வெள்ளி, 15 ஜூன், 2012

கோமா, பிரதமர், தற்கொலை, ஜனாதிபதி, பால் ஐஸ்.... வெட்டி அரட்டை!




"மே டே... மே டே....."
    
இன்னுமொரு தற்கொலை.
               
ஏன்?  காரணம் தெரியாது. பொறியியல் மூன்றாமாண்டு படிக்கும் (படித்துக் கொண்டிருந்த) மாணவன் பி கே தர்மா. பெற்றோர் உயிர் காப்புறுதி நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இந்த மாணவன் சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட. உள்ளூர் மேட்சுகளில் ஆடி முன்னேறி வரும் (வந்த) வீரர். 
    
தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தித் தாள் கூறுகிறது. தொலைக் காட்சியிலும் காட்டினார்கள். கடைசி மேட்ச்சில் நன்றாக விளையாடவில்லை என்று ஒரு செய்தியும், கல்லூரியில் ஒரு தலைக் காதல் என்று ஒரு காரணமும் படித்த நினைவு. 

எதுவாக இருந்தால் என்ன? சிறு தோல்வியையும் தாங்க முடியாத மனப் பக்குவத்தில்தான் இன்றைய இளைய சமுதாயம் தயாராகி வருகிறதா? தோல்வி வெற்றியின் முதல்படி, 'எப்படி விழுந்தாய்' என்பதில் அல்ல, 'எவ்வளவு சீக்கிரம் எழுந்தாய்' என்பதில்தான் வெற்றியின் வாசனை இருக்கிறது என்றெல்லாம் படிப்பது மார்க் வாங்கவும் நண்பர்களுக்கு எஸ் எம் எஸ் ஃபார்வேர்ட் செய்யவும்தானா? 
   
வெற்றியை வெறியாய்த் தேடும் இவர்களின் மனப்பாங்குக்கு யார் காரணம்? பெற்றோரா, கல்வி கற்கும் இடமா, நண்பர்களா, போட்டிகள்  நிறைந்த இந்த உலகமா?
  
வாழ்க்கையை எப்படி வாழ்வது என்றே நம் சமுதாயம் இளைய சமுதாயத்துக்குக் கற்றுக் கொடுக்க மறந்து விட்டதா? வெளி நாட்டு வேலைகளையும், பணம் சம்பாதிப்பதையும் நோக்கியே கற்பிக்கத் தொடங்கி,  கல்வியே ஒரு இயந்திரமயமான வியாபாரமாகிப் போனதா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒப்பீட்டிலும்,  தங்கள் கனவுகளை அறுவடை செய்யும் ரோபாட்டுகளாகவும் நினைப்பதை நிறுத்தி அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் மனங்களில் என்ன ஓடுகிறது என்று பார்க்க வேண்டும். பழைய கூட்டுக் குடும்ப வாழ்வை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதில்தான் எத்தனை வடிகால்கள்? 
    
இந்தக் காலத்தில் அதை இனி எதிர்பார்க்க முடியாது என்றாலும் தங்கள் குழந்தைகள் மேல் அதிக பட்ச அக்கறை எடுப்பது பெற்றோரின் கடமை ஆகிறது. இனி பள்ளிகளிலேயே ஒரு மனவியல் நிபுணரை வைத்து வாரத்துக்கு ஒரு வகுப்பாவது இது சம்பந்தமாக வகுப்பு எடுத்தால் என்ன? குறைந்த பட்சம் ஆறாம் வகுப்பிலிருந்தாவது இந்த உளவியல் கல்வி தொடங்கலாம். ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் தனித் தனியாகக் கவனிக்கும் திறன் படைத்த மருத்துவர்களோ அல்லது அத்தகுத் திறம் வாய்ந்தவர்களோ வகுப்பெடுக்கலாம். அதிலும் எதாவது பரீட்சை வைத்து விடக் கூடாது. உடனே யோசித்து எதாவது செய்ய வேண்டிய நேரம் இது....   
====================================   

எங்கள் விருப்பம்...

குடியரசுத் தலைவர் தேர்தல் செய்திகள் தொடர்ந்து செய்தித் தாள்களில் இடம்பிடிக்கின்றன. எல்லா செய்தித் தாள்களும், எல்லா சேனல்களும் நிறைய யோசனைகளை சொல்கின்றன. 

'எங்கள்' பங்குக்கு நாங்களும் ஒரு யோசனை சொல்வது என்று ஆவல் பிறந்து விட்டது!

மன்மோகன்சிங் தான் ஜனாதிபதி. 

பேசா மடந்தை, சாக்குப் போக்குச் சமர்த்தர் என்ற பழிச் சொல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு! வேலை என்னவேலை, இங்கயும் அங்கயும் ஒரே வேலைதானே...!

அப்போ பிரதமர்? ஒண்ணு பிரணாப் முகர்ஜி அல்லது நம்ம சிதம்பரம் அய்யா....! ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கிட்டு நிக்கிறவங்கதான்! பிரணாப் பிரதமரானால் சிதம்பரம் உள்துறை மந்திரி. முப்பத்திரண்டு ரூபாய்ப் புகழ் மாண்டேக் சிங் அலுவாலியா நிதி மந்திரி. 

 

சுற்றுலாத்துறை அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர்...  ? கைவசம் நல்ல கேண்டிடேட் இருக்காங்களே... பல கோடி ரூபாய் செலவில் உலகம் சுற்றிய, பிரதீபா பாட்டில் குடும்ப உறுப்பினர் யாராவதுதான்!
    
