'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவாரப் பாசிட்டிவ் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவாரப் பாசிட்டிவ் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.6.13

பாசிட்டிவ் செய்திகள் ஜூன் 1,2013 முதல், ஜூன் 8 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =   

1) பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக்!  11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு.
                                 

பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.


''தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன் உதாரணம்தான், காந்த விசையின் மூலம் இயங்கும் இந்த இன்ஜின். இது அதிக வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த எடையுடையது, அதிக இடத்தையும் ஆக்கிரமிக்காது. மின்வெட்டுக்கும தீர்வாகிறது. இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம். இந்த இன்ஜினுக்குள் ஏற்படும் காந்த விசையின் அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும் தயாரிக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ் மேலும் 'தான் ஒரு இயற்கை விஞ்ஞானி’ என்கிறார் வெங்கடேஷ்.

2) சென்னை: "கடும் நெஞ்சுவலியிலும், மின்சார ரயிலை நிறுத்தி, பயணிகளை பாதுகாத்து விட்டு, மாரடைப்பால் இறந்த டிரைவருக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும்' என, ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே, பரிந்துரைத்துள்ளது.
                                               


கடந்த மாதம், 23ம் தேதி, கும்மிடிப்பூண்டியிலிருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. இதில்,1,300 பேர் பயணம் செய்தனர். ரயிலை டிரைவர் மனோகர், 48து, இயக்கினார். ரயில், கவரப்பேட்டை நிலையத்தை கடந்து சென்ற சிறிது நேரத்தில், டிரைவர் மனோகருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கடும் நெஞ்சுவலியிலும், ரயிலை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, எதிரில் வரும் டிரைவரிடம் உதவி கேட்கும் வகையில், ரயில் இன்ஜின் முன்பகுதியில் உள்ள, எமர்ஜென்சி விளக்கை எரிய விட்டார்; பின், மாரடைப்பால் இறந்தார். ரயிலை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, இறந்த டிரைவரின் பணியினை பாராட்டி, தெற்கு ரயில்வே மூலம், "வீர வணக்கம்' செலுத்தப்பட்டது. அவரது குடும்பத்திற்கு தேவையான உடனடி உதவிகளும் வழங்கப்பட்டன. பணியில் இருந்த போது இறந்தால் வழங்கப்படும், துறை ரீதியான சலுகைகளும் விரைவாக வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொறுப்பாக கடமையாற்றியதை கவுரவிக்கும் விதமாக, டிரைவர் மனோகருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும் என, ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது. 


3) ஈரநெஞ்சங்களின் நற்பணிகள் பற்றி முன்னரேயும் படித்துப் பகிர்ந்திருக்கிறேன். இப்போது இன்னொன்று.

                                               


கடந்த 13/07/2010 அன்று கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் 55 வயதுள்ள ஒரு பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், உடலில் உடைகூட இல்லாமல் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்தார் . இவரை ஈரநெஞ்சம் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக கோவை அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் தேவியை நல்ல முறையில் பராமரித்து வந்த நிலையில், ROBERT BOSCH கம்பெனி உதவியுடன் மருத்துவர் ரமணி அவர்களின் சிகிச்சையில் , கடந்த மூன்று வருடத்திற்கு பிறகு தேவிக்கு சுயநினைவு திரும்பியது . அதனை அடுத்து அவருக்கு தான் யாரென்றும், தன் மகன் யாரென்றும் நினைவு திரும்பியது. தான் தேவி , தன்னுடைய மகன் கணேஷ் என்கின்ற ரகு என்றும் அவர் கோவை செல்வபுரம் பகுதியில் வசிப்பவர் என்று இருந்த இடத்தையும் கூறினார். இதன் மூலமாக தேவியின் மகன் ரகுவை அழைத்து கேட்கும் போது தேவி என்பவர் என்னுடைய தாயார் தான் நானும் என் அம்மாவும் மட்டும் தான் எங்கள் வீட்டில் இருந்து வந்தோம் கடந்த 5 வருடங்களாக அவர் காணவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை , போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார் தனது அம்மா கிடைத்த மகிழ்ச்சியில் திரு.ரகு மூன்று வருடமாக அம்மாவை பராமரித்து வந்த அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்திற்கும், சாலையில் பரிதாபமாக இருந்த தனது அம்மாவை காப்பகத்திற்கு அழைத்து வந்து சேர்த்த ஈரநெஞ்சம் அமைப்பிற்க்கும் , மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ROBERT BOSCH கம்பெனி மற்றும் Dr. ரமணி அவர்களுக்கும் மனதார ரகு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதனை அடுத்து தேவி அம்மாவை இன்று 05/06/2013 துடியலூர் காவல் நிலையத்தின் முன்னிலையில் அவருடைய மகன் ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த தேவி அம்மாவிற்கு உறவு கிடைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறது.


