திங்கள், 18 பிப்ரவரி, 2013

வானொலி நினைவுகள்.


அந்நாட்களின் மூன்று (என்று சொல்லலாமா) பெரிய பொழுது போக்குகளில் வானொலிக்கு முக்கிய இடம். மற்ற இரண்டு சினிமா, பத்திரிகைகள்!

                                                  

வீட்டின் உயரமான இடத்தில் வைக்கப் பட்டிருக்கும் எங்கள் வீட்டு ஹாலண்ட் பிலிப்ஸ் வால்வ் ரேடியோ.  எங்களுக்கு எட்டக் கூடாதாம்! அப்பா அலுவலகம் செல்லும்வரை அது எங்களுக்கு எட்டாதுதான். 

                                                       

அப்புறம் மேஜை மேலே ஸ்டூல் போட்டு ஏறி ரேடியோவைக் கைப்பற்றியபின் எங்கள் ராஜ்ஜியம்தான். பக்கத்து வீட்டு ராஜத்தின் 10 வயது சித்தி மகள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, ஈரக் கைய்களைப் பாவாடையில் துடைத்தபடி வந்துவிடுவாள்! அப்புறம் அன்பு சகோதரர்கள் ஒலிச்சித்திரம் கேட்டு அழுவது தினசரி வாடிக்கை. அப்புறம் செல்வராஜ், ராஜா, அம்பி, சந்தனத்துரை என்று ஒரு பட்டாளம் கூடி விடும்! "நீங்கள் கேட்க இருப்பது..." என்று கேப் விடுவார் கே எஸ் ராஜா. "வசந்தமாளிகை" என்று சிவாஜியின் குரல் ஒலிக்கும். தொடர்ந்து ஒலிக்கும் கே எஸ் ராஜா குரல்..."திரைவிருந்து"....
                                                      
               

எங்கள் தங்க ராஜா பட முடிவை தயவு செய்து படம் பார்த்தவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லி விடாதீர்கள் என்று கெஞ்சுவார்!  காட்சியும் கானமும் என்று ஒரு நிகழ்ச்சி. ஒரு பாடலைப் போடுமுன் அந்தப் பாட்டுக்கு முன்னால் வரும் வசனங்களை வெளியிட்டு விட்டு, பாட்டு போடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை முழுநீளத் திரைப்பட ஒலிச்சித்திரங்கள்... நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, பின்னாட்களில் சினிமாவை வீட்டுக் கூடத்திலேயே காண்போம் என்று!

வானொலி நேயர்களுக்கு சிலோன் ரேடியோ ஒரு வரப்பிரசாதம். இந்தியாவில், தமிழகத்தில் கேட்க முடியாத பல பாடல்கள் சிலோன் ரேடியோவில் கேட்க முடியும். பிரபல நடிகர்களின் பேட்டிகள், பாட்டுக்குப் பாட்டு என்று யோசித்து யோசித்து பல புதுமையான, ரசிக்க வைத்த நிகழ்ச்சிகள்.

வாரப் பத்திரிகைகளுக்கு இணையாக விற்பனை ஆகும் வானொலி. கொஞ்சம் லேட்டாகப் போனால் கடைகளில் காலியாகி விடும். அடுத்த பதினைந்து நாட்களுக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் வானொலியில் என்று விவரம் இருக்கும். கேட்க வேண்டிய நிகழ்ச்சிகளை முன்னாலேயே படித்து மார்க் செய்து வைப்போம். சில சமயம் நேயர் விருப்பத்தில் என்னென்ன பாடல்கள் போடப் போகிறார்கள் என்று படங்கள் பெயர் கூடப் போட்டிருக்கும். அடுத்த பாடல் என்று நாங்கள் சொல்வது சரியாக இருக்கும்போது தோழர்கள் வியப்பால் விழி விரிப்பார்கள்! 15 தினங்களுக்கு ஒருமுறை வெளிவரும் வானொலியில் அவ்வப்போது சிறுகதைகளும் வெளிவரும்.
                                              

மாநிலச் செய்திகள், தமிழில் செய்திகள்.. டெல்லி அஞ்சல் என்று செய்திகள் கவனமாகக் கேட்போம். சரோஜ் நாராயணசுவாமி குரலில் செய்திகள் பிரபலம்.

சுசித்ரா. சங்கர், ராஜு, ரவி, சுஜாதா வரும் ஹார்லிக்ஸ் குடும்பம், பினாகா கீத்மாலா, உங்கள் விருப்பம், ஒலிச்சித்திரம், ஞாயிறு நாடகங்கள் அகிலபாரத நாடக விழா, இசைக் கச்சேரிகள், ரங்காவளி, மன் சாஹே கீத், மனோ ரஞ்சன், சாயா கீத், சித்ரபட் சங்கீத், ஆப் கே ஃபர்மாயிஷ்...

ஏதோ காரணத்தால் வானொலி ரிப்பேராகி கடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த இடம் வெறுமையாக இருக்கும் நாட்கள் எங்களுக்கு வெறுமையானவை. 