எப்பூடி...?    
====================================    

ஐஸ்... ஐஸ்... பால் ஐஸ்... கப் ஐஸ்...

வெய்யில் காலத்துக்கு 'அருணி'லிருந்தும், 'குவாலிட்டி'யில்ருந்தும் இன்ன பிற கடைகளிலிருந்தும் ஃபேமிலி பேக், பத்து ரூபாய்க் கப், கொர்னட்டோ என்றெல்லாம்  ஐஸ் க்ரீம் வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. என்னையும் கேட்பார்கள். டி ஜி எல் பயமுறுத்துவதால் எப்போதாவது நானும்! 
  
ஆனால் ஒன்று அந்த நாட்களில் பத்துப் பைசாவுக்கு 'பால் ஐஸ்' என்று ஒன்று தருவார்கள். உருண்டைக் குச்சியில் வெண்மையாக நான்கைந்து கோடுகள் கொண்ட அல்லது இல்லாத குச்சி ஐஸ். அந்த டேஸ்ட் அந்தக் காலங்களில் இதனுடன் கிடைக்கும் கிடைக்கும் முப்பத்தைந்து பைசா, எழுபத்தைந்து பைசா என்றெல்லாம் ஏற்றமிகு விலைகளில் கிடைக்கும், மெல்லிய பேப்பர் சுற்றிய ஆரஞ்சு , திராட்சை ஐஸ்களை விட சுவை நிறைந்தது. இப்போ நினைத்தாலும் 'ஸ்....ஸ்.....ஸ்....' எச்சிலூறுகிறது. 
     
அது இப்போ கிடைக்க மாடேங்குதுங்க.... எனக்குதான் எங்காவது கிடைத்து தெரியவில்லையா.... அல்லது நிஜமாகவே கிடைக்கவில்லையா? தெரியவில்லை. ஐஸ்க்ரீம் கடைகளில் கேட்டால் கூட பொறுமையாக பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். தற்போது கிடைக்கும் வெனிலா ஐஸ் எடுத்துக் கொடுத்து 'அதான் இது' என்கிறார்கள்....
               
என்ன கொடுமை சார் இது....!
=======================================   
    
இன்று படித்த வேதனையான செய்தி இது... கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷோபா என்ற பெண்ணைப் பற்றியது. பதிமூன்று வருடங்களாகக் 'கோமா'வில் இருக்கிறாராம்.
          
ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் அப்படியே நினைவின்றிக் கோமாவில் ஆழ, மாற்றி மாற்றி என்ன வைத்தியம் செய்தும் இன்னும் எழாமல்....
                
அந்தப் பெண் குழந்தைக்கு இப்போது பதின்மூன்று வயது. அம்மாவை வந்து எழுப்பி, எழுப்பிக் கதறுகிறாளாம். கணவனும் கைவிட்டு விட்ட நிலையில், பெண்ணின் தந்தையும் காலமாகி விட, ஷோபாவின் தங்கைக்கும் திருமனாகிச் சென்று விட, வயதான தாயார்தான் இப்போது ஷோபாவைப் பராமரித்து வருகிறாராம். பதிமூன்று வருடங்கள் கோமா.... அப்பா...  நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
                   
அந்தத் தாயின் நம்பிக்கையும், பெண்ணின் பாசமும் சீக்கிரம் பலிக்கட்டும், ஜெயிக்கட்டும்.     
===========================   
                
ஒரு நல்ல செய்தி... இந்த தடவையும் கல்கி சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஏகப்பட்ட உறுதி மொழிகள் கேட்கிறார்கள் என்று கோபித்துக் கொண்டு எழுதவில்லை!  :)))

                                     

47 கருத்துகள்:

  1. இந்தக் காலத்தில் அதை இனி எதிர்பார்க்க முடியாது என்றாலும் தங்கள் குழந்தைகள் மேல் அதிக பட்ச அக்கறை எடுப்பது பெற்றோரின் கடமை ஆகிறது. இனி பள்ளிகளிலேயே ஒரு மனவியல் நிபுணரை வைத்து வாரத்துக்கு ஒரு வகுப்பாவது இது சம்பந்தமாக வகுப்பு எடுத்தால் என்ன? குறைந்த பட்சம் ஆறாம் வகுப்பிலிருந்தாவது இந்த உளவியல் கல்வி தொடங்கலாம். ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் தனித் தனியாகக் கவனிக்கும் திறன் படைத்த மருத்துவர்களோ அல்லது அத்தகுத் திறம் வாய்ந்தவர்களோ வகுப்பெடுக்கலாம். அதிலும் எதாவது பரீட்சை வைத்து விடக் கூடாது. உடனே யோசித்து எதாவது செய்ய வேண்டிய நேரம் இது.... //

    தேவை நீதி போதனை வகுப்புகள். அதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகின்றன. முக்கியமாய்க் குழந்தைகளுக்கு பக்தி இலக்கியப் பாடல்களில் பரிச்சயம் ஏற்படுத்தவேண்டும். திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் எத்தகைய சூழல்களில் வென்று வந்திருக்கிறார்கள் என்பதை உளபூர்வமாக அறியச் செய்ய வேண்டும். உ.வே.சா. மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பெரியோர்கள் திட மனதோடும் வைராக்கியத்தோடும் தமிழையும்,சங்கீதத்தையும் வளர்க்கப் பட்டபாடு தெரியவேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் உண்மையானா சுதந்திரப் போராட்ட தியாகிகளை அடையாளம் காட்ட வேண்டும்.

    இப்போதைய புத்தகங்கள் வெறும் புத்தகங்கள். :(((( எவ்விதத்திலும் அறிவை வளர்ப்பதில்லை என்பதே உண்மை.

    மேலும் பெற்றோரும் ஏதேனும் ஒருவகுப்பில் குழந்தைகளைச் சேர்த்துவிட்டுவிட்டுக் கடைகளில் ஆயத்தமாய்க் கிடைக்கும் லேஸ் சிப்ஸ் பாக்கெட்கள்,3 நிமிடத்தில் சமைக்கும் நூடுல்ஸ் பாக்கெட்கள் என வாங்கிச் சாப்பிடக் கொடுத்துவிட்டு அவங்க வேலையைப்பார்க்கப் போயிடறாங்க. பாரம்பரிய உணவே மறைந்து கொண்டு வருகிறதே!:((((

    எழுத நிறைய இருக்கு. பதிவாகிடும். :D

    பதிலளிநீக்கு
  2. பால் ஐஸ் முந்தியெல்லாம் ஸ்டேட் ஐஸ் என மதுரையில் விற்பாங்க.அப்பாவுக்குத் தெரியாமல் சேர்த்து வைச்ச காசில் ஸ்கூல் விட்டு வரும்போது வாங்கிச் சப்பிக் கொண்டே வீட்டுக்குச் சின்னப் பாலத்தோட நடந்து வந்து யானைக்கல்லில் ஏறி, சிம்மக்கல் கடந்து மேலாவணி மூலவீதி போவேன். பழைய ஞாபகங்கள் கிளறி விட்டுட்டீங்க.

    நீங்க சொல்லி இருக்கும் பாக்கேஜ் ஐஸ்க்ரீமெல்லாம் நாங்க வாங்கறதில்லை. ஒத்துக்காது என்பதோடு இல்லாமல் வீட்டிலேயே குல்ஃபியாகச் செய்து விடுவேன். அது உடம்ப்பையோ வயிற்றையோ, தொண்டையையோ ஒண்ணும் பண்ணறதில்லை. குல்ஃபி ட்ரேயில் ஊற்றி விட்டால் ஆளுக்கு ஒண்ணு, ரெண்டுனு அவ்வப்போது எடுத்துக்கலாம். அதிலேயே குச்சிக்குப் பதிலாகக் கோனில் ப்ளாஸ்டிக் குச்சிகள் இணைத்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. ஐஸ் ப்ரூட் னு ஒண்ணு உண்டு. எல்லாக் கலர்களிலும் கிடைக்கும்.

    ஷோபாவின் கோமா பற்றிய செய்தி மனதைக்கலக்குகிறது. பெற்றவர் குழந்தைக்காவது பொறுப்பு எடுத்துக் கொள்ளக் கூடாதோ!என்ன இருந்தாலும் ஆண்கள் சுயநலமானவர்கள் தான். இதே ஒரு பெண்ணாக இருந்தால் கணவனை வைத்துப் பராமரித்து வருவாள். சமையல் வேலை,கூலி வேலை செய்தாயினும். :(((((((( பெண்ணுக்கு நிகர் பெண்ணே தான்! :)))))

    பதிலளிநீக்கு
  4. ஹிஹிஹி, நான் எந்தச் சிறுகதைப் போட்டியிலும் கலந்துக்கறதில்லை. நம்ம கதைங்கள்ளாம் அவ்வளவு உயர்ந்தவைனு தெரியும். :)))))))

    பதிலளிநீக்கு
  5. எங்கள் பிளாக்15 ஜூன், 2012 அன்று 7:17 AM

    மாரல் சைன்ஸ் வகுப்பெல்லாம் வழக்கொழிந்து போனதால் அர்த்தமிழந்து போய் விட்ட காலம் இது. கல்வி வியாபாரமானதால் அந்த நேரத்தில் இன்னொரு தொழிற்கல்வி வகுப்பு! வீட்டிலேயே பெரியவர்கள் இருந்தால் புராண கதைகளையும் நல்லொழுக்கங்களையும் சொல்லி வளர்ப்பார்கள். வீட்டில் பெரியவர்களும் இருக்க வாய்ப்பில்லாத காலம், இருந்தாலும் அவர்களும் இப்போது கதை சொல்ல நேரமில்லை. கேட்க இவர்களுக்குப் பொறுமையும் இருப்பதில்லை. சீரியல்கள், கணினி எட்செட்ரா...எட்செட்ரா...

    பதிலளிநீக்கு
  6. எங்கள் பிளாக்15 ஜூன், 2012 அன்று 7:19 AM

    //வீட்டுக்குச் சின்னப் பாலத்தோட நடந்து வந்து யானைக்கல்லில் ஏறி, சிம்மக்கல் கடந்து மேலாவணி மூலவீதி போவேன்.//

    அப்போ என்ன ஸ்கூலா இருக்கும்? ஓ சி பி எம்?!!!

    :))))

    பதிலளிநீக்கு
  7. எங்கள் பிளாக்15 ஜூன், 2012 அன்று 7:20 AM

    //என்ன இருந்தாலும் ஆண்கள் சுயநலமானவர்கள் தான். இதே ஒரு பெண்ணாக இருந்தால் கணவனை வைத்துப் பராமரித்து வருவாள். சமையல் வேலை,கூலி வேலை செய்தாயினும்.//

    ஆமாம் என்றுதான் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  8. போசுகேன்றல் தற்கொலை செய்யும் இளைய சமுதாயம் தோல்வியைத் தாங்கிக் கொள்ள பழகவில்லை.அறிவுரைகள் கூறி என்னை பயன் கூற வேண்டிய பெற்றோரும் ஆசிரியரும் மௌனியை இருக்கும் பொழுது நாம் என்னை செய்ய முடியும். பதிவு மொத்தமும் அருமை

    பதிலளிநீக்கு
  9. எங்கள் பிளாக்15 ஜூன், 2012 அன்று 7:28 AM

    வாய் மூடி மெளனமாக இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டிய நேரம் இது என்று சொல்ல வந்தோம் சீனு சார்! அதிகரித்துக் கொண்டே போகும் கொடுமையாக இருக்கிறது இது... வேறென்ன செய்யலாம் நீங்களும் உங்களுக்குத் தோன்றுவதைப் பகிருங்களேன்.... இங்கும், உங்கள் பதிவிலும்....

    பதிலளிநீக்கு
  10. அவசரத்துக்குப் பரபரப்பான தலைப்பு. பிரதமர் தற்கொலை.

    பதிலளிநீக்கு
  11. எங்கள் பிளாக்15 ஜூன், 2012 அன்று 7:39 AM

    ஹி...ஹி... அப்படியெல்லாம் இல்லை அப்பாஜி... கொளுத்திப் போடாதீங்க... யதேச்சையாய் அமைஞ்சதுதான் அது...!

    பதிலளிநீக்கு
  12. // 'எவ்வளவு சீக்கிரம் எழுந்தாய்' //
    7 AM (routinely), everyday..

    but mostly European Time.... IST sometime..

    பதிலளிநீக்கு
  13. எங்கள் பிளாக்15 ஜூன், 2012 அன்று 12:11 PM

    //// 'எவ்வளவு சீக்கிரம் எழுந்தாய்' //
    7 AM (routinely), everyday..

    but mostly European Time.... IST sometime..//

    மாதவன்..... ?????

    பதிலளிநீக்கு
  14. ஆஹா... கீதா மேடம் மதுரைக்காரரா.. இதுவரை தெரியாமப் போச்சே... ஸ்டேட் ஐஸ் மதுரையில் என் பால்ய பருவத்தில் நானும் விரும்பிச் சப்பியது. என்னையும் மதுரைக்கு கூட்டிப் போயிட்டீங்க கீதாம்மா...

    பதிலளிநீக்கு
  15. அந்தப் பெண் குழந்தைக்காகவேனும் கோமாவிலிருந்து அந்தத் தாய் விழிக்கட்டும் என்று பிரார்த்திப்போம். சிறுகதைப் போட்டி... நானும் உங்க கேஸ்தான்... ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  16. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 12:30 PM

    கணேஷ்.... நூற்றுக்குத் தொண்நூற்றைம்பது பேர் மதுரைக்காரங்களாத்தான் இருப்பாங்க போல.... அது சரி... இதெல்லாம் சொல்றீங்க... பழைய டைப் பால் ஐஸ் எங்கே கிடைக்கும் என்று சொல்லமாட்டேன் என்கிறீர்களே....! :))

    ஜனாதிபதித் தேர்தலில் ஏன் யாருமே உங்கள் ஆப்ஷன்கள் பற்றிச் சொல்லவில்லை?!!

    பதிலளிநீக்கு
  17. அப்போ என்ன ஸ்கூலா இருக்கும்? ஓ சி பி எம்?!!!

    :))))//

    ஹையா, துப்பறியும் பாம்பு! சேச்சே, துப்பறியும் சாம்பு.:))))))))

    ஆமாம், ஓசிபிஎம் தான். சரியான மதுரைக்காரர் தான் போங்க.
    அதிலே பாருங்க, அந்தக் காசு கூட பஸ்ஸுக்குக் கொடுக்கிற 5+5=10 காசிலே 5 காசு மிச்சம் பிடிக்கிறது தான், சாயந்திரம் மட்டும். காலம்பர முடியாது. சேதுபதி ஹைஸ்கூல் பஸ் ஸ்டாப்பிலே தான் பஸ் ஏறணும். அதனாலே நோ ரிஸ்க். சாயந்திரம் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறதாலே நேரமாச்சுனா இன்கம்டாக்ஸ் ஆபீச்ச்ச்ச்சு முடியும் நேரம் பஸ்ஸெல்லாம் லேட்டா வரும். அதுக்கு நடந்துடலாம்னு நாங்க மூணு, நாலு பேர் நடப்போம். ஒவ்வொரு நாளைக்கு கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப் கிட்டே அப்போ ஒரு கடையிலே சூடா பக்கோடா போடுவாங்க. அதை வாங்கிச் சாப்பிட்டுண்டே போவோம். இல்லைனா ஸ்டேட் ஐஸ். சுக்கு மிட்டாய். இந்தச் சுக்கு மிட்டாய் ஒண்ணாப்பு படிக்கிறதிலே இருந்து ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் கூடவே வந்துட்டு இருந்தது.

    நுங்கு விப்பாங்க ஸ்கூல் வாசல்லே. பனங்கிழங்கு,இலந்தைப் பழம், அத்திப் பழம்(இதைப் பத்தி அப்போ அவ்வளவா விழிப்புணர்வு இல்லை)இப்படி நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மலரும் நினைவுகள். :)))))

    பதிலளிநீக்கு
  18. பழைய டைப் பால் ஐஸே இப்போக் கிடையாது. நாங்களும் ஐஸ் வண்டி தள்ளுபவர் கிட்டேக் கேட்டிருக்கோமுல்ல! பாலை ஊற்றி வெனிலா ஐஸ் தயாரிப்பதால் அந்தப் பால் ஐஸுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லைனு சொன்னாங்க. சேமியா ஐஸ் சாப்பிட்டிருக்கீங்களா? அதுவும் குச்சியில் பாலும், சேமியாவும் கலந்து தான் ஊத்தி வைச்சிருப்பாங்க.

    பதிலளிநீக்கு
  19. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 12:52 PM

    சேமியா ஐஸ் சாப்பிடாமல் இருப்போமா.... ஆனாலும் அதெல்லாம் கூட பால் ஐஸுக்கு அப்புறம்தான்... பனங்கிழங்கு எப்பவுமே ஆகாது...! அஞ்சு பைசா கமர்கட், தேங்காய் மிட்டாய் எல்லாம் உண்டு. அஞ்சு பைசாவுக்குக் கலர் ஐஸ் ஒன்று உண்டு. முதல் உறிஞ்சலிலேயே கலரும் காணாமல் போய் தித்திப்பும் காணாமல் போய்... வெறும் ஐஸ்தான் மிச்சம் நிற்கும் அதையும் விட்டு வைக்க மாட்டோம்.... அஞ்......சு பைசால்ல கொடுத்துருக்கோம்... அப்புறம் இன்னொன்னு.... ஐஸை தேங்காய்த் துருவறா மாதிரித் துருவி டம்ப்ளர்ல இட்டு 'ஷேப்'பாக்கி அப்புறம் கலர்தூவி எஸ்சென்ஸ் தூவித் தருவாங்க.... ஆனாலும் பால் ஐஸ் மாதிரி வருமாங்க.... அத்திரிமாக்கு!

    பதிலளிநீக்கு
  20. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 12:55 PM

    // துப்பறியும் பாம்பு...! //

    ஹி...ஹி... சொல்லணுமா grrrrrrrrr சொல்லணுமா? :)))

    பதிலளிநீக்கு
  21. ஹி...ஹி... சொல்லணுமா grrrrrrrrr சொல்லணுமா? :)))//


    ரெண்டும்; both

    பதிலளிநீக்கு
  22. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 1:13 PM

    // ரெண்டும்; both //

    well said.... நல்லாச் சொன்னீங்க.... Thanks.... நன்றி! (நாங்களும் மேஜர் சுந்தர்ராஜன் வசனம் எல்லாம் கேட்டிருக்கோம்ல ...!)

    பதிலளிநீக்கு
  23. உளவியல் கல்வி அவசியம் என்றே தோன்றுகிறது.

    /பழைய கூட்டுக் குடும்ப வாழ்வை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதில்தான் எத்தனை வடிகால்கள்? / ஆம்.

    பலரின் ஆதங்கத்தைப் பிரதிபலிப்பதாக முதல் பகிர்வு.

    பெண்மணி ஷோபாவில் நிலைமை வருத்தம் அளிக்கிறது.

    ----------

    கோடில்லாத பத்து பைசா பால் ஐஸ்தான் தெரியும். ஈடில்லைதான் அதன் சுவைக்கு எதுவும்:). கனி ஐஸ் என வண்டியில் வரும். கிரேப்ஸ் 30 பைசா, மெல்லிய பேப்பர் சுற்றிய ஆரஞ்சு க்ரீம் 55 பைசா(இதுவும் எனக்கு பிடித்தமானதே), கப் ஐஸ் 1 ரூ, கோன் 2 ரூ. ‘பழைய டப்பா டபராவுக்கு சேமியா ஐஸே..”ன்னு கூவி விற்பார்கள்.

    பதிலளிநீக்கு
  24. சோனியா பிரதமரே ஆக கூடாதா? இல்லை மாட்டாரா? இன்னும் அவர் இந்தியர் இல்லை என்கிற பிரச்சனை கிளப்புவார்கள் என நினைக்கிறீர்களா? (குடியரசு தலைவருக்கு இந்தியராய் இருப்பது அவசியம். பிரதமருக்கு அப்படி இல்லை என நினைக்கிறேன்)

    நேற்று ஒருவர் பாஸ் திட்டினார் என தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி சில வாரத்தில் நடக்க இருந்ததாம் :((

    பதிலளிநீக்கு
  25. Mohan Kumar, I do not Like pizza. :))))) only Idli, dosa, sambar, chapathi, dhal etc. etc., :))))))))

    பதிலளிநீக்கு
  26. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 2:51 PM

    பால் ஐஸுக்கு(ம்) ஆதரவளித்த ராமலக்ஷ்மி மேடம்... ஒவ்வொன்றின் விலையையும் சரியாகச் சொன்னதற்கு எங்கள் ஆச்சர்யம் கலந்த நன்றியைப் பிடியுங்கள்... அந்த மெல்லிய பேப்பரை அகற்றுவதற்குள்ளேயே கையும் நாக்கும் பரபரக்கும்! அபூர்வமாகக் கிடைத்தால்தான் மதிப்பு... இல்லையா!


    மோகன் சார்...
    //குடியரசு தலைவருக்கு இந்தியராய் இருப்பது அவசியம். பிரதமருக்கு அப்படி இல்லை என நினைக்கிறேன்//

    அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது சோனியா பிரதமராகத்தான் முயற்சித்தார். நிறைவேறாததால் அந்த மகத்தானத் தியாகத்தைச் செய்தார்!

    நேற்று தற்கொலை செய்தவர் செய்தி நாங்களும் படித்தோம்.... கிண்டி செல் உதிரி பாகங்கள் தொழிற்சாலையில் வேலை பார்த்த, எம் பி ஏ படித்தவர். கை நிறைய சம்பளம் வாங்கும் இவர் போன்றவர்களுக்கு எப்படி 'சட்'டென தன் பொன்னான வாழ்வை முடித்துக் கொள்ளத் தோன்றுகிறது? மனதை ஹிப்னடைஸ் செய்யும் எதாவது அயல் நாட்டு, அயல் கிரக சதி ஏதும் இருக்குமோ?!

