வியாழன், 25 அக்டோபர், 2012

கான கலாதரர் மதுர மணி

           
இன்று அவருக்கு நூற்று ஒன்றாவது பிறந்தநாள். ஆமாம். அவர் பிறந்தது, அக்டோபர் இருபத்தைந்து, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு. யாரும் எங்கும் நூற்றாண்டு விழா எதுவும் கொண்டாடியதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தேழாம் ஆண்டிலிருந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டு வரை, சங்கீத உலகில் கொடி கட்டிப் பறந்த பெயர் மதுரை மணி. 
  
இயற்பெயர்: சுப்ரமணியன். 

தந்தை பெயர் எம் எஸ் ராமஸ்வாமி. 

தாய் பெயர் சுப்புலட்சுமி. 

இவரின் தந்தையாராகிய திரு ராமஸ்வாமி அவர்களின் சகோதரர், மதுரை புஷ்பவனம். இவரும் சங்கீத உலகின் முடி சூடா மன்னர்களில் ஒருவர். 

மதுரை மணி சங்கீதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது தன்னுடைய ஒன்பதாவது வயதில். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தேழாம் ஆண்டில், ஆவடி காங்கிரஸ் மாநாட்டில், கர்நாடக சங்கீதம் பற்றிய விரிவுரை (எம் எஸ் ராமஸ்வாமி) செயல் விளக்கம் (மதுரை மணி) நிகழ்ச்சியில், இவருடைய தந்தையும் இவரும் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்றனர்.  

மதுரை மணி அவர்கள் தன்னுடைய உடல் நோய் காரணமாக, திருமணம் செய்துகொள்ளவில்லை. மேடைக் கச்சேரிகளில் தன்னுடைய சகோதரியின் கணவர் திரு T S வேம்பு ஐயர் (கர்நாடக இசைக் கலைஞர் திரு T V சங்கரநாராயணன் அவர்களின் தந்தை) அவர்களுடன் சேர்ந்து பல கச்சேரிகள் செய்துள்ளார். 
  
மேடையில் மதுரை மணி அவர்கள் பாடும் பொழுது, ரசிகர்கள் அனைவரும் கண்களை மூடி, தலையை ஆட்டியபடி அமர்ந்து கேட்பார்கள் என்று எங்கள் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். 

ராக ஆலாபனை, நிரவல்கள், கற்பனை ஸ்வரங்கள் இவருடைய தனிச் சிறப்பு. 

அந்தக் காலத்தில், மேடையில் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்று கல்கி போன்ற பல தமிழ் அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, பல பாடகர்கள் மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களையும் பாட ஆரம்பித்தனர். மதுரை மணி அவர்கள், பாரதியார் பாடல்கள், பாபநாசம் சிவன் பாடல்கள், அருணாச்சலக் கவிராயர் பாடல்கள் என்று பல தமிழ்ப் பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடியவர். 
   
மதுரை மணி அவர்களுக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை உண்டு. அவர் சார்லி சாப்ளின் நகைச்சுவை நடிப்பை மிகவும் ரசிப்பாராம். 

பெற்ற பட்டங்கள்: 

1944: கான கலாதரர் 

1959: சங்கீத கலாநிதி 

1960: ஜனாதிபதி விருது. 

1962: இசைப் பேரறிஞர்.

மயிலையில் முசிறி சுப்ரமணியம் சாலை உள்ளது போல, இவர் வாழ்ந்த வீடு இருக்கின்ற சாலைக்கு 'கான கலாதரர் மணி சாலை' என்று பெயரிட்டால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனை. அரசு கவனிக்குமா? 

இன்றைக்குப் பொருத்தமான பாடலை, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவர் பாடியதை, இங்கே கேளுங்கள்:  
    

15 கருத்துகள்:

  1. காஞ்சி மாமுனிவர் பெரியவாளுக்கு மணி அய்யரின் பாட்டு என்றால் உயிர்.

    பிரபல எழுத்தாளர் பரணீதரன் அவர்கள் பெரியவாளுடன் இருந்தபோது மணி அய்யரின் கச்சேரியை பற்றி எழுதியதாவது:

    ஒரு சமயம் சென்னை தியாகராய நகரில் மதுரை மணி அய்யரின் கச்சேரி ஒரு மண்டபத்தில் நடந்தது. சுமார் 200 ரசிகர்கள் மெய் மறந்து அய்யரின் கச்சேரியை கேட்கிறார்கள். மணி அய்யருக்கு அப்போது உடல் நலம் குன்றி, கண் பார்வைகள் நலிந்து போன சமயம்.

    கச்சேரியின்போது மகா பெரியவாள் தனக்கு முன்பு தட்டில் வைத்திருந்த ஆரஞ்ச் பழத்தின் சுளைகளை எடுத்துவிட்டு அதன் மூடியால் தரையில் மணி அய்யரின் பாட்டுக்கு தாளம் போட்டு ரசிக்கிறார்.

