சனி, 20 அக்டோபர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 13/10/12 To 20/10/12


எங்கள் B+ செய்திகள்.

விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....

=======================

- ரயில் பெட்டிகளில் பல்கிப் பெருகி வரும் எலி, கரப்பான்களை ஒழிக்க ஒரு சாதனம் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.

==================

- ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் முதலிடம் பிடித்து, சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் திண்டுக்கல்லைச் (திண்டுக்கல் தனபாலன் கவனிக்க!) சேர்ந்த 14 வயதான சூர்யா.ஆறு வயதிலிருந்தே அப்பாவிடம் கார் ஓட்டக் கற்றுக்கொண்ட சூர்யா, ஏழுவயதில் கோவையில் நடந்த கார் ரேசில் முதல் முதலாகக் கலந்துகொண்டு தோற்றது ஒரு சவாலை மனதில் ஏற்படுத்தியதாகச் சொல்லியிருக்கிறார். தினமலரில் படித்தது.

===================

-- தினமும் கூலிவேலை செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்த திருப்பூருக்கு அருகே உள்ள வெள்ளியம்பாளையம்  முத்துமாரியம்மன் மகளிர்க்குழுவைச் சேர்ந்த ஜான்சி, குவாரியில் கற்களை வாங்கி கிரைண்டர்களுக்கான கல்லாக மாற்றித் தரும் தொழிலில் ஈடுபட்டு ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை லாபம் பார்த்து, வெற்றிகரமாக வாழ்க்கை நடத்துகிறார். பெண்ணாக இருந்தாலும் இந்தத் தொழிலில் வெற்றிகரமாகச் செயல்படுவதை விவரிக்கிறது தினமலர்.

===================

- வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படும் எரிவாயு சிலிண்டர்களின் எடையை ஒவ்வொருமுறையும் நுகர்வோருக்கு முன் எடை போட்டுக் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு. ஏற்கெனவே இந்த சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இப்போது விலைகள் கூட்டப் பட்டு இருக்கும் நிலையில், மற்றும் மானிய விலையில் வருடத்துக்கு 6 சிலிண்டர்கள்தான் என்று கட்டுப்பாடு வந்திருக்கும் நிலையில், கடைகளுக்கு திருட்டுத்தனமாக வழங்கப்பட்டு. ஓரிரு நாட்கள் கழித்து தமக்கு வழங்கப் படுகிறதோ என்ற சந்தேகம் எல்லா நுகர்வோருக்குமே ஏற்கெனவே உண்டு என்பதால் இனி கட்டாயம் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

====================


- ஐ சி சி தலைவராக இந்தியர் கும்ப்ளே தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும், சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது - மெம்பர்ஷிப் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா - வழங்கப் பட்டிருப்பது/வழங்கப்படவிருப்பது [மற்றபடி இதனால் ஒரு சாதாரண மனிதருக்கு பெரிய உபயோகம் இல்லையென்றாலும்] இந்தியர்களுக்குப் பெருமை என்ற அளவில் பாசிட்டிவ் செய்தியாகப் பார்க்கலாம்!  சச்சினுக்கு விருது வழங்கப் படுவதற்கு மாத்தியூ ஹேடன் உட்பட இருவர் அதற்குள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் செய்தி. சச்சின் விருதை ஏற்பாரா... பார்க்க வேண்டும்!  

=====================

அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 தகவலுடன் "ஸ்மார்ட் கார்டு'

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முகவரி உட்பட 30 தகவல்கள் அடங்கிய "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான பணி நடக்கிறது.

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் அடையாள அட்டையை போன்று போட்டோவுடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பெயர், முகவரி, வகுப்பு, ஜாதி, குடும்ப வருமானம், உடன் பிறந்தவர்களின் விவரம் உட்பட 30 தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்குரிய படிவம் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலுள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மாணவர்களின் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அக்.,30க்குள் இப்பணியை முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதன்பின், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ""அடையாள அட்டைக்கு பதிலாக "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு ரகசிய எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் அனைத்து விவரங்களும் தெரியவரும். இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கார்டுகளை தவறான நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கக்கூடாது,'' என்றார். [தினமலர், முகப் புத்தகத்திலிருந்து]


===================

மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயபால் வழங்கினார்.
மீனவர்களின் பாதுகாப்புக்காக, பயோ மெட்ரிக் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் வாழும் 1 லட்சத்து 33 ஆயிரம் மீனவர்கள் கணக்கிடப்பட்டு பயோ மெட்ரிக் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதில் முதற்கட்டமாக நாகை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 60 பேருக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் இன்று வழங்கினார். [தினமணி]
=====================

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இளைஞர் நலப்படிப்பியல் துறை சார்பில் 2013-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு சிறப்பு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பிச்சுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இப்பயிற்சிக்கு அனைத்து வகுப்புகளையும் சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இதில் சேரவிரும்பும் மாணவ, மாணவியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.mkuniversity.org மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பெயர், கல்வித்தகுதி, வயது, பிறந்த தேதி, சாதிச்சான்றிதழ் மற்றும் வருமான வரிச் சான்றிதழ் ஆகிய விவரங்களைப் பூர்த்தி செய்து, அவ்விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும், சுயவிலாசமிட்ட ரூ.10 அஞ்சல்தலை ஒட்டிய 2 அஞ்சல் உறைகளையும் இணைத்து, முனைவர் பொ.பா.செல்லத்துரை, பேராசிரியர் மற்றும் தலைவர், ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வு சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இளைஞர் நலப்படிப்பியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலை நகர், மதுரை-21 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.10.12. அக்டோபர் 31-ம் தேதி முனைவர் முவ அரங்கில் நுழைவுத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
====================================- சென்னை 1000 விளக்குப்பகுதியில் உள்ள சர்ச் பார்க் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவியான அக்ஷயா சோனாஸ்ரீ சமீபகாலமாக 100 மீட்டர் தடை தாண்டுதல் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவதையும், ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற இவரது இலட்சியத்தையும் எடுத்துச் சொல்கிறது தினமணி. 
=====================================


- கடந்த 18 ஆண்டுகளாக சென்னை கொளத்தூருக்கு அருகில் உள்ள விநாயகபுரத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான 'சமர்ப்பணா' தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீதர்-பவானி தம்பதியர் பற்றிய செய்தி ஞாயிறு தினமணியில் அவர்களுடைய வீடும் அந்த மனவளர்ச்சி குன்றியோரின் இல்லத்தில்தானாம். இங்கேயே பிறந்து வளர்ந்துதான் இவர்கள் மகன் நரேந்திரன் கல்லூரியில் படிக்கிறாராம். 1989 ஆம் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகள் சென்னை தரமணியில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான 'ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு' நிறுவனத்தில் சிறப்பு ஆசிரியையாக பவானியும், சிறப்புப் பயிற்சியாளராக ஸ்ரீதரும் பணிபுரிந்திருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகி விட்டால் பெற்றோரும் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்  என்றெல்லாம் யோசித்து, மனம் உருகி, 1995ல் கொளத்தூர் டீச்சர்ஸ் காலனியில் வாடகைக் கட்டடத்தில் எந்தவிதப் பொருளாதாரப் பின்னணியும் இல்லாமல் இவர்களால் தொடங்கப் பட்ட இந்த நிறுவனம் பற்றி 1998 மார்ச் 30ம்  தேதி தினமணி நாளிதழின் தலைப்புச் செய்தியாக வெளியாக நன்கொடைகள் குவிந்தனவாம். மனவளர்ச்சி குன்றியவர்களுடன் பிற குழந்தைகளும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆதரவற்ற குழந்தைகளையும் சேர்த்துக் கொள்கிறார்களாம். இதைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆசைப் படும் இவர்கள் தங்களுக்கு வயதாகி வருவதால் இவர்களுக்கு உதவி செய்ய, சேவை மனப்பான்மை உள்ளவர்கள் யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதைத் தவிர சிறுவாபுரியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான முதியோர் இல்லம் ஒன்று தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

============================

14 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமை... முக்கியமாக : எரிவாயு சிலிண்டர் எடை, மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு"

  அக்ஷயா சோனாஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. DD... உங்கள் ஊர் செய்தியை படிக்கவில்லையா?!