4) ரவி சக்சேனா. காசிபூர் டீ விற்பனையாளர். மாதத்தில் 20 நாள் உழைத்து எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பவர். மிச்ச பத்து நாட்கள் பொதுச் சேவைக்குச் செலவிடுகிறார், உறவினர்களின் 'பிசினசைப் பார், உன் பிழைப்பை முதலில் பார்' என்னும் எதிர்ப்பையும் மீறி!
                                                     

என்ன பொதுச் சேவை?  பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களை நல்ல தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சையளிக்க உதவுவது. அவருக்கும் விவரம் தெரியாமல்தான் இருந்ததாம் யதேச்சையாக சில வருடங்களுக்குமுன் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட ஒரு முதியவருக்கு உதவப் போய், முதன்முதலாக தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து மிரண்டிருக்கிறார். பிறகு தனியார் மருத்துவமனைகளில் பத்து சதவிகித உள்நோயாளிகளையும், 25 சதவிகித வெளிநோயாளிகளையும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு இவருக்குத் தெரிந்ததாம். 

டெல்லியில் இதுபோன்ற உத்தரவு 4பெற்ற 8 தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றனவாம். இவர்கள் அரசின் அரசாங்கத்திடமிருந்து குறைந்த விலையில் நிலம் பெற்றவர்கள். ஒருசில மருத்துவமனைகள் ஒத்துக் கொள்கின்றனவாம். ஒரு மருத்துவமனை கிட்னி பிரச்னை ஒன்றில் ஒருவருக்கு, 26 லட்ச ரூபாயை தள்ளுபடி செய்தாலும், இன்னொரு மருத்துவமனை வயிற்றில் புற்றுநோய் இருந்த ஒருவருக்கு உதவி செய்யாமல், அப்புறம் வழக்குப் போட்டு நடவடிக்கை எடுத்த பிறகு ஒத்துக் கொண்டதாம். 

உதவி பெற்றவர்கள் இவரை 'தெய்வம் அனுப்பிய தூதன்' என்கிறார்கள். இவர் அவர்களிடமிருந்து, மிகவும் வற்புறுத்தினால், எதிர்பார்ப்பது அதிகபட்சம் அரை கிளாஸ் டீ!  (முகநூல் வாயிலாக டைம்ஸ் ஆஃப்  இந்தியாவிலிருந்து)

17.5.13

பாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013 வரை.

     
எங்கள் B+ செய்திகள்.  

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   


- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   


- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள். 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =  
1)  வீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா!  

பழைய திரைப் படங்களில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அருகில் இருக்கும் டாக்டரை நோயாளி இருக்கும் வீட்டுக்கே அழைத்து வந்து,சிகிச்சை அளிப்பதைப் பார்த்துள்ளோம். இப்போது அதெல்லாம் மலையேறிய வழக்கமாகி விட்டது.தற்போது பெரும்பாலான மருத்துவர்களும் வசூல் ராஜாக்களாக, ராணிக்களாக மாறிக் கொண்டிருக்கிற காலம். மருத்துவத்தை சேவையாகப் பார்த்த மனோபாவம் மாறி, இன்று அது மாபெரும் பிசினஸ்!
    
தேவையற்ற பரிசோதனைகள், அனாவசிய மருந்துகள், அவசியமே இல்லாத கன்சல்ட்டேஷன் என மக்களின் பணத்தைப் பறிப்பதிலேயே பல மருத்துவர்களும் குறியாக இருக்க, சென்னை முகப்பேர் டாக்டர் வித்யா, விதிவிலக்காக நிற்கிறார். பல் மருத்துவரான வித்யாவின் வித்தியாசமான அணுகுமுறை வியக்க வைக்கிறது. வயதான மற்றும் உடல் நலம் இல்லாதவர்களின் பல் மருத்துவத்துக்காக அவர்களது இருப்பிடத்துக்கே போய் சிகிச்சை செய்து வருகிறார் வித்யா!
  
மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் அடங்கிய சின்னப் பெட்டி, வெள்ளை கோட், கழுத்தைச் சுற்றிய ஸ்டெத்தஸ்கோப் என வித்யாவின் தோற்றம், பழைய கருப்பு-வெள்ளை சினிமாக்களில் வரும் மருத்துவ முகங்களை ஞாபகப்படுத்துகின்றன. டாக்டருக்கான எந்த அலட்டலும் இல்லாமல், தனது டூ வீலரிலோ, தேவைப்பட்டால் மட்டுமே காரிலோ, சிகிச்சைக்காக சென்னையை வலம் வருகிறார் வித்யா.  
   
"நர்ஸா இருந்த எங்கம்மா கலிங்கராணிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். மருத்துவத்தை சேவையா பார்க்கக் கத்துக் கொடுத்தவங்க அவங்கதான். விருப்பப்பட்டுதான் பல் மருத்துவம் படிச்சேன்.

என்னைப் பொறுத்தவரை அது ஒரு கலை. ரொம்ப ரொம்ப கவனமா, அக்கறையா, அன்போட அணுக வேண்டிய ஒரு துறை. பல் மருத்துவம்கிறது இன்னிக்கு மிகப்பெரிய பிசினஸா வளர்ந்திட்டிருக்கு.
ஆஸ்பத்திரியோட பிரமாண்டம், அங்கே உபயோகிக்கப்படற பெரிய பெரிய மெஷின், வைத்திய செலவுன்னு எல்லாமே மக்களை பயமுறுத்துது. அதுக்குப் பயந்து, பல் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தறவங்களும்,சுய மருத்துவம் செய்துக்கிறவங்களும்தான் நிறைய பேர்…  பணம் பிரச்னையில்லைங்கிற நம்பிக்கையைக் கொடுக்கத்தான், ரொம்ப ரொம்ப குறைஞ்ச கட்டணத்துல சிகிச்சை கொடுக்க, 10 வருஷங்களுக்கு முன்னாடி கிளினிக் தொடங்கினேன்.

என்னோட கிளினிக்ல ஏழை, பணக்காரங்கன்னு எல்லோருக்கும் ஒரே மாதிரியான ட்ரீட்மெண்ட்தான். ஒரு முறை இலங்கையைச் சேர்ந்த பேஷண்ட், தன்னோட மாமியாரைப் பத்திச் சொன்னாங்க. படுத்த படுக்கையா இருந்த அவங்களுக்கு, பல் எல்லாம் விழுந்திருந்தது. பல் இல்லாததால சரியா சாப்பிட முடியலை. ரொம்ப பலவீனமா இருந்தாங்க. நோயாளிங்கிறதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பல் செட் கட்டவும் முடியாத நிலையில, ‘அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா’ன்னு கேட்டாங்க.

அவங்க வீட்டுக்குப் போய், அந்தம்மாவுக்கு பல் செட் கட்டறதுக்கான 5 கட்ட சிகிச்சைகளையும் வீட்லயே செய்து, நல்லபடியா கட்டி விட்டேன். அதுக்குப் பிறகு அவங்க நல்லா சாப்பிட ஆரம்பிச்சு, உடம்பும் மனசும் தேறினாங்க. அந்த வாழ்த்தும் அதுல கிடைச்ச மன திருப்தியும்தான் என்னோட ‘மொபைல் கிளினிக்’ ஐடியாவுக்கு அஸ்திவாரம்…”  என்று பின்னணி சொல்கிற டாக்டர் வித்யா, ரொம்பவும் வயதானவர்கள், நடமாடவே முடியாத நோயாளிகள், மனநலம் சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை தருகிறார்.
    
