திங்கள், 4 ஜூன், 2012

நியாயமா? --- சிறுகதை

                      
பஸ்ஸில், கூட்டத்துக்கு நடுவே கொஞ்ச தூரத்தில் ஒரு முகம் என்னை அடிக்கடி பார்ப்பது போல இருந்தது. சற்று அறிமுகமான முகமாகவும் தெரிந்தது. நான் பார்ப்பதை அறிந்த அந்த முகமும் என்னைப் பார்த்து புன்னகைத்தது. மனம் உணருமுன்னமேயா....   என் உதடு அவன் பெயரை உச்சரித்து விட்டது. மூளை முதலில் உதட்டுக்குத்தான் செய்தியனுப்பியது போலும்! உதடு உச்சரித்ததும் மனமும் அவனை அடையாளம் கண்டது. 

      

"செங்குட்டுவன்... செங்குட்டுதானே?" 

     

"ஆமாம்... நானும் உன்னைப் பார்த்ததுமே ரவி மாதிரி இருக்கேன்னுதான் பார்த்துட்டே வந்தேன்..." உண்மையில் இவன் அண்ணன் சேரன்தான் என் வகுப்பு. இவர்களின் அப்பா தன் மகன்களுக்கு சேரன், செங்குட்டுவன் என்று அழகாகப் பெயர் வைத்திருந்தார். அப்போதெல்லாம் இவன், இன்னும் சில சிறிய வயது பையன்கள், குறிப்பாக என் வகுப்புத் தோழர்களின் தம்பிகளுடந்தான் என் விளையாட்டு இருந்தது!
                
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதான எங்கள் சிறு வயது நினைவுகளைப் பேசி, சேரனின் அலைபேசி எண், இருக்குமிடம் விவரங்கள் தெரிந்துகொண்டு, பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பிறகு என் நிறுத்தம் முன்னதாகவே வந்ததால் விடைபெற்றுக் கொண்டு நான் இறங்கி விட்டேன்.   
                     
நான் சென்றுதான் கடையைத் திறக்க வேண்டும். நகரின் பிரபல மருந்துக் கடைக் கிளைகளில் ஒன்று அது. நான்தான் இன்சார்ஜ்.   என் கடையில் இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும் வேலை பார்த்தார்கள். நான்தான் பொறுப்பு என்பதால் ஏதோ பெரிய லெவலில் நினைத்து விடாதீர்கள். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்! பி.எஃப், இ எஸ் ஐ பிடித்தம் போக எட்டாயிரத்து சொச்சம் கைக்குக் கிடைக்கும். அவ்வளவுதான். ஆனால் நாள் முழுக்க ஏ ஸியில் இருக்கலாம்! என் மனைவி ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து, அதில் கொஞ்சம் காசு வரும். கிட்டத்தட்ட ஆயா வேலை. ஆனால் உறவுகளிடமும் தெரிந்தவர்களிடமும் ஆசிரியை என்று சொல்லி வைத்திருக்கிறேன்! கௌரவம்! 
                
கடை திறந்து வழக்கமான ஊதுபத்தி, சூடச் சம்பிரதாயங்கள் முடிந்து, கொஞ்ச நேர வியாபாரங்கள் கவனித்த பிறகு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. 
                 
"டேய்... ஹாட்சிப்ஸ்ல போய் ரெண்டு டீ வாங்கிட்டு வாடா...." சிறுவயது நண்பன் செங்குட்டுவனைச் சந்தித்தது மறுபடி ஞாபகம் வந்தது. கூடவே கணேஷ் நினைவும் வந்தது.
                   
செங்குட்டுவனைப் பார்த்த சந்தோஷத்தில் கணேஷுக்கு ஃபோன் செய்தேன். அவனும் என் சிறுவயதுத் தோழன்தான். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் தற்செயலாக இதே கடைக்கு வந்த போது ஆச்சர்யத்துடன் சந்தித்துக் கொண்டோம். அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக அறிந்து கொண்டேன். கிட்டத் தட்ட என் லெவல். இந்த விவரம் எதற்கு என்கிறீர்களா.... சொல்கிறேன்.
                      
இந்த ஆறேழு வருடத்தில் நானும் கணேஷும் ஏழெட்டு முறை சந்தித்திருப்போம். அவ்வளவுதான். தீபாவளிக்கோ பொங்கலுக்கோ அலைபேசியில் அழைத்து சம்பிரதாயமாக வாழ்த்து சொல்லுவேன். அதுவும் நான்தான் செய்து கொண்டிருந்தேன். அவன் அழைக்க மாட்டான். அந்த வித்தியாசம் முதலில் நான் உணராமல் இருந்தேன். எனக்கு அந்த நாளில் அவனுடன் ஊர் சுற்றிய நாட்களும், பார்க் மணலில் மணிக் கணக்கில் பேசிக் கொண்டும், பல நாட்கள் பேச்சு தேவை இல்லாமல் அருகருகே அமர்ந்திருந்த நினைவுகளும் இருந்தன. அவனிடம் அவை இல்லை என்பதை அப்புறம் தெரிந்து  கொண்டேன்.
                       
"டேய்... சும்மா பழைய கதையை மட்டுமே பேசறேடா...."
                    
அப்புறம் அமைதியானேன். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பள்ளிக் காலத்துக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கிறோம். இடையில் வெவ்வேறு நண்பர் வட்டம் இருவருக்கும் அமைந்திருக்கும்தான். ஆனால் நாங்கள் வேறு என்ன பேசிக் கொள்ள முடியும்? இப்போது அவன் என்ன செய்கிறான், அவன் வீட்டு நிலவரம் குறித்தும் பேசுகிறேனே.... அப்புறம் ஏன் இப்படிக் கேட்கிறான்? அந்த பழைய நட்பு என்ன ஆனது? தொடர்ந்து சந்தித்துப் பேசிக் கொண்டால் தற்காலத்திலும் நெருக்கமாகப் பேச... முடியுமா.... என் சிந்தனையிலேயே அந்த வார்த்தை முற்றுப் பெறாமல் சந்தேகத்தில் தவித்தது. 
               
எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தென்ன...  காலம் இப்படி ஒரு இடைவெளியை உருவாக்க முடியுமா? அவன் மனைவி பற்றி, அவன் பிள்ளைகளைப் பற்றி, சம்பிரதாயமாக விசாரிக்க நானும் பழகிக் கொண்டேன். அவன் அதில் டிகிரி வாங்கியிருந்தான். விலகவும் முடியவில்லை. எதற்கு விலக வேண்டும்? விரோதம் ஒன்றும் இல்லை. நாங்கள் என்ன அடிக்கடியோ தினந்தோறுமோவா சந்திக்கிறோம்....? எப்போதோ ஒருமுறை சந்தர்ப்பம் வாய்ப்பு ஏற்படும் போது சந்திக்கிறோம். 
                        
செங்குட்டுவனைச் சந்தித்த விவரம் சொல்ல அவனைத்தான் அழைத்தேன். அவனும் ஆச்சர்யப் பட்டான். 
                 
"டெல்லியில் இல்லே இருந்தாங்க.... சேரன் எங்கிருக்கானாம்?"
                   
"சிங்கப்பூர்ல இருந்தானாம்.... இப்போ அவனும் சென்னைலதான் இருக்கானாம்.... ஏதோ கம்பெனி பெயர் சொன்னான். ஆடிட்டரா இருக்கானாம்."
                  
என்னைப் பழைய கதை பேசுபவன் என்று சொன்ன கணேஷ் கொஞ்சம் பழைய நினைவுகளுக்குப் போனான். 
                 
சேரனும் எங்களுக்கு நெருக்க நண்பன்தான். சீரியசாகப் பேசிக் கொண்டிருப்போம். அருகில் வந்து "ஓ... பாத் பாத் பாத் பாத் பாத் பாத் பாத் பன் ஜாயே..." என்று குர்பானி பாடலை இழுத்துப் பாடுவான். இப்போதும் குர்பானி பாடல் கேட்டால் சேரன் நினைவுடன் எனக்குப் புன்னகை வரும். இன்னொரு பாடல் மதன மாளிகைப் பாடல்.... 'அண்டர் த மாங்கோ ட்ரீ' என்ற உஷா உதுப் பாடலில் நடுவில் "மல்லிகைப் பூ..." என்று வரும். வெறுப்பேற்றுவது போல அருகில் வந்து,அந்த வரியை மட்டும் பாடுவான். சுதந்திரதின விழாவில் கோபால செட்டியாக வந்து தொப்பையுடன் வசனம் பேசிச் செல்லுவான். எங்களை முன்வரிசையில் பார்த்ததுமே அவனுக்குத் திக்கத் தொடங்கி விடும்! . அவன் பேசிய வசனத்தைச் சொல்லி நாங்கள் கிண்டல் செய்ய, கலங்கிய கண்களுடன் அடிக்க ஓடி வருவான். அப்புறம் சமாதானமாவோம்!
                
சிந்தனை இதிலும் செயல்கள் வியாபாரத்திலுமாகப் பொழுது ஓடிக் கொண்டிருந்தது.
                  