  பதிலளிநீக்கு
 3. இந்த முறை தமிழக அரசு செய்கிற சில நல்ல விஷயங்களை பட்டியலிட்டுள்ளீர்கள். அம்மா கட்சிக்கு மாறிட்டீங்களா? :))

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான பாசிட்டிவ் செய்திகள்...

  தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 5. திண்டுக்கல் தனபாலனை DD ஆக்கிய விஷயம் DD க்கு தெரியுமா..
  பின் திவ்ய தர்ஷினி என்னும் தீதி சாரி DD உங்க மேல வழக்கு தொடுத்திர போறாங்க

  பதிலளிநீக்கு

 6. //சீனு said...
  திண்டுக்கல் தனபாலனை DD ஆக்கிய விஷயம் DD க்கு தெரியுமா..
  பின் திவ்ய தர்ஷினி என்னும் தீதி சாரி DD உங்க மேல வழக்கு தொடுத்திர போறாங்க//

  ஹை! அப்பிடிப் பார்த்தால், 'டிடி'ஸ் காமெடி "டிடி" கூடத்தான் எங்கள் மீது வழக்குத் தொடரலாம்!

  தூர் தர்சன் கூட வழக்குத் தொடரலாம்!
  பதிலளிநீக்கு
 7. - ரயில் பெட்டிகளில் பல்கிப் பெருகி வரும் எலி, கரப்பான்களை ஒழிக்க ஒரு சாதனம் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.//

  இது ரொம்ப முக்கியம். முக்கியமா ஏ/சி பெட்டிகளிலே அதுங்களுக்கும் வியர்க்குமோ? :P :P :P

  எல்லா பாசிடிவ் செய்திகளும் ஸ்மார்ட்தான்.

  அது என்ன B+ A+ இல்லையா?

  பதிலளிநீக்கு
 8. //ரயில் பெட்டிகளில் பல்கிப் பெருகி வரும் எலி, கரப்பான்களை ஒழிக்க ஒரு சாதனம் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.//


  - இந்தியர்கள் மூக்கு துளைக்கும் மசாலா போட்டு சமையல் செய்வதால் நியூஜெர்சி / நியூயார்க் என்று பிரிசித்தி பெற்ற எலியாரையும் / கரப்பனையும் இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பிறகு - அங்கும் காணமுடியும் !!

  பதிலளிநீக்கு
 9. ரயிலில் எலி, கரப்பு குறித்து என் தூறல் பதிவொன்றில் பகிர்ந்திருந்தேன். கண்டு பிடித்த கருவியை சீக்கிரமாய் பயன்படுத்த ஆரம்பிக்கட்டும் ரயில்வே:).

  நல்ல செய்திகளோடு பல தகவல்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
 10. ஸ்டூடன்ட் தான் ஸ்மார்ட்டா இல்லை கார்டாவது ஸ்மார்டா இருக்கட்டுமேனுதான இந்த திட்டம்..

  பதிலளிநீக்கு
 11. எங்க ஊர் செய்தியை குறிப்பிடாததால் (நீங்கள் எப்படியும் சுட்டிக் காட்டுவீர்கள்) பல பேர் படிப்பார்கள் என்று ஒரு யூகம் தான்...

  நன்றி...

  பதிலளிநீக்கு
 12. எல்லா நல்ல செய்திகளுக்கும் நன்றி ஸ்பெஷல் செய்தி மனநலம் குன்றிய குழந்தைகளுக்காக்ப் பாடுபடும் பெருந்தகைகளுக்கு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!