Friday, June 29, 2012

அலேக் அனுபவங்கள் 06:: சிபாரிசு தேவையா, இல்லையா?

             
ஒரு வேலையில் சேரவேண்டும் என்று நமக்கு ஆர்வம் இருக்கின்றது. அந்த வேலையில் சேர, சிபாரிசு என்கிற ஒன்று தேவையா இல்லையா என்று என்னைக் கேட்டால், 'சிபாரிசு நிச்சயம் தேவை' என்று (அடித்துக்) கூறுவேன். 
    
சில 'ஆட்கள் தேவை' விளம்பரங்களில், 'சிபாரிசு கூடாது; எந்த வகையிலாவது சிபாரிசு செய்ய முயற்சி செய்பவர்களின் விண்ணப்பங்கள் தயவு தாட்சண்யம் இன்றி நிராகரிக்கப்படும்.' என்பது போன்ற எச்சரிக்கைகளை முன் காலத்தில் நிறைய கண்டது உண்டு. 
           
ஆனால், ஒரு கம்பெனியில் சேர்ந்த பிறகு, அதன் உள்ளே என்ன நடக்கின்றது என்று தெரிந்த பின்னால், அதுவும் அசோக் லேலண்ட் போன்ற ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் உள்ள ஒரு நிறுவனத்தில், முன்னே பின்னே தெரியாத ஆட்களை, வேலைக்கு எடுத்துக் கொள்வது (மேனேஜர் & மேலே உள்ள லெவல் தவிர) மிகவும் அபூர்வம் என்பதைத் தெரிந்துகொண்டேன். 
                 
எழுத்துத் தேர்வு நிலை வரை, கல்லூரியில் நல்ல மதிப்பெண் எடுத்த எல்லோருக்கும் அழைப்பு வரும். அதில் தேறியவர்கள், நேர்முக தேர்வில் வடிகட்டப் படுவார்கள். இந்த நிலை வரும்பொழுதே, சிபாரிசு செய்யக் கூடியவர்களை அணுகி, அவர் மூலமாக நேர்முகத் தேர்வு செய்பவர்களிடமோ அல்லது எந்தப் பகுதிக்காக நடக்கின்ற நேர்முகமோ, அந்தப் பகுதியின் தலைமை ஆட்களிடமோ நம்மைப் பற்றிச் சொல்லுபவர்கள் கிடைத்தால், மிகவும் நல்லது. (நன்கு கவனிக்கவும் - நான் சொல்வது சிபாரிசுக் கடிதம் யாரிடமிருந்தாவது பெற்று,- To whomsoever it may concern - type அதை இன்டர்வியூ செய்பவரிடம்  கொடுப்பது அல்ல.) இதை நான் என்னுடைய அந்தக் கால அனுபவத்திலிருந்து சொல்கின்றேன். இந்தக் காலத்திற்கும் இது சரியாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். 
                     
நான் அசோக் லேலண்ட் எழுத்துத் தேர்வுக்காக வந்திருக்கின்றேன் என்று தெரிந்தவுடனேயே அண்ணன் குடியிருந்த போர்ஷனுக்குப் பக்கத்தில் குடியிருந்தவர்களும், அண்ணனுடைய அலுவலகத் தோழர்களும், அண்ணியுடன் பணி புரிந்த சக ஆசிரியைகளும், மற்றும் என்னுடைய அண்ணன் வீட்டுக்கு விசிட் செய்த நண்பர்களும், உறவினர்களும் கூறிய சில கருத்துகள்: 
               
# அங்கே நல்ல சம்பளம் கொடுப்பார்கள்.
# நல்ல பெர்சனாலிட்டி இருக்கின்ற ஆட்களைத்தான் அங்கு வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். 
# அங்கே யாராவது தெரிந்தவர்கள் இருந்தால்தான் வேலையில் சேர முடியும். 
# அங்கே காண்டீன் உணவு நன்றாக இருக்கும். 
# காலங்காத்தால எழுந்து வேலைக்குப் போகத் தயாராயிருக்கணும். நைன் டு பைவ் எல்லாம் அங்கே சரிப்பட்டு வராது! 
              
என்னைப் பொறுத்தவரை, அதிகாலை எழும் பழக்கம் எனக்கு பதின்ம வயதிலேயே தொடங்கிவிட்டது. ஆமாம் - வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற தொழிற்பள்ளிக்கூடம் - காலை எட்டு மணிக்கு வகுப்புகள் ஆரம்பம். ஏழே முக்காலுக்குள் பள்ளிக்கூடம் சென்றுவிடுவேன். ஆறு மணிக்கு எழுந்து, ஏழு மணிக்குள் வீட்டைவிட்டுக் கிளம்பி விடுவேன். 
                      (படத்தில் இருக்கும் கண்கள் யாருடையது? )
சிபாரிசுகள் பிடித்த அனுபவங்கள் பலப்பல. எழுத்துத் தேர்வு எழுதி முடித்தவுடன், அந்த எழுத்துத் தேர்வு நடந்த இடம் (சென்னை - புரசைவாக்கம் - சி என் டி இன்ஸ்டிடியூட் - ஜுபிலி ஹால்.) நடந்த தேதி (ஆகஸ்ட் 29 - 1971 என்று ஞாபகம்). என் பெயர், ஊர், பாலிடெக்னிக், எழுத்துத் தேர்வில் என்னுடைய விடைத் தாளில் நான் எழுதிய சுய விவரங்கள் எல்லாவற்றையும், விரல் நுனியில் வைத்திருந்தேன். அந்தக் கால கட்டத்தில், யாருடன் பேசினாலும், அவர்களிடம் அறிமுகப் படலம் முடிந்தவுடன், நான் கேட்கும் முதல் கேள்வி, 'உங்களுக்கு அசோக் லேலண்டில் யாரையாவது தெரியுமா? அல்லது உங்கள் நண்பர்களில், உறவினர்களில் யாருக்காவது அ லே வில் தெரிந்தவர்கள் யாராவது உண்டா?' அவர்களிடமிருந்து 'ஆம்' என்று பதில் வந்தால், நான் கேட்கும் அடுத்த கேள்வி, 'அவரை எனக்கு அறிமுகம் செய்து வைப்பீர்களா? எப்பொழுது அவரை சந்திக்கப் போகலாம்?' 
     
இந்த வகையில் நான் (தெரிந்தவர்கள் மூலம்) வலைவிரித்துப் பிடித்தவர்கள்: 
                   
# அசோக் லேலண்டில் - உதவி ட்ரைனிங் ஆபீசர் ஆக இருந்த ஒருவர். 
# அசோக் லேலண்டில் வெல்ஃபேர் ஆபீசராக இருந்த ஒருவர். (இவர் இப்பொழுதைய அரசியல் பெரும் புள்ளி ஒருவரின் காட் ஃபாதர் லெவலுக்கு இருந்தவர் என்பது பிறகு தெரிந்துகொண்ட விஷயம்) 
#  அசோக் லேலண்டில்  இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் டிபார்ட்மெண்ட் இன்சார்ஜ் ஆக இருந்த ஒருவர். 
# அசோக் லேலண்ட் காண்டீனுக்குக் காய்கறி சப்ளை செய்பவர் ஒருவர். 
                       
இதில், முதலில் சொல்லப்பட்ட மூவரின் காதுகளுக்கும், என்னைப் பற்றிய விவரங்கள் கொண்டுபோய் சேர்க்கப்பட்டன. 
****************************************************   
             
அசோக் லேலண்டில் நான் வாங்கிய முதல் பணக் கவரில் இருந்த தொகை எவ்வளவு தெரியுமா? ஏழு ரூபாய்கள்! ஆம். நான் அப்ரெண்டீசாக வேலையில் சேர்ந்தது டிசம்பர் ஒன்பதாம் தேதி, 1971. 
 
           
ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் வாரத்தில், அதற்கு முந்தைய ஆண்டில் எடுக்கப்படாத லீவு நாட்களுக்கு என்காஷ்மெண்ட் கொடுத்துவிடுவார்களாம். முதல் மாத சம்பளம் வருவதற்கு முன்பே, லீவ் என்காஷ்மெண்ட் ஆக, ஒருநாள் சம்பளம் கைக்கு வந்து சேர்ந்தது. பேஸிக் நூறு ரூபாய், டி ஏ நூற்றுப் பத்து ரூபாய். மொத்தம் இருநூற்றுப் பத்து ரூபாய். ஒரு நாள் சம்பளம் ஏழு ரூபாய். அந்த சம்பளக் கவரையும், ஐந்து + இரண்டு ரூபாயையும் பல வருடங்கள் அப்படியே வைத்திருந்தேன். 
      

24 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

வெங்கட் நாகராஜ் said...

இனிய அனுபவங்கள்.....

நீங்கள் வேலைக்குச் சேரும்போது எனக்கு வயது 6 மாதம்.... :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக நல்ல அனுபவப்பகிர்வு.

இதை ஒருசிலரை விட்டு தொடர்பதிவாகப் போடச்சொன்னால், பலரின் இதுபோன்ற சுவையான அனுபவங்களை, மற்றவர்களும் அறிய ஓர் வாய்ப்பாக அமையும்.

Madhavan Srinivasagopalan said...

Me too have sentiments..

I still hold the train tickets - the one I used while I went from Chennai to Ahmedabad to Join the 'Training program' (job was given after 1 year successful traineeship) I still have all my payslips from 1st month of my traineeship.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான அனுபவப்பகிர்வுகள்..

Geetha Sambasivam said...

அருமையான நினைவலைகள். எல்லாமே முதல் என்பது மிக அருமையே. ஆனால் சிபாரிசு வேண்டும் என்பது அசோக் லேலண்ட், டிவிஎஸ் போன்ற தொழில் நடத்தும் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமோ என்னமோ. வங்கி வேலைக்குத் தெரிந்தவர்கள் பெரிய பதவியில் இருந்தால் கிடைப்பது கஷ்டம் என்பது என் சொந்த அனுபவம்.

Geetha Sambasivam said...

71 ஆகஸ்டில் நானும் சென்னையில் தான் அம்பத்தூரில் இருந்து தண்டையார்ப்பேட்டைக்கு எலக்ட்ரிசிடி போர்ட் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். :))))))

Geetha Sambasivam said...

//ஆறு மணிக்கு எழுந்து, ஏழு மணிக்குள் வீட்டைவிட்டுக் கிளம்பி விடுவேன். //

காலம்பர ஆறு மணி அதிகாலையா? :P:P:P:P
நாங்கல்லாம் பிரம்ம முஹூர்த்தத்திலே எழுந்து பழக்கமாக்கும். :)))))

சும்ம்ம்ம்ம்மா ஜாலிக்குக் கேலி செய்தேன். தப்பாய் நினைச்சுக்காதீங்க. ஆனால் இப்போவும் காலை நாலரைக்கு விழிப்பு வந்துடும். பத்து வயசிலே இருந்து பழக்கம். இப்போல்லாம் பையர், பொண்ணு எல்லாம் தாலாட்டுப் பாடாத குறையாகப் படு, படுனு அமுக்கி வைக்கிறாங்க. ஆனாலும் நமக்கு இருப்புக் கொள்ளாது. :)))))))

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான பகிர்வு.

அதே போன்ற ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் இவற்றோடு சேர்ந்த ஒரு ரூபாய் ஆகியவற்றின் புத்தம் புது நோட்டுக்கள் என்னிடமும் உள்ளன, சில நினைவுகளோடு:).

அமைதிச்சாரல் said...

சிபாரிசு வேணாம்ன்னு சொல்லிக்கிட்டாலும் சிபாரிசு இல்லைன்னா நடக்காது போலிருக்கே.

மோ.சி. பாலன் said...

கௌதமன் - சுவாரசியமான பதிவு. ரிஷி மூலம் தெரிந்துவிட்டது! (அ லே-ல் திரு கௌதமன் எனது boss என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்)

1989 ல் அ லே-ல் நான் சேர்ந்த நினைவு மலர்கிறது. campus interview ல் சிபாரிசு ஏதுமின்றி வேலை கிடைத்தது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். தற்பெருமையை மன்னித்தருள்க.

canteen சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதற்கு லேலேண்டை விட்டு பல வருடங்கள் ஆனபிறகும் குறையாமல் இருக்கும் எனது எடையே சாட்சி!

kg gouthaman said...

//Geetha Sambasivam said...
71 ஆகஸ்டில் நானும் சென்னையில் தான் அம்பத்தூரில் இருந்து தண்டையார்ப்பேட்டைக்கு எலக்ட்ரிசிடி போர்ட் வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.//

அதே காலகட்டத்தில், அதே அலுவலகத்தில் என்னுடன் எஞ்சினீரிங் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த பாபு என்பவரின் திருமதியும் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்று ஞாபகம்.

kg gouthaman said...

பதிவுக்கு நடுவே ஒரு கேள்வியும் இருக்கின்றது. அது 'யார் கண்களுக்கும்' படவில்லை போலிருக்கு!!

பா.கணேஷ் said...

நான் ஆறு வயது சிறுவனாக இருந்த போது நீங்கள் பணியில் சேர்ந்திருக்கிறீர்கள். அந்த ரெண்டு ரூபாய் நோட்டு... பாக்கறப்பவே சின்ன வயசு ஞாபகங்கள் முட்டிட்டு வருது.

ஹுஸைனம்மா said...

//அது 'யார் கண்களுக்கும்' படவில்லை //
பதிவைப் படிக்கும்போதே அதைத்தான் காப்பி செய்துகொண்டேன் - பதில் எழுத அல்ல; இன்னொரு கேள்வி கேட்க!!

/படத்தில் இருக்கும் கண்கள் யாருடையது?//
இந்தப் பதிவின் ஆசிரியர் குமுதம் பத்திரிகையின் தீவிர வாசகரோ? :-))))


சிபாரிசு என்றதும், படங்களில் நேர்முகத் தேர்வு நட்நதுகொண்டிருக்கும்போதே நடுவில் அரசியல்வாதி அல்லது ஜி.எம்.மிடமிருந்து ஃபோன் வரும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது!! :-)))

இங்கே (அரபு நாடுகளில்) வேலைகளுக்குச் சிபாரிசு என்பது கிட்டத்தட்ட கட்டாயம் என்று சொல்லல்லாம். அதாவது சின்ன கம்பெனிகளில் அங்கு வேலைபார்ப்பவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்பது கூடுதல் தகுதியாக பார்க்கப்படும். காரணம், வேலைக்கான விஸாவுக்காக கம்பெனி சில பத்தாயிரம் திர்ஹம்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். வேலைக்குச் சேர்ந்தவர், திடீரென வேலையை விட்டுப் போய்விட்டால் அத்தனையும் நஷ்டம்!!

இதுவே அரசு கம்பெனிகள் என்றால், அங்கே வேலை செய்பவருக்குத் தெரிந்தவர்/உறவினர் என்றால், வெயிட்டிங்கில் போட்டுவிடுவார்கள்!!

வீட்டு வேலைக்கே சிபாரிசு இருந்தாத்தானே வச்சுக்கிறோம்!! :-))))

இந்தியாவிலும் பல பெரிய நிறுவங்களில் referral scheme நடைமுறையில் உள்ளதே!

Geetha Sambasivam said...

கண்கள் தானே? நானும் கவனித்தேன். ஆனால் எழுதணும்னு தோணலை. இரு வெவ்வேறு பெண்களின் கண்கள் எனத் தோன்றுகிறது.

Geetha Sambasivam said...

புருவ அமைப்பு, நிறம் கண்மணிகளில் வேற்றுமை என எனக்குத் தோன்றுகிறது.

Engal said...

ஒரே நடிகையின் கண்கள்தாம்.

அப்பாதுரை said...

நாலரைக்கு விழிப்பு வரும்.. கீதா சாம்பசிவம்.. பக்கத்துல இருக்குறவங்க போர்வையையும் சேர்த்து இழுத்துப் போர்த்தி சட்னு திரும்பிப் படுத்துடணும்

அப்பாதுரை said...

கடிகாரத்தோட கண்கள்.

அப்பாதுரை said...

networking பலனை அந்த நாளிலயே நல்லா புரிஞ்சிட்டிருக்கீங்க. இது எவ்வளவு முக்கியம்னு இன்னும் நிறைய பேருக்குத் தெரியவில்லைனே தோணுது. 'சிபாரிசு' என்றால் கௌரவக் குறைவாக நினைத்துவிடுகிறோம். நமது செல்வாக்கு வட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்குவது மிகவும் முக்கியம் - டீனேஜிலிருந்து தொடங்க வேண்டும். இது போன்ற வட்டத்தோடு புழங்கினால், தேவைப்படும் பொழுது சிபாரிசு தானாகவே கிடைக்கும். நமக்குக் கீழே இரண்டு லெவல், மேலே நாலு லெவல் என்று ஒரு குறிக்கோளோடு செயல்பட்டால் நாள்பட இந்த வட்டம் மிகவும் உபயோகமாக இருக்கும். நாமும் உபயோகமாக இருப்போம்.

அந்நாள் போலில்லாமல் வசதியாக இன்றைக்கு எத்தனையோ networking இணையதளங்களைப் பயன்படுத்தலாம்.

ரசித்துப் படித்தேன். ஆமாம்.. காய்கறி சப்ளை ஆசாமியை ஏன் ஒதுக்கினீங்க? just curious.

kg gouthaman said...

//ஆமாம்.. காய்கறி சப்ளை ஆசாமியை ஏன் ஒதுக்கினீங்க? just curious.//

ஆக்சுவலா அவரு என் கிட்டே, "தம்பி நீ லேலண்டுல வேலையில சேந்தேன்னா,
என்னுடைய பில்லுல எல்லாம் கேள்வி கேட்காம கையெழுத்து போடு, பேமெண்ட் உடனே
கெடைக்கறாப்புல பண்ணு, நான் ஒன்னே கவனிச்சுக்கிறேன்" என்றார்.

BhanuMurugan said...

சிபாரிசு தேவையா இல்லையா என்பதைப் பற்றி அந்தந்த நிறுவனங்கள்தானே கவலைப் பட வேண்டும் ?

kg gouthaman said...

//BhanuMurugan said...
சிபாரிசு தேவையா இல்லையா என்பதைப் பற்றி அந்தந்த நிறுவனங்கள்தானே கவலைப் பட வேண்டும் ?//


மேடம்!
'சிபாரிசு தேவையா, இல்லையா' என்பது பற்றி எந்த நிறுவனமும் 'கவலைப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா' என்பதை இந்தப் பதிவில் நான் கூற வரவில்லை. முன்னுரையில் கூறியிருந்ததைப் போன்று, ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டு, என்னுடைய அனுபவங்கள், அனுமானங்கள், என்னுடைய பார்வை என்ன என்பதுதான் நான் இங்கு பகிர்ந்து வருபவை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!