மதுரை வானொலியில் என் குரலும் ஒலித்திருக்கிறது! இளையபாரதம் நிகழ்ச்சியில் கடிதங்களைப் படிக்க வைத்து பணம் கொடுத்து அனுப்பினார்கள். இளையபாரதம்... நேயர் கடிதங்கள்... வாசிப்பது / வாசித்தது என்று என் பெயர் சொன்னபோது அடைந்த புளங்காகிதம்! தெரு முழுக்கச் சொல்லி வைத்திருந்ததில் தெரு முழுக்க என் குரல் வீட்டுக்கு வீடு கேட்டது ஒரு த்ரில்!!
                                       

"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் குழுமியிருக்கும்..." என்று தொடங்கி அறிவிப்பைத் தொடங்கும் கே எஸ் ராஜா எங்கள் அபிமான அறிவிப்பாளர். அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம்.. சென்னையில் கூத்தபிரான் (வானொலி அண்ணா).

விவித் பாரதியின் நிகழ்ச்சிகள் இளையவர்களுக்கு விருந்து. 'இன்பமூட்டிடும் கோக கோலா... இன்பமூட்டிடும் ஜோக்... பிக்னிக்கு விருந்து பார்ட்டி... யாவருக்கும் மகிழ்வூட்டி... இன்பமூட்டிடும் கோக கோலா..' பாடல் இன்னும் நினைவில்! எழுபதுகளின் இறுதியில் இளையராஜா ஆட்சி வந்தபோது ரேடியோ படாத பாடு பட்டது. 

                                                       

வானொலியில் கிரிக்கெட் வர்ணனை  கேட்பது தனிக்கதை!

தினமணிக் கதிரில் சென்ற வருடம் வானொலியின் பவளவிழா ஆண்டு என்று படித்த போதும், ஆதி வெங்கட் கோவை2தில்லி பதிவில் வானொலி பற்றி எழுதியிருந்தபோதும், சமீபத்தில் இரண்டு இடத்தில் வானொலி பற்றிப் படித்ததும் (இரண்டில் இன்னொன்று ஜீவி சார் சமீபத்தியத் தொடரான கனவுப் பதிவில்... ஒன்று எது என்று நினைவிலில்லை!) வானொலி பற்றி நினைவுகளைப் பகிர வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. சொன்னது கொஞ்சம். சொல்லாதது நிறைய!

எங்கள் இளமை நினைவுகளில் வானொலிக்கு(ம்) தவிர்க்க முடியாத இடம்.


இதுவரை சொன்னது எங்கள் நினைவுகள்... இனி பின்னூட்டத்தில் உங்கள் நினைவுகள்....

41 கருத்துகள்:

  1. வெகு சுவாரஸ்யமான நினைவுகள்! என் காலத்தில் விவிதபாரதியில் உங்கள் விருப்ப பாடல்களை கேட்டுவிட்டுத்தான் மாமா வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வேன்! அப்போதெல்லாம் 8.15 முதல் 9.30 வரை உங்கள் விருப்பம் ஒலிக்கும். இரவில் 8.15க்கு வரும் மேடை நாடகங்களும் வானொலி அண்ணா கூத்தபிரானின் சிறுவர் சோலையும் மறக்க முடியுமா? கிரிக்கெட் வர்ணணை தமிழில் கேட்க அப்போது அவ்வளவு அழகாக இருக்கும்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மதுரை வானொலியில் என் குரலும் ஒலித்திருக்கிறது! //

    கோவை வானொலியில் மகன் பள்ளி சிறுவர்களுடன் சென்று நாடகத்தில் பங்கேற்றார் ..

    வானொலி முன் அமர்ந்து குடும்பத்தோடு குதூகலமாகக் கேட்டோம் ..

    உறவினர்களுக்கு எல்லாம் நாடகம் ஒலிபரப்பாகும் நாள் ,நேரம் எல்லாம் போன் செய்து அறிவித்து கேட்கச்சொன்னோம் ..

    நாடகம் முடிந்து மகனுக்கு ஒரு பேனா பரிசு கிடைத்தது ..

    ரொம்ப் சந்தோஷமான மலரும் நினைவுகள் ..

    பதிலளிநீக்கு
  3. வானொலி. உண்மையாகவே ஒரு வரப் பிரசாதம். இன்றைய கணினி போல. வித்தியாசம் நின்று காதோடு வானொலி கேட்டோம்.
    இன்று உட்கார்ந்து கண்ணும் கையுமாக இணைந்திருக்கிறோம்.
    அடுத்த பாடல் கேட்கும் முன்னர் என்ற அறிவிப்பைச் செயும்போதே
    மனம் கும்மாளமிடும்.
    கடைசியாக வானொலியில் கேட்ட பாடல் சிப்பியிருக்குது முத்தும் இருக்குது. அதுவும்
    கே.எஸ் ராஜா வின் குரலில் தானோ!!எங்கள் காலை ஆகாஷ்வாணியின் கிழக்கிந்திய நேயர்களுக்கான
    ...தமிழ் ஒலிபரப்போடு ஆரம்பிக்கும்.எப்பொழுதும் இடம் பெறும் பாடல்,அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்.........
    இன்னோரு பாடல் ராஜசேவை (!!!) படத்தில் முடியாது இது முடியாது என்று வெளியில் சொல்லவும்
    தவிக்கிறேன்....:)கண்டசாலா பி.லீலா.
    சென்ன்னை வந்த பிறகு மெட்ராஸ் பி .ஆங்கில இசை பழகியது. விவித பாரதியின் எல்லா ஒலிபரப்புகளும்.
    வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இப்படி விரிந்தது உலகம். ட்ரான்ஸிஸ்டர் வந்த பிறகெ ஒவ்வொரு புதுவருடமும் காலை
    ஐந்தரை மணிக்குப் பிக் பென் ஓசையோடு ஹாப்பி நியூ யியர் கேட்பது
    ஒரு ஆராதனை பிபிசியில். சந்தோஷமான நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி, எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  4. வானொலி. உண்மையாகவே ஒரு வரப் பிரசாதம். இன்றைய கணினி போல. வித்தியாசம் நின்று காதோடு வானொலி கேட்டோம்.
    இன்று உட்கார்ந்து கண்ணும் கையுமாக இணைந்திருக்கிறோம்.
    அடுத்த பாடல் கேட்கும் முன்னர் என்ற அறிவிப்பைச் செயும்போதே
    மனம் கும்மாளமிடும்.
    கடைசியாக வானொலியில் கேட்ட பாடல் சிப்பியிருக்குது முத்தும் இருக்குது. அதுவும்
    கே.எஸ் ராஜா வின் குரலில் தானோ!!எங்கள் காலை ஆகாஷ்வாணியின் கிழக்கிந்திய நேயர்களுக்கான
    ...தமிழ் ஒலிபரப்போடு ஆரம்பிக்கும்.எப்பொழுதும் இடம் பெறும் பாடல்,அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்.........
    இன்னோரு பாடல் ராஜசேவை (!!!) படத்தில் முடியாது இது முடியாது என்று வெளியில் சொல்லவும்
    தவிக்கிறேன்....:)கண்டசாலா பி.லீலா.
    சென்ன்னை வந்த பிறகு மெட்ராஸ் பி .ஆங்கில இசை பழகியது. விவித பாரதியின் எல்லா ஒலிபரப்புகளும்.
    வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இப்படி விரிந்தது உலகம். ட்ரான்ஸிஸ்டர் வந்த பிறகெ ஒவ்வொரு புதுவருடமும் காலை
    ஐந்தரை மணிக்குப் பிக் பென் ஓசையோடு ஹாப்பி நியூ யியர் கேட்பது
    ஒரு ஆராதனை பிபிசியில். சந்தோஷமான நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி, எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான நினைவுகள். ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் ஒலிபரப்பாகும் திரைப்பட ஒலிச்சித்திரமும்,சிலோன் நிகழ்ச்சிகளும் இன்னும் மனதைவிட்டு அகலாது இருக்கிறது.

    “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சாமி” அவரின் குரல் காதுக்குள்ளேயே இருக்கு.

    “பேரென்ன லல்லி? ஃபேரன் லவ்வுலி” என்ற அந்த விளம்பரத்தை ஒரு நாளைக்கு 100 முறையாவது திரும்ப திரும்ப சொன்னது....

    வானொலி ---இனிமையான நினைவுகளை அசைபோட வைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    பதிலளிநீக்கு
  7. சுகமான பகிர்வு. ”என் இனிய தோழி” பதிவு எழுதிய போது தாங்கள் குறிப்பிட்டிருந்த பதிவு இது தானா? என்று கேட்க நினைத்தேன். கீழேயே பதிலை பார்த்து விட்டேன்...:)

    நான் தினமும் வானொலியோடு நாளை துவக்குகிறேன். இரவும் பாட்டுகளின் தாலாட்டோடு தான் உறங்கச் செல்கிறேன். இரவு ஹலோ FM ல் டைரியின் பக்கங்களை படிப்பவரின் குரல் வித்தியாசமாக, இதமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. இன்றும் கூட... இப்போதும் கூட... பாடல்கள் இல்லையெனில் பாலன் இல்லை...

    பதிலளிநீக்கு
  9. வானொலி பற்றிய இன்னொரு பதிவு திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் 'ஆகாசவாணி' என்ற தலைப்பில் எழுதியது.
    இணைப்பு இதோ: http://rajalakshmiparamasivam.blogspot.in/2013/02/blog-post_12.html

    இன்னொரு மறக்க முடியாத நிகழ்வு: நேயர் விருப்பம். ஒரு வாரம் எம்.ஜி.ஆர். அவர்களின் 'அழகிய தமிழ் மகள் இவள்' பாடல் முதலிடம் பெறும் - இத்தனை வாக்குகள் என்ற அறிவிப்புடன். அடுத்த வாரம் சிவாஜி அவர்களின் 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' முதலிடம் பெறும்.

    தியாகராஜ ஆராதனை வானொலி மூலம் கேட்டது மறக்க முடியாதது.

    தில்லியிலிருந்து வரும் ஆங்கிலச் செய்திகளை சுருக்கெழுத்தில் எழுதி பயிற்சி செய்தததை எப்படி மறப்பது?

    குழந்தைகளுக்கான 'பாப்பா மலர்' ரொம்பவும் விரும்பிக் கேட்ட நிகழ்ச்சி.

    அகிலனின் 'நெஞ்சின் அலைகள்' பலமுறை வானொலியில் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.

    அந்தக் காலத்துக்கே போய்விட்டேன்!

    பதிலளிநீக்கு
  10. இலங்கை வானொலி கேட்டு வளர்ந்தோம் நாங்கள். அது ஒரு பொற்காலம். நினைவுகளை மீட்டெடுத்தது பதிவு.

    பதிலளிநீக்கு
  11. இன்றும் இரவில் வானொலி கேட்ட படியே உறங்குவது என் பழக்கம். எனினும் சிறுவயது நினைவுகள் பசுமையானவை "செய்திகள் வாசிப்பது சரோத் நாராயண்சுவாமி" என்ற நிகழ்வுகள் மனதில் பதிந்து விட்டன.

    பதிலளிநீக்கு
  12. டேபிள் மேல் ஏறி ரேடியோ போடுவது கண் முன் நடப்பது போல் பதிவு எழுதியிருக்கிறீர்கள்.
    வானொலி அண்ணாவை மறக்க முடியுமா?என் பதிவில் நான் மறந்து தான் விட்டேன்.
    உங்கள் பதிவு என்னை நொடிப் பொழுதில் சிறு பெண்ணாக்கி விட்டது.

    நன்றி பகிர்விற்கு,

    பதிலளிநீக்கு
  13. பகிர்வு மலரும் நினைவுகளை தூண்டி விட்டு விட்டன.

    பதிலளிநீக்கு
  14. நிறைய நினைவுகள். வயலும் வாழ்வும் என் தினசரி நகைச்சுவைத் தேவையை நிறைவேற்றும். சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி நாட்களில் ஒருவர் 'ஆடு ராட்டே' என்று பாடுவார். சிரித்து மகிழ்வேன். டிரேன்சிஸ்டர் தான் எனக்குப் பழக்கம். திருச்சி தூத்துகுடி பாண்டிச்சேரி என்று முள்ளை நகர்த்தி நகர்த்தி எப்படியோ நிலையங்களைப் பிடித்துக் கேட்பது.. பிறகு ட்ரேன்சிஸ்டரை ஒவ்வொரு திசையாகத் திருப்பி வைத்து அலைவரிசை வலுக்கிறதா என்று பார்ப்பது.. those days!

    பதிலளிநீக்கு
  15. சிறு வயதில் வால்வு ரேடியோ, பின்னர் ட்ரான்சிஸ்டர், கையளவு ரேடியோ, மொபைல் வந்த பிறகு அதில் எஃப். எம். என ரேடியோ இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    அந்த வால்வு ரேடியோ எங்களிடம் மாட்டிக்கொண்டு அழுதிருக்கிறது!.... திருப்பித் திருப்பி, அதன் நாடாவே அறுந்து போயிருக்கிறது! அதைச் சரி செய்து வரும் வரை எங்களுக்கு திட்டும் தொடரும்! :))))

    இனிய நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வு!

    பதிலளிநீக்கு
  16. //எங்கள் இளமை நினைவுகளில் வானொலிக்கு(ம்) தவிர்க்க முடியாத இடம்.//
    மறுக்க முடியாத உண்மை.

    வானொலி பத்திரிகை பற்றி இதுவரை பார்த்ததும் இல்லை, கேள்விபட்டதும் இல்லை. சிலோன் -இல் பாடல் கேட்பது ஒரு வரப்ரசாதம். நேயர் விருப்பத்தில் 'என்னை யார் என்று எண்ணி எண்ணி' இந்த பாடல் ஒலிபரப்பாகாத நாளே இல்லை என்றுதான் கூற வேண்டும். விவித்பாரதி காலை ஒன்பதரை மணிக்கும் முடிந்து விடும். அடுத்த செகண்ட் மெட்ராஸ் பீ -யில் பத்து மணிக்குள் எண்ணி நான்கே பாடல் ஒலிபரப்பாகும். அதையும் கேட்டுவிட்டு சிலோன் சென்றால் அவ்வளவுதான். நாள் முழுக்க சலிக்காமல் பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்போம்.
    முதலில் வீட்டில் இருந்தது Murphy ரேடியோ தான். அது கடைசி மூச்சு வரை எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே இருந்தது. அதை இப்படி திருப்பி, அப்படி திருப்பி, தலைல தட்டி என்று உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம். அந்த முள்ளை ஒரு ஸ்டேஷன் -ல் இருந்து இன்னொரு ஸ்டேஷன் நகர்த்துவது பிரம்மபிரயத்தனம். :) அப்படியும் விடாமல் நகர்த்தி பாடல்களை கேட்போம். அதற்கு பிறகு முழுக்க முழுக்க ட்ரேன்சிஸ்டர் தான். மொட்டை மாடிக்கு படிக்க போகும்போது கூட கையில் இது இருக்கும். பாடல்களை கேட்காமல் ஒரு வேலையுமே செய்ய தெரியாது. :)

    ஹார்லிக்ஸ் குடும்பம் மிகவும் ரசித்து கேட்போம். உங்கள் விருப்பம், ஒலிச்சித்திரம் பிரமாதம்.
    சாயா கீத் என்று அவர் குரலில் சொல்வதை கேட்கவே பிடிக்கும்.

    நானும் என் அண்ணாவும் இதையெல்லாம் அப்படி ரசித்திருக்கிறோம். எங்கள் இளமை பருவம் மிக மிக சுவாரசியமாக இருந்ததற்கு வானொலிக்கு பெரும் பங்கு உண்டு.

    பதிலளிநீக்கு


  17. அந்த நாளும் வந்ததே!
    என்று நானும் வனொலி பற்றி என் நினைவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.
    http://mathysblog.blogspot.com/2012/03/blog-post.html//

    எங்கள் வீட்டில் பெரிய ரேடியோ, மர்பி என்று நினைக்கிறேன், அப்புறம் சோனி ட்ரான்சிஸ்டர் இரண்டும் இருந்தது அப்பா ரேடியோவில் இசை கச்சேரி என்றால் நானும் என் அண்ணனும் விதிதபாரதி கேட்போம்.
    அண்ணன் இந்திபாடல்கள் பிரியன் ரசித்து கேட்டு அதனுடம் சேர்ந்து கூடபாடுவது மிகவும் நன்றாக இருக்கும்.
    திருமணமாகி தனி குடித்தனம் வந்த பின் என் உடன்பிறந்தவர்கள் சத்தம் இல்லாமல் இருந்த தனிமையை போக்கியது என் கண்வர் வைத்து இருந்த பிலிப்ஸ் டிரான்சிஸ்டர் தான். (என் சிஸ்டர் அது தான்.)

