்த கடிதத்தில் இட்லி சாப்பிட்ட கடன், டீக்கடைக் கடன் என்று வந்த பட்டியலில் அலுவலகத்தில் கடைசியாக முதல் நாள் வாங்கிய பத்து ரூபாய்க் கடன் வரை இருந்தது.
            
அரசுப் பணியில் ஒருவர் இறந்தால், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்பதை உபயோகித்துக் கொள்ளும் வண்ணம் அமைந்த தற்கொலை.
    
குறைந்த வருமானத்தில் தன் பெரிய குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர், மாதக் கடைசியில் கிடைக்கும் சொற்பக் காசைக் குடும்பத்திற்குக் கொடுத்து விட்டு பட்டாணி சாப்பிட்டே உயிர் வாழ்ந்தவர். சற்றே மனநிலை சரியில்லாத தன் மனைவி மேல் பிரியமாக இருந்தவர். 
     
உடன் பணிபுரிந்தவர்கள், தங்கள் வாரிசுகளுக்குப் பலவகையிலும் முயன்று வேலை வாங்கித் தந்ததைப் பார்த்து தானும் எவ்வளவோ முயன்றார். லெப்ரசி இருந்து சரியானதாக சான்றிதழ் பெற்றால் வேலை கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். அதுவும் முயன்று பார்த்தார். வளர்ந்த மகன் பலமுறை அடிக்கவே வருகிறான் என்று வருத்தப் படுவார்.
                          
அதிர்ச்சி விலக நீண்ட நாள் ஆனது எல்லோருக்கும். தற்கொலை செய்து கொண்டவரின் மகனுக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் விவாதங்களாகி, கடைசியில் அவர் மகனுக்கு வேலை கிடைத்தது. 
      
பட்டியலில் இருந்தபடி, பத்து ரூபாய்க் கடன் வரை செட்டில் செய்யப்பட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் நெகிழ்ந்து போனார்கள். 
     
அனுபவம் இங்கு முடியவில்லை. அனுபவம் மேலும் பாடம் கற்றுக் கொடுத்தது. சர்வீஸ் முடியப் போகும் நிலையில் இருந்த இன்னும் இரு கடைநிலை ஊழியர்கள், மர்மமான முறையில் 'இயற்கை மரணம்' அடைய, அப்புறம் உரிய காலத்தில் அவர்கள் வாரிசுகளும் வேலை வாங்கினார்கள்....  
                    

21 கருத்துகள்:

  1. வாழ்வதற்கு இப்படி எல்லாம் கூட வழி கண்டுபிடிப்பார்களா! அதிர்ச்சியாய் இருக்கிறது.
    மர்மமான முறையில் இயற்கை மரணம். சரிதான். கதை அப்படி போறதா!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    பழைய கதை ஒன்று நினைவுக்கு வந்தது.
    பிலஹரி எழுதினது..ராயர் என்னும் குடும்பத்தலைவர் படும் பாடு.வர்ணிக்க முடியாது.
    நான் சொல்லும் காலம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு.நேர்மை மதிக்கப் பட்ட காலம்.
    ராயரின் மகனுக்கு வேலை கிடைத்துவிடும்.

    பதிலளிநீக்கு
  3. கீதா மேடம், ரொம்பப் பழைய கதை.

    வருகைக்கு நன்றி bandhu,

    நன்றி மீனாக்ஷி, அப்போ இதை அபபடி உபயோகித்துக் கொண்டவர்களும் இருந்தார்கள்!

    நன்றி வல்லிசிம்ஹன், இந்த சம்பவமும் அதில் முக்கால் வயசு இருக்கும்! பிலஹரியை நினைவு படுத்தி விட்டீர்கள். பெயர் ஞாபகம் வருகிறது, அவர் எழுதிய தலைப்புகள் நினைவுக்கு வராமல் படுத்துகின்றன!

    பதிலளிநீக்கு
  4. antha Bhilahari story cinemava kuda vanthatho? mmm??? nalla actor oruthar nadichirupar.

    பதிலளிநீக்கு
  5. பிலஹரி எழுதிய கதையின் பெயர், 'நெஞ்சே நீ வாழ்க' என்று ஞாபகம். அதை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தேழில் 'ஆலயம்' என்ற பெயரில் சினிமாவாக எடுத்தார்கள். மேஜர் சுந்தரராஜன் ஹீரோ.

    பதிலளிநீக்கு
  6. பிள்ளைகளை வள்ர்ப்பதும், படிக்க வைப்பதும்தானே பெற்றோர் கடமை. வேலை வாங்கித் தருவதுமா??!! கொடுமை. அரசு உத்தியோகத்துல இருந்தா ”காலாகாலத்துல” - அதுவும் ரிடையர்மெண்டுக்கு முன்னாடியே - இடம்விட்டுறணும்போல!! :-(((

    சென்ற வாரம் “வேட்டை” படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, மாதவன் இதே முறையில் பணியில் சேருவார். என் பெரியவனுக்கு இது புதிய விஷயம். ரொம்ப ஆச்சர்யப்பட்டு, டீடெய்ல்ஸ் கேட்டுகிட்டான்!! :-)))))))

    பதிலளிநீக்கு
  7. வேலையில்லாத் திண்டாட்டம் இப்பிடியெல்லாம் செய்ய வச்சிருக்கா !

