புதன், 17 அக்டோபர், 2012

சில்லறைக் கதை
எப்போதும் போல பஸ் கூட்டமாகத்தான் வந்தது.  

'பின்ன, நமக்காக தனியாவா பஸ் விடுவாங்க?' என்று சமாதானம் செய்துகொண்டபடி உள்ளே கஷ்டப்பட்டு ஏறியவர்களில் ரவியும் ஒருவன். ஏறவே முடியாமல் இரண்டாவது படியிலேயே நிற்க வேண்டி இருந்தது. பின்னாலிலிருந்து கூட்டம் இன்னும் இன்னும் நெருக்கியபடி இருந்தது.


"சார்... கொஞ்சம் மேல போங்க சார்...உள்ள தள்ளிப் போங்க சார்..." 

"சார்... லேடீஸ் படிக்கட்டுல நிக்கறாங்க... உள்ள தள்ளுங்க"

எங்கே தள்ள, யாரைத் தள்ள? பின்னால் நிற்பவர்களைத்தான் கீழே தள்ளணும்! யாரும் நகர்வதாய் இல்லை. 

நடத்துனரிடம் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டி, போக வேண்டிய இடத்தைச் சொன்னதும் 'தமிழன்' எம் ஜே பாஸ்கர் மாதிரி எரிந்து விழுந்தார். 

"சில்லறையாக் குடுங்க சார்..."

பாக்கெட்டைத் தடவி இல்லையென்று சைகை செய்தான் ரவி. திட்டிக் கொண்டே டிக்கெட்டைத் தந்தவர் மீதி சில்லறையைத் தேடித் தேடி எடுத்துக் கொடுத்தார்.

"கண்டக்டர் சார்... குறையுது.."


"ஆமாம்யா... எல்லோரும் ஐம்பதையும் நூறையும் நீட்டினா நான் எங்க போறது? தர்றேன். எங்கே ஓடிப் போயிடப் போறேன்..."

எல்லோரும் டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்க, சில்லறை அவர் கைக்கு வரும்போதெல்லாம் பிஸ்கட்டைப் பார்க்கும் நாய்க்குட்டி போல அவர் முகத்தையும் கைகளையுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவரா, மருமகளிடம் கோபித்துக் கொண்ட மாமியார் போல இவன் பக்கமே திரும்பாமல், ஆனால் மறக்காமல் அவ்வப்போது இவனிடம் சொன்ன மாதிரியே வசனம் வேறு சிலரிடமும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

மீனம்பாக்கம் தாண்டியதுமே கூட்டம் குறைந்து போனது. கண்டக்டர் உட்கார்ந்து எச்சில் தொட்டுத் தொட்டு ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டிருக்க, 


"சார் நீங்க எனக்கு சில்லறை பாக்கி தரணும்" 

நிமிர்ந்து பார்த்தவர் மையமாக மண்டை ஆட்டி விட்டு விரலை நாக்கில் வைத்து எடுப்பதில் கவனமானார். 

"சார்...."

"அதான் கேக்குதே... சில்லறை என்கிட்டே இல்லை...இருங்க பார்ப்போம்..."

"இன்னும் ரெண்டு ஸ்டாப்புல நான் இறங்கணும்"

"என்னை என்ன செய்யச் சொல்றீங்க.."

இவனைப் போலவே பாக்கி சில்லறைக்காகக் கேட்டு விட்டு நின்று கொண்டிருந்த இருவரையும் பார்த்தான்.   


நின்றிருந்த இருவரில் கல்லூரி மாணவன் போல இருந்த ஒருவன் உள்ளே குழந்தையுடன் ஏறி வந்த பெண்ணிடம் 'எங்கேம்மா போறீங்க... காசைக் கொடுங்க நான் வாங்கித் தர்றேன்' என்ற படி காசை வாங்கியவன் அதைத் தன பையில் போட்டுக் கொண்டபடி "சார்... சானடோரியம் ஒண்ணு  குடுங்க.." என்ற படி காசைக் காட்டினான். தரவில்லை. அவர் டிக்கெட்டைக் கிழித்ததும் "எனக்குத் தரவேண்டிய காசு நான் எடுத்துகிட்டேன்... தேங்க்ஸ்" என்றபடி உள்ளே போனான்! 

டெக்னிக்கைப் புரிந்துகொண்ட அடுத்தவனும் அதே போல இன்னொரு ஜோடியிடம் காசு வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு டிக்கெட்டை வாங்கி அவர்கள் கையில் கொடுத்து விட்டு அகன்றான். 

'ஆஹா....'  

ரவி சுற்றுமுற்றும் பார்த்தான். வேறு யாரும் டிக்கெட் வாங்க நிற்கவில்லை. இவன் பார்வையின் காரணத்தையும், அங்கு ஆளில்லாதததையும் கண்டக்டரும் பார்த்து விட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டார். 

குரோம்பேட்டையில் இறங்க வேண்டும். இவனா சில்லறை கொடுப்பதாகத் தெரியவில்லை. 'நான் என்ன விஜயா என்ன, எல்லோர் கிட்டயும் பேப்பர் வாங்கி கையெழுத்து வாங்கி கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட' என்று எண்ணிக் கொண்டவன், கண்டக்டரின் முகத்தில் கேலிப் புன்னகை வழிவதாகக் கற்பனை செய்து கொண்டான்.

"நான் இறங்கப் போகும் இடமே வருதே... சில்லறை?" என்றான்.

"டிக்கெட்டுல எழுதிக் கொடுக்கறேன். டெப்போவுக்கு வந்து வாங்கிக்குங்க..."

'ஆவுற காரியமா இது?'

ஒரு முடிவுக்கு வந்தவன்,

"மூணு தாம்பரம் கொடுங்க..."

கேள்விக்குறியுடன் நிமிர்ந்து பார்த்தார் கண்டக்டர். அருகில் வேறு யாரும் இல்லை.

"மூணா? எதுக்கு? யாருக்கு?"

"அது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம்... நீங்க எனக்கு மிச்சம் தரணும் இல்லே? கொடுங்க"


கொடுத்தார். 

"இன்னமும் கூட நீங்கதான் எனக்கு ஒரு ரூபாய் தரணும்" என்ற ரவி, குரோம்பேட்டை பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்பதற்காக ஸ்லோ ஆக, இறங்குவதற்காகப் படிக்கட்டுப் பக்கம் வந்தவன் அந்த மூன்று டிக்கெட்டுகளையும் எடுத்து கண்டக்டரின் கண் முன்னாலேயே சுக்கல் சுக்கலாகக் கிழித்து ஓரமாகப் போட்டான். 

இறங்கிச் சென்றான்.    


படங்கள் : நன்றி இணையம்.  
                 

30 கருத்துகள்:

 1. குறைஞ்ச பட்சம் டிக்கெட்டைத்தான் கிழிக்க முடியுது கோவத்துல..

  பதிலளிநீக்கு
 2. //"டிக்கெட்டுல எழுதிக் கொடுக்கறேன். டெப்போவுக்கு வந்து வாங்கிக்குங்க..."//

  இப்படி கூட சொல்றாங்களா என்ன? :((

  பதிலளிநீக்கு
 3. வயிற்றெரிச்சலின் உச்சம். டிக்கெட்டைக் கிழித்ததுடன் விட்டானே... சூடாக ரெண்டு வார்த்தை சொல்லாமல்..!

  பதிலளிநீக்கு
 4. வயித்தெரிச்சலை கொட்ட நல்ல உபாயமாகத்தான் தெரிகிறது.ஆனால் உண்மையிலேயே சில்லறை இல்லாவிட்டால் அவருந்தான் என்ன செய்வார்.

  பதிலளிநீக்கு
 5. அவனால் வேறு என்ன செய்ய முடியும், அந்த இடத்தில நான் இருந்தாலும் அதைத் தான் சார் செய்து இருப்பேன்

  பதிலளிநீக்கு
 6. சில்லறையோடு போயிருந்தால் பிரச்சினை இல்லை. தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டு தனக்கும் கஷ்டத்தைக் கொடுத்து கண்டக்டருக்கும் கஷ்டத்தைக் கொடுத்து, பரிதாபத்தை எதிர்பார்க்கும் இது போன்ற அறிவில்லாத சாமானியர்கள் கோழைகள். (நேத்து ராம்னி-ஒபாமா டிபேட் பாத்து ஒரே கடுப்பு சாமானியர்கள் மேலே)

  பதிலளிநீக்கு
 7. கடைசியிலே வைச்சீங்க பாரு பஞ்ச்! சூப்பர்! அலாதியான நடை; கதையோடு ஒட்ட முடிந்தது. :-)

