செவ்வாய், 23 அக்டோபர், 2012

அலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை!

              
வாசக நண்பர்கள், நான் இங்கு பதிவது, நாற்பது வருடங்களுக்கு முந்தைய அனுபவங்களை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காலப் போக்கில்  எவ்வளவோ மாற்றங்கள்.  இக்காலத்தில், அசோக் லேலண்டில் எவ்வளவோ மாற்றங்கள். நான் அன்றைய சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதைப் படிப்பவர்கள், இன்றும் அதே நிலைமை அங்கு இருக்கின்றது என்று தப்புக் கணக்குப் போடவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். 
*** ***

அசோக் லேலண்டில் ஆயுத பூஜை என்பது மிகவும் கோலாகலமாக இருக்கும். தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியினரும், தத்தம் பகுதியை சார்ந்த இயந்திரங்களை கழுவி, சுத்தம் செய்து, அலங்கார வண்ணத்தாள்களால் அலங்கரித்து, வைத்திருப்பார்கள். அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், அதிகாரிகளும் ஆயுத பூஜைக்காக பணம் அவரவர்கள் பங்காக செலுத்துவார்கள். இயந்திரப் பகுதி பெரிய பகுதி. இயந்திரப் பகுதி ஒன்று, இ ப இரண்டு என்று அந்த நாட்களிலேயே நான்கு பகுதிகள் உண்டு. ஒவ்வொரு இயந்திரப் பகுதியிலும் பல லைன்கள் (Bay 1,2,3 ...) உண்டு. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பூஜை இடம் உண்டு! ஆக, இயந்திரப்பகுதி மட்டும் குறைந்தது நாற்பது பூஜைகள். 

இது தவிர, அசெம்பிளி  பகுதி, ஸ்டோர்ஸ் பகுதி, இன்ஸ்பெக்ஷன், இஞ்சினீரிங், ஸ்பேர் பார்ட்ஸ், அக்கவுண்ட்ஸ், சேல்ஸ், டிரான்ஸ்போர்ட், மெயிண்டனன்ஸ், டூல் ரூம், பயிற்சி நிலையம், மருத்துவ நிலையம், தீயணைப்பு நிலையம், செக்யூரிட்டி, சிஸ்டம்ஸ், பிளானிங், பர்ச்சேஸ் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகள். மொத்தத்தில், எண்ணூரில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படும். 
  
ஒவ்வொரு பூஜை பாயிண்டிலும், விநாயகர், லக்ஷ்மி, சரஸ்வதி திருவுருவப் படங்கள், ஏசு கிறிஸ்து படம், மேரிமாதா படம் எல்லாம் இருக்கும். வெள்ளிக் கிழமைகளிலும், ஆயுத பூஜை  சமயத்திலும், இந்த எல்லாப் படங்களுக்கும் பூ சூட்டப்பட்டு, மாலைகள், ஊதுபத்தி சகிதம் தெய்வீகமாக இருக்கும். 

ஆயுத பூஜை சமயத்தில், நிர்வாகம் எல்லோருக்கும் ஒரு ஸ்வீட் கூப்பன் வழங்கும். அந்த ஸ்வீட் கூப்பனை, ஆயுத பூஜையன்று பயிற்சி நிலைய வளாகத்தில் கொடுத்து, ஒரு பெரிய மில்க் ஸ்வீட் பெட்டியை பெற்று வருவோம். நான் சேர்ந்த காலத்தில் வழங்கப்பட்ட இனிப்புப் பெட்டி ஒரு கிலோ ஆரிய பவன் ஸ்வீட் பெட்டி என்று ஞாபகம். அதில் இருக்கின்ற பால் இனிப்புகள் எல்லாமே மிகவும் சுவையானதாக இருக்கும். வீட்டில் அதை ஒருவார காலம் வைத்து சாப்பிட்டு மகிழ்ந்தது உண்டு. 
   
ஆயுத பூஜை (நவராத்திரியின் ஒன்பதாம் நாள்) ஒரு வருடத்தில் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னிரண்டு பண்டிகை விடுமுறைகளில் ஒன்று. அதனால், அசோக் லேலண்டில், ஆயுத பூஜை எட்டாவது நாளே கொண்டாடப்படும். ஆயுத பூஜை வருவது இன்று போல ஒரு செவ்வாய்க்கிழமையில் என்றால், திங்கட்கிழமை எண்ணூர் தொழிற்சாலை வாராந்திர விடுமுறை நாள் என்பதால், ஞாயிற்றுக் கிழமையே கொண்டாடிவிடுவோம்! 

வேலை நேரம் காலை ஏழரை மணி முதல், மாலை நான்கு மணி வரை. ஆயுத பூஜையன்று, உற்பத்தி, மாலை இரண்டு மணியுடன் நிறுத்தப்படும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பூஜா கமிட்டி இருக்கும். அந்த பூஜா கமிட்டி (ஒருவர் அல்லது இருவர் - அந்தப் பகுதி தொழிலாளர்) ஆயுத பூஜையன்று காலையோ அல்லது மதியமோ பெர்மிசன் வாங்கிக்கொண்டு, பாரிஸ் (ஹி ஹி - நம்ம பாரிமுனைதானுங்க!) போய்விடுவார்கள். பூஜைக்கு வேண்டிய வாழைக் கன்று, அவல், பொரிகடலை, பொரி, ஆப்பிள், ஸ்வீட் பாக்ஸ்(பூஜையில் வைக்க ஒன்று, பணம் கொடுத்த அங்கத்தினர்களுக்கு ஆளுக்கு ஒன்று), இன்னும் சர்ப்ரைஸ் கிப்ட், அலங்காரத் தாள்கள், ஊதுபத்தி, சந்தனம், குங்குமம், பூசணிக்காய், எலுமிச்சம்பழம் இத்யாதி இத்யாதிகள் வாங்கிக் கொண்டு, இரண்டு மணி சுமாருக்கு ஆட்டோவில் வந்து சேர்வார்கள். அதுமட்டும் அல்ல, ஆயுத பூஜை வரவு செலவு கணக்கும் - மொத்த கலெக்ஷன் எவ்வளவு, என்னென்ன செலவுகள் (ஆட்டோ வாடகை உட்பட) என்ற வரவு செலவு கணக்கும் அறிவிப்புப் பலகையில், பூஜை கமிட்டி ஆட்கள், கையொப்பமிட்டு, ஒட்டிவிடுவார்கள். 
 
   
 

இரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரையிலும், குப்பையகற்றல், சுத்தம் செய்தல், குங்குமம் வைத்தல், அலங்கார தாள்கள் ஒட்டுதல் என்று முன்னேற்பாடுகள் நடக்கும். மூன்று மணியிலிருந்து, பத்து நிமிடங்கள் பூஜை. பிறகு பிரசாதம் விநியோகம். பிறகு பாடத் தெரிந்தவர்கள் சில பாடல்கள் பாடுவார்கள். நான் பணியாற்றிய எஞ்சினீரிங் பகுதியில் அதிக வருடங்கள் பூஜையும் செய்து, பாட்டும் பாடி அசத்தியவர், திரு டி  எஸ் ஸ்ரீராம் என்பவர். (இசைமழலை ராம்ஜியின் அண்ணனின் சம்பந்தி). நானும் ஒரே ஒரு பூஜை தினத்தன்று பாடினேன். அதற்குப் பிறகு என்னை யாரும் பாடச் சொல்லவில்லை! 

அந்தக் காலத்தில், டூல் ரூம் பகுதி ஆயுத பூஜை மிகவும் பிரசித்தம். ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுப் பொருளாக, பூஜையில் வைப்பதற்காக அவர்கள், பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம், அண்டா - குண்டா என்று பிரம்மாண்டமான பொருட்களை வாங்கி வந்து அசத்துவார்கள். பூஜை செய்வதற்கு ஸ்பெஷல் கேட்பாஸ் போட்டு, ஒரு முறை ஒரு புரோகிதரை அழைத்து வந்தார்கள்! 

ஒரு சமயம், எங்கள் எஞ்சினீரிங் பகுதி தொழிலாளர்கள் நடத்திய ஆயுத பூஜை நிதி சிறப்புப் பரிசு, நாங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த இருநூறு ரூபாயில், ஒவ்வொருவருக்கும் ஐந்து கிராம் தங்கக் காசு.
   
தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரி பங்கெடுத்துக் கொள்ளும் பூஜை, மெடிக்கல் செண்டருக்கு முன்பாக ஒரு வண்டியை நிறுத்தி, அதை அலங்கரித்து, அதற்குச் செய்யப்படும் பூஜை. பிறகு அவர் பயிற்சி மையம் நடத்தும் பூஜையிலும், எங்கள் எஞ்சினீரிங் பகுதி ப்ரோடோடைப் வொர்க் ஷாப் பூஜையிலும் கலந்துகொள்வார். எங்கள் ப்ரோடோடைப் வொர்க் ஷாப்பில் ஒவ்வொரு வருடமும், அந்தந்த வருடத்தில் நாங்கள் செய்த புதிய வண்டி ஒன்று (அல்லது பல) நிச்சயம் இடம் பெறும். பூஜை முடிந்த பிறகு, அந்த வண்டியின் சக்கரங்களுக்குக் கீழே எலுமிச்சம் பழங்களை வைத்து, வண்டியை அவைகளின் மீது ஏற்றி, ஒரு ரவுண்ட் ஓட்டி வந்து திரும்ப நிறுத்துவார்கள். இந்த முதல் ஓட்டத்தின் போது, அந்த வண்டியை உருவாக்கியதில் அதிக அளவு பங்கேற்றுக் கொண்ட தொழிலாளரை அந்த வண்டியை ஓட்ட செய்ததும் உண்டு. 
                
மொத்தத்தில், அசோக் லேலண்டில், ஆயுத பூஜை என்பது அந்த நாட்களில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அந்தந்த வருடத்து பூஜைக் கொண்டாட்டங்கள், அதற்கு அடுத்த வருட பூஜை தினம் வரையில் நினைவில் நிற்கும். 
                   

22 கருத்துகள்:

 1. நல்லதொரு நாளில் சிறப்பான பகிர்வு...

  படிக்க படிக்க சென்னையில் 15 வருடம் பணி புரிந்த அந்த சந்தோஷ நாட்கள் வந்து போயின...

  நன்றி...

  பதிலளிநீக்கு
 2. ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்

  பதிலளிநீக்கு
 3. Dear Gothaman,
  Thanks for sharing the info. I was carried back to my days with ayudha puja.I ran a small scla eindustry for more than 30 years. It used to be so much fun and also pressure during the puja.We stop work the earlier day eavening and do all the cleaning, white washing and ecorations during the whole night.The boys go home freshen up and return at around 10 Am to prepare for the puja . One batch will go to buy things.We normally distribute two sets of uniforms and two months bonus during this time.
  For some reason, i will always get fresh notes from the bank to give bonus. No special reason , but somehow I wanted my boys to get the same excitement I get when you count fresh currency.We also had a habit of getting one surprise gift every year. this would be something like a big satiless steel drum. Kodam and the likes. Some boys will come dressed in fanciful attire. One will bring a sound system and blare music. This day they will be totally free and they freak it out. All the boys were bachelors and they have so much fun. There is also one funny incident. In our area, a new briyani shop was opened and I ordered biryani to all the boys as they were engaged in cleaning work. When the food came around midnight they were very happy.But, the next year they wanted to know if they would get biryani, ebven before starting the cleaning work.This "psychology" I could never understand.I remember this almost during every Ayudha poojha.
  Just thought of venting this.
  regards

  பதிலளிநீக்கு
 4. விழா நினைவுகள் அருமை:)! எங்கள் பிளாகிற்கும் வாசக நண்பர்களுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. நெய்வெலி தொழிற்சாலைகளிலும் ஆயுத பூஜை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் அனைத்து பேரும் ஆட்டோவிற்கு அலங்காரங்கள் செய்து முழு நெய்வேலி நகரையும் பெரிய ஊர்வலமாக வருவார்கள்....

  இனிய நினைவுகள்.

  பதிலளிநீக்கு
 6. நானும் ஒரே ஒரு பூஜை தினத்தன்று பாடினேன். அதற்குப் பிறகு என்னை யாரும் பாடச் சொல்லவில்லை! //

  ஹிஹிஹிஹி, நல்லவேளையா எல்லாரும் சுதாரித்துக் கொண்டார்கள் போல. :))))

  ஆயுத பூஜை நினைவுகள் அருமை. நாங்க ஆர்மி யூனிட்களில் கொண்டாடும் பூஜைகளுக்குப் போயிருக்கோம். கூர்கா ரெஜிமென்டில் நிஜம்மாவே எருமை மாட்டைப் பலி கொடுப்பாங்க. அதனால் அதுக்குப் போகறதில்லை. :(மிச்சம் அப்புறமா. இப்போ அழைப்பு வந்தாச்சு. :)

  பதிலளிநீக்கு
 7. // திரு டி எஸ் ஸ்ரீராம் என்பவர்.// இது யாரு நம்ம பிளாக் ஸ்ரீ ராமா?