பல நாட்களுக்குப் பிறகு, சேரனின் அலைபேசி மூலமாக சஸ்பென்சாக ஒருநாள் பேசி அறிமுகம் செய்து கொண்டேன். நான் எதிர்பார்த்த உணர்வுப் பகிர்வு வரவில்லை. ரொம்ப ஜென்டிலாக சில கேள்விகள் வந்தன. விசாரித்த போது அவன் வேலை செய்யும் நிறுவனம் நான் இருக்கும் வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என்று தெரிந்தது. 
                
ஒரு நாள் வந்தான். 
              
மனைவியிடமும் பெண்ணிடமும் சொல்லி வைத்திருந்தேன். வாசலில் வண்டி வந்து நின்றபோதே கவனித்தேன். உடையிலேயே ஒரு தோரணை தெரிந்தது; நடையிலும்!
              
"வா.......சேரன்....." அவன் தோற்றம் பார்த்ததுமே 'வா'க்கு அப்புறம் 'டா' தானாக வாய்க்குள்ளேயே கரைந்து போனது. 
               
பழசையே பேசுகிறேன் என்ற குற்றச்சாட்டை ஏற்கெனவே வாங்கியிருந்ததால் இவனிடம் கவனமாக  இருந்தேன். ஆனால் நாங்கள் பழகிய நாட்களும், அந்த ஜோக்குகளும் விளையாட்டும் மனதில் அலையைடித்ததைத் தாங்க முடியாமல்  அவனை நட்புடன் பார்த்தேன். அவன் பார்வையில் பதில் பாசத்தைத் தேடினேன். அவன் பார்வை வீட்டை அளவெடுத்துக் கொண்டிருந்தது. 
                
மனைவி, பெண் அறிமுகத்துக்குப் பின் அவன் என் வேலை பற்றியும் வருமானம் பற்றியும் பேசத் தொடங்கினான். ஷேர் என்றான். டீமேட் என்றான். ஒவ்வொரு மணித்துளியையும் வீண் செய்யாமல் எப்படி சம்பாதிக்கலாம், அவன் எப்படி சம்பாதிக்கிறான் என்பதைப் பற்றியே பேசினான். அவன் வீட்டு  ஏ ஸி பற்றிப் பேசினான். காரை மனைவி கொண்டு போவது பற்றிப் பேசினான். என்னை அதிகம் பேச விடவில்லை. நாங்கள் கொடுத்த காஃபியை எட்டிப் பார்த்து விட்டு இடது கை இரண்டு விரலால் பற்றி அரை மனதாய்க் குடித்தான். அடிக்கடி தனக்குத் தானே விசிறிக் கொண்டு மின்விசிறியை அதிருப்தியாய்ப் பார்த்தான். மனைவி "தோசை வார்க்கலாமா" என்று கேட்ட போது நாசூக்காய், ஆனால் திடமாய் மறுத்தான். இப்போது என் பழைய ஆர்வம் பறிபோய் இருந்தது. எப்போது இவன் கிளம்புவான், இந்த செயற்கை நாடகம் எப்போது முடிவுக்கு வரும் என்று மனதில் தோன்ற ஆரம்பித்தது. இப்படி நினைப்பது எனக்கே ஆச்சர்யமாகவும் வெட்கமாகவும், ஏன், வேதனையாகவும் கூட இருந்தது. 
                
ஏதோ ஒன்றை இழந்தது போலத் தோன்றியது. எதிர்பார்ப்பே எனது குற்றமோ என்று தோன்றியது.
                
வயது மாறியது போலவே நட்பும் மாறி விடுமா.... காலத்துடனேயே நினைவுகளும் அழிந்து விடுமா.... நான்தான் ரொம்ப எதிர்பார்க்கிறேனோ....  இவன் பணக்காரன் என்று தெரிகிறது... எனக்கு இவன் பணம் பெரிய பாதிப்பாகத் தெரியவில்லையே .... அப்போது கூட இவன் அப்பா தாசில்தார். என் அப்பா ஒரு சாதாரண குமாஸ்தாதான்... அப்போது இந்த வித்தியாசம் உறைக்கவில்லையே.... இப்போது மட்டும் ஏன்...?
                  
கிளம்பினான். முன்பெல்லாம் பிரிய மனமில்லாமல், அம்மாவின் "கதவையே அப்புறம் திறக்க மாட்டேன்" பயமுறுத்தல்களுக்குப் பின் அரை மனதாகப் பிரிந்து அவரவர் வீடு திரும்பும் அந்த நிகழ்வு இப்போது எனக்கு ஒரு விடுதலையாகப் பட்டது. ஏதோ ஒரு செயற்கைச் சூழலில் மூச்சுத் திணறலலிருந்து விடுபட்டு காற்றோட்டமான சூழலுக்கு வந்தது போல இருந்தது. 
                   
