இறப்பு என்பது என்ன? ஆன்மாவை நாம் காண முடிவதில்லை, உடலைத்தான் காண்கிறோம். அப்படியென்றால் ஆன்மா எங்கு சென்றிருக்கும்? உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. அத்வைத கோட்பாடு பிரகாரம் ஆன்மா பரமாத்மாவின் ஒரு பகுதியே. உடல் என்னும் கூட்டை நீங்கும் ஆன்மா பரமாத்மாவை சென்றடையும் அடுத்த பிறவி நேரும் வரை. இது என்னுடைய புரிதல்.

கடந்த புதன்கிழமை (நேற்று அல்ல!) பதிவில் JKC இந்தக் கேள்வியைக் கேட்ட மறுநாள் நான் 'உளவுக்கு ஆயிரம் கண்கள்' புத்தகம் முடித்து அடுத்த புத்தகத்தை எடுத்தேன்.
படித்துக் கொண்டு வரும்போதே JKC யின் கேள்வி மனதில் நிழலாடியது. காப்பிரைட் பிரச்னையால் புத்தகத்திலிருந்து அப்படியே போடமுடியாது. படித்ததிலிருந்து சில பகுதிகளை சுருக்குகிறேன். பாதி புத்தகம்தான் வந்திருக்கிறேன்.
பிறப்பும் இறப்பும் ஆத்மாவின் பயணங்கள் ஒரு உடலை தேர்வு செய்து ஆத்மா அந்த உடலுக்குள் நுழைவது பிறப்பு. நோயால் அல்லது மூப்பால் உபயோகமற்று போன அந்த உடலை விட்டு ஆத்மா வெளியேறுவது இறப்பு. (இது 'சட்டையை மாற்றும் ஆத்மா' கீதை வாசகத்துக்கு உதாரணம்)
வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் முற்பிறப்பு மறு பிறவி என்பதையெல்லாம் பற்றி ஆராய்ச்சி செய்தபோது சில விஷயங்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆன்மா தான் போக வேண்டிய உடலுக்காக காத்திருக்குமாம். ஒரு சில சதிக் காரணங்களால் ஆத்மா பழைய உடலை விட்டு நீங்கியபின், மறுபடியும் அந்த குடும்பத்தில் சென்று பிறக்கும் காலத்திற்காக காத்திருக்குமாம். இடையில் வரும் வாய்ப்புகளை உதறிவிட்டு, அந்த குடும்பத்தில் பிறந்து பழிவாங்குவதற்கு தயாராகுமாம்
சாத்யாரணமாக ஆத்மாவுக்கு உடனே மறுபிறப்புக்கான வாய்ப்பு கிடைக்கலாம். ஐந்து வருடங்களாக பார்க்கலாம். அதற்கு மேலும் கூட ஆன்மா காத்திருக்கும் சந்தர்ப்பங்களும் உண்டாம். அதே போல நன்மைகள் அதிகம் செய்திருந்தால் சொர்க்கம், தீமைகள் அதிகம் செய்திருந்தால் நரகம் என்றொரு கருத்து நிலவுகிறது.
ஆனால் இந்த ஆராய்ச்சியின் விளைவுகளாக பார்க்கும்போது எந்த நாளில் நன்மையும் தீமையும் ஒரே அளவில் இருந்து 'டிரா' ஆகிறதோ (!) அன்றுதான் மறுபடியும் பிறப்பு எய்தாத நிலை வருமாம். மற்றபடி நன்மைகள் அதிகம் இருந்தாலும் மறுபிறப்பு உண்டு... தீமைகள் அதிகம் செய்தாலும் மறுபிறப்பு உண்டு. இவைகளை எல்லாம் மறுபிறப்பை நம்பாத வெளிநாட்டு கிறித்துவ ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் சொல்வது.
மனிதன் மனிதனாகவே பிறக்க வேண்டும் என்று கட்டாயம் அல்ல. தீமைகள் அதிகம் செய்திருந்தால் ஆறறிவிலிருந்து ஐந்தறிவாகவோ அதற்கும் கீழோ பிறப்பெடுத்தால் அது ஆன்ம வீழ்ச்சி என்று சொல்கிறார்கள். அதேபோல செடிகொடிகளோ, புழுக்களோ ஐந்தறிவு ஜீவன்களாக பிறப்பெடுத்தால் அது ஆத்மாவின் உயர்ச்சி என்றும் சொல்கிறார்கள். கர்மாவை பொறுத்துதான் மறுபிறப்புகள் அமையும்.
சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா. சஞ்சித கர்மாவில் மனிதன் தலையிடவே முடியாது. அது என்ன நடக்குமோ நடந்தே தீரும். பிராரப்த தர்மாவில் சில விஷயங்களில் தலையிட நமக்கு உரிமை ஏற்படுகிறது. அதன் மூலம் திருந்தி நல்லவனாக வாழ்வதற்கோ, இல்லை மேலும் மேலும் கெடுதல்கள் செய்து தீயவன் ஆவதற்கோ மனிதனால் முடிகிறது. இந்தப் பிராரப்த கர்மாவைப் பொறுத்துதான் ஆகாம்ய கர்மா நடைபெறுகிறது.
எப்போதும் நற்சிந்தையுடன் நற்செயல்களை செய்யும்போது கர்மவினைகளால் நாம் அதிகம் பாதிப்படைய வேண்டியது இல்லை. இதுதான் நமது மறுபிறவிக்கும் அங்கு அமையப்போகும் நிலைக்கும் காரணமாகிறது. கர்மாவை தீர்க்க ஏற்பட்ட பிறவியில் சில சமயம் அதற்கான வழிவகைகள் எதுவுமே செய்யாமல் வாழ்க்கை பயணம் சாதாரணமாக அமைந்து விடுவதும் உண்டு. இதற்கு விளக்கம் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை மூலம் விளக்குகிறார். தெருக்கூத்து பார்க்கச் சென்ற ஒரு பாமரன் பற்றி. அவன் படுத்துக்கொண்டு ஓய்வாக தெருக்கூத்து பார்க்க ஒரு பாயுடன் செல்பவன் தெருக்கூத்து ஆரம்பிக்காத நிலையில் தூங்கிவிடுகிறான். எழுந்து பார்க்கும் போது தெருக்கூத்து முடிந்து விடுகிறது. பாயை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறான். அந்த பாய் தான் கர்மா என்கிற என்கிறார்.
"இந்த உலகத்தில் ஒருவன் துன்பமாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதற்கு காரணம் அவன் செய்த பாவம்தான் என்பது எல்லா நேரத்திலும் பொருந்தாது. சில சமயங்களில் ஒருவன் மேல்நிலைக்கு உயர்வதற்கும், அவன் ஆன்மாவை பக்குவப்படுத்துவதற்கும் இறைவன் துன்பங்களை தரும் சோதனைகளைத் தருவதுண்டு" என்பது அரவிந்தர் வாக்கு. ஆக, எல்லோருமே இதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். அரவிந்தருக்கு விவேகானந்தரின் ஆத்மா வந்து உபதேசித்ததாம், 'அரசியலை விட்டு ஆன்மீகத்தைப் பார்' என்று.
'அதே போல உலகில் ஒருவன் தொடர்ந்து இன்பங்களே அனுபவித்து வருவது அவன் நல்லவன் என்பதனால் மட்டும் அல்ல, போக வாழ்க்கை மூலம் அவன் மேலும் மேலும் பாவங்களை செய்து மீள முடியாதவாறு வீழ்ச்சி அடையவும் அம்மாதிரி நடக்கலாம்' என்று மகான்கள் கூறுகிறார்கள் பொதுவாக நான் எனது என்று தன்னை கர்த்தாவாக எண்ணிக் கொண்டு செயல்களை செய்யாத பொழுது அவனை கர்மவினைகள் பாதிப்பதில்லை என்கிறார்கள் செய்பவன் நான் என்னால் தான் இது நடக்கிறது என்னும் புத்தியை விட்டுவிட்டு கர்மங்களில் பற்றற்று அவற்றின் பலனையும் எதிர்பாராமல் செயலாற்றுபவனை கர்மா பாதிப்பதில்லை என்பது ரமணர் அறிவுரையின் சாரம். கண் காது மூக்கு போன்ற உபகரணங்கள் இல்லாமலேயே அவை செய்யக்கூடிய ஐம்புலனையும் உணரும் நிலை ஆவி நிலையில் சாத்தியமாகிறது.