    கச்சேரி முடிந்ததும் மணி அய்யர் ” நான் பாடும்போது லயம் தப்பாமல் தாளம் போட்டு வந்தாரே, அவர் யார்?” என்று கேட்க, உடன் பாடியவர் மகாபெரியவாள் தான் என்று சொல்ல மணி அய்யர் தன்னை அறியாமல் “கைலாசநாதா! கபாலீஸ்வரா! என் தெய்வத்தை பார்க்க முடியவில்லையே” என்றாராம்.

    இதை கேட்ட அத்தனை ரசிகர்களின் கண்களில் தாரையாக கண்ணீர் வந்தது என்று தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார்.

    ஒரு சமயம் நாட்டில், பஞ்சம் பட்டினி ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டபோது பெரியவாள் மதுரை மணி அய்யரிடம் ” நீ கச்சேரியில் கோளறு பதிகம் பாடு, நவகிரக கீர்த்தனைகளை பாடு” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்று கடைசிவரை தன் கச்சேரியின்போது அவைகளைப் பாடாமல் இருக்கமாட்டார்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பகிர்வு... நன்றி...

    பாடல் வரவில்லை... பதிவேற்றிய site-ல் public-யை select செய்யவும்... பிறகு உங்கள் blogger gmail account (& All accounts)-ல் வெளி வந்து தளத்தில் பரிசோதிக்கவும்...

    dindiguldhanabalan@yahoo.com

    பதிலளிநீக்கு
  3. தற்போது அமெரிக்காவில் கச்சேரி டூர் செய்கிறார் டி வி சங்கரநாராயணன் அவர்கள். Celebrating 100 years of Madura Mani Iyer என்ற கான்செப்டில்.

    பதிலளிநீக்கு
  4. மதுரை மணி அய்யரின் ஆலாபனைக‌ள் மிகவும் பிரசித்தம் அறுபதுகளில். சின்னஞ்சிறுமியாக அதையெல்லாம் கேட்டு பிரமித்த பழைய நினைவலைகளை தட்டியெழுப்பியது உங்களின் அருமையான‌ பதிவு.

    பதிலளிநீக்கு
  5. அவரது நாத தனுமனிசம் சங்கரம்
    பாடல் ரிகார்ட் தேயும் வரை கேட்டிருக்கிறேன்.
    பாடல்கலைக் கற்றுக் கொண்டதே இதுபோன்ற ஒலிப்பதிவுகளிலிருந்துதான்.
    மனிதர்களுக்கு மறதி வருவது கொடியது. காதிற்கு இனிமை தந்தவர்களை நினைத்துப் பாராட்டலாமே. நன்றி எங்கள்ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  6. வெள்ளைத்தாமரையை மிக மிக மிக ரசித்தேன். நன்றி கௌதமன்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு சமயம் நாட்டில், பஞ்சம் பட்டினி ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டபோது பெரியவாள் மதுரை மணி அய்யரிடம் ” நீ கச்சேரியில் கோளறு பதிகம் பாடு, நவகிரக கீர்த்தனைகளை பாடு” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்று கடைசிவரை தன் கச்சேரியின்போது அவைகளைப் பாடாமல் இருக்கமாட்டார்.//

    ஆமாம், இது குறித்து நானும் கேள்விப் பட்டிருக்கேன். அஷ்ட கிரஹ சேர்க்கையின் போது கூட கோளறு பதிகம் படிக்கச் சொன்னார்கள். இந்தப் பதிவு கண்களிலே படாமல் ஏமாற்றிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக் கண்டு பிடிச்சேன். எனக்கு அப்டேட் நாளைக்குத் தான் ஆகும். :P :P

    பதிலளிநீக்கு
  8. பாட்டு முழுசும் கேட்டேன். நன்றாக இருந்ததுனு சொல்றது சரியில்லை. அதுவும் பாட்டில் அ, ஆ வே தெரியாத நான். ரசித்தேன். அருமையான குரலை மீண்டும் மீண்டும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  9. பாட்டை ரசித்து கண்கலங்கி போனேன். மிகவும் நன்றி எங்கள் ப்ளாக்.
    மதுரை மணி ஐயர் பெயரை கேட்டாலே எனக்கு என் அப்பா நினைவுதான் வரும். என் அப்பா மூலம்தான் இவர் பாடல்கள் எல்லாம் எனக்கு அறிமுகமானது. மணி ஐயர் பாடலை கேட்கும்போது பரவசத்தில் என் அப்பாவின் உடல் நடுங்குவதையும், கண் கலங்குவதையும் நான் பல முறை பார்த்திருக்கிறேன். அவரை பற்றி பேசினாலே என் அப்பா உணர்ச்சி வசப்பட்டு விடுவார். அப்படி ஒரு அபிமானம். இடம் இல்லாமல் மரக்கிளைகளின் மேல் நின்று கொண்டு இவர் பாட்டை ரசிப்பார்களாம் இவர் ரசிகர்கள்.
    பாலஹனுமான் கமெண்ட் படித்தபோது மனம் நெகிழ்ந்து அழுகையே வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  10. மதுரை மணி ஐயர் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்! அவரை பற்றிய பல தகவல்களை சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி! நல்ல பயனுள்ள பகிர்வு!

    பதிலளிநீக்கு
  11. மதுரை மணி ஐயரின் பாட்டுக்கள் எப்பவுமெ சுகமானவை அவரைப்பற்றிய பலதகவல்களுடன் பகிருவு ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  12. சாலைப் பெயர் ஐடியாவை முதலமைச்சருக்கு எழுதியனுப்புங்களேன்? நல்ல யோசனை.
    இசை வித்தகர் மதுரை மணி என்பது கான...வை விட மேல்.

    பதிலளிநீக்கு
  13. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6632.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  14. அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. Sri Madurai Mani Iyer Centenary was grandly celebrated at Bharatiya Vidya Bhavan on 28th October 2012. The programme was a great success. Leading Mani Iyer Maddy Sri V.K.Viswanathan and Cleveland VV.Sundaram were the prinicipal organisers assisted by a dedicated team of volunteers from among fans of Sri MMI. Sri V.K.Viswanathan compered and conducted the proceedings in an informal manner,displaying indefatigable enthusiasm.

    The talks that followed were excellent. Dr.S. A.K.Durga dwelt on the voice aspect of Sri MMI,hitherto unexplored. Dr.Narmada demonstrated on her violin some of the unique touches typical of Madurai Mani Iyer. She also recalled how MMI provided opportunities to the accompanists to shine in their own right. One felt that MMI would have played the violin just like Narmadha demonstrated, had he been a violinist. Sri K.S.Kalidas took up for analysis the Layam aspect of MMI. Sri Ravikiran spoke of MMI’s appeal to connoisseur and layman alike. The legendary CLEVELAND Sri Sundaram spoke on how Mani Iyer was a pioneer in the act of making his music available to all and sundry which made them flock to his concerts having got a foretaste of it.

    All the talks delivered in a mix of excellent English and Tamil by scholars like Durga, Kalidas and Narmadha were very enlightening. Sri Ravikiran’s presentation was as ‘Bradmanesque’ as he found MMI’s music to be.

    The vocal recitals rendered by Sri R.Suryaprakash and Smt. Gayathri Girish were quite engrossing as they attempted to resurrect MMI to the extent possible.

    The publicity given for this program was different but effective as the hall was full most of the time. Apart from the ads in the hindu for 3days and 2 weeks in Mylapore Times and 1000 fliers at the Kapali Koil Prodosham on 27th, we virtually knocked on almost all doors about MMI function and so we had such emotional response! During the program. We could see a number of senior music artistes in the function. There were two tea breaks!

    It was a touching moment when Madras A. Kannan a nonagenarian Mridangist, made his way to the venue his face aglow with childlike delight. Immediately Sri. V K V announced his arrival to a standing ovation. And Sri. CLEVELAND Sundaram with his typical reverence for musicians announced that there is to be a function to honour the maestro of yester years sometime in December 2012.

    Momentos and Plaques were presented to various persons who contributed to MMI’s success. Descendants of the recipients received them in most cases. The recipients: S.R.D.Rajanna , dr.s.a.k.durga, sri.t.s.vembu iyer, tiruvenangadu sri. Jayaraman, smt.savitri ganesan,tiruvalangadu sri. Sundaresa iyer, mysore sri. T.chowdiah, sri. Mayavaram sri. Govindaraja pillai,sri V.Govindaswamy naicker,sri. Kumbakonam Rajamanikkam pillai,sri.M.S. Gopalakrishnan, sri.madras a.kannan, Sri.Palani Subramania Pillai,coimbatore Sri N.ramaswamy, sri. C.S.Murugabhoopathy,Alangudi Sri. Ramachandran,Sri.Guhan,Sri.Chitti Sundarajan,Sri. S.S. venkataraman, Dr. M. Narmadha, Sri. K.S. Kalidas, Sri. Yessel.Narasimhan, Sri. V.V.Sundaram,Sri. S.Venugopalan,Sri. EN.Renganathan,DR. V.K.Viswanathan,Smt. Srividya Ramasubramaniam, Sri. N.Ravikiran
    Copies of printed souvenir containing only articles about Sri MMI and A TWO SET DVD containing MMI recordings were distributed to the audience.

    Although the program lasted for a very long duration of seven hours, the tempo was sustained from beginning to end.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!