"இவர்தானே நீங்கள் சொன்ன அந்த குர்பானிப் பாட்டு நண்பர்... இப்போ..." ஏதோ சொல்ல வந்த மனைவி என் முகத்தைப் பார்த்து நிறுத்தி விட்டு, "ப்ரியா... சாப்பிட வா.... நேரமாவுது பார்... ஹோம்வொர்க் செய்யணும் வா..." என்றபடி உள்ளே சென்று விட்டாள். 
                      
என் மனைவியும், என் பெண்ணும் என்னை ஏதோ அனுதாபத்துடன் பார்ப்பது போலத் தோன்றியதால், சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பி கொஞ்ச தூரம் நடக்கலாம் என்று வந்து விட்டேன். ஒருவேளை அது என் பிரமையாகவும் இருக்கலாம். என் அகத்தின் ஓட்டம் அவர்கள் முகத்தில் தெரிவதாக பயந்தேனோ என்னவோ.... 
                     
இப்போதைய நண்பர்களில் ஒரே ஒருவன் எனக்கு நெருக்கம். அவனுக்கு ஃபோன் பேசி வெவ்வேறு விஷயங்கள் பேசினேன்.  ஏனோ எனக்கு அது தேவையாய் இருந்தது.
                      
மறுநாள் கணேஷுக்கு ஃபோன் செய்து சேரன் வந்து சென்ற விஷயத்தை ஒரு சம்ப்ரதாயம் போலவே சொன்னேன். வேறு ஏதும் குறையாகப் பேசவில்லை. சேரனும் அப்புறம் ஃபோனிலும் பேசவில்லை. நேரிலும் மறுபடி வரவில்லை. 
                         
நானும் இவர்களோடெல்லாம் மறுபடி பேசவில்லை. காலம் மாற்றி விடும் மன உணர்வுகளைப் பற்றி, மறந்து விடும் பழசுகளை, நட்பைப் பற்றி அவ்வப்போது யோசனை ஓடும். அந்தஸ்து நட்பை மறக்கடித்து விடுகிறது என்று கசப்புடன் நினைத்துக் கொள்வேன். 
                  
கதை இங்கு முடிந்து விடுகிறதுதான். $$ ஆனால்.... 
                   
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு....

கடைக்குப் பெண்ணுடன் வந்து விட்ட மனைவியுடன் பெண்ணுக்கு சில பர்சேஸ் செய்ய கடைத்தெரு கிளம்பினேன். கடையில் வேலை செய்யும் பையன்களிடம் ஆயிரம் முறை எச்சரிக்கைச் சொல்லி பதினோரு மணிக்குத்தான் கடையை அடைக்கவேண்டும் என்று சொல்லி, பூட்டி, சாவியை வீட்டுக்குப் போகும் வழியில் என் வீட்டில் கொடுத்து விடச் சொல்லி விட்டுக் கிளம்பினேன். 
             
பர்சேஸ்கள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம்.  
   
வீடு திரும்ப மனைவி வலது புறம் திரும்ப, நான் அவளை நேராகச் செல்ல அழைத்தேன். 
            
"எதுக்குங்க சுத்திப் போகணும்.... இப்படிப் போனா அஞ்சு நிமிஷத்துல வீடு சேர்ந்துடலாம்..."
         
"இல்லப்பா... நேராப் போனா கீரை இருந்தா வாங்கிப் போயிடலாம்...."
          
"சும்மா விடாதீங்க.... இதோ இங்க கிடைக்காத கீரையா.... தெரியுங்க.... அங்க உங்க இன்னொரு ஃபிரண்டு வேலை பார்க்கற கடை இருக்கு... டீக்கடைல வடை போடறவரு... அவரை அவாய்ட் செய்யணும் உங்களுக்கு... கடை என்ன கடை... தெருவில் கடை வச்சிருக்கார்... இதோ பாருங்க... இன்னிக்கி யாரோ தலைவர் வராருன்னு தெருக்கடைகளைத் திறக்க விடாம செஞ்சிருக்காங்க போலீஸ்காரங்க.... அபபடி என்ன உங்களுக்கு?...  அவரும் உங்கள் சிறுவயதுத் தோழர்தானே...."  
  

அவள் காட்டிய திசையில் தெருவோரக் கடைகள் இன்றி,  தலைமைத் தபால் நிலையம் ஒட்டிய தெரு பூரா சுத்தமாக இருந்தது. பேசாமல் அவள் பின் நடந்தேன். 
              
$$ கதை 'அங்கு' முடிந்தபின் ஆனாலுக்கு அப்புறம் படித்ததைப்  பிடிக்காதவர்கள், இந்தக் கடைசி பகுதியை மறந்து விடலாம்!   
         

27 கருத்துகள்:

  1. நட்புக்கிடையில் அந்தஸ்து பேதம் என்ன வேண்டிக்கிடக்கு.. அது வந்தாலே நட்பு அர்த்தமற்றுப்போகுது..

    அருமையான சிறுகதை.

    பதிலளிநீக்கு
  2. $$ கதை 'அங்கு' முடிந்தபின் ஆனாலுக்கு அப்புறம் படித்ததைப் பிடிக்காதவர்கள், இந்தக் கடைசி பகுதியை மறந்து விடலாம்!//

    இந்த அனுபவம் பலருக்கும் நிகழ்வதே. நானும் பல சிநேகிதிகளிடம் அனுபவித்திருக்கிறேன். இதே மாதிரி உணர்ந்திருக்கிறேன். அருமையான யதார்த்தமான கதை. நட்புக்கிடையே அந்தஸ்து புகுந்து கொள்வது என்பது நிகழும் ஒன்றே.

    பதிலளிநீக்கு
  3. $$ கதை 'அங்கு' முடிந்தபின் ஆனாலுக்கு அப்புறம் படித்ததைப் பிடிக்காதவர்கள், இந்தக் கடைசி பகுதியை மறந்து விடலாம்!//

    இந்த அனுபவம் பலருக்கும் நிகழ்வதே. நானும் பல சிநேகிதிகளிடம் அனுபவித்திருக்கிறேன். இதே மாதிரி உணர்ந்திருக்கிறேன். அருமையான யதார்த்தமான கதை. நட்புக்கிடையே அந்தஸ்து புகுந்து கொள்வது என்பது நிகழும் ஒன்றே.

    பதிலளிநீக்கு
  4. கதை சொல்லியின் மன ஓட்டம் மிக இயல்பு. அந்தஸ்தை விட்டு விடலாம். பழைய நினைவுகளை எல்லோருமே போற்றிக் கொண்டிருப்பதில்லை என்பது சத்தியமான உண்மை.

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான கதை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. கதையின் சுவாரஸ்ய ரகசியம், எங்கேயும் தொய்வேற்படுத்தாமல்
    பாராவிற்குப் பாரா கைபிடித்து இழுத்துப் போய், 'அப்புறம் என்ன நடந்தது தெரியுமா' என்று சொல்லிச் செல்லும் விவர நேர்த்தி அற்புதம். இந்த திறமை கைவந்திருக்கும் பொழுது எதையும் கதையாக்கி படிப்பவரை மயக்கலாம் என்று தெரிகிறது. அதனால் என்ன நீதி சொல்கிறது என்பதெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சமாகத் தான் தெரிந்தது.

    //சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பி கொஞ்ச தூரம் நடக்கலாம் என்று வந்து விட்டேன். ஒருவேளை அது என் பிரமையாகவும் இருக்கலாம். என் அகத்தின் ஓட்டம் அவர்கள் முகத்தில் தெரிவதாக பயந்தேனோ என்னவோ... //

    ..தெருமுனையில் பார்த்தால் சேரன் நின்று கொண்டிருந்தான். "நீ வருவேன்னு தெரியும்டா" என்று வாத்சல்யத்துடன் என்னைப் பார்த்தான்.

    -- என்று வேறு ஒரு கோணத்தில் கதையை என் மனம் தொடர்ந்தது.
    -----
    'என்ன கோணம்' என்று சொன்னால் பின்னூட்டம் நீண்டு விடும். 'பாசமலர்' படத்தில் நெடுநாள் கழித்து, சிவாஜி தன் அருமை நண்பன் ஜெமினையைச் சந்தித்தைத் தொடர்ந்த காட்சியை நினைவில் கொள்ளுங்கள். அந்த மாதிரி ஒரு கோணம் இயல்பாய் பொருந்தும்.

    வளர்ந்த பிறகு நண்பனின் மனைவி, அவன் மகள் முன்னால் இளமை குலாவல்களைக் காட்டிக் கொள்ள முடியாத ஒரு சங்கோஜம்!
    -----
    சேரன் கையில் பார்த்தால் சிகரெட்!
    "அப்போலாம் ரகசிய 'தம்' அடிப்போமே, அதாண்டா செயினா தொடர்ந்திடுத்து.. மரத்துப் போயிடுத்துடுடா; இருந்தாலும் விட முடிலே! நீ எப்படிடா இந்த சனியனுக்குத் தலைமுழுகினே?"

    சேரனின் இடது கை என் கைக்குள்.
    "எப்படின்னு சொல்றேன். கேட்டுக் கிட்டேன்னா நீ கூட இதை விட்டுடலாம்.."

    -- இப்படியாக எண்ணம் எங்கெங்கோ..

    பதிலளிநீக்கு
  7. ஜீவியின் பார்வை நன்றாகயிருந்தது. நட்பை நேசிப்பவர் போலும்.  ஆனால் உங்கள் கதையைப் போல்தான் பெரும்பாலும் நடக்கிறது.  பல வருடங்களுக்குப் பிறகு என்னுடன் படித்த  தோழியின் மகளைப் பார்க்க ஆவலுடன் சென்ற எனக்குப் பெரிய ஏமாற்றம். அதிலிருந்து பழைய. தோழியர்களிடம் அதிகம் வைத்திக் கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  8. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். ஒரு காலத்தில் உயிரான நண்பன் திருமணத்துக்கு பின் தூரமாவது அனைவருக்கும் நடக்க கூடிய அனுபவம். அதை கதையாக்கியது நன்று

    பதிலளிநீக்கு
  9. நட்புகளுக்கிடையே மட்டுமல்ல, நெருங்கின சொந்தங்களுக்கிடையேயும் இந்த மனப்பான்மை தான்!

    பதிலளிநீக்கு
  10. அருமையான படைப்பு
    கதையெனச் சொல்ல மனம் வரவில்லை
    கதை முடிந்ததாகச் சொன்னபின் தொடர்ந்தது மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. யதார்த்தமான கதை. கதை எனச் சொல்வதை விட நமது வாழ்வில் எல்லோரும் சந்திக்கும் விஷயம் இது....

    வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. கதையாகப் பார்க்கமுடியவில்லை. நம்மில் பலரும் சந்திக்கும் அனுபவமும்கூட... அந்தஸ்து என்றில்லாவிட்டாலும், ஏதோ ஒன்று பழைய அன்னியோன்யத்தைத் தொடர விடாமல் தடுக்கும். தோழிகள் என்றால், சிலசமயம் அவர்களின் கணவர், புகுந்த வீட்டு ஆட்கள்.. இப்படி ஏதாவது..

    பதிலளிநீக்கு
  14. சிறுகதை -- இவ்ளோ பெரிசாவா ?
    முழுசா படிக்க முடிஞ்சா.. படிச்சிட்டு கமெண்டு போடுறேன்..

    பதிலளிநீக்கு
  15. அத்தனையும் உண்மை. நட்பின் பல தராதரங்கள். நாம் நெருங்க அவர்கள் விலக அவர்கள் நெருங்க நாம் விலக எல்லாம் நடந்து கொடிருக்கிறது.
    வெகு அருமையாகக் கதையைநடத்திச் சென்று இருக்கிறீர்கள்.விருது நகரிலிருந்து என்னை வந்து பார்த்த நண்பியும் உண்டு. தங்க மாளிகையில் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்ட சிநேகிதியும் உண்டு.:)
    அருமை ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  16. நட்பை மையாமக வைத்து அழகாகப் பின்னப்பட்ட கதை.எத்தனை நட்புக்கள் இப்பிடி.ஆனால் அதை நட்பு என்று உண்மையாக ஏற்றுக்கொள்ள முடியாது.உண்மையான நட்பு எதிர்பார்ப்புகளற்று என்றுமே கூட வருவது !

    பதிலளிநீக்கு
  17. எங்கள் பிளாக்5 ஜூன், 2012 அன்று 8:02 PM

    நன்றி அமைதிச்சாரல். நட்பு அந்தஸ்து பார்க்காது என்பது உண்மை.

    நன்றி கீதா மேடம்....

    நன்றி ராமலக்ஷ்மி...

    நன்றி அப்பாதுரை...

    நன்றி ஜீவி சார்.... உங்கள் பார்வை இன்னொரு கோணத்தில் தொடர்வது சுவாரஸ்யம். பாசமலரில் கூட நட்பு உறவானவுடன் சண்டை வந்து விடுகிறதே....! ஆனாலும் கற்பனை சுவாரஸ்யம்தான். "சேரனின் கை என் இடது கைக்குள்....." ஈடுபாட்டுடன் கூடிய கற்பனை. ரசித்துப் படித்ததற்கும், பாராட்டுக்கும் நன்றி சார்!

    நன்றி கீதா சந்தானம்...நட்பில் ரெண்டு வகையும் உண்டுதானே.... என்ன, ஆளையே காணோம்....?

    நன்றி மோகன் குமார்... பழைய முயற்சிதான்....! :))

    உண்மைதான் middleclassmadhavi! வருகைக்கு நன்றி!