  பதிலளிநீக்கு
 8. //சுக்கல் சுக்கலாக் கிழித்து ஓரமாகப் போட்டான்.//

  என்னமா ஆத்திரம்? பின்னே என்ன..
  நியாயத்தின் பேரால் பீறிட்ட தர்மாவேசம்! ஒருவிதத்தில், வழிகாட்டல் கூட!  பதிலளிநீக்கு
 9. நல்ல கதை. அட்லீஸ்ட் பணம் அந்த கண்டக்டரின் பாக்கெட்டுக்குப் போகாமல், அரசுக்குப் போகுமே! ஏற்கனவே லாஸ்ல ஓடுதுன்னு தானே சொல்றாங்க!

  பதிலளிநீக்கு
 10. அத்தோட கோவம் போகல...
  ரெண்டு மாசம் கழிச்சு.. அதே கண்டக்டர் வந்த பஸ்ல எதேச்சியா ஏறிட்டாரு நம்ம கதாநாயகரு.... அதே கண்டக்டர பாத்தா ஒடனே ஒரே ஒரு டிக்கட்டு வாங்கி.. அவரு கண் முன்னாடியே உடனே அத கிழிச்சு போட்டாரு..... அப்புறம் எப்படி பஸ்ல தொடர்ந்து போனாருன்னு கேக்கறீங்களா ... அவருத்தான் அந்த மாச ஆரம்பத்திலேருந்து பஸ்-பாஸ் வாங்கிட்டாரே !

  பதிலளிநீக்கு

 11. உடன் வரவுக்கு நன்றி DD

  நன்றி அமைதிசாரல்.

  நன்றி மோகன் குமார்.
  //இப்படி கூட சொல்றாங்களா என்ன? :((//

  செய்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் கற்பனைக் கதையே! :))

  நன்றி பாலகணேஷ்.

  நன்றி சேக்காளி. நீங்கள் பயங்கர இளையராஜா ரசிகர் என்று தெரிந்து கொண்டோம். இளையராஜாவின் மனைவி மறைவுக்கு அவர் பாடல்களிலிருந்து உங்கள் தெரிவில் ஆறுதல் பாடல்கள் மூன்றும் அருமையான தெரிவு.

  நன்றி சீனு.

  நன்றி அப்பாதுரை. இது கற்பனைதான். ஸோ நோ டென்ஷன்! உங்கள் வோட் யாருக்கு என்று தெரிகிறது.

  நன்றி சேட்டை சார்... உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது.

  நன்றி பழனி கந்தசாமி சார்..

  நன்றி ஜீவி சார்...

  நன்றி அன்புடன் அருணா.

  நன்றி வெங்கட் நாகராஜ்.

  ஹா..ஹா... நன்றி மாதவன்... ஆளையே காணோம்?

  பதிலளிநீக்கு
 12. /பின்னால் நிற்பவர்களைத்தான் கீழே தள்ளணும்! /

  சிந்தனை ஓட்டங்களுடன் அருமையான நடை.

  இயலாமையை இப்படிதான் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியதாகிறது.

  உங்கள் கதை கற்பனை என்றீர்கள். நிஜத்தில் நடப்பதையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

  50,100 என்றில்லை இல்லை, 10 ரூபாய் வைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினாலும் சில்லறை கிடைக்காது. சில்லறை இல்லாமல் ஏறாதீர்கள் என்றும், இல்லை என்பவரை இறக்கி விடுவதும் பெங்களூரில் நடப்பதால் வீட்டில் சேரும் சில்லறைகள அடிக்கடி கேட்டு வாங்கிக் கொள்வார்கள் வேலைக்கு உதவிக்கு வருகிறவர்கள். சரி இதெல்லாம் நடத்துனர்களின் சிரமம் என்றால், கொடுக்கிற காசுக்கு கேட்டாலும் டிக்கெட்டே தராமல் நழுவுவதை எதில் சேர்க்க:(?

  பதிலளிநீக்கு
 13. ரோஷம் இருக்கிறது.மோதி மிதிக்க வலுவில்லை. எத்தர்களுக்குத் தான் எத்தனை ரூபம். நம் பிரதிநிதி அந்தப் பயணி.

  பதிலளிநீக்கு
 14. எனக்குக் கூடத் தெரிகிறது துரை எந்தப் பக்கம் என்று. ஒபாமா வாஸ் க்ளாஸ் 1

  பதிலளிநீக்கு
 15. முரட்டுத்தனமாகப் போராட இயலாத ஒரு மனிதன் என்ன செய்வாரோ அதைத்தான் அந்த கதாநாயகனும் செய்திருக்கிறார்.

  கதையின் ஓட்டம் சுவாரசியமாக, மிகவும் ரசித்துப்படிக்கும்படியாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 16. எப்போப் போஸ்ட் போடறீங்கனு பல சமயங்களிலும் தெரியறதே இல்லை. அது என்னமோ கூகிளுக்கு ஓர வஞ்சனை ஜாஸ்தியா இருக்கு! :))))

  ஒரு சாமானியன், எதிர்த்துக் கேட்கக் கூடிய அளவுக்கு வலுவும் தைரியமும் இல்லாதவன் செய்யக் கூடியதைச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் நானாக இருந்தால் கட்டாயமாய்ச் சில்லறைகேட்டு வாங்குவேன். தொணப்பி எடுத்துட மாட்டேனா? அத்தனை பேருக்கு டிக்கெட் கொடுத்திருக்கிறச்சே சில்லறை இல்லாமலா போயிருக்கும்! ஏமாந்தவன் தலையிலே மிளகாய் அரைக்கும் எண்ணம் தான் இது.

  பதிலளிநீக்கு
 17. அந்த ஆளு சில்லறை எடுத்துட்டு போகாதது தப்பா தோணலியா? பஸ் கண்டக்டர் சில்லறை வச்சிருக்கணும்னு எதிர்பார்ப்பது சரியா? ஏறுவதற்கு முன்பே 'சில்லறை இல்லை, பரவாயில்லையா?' என்று கேட்கும் நேர்மை வேண்டாமா? நெரிசலில் அதெல்லாம் சாத்தியமில்லை எனில் சில்லறையை எடுத்துக் கொண்டு போக வேண்டும். சரியான சில்லறை எடுத்துக் கொண்டு போக வேண்டியது பயணியின் கடமையும் கூட. கண்டக்டர் சில்லறை தருவது is a courtesy.

  இங்கே 'அநியாய' கண்டக்டரை உருவாக்கியது பயணி தானே? அப்புறம் ரோஷம் வந்து என்ன பிரயோஜனம்? இது போல் ஆட்கள் அடுத்த பயணத்துக்காகவாவது சில்லறை எடுத்துக் கொண்டு போவார்களா? மாட்டார்கள். சிரமப்பட்டு சேர்த்தக் காசை இப்படி தானே சீரழித்துவிட்டு போலி நிறைவை அனுபவிக்கும் pseudo righteous ஜந்துக்கள்.

  (இங்கே டிகெட், பயணம், கண்டக்டர், பயணி எல்லாமே metaphors ஆகப் பார்த்தால், இது தான் நம் வர்க்கத்தின் பெரும்பானமையோ என்று நினைக்க வைக்கிறது. நடுக்கமாக இல்லை? :-)

  பதிலளிநீக்கு

 18. அன்பின் அப்பாதுரை! பயணியின் தப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். இதை ஒரு முன்னுதாரணமாக, புரட்சியாகப் பார்க்காமல் ஒரு சாதாரண சம்பவமாக மட்டும் பார்க்கவும்! அப்புறம் அடுத்தமுறை சென்னை வரும்போது பஸ்ஸில் தொடர்ந்து பயணிக்கவும்! ஆனால் இப்பொழுதெல்லாம் நிறைய மாறி விட்டது! :))

  "இன்னும் ரெண்டு ஸ்டாப்புல நான் இறங்கணும் "

  உங்களுக்காக இந்த வரிக்கு அப்புறம் மற்றுமொரு கற்பனை! இப்படியும் நடக்கலாம்!

  கண்டக்டர் நிமிர்ந்து பார்த்தார்

  "நீங்களும் சில்லறை சரியா கொண்டு வர மாட்டீங்க.. நாங்களும் எவ்வளவு பேருக்குதான் சில்லறை கொடுப்போம்..."

  "தினமும் சில்லறை கொடு வர்ரவந்தான் நான்... இன்றுதான் இல்லை! இதையெல்லாம் நிரூபிக்கவா முடியும்?"