உடலின் அழிவு மரணம் என்று கருதப்பட்டாலும் ஆன்மா அழிவதில்லை. அது பரிபக்குவ நிலையை அடையும் வரை. அதாவது அந்த ஆன்மா தோன்றியதற்கான காரண காரியங்களை அறிந்து. அவை அனைத்தும் நிறைவேறும் வரை அது மறுபடி பிறந்து இறந்து அழிந்து கொண்டுதான் இருக்கும். இது பற்றி கடோபநிஷத்திலும் வருகிறது.
இவற்றில் பெரும்பாலான கருத்துகள் நம் வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் வந்தது போல இருந்தாலும், இவை ஹெலன் வெம்பாக் என்பவர் வரவழைத்த ரூதர்போர்ட் என்பவர் ஆவி சொன்னவை.
நான் இதில் பெரும்பாலானவற்றை 'ஒரு யோகியின் சுயசரிதை' புத்தகத்திலும் படித்திருக்கிறேன். பாவம் செய்த ஆத்மாக்கள் இருள் வழியிலும், நல்ல ஆத்மாக்கள் ஒளி வழியிலும் பயணிக்கும்.
ஆவிகள் நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்துக்கு உடனே போகமுடியும், ஒத்த குணமுடையவர்களுடன் கூட்டமாக சேர்ந்து வாழும், நம்மிடையேவே உலாவும், ஆனால் நம் கண்களுக்கு புலப்படாது என்பதெல்லாம் அந்த வெளிநாட்டு ஆவியின் உபரித் தகவல்கள்.
நாம் காணும் பெரும்பாலான கனவின் புரியாத நிகழ்வுகள் கூட முற்பிறப்பின் நினைவுகளின் தாக்கமே என்கிறார் மறைமலை அடிகள். இதைப் படித்ததும், இனி என் கனவுகளை நெருக்கமாக தொடராகிப்போகிறேன்! போலவே, பாஸ், மகன்களின் கனவுகளையும், என்ன வந்தது என்று கேட்டு, ஏதாவது லீட் கிடைக்கிறதா என்றும் பார்க்கப் போகிறேன்!
டாக்டர் வால்டர் செம்கிவ். அமெரிக்க ஆராய்ச்சியாளரான இவர் மகாத்மா காந்தி மறுபிறப்பெடுத்திருக்கிறார் என்றும் அமெரிக்காவில் சமூக ஆர்வலராக வாழும் வான் ஜோன்ஸ் தான் அவர் என்றும் கூறுகிறார். உருவாற்றுமை, நடத்தைகளில் ஒற்றுமை இருக்கிறது என்கிறார். அவருக்கு துணை இருப்பது அதுன் ரே என்கிற மூவாயிரம் ஆண்டு பழமையான மத குருவின் ஆவியாம். இதுவரை மறுபிறவி எடுக்காத அந்த மகா ஆவியையே தனது வழிகாட்டும் ஆவியாகவைத்துக் கொண்டு பல்வேறு சிக்கல்களுக்கு விடை அறிந்து உள்ளாராம் டாக்டர் வால்டர். 2009 இல் இந்தியாவிற்கு வந்திருக்கிறார் 'ஆரிஜின் ஆஃப் தி சவுல் அண்ட் பர்பஸ் ஆஃப் ரீ இன்கார்னேஷன்' என்ற புத்தகத்தை இந்தியாவில் வெளியிட்டார், மகாத்மா காந்தியின் மறுபிறப்பு உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் எழுதியிருக்கும் புத்தகம் 'Born again'.
கீழே கொடுத்துள்ள புத்தகங்களை இணையத்தில் டவுன்லோட் செய்யலாம். குறிப்பாக ஆர்ச்சிவ்'' தளத்திலிருந்து. இறக்கி படிக்கும் பொறுமை உங்களுக்கிருந்தால் சுவாரஸ்யத்துக்கு கியாரண்ட்டி.
Life before life - Jim b. Tucker
You have been here - Edith fiore
A world beyond - Ruth mondkomeri
Recalling past lives - The evidence from hypnosis - Dr. Helen Wambach
Life before Life - same author
Return from heaven,
Children's past lives - both by Carol Bowman
Twenty cases suggestive of Reincarnation - Ian Stevenson
நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் இருக்கும் ஒரு நிகழ்வை கூகுள் செய்து எடுத்தேன். அந்நிகழ்வின் கேஸ் ரிப்போர்ட் இங்கே சென்று படிக்கலாம்.
எதற்குமே மறுபக்கம், அல்லது அதை எதிர்ப்பவர்கள் இருப்பார்கள் அல்லவா? இதோ அப்படி ஒன்று... பெரும்பாலும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இது போன்ற மறுபிறப்பு சமாச்சாரங்களை ஒத்துக்கொள்வதில்லை.
கீழே உள்ள படத்தை கேமிரானால் பாருங்கள். அது சில சுவாரஸ்யமான பக்கங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும்!
=================================================================================================
நீரில் அணையா நெருப்பு
வீசப்பட்ட வார்த்தைகள்
பதிலுக்காக
காத்திருக்கின்றன
வார்த்தைகளின் வெம்மையில்
கருகிப்போன பதில்கள்
கண்கலங்கி நிற்கின்றன
வரப்போகும் பதிலைப்
பொறுத்து
இன்னும் அனல் வீசக்
காத்திருக்கின்றன சில
வார்த்தை நெருப்புகள்
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
அமுதசுரபியில் வெளிவந்த `திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்` என்ற பகுதியிலிருந்து...
.............................. .
*தொடர்ந்து தன் துறையில் முத்திரை பதிப்பவர் என்று யாரைச் சொல்லலாம்?
என். கேசவன், கன்னியாகுமரி.
அஞ்சல் அலுவலரை!
...
*ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளை அடக்க பெண்கள் ஏன் முன்வருவதில்லை?
எஸ்.மோகன், கோவில்பட்டி
எப்படியும் திருமணத்திற்குப் பின் காளைகளை அடக்கப் போவது தாங்கள் தானே என்ற தன்னம்பிக்கை காரணமாக இருக்கலாம்!
...
*கிரேசி மோகன் நகைச்சுவையில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?
என். முத்துலட்சுமி, கோவை.
`சிவாஜி ஓவர் ஆக்டிங்கா?` என்ற கேள்விக்கு `சிவாஜியோடு ஆக்டிங் ஓவர்!` என்று அவர் சொன்ன பதில்.
...
*ஆன்மிக உணர்வு பெருகி வருகிறது, ஆனால் அசைவம் சாப்பிடுவோர் எண்ணிக்கை குறையவில்லையே?
எஸ். சண்முகம், திருவண்ணாமலை.
வள்ளலாரையும் புலால் உண்ணாமை எழுதிய வள்ளுவரையும் தொடர்ந்து உயர்த்திப் பிடித்தால், எதிர்காலத்தில் அசைவ உணவு உண்போரின் எண்ணிக்கை குறைந்து நீங்கள் `மட்டனற்ற` மகிழ்ச்சி அடைய வாய்ப்பு நேரலாம்!
...
*தற்போதைய தமிழ் சினிமாவில் நகைச்சுவை கேலிக் கூத்தாகிவிட்டது என்று காத்தாடி ராமமூர்த்தி கூறியிருப்பது பற்றி?
ஆர். குமரவேல், கும்பகோணம்.
நூறு சதவிகிதம் சரி. ரஜினி நடித்த பழைய தில்லுமுல்லு நம்மை எப்படியெல்லாம் ரசித்துச் சிரிக்க வைத்தது! அதே தில்லுமுல்லு அதே கதை. புதிய நடிகர்கள் நடித்து, புதிதாய்ப் படமெடுக்கப் பட்டு வெளிவந்தபோது அதில் இரட்டை அர்த்த வசனங்களையெல்லாம் சேர்த்து எப்படிக் கேலிக் கூத்தாக்கியிருந்தார்கள்! உதாரணங்கள் இன்னும் எத்தனையோ உண்டு.
...
*பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் சமையல் குறிப்புகளைச் செய்துபார்க்கலாமா?
ஆர். மல்லிகா, காஞ்சீபுரம்.
செய்து - பார்க்கலாம். செய்து சாப்பிடலாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!
...
*மாணவர்களை எதற்கெடுத்தாலும் தூண்டி விடுவது அவர்களது எதிர்காலத்திற்கு நல்லதா?
டி.என். ரங்கநாதன், திருவானைக் கோவில்
அவர்களது நிகழ்காலத்திற்கே கூட நல்லதல்ல!
...
*கருணை என்றால் என்ன விலை என்று கேட்பவர்களை என்ன செய்வது?
ஆர். அகமத், பொள்ளாச்சி.
காய்கறிக் கடைக்குப் போய் கருணைக் கிழங்கு கிலோ என்ன விலை என்று அவர்களையே விசாரிக்கச் சொல்லலாமே!
...
*அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை நைசாகத் தவிர்த்துவிடுவது ஏன்?
அ.முரளிதரன், மதுரை.
நைசாகத் தவிர்க்கவில்லை. வெளிப்படையாகவே தான் தவிர்க்கிறோம்! அமுதசுரபி அரசியல் பத்திரிகை அல்ல. கலை இலக்கியப் பத்திரிகை. அமுதசுரபிக்கு எல்லாக் கட்சியிலும் வாசகர்கள் இருக்கிறார்கள்.
...
*விதியை மதியால் வென்றவர்கள் உலகில் இருக்கிறார்களா?
தி. மதிராஜா, சின்னபுங்கனேரி.
ஒருவர் கூட இல்லை. ஏனென்றால் விதியை மதியால் வென்றால், அப்படி வெல்லப்பட்ட பின் உள்ள நிலைதான் அவர் விதி என்றாகிறது! `எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும், தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும், வழுவிப் பின்னால் நீங்கியொரு வார்த்தையேனும் மாற்றிடுமோ? அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?` எனக் கேட்கிறார் உமர்கயாம். (கவிமணி மொழியாக்கம்.)
...
*எத்தனையோ நிகழ்ச்சிகள் நாட்டில் நடந்தாலும் கொடிகட்டிப் பறக்கிற உயர்தர நிகழ்ச்சி என்று எதைச் சொல்லலாம்?
என். ஆராவமுதன், திருச்சி.
சுதந்திர தின நிகழ்ச்சியையும் குடியரசு தின நிகழ்ச்சியையும் கொடிகட்டிப் பறக்கிற நிகழ்ச்சிகள் என்று கட்டாயமாகச் சொல்லலாம்!
...
*கொட்டித் தீர்த்த கனமழையின் போது உங்கள் நெஞ்சில் ஓடிய மழையைப் பற்றிய கவிதை வரிகள்?
கோ. அற்புதராஜ், பூவிருந்தவல்லி, சென்னை.
`மழை பாடுகின்றது. அது பலகோடித் தந்திகள் உடையதோர் இசைக்கருவி!` என்ற பாரதியின் வசன கவிதை வரிகள்.
...
*தமிழின் தற்காலக் கவிதை இலக்கியத்தில் நீங்கள் பெரிதும் ரசித்த காதல் கவிதை?
எல். வெண்ணிலா, மதுரை.
கவிஞர் மீராவின் `கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்!` என்ற கவிதை நூலில் இடம்பெற்றுள்ள கண்பார்வை தொடர்பான ஓர் இனிய கற்பனை....
`அன்பே!
நீ என்னைத் தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் இதயத்தில் முள் பாய்ந்தது...
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்?
எங்கே இன்னொரு முறை பார்த்துவிடு!`
===========================================================================================
கந்தசாமி ஸார் இவரைப்பற்றி சொல்லி இருந்த பதிவில் நான் அதுபற்றி அளித்த பின்னூட்டத்திற்கு அவரே வந்து பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை! சாதாரணமாக சொல்கிறாரா, நீ கேட்டு எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை ன்னு சொல்கிறாரா என்று புரியவில்லை!
==============================================================================================
கேலக்ஸி சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டேன். இதுதான் கிடைத்தது!
கல்பனா என்ற பெயரை உடைய இந்தப் பெண் 'மின்சாரக் கண்ணா' பாடலை அதி அற்புதமாக ஒரிஜினல் போலவே பாடினார் என்று எல்லோரும் சிலாகித்திருந்தனர். என் கண்ணில் பட்டது...
================================================================================================
மண்டைக்கனம் இல்லாமல் இருக்க... காது நீளமாக.... வெட்கத்தினால் முகம் தாழ்கிறது என்று சொல்ல வைக்க...
அந்த ஜிமிக்கி!
==============================================================================================
============================================================================================
படித்த வித்யாசமான செய்தி..
கோலாரை சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை கண்டிராத புது வகை ரத்தம்
கோலார்: உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை, கோலாரின் 38 வயது பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. ர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், கடந்த ஆண்டு இதய நோயால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது ரத்த வகை, 'ஓ பாசிட்டிவ்' என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், அப்பெண்ணின் ரத்தத்தை பரிசோதித்த போது, அதன் வகை குறித்து தெளிவாக தெரியவில்லை. அவசர நிலையை உணர்ந்த டாக்டர்கள், வேறு வழியின்றி மிகுந்த எச்சரிக்கையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதற்கிடையில், அவரது ரத்த மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கும் அவரது ரத்த வகை புதுமையாக இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள ஐ.பி.ஜி.ஆர்.எல்., எனும் சர்வதேச ரத்தப்பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. இதன் முடிவுகள் தொடர்பாக, ரோட்டரி பெங்களூரு டி.டி.கே., ரத்த மையத்தைச் சேர்ந்த டாக்டர் அங்கித் மாத்துார் கூறியதாவது: கோலார் பெண்ணுக்கு இருப்பது, புது வகை ரத்தம் என, ஐ.பி.ஜி.ஆர்.எல்., அங்கீகரித்துள்ளது. உலகிலேயே இந்த ரத்தம், வேறு யாருக்கும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் இந்த வகை ரத்தம் இல்லை. கோலார் பெண்ணின் ரத்தம் குறித்து, பிரிட்டனில் 10 மாதங்களாக விரிவான ஆராய்ச்சி செய்யப்பட்டது. மூலக்கூறு பரிசோதனையில் இது புதிய ரத்த வகை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரத்த வகைக்கு, சி.ஆர்.ஐ.பி., என, ஐ.பி.ஜி.ஆர்.எல்., பெயர் சூட்டியுள்ளது. இதில், சி.ஆர்., என்பது குரோமர் என்பதை குறிக்கும். ஐ.பி., என்பது இந்தியா, பெங்களூரை குறிக்கும். கடந்த ஜூனில் இத்தாலியின் மிலனில் நடந்த சர்வதேச ரத்த மாற்ற சங்கத்தின் ஐ.எஸ்.பி.டி., 35வது பிராந்திய மாநாட்டில், புதிய வகை ரத்தம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஐ.பி.ஜி.ஆர்.எல்., வெளியிட்டது.
=============================================================================================
பொக்கிஷம் :
இந்தக் காலத்தில் இவ்வளவு சுவாரஸ்யமாக புத்தகம் படிப்பவர் இருக்கிறார்களா ஃப்ரெண்ட்ஸ்? நாம் சனிக்கிழமைகளில் வெளியிடும் நான் படிச்ச கதை போல 1964 65 களிலேயே விகடனில் வந்த எனக்குப் பிடிச்ச புத்தகம் பகுதிக்கான சிக்நேச்சர் படம்.

முன் ஜென்மம், மறு பிறவி குறித்து கே.ஜி.ஜி.சாருக்கு கேள்வி அனுப்பிவிட்டு, எ.பி.யைத் திறந்தால், மறு பிறவி குறித்த கட்டுரை, என்ன ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை!
பதிலளிநீக்கு