    நன்றி ரமணி சார்....

    நன்றி வெங்கட் நாகராஜ்....

    நன்றி வலைஞன்...

    நன்றி ஹுஸைனம்மா.... வெளியூர் சென்ற இடத்தில் இரண்டு பேர் பேசிய இரண்டு வரிகளில் கிடைத்த பொறி!

    நன்றி மாதவன்... சிறுகதை சற்றே நீளமாக இருந்தாலும், படித்து முடித்ததும் கண்டிப்பாப் பின்னூட்டம் போடுங்க....!

    நன்றி வல்லிம்மா... அவரவர் நட்பனுபவங்களைத் தொட்டுப் பார்த்திருக்கிறது போலும் கதை!

    நன்றி ஹேமா.... நட்பின் பலவகைகளில் இதுவும் ஒன்று!

    பதிலளிநீக்கு
  18. //ஏதோ ஒன்றை இழந்தது போலத் தோன்றியது. எதிர்பார்ப்பே எனது குற்றமோ என்று தோன்றியது.//

    may be !

    பதிலளிநீக்கு
  19. ஆனாலுக்கு அப்புறம் ..இது பற்றி நிறைய சொல்லலாம்
    ஒருமுறை என்னுடன் ஸ்கூலில் படித்த பெண் 7 த் வரைதான் படிச்சா ரிப்பீட்டடா பெயில் ஆனதால் ஸ்கூல் விட்டு நிப்பாட்டிட்டாங்க அவளை .
    அதோட அவளை நான் M Phil சேர போகும்போது பஸ் ஸ்டாப்பில் சந்தித்தேன் அவள் எக்ஸ்போர்ட் கார்மெண்ட் வேலை .அன்று அப்பாவும் என்னுடன் பேருந்து ஸ்ட்ரைக் அவள் என்னை பார்த்து சிரிக்க நானும் லேசா புன்னகை .ஒட்டு போட்ட ஜாக்கெட் சாதா உடை .தானே சொன்னா தன விவரத்தை .இருவருமே மவுண்ட் ரோடில் இறங்கணும்
    அப்பா இருவரையும் ஆட்டோவில் ஏற்றி விட்டார் ஸ்ட்ரிக்ட்டா என்கிட்டே சொன்னார் அந்த பெண்ணிடம் பணம் வாங்க கூடாதுன்னு .
    வீட்டுக்கு வந்ததும் சொன்னார் உனக்கு படித்த பணக்கார பிரண்ட்ஸை விட இப்படி எளிமையானவர்கள்தான் காலமுழுதும் நம்மை மறக்கமாட்டாங்கன்னு

    பதிலளிநீக்கு
  20. என் கணவரின் நண்பர் 25 வருஷம் கழிச்சி இப்போ 3 மாசமுன் எப்படியோ கண்டு பிடிச்சார் இவரை :)
    ஒரு நாள் லேண்ட் லைன் அடிக்குது நியூசிலாந்தில் இருந்து அழைப்பு நண்பருக்கும் இவருக்கும் அவ்ளோ ஹாப்பி :)
    சின்ன குழந்தைங்க மாதிரி பேசுறாங்க :) நம்ப மாட்டீங்க எவ்ரி சாட்டர்டே 3 மணிநேரம் வாட்சப் கால் :)
    டைம் வித்யாசம் தெரியாம மிட்நைட்டெல்லாம் எடுப்பர் :)

    பதிலளிநீக்கு
  21. மரம் ஏறினது பீச்சில் குளித்து விளையாடினது ,சினிமாக்கு கட்டடிச்சி போனது :)
    அவருக்கு குழந்தைகளில்லை அதனால் லோனிலினஸ் ,மனைவி கேர் ஹோம் வேலை .இதனால் இவர் எல்லா நண்பர்களுக்கும் தினமும் கால் செய்வாராம் .இதில் வேடிக்கை என்னென்ன உங்க சேர செங்குட்டு மாதிரி என் கணவரின் சகோதரர்களுக்கும் இந்த நண்பர் தெரியும் :) ஆனா எல்லாரும் திட்டுறாங்க இவரை நேரங்கெட்ட நேரத்தில் வளவளன்னு பேசறாருன்னு :)
    சில நேரம், என் கணவர் கிட்ட சொல்வர் அங்கிருந்து அவரும் இங்கிருந்து இவரும் ஒண்ணா வாட்ஸாப்பில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கலாம்னு :) இவர் நோ சொல்லவும் முடியாம தடுமாறுவார் :)

    இந்த நட்பு விஷயத்திலும் அந்த ஆனால் இருக்கு :)

