எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
1) வீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா!
பழைய
திரைப் படங்களில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அருகில்
இருக்கும் டாக்டரை நோயாளி இருக்கும் வீட்டுக்கே அழைத்து வந்து,சிகிச்சை
அளிப்பதைப் பார்த்துள்ளோம். இப்போது அதெல்லாம் மலையேறிய வழக்கமாகி விட்டது.தற்போது பெரும்பாலான மருத்துவர்களும் வசூல் ராஜாக்களாக, ராணிக்களாக மாறிக்
கொண்டிருக்கிற காலம். மருத்துவத்தை சேவையாகப் பார்த்த மனோபாவம் மாறி,
இன்று அது மாபெரும் பிசினஸ்!
தேவையற்ற பரிசோதனைகள், அனாவசிய
மருந்துகள், அவசியமே இல்லாத கன்சல்ட்டேஷன் என மக்களின் பணத்தைப்
பறிப்பதிலேயே பல மருத்துவர்களும் குறியாக இருக்க, சென்னை முகப்பேர் டாக்டர்
வித்யா, விதிவிலக்காக நிற்கிறார். பல் மருத்துவரான வித்யாவின்
வித்தியாசமான அணுகுமுறை வியக்க வைக்கிறது. வயதான மற்றும் உடல் நலம்
இல்லாதவர்களின் பல் மருத்துவத்துக்காக அவர்களது இருப்பிடத்துக்கே போய்
சிகிச்சை செய்து வருகிறார் வித்யா!
மருந்து, மாத்திரைகள்,
உபகரணங்கள் அடங்கிய சின்னப் பெட்டி, வெள்ளை கோட், கழுத்தைச் சுற்றிய
ஸ்டெத்தஸ்கோப் என வித்யாவின் தோற்றம், பழைய கருப்பு-வெள்ளை சினிமாக்களில்
வரும் மருத்துவ முகங்களை ஞாபகப்படுத்துகின்றன. டாக்டருக்கான எந்த அலட்டலும்
இல்லாமல், தனது டூ வீலரிலோ, தேவைப்பட்டால் மட்டுமே காரிலோ, சிகிச்சைக்காக
சென்னையை வலம் வருகிறார் வித்யா.
"நர்ஸா இருந்த எங்கம்மா
கலிங்கராணிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். மருத்துவத்தை சேவையா பார்க்கக்
கத்துக் கொடுத்தவங்க அவங்கதான். விருப்பப்பட்டுதான் பல் மருத்துவம்
படிச்சேன்.
என்னைப் பொறுத்தவரை அது ஒரு கலை. ரொம்ப ரொம்ப கவனமா,
அக்கறையா, அன்போட அணுக வேண்டிய ஒரு துறை. பல் மருத்துவம்கிறது இன்னிக்கு
மிகப்பெரிய பிசினஸா வளர்ந்திட்டிருக்கு.
ஆஸ்பத்திரியோட பிரமாண்டம்,
அங்கே உபயோகிக்கப்படற பெரிய பெரிய மெஷின், வைத்திய செலவுன்னு எல்லாமே
மக்களை பயமுறுத்துது. அதுக்குப் பயந்து, பல் ஆரோக்கியத்தை
அலட்சியப்படுத்தறவங்களும்,சுய மருத்துவம் செய்துக்கிறவங்களும்தான் நிறைய
பேர்… பணம் பிரச்னையில்லைங்கிற நம்பிக்கையைக் கொடுக்கத்தான், ரொம்ப ரொம்ப
குறைஞ்ச கட்டணத்துல சிகிச்சை கொடுக்க, 10 வருஷங்களுக்கு முன்னாடி கிளினிக்
தொடங்கினேன்.
என்னோட கிளினிக்ல ஏழை, பணக்காரங்கன்னு எல்லோருக்கும்
ஒரே மாதிரியான ட்ரீட்மெண்ட்தான். ஒரு முறை இலங்கையைச் சேர்ந்த பேஷண்ட்,
தன்னோட மாமியாரைப் பத்திச் சொன்னாங்க. படுத்த படுக்கையா இருந்த
அவங்களுக்கு, பல் எல்லாம் விழுந்திருந்தது. பல் இல்லாததால சரியா சாப்பிட
முடியலை. ரொம்ப பலவீனமா இருந்தாங்க. நோயாளிங்கிறதால ஆஸ்பத்திரிக்கு
கூட்டிட்டுப் போய் பல் செட் கட்டவும் முடியாத நிலையில, ‘அவங்களுக்கு ஏதாவது
செய்ய முடியுமா’ன்னு கேட்டாங்க.