  கற்பனையில் அந்த பூஜையை ரசித்தேன் அடேயப்பா எவ்வளவு பிரமாண்டமாய் இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 8. //சீனு said...
  // திரு டி எஸ் ஸ்ரீராம் என்பவர்.// இது யாரு நம்ம பிளாக் ஸ்ரீ ராமா? //
  இல்லை சீனு சார்! அவரு T S S.
  இவரு B+ S

  பதிலளிநீக்கு
 9. The usual humorous style is missing.

  பதிலளிநீக்கு
 10. சுவாரசியமான மலரும் நினைவுகள்.அருமை.

  பதிலளிநீக்கு
 11. சுவாரஸ்யமான பூஜைக் கொண்டாட்டங்கள்........

  பதிலளிநீக்கு
 12. இருநூறு ரூபாய்க்கு ஐந்து கிராம் தங்கம் - மலிவா கொள்ளையா?

  பதிலளிநீக்கு
 13. ஆயுதபூஜைக்கு எலந்தப்பழம் பாட்டு பாடினா அப்படித்தான்.

  பதிலளிநீக்கு
 14. //அப்பாதுரை said...
  ஆயுதபூஜைக்கு எலந்தப்பழம் பாட்டு பாடினா அப்படித்தான்.//

  எலந்தப்பழம் பாட்டு, அனைவரையும் கவர்ந்ததற்குக் காரணம், அது புன்னாகவராளி இராகத்தில் அமைந்திருப்பதுதான் என்று அந்தக் காலத்தில் கூறிய இசை மேதை யர்ர் தெரியுமா? எங்கள் அக்டோபர் இருபத்தைந்தாம் தேதி பதிவில் கூறப்பட்டுள்ளவர்!

  பதிலளிநீக்கு
 15. எங்கள் அக்டோபர் இருபத்தைந்தாம் தேதி பதிவில் கூறப்பட்டுள்ளவர்!//

  எந்த வருஷ அக்டோபர் 25?? இங்கே பதிவைக் காணோமே!


  @அப்பாதுரை,

  நானும் கொஞ்ச நாட்கள் அலுவலகம் போய்க் குப்பை கொட்டினப்போ ஆயுத பூஜை சிட்பன்டில் தங்கக் காசு தான் கொடுத்தாங்க. நாலு கிராம். நூற்றைம்பது ரூபாய்க்குள்ளே ஆச்சு.:))))

  பதிலளிநீக்கு
 16. சுவாரசியமா இருக்கு உங்கள் நினைவுகள். பூஜை, பாட்டுன்னு படிச்ச போது எங்க ஆபீஸ் சரஸ்வதி பூஜை நினைவுக்கு வந்துது.
  சரஸ்வதி பூஜை தினத்தன்று ஆபீஸ் களை கட்டிடும். டேப் ரெகார்டரில் பக்தி பாடல்களை போட்டு அலற விடுவார்கள். ஒரு முறை ரெண்டு பாட்டு ஆனவுடன் நான் போய் கிண்டலா எம்.எஸ்.வீ. பாட்டை போடுங்க, பூஜை இன்னும் களை கட்டும்னு சொன்னேன். அவரும் சிரிச்சுண்டே போடறேன் என்று சொல்லி,
  போட்டே விட்டார். நான் பயந்து போய் என் சீட்டுக்கு வந்து கப்சிப்புன்னு உட்காந்துட்டேன். அப்பறம்தான் பாத்தேன் எம்.டீ. கார் வெளில இல்லாததை. :))


  பதிலளிநீக்கு
 17. என் வலைச்சரப் பொறுப்பின் கடைசிப் பகுதியில் தங்களுடைய வலையகத்தை அறிமுகப் படுத்தியிருக்கின்றேன் என்பதனை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

  மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_6632.html

  நன்றியுடன்,
  சிவஹரி

  பதிலளிநீக்கு
 18. எல்ஆர்ஈஸ்வரின்னு நெனச்சேன், புன்னாகவராளி காரணமா? இசை மேதையே சொல்லிட்டாருன்னா சரியாத் தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 19. Sorry for late coming. பெருநாள், விருந்தினர்னு ரொம்பப் பிஸி.. வலைச்சரப் பதிவுகளையும் இனிதான் வாசிக்க வேண்டும்.

  //மொத்தத்தில், எண்ணூரில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படும். //

  ஏன்? ஒரே இடத்தில் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரே பூஜையாகச் செய்ய முடியாதா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!