வானொலி நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானொலி நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.2.13

வானொலி நினைவுகள்.


அந்நாட்களின் மூன்று (என்று சொல்லலாமா) பெரிய பொழுது போக்குகளில் வானொலிக்கு முக்கிய இடம். மற்ற இரண்டு சினிமா, பத்திரிகைகள்!

                                                  

வீட்டின் உயரமான இடத்தில் வைக்கப் பட்டிருக்கும் எங்கள் வீட்டு ஹாலண்ட் பிலிப்ஸ் வால்வ் ரேடியோ.  எங்களுக்கு எட்டக் கூடாதாம்! அப்பா அலுவலகம் செல்லும்வரை அது எங்களுக்கு எட்டாதுதான். 

                                                       

அப்புறம் மேஜை மேலே ஸ்டூல் போட்டு ஏறி ரேடியோவைக் கைப்பற்றியபின் எங்கள் ராஜ்ஜியம்தான். பக்கத்து வீட்டு ராஜத்தின் 10 வயது சித்தி மகள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, ஈரக் கைய்களைப் பாவாடையில் துடைத்தபடி வந்துவிடுவாள்! அப்புறம் அன்பு சகோதரர்கள் ஒலிச்சித்திரம் கேட்டு அழுவது தினசரி வாடிக்கை. அப்புறம் செல்வராஜ், ராஜா, அம்பி, சந்தனத்துரை என்று ஒரு பட்டாளம் கூடி விடும்! "நீங்கள் கேட்க இருப்பது..." என்று கேப் விடுவார் கே எஸ் ராஜா. "வசந்தமாளிகை" என்று சிவாஜியின் குரல் ஒலிக்கும். தொடர்ந்து ஒலிக்கும் கே எஸ் ராஜா குரல்..."திரைவிருந்து"....
                                                      
               

எங்கள் தங்க ராஜா பட முடிவை தயவு செய்து படம் பார்த்தவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லி விடாதீர்கள் என்று கெஞ்சுவார்!  காட்சியும் கானமும் என்று ஒரு நிகழ்ச்சி. ஒரு பாடலைப் போடுமுன் அந்தப் பாட்டுக்கு முன்னால் வரும் வசனங்களை வெளியிட்டு விட்டு, பாட்டு போடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை முழுநீளத் திரைப்பட ஒலிச்சித்திரங்கள்... நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, பின்னாட்களில் சினிமாவை வீட்டுக் கூடத்திலேயே காண்போம் என்று!

வானொலி நேயர்களுக்கு சிலோன் ரேடியோ ஒரு வரப்பிரசாதம். இந்தியாவில், தமிழகத்தில் கேட்க முடியாத பல பாடல்கள் சிலோன் ரேடியோவில் கேட்க முடியும். பிரபல நடிகர்களின் பேட்டிகள், பாட்டுக்குப் பாட்டு என்று யோசித்து யோசித்து பல புதுமையான, ரசிக்க வைத்த நிகழ்ச்சிகள்.

வாரப் பத்திரிகைகளுக்கு இணையாக விற்பனை ஆகும் வானொலி. கொஞ்சம் லேட்டாகப் போனால் கடைகளில் காலியாகி விடும். அடுத்த பதினைந்து நாட்களுக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் வானொலியில் என்று விவரம் இருக்கும். கேட்க வேண்டிய நிகழ்ச்சிகளை முன்னாலேயே படித்து மார்க் செய்து வைப்போம். சில சமயம் நேயர் விருப்பத்தில் என்னென்ன பாடல்கள் போடப் போகிறார்கள் என்று படங்கள் பெயர் கூடப் போட்டிருக்கும். அடுத்த பாடல் என்று நாங்கள் சொல்வது சரியாக இருக்கும்போது தோழர்கள் வியப்பால் விழி விரிப்பார்கள்! 15 தினங்களுக்கு ஒருமுறை வெளிவரும் வானொலியில் அவ்வப்போது சிறுகதைகளும் வெளிவரும்.
                                              

மாநிலச் செய்திகள், தமிழில் செய்திகள்.. டெல்லி அஞ்சல் என்று செய்திகள் கவனமாகக் கேட்போம். சரோஜ் நாராயணசுவாமி குரலில் செய்திகள் பிரபலம்.

சுசித்ரா. சங்கர், ராஜு, ரவி, சுஜாதா வரும் ஹார்லிக்ஸ் குடும்பம், பினாகா கீத்மாலா, உங்கள் விருப்பம், ஒலிச்சித்திரம், ஞாயிறு நாடகங்கள் அகிலபாரத நாடக விழா, இசைக் கச்சேரிகள், ரங்காவளி, மன் சாஹே கீத், மனோ ரஞ்சன், சாயா கீத், சித்ரபட் சங்கீத், ஆப் கே ஃபர்மாயிஷ்...

ஏதோ காரணத்தால் வானொலி ரிப்பேராகி கடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த இடம் வெறுமையாக இருக்கும் நாட்கள் எங்களுக்கு வெறுமையானவை. 

மதுரை வானொலியில் என் குரலும் ஒலித்திருக்கிறது! இளையபாரதம் நிகழ்ச்சியில் கடிதங்களைப் படிக்க வைத்து பணம் கொடுத்து அனுப்பினார்கள். இளையபாரதம்... நேயர் கடிதங்கள்... வாசிப்பது / வாசித்தது என்று என் பெயர் சொன்னபோது அடைந்த புளங்காகிதம்! தெரு முழுக்கச் சொல்லி வைத்திருந்ததில் தெரு முழுக்க என் குரல் வீட்டுக்கு வீடு கேட்டது ஒரு த்ரில்!!
                                       

"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் குழுமியிருக்கும்..." என்று தொடங்கி அறிவிப்பைத் தொடங்கும் கே எஸ் ராஜா எங்கள் அபிமான அறிவிப்பாளர். அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம்.. சென்னையில் கூத்தபிரான் (வானொலி அண்ணா).

விவித் பாரதியின் நிகழ்ச்சிகள் இளையவர்களுக்கு விருந்து. 'இன்பமூட்டிடும் கோக கோலா... இன்பமூட்டிடும் ஜோக்... பிக்னிக்கு விருந்து பார்ட்டி... யாவருக்கும் மகிழ்வூட்டி... இன்பமூட்டிடும் கோக கோலா..' பாடல் இன்னும் நினைவில்! எழுபதுகளின் இறுதியில் இளையராஜா ஆட்சி வந்தபோது ரேடியோ படாத பாடு பட்டது. 

                                                       

வானொலியில் கிரிக்கெட் வர்ணனை  கேட்பது தனிக்கதை!

தினமணிக் கதிரில் சென்ற வருடம் வானொலியின் பவளவிழா ஆண்டு என்று படித்த போதும், ஆதி வெங்கட் கோவை2தில்லி பதிவில் வானொலி பற்றி எழுதியிருந்தபோதும், சமீபத்தில் இரண்டு இடத்தில் வானொலி பற்றிப் படித்ததும் (இரண்டில் இன்னொன்று ஜீவி சார் சமீபத்தியத் தொடரான கனவுப் பதிவில்... ஒன்று எது என்று நினைவிலில்லை!) வானொலி பற்றி நினைவுகளைப் பகிர வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. சொன்னது கொஞ்சம். சொல்லாதது நிறைய!

எங்கள் இளமை நினைவுகளில் வானொலிக்கு(ம்) தவிர்க்க முடியாத இடம்.


இதுவரை சொன்னது எங்கள் நினைவுகள்... இனி பின்னூட்டத்தில் உங்கள் நினைவுகள்....