    என்னான்னா அவர் புதுசா கிறிஸ்டியன் ஆனவர் ..இப்போ உங்களுக்கே புரியும்னு நினைக்கிறன் :)
    வாட்ஸாப்பில் தினமும் FWD மெஸேஜ் ரெண்டு போன்லருந்து இவருக்கு வரும் :)எல்லாம் பைபிள் வசனம் அப்படி இப்டினு
    என் வேலையே தினமும் 75 மெசேஜை டிலீட் செய்றது அஆவ்வ்

    பதிலளிநீக்கு
  22. வாங்க ஏஞ்சல்... நட்பின் தலைவலி நம் பக்கம் திரும்புவது வேடிக்கைதான்!

    பதிலளிநீக்கு
  23. தீபாவளிக்கோ பொங்கலுக்கோ அலைபேசியில் அழைத்து சம்பிரதாயமாக வாழ்த்து சொல்லுவேன். அதுவும் நான்தான் செய்து கொண்டிருந்தேன். அவன் அழைக்க மாட்டான். அந்த வித்தியாசம் முதலில் நான் உணராமல் இருந்தேன்//
    //

    எனக்கே இந்த கதையை படிச்சப்புறம் கொஞ்சம் கவலையா இருக்கு இவ்ளோ நாலும் அவர்தான் இவருக்கு போன் கால் எடுக்கிறார் .எங்கள் நேரம் வித்தியாசமும் காரணம் .
    அவரும் தனிமையால்தான் நட்புக்களை தேடுகிறார் னு தோணுது

    பதிலளிநீக்கு
  24. ஆனால் இங்கே வெள்ளைகாரங்க வருஷ வருஷம் ஒரு நாட் மீட் பண்ணுவாங்கா ரி யூனியன் என்று :)
    கல்லூரி நாளில் எனக்கு அமைந்த நட்புக்கள் பெரும்பாலும் என்னை தங்களது தேவைக்கு பயன்படுத்தினவங்க :)
    அப்படியே தொடர்பு விட்டுப்போச்சி .இன்னமும் அப்பாவின் நட்புகள் அவர்கள் பிள்ளைங்க என் தங்கச்சிகிட்ட என்னை விசாரிப்பாங்களாம் ! ஏனென்றால் அவர்கள் அந்த வடை விற்கிறவர் போல சாதாரண மக்கள்

    ஆக மொத்தமா சொல்லனும்னா கதை சூப்பர் .படிக்கிறவங்களுக்கு பழைய நினைவுகளை கிளறிவிடும்

    பதிலளிநீக்கு
  25. இப்போதுதான் படித்து முடிக்க முடிந்தது... மனம் கொஞ்சம் கனமாகவே இருக்கிறது.. பழைய நட்பை நாம் கடசியாக எப்படி மனநிலையோடு சந்தித்து பிரிந்தோமோ.. மீண்டும் இன்னொருகாலம் சந்திக்க நேர்கையில் அதே மன நிலையோடுதான் நம் மனம் பேசத் தொடங்கும்...

    ஆனா இருவரும் அதே மன நிலையில் இருந்தால் மட்டுமே அது நோர்மலாக இருக்கும்.. இல்லை எனில் மனதுக்கு சங்கடமாகவே இருக்கும்.. நாம் அன்று அடிச்சுப் பிடிச்சு உரிமையோடு பழகியவர் இன்று இப்படி அந்நியர்போல பேசுகிறாரே என இருக்கும்... என்ன செய்வது எல்லோர் மனதும் ஒரு மாதிரி இல்லைத்தானே...

    என் ஓட்டோகிராபில்.. சில நண்பிகள் எழுதித்தந்த வசனம்.. இப்பவும் மனதில் இருக்கு..

    “பிரிந்தபின் மீண்டும் ஒருநாள் சந்திக்க நேர்ந்தால், இன்றுபோலவே இதே நட்போடு ஓடி வந்து என்னோடு பேச வேண்டும்.. இதே என் எதிர்பார்ப்பு”...

    எவ்வளவு அழகான வசனம்.. ஆனால் கால ஓட்டத்தில் சிலரை மறந்து விடுகிறோம். என்ன இருந்தாலும் நன்கு திக்காக பழகிய நட்பு பாரா முகம் காட்டினால் கொஞ்சம் மன வருத்தமே..

    அழகிய கதை சொல்லிட்டீங்க:).

    பதிலளிநீக்கு
  26. நன்றி அதிரா... அப்படிப் பழைய நினைவுகளை நினைப்பதோ, பேசுவதோ சங்கடமான விஷயம் போல என்ற தோற்றம் வந்து விடுகிறது இல்லை?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!