அவங்க வீட்டுக்குப் போய்,
அந்தம்மாவுக்கு பல் செட் கட்டறதுக்கான 5 கட்ட சிகிச்சைகளையும் வீட்லயே
செய்து, நல்லபடியா கட்டி விட்டேன். அதுக்குப் பிறகு அவங்க நல்லா சாப்பிட
ஆரம்பிச்சு, உடம்பும் மனசும் தேறினாங்க. அந்த வாழ்த்தும் அதுல கிடைச்ச மன
திருப்தியும்தான் என்னோட ‘மொபைல் கிளினிக்’ ஐடியாவுக்கு அஸ்திவாரம்…” என்று பின்னணி சொல்கிற டாக்டர் வித்யா, ரொம்பவும் வயதானவர்கள், நடமாடவே முடியாத
நோயாளிகள், மனநலம் சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று
சிகிச்சை தருகிறார்.
மற்றவர்களுக்கு தனது கிளினிக்கில்.
வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிப்பதற்காக உபரிக் கட்டணமெல்லாம்
வாங்குவதில்லை! பற்களை சுத்தம் செய்வது, எடுப்பது, கட்டுவது, கிளிப்
போடுவது, வேர் சிகிச்சை உள்ளிட்ட 90 சதவிகித சிகிச்சைகளை வீட்டிலேயே
செய்யலாம் என்கிறார் வித்யா. ‘‘பெரும்பாலும் நான் தனியாவே போயிடுவேன்.
கொஞ்சம் பெரிய ட்ரீட்மென்ட்டுன்னா மட்டும்தான் அசிஸ்டென்ட்ஸ் கூட்டிட்டுப்
போவேன்.
வயசானவங்களுக்கும், மனநலம் சரியில்லாதவங்களுக்கும்
ட்ரீட்மென்ட் கொடுக்கிறப்ப, அசாத்திய பொறுமை வேணும். தன்னையறியாம
கடிச்சிடுவாங்க. வாந்தி எடுப்பாங்க. முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. மனநலம்
பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அதைவிடக் கஷ்டம்.
அத்தனை சுலபத்துல நம்மகிட்ட வரவே மாட்டாங்க.
முதல் ரெண்டு விசிட்
சும்மா அவங்களோட பேசிப் பழகுவேன். கிஃப்ட் கொடுப்பேன். மூணாவது விசிட்லதான்
ட்ரீட்மென்ட் ஆரம்பிப்பேன். சிகிச்சை முடியறபோது, அவங்கக்கிட்டருந்து
கிடைக்கிற அந்த அன்பும் வாழ்த்தும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும்
கிடைக்காதது…’’ – அன்பொழுகப் பேசுகிற டாக்டருக்கு, குடிசைவாழ் மக்களிடம்
பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பிரபலப்படுத்துவதே அடுத்த
திட்டமாம்! (நன்றி: கூகிள் ப்ளஸ்)
2) 2012ல்
நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து
நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக
மாணவிகளான துர்காவும், திவ்யாவும்....
இந்த மாணவிகளை கட்டுரைக்காக
சந்தித்தபோது, "பல ஐரோப்பிய நாடுகள் வெளிச்சம் இல்லாமல் பனியிலேயே மூழ்கிக்
கிடக்கின்றன. மற்ற நாடுகளில் இல்லாத சூரியஒளி என்ற அற்புதம் நம்ம நாட்டுல
அதிகமாவே இருக்கு...
மின்சாரப் பற்றாக்குறை என்று குறைகூறும் நம்
ஆட்சியாளர்கள் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தால் என்ன என்று
முற்போக்குத்தனமான தங்கள் கருத்தை கூறினர் இந்த மாணவிகள்...
3) சாதிக்க
பணம் தடையாக இருப்பதில்லை என்ற அனுபவ மொழிக்கு இலக்கணமாக விளங்குகிறார் 14
வயது நிரம்பிய மகாலட்சுமி. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச
ஜூனியர் செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இந்தியாவுக்கு
பெருமை சேர்த்துள்ள இவர், இந்த உயரத்தை அவ்வளவு சுலபத்தில்
அடையவில்லை என்பதுதான் முக்கியம்.
‘‘பிறந்தது படிப்பது எல்லாம் சென்னையில்தான். அப்பா முகுந்த குமார்
எலெட்ரிஷியன். உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். நான்தான்
கடைக்குட்டி. மூன்றாவது அக்காவுக்கு செஸ் விளையாட்டு மேல் ஆர்வம் இருந்தது.
எனவே அவள் விளையாடும் போதெல்லாம் உடன் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
அப்போது எனக்கு வயது 5தான்.
‘இந்த விளையாட்டை நானும் கற்றுக்
கொள்வேன்’ என்று அப்பாவிடம் சொன்ன போது மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்.
அக்கா கல்லூரியில் சேர்ந்தபோது, அவளால் போதுமான நேரத்தை விளையாட்டுக்காக
ஒதுக்க முடியவில்லை. அதற்காக நானும் பின்வாங்கவில்லை. விடாமல் பயிற்சி
எடுத்துக் கொண்டேன். அத்துடன் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும்
பங்குபெற்று பரிசு வாங்க ஆரம்பித்தேன்.
இது தேசிய போட்டிகளில்
பங்கு பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 2005ம் ஆண்டு அவுரங்காபாத்தில்
நடைபெற்ற தேசிய அளவிலான சாம்பியன் போட்டியில் வெற்றியும் பெற்றேன். அடுத்த
வருடமே ஆசிய போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தேன்.
அத்துடன் அதே வருடம், ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்
போட்டியிலும் பங்கேற்றேன்.
இங்கும் எனக்கு மூன்றாவது இடம்
கிடைத்தது...’’ என்று சொல்லும் மகாலட்சுமி, முதல் இடத்தை பிடிப்பதற்காக
பயிற்சியாளர் ரமேஷிடம் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். கிராண்ட் மாஸ்டர்
பட்டம் பெற்ற ரமேஷ், தனக்கு தெரிந்த அனைத்து நெளிவு சுளிவுகளையும்
மகாலட்சுமிக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.
‘‘பயிற்சி தந்த
உத்வேகத்தில் 2010ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக செஸ்
சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன். ஒரு சில நொடிகளில் முதல்
வாய்ப்பை தவறவிட்டு மூன்றாவது இடம் வந்தேன். இதை என்னால் தாங்கிக் கொள்ள
முடியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளிலும் பரிசு கிடைத்தது. ஆனால்,
முதலிடம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.
நன்கு பயிற்சி
எடுத்தும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் விருட்சமாக
வளர்ந்தது. போட்டி நேரத்தில் ஏற்படும் டென்ஷன்தான் முதலிடத்தை நான் தவற
விடக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன்...’’ என்றவர், சென்ற ஆண்டு நவம்பர்
மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியை ஜாலியாக எதிர் கொண்டுள்ளார்.
‘‘பதினான்கு வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் பங்கேற்றபோது
படபடப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன். அதனால்தான் ஆசைப்பட்டபடி முதல்
இடத்தை பிடிக்க முடிந்தது...’’ என்று மகாலட்சுமி சிரித்து முடிக்கவும்,
பயிற்சியாளர் ரமேஷ் தொடர்ந்தார். "ஐந்து வருடங்களுக்கு முன் செஸ்
விளையாட்டுக்கான பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். முதல் மாணவியாக சேர்ந்தது
மகாலட்சுமிதான். செஸ் விளையாட்டின் மேல் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.
ஆனால், அதற்கு செலவு செய்யும் நிலையில் அவரது குடும்பச் சூழல் இல்லை.
திறமையான ஒருவரை பணமில்லாத காரணத்தால் ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.
எனவே இலவசமாக மகாலட்சுமிக்கு பயிற்சி அளித்தேன். எங்கள் மையம், அவரது
வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அதற்காக மகாலட்சுமி
வருத்தப்படவில்லை. பதிலாக நாள்தோறும் பயிற்சிக்கு வந்தார். பல நாட்கள்
பள்ளியில் இருந்து நேராக பயிற்சிக்கு வருவார். பயிற்சி இடைவேளையில்
வீட்டுப் பாடங்களை செய்வார். இப்படி கஷ்டப்பட்டு உழைத்ததால்தான்
மகாலட்சுமியால் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடிந்தது...’’ என்கிறார் ரமேஷ்.
விடைபெறும்போது மகாலட்சுமி சொன்ன பன்ச்தான் முக்கியமானது. ‘‘செஸ் என்பது
வெறும் விளையாட்டல்ல. நமது நினைவாற்றலை அதிகரிக்க வைக்கும் ஒரு சக்தி.
விளையாட்டில் எதிராளியை எப்படி மடக்கலாம் என்று யோசிப்போம். அந்தத் திறன்
வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்துக்கும் உதவும். அத்துடன்
கணக்கு பாடமும் நன்றாக வரும்...’’
நன்றி : குங்குமதோழி
4) ஆகாயத் தாமரையை முற்றிலும் அழிக்க, "பயோ பைன்' மருந்தை கண்டுபிடித்துள்ள பேராசிரியர், ராஜேந்திரன்:
நான்,
மதுரையில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில், உயிர் தொழில்நுட்ப பிரிவு,
தாவரவியல் பேராசிரியராக பணியாற்றுகிறேன். தமிழக நீர் நிலைகள், கோடையின்
வெப்பத்தால் வற்றி விட்டாலும், பச்சை கம்பளம் போர்த்தியது போல், கண்ணுக்கு
குளிர்ச்சியாக காட்சியளிக்க, ஆகாயத் தாமரையே காரணம்.
"வாட்டர் ஹயான்சித்'
என, அழைக்கப்படும் ஆகாயத் தாமரைகள், நீர் நிலைகளிலிருந்து அதிகப்படியான
நீரை உறிஞ்சி, வற்றச் செய்வதன் மூலம், நீர் நிலைகளுக்கு தீங்கு
விளைவிக்கின்றன. இது, நீரில் வாழும் ஒரு வகையான, களைச் செடி இனத்தை
சேர்ந்தது. ஆகாயத் தாமரைகளை முற்றிலும் அழிப்பதற்கு, உள்ளாட்சி அமைப்புகள்
சிரமப்படுகின்றன. நீர் நிலைகளில், புல்டோசர் மூலம் சுத்தம் செய்தாலும்,
முற்றிலும் அழிக்க முடியாத நிலை உள்ளது.சுத்தமான நீர் நிலைகளை விட,
அசுத்தமான நீர் நிலைகளிலேயே அதிகம் வளர்வதால், இவற்றை அழிப்பதற்கான மருந்தோ
அல்லது மாற்று நடவடிக்கையோ, இதுவரை எடுக்கவில்லை.
அதனால், ஆகாயத் தாமரையை
மருந்து மூலம் ஒழிப்பதற்கு, நான் முயற்சித்து, "பயோ பைன்' எனும் மருந்தை
கண்டுபிடித்தேன்.இதை, ஆகாயத் தாமரையின் மேல் பரப்பில் தெளித்தால், இரண்டே
நாட்களில் பட்டுப் போய் விடும். இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால்,
நீர் நிலைகளில் இதை தெளிப்பதன் மூலம், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நீரில்
உள்ள பாக்டீரியாக்கள், "லார்வாக்கள்' எனும் கொசுக்களின் முட்டைகள்
போன்றவற்றையும் அழிக்கிறது.ஆகாயத் தாமரைகளை, நீர் நிலைகளிலேயே பட்டுப்போகச்
செய்வதால், எவ்வித துர்நாற்றமும் வீசாது. தற்போது, ஒரு லிட்டர் பயோ பைனை,
350 ரூபாய்க்கு தயாரிக்கிறோம். உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், விலையை
குறைக்கலாம். தொடர்புக்கு: 94439 98480.
5) சென்னை நகரில் மன நிலை பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பலர் திரிகின்றனர்.
அவர்களை பெரும்பாலோர் வேடிக்கை பார்ப்பர்; சிலர் பரிதாபப்படுவர்; சிலர்
மட்டுமே உணவு வாங்கி தந்து செல்வர்.ஆனால், அவர்கள் பற்றிய தகவல்
கிடைத்தால், இரவு, பகல் பார்க்காமல் எந்நேரமும் ஆஜராகி அவர்கள் எந்த
நிலையில் இருந்தாலும் மீட்டு ஆதரவற்றோர் முகாமில் சேர்ப்பதை கடமையாக
கொண்டுள்ளார் சமூக சேவகர் வெங்கடேஷ், 48.திருவான்மியூரை சேர்ந்த இவர், பணிநேரம் தவிர மற்ற நேரத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...
மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
கடந்த,
1995ம் ஆண்டு, நான் கூரியர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து
வந்தேன். வேலை தொடர்பாக பழைய மகாபலிபுரம், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் பகுதியில்
சென்று கொண்டிருந்தேன்.அப்போது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர்
நிர்வாண நிலையில் சாலையில் சுற்றி கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கானோர்
பார்த்தபடி சென்றனர். அந்த பெண்ணின் நிலைமை என்னை மிகவும் வருத்தமடைய
செய்தது. உடனடியாக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று பழைய புடவை ஒன்று வாங்கி,
அந்த
பெண்மணிக்கு போர்த்திவிட்டு, அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆதரவற்றோர்
இல்லத்தை தேடி ஒப்படைத்தேன்.அன்று எனக்கு ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி
ஏற்பட்டது. அந்த செயல் எனக்கு மிகவும் பிடித்து போனது. அன்று முதல் அதை ஒரு
கடமையாக செய்து வருகிறேன்.
இந்த பணியில் ஒத்துழைப்பு இருக்கிறதா? நேரம் காலம் பார்ப்பீர்களா?
தற்போது, சென்னையில் ஆதவற்றோரை பார்த்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டுவிடுகின்றனர். போலீசாரும் அழைத்து தகவல் கொடுக்கின்றனர்.கடந்த 2007ம் ஆண்டு, அரசு பணி கிடைத்த பின்னும், இந்த கடமையை விட்டு விடவில்லை. பணிநேரம் தவிர மாலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை இந்த கடமையை செய்து வருகிறேன்.
இதற்கு மன அளவில் எப்படி தயாரானீர்கள்?
பல இடங்களில் பாதிக்கப்பட்டோர், பார்க்கவே அருவருப்பாக, நெருங்கவே முடியாத நிலையில் இருப்பர். அவர்களிடம் இருந்து கடும் துர்நாற்றம் வீசும். துவக்கத்தில் சங்கடமாக தான் இருந்தது. பிறகு அதுவே பழகி விட்டது. அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று, நம்மை போல மனிதர்களாக உருமாறியதை பார்க்கும் போது மிகவும் பெருமைப்பட்டு கொள்வேன். அவ்வாறு மாறிய ஒவ்வொருவரையும் என் கடமைக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.
மிக சிரமமான இந்த பணியில், பொருளாதார ரீதியில் எப்படி சமாளிக்கிறீர்கள்?
நான் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியவன். ஆனால், எனக்கு உதவி செய்வதற்காக சென்னை நகரின் பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், 20க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் உள்ளனர்.சில தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போன் செய்தால் உடனடியாக வந்து விடுவர். பலர் பணம் வாங்கமாட்டார்கள். ஒரு சிலர் கொடுப்பதை வாங்கி கொள்வர். இந்த பணிக்கு என் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். பல நேரங்களில் என் மகள், என்னுடன் வந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுள்ளார். இதில், என் அடுத்த வாரிசாக அவர் உருவாவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் தான்.
இந்த பணியில் ஒத்துழைப்பு இருக்கிறதா? நேரம் காலம் பார்ப்பீர்களா?
தற்போது, சென்னையில் ஆதவற்றோரை பார்த்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டுவிடுகின்றனர். போலீசாரும் அழைத்து தகவல் கொடுக்கின்றனர்.கடந்த 2007ம் ஆண்டு, அரசு பணி கிடைத்த பின்னும், இந்த கடமையை விட்டு விடவில்லை. பணிநேரம் தவிர மாலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை இந்த கடமையை செய்து வருகிறேன்.
இதற்கு மன அளவில் எப்படி தயாரானீர்கள்?
பல இடங்களில் பாதிக்கப்பட்டோர், பார்க்கவே அருவருப்பாக, நெருங்கவே முடியாத நிலையில் இருப்பர். அவர்களிடம் இருந்து கடும் துர்நாற்றம் வீசும். துவக்கத்தில் சங்கடமாக தான் இருந்தது. பிறகு அதுவே பழகி விட்டது. அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று, நம்மை போல மனிதர்களாக உருமாறியதை பார்க்கும் போது மிகவும் பெருமைப்பட்டு கொள்வேன். அவ்வாறு மாறிய ஒவ்வொருவரையும் என் கடமைக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.
மிக சிரமமான இந்த பணியில், பொருளாதார ரீதியில் எப்படி சமாளிக்கிறீர்கள்?
நான் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியவன். ஆனால், எனக்கு உதவி செய்வதற்காக சென்னை நகரின் பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், 20க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் உள்ளனர்.சில தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போன் செய்தால் உடனடியாக வந்து விடுவர். பலர் பணம் வாங்கமாட்டார்கள். ஒரு சிலர் கொடுப்பதை வாங்கி கொள்வர். இந்த பணிக்கு என் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். பல நேரங்களில் என் மகள், என்னுடன் வந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுள்ளார். இதில், என் அடுத்த வாரிசாக அவர் உருவாவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் தான்.
6) ஈரோட்டில்
திரு .வெங்கட்ராமனால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீஏ எம் வி ஹோட்டல்.ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மத்தியில் மிகப் பிரபலம்.
