வியாழன், 14 ஜூன், 2012

அலேக் அனுபவங்கள் 05::உதிரம் கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!

                    
இன்று உலக இரத்த தானம் செய்வோர் தினம். (ஜூன் பதினான்கு) 
                     
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று எங்கோ படித்த ஞாபகம் உள்ளது. அதைவிட, 'உதிரம தானம் செய்தோர், உயிர் கொடுத்தோரே' என்று சொல்லிவிடலாம். 
                     
எனக்கு வெகுநாட்கள் வரை இரத்ததானம் செய்வதற்கு பயம் இருந்து வந்தது. என்னுடைய இரத்த வகை என்ன என்று கூட அறியாமல் இருந்து வந்தேன். அசோக் லேலண்டில் குறைந்த பட்சம், வருடம் ஒருமுறையாவது இரத்த தான முகாம் நடைபெறும். அசோக் லேலண்டு தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் இரத்த தானம் செய்வார்கள். சில சமயங்களில், தொடர்ந்து ஒரு வாரம் எங்கள் டிரெய்னிங் சென்டரில், இரத்த தான முகாம் நடைபெறும். 
இரத்ததானத்தின் சிறப்பு பற்றி எடுத்துக் கூறி, என்னை இரத்த தானம் செய்ய அனுப்பி வைத்தவர், என்னுடைய மறக்க முடியாத இனிய நண்பர், இளவேனில். அவர் அதுவரையிலும், நாற்பதுக்கு மேற்பட்ட முறைகள் இரத்ததானம் செய்தவர். (அவரைப் பற்றிய பல விவரங்கள் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விவரமாகப் பதிவிடுகின்றேன்.) 
                
முதல் முறையாக டிரெய்னிங் சென்டரில், நண்பர் இளவேனிலுடன் சென்று இரத்ததானம் செய்து வந்தேன். அதற்கு ஒரு வாரம் கழித்து, எனக்கு, 'இரத்த தானம் செய்வோர் அடையாள அட்டை' (Voluntary Blood Donors Association Card) வந்து சேர்ந்தது. அதில், என்னுடைய இரத்த வகை A2(-) என்று குறிப்பிட்டிருந்தார்கள். அசோக் லேலண்டின் சிறப்பு இரத்ததானப் பிரதிநிதி ஒருவர் (பெயர் மறந்து போய் விட்டது) இயந்திரப் பழுது பார்க்கும் பகுதியை சேர்ந்தவர் (என்று நினைக்கின்றேன்) என்னை இன்டர்காமில் அழைத்து, "சார் உங்க பிளட் க்ரூப் ரேர் வகை. இனிமேல் பிளட் டொனேஷன் காமப்களில் இரத்தம் கொடுக்காதீர்கள். அவசியம் ஏற்படும்பொழுது மட்டும் இரத்ததானம் செய்யுங்கள்" என்றார். 
அதற்குப் பிறகு, பொன்னேரி பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்வீட் கடை வைத்திருக்கும் ஒருவரின் நான்கு வயது சிறிய பையனுக்காகவும், அண்ணா நகரில் இருக்கும் ஆஷ்லி என்ற ஒரு குழந்தைக்காகவும், ஆஸ்பத்திரிக்குச் சென்று இரத்ததானம் செய்து வந்தேன். 
          
வாசகர்களில், இரத்ததானம் செய்தோருக்கு, செய்வோருக்கு, பல்லாயிரக் கணக்கான இதய நன்றிகள். இரத்ததானம் பற்றி ஐயங்கள் எதுவும் இருந்தால், பின்னூட்டமாகப் பதியுங்கள்; எங்களுக்குத் தெரிந்த மருத்துவர்கள் யாரையாவது அணுகி, விளக்கம் பெற்று, வெளியிடுகின்றோம். 
     
உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம். 
              

7 கருத்துகள்:

  1. இரத்த தானம் உயிர் தானம் என்று சொல்லுவார்கள், தேவை படும் பொழுது மட்டுமே குடுக்க வேண்டும் அதிலும் தேவைப் படுவோருக்கு மட்டுமட் குடுக்க வேண்டும் என்று நண்பன் சொல்லுவான், அதையே நீங்களும் குறிபிட்டு உளீர்கள்.



    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    பதிலளிநீக்கு
  2. இரத்த தானத்தின் மகிமையை அறியாதவர்களும் உணரும்படி அழகாக எழுதியிருக்கிறீர்கள். அருமை. நான் இதுவரை ரத்ததானம் செய்தது கொசுக்களுக்கு மட்டும் தான். என் ரத்தவகை சாதாரண க்ரூப் என்பதால். இனி முயல்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நாலு அல்லது அஞ்சு தடவை தான் ஒருத்தர் தன்னுடைய வாழ்நாளில் இரத்த தானம் செய்ய முடியும்னு சொல்றாங்க (வேலை, குடும்பம், சமூக அவசரங்கள் தவிர நோய் நொடி வந்துச்சுனா ரத்த தானம் செஞ்சு பயனில்லே).. அந்த வாய்ப்பை முடிஞ்ச வரை பயன்படுத்திக் கொண்டு அடுத்தவங்களுக்கு உதவுறது நல்லது.

    அப்புறம் எல்லாரையும் என் ரத்தத்தின் ரத்தமேனு கூப்பிடலாம் - extra entitlement.

    பதிலளிநீக்கு
  4. ரத்த தானம் - உயிர் தானம்....

    தில்லியில் சில நண்பர்கள் சேர்ந்து, தேவைப்படுவோர்க்கு அளிக்க ஏற்பாடு செய்து தருவதுண்டு....

    முதல் முறை தான் சற்று பயம் இருக்கும்... பிறகு பழகி விடும்....

    பதிலளிநீக்கு
  5. இன்றைய நாளின் பொருத்தமான இடுகை.உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம். பொன்மொழிகொப்ப உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்திருப்பது நன்று.

    ப்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மரணதருவாயில் இருந்த என் தகப்பனாருக்கு நான் ரத்தம் கொடுத்ததுதான்.என்னிடம் இருந்து ரத்தத்தை எடுத்துக்கொண்டிருந்த பொழுது மனம் முழுக்க என் தந்தயின் நலனுக்காக பிரார்த்தனை செய்தபடி இருந்தேன்.இறுதியில் என் தந்தை மரணத்தைத்தான் தழுவினார்:(
    அதன் பிறகு இன்று வரை மனமிருந்தாலும் யாருக்கும் ரத்தம் கொடுக்க சந்தர்ப்பம் வந்ததில்லை

    பதிலளிநீக்கு
  6. என்னோடது O Rh-ve. ஆனாலும் ரத்ததானம் செய்ததில்லை. சின்னவயசில் சந்தர்ப்பம் நேரவில்லை என்றால் அதற்கு அப்புறம் எக்கச் சக்கமான காம்ப்ளிகேஷன்கள். ஆகவே யாருக்கும் ரத்தம் கொடுக்க முடியாது. அதோடு பிபி மாத்திரை தினம் இருவேளை பதினைந்து வருஷமாச் சாப்பிடறேன். ரத்தம் கொடுக்கிறவங்களைப் பார்த்து வணங்கத் தான் முடியும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!