    பதிலளிநீக்கு
  27. //மனதை ஹிப்னடைஸ் செய்யும் எதாவது அயல் நாட்டு, அயல் கிரக சதி ஏதும் இருக்குமோ//

    மருத்துவ முன்னேற்றங்களால்(லும்) அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, (விபத்துகள் போல) ஏற்பட்ட இன்னொரு வழியோன்னு தோணுது. (என்னவொரு கற்பனை!!)

    பால் ஐஸ் - ஸ்ஸ்ஸ்.... ஜொள்ளு வழியுது!! நிதிநிலைமை நல்லாருந்தா மட்டுமே வாங்க முடியும். மற்ற ஐஸ்கள் 5, 10 பைசா வித்துகிட்டிருந்த சமயம் இது மட்டும் 20 பைசா!! (ராமலக்ஷ்மிக்காவைவிட நான் ஜூனியராக்கும். என் காலத்தில் விலைவாசி அதிகமாகிடுச்சு!! :-))))

    கமிங் பேக் டு த பாயிண்ட், 4 சாதாரண ஐஸ்கள் தின்பதைத் தியாகம் செய்தால்தான் பால் ஐஸ் கிடைக்கும்!!! மற்றவர்கள் சப்புகொட்டிச் சாப்பிடுவதை நீருற பார்த்துக் கொண்டிருக்கவும் நேரும் - எல்லாம் பால் ஐஸுக்காக!! :-)))

    பிரசவத்தில் கோமா வருவது - இங்கும் இரட்டைக் குழந்தைகள் பெற்றஒரு தாய்(இவரும் மருத்துவரே!!), 5-6 ஆண்டுகளாக கோமாவில் இருக்கீறார்!! அவரது தாய்தான் குழந்தைகளையும் சேர்த்துக் கவனித்துக் கொள்கிறார்.

    ஆண்கள் உடனே இரண்டாம் திருமணம் செய்துகொள்வது - ஆண்கள் உணவுக்காக மட்டும் மனைவியை எதிர்பார்த்திருப்பது இல்லையே!! :-((

    /கல்கி சிறுகதைப் போட்டி- ஏகப்பட்ட உறுதி மொழிகள் கேட்கிறார்கள் என்று கோபித்துக் கொண்டு //
    என்னவோ சொத்துப் பட்டியலே சப்மிட் பண்ணச் சொன்னமாதிரி அலுத்துக்கிறீங்க? :-)))

    பதிலளிநீக்கு
  28. //ஆனால் ஒன்று அந்த நாட்களில் பத்துப் பைசாவுக்கு 'பால் ஐஸ்' என்று ஒன்று தருவார்கள். உருண்டைக் குச்சியில் வெண்மையாக நான்கைந்து கோடுகள் கொண்ட அல்லது இல்லாத குச்சி ஐஸ். அந்த டேஸ்ட் அந்தக் காலங்களில் இதனுடன் கிடைக்கும் கிடைக்கும் முப்பத்தைந்து பைசா, எழுபத்தைந்து பைசா என்றெல்லாம் ஏற்றமிகு விலைகளில் கிடைக்கும், மெல்லிய பேப்பர் சுற்றிய ஆரஞ்சு , திராட்சை ஐஸ்களை விட சுவை நிறைந்தது. இப்போ நினைத்தாலும் 'ஸ்....ஸ்.....ஸ்....' எச்சிலூறுகிறது.
    //பழைய ஞாபகங்களை கிளறி விட்டு விட்டது:)

    பதிலளிநீக்கு
  29. ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தின்னு இந்தியக் கலாச்சாரத்தைப் பெருமையாப் பேசுறோம். அதன்படிதான் இந்தியப் பெண்கள் எல்லாருமே கணவன், கணவன் ஊர், கணவன் குடும்பம், அவர்கள் விருப்புவெறுப்புகள் இவையே நமது என்று இருக்கிறோம். ஆனால், இந்தியப் பெண்ணாக இல்லாட்டாலும், இதே கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு இந்தியப் பெண்ணாகவே, மாமியார் மெச்சிய மருமகளாய் வாழும் சோனியாவை மட்டும் ஏன் நம் மனம் ஏற்பதில்லை என்பது புதிராகவே இருக்கிறது. பிரதமராக இருந்த இந்தியர்கள் மட்டும் என்ன கிழித்துவிட்டார்கள்? இந்தியப் பிரதமராக சோனியா வருவதை நான் ஆதரிக்கிறேன். அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் எங்கேயாவது இந்தியர்(ஆக இருந்து, இப்போது அமெரிக்கராகிவிட்டவர்) யாராவது அரசியல் பதவி பெற்றால் இந்திய வம்சாவளியினர் அரசுப் பதவியில் என்று கொண்டாடுகிறோம். இதுவே இங்கே மட்டும் ஏன் உல்டா?