  "நிரூபிக்கவா சொன்னேன் உங்களை... என் கிட்ட சில்லறை இல்லைன்னுதான சொன்னேன்"

  "இப்படி ஐம்பது பைசாவாகவும் இருபத்தைந்து பைசாவாகவும் எவ்வளவுதான் அடிப்பீங்களோ"

  இந்த வார்த்தையில் கண்டக்டர் வெகுண்டார்.

  "நான் தந்த அந்த மிச்சத்தைக் கொடுங்க.."

  "எதுக்கு?"

  "கொடுங்க"

  "இதோ... இவ்வளவு பேசறத்துக்கு முன்னாடியே இதைச் செய்திருக்கலாமில்லே?"

  "இந்தாங்க உங்க ஐம்பது ரூபாய். உங்களுக்கு டிக்கெட் காசு நானே போட்டுக்கறேன்... குரோம்பேட்டை வந்துடுச்சு இறங்குங்க"

  தலைகுனிந்து இறங்கினான் ரவி.

  பதிலளிநீக்கு
 19. அப்பாதுரை, பேருந்துப் பயணத்திலே சில்லறை எடுத்துச் செல்வதே அனைவருக்கும் வழக்கம் எனினும் சில சமயம் இம்மாதிரி நேருவது உண்டு. ஆட்டோக்காரர் கூட நாற்பது ரூபாய்னு பேசியதை நம்பி நாம ஐம்பது கொடுத்து பாக்கி கேட்டால் கிடைப்பது சந்தேகமே. என்றாலும் இப்போது ஆட்டோக்காரர்கள் மாறி வருகிறார்கள் என்பதும் உண்மை. சென்னையிலேயே நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் கொடுத்துச் சில்லறை வாங்கி இருக்கோம். ஆனால் சென்னையில், முக்கியமாக இந்தியாவில் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கினால் ஐந்து ரூபாய்க்கு மேல் பாக்கி தரவேண்டும் என்றால் மட்டுமே சில்லறை கிடைக்கும். கொடுப்பார்கள். இல்லை எனில் வாடிக்கையாளரிடம் சில்லறை இல்லை சார், அதுக்கு பதிலா சாக்லேட் வாங்கிக்கோங்க னு ஒரு சிலர் மட்டுமே மனசாட்சியோடச் சொல்வாங்க. ஒரு சிலர் சில்லறை இல்லைனு சொல்லிட்டுப் பேசாமல் இருப்பாங்க.

  இப்படியே போன மாதம் டெல்லியில் இருந்தப்போ ரிலயன்ஸில் நாங்கள் சில்லறைகளை இழந்திருக்கிறோம். ஸ்பென்ஸரிலும் இதே கதிதான். சென்னை அம்பத்தூரில் ஃபார்ம் பஜார்னு ஒண்ணு இருக்கு. அங்கே மட்டும் சாக்லேட் வாங்கிக்குங்கனு சொல்லுவாங்க. பொதுவாய்ப் பெரிய கடைகளோ, எதுவோ இந்தச் சில்லறை விஷயத்தை மிகவும் சில்லறைத்தனமாகவே பார்க்கின்றன. சில்லறையை விடாப்பிடியாகக் கேட்டாலோ பதிலுக்குப் பொருட்கள் கேட்டாலோ அல்பம்னு பார்க்கிறாங்க.

  இதுவேயு.எஸ்ஸில் இப்படி நடந்து பார்த்ததில்லை. நாங்க இரண்டு பேரும் மட்டும் தனியாகவே போய்ப் பொருட்கள் வாங்கிட்டு வருவோம். இந்த மாதிரி நடக்காது. பொதுவாக இங்கே அடுத்தவங்க காசுன்னா திருப்பிக் கொடுக்கணுமா என்ற எண்ணமே இருக்கு. இதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

  பதிலளிநீக்கு
 20. actually, இந்த சில்லறை விவகாரம் (புத்தி?) எல்லா இடத்திலும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் இங்கே ரெஸ்டரான்ட்களில் (particularly fast food, drive-in types) சில்லறையை round off செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். (சாக்லேட் வாங்கிக்கோங்க பாணி). உபரியாக பணம் அடிக்கிறார்கள் என்று ரெஸ்டரான்ட் மேல் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

  அது சரி, இந்த 'சாக்லேட் வாங்கிக்குங்க'வைக் கொஞ்சம் யோசிச்சா நல்ல தமாஷா இருக்கும் போலிருக்கே?

  எப்பவும் கையில் சில்லறை ரெடியாக வைத்திருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை தான். அந்த டயத்தில் போனது போனது தான் என்று இருக்க வேண்டியது தான்.

  நான் சொல்ல வந்தது: டிகெட் வாங்கிக் கிழிச்சுப் போடுவதால் ஒரு பயனும் இல்லை. அடுத்தவன் காசைத் திருப்பக் கூடாது என்று ஈனத்தனமாக கண்டக்டர் நினைத்தால், கண்டக்டர் அனுபவிக்கக்கூடாது என்று நினைக்கும் பயணியின் செயலும் ஈனம் தான். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை ரகம். 'போகிறது கண்டக்டர் தின்னட்டும்' என்று எண்ணினால் தானம் கொடுத்த நிறைவாவது கிட்டும், இப்படி டிகெட்டை வாங்கிச் சும்மா கிழித்துப் போட்டால் எரிச்சல் தான் மிகும்.

  எங்கள்: இது கதை என்றாலும் இந்தச் சம்பவங்கள் தினமும் நடப்பவை தான். எண்பதுகளில் பஸ்சில் போகும் பொழுத் தினமும் இப்படி ஏதாவது நடந்து பார்த்திருக்கிறேன். பல நேரம் நானே சில்லறை இழந்து புலம்பியிருக்கிறேன். (இறங்கியதும் பஸ் மேல் கல் எறிந்து ஓட்டமெடுத்திருக்கிறேன். கல் எறிந்து லைட் உடைந்தால், பஸ் ஒரு check upக்காவது நிற்கும். அந்த ஐந்து பத்து நிமிடங்கள் தாமதமானால் டிரைவர்-கண்டக்டர் bata இழப்பார்கள். 'என் பணத்தை ஏமாத்தினே இல்லே?' என்ற
  போலி வஞ்சம். பிறகு சில்லறை எடுத்துப் போகப் பழகிவிட்டேன்).

  இந்த ஊர் பஸ்சில் சில்லறை இல்லையென்றால் ஒன்று ஏறக்கூடாது, இல்லையென்றால் சில்லறை கேட்காமல் பணத்தைப் போட வேண்டியது - இரண்டே வழிகள் தான்.

  பதிலளிநீக்கு
 21. எங்கள்: இரண்டாவது முடிவில் கதையை இலக்கியம் பக்கம் எடுத்துப் போனீர்கள்.

  பதிலளிநீக்கு
 22. i meant 'தனக்கு ரெண்டு கண் போனாலும் பரவாயில்லை' :-)

  பதிலளிநீக்கு
 23. //சுக்கல் சுக்கலாக் கிழித்து ஓரமாகப் போட்டான்.//

  கண்டக்டருக்கு உறைக்கவா
  போகிறது... !!????

  பதிலளிநீக்கு
 24. அப்பாதுரையின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். டிக்கெட் கொடுப்பதுதான் கண்டக்டர் வேலை. சில்லறையில்லாமல் போவது நம் தவறுதான். 

  பதிலளிநீக்கு
 25. அரக்கப்பறக்க எல்லோருமே இயந்திர கதியில் இயங்குகிறோம் காலையில் பீக் ஹவர்ஸ்ல ஓடிப்போய் பஸ்ஸில் ஏறுவதும் எவரெஸ்ட் இமயமலைல போய் கொடி நாட்டி வெற்றிச்சிகரம்னு பெயரெடுப்பதும் ஒன்றுப்பா... அத்தனை டென்ஷன்...ஏறும்போது உடனடியா உள்ளே போக இடம் கிடைக்காமல் பஸ்ஸின் படிக்கட்டுலயே பிரயாணம் செய்வது போல ஒரு கொடுமை வேறேதுவும் இல்லை. பஸ் சடார்னு திரும்பும் சமயம் பிடிமானம் வழுக்கி கீழே விழுந்தால் என்ன ஆவது என்ற பதற்றம் உள்ளே சீட்டில் உட்காரும் எனக்கு டென்ஷனாகவே இருக்கும்... ( எப்போதும் எங்கு போனாலும் கையில் ரெடியாக சில்லறை வைத்துக்கொண்டு பஸ் வரும் பீக் அவர்ஸ்ஸுக்கும் முன்னாடியே போய் ஏறி சமர்த்தா டிக்கெட் வாங்கிருவேன் என்னால அட்வென்ச்சர் செய்யவும் முடியாது எதிர்க்கொள்ளவும் முடியாதுப்பா அதனால் தான் ... என்னால எனக்கு ஏற்படாத டென்ஷனெல்லாம் படிகளில் நின்று பயணிக்கும் பிரயாணிகளும் அவதிபடும் கண்டக்டரும் கூட்ட நெருக்கடியில் சிக்கி அவஸ்தைப்படும் பிரயாணிகளாலும் எனக்கு டென்ஷன் அதிகமாகும் அது வேறுவிஷயம்)

  பிரயாணியாக இருந்து இத்தனை அவஸ்தைப்பட்டு ரவி சில்லறை இல்லாததால் கண்டக்டரிடம் காட்டமுடியாத கோபத்தை இயலாமையை மூன்று டிக்கெட் வாங்கி அவர் முன் கிழித்து போடுவதால் என்னப்பயன்? கண்டக்டர் அந்த நேரம் அதிர்ந்தாலும் அதன்பின் அந்த நிகழ்வை வீட்டுக்குப்போனதும் குளித்துவிட்டு சாப்பிட உட்காரும்போது சிரித்துக்கொண்டே தன் குடும்பத்தினரிடம் பகிர தான்பா உபயோகமாகும்... அவ்ளோ தான்... ஆனால் கண்டக்டருக்கு உதவும் விதமாக....அதே சமயம் தானும் நஷ்டம் அடையாம இருக்க என்ன வழி என்பதை யோசித்து செய்திருந்தால் ரவிக்கு ஒரு அப்ளாஸ் சொல்லி இருந்திருக்கலாம்பா...

  நமக்கே ஆயிரத்தெட்டு டென்ஷன்.. பஸ் டைமுக்கு வராது.. வந்தாலும் ஸ்டாண்ட்ல நிற்காம போய்ரும் கூட்டத்தைப்பார்த்து. அப்படியே நின்னாலும் ரஷ்... ரஷ்ல ஏறி திரிசங்கு சொர்கம் போல உள்ளே போகவும் முடியாம வெளியே விழுந்துடாம பிடிச்சுக்கவும் முடியாம படும் அவஸ்தைகள்... இதில் சில்லறை கிடைக்காத எரிச்சல்.... அதன்பின் நம் ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி நம் வேலையை கவனிக்க ஆரம்பித்துவிடுவோம்..

  அதுவே நம் பிரச்சனையை மட்டுமே நினைக்காமல் கண்டக்டர் நிலையில் இருந்து பார்த்தால்... அவர் ரவியைப்போல பல ரவிகளை சமாளிக்கவேண்டும் அதுவும் பீக் அவர்ல ஏசி இல்லாத கவர்ன்மெண்ட் பஸ்ல யாரும் படியில் நிற்காமல் பார்த்துக்கனும். டிக்கெட் கரெக்டா கொடுக்கணும்.. கொஞ்சம் கண்டக்டரிடம் நல்லத்தனமாவும் பேசி இருந்திருக்கலாம்... இது கண்டக்டருடைய நிலையில் நின்று அவருக்காக நினைத்தது...

  இப்ப ரவிக்காக ரவி போன்ற பல பிரயாணிகளுக்காக நினைத்து எழுதுவது என்னவென்றால் கண்டக்டருக்க்கு இது தான் வேலை என்று ஆனப்பின் எப்போதும் சில்லறை அதிக்மா தனியா வெச்சுக்கணும்... பிரயாணிகளிடம் சரியா சில்லறை வெச்சுக்கிட்டு ஏறுங்க அப்டின்னு சொல்லும் அதிகாரம் கண்டக்டருக்கு கிடையாது. த்ன் வேலையையும் சுமுகமா பார்த்துக்கொண்டு டென்ஷன் இல்லாமல் டிக்கெட் கிழித்துக்கொடுத்து சரியான சில்லறைக்கொடுத்து பிரயாணிகளையும் ஆசுவாசப்படுத்தலாம்.. அப்படி ஒரு கண்டக்டர் இருக்கமுடியுமா? சாத்தியமா? இருக்காது. ஏன்னா தினமும் பஸ்லயே பலமுறை போய் வரும் கண்டக்டருக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும் அளவுக்கு ஆகிவிடும் ரஷ்ஷும் டென்ஷனும்... அப்படி இருக்க இனிமையான முகத்துடன் சரியான சில்லறையுடன் பிரயாணிக்கிட்ட நடந்துக்கனும்னு எப்படி எதிர்ப்பார்ப்பது ஹூம்... எல்லோருக்குமே எப்போதும் ஏதோ ஒருவிதத்தில் இப்படி ஒரு டென்ஷனும் பிரச்சனையும் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. கண்டக்டரோ ரவியோ இருவருமே கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமாக கொஞ்சம் இனிமையாக ஒருவரிடம் ஒருவர் நடந்துக்கொண்டிருந்தால் நோ மோர் டென்ஷன்..

  சுவாரஸ்யமும் அட்வென்ச்சரும் ரவிக்கும் கண்டக்டருக்கும் இருக்கும் டென்ஷனையும் அறியவைத்த கதை பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஸ்ரீராம் குழுவினர்...

  பதிலளிநீக்கு
 26. அன்பின் எங்கள் பிளாக்

  இது பேருந்துகளில் நடக்கும் அனியாயம் தான். எவ்வளவு தான் சில்லறை வைத்துக் கொண்டு சில்லறையாகக் கொடுத்தாலும் நடத்துனர் அச்சில்லறைகளை மற்றவர்களுக்குக் கொடுக்க மாட்டார் - இல்லை என்று சொல்வதும் சில்லறையாக் கொடு என்று சொல்வதும் அவரின் வழக்கம். ஒன்றும் செய்ய இயலாது. கோவிலில் பிச்சை போடுவதைப் போல இதையும் பிச்சையாக எண்ணி விட்டுத் தொலைய வேண்டியது தான். வேறு வழி இல்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 27. பொதுவாக வெளிநாடுகளில், அப்பாதுரை சொன்னதுபோல, சரியான சில்லறை எடுத்துச்செல்லவேண்டும். அல்லது மீதி எதிர்பார்க்கக்கூடாது. (மிகமிகச்சிலர் எதுவுமே போடாமல் ஏமாற்றவும் செய்வார்கள் - இல்லாமையாலும் இருக்கலாம்). அல்லது, ‘பஸ் பாஸ்’ - போல ஸ்வைப் கார்டுகள்.

  ஆனால், தமிழ்நாட்டில், கண்டக்டர்கள் ஒவ்வொரு நாளும் ட்யூட்டி சார்ஜ் எடுத்துக் கொள்ளும்போது, டிப்போவிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சில்லறை வாங்கிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்ட ஞாபகம். மேலும், சட்டபப்டியும் நடத்துனர் மீதி சில்லறை கொடுத்தாக வேண்டும் என்பதாக நினைவு.

  எனினும், நான் பயணிக்கும்போது, சரியான டில்லறை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. இல்லாத பட்சத்தில், அருகில் உள்ளவர்களிடம் “கூட்டு” போட்டு டிக்கட் எடுப்பது போன்று ஏதேனும் செய்து, இருதரப்பிலும் சிரமம் குறைக்க முயல்வேன்.

  இங்கு பிரச்னை, சில்லறை இல்லை. தன்மானம் - மரியாதை என்று தோன்றுகீறது. தன்மையாக, சில்லறை இல்லை என்பதைச் சொல்லியிருந்தாலே பாதிப்பேர் விட்டிருப்பார்கள். ‘தரமுடியாது’ என்கிற அதிகாரத் தொனியில் பேசும்போதுதான் கோபம் வருகிறது!! :-))))

  சூப்பர்மார்க்கெட்டுகளில் நடக்கும் அஞ்சு-பத்து பைசா சில்லறையைத் தடுக்க வழியேயில்லையா!! கிரடிட் கார்ட் கொடுத்தாக்கூட, ரவுண்ட் செய்துதான் எடுக்கிறங்க. காசாகக் கொடுத்தா, இந்தியாவிலாவது சாக்லெட் கிடைக்கும், இங்க “என்னாத்துக்கு இன்னும் நிக்கிற? வழிய வுடு” என்கிற பார்வைதான் கிடைக்கும்!! :-))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!