    என் கண்வர் வனொலி புத்தக்ம் தவறமல் மாயவரம் கடைத்தெரிவில் வாங்கி வருவார்கள் அதனுடன் முத்துகாமிக்ஸ் புத்தகமும் வாங்கி வருவார்கள்.
    மதுரை வானொலியில் என் குரலும் ஒலித்திருக்கிறது! //


    உங்கள் குரல் வனொலியில் ஒலிப்பது இனிமையான தருணம் அல்லவா!

    அது ஒரு கனாக்காலம், நினைவுகள் உலாபோகும் என்று பாடச் சொல்கிறது.
    உங்கள் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வானொலி என்று பத்திரிகையே இருந்ததா? புது தகவல். (ம்க்கும்.. அப்பவே தெரிஞ்சிருந்தா மட்டும் வீட்டில வாங்க விட்டிருப்பாங்களாக்கும்..!!)

    ரேடியோ, பின் டேப் ரிகார்டர் என்று எல்லாம் சுக நினைவுகள். அதிலும், டேப் ரிகார்டரில் அடிக்கடி ’டேப்’ மாட்டிக் கொள்ளும். அதை கழட்டி எடுக்கிறேன் பேர்வழி என்று எத்தனை முறை ஷாக் அடித்து... ஆனாலும், விடுவதில்லை!!

    பதிலளிநீக்கு
  19. வானொலி புத்தகம் எங்க பெரியப்பா வீட்டில் வாங்குவாங்க. கதைகளுக்காக அதைக் கட்டாயமாய்ப் படித்த அனுபவம் உண்டு. மற்றபடி எங்க அப்பாவுக்கு ரேடியோ, பேப்பர் எல்லாம் ஆடம்பரம் என்பதால் அவை எல்லாம் வீட்டில் இருந்ததில்லை. சின்ன வயசில் இருந்தே பக்கத்து வீடுகளில் தான் வானொலி கேட்டிருக்கோம்.

    விபரம் புரியாத வயசில் ஒரு முறை நல்ல பாட்டுகளாக வானொலியில் போட, நான் அந்த வீட்டுக்காரரிடம், ஒரு பிரபலமான சினிமாப் பாட்டை (கல்யாணப்பரிசு? வீரபாண்டியக் கட்ட பொம்மன்?) போடுங்கனு சொல்ல, அவங்க சிரிச்சுட்டு இதெல்லாம் நான் போட முடியாது. ரேடியோ ஸ்டேஷனில் போடுவாங்கனு சொல்லக் கண்கள் விரியக் கேட்டது நினைவில் இருக்கு. :)))))

    பதிலளிநீக்கு
  20. //தில்லியிலிருந்து வரும் ஆங்கிலச் செய்திகளை சுருக்கெழுத்தில் எழுதி பயிற்சி செய்தததை எப்படி மறப்பது?//

    என் வாயிலிருந்து ரஞ்சனி வார்த்தைகளைப் பிடுங்கி விட்டார். மெல்வில் டிமெலோவின் குரலில் வரும் ஆங்கிலச் செய்தியைப் பக்கத்து வீடுகளில் சத்தமாக வைக்கச் சொல்லிவிட்டு ஜன்னல் வழியே கேட்டு ஆங்கிலச் சுருக்கெழுத்துப் பயிற்சி செய்வேன்.

    பதிலளிநீக்கு
  21. ஹோசூரில் அண்ணா வேலைக்குச் சேர்ந்ததும் முதல்மாசச் சம்பளத்தில் வாங்கியது ஒரு பிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர். லீவுக்கு வந்த அண்ணா அதையும் எடுத்துவர, அண்ணாவைக் கெஞ்சிக் கையைக் காலைப் பிடித்து அந்த ட்ரான்சிஸ்டரை அங்கேயே தக்க வைத்துக் கொண்டது தான் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கும் வானொலிக்கும் உள்ள தொடர்பு. காலை எட்டரைமணிக்கு வரும் கச்சேரியை அது முடியும் வரை தினமும் கேட்பேன். பின்னர்மத்தியானம் விவித்பாரதியில் மனோரஞ்சனில் ஹிந்திப்பாடல்கள். அதிகமாய் ரேடியோ சிலோன் கேட்டதில்லை. ஆனால் அக்கம்பக்கம் வைக்கிறச்சே கேட்டதுண்டு. கல்யாணம் ஆகி வந்ததும் என் கணவரிடம் இருந்த சின்ன ரேடியோவைக் காலையிலே வந்தேமாதரம் ஆரம்பிக்கையிலேயே போட்டுடுவேன். அப்புறம் ஏழே கால் தமிழ்ச் செய்தி, எட்டு மணி ஆங்கிலச் செய்தி, கச்சேரி எனக் கேட்டுத் தான் அணைப்பேன். அதிகமாய் சினிமா ஒலிச்சித்திரம் கேட்டதில்லை. உருக்கமான காட்சிகளில் கேட்டுக் கொண்டு அழுது கொண்டிருப்பவர்களைப் பார்த்தது உண்டு. சென்னையில் இருந்தப்போ கூட ரேடியோவில் ஹிந்திப் பாடல்கள், கச்சேரி எனக் கேட்பேன். அந்த ரேடியோவையே இங்கே கொண்டு வரலை. அங்கேயே இருக்கு போல! :))))

    பதிலளிநீக்கு
  22. 1930-களின் கடைசியில் என் மாமனாரின் அப்பா ப்ளூட் ஸ்ரீநிவாசன் என்பவர் வானொலியில் புல்லாங்குழல் நிகழ்ச்சி கொடுக்கையில் எடுத்த புகைப்படத்தை வானொலியில் அட்டைப்படமாகப் போட்டதை எங்க வீட்டில் ஃப்ரேம் பண்ணி வைச்சிருக்கோம். இவ்வளவு தான் வானொலிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. :)))))

    பதிலளிநீக்கு
  23. அதிலும் குறிப்பாக சென்னையில் கிரிக்கெட் நடக்கும்போது தமிழ் வர்ணனை, குதூகலமான நாட்கள்

    பதிலளிநீக்கு
  24. கீதாம்மா.. 4:43-லிருந்து 4:52 வரை-- ஏறத் தாழ 10 நிமிடங்களில் எத்தனை வரிகள்?.. தட்டச்சியது எத்தனை எழுத்துக்கள்?.. அசுர வேகம் தான். மலைத்தேன்.

    அதுசரி, வானொலியில் மிக மிக அழகாக செய்தி வாசித்த மூன்றெழுத்து பெண் வாசிப்பாளரின் பெயர் நினைவிருக்கா?..

    பதிலளிநீக்கு
  25. Cricket Commentary during 60s and 70s was a very great experience for us. We were students of Govt.Arts College now kaide Millath in the 1961 and 5 of us were studying PUC there and we were Cricket fantics.We wanted India to win all matches but India was almost always at the receiving end.Pankaj Roy and Vinoo mankad used to open Indian batting facing the fastest Gilchrist and Hall without helmets.Mind you Roy was bespectacled and was never hurt.Such was the technique with which they played the game.No TV in those days and we were depending uon the Radio only.During College working days we used togo to a small radio shop to listen to the commentary.The shop owner will soon switch off the set and used to tell us one valve was repaired.He would say that the cost of the valve was 5Rs and we used to forego our lunch and part with the money.He would further say that he was hungry and we would get him masala dosai from the nearby Swamy's Cafe in Mount Rd.Afterr all this he would switch on the radio and we would hear Vizzy narrating the game in his own style.Vizzy was Maharajkumar of Viziianagaram and very fond of Cricket. Once Indai lost both openers cheaply and one down was Vijay manjerekar and 2down Vijay hazare and 3 down Polly Umrigar were all out for a paltry25 and Vizzy exclaimed it 'Vinachakala Vibaritha Buddhi'meanning 'Misfortune never comes single!" when India once defeated England there was celebrations all over and it was a National Holiday!Madras Test used to be held at the Nehru Stadium near Moore market and that will coincide with Pongal Holidays and we would be too happy with an Indian win.Hearing commentary was very much of thrilling and interesting experience and we enjoyed every bit of it.Nowadays Cricket can be watched from the drawing room and crores of money is involved in the game.But in 60s and 70s there were less money and surely more dedication to the game. We can never forget the golden voices of John Arlott and Brian Johnston of England.Michel Charlton and Alan Mgilvary of Australlia,Dicky Rutnagur of West Indies and the likes of Berry, Ananda Rao,Balu Alagannan and Narottam Puri of India.Cricket commentary was the golden aspect of the Audio revolution and even with all the TVs that was best !Another intereesting and mot thrilling experience was watching the HINDU
    Score board in the busy Mount Road.Reading the articles of Jack Finglton and SKG were more than watching the game on TV.The HINDU has contributed very significantly to SPORTS

    பதிலளிநீக்கு
  26. My knowledge of carnatic ragas was picked up from keen study of Vanoli, which listed kritis and ragas for music programs. We used to beg from radio owning aristocrats to let us listen to concerts of great vidwans. Our rasanai grew only because of AIR.

    பதிலளிநீக்கு
  27. //கீதாம்மா.. 4:43-லிருந்து 4:52 வரை-- ஏறத் தாழ 10 நிமிடங்களில் எத்தனை வரிகள்?.. தட்டச்சியது எத்தனை எழுத்துக்கள்?.. அசுர வேகம் தான். மலைத்தேன். //

    இவ்வளவு கூர்மையான கவனிப்பு என்பதை இப்போதே அறிந்தேன். நான் ஒரு டைபிஸ்ட் தானே! :))))


    //அதுசரி, வானொலியில் மிக மிக அழகாக செய்தி வாசித்த மூன்றெழுத்து பெண் வாசிப்பாளரின் பெயர் நினைவிருக்கா?..//

    ஒருத்தர் ஜானகி/ஷோபனா ரவியின் அம்மானு நினைக்கிறேன். இன்னொருத்தர் விஜயம்????

    பதிலளிநீக்கு
  28. கரெக்ட்! விஜயம். தவறு என் பேரில் தான். ஜெயம் மட்டுமே நினைவில் இருந்தது. அதனால் மூன்று எழுத்து என்று சொன்னேன். விஜயம்! என்ன அருமையாக ஏற்ற இறக்கம் கொடுத்து எந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து செய்தி வாசித்தார்!

    ஷேபனா ரவியும் அதே மாதிரி தான்.
    இவர் அம்மா ஜானகி துர்தர்ஷ்ன்லே வேலை பார்த்ததா நினைவு.

    பதிலளிநீக்கு
  29. இவர் அம்மா ஜானகி துர்தர்ஷ்ன்லே வேலை பார்த்ததா நினைவு//

    வானொலியில் இருந்து பின்னர் தூர்தர்ஷனுக்கு வந்திருக்கலாம். எங்க வீட்டிலே தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியது 81-ஆம் வருஷம் தான். ஆகையால் அதுக்கு முன்னாடி ஷோபனா ரவியின் அம்மா இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  30. ஆமாம். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். தூர்தர்ஷன் ஆரம்பிக்கப் பட்டதும், வானொலியிலிருந்து நிறைய பேர் தூர்தர்ஷனுக்கு மாற்றிக்கொண்டு வந்து விட்டனர்.

    'வானொலி' பத்திரிகைக்கு அக்காலத்தில் வானொலியில் பணியாற்றிய எழுத்தாளர் சு.சமுத்திரம் துணையாசிரியராய் இருந்த காலம் பொற்காலம். அதே மாதிரி சுகி சுப்ரமணியன், கூத்தபிரான் போன்றோரை மறக்கவே முடியாது.

    தூர்தர்ஷன் மட்டுமே தனிக்கொடி நாட்டியிருந்த காலத்தில் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும்
    அன்றைய சினிமாக்காட்சியைப் பார்க்க தொலைக்காட்சி பெட்டி அருகில் கூடிய கூட்டம் தான் என்னே!

    மாற்றங்கள் நிகழும் பொழுது தெரிவதில்லை; நெடுங்காலம் கழிந்து அவற்றைப் பார்க்கும் பொழுது நிறைய நிகழ்வுகளைக் கணிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு

  31. நன்றி 'தளிர்' சுரேஷ்... ஒரு வகையில் நேரம் அறியும் கருவி போலவும் உதவியாக இருந்தது வானொலி. அது சரி, உங்கள் விருப்பம் முடிய 9.15 ஆகி விடுமே.. ஸ்கூலுக்கு லேட் ஆகி விடாதோ!

    நன்றி இராஜராஜேஸ்வரி மேடம். உங்கள் மகனும் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றாரா.. சந்தோஷம்.

    நன்றி வல்லிம்மா... 'அன்பே நீ அங்கே' பாடல் என்னவென்று தெரியவில்லை! சென்னையின் அதிகாலை பக்தி ஒலிபரப்பு கூட விசேஷம்தான். கிழமை வாரியாக சம்பந்தப் பட்ட சுவாமிகளுக்கு ஸ்லோகங்கள்.

    நன்றி RAMVI... பேரென்ன லல்லி...நினைவு படுத்தினீர்கள்!

    நன்றி job for you.. வழி பட்டு விடுவோம்! :))

    நன்றி கோவை2தில்லி.. இப்போது FM ரேடியோவில் பேசியே மாய்கிறார்கள்! ஆனால் இரவில் பத்து மணிக்குமேல் கொஞ்சம் தேவலாம்.

    நன்றி DD.. நீங்கள் சொல்லாமலேயே நீங்கள் பாடல்களின் ரசிகர் என்றுதான் தெரியுமே....

    நன்றி ரஞ்சனி நாராயணன்.. 'அரட்டை' பக்க அறிமுகத்துக்கு நன்றி. அங்கு சென்று படித்து விட்டோம்! தியாகராஜர் ஆராதனை விழா முதல் இன்னும் பல கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் வானொலியில் கேட்டது மறக்க முடியாதது.

    பதிலளிநீக்கு

  32. நன்றி ராமலக்ஷ்மி. தென் தமிழகத்தில் இன்னும் நன்றாக சிலோன் ரேடியோ எடுக்கும். மதுரையில் நாங்கள் இருந்த காலங்களில் திருநெல்வேலி ரேடியோ கூடக் கேட்டிருக்கிறோம்!

    நன்றி சசிகலா. சரோஜ் நாராயணசுவாமியைச் சொல்லாதவர்களே இல்லை!

    நன்றி rajalakshmi paramasivam.. உங்கள் சுவாரஸ்யமான பதிவு நன்றாக இருந்தது. தொடர்ந்து வாருங்கள்.

    நன்றி ஸாதிகா.

    நன்றி அப்பாதுரை. ரேடியோவை தட்டி, கொட்டி பாட வைப்பதும் வழக்கம். 'ஆடு ராட்டே' கேட்டதில்லை!

    நன்றி வெங்கட் நாகராஜ். முள் இருக்கும் இடத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு முல்லைத் திருப்புவோம். அலைன்மெண்ட் மாறினார்போல மாறி விடும். ஒரு உறவினர் வீட்டில் இப்படிச் செய்தது நினைவில் இருக்கிறது!

    பதிலளிநீக்கு

  33. நன்றி மீனாக்ஷி. வானொலி பத்திரிக்கை பற்றி கேள்விப்பட்டதில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சிலோன் ரேடியோ நிகழ்ச்சி நிரல் விவரம் அதில் போடா மாட்டேன் என்கிறார்களே என்று வருந்தியது உண்டு! மனோ ரஞ்சனில் இரண்டு அல்லது 3 பாடல்கள் நன்றாக இருந்தால், சாயா கீத் நிகழ்ச்சியில் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.

    நன்றி கோமதி அரசு மேடம். அப்போதெல்லாம் ஹிந்திப் பாடல்களை ரசிக்க தமிழ்நாட்டில் பெரும் கூட்டமே இருந்தது. ஆர் டி பர்மன் உபயம்!

    நன்றி ஹுஸைனம்மா. டேப் அனுபவங்களுக்கு தனிப் பதிவே போடலாம்!


    நன்றி கீதா மேடம். உங்கள் டைப் வேகத்தை ஜீவி சார் சிலாகித்த பின்தான் நாங்களும் கவனித்தோம். //அந்த ரேடியோவையே இங்கே கொண்டு வரலை. அங்கேயே இருக்கு போல! :))))// அம்பத்தூரிலா? உங்கள் மாமனார் புல்லாங்குழல் கலைஞரா?

    நன்றி விஜய்.

    நன்றி ஜீவி சார். விஜயம் நினைவிருக்கிறது. ஜானகி... ஊஹூம்!

    நன்றி வேணு சார். வானொலியின் கிரிக்கெட் பகுதியின் நினைவுகளுக்கு எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள்.

    நன்றி ராமன்... பதிவில் எழுத விட்டுப் போன முக்கியப் பகுதி நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  34. //நன்றி கீதா மேடம். உங்கள் டைப் வேகத்தை ஜீவி சார் சிலாகித்த பின்தான் நாங்களும் கவனித்தோம்.//

    மதுரை மேலாவணி மூலவீதியில் மஹாகணபதி டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட் தெரியுமா? அங்கேயாக்கும் பயிற்சி. எல்லாத்துக்கும் மேலே பள்ளியிலேயே பத்தாம் வகுப்பில் இருந்து டைப்பிங், புக் கீப்பிங், செக்ரடேரியல் கோர்ஸ் தான் சிறப்புப் பாடம். ஆகப் பதின்மூன்று வயதில் இருந்து (பள்ளி இறுதி வகுப்பு எழுதுகையில் வயசு குறைச்சல்னு பிரச்னை வர அப்புறமா ஒரு வருஷம் கூடப் போட்டு எழுத வைச்சார் அப்பா) தட்டச்சுவதே வேலை! :))))


    //அந்த ரேடியோவையே இங்கே கொண்டு வரலை. அங்கேயே இருக்கு போல! :))))// அம்பத்தூரிலா? //

    இல்லை, கொண்டு வந்திருக்கோம், இங்கே தான் இருக்கு, சரியாக் கவனிக்கலை இத்தனை நாட்களா. மின்சாரம் இல்லைனு போடறதில்லை. அதோடு அதிலே ஏதோ பிரச்னையும் இருக்கு. :)))))

    //உங்கள் மாமனார் புல்லாங்குழல் கலைஞரா?//

    ஹிஹிஹி, மாமனாரின் அப்பானு எழுதி இருப்பேன், சரியாப் பாருங்க. என் கணவரின் தாத்தா. இவரைக் குறித்துப் பதிவுகள் கூடப் படத்தோடப் போட்டிருக்கேனே!

    பதிலளிநீக்கு
  35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  36. தமிழக வெகுதிரள் வார இதழ்களில்,
    'குங்குமம்' பரவாயில்லை. அதன்
    11-2-2013 தேதியிட்ட இதழில் 'மரக்கோணியும் நயினாரும்' என்றொரு சிறுகதை சற்று முன் படித்தேன். ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதியது. வானொலி வரலாறோடு ஒரு பெரியவரின் வானொலிப்பெட்டி பிரேமையில் புதைந்த காலமாற்ற பாடல்களின் வரலாறாய் கதை அற்புதமாய் அமைந்து விட்டது.

    மரக்கோணி?.. மார்க்கோனி தான்!

    முடிந்தால் படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  37. குங்குமம் ஆரம்ப காலத்தில் எண்பதுகளில் படிச்சது. அப்புறமாப் படிக்கலை. இங்கே யாரும் வாங்கறாங்களானு தெரியலை. பார்க்கிறேன். ஸ்ரீஜா வெங்கடேஷ் கதைகளே நன்றாக இருக்கும். மின்னிதழ் வல்லமையில் அடிக்கடி எழுதுகிறார். கல்கி, கலைமகளிலும் பார்க்கலாம். கல்கி கூட இப்போது ருசிக்கவில்லை. :(((((

    பதிலளிநீக்கு
  38. குங்குமம் எல்லாம் அதன் ஆரம்ப காலத்தில் எண்பதுகளில் படித்தது தான். அப்புறம் படிக்கவே இல்லை. இங்கே யாருமே புத்தகங்கள் வாங்குவதாய்த் தெரியவில்லை. என் கிட்டே இருந்து தான் எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்க!:))) கிடைச்சால் பார்க்கலாம்.

    ஸ்ரீஜா வெங்கடேஷ் கதைகளே அருமையாக இருக்கும். வல்லமை மின்னிதழில் நிறையப் படிச்சிருக்கேன். பின்னூட்டம் போட்டதில்லை. கல்கி, கலைமகளிலும் அவ்வப்போது வரும். கல்கி கூட இப்போது ருசிக்கவில்லை. நிறுத்திடலாமானு யோசனை! :(((((

    பதிலளிநீக்கு
  39. ஜீவி சாருக்குப் பதிலாக இருமுறை கமென்டியும் போய்ச் சேரவில்லை. என்ன ஆச்சு? :((((

    பதிலளிநீக்கு
  40. அருமையான பதிவு.மறக்கமுடியாத நினைவுகளை மனதினுள் மகிழ்ச்சியாக ஊற்றெடுக்க வைத்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!