    இது குறித்த என் முந்தையப் பதிவு: http://hussainamma.blogspot.com/2010/03/blog-post.html
    #விளம்பரம்

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. நல்லாக் கேட்டீங்க ஹூசைனம்மா.
    இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். இன்னொரு நாட்டில் பிறந்து வளர்ந்தவர், குடியேறிய நாட்டுக்கு எந்த அளவில் பற்றோடு இருப்பார்? இந்த எலாஸ்டிக்கை எவ்வளவு இழுக்க முடியும் என்பது கேள்வி. மோகன்குமார் சொல்லியிருப்பது போல நாட்டில் பிறந்தவரே நாட்டின் மிக உயர்ந்த அரசுப் பதவிக்கு வரமுடியும் - இது எல்லா நாட்டிலும் உண்டு.
    இந்தியாவின் head of state பிரதம மந்திரி தான். ornamental ஜனாதிபதி பதவிக்கு இருக்கும் birth citizenship requirement பிரதமர் பதவிக்கு இல்லையென்றால் ஆச்சரியம். (இந்தியாவுக்கு ஜனாதிபதி பதவியே தேவையில்லை என்பது என் கருத்து, வேற விஷயம்).
    அப்படி பிரதமர் பதவிக்கு requirement இல்லையென்றாலும், நாட்டின் உயர்ந்த பதவி என்பதால் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்காமல் இருப்பது நாட்டுக்கு நல்லது என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. இந்திய வம்சாவளிக்கும் இந்தியாவில் பிறந்தவருக்கும் இருக்கும் வித்தியாசம் மிகப் பெரிது இல்லிங்களா?
    இந்திய வம்சாவளி உச்சத்துக்குப் போகமுடியும் என்றாலும் இந்தியாவில் பிறந்தவர் ஓரளவுக்குத் தான் வெளிநாட்டு அரசுப்பதவிகளில் உயர முடியும்.

    இந்திய வம்சாவளி என்பது இந்தியருக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம்.. வம்சாவளியினருக்கு அது தோள் குலுக்கும் விஷயம். (ஹிஹி.. கோபம் வந்தால் என் பிள்ளைகள் என்னையே "why don't you go back to your country?" என்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
  33. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  34. //நூற்றுக்குத் தொண்நூற்றைம்பது பேர் மதுரைக்காரங்க..

    ஐ..புச்சாக்கிதுபா கணக்கு.. அப்டியே கரீட்னு வச்சிகினாலும்.. நாங்கள்ளாம் இன்னா நாக்கைத் தொங்கவுட்டுனாகிறோம்? கிராமத்தாளுங்கள்ளாம் நல்லா சேந்துகினாங்கப்பா...

    பதிலளிநீக்கு
  35. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 7:37 PM

    அப்பாஜி.... திரும்பி வந்து என்ன ரவுசு விட்டுகிட்டு இருக்கீங்க..... நாங்கள்ளாம் கிராமமும் இல்லை சிட்டியும் இல்லை... ரெண்டும் சேர்ந்த கவலை....ச்சே...கலவை. கீதா மேடம் கொஞ்சம் இங்க வந்து 'அப்பா'வைக் கவனியுங்க.....

    பதிலளிநீக்கு
  36. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 7:41 PM

    ஹுஸைனம்மா.... சொத்துப் பட்டியல் கேட்டாக் கூடக் கொடுத்துடலாம் போல.... கதை இல்ல கேக்கறாங்க.... சரக்கு இல்லையே.....! :)))
    மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சுய முயற்சியா...!
    சோனியா பற்றிய கேள்விகளுக்கு அப்பாஜி பதில் சொல்லிட்டார்....! எஸ்கேப்....

    பதிலளிநீக்கு
  37. உண்மையில் தலைப்பப் பார்த்து அரண்டு விட்டேன். கோமா பிரதமர் -- அடுத்து தற்கொலை ஜனாதிபதி.
    நான் படிக்கும் போது நல்லொழுக்க பீரியட் என்று ஒன்று இருக்கும். கிறிஸ்துவ பள்ளிக்கூடம் என்பதால், கிறிஸ்துவ மாணவர்களுக்காக கேடிசம் என்றொரு வகுப்பு தனியே நடக்கும். அதில் படிக்கும் மாணவர்கள்(கிராமத்து மாணவர்கள்) சரியாகப் படிக்க மாட்டார்கள் என்பதால் . இந்துக்களில் நன்றாக படிப்பவர்களை கேடிசம் படிக்க சொல்வார்கள். அதில் நன்றாக படிப்பவர்களுக்கு பரிசுகள் உண்டு. மறை மாவட்டங்களுக்கு இடையே போட்டிகள் நடக்கும். என்னைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். நான் ஏன் உங்கள் பைபிளை படிக்க வேண்டும் என்று சொலி மறுத்து நல்லொழுக்கம் வகுப்பிலேயே தொடர்ந்திருக்கிறேன்.
    நினைவுகள் இனிக்கின்றன

    பதிலளிநீக்கு
  38. பால் ஐஸ் தள்ளு வண்டியில் வரும். டப் டப் என்று மூடியை அடிக்கும் ஓசையே காதுக்கு இனிமையாய் இருக்கும். இலந்தைப் பழம். ஜவ்வு மிட்டாய் என்று -- நாக்கு ஊருகிறது.

    கோமாவில் 13 வருடம். கொடூரம். நினைக்கவே பயமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  39. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 7:51 PM

    நன்றி சாதிகா....

    ஹுஸைனம்மா.... இந்தியப் பிரதமராக சோனியா வருவதை நீங்கள் ஆதரிப்பது ஒரு பெண் என்ற ரீதியில் போலும்....! அப்பாஜி கேட்டிருப்பது போல ஜனாதிபதி பதவியே தேவையா என்ற கேள்வியும் உண்டு. இப்போதைய நிலையில் பிரதமர் பதவியே தேவை இல்லை என்பதுதான் இப்போதைய இந்திய நிலைமை!!

    பதிலளிநீக்கு
  40. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 7:57 PM

    இதோ... இன்னொரு மதுரைக்காரர்.... வாங்க சிவக்குமார்... தலைப்பில் ஆங்காங்கே கமா இருப்பதைப் பார்க்கவில்லை போலும் நீங்கள்....! இன்றைய நிலையில் நல்லொழுக்க வகுப்புகள் வேலைக்காகுமா என்று தெரியவில்லை. மோகன் குமார் சொல்லியிருப்பது போல இன்றைய செய்திகளிலும் தற்கொலைச் செய்திகள்.... என்றுதான் இல்லை? பள்ளி மாணவர் முதல் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் எம் பி ஏ படித்தவர்கள் வரை.... என்ன தீர்வு....?

    பதிலளிநீக்கு
  41. கீதா மேடம் கொஞ்சம் இங்க வந்து 'அப்பா'வைக் கவனியுங்க..... //

    அதானே அப்பாதுரை, என்ன இருந்தாலும் கும்பகோணம் மாதிரி வருமா? என்ன ஊரு, என்ன ஊரு?? மதுரையெல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! இல்லையா? :))))))))))

    நான் வாழ்க்கைப்பட்ட ஊராக்கும் விட்டுக் கொடுக்க முடியுமா! :))))

    பதிலளிநீக்கு
  42. ஹுசைனம்மா, உங்களோட கேள்விக்கு பதில் இருக்குன்னாலும் இங்கே சொல்லலை. சில விஷயங்களைச் சொல்வது கஷ்டம். தர்ம சங்கடம். :((((((

    பதிலளிநீக்கு
  43. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 8:39 PM

    //என்ன இருந்தாலும் கும்பகோணம் மாதிரி வருமா? என்ன ஊரு, என்ன ஊரு??//

    மேடம்.... தஞ்சாவூர் மாதிரியும் வராது மேடம்.... கும்பகோணம் கோவிலூர்.... ஆனாலும் தஞ்சாவூரும் சுகம்தான்! நாங்களும் வளர்ந்த ஊரை விட்டுக் கொடுக்க முடியுமா?!! :)))

    பதிலளிநீக்கு
  44. http://www.youtube.com/watch?v=SFMy44L9w28

    http://www.youtube.com/watch?v=84fkL6yB1X8


    ஹுசைனம்மா... மேலே இருக்கும் வீடியோ பாருங்க...

    கூடவே ராகுல் காந்தி பற்றியும் இருக்கும்

    பர்த்துட்டு அப்புரம் பேசுங்க....

    இந்தியாவில் இருக்கும் பெண்கள் எல்லாம் குடும்பம் கணவன்னு இருக்கிறதில்லை....நிறையாபேர் இருககங்க தான்...

    ஆன மொள்ள மாரி முடிசவிக்கி கேப்மாரி சோமாரி பேமானி... இப்படி எத்தனை உண்டோ... அத்தனையும் உருக்கொண்டு வந்த மாதிரி பெண்களும் இருக்காங்க்...

    பெண் என்ற ஒரே காரணத்தால் மற்றவிஷயங்களை தள்ளிவிட்டு எல்லாரைய்ம் ஏத்துக முடியாது....

    பதிலளிநீக்கு
  45. பால் ஐஸ் - 25 பைசாவாக இருந்தது நாங்க சாப்பிடும்போது. அது சீக்கிரமே கரைஞ்சுடுங்கறதால ஒரு டம்ளர் வேற எடுத்துட்டு ஓடுவோம் வாங்க....

    இனிய நினைவுகளைத் தூண்டிவிட்டீங்களே, இப்ப தில்லில, இந்த பால் ஐஸை எங்கே தேடறது சொல்லுங்க....

    என்ன தான் ஃபேமிலி பேக், விதவிதமான சுவைகளில் கோன், குச்சி ஐஸ் சாப்பிட்டாலும், அந்த பால் ஐஸ் சுவை கிடைக்க மாட்டேங்குது...

    பதிலளிநீக்கு
  46. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று 9:31 PM

    வினோத்..... முதல் தடவை எட்டெட்டு விட்டு கமெண்ட்.... ஆஹா... தொடருங்க....!

    வெங்கட் நாகராஜ்.... ஆக எல்லோருமே பால் ஐஸுக்கு ரசிகர்களாத்தான் இருக்காங்கன்னு சொல்லுங்க.... ! ஆனா பாருங்க ரசிகர்கள் கிடைகறாங்களே தவிர பால் ஐஸ் கிடைக்க மாட்டேங்குதே பாஸ்....! :)))

    பதிலளிநீக்கு
  47. தற்கொலை விஷயத்தில் சம்பந்தப்பட்ட நபரின் மன நிலைதான் இதில் முக்கியமாகக் கவனிக்கப்படணும். இன்றைய இளைய தலைமுறைக்கு வெற்றிக்கனியை மட்டுமல்ல அவ்வப்போது தோல்வியையும் ருசிக்கத் தெரியணும். இதில் கூட்டுக்குடும்பமென்ன?.. தனிக்குடித்தனமென்ன?.. எத்தனையோ கூட்டுக்குடும்பப் பிரச்சினைகளாலும் தற்கொலைகள் நிகழ்ந்திருக்குதே..

    பால் ஐஸ், சேமியா ஐஸ், அப்றம் சப்ஜா விதை போட்டும் ஒரு சேமியா ஐஸ் வரும். ஆயிரந்தான் ஃபலூடா, வெனிலான்னு இப்ப ருசிச்சாலும் அந்ந்ந்த பழைய ருசி வரலை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!