    பதிலளிநீக்கு
  8. மிகவும் வருத்தம் தரும் விஷயம்,சாரதி குடும்பத்திற்காக தன் உயிரையும் தந்துவிட்டாரே?

    பதிலளிநீக்கு
  9. எவ்வளவோ எழுத நினைத்து எதுவுமே எழுத முடியவில்லை.மனது கனக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. வல்லிசிம்ஹன் நினைவு கொண்டது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்ததென்றால், அடுத்து அதை வழிமொழிந்து கொளதமன் ஆனந்தவிகடனில் வெளியான அந்தத் தொடரின் பெயரையும், அது "ஆலயம்" என்று திரைப்படமாக வந்ததையும் நினைவு படுத்திச் சொன்னது எவ்வளவு ஆழ்ந்த உணர்வுடன் இவர்கள் இருவரும் அந்தத் தொடரைப் படித்திருப்பார்கள் என்கிற பிரமிப்பைக் கொடுத்தது.

    அந்தத் தொடருக்கு 'சாரதி' அவர்கள் விகடனில் சித்திரம் வரைந்திருந்தார். 'ஆலயம்' படம் பார்த்து, அந்தப் படத்தை டைரக்ட் செய்திருந்த இரட்டையர்களுக்கு (திருமலை-மஹாலிங்கம்) அவர்கள் டைரக்ஷனைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தேன். புதுசாக தமிழ்த் திரையுலகிற்கு வந்திருந்த அவர்களை இன்னும் பெரிசாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணி 'குமுத'த்திற்கு அந்தக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தேன். குமுதமும் அந்த இரட்டை இயக்குனர்களின் படத்தைப் போட்டு, அந்த இதழின் நடுப்பக்கத்தில் மிகப் பிரமாதமாக அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தை பிரசுரித்திருந்தார் கள். தங்களுக்கு மிகச் சிறந்த அறிமுகம் கொடுத்தமைக்கு எனக்கும் அந்த டைரக்டர்கள் நன்றி தெரிவித்துக் கடிதமெழுதியிருந்தார்கள்.

    கெளதமனின் நினைவாற்றலுக்கு எனது பாராட்டுகள். அவர் சொன்னதினால் தான் எனக்கு அத்தனை பழைய நினைவுகளையும் மீட்டெடுத்து மகிழ முடிந்தது.

    பதிலளிநீக்கு
  11. நன்றி ஜீவி சார்! குமுதத்தில் உங்களின் அந்தக் கடிதமும் பார்த்த ஞாபகம் கொஞ்சம் ஞாபகம் உள்ளது. உங்களிடம் அந்தப் பிரதி இருந்தால், படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.

    பதிலளிநீக்கு
  12. இப்பொழுது தான் பார்த்தேன்.

    'அந்த பிலஹரி கதை சினிமாவா கூட வந்ததோ' நினைவு சரடை நூற்றுப் பார்க்க அடியெடுத்துக் கொடுத்திருக்கிறார் களே? அவர்களுக்கும் நன்றி.

    கெளதமன் சார்! எவ்வளவு காலமாச்சு; இந்தக் காலம் மாதிரி கணினி அதிசயம் இருந்திருந்தால், எல்லாத்தையும் சேமித்து வைத்திருக்கலாம்! நான் எழுதி பத்திரிகைகளில் பிரசுமான பல சிறுகதைகள் என் கைவசம் இல்லாதது
    இன்னொரு வருத்தம். குறிப்பாக
    1963- வாக்கில் அரு.ராமநாதனின் 'காதல்' பத்திரிகையில் எழுதிய நிறைய கதைகள். அப்பொழுதும் 'ஜீவி' என்கிற பெயர் தான். ஏதாவது உங்கள் பார்வைக்குத் தட்டுப்பட்டால் எனக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அன்பு ஜிவி, கௌதமன் ரொம்ப ரொம்ப நன்றி. நெஞ்சே நீ வாழ்க வரும்போது 'சாரதி' சாரின் ஓவியங்கள் சாதாரண குமாஸ்தாவை அப்படியே கண்முன் நிறுத்தும். உயர்வான கதை. ஆலயம் படம் பார்த்த நினைவு இல்லை.
    மேஜர் நன்றாகத் தான் செய்திருப்பார்.ஹ்ம்ம். அது ஒரு பொற்காலம்.ஜீவிக்கு என் பாராட்டுகள். மனம் மகிழ்ந்து அதைச் செயலிலும் காண்பித்திருக்கிறார்.அதுதான் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  14. என்னங்க இது அநியாயமா இருக்கு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!