மற்றவர்களுக்கு தனது கிளினிக்கில். வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிப்பதற்காக உபரிக் கட்டணமெல்லாம் வாங்குவதில்லை! பற்களை சுத்தம் செய்வது, எடுப்பது, கட்டுவது, கிளிப் போடுவது, வேர் சிகிச்சை உள்ளிட்ட 90 சதவிகித சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யலாம் என்கிறார் வித்யா. ‘‘பெரும்பாலும் நான் தனியாவே போயிடுவேன். கொஞ்சம் பெரிய ட்ரீட்மென்ட்டுன்னா மட்டும்தான் அசிஸ்டென்ட்ஸ் கூட்டிட்டுப் போவேன்.
                                      
வயசானவங்களுக்கும், மனநலம் சரியில்லாதவங்களுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்கிறப்ப, அசாத்திய பொறுமை வேணும். தன்னையறியாம கடிச்சிடுவாங்க. வாந்தி எடுப்பாங்க. முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அதைவிடக் கஷ்டம். அத்தனை சுலபத்துல நம்மகிட்ட வரவே மாட்டாங்க.

முதல் ரெண்டு விசிட் சும்மா அவங்களோட பேசிப் பழகுவேன். கிஃப்ட் கொடுப்பேன். மூணாவது விசிட்லதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்பேன். சிகிச்சை முடியறபோது, அவங்கக்கிட்டருந்து கிடைக்கிற அந்த அன்பும் வாழ்த்தும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது…’’ – அன்பொழுகப் பேசுகிற டாக்டருக்கு, குடிசைவாழ் மக்களிடம் பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பிரபலப்படுத்துவதே அடுத்த திட்டமாம்! (நன்றி: கூகிள் ப்ளஸ்)
                                                 
2) 2012ல் நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும், திவ்யாவும்....

                                           

இந்த மாணவிகளை கட்டுரைக்காக சந்தித்தபோது, "பல ஐரோப்பிய நாடுகள் வெளிச்சம் இல்லாமல் பனியிலேயே மூழ்கிக் கிடக்கின்றன. மற்ற நாடுகளில் இல்லாத சூரியஒளி என்ற அற்புதம் நம்ம நாட்டுல அதிகமாவே இருக்கு...

மின்சாரப் பற்றாக்குறை என்று குறைகூறும் நம் ஆட்சியாளர்கள் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தால் என்ன என்று முற்போக்குத்தனமான தங்கள் கருத்தை கூறினர் இந்த மாணவிகள்...

3) சாதிக்க பணம் தடையாக இருப்பதில்லை என்ற அனுபவ மொழிக்கு இலக்கணமாக விளங்குகிறார் 14 வயது நிரம்பிய மகாலட்சுமி. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர், இந்த உயரத்தை அவ்வளவு சுலபத்தில் அடையவில்லை என்பதுதான் முக்கியம்.

‘‘பிறந்தது படிப்பது எல்லாம் சென்னையில்தான். அப்பா முகுந்த குமார் எலெட்ரிஷியன். உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். நான்தான் கடைக்குட்டி. மூன்றாவது அக்காவுக்கு செஸ் விளையாட்டு மேல் ஆர்வம் இருந்தது. எனவே அவள் விளையாடும் போதெல்லாம் உடன் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு வயது 5தான்.

‘இந்த விளையாட்டை நானும் கற்றுக் கொள்வேன்’ என்று அப்பாவிடம் சொன்ன போது மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அக்கா கல்லூரியில் சேர்ந்தபோது, அவளால் போதுமான நேரத்தை விளையாட்டுக்காக ஒதுக்க முடியவில்லை. அதற்காக நானும் பின்வாங்கவில்லை. விடாமல் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அத்துடன் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்று பரிசு வாங்க ஆரம்பித்தேன்.

இது தேசிய போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 2005ம் ஆண்டு அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சாம்பியன் போட்டியில் வெற்றியும் பெற்றேன். அடுத்த வருடமே ஆசிய போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தேன். அத்துடன் அதே வருடம், ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றேன்.

இங்கும் எனக்கு மூன்றாவது இடம் கிடைத்தது...’’ என்று சொல்லும் மகாலட்சுமி, முதல் இடத்தை பிடிப்பதற்காக பயிற்சியாளர் ரமேஷிடம் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற ரமேஷ், தனக்கு தெரிந்த அனைத்து நெளிவு சுளிவுகளையும் மகாலட்சுமிக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

‘‘பயிற்சி தந்த உத்வேகத்தில் 2010ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன். ஒரு சில நொடிகளில் முதல் வாய்ப்பை தவறவிட்டு மூன்றாவது இடம் வந்தேன். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளிலும் பரிசு கிடைத்தது. ஆனால், முதலிடம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.