இவ்வுணவகத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள்.
விழியிழந்தோருக்கு-20%தள்ளு படி.
உடல் ஊனமுற்றோருக்கு-10 % தள்ளுபடி.
அரசுமருத்துவமனைக்கு வரும் மிகவும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.
7) சிலி நாட்டில் ஒரு வீட்டில் திடீரென்று தீ பிடித்து கொண்டது. கார் குண்டு வெடித்ததால் அந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் ஒரு நாயும் பிறந்து 15 நாட்களே ஆன நாய் குட்டிகளும் இருந்தன.
அமெண்டா என்ற அந்த நாய் தான் ஈன்ற குட்டிகளை நெருப்புக்குள் பாய்ந்து ஒவ்வொன்றாக வாயால் கவ்வி எடுத்து கொண்டு வந்து தீ அணைப்பு வாகனத்தில் வைத்து காப்பாற்றியது.
7) சிலி நாட்டில் ஒரு வீட்டில் திடீரென்று தீ பிடித்து கொண்டது. கார் குண்டு வெடித்ததால் அந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் ஒரு நாயும் பிறந்து 15 நாட்களே ஆன நாய் குட்டிகளும் இருந்தன.
அமெண்டா என்ற அந்த நாய் தான் ஈன்ற குட்டிகளை நெருப்புக்குள் பாய்ந்து ஒவ்வொன்றாக வாயால் கவ்வி எடுத்து கொண்டு வந்து தீ அணைப்பு வாகனத்தில் வைத்து காப்பாற்றியது.
தீ அணைப்பு வீரர்கள் அந்த நாயின் செயலை ஆச்சரியமாக பார்த்தனர். எல்லா நாய் குட்டிகளையும் காப்பாற்றிய அமெண்டா குட்டிகளின் பயத்தை போக்க அவைகளை அணைத்தபடியே படுத்து கொண்டு இருந்தது.
ஒரு நாய் குட்டி மட்டும் தீ காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது.கால்நடை மருத்துவருக்கு போன் செய்து அந்த நாய் குட்டிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
எங்கு பார்த்தாலும் வெடி குண்டு கலாச்சாரம் .இந்த நாய்க்கு இருக்கும் தாய் பாசம் கூட வெடிகுண்டு வைக்கும் அந்த நாய்களுக்கு இருப்பதில்லை. (முகநூல் -ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கம்)
8) ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்த பெண், குதிரையின் மீது சவாரி செய்து கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக பெண்ணும் குதிரையும் சேற்றில் சிக்கி கொண்டனர்.
9)பெங்களூரு: சிறுவயதில் பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையைத்துவக்கி,
கடுமையாக உழைத்து, தற்போது கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில்
படிக்கவுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை,
மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக
விளங்குகிறது.
சிவக்குமார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில்
மிகவும் ஏழ்மையான தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும்
என்ற எண்ணத்துடன், தனது 5வது வகுப்பு முதல் பேப்பர் போடும் தொழிலை
மேற்கொண்டு வரும் தன்னம்பிக்கை மனிதர். தன்னுடைய வாழ்க்கை குறித்து
சிவக்குமார் குறிப்பிடுகையில், "நான் எனது 5வது வகுப்பு படிக்கும் போதில்
இருந்து பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான
நிலையில் இருந்த எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த எனக்கு ஒரு
தொழில் தேவைப்பட்டது. பின்னர் எனது 10ம் வகுப்பு முதல் தனியாக ஏஜென்சி
ஒன்றை எடுத்து தற்போது வரை பேப்பர் விநியோகம் செய்து வருகிறேன்" என்று
தெரிவித்தார்.
அந்த வருமானத்தில் இன்ஜினியரிங் முடித்துள்ள
சிவக்குமார், கேட் தேர்வு எழுதி தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய
மேலாண்மை கழகத்தில் கல்வி பயில உள்ளார். "மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற
எனது வேட்கைக்கு என் தொழில் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஏனெனில் நான்
எனது தொழிலை விரும்புகிறேன். இதன் மூலம் எனது குடும்பத்தை சிறப்பாக
கவனித்துக்கொள்வதால், ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது"
என்கிறார் சிவக்குமார்.
சிவக்குமாரின் தாயார் ஜெயம்மாவுக்கு தனது
மகன் குறித்து மிகவும் பெருமிதம். 5ம் வகுப்பிலிருந்து தற்போது வரை அவன்
போராடிக்கொண்டிருக்கிறான். இந்தளவு அவன் முன்னேறியது குறித்து எனக்கு
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அந்த தாய்.
சிறுவயதில்,
வறுமை காரணமாக, குடும்பத்தினரால் படிப்பிற்கு உதவமுடியாத சூழல் வந்த போது,
தனது படிப்பிற்கு உதவும்படி ஒருவரை அணுகியுள்ளார் சிவக்குமார். அவருக்கு
சிவக்குமாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும்,
சிவக்குமாருக்கு உடனடியாக உதவி செய்யாமல், அவர் கல்வி கற்கும் பள்ளிக்கு
வந்து அவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பின்னர், அந்த
ஓராண்டிற்கான படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.
எனது எதிர்கால
நடவடிக்கை குறித்து சிவக்குமார் கூறுகையில், கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மில் தனது
படிப்பை முடித்த உடன், எஜூகேட் இந்தியா பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பு
ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அளிப்பதே தனது
லட்சியம் என்கிறார் இந்த லட்சிய மனிதர்.
10) எங்கள் விஎம் பவுண்டேசன் வழியாக நடத்தப்படும் பி.எஸ்சி டிஜிட்டல் பப்ளிசிங்
பட்டப்படிப்பு முழுமையாக இலவசம். ஒரே தகுதி : +2 பாஸ் மற்றும் எங்கள்
நுழைத்தேர்வில் தேர்ச்சிபெறவேண்டும். மேலும் மாணவர்களுக்கு மாதந்தோறும்
1500 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்தியாவிலேயே படிப்பதற்கு பணம்
தருபவது இங்கேவாகத்தான் இருக்கும் :)
வசதியில்லாமல் தவிக்கும்
மாணவர்களுக்கு இந்த பட்டப்படிப்பு ஒரு வாய்ப்பாக அமையும் .உங்களுக்கு
தெரிந்தவர்களுக்கு இதை தெரிவியுங்கள் நண்பர்களே!!
மேலும் விபரங்களுக்கு விஎம் பவுண்டேசன். : 04341252425, 9943094945
===============
11) அகமதாபாத் ஆட்டோ ஓட்டுனர் ராஜு பர்வாத்.
ஒரு 'நோ பால்' போட சில லட்சங்கள், ஒரு 'ஒய்ட் பந்து' வீச மேலும் சில லட்சம் என்றெல்லாம் பேரம் பேசி சம்பாதிக்கின்ற இந்த நாட்களில், தன் பெயருக்குக் கொடுக்கப்பட்ட, தனக்கு உரிமை உள்ளதாகக் கருதப்பட்ட, ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் ரூபாய்கள் மதிப்புள்ள காசோலையை, திருப்பித் தந்துள்ளார், ராஜு.
யார் கொடுத்தார்கள்?
குஜராத் வாணிப வளர்ச்சிக் கழகம். (GIDC)
ஏன் பணம் கொடுத்தார்கள்?
டாட்டா நானோ கார் தொழிற்சாலைக்கு சனந் நகரில், ராஜூவின் மூன்று பிகா (சற்றேறக்குறைய ஒரு ஏக்கர்) நிலம் கையகப் படுத்தப் பட்டதற்காக. அரசாங்க ஏடுகளில் அந்த நிலம், ராஜு பெயரில் காட்டப்பட்டிருந்தது.
ஏன் திருப்பிக் கொடுத்தார்?
ராஜுவின் மூதாதையர்கள் வழியாக, அவர் பெயரிலும் ராஜுவின் அம்மா பலுபென் பெயரிலுமாக சேர்ந்து, பத்து பிகா நிலம் இருந்தது. அந்தப் பகுதியில் மூன்று பிகா நிலத்தை, முப்பது வருடங்களுக்கு முன்பு, ஐந்து லட்ச ரூபாய்களுக்கு ராஜூவின் தாத்தா விற்றிருந்தார். ஆனால், இந்த விற்பனை அரசாங்க ஏடுகளில் பதியப்படவில்லை. தன் பெயரில் நிலம் இருந்தாலும், அதில் தனக்கு உரிமை ஏதும் இல்லை என்பதால், காசோலையைத் திருப்பித் தந்தார்.
பிறகு என்ன செய்தார்?
நிலம் யாருக்கு உரிமையோ அவர்களின் விவரம் அரசாங்க ஏடுகளில் இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டார். அவர்களிடம் பணம் சென்று சேர ஏற்பாடு செய்தார்.
ராஜூ என்ன சொல்கிறார்?
தன் மனைவி, மூன்று குழந்தைகள், வயதான அம்மா ஆகியோருடன், இரண்டே அறைகள் கொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் ராஜூ கூறுகிறார்: " என்னுடைய பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம், நேர்மை. நேர்வழியில் அல்லாது வந்த பணம் என் குடும்பத்திற்கு வேண்டாம். இப்பொழுது எனக்கு வருகின்ற மாத வருமானம் ஆறாயிரமும், என் பெயரில் உள்ள நான்கு பிகா நிலமும், நானும் என் குடும்பமும் கண்ணியமாக இன்றும், என்றும் வாழ போதுமானது!"
குஜராத் வாணிப வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரி நவீன் படேல் கூறுகிறார்: "எவ்வளவோ நிலத் தகராறுகள் எங்கள் கவனத்தில் வந்துள்ளன. இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை வேண்டாம் என்று ஒருவர் திருப்பி அளித்தது இதுவே முதன் முறை."
பாசிட்டுவ்செய்தி எல்லாம் அருமை.
பதிலளிநீக்குபல்டாகடர் வித்யாவின் அன்பு, கருணை, தமிழக மாணவிகளின் முற்போக்கு கருத்து, மாகலட்சுமியின் விடாமுயற்சிக்கு, ஆகாயத்தாமரையை அழிக்க பயோபைன் என்ற மருந்தை கண்டு பிடித்த பேராசிரியர் ராஜேந்திரன் அவர்களுக்கு, , தெருவில் திரியும் மனநிலை பாதிக்கபடவர்களை காப்பகத்தில் சேர்ந்து சேவை செய்யும் திரு .வெங்கடேஷ்க்கும் அவர் மகளின் சேவைக்கும், ,
திரு,வெங்கட்ராமன்அவர்கள் நடத்தும் ஓட்டலில் ஏற்படுத்தபட்டுள்ள சலுகைகளுக்காக ,
அமெண்டா நாயின் பாசத்திற்கு,
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்ணின் கருணை, பெங்களூருவை சேர்ந்த சிவக்குமாரின் லட்சியம்.,
எங்கள் விஎம் பவுண்டேஷ்னின் தொண்டு, ஆட்டோ ஓட்டுனர் ராஜுபர்வாத் அவர்களின் உயர்ந்த உள்ளம் எல்லாம் பாராட்டப் படவேண்டியவை. எல்லோருக்கும் பாராட்டுக்கள்.
பகிர்ந்து கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.
நல்லவை தேடுதல் நாளும் நல்லது.
வாழ்த்துக்கள்.
பாசிட்டிவ் செய்திகள்..
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்க்கு பாராட்டுக்கள்.
அத்தனை கருணைச் செய்திகளுக்கும் நன்றி. டக்டர் வித்யா,சிவக்குமார், திரு வெங்கடேஷ்,
பதிலளிநீக்குகோடிகளைத்திருப்பிக் கொடுத்தவர்
அனைவருக்கும் நன்றி.
பயோபைன் கண்டுபிடித்தவர் நன்றாக முன்னேற கடவுள் அருளட்டும்.
இவ்வளவு புண்ணியவான்களை அறிமுகப் படுத்திய எபிக்கு என் நன்றி.
பெங்களூர் சிவக்குமார் தங்களது இந்தவார செய்தியில் இடம்பெறுவார் என எதிர்பார்த்திருந்தேன். தன்னம்பிக்கைக்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள், சேவைக்காக போற்றப்பட வேண்டியவர்கள், கோடியைத் திருப்பிக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர், அறிவோடு செயல்பட்ட நாய் அமெண்டா என அனைத்து செய்திகளுக்கும் நன்றி.
பதிலளிநீக்குபாசிடிவ் செய்திகள் எல்லாமே அருமை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு டாக்டரா?
பதிலளிநீக்குஅவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்...இப்படி
பாசிட்டிவ் செய்திகளை அள்ளி தருவதற்கு
முகநூல் செய்திகள் உட்பட பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை... நன்றிகள் பல...
பதிலளிநீக்குஅத்தனை செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குசட்டப்படி சரி என்றாலும் தர்மப் படி பணம் தனதில்லை என்று திருப்பிக் கொடுத்த அந்த ஆட்டோ ஓட்டுனரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இத்தகைய அதிறையப் பிறவிகள் வாழும் நாட்டில்தான் நாமும் இருக்கிறோம். இவரை நினைத்தால் போதும் நாமும் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம தானாக வந்து விடும்.சாதாரண மக்கள்முதல் அரசியல் தலைவர்கள் வரை இவரது போட்டாவை வீடுகளில் மாட்டி வைக்கலாம்.