நன்கு பயிற்சி எடுத்தும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் விருட்சமாக வளர்ந்தது. போட்டி நேரத்தில் ஏற்படும் டென்ஷன்தான் முதலிடத்தை நான் தவற விடக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன்...’’ என்றவர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியை ஜாலியாக எதிர் கொண்டுள்ளார்.

‘‘பதினான்கு வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் பங்கேற்றபோது படபடப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன். அதனால்தான் ஆசைப்பட்டபடி முதல் இடத்தை பிடிக்க முடிந்தது...’’ என்று மகாலட்சுமி சிரித்து முடிக்கவும், பயிற்சியாளர் ரமேஷ் தொடர்ந்தார். "ஐந்து வருடங்களுக்கு முன் செஸ் விளையாட்டுக்கான பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். முதல் மாணவியாக சேர்ந்தது மகாலட்சுமிதான். செஸ் விளையாட்டின் மேல் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், அதற்கு செலவு செய்யும் நிலையில் அவரது குடும்பச் சூழல் இல்லை.

திறமையான ஒருவரை பணமில்லாத காரணத்தால் ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே இலவசமாக மகாலட்சுமிக்கு பயிற்சி அளித்தேன். எங்கள் மையம், அவரது வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அதற்காக மகாலட்சுமி வருத்தப்படவில்லை. பதிலாக நாள்தோறும் பயிற்சிக்கு வந்தார். பல நாட்கள் பள்ளியில் இருந்து நேராக பயிற்சிக்கு வருவார். பயிற்சி இடைவேளையில் வீட்டுப் பாடங்களை செய்வார். இப்படி கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் மகாலட்சுமியால் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடிந்தது...’’ என்கிறார் ரமேஷ்.

                                            

விடைபெறும்போது மகாலட்சுமி சொன்ன பன்ச்தான் முக்கியமானது. ‘‘செஸ் என்பது வெறும் விளையாட்டல்ல. நமது நினைவாற்றலை அதிகரிக்க வைக்கும் ஒரு சக்தி. விளையாட்டில் எதிராளியை எப்படி மடக்கலாம் என்று யோசிப்போம். அந்தத் திறன் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்துக்கும் உதவும். அத்துடன் கணக்கு பாடமும் நன்றாக வரும்...’’

நன்றி : குங்குமதோழி

4) ஆகாயத் தாமரையை முற்றிலும் அழிக்க, "பயோ பைன்' மருந்தை கண்டுபிடித்துள்ள பேராசிரியர், ராஜேந்திரன்:

நான், மதுரையில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில், உயிர் தொழில்நுட்ப பிரிவு, தாவரவியல் பேராசிரியராக பணியாற்றுகிறேன். தமிழக நீர் நிலைகள், கோடையின் வெப்பத்தால் வற்றி விட்டாலும், பச்சை கம்பளம் போர்த்தியது போல், கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்க, ஆகாயத் தாமரையே காரணம்.

"வாட்டர் ஹயான்சித்' என, அழைக்கப்படும் ஆகாயத் தாமரைகள், நீர் நிலைகளிலிருந்து அதிகப்படியான நீரை உறிஞ்சி, வற்றச் செய்வதன் மூலம், நீர் நிலைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இது, நீரில் வாழும் ஒரு வகையான, களைச் செடி இனத்தை சேர்ந்தது. ஆகாயத் தாமரைகளை முற்றிலும் அழிப்பதற்கு, உள்ளாட்சி அமைப்புகள் சிரமப்படுகின்றன. நீர் நிலைகளில், புல்டோசர் மூலம் சுத்தம் செய்தாலும், முற்றிலும் அழிக்க முடியாத நிலை உள்ளது.சுத்தமான நீர் நிலைகளை விட, அசுத்தமான நீர் நிலைகளிலேயே அதிகம் வளர்வதால், இவற்றை அழிப்பதற்கான மருந்தோ அல்லது மாற்று நடவடிக்கையோ, இதுவரை எடுக்கவில்லை.
                                             

அதனால், ஆகாயத் தாமரையை மருந்து மூலம் ஒழிப்பதற்கு, நான் முயற்சித்து, "பயோ பைன்' எனும் மருந்தை கண்டுபிடித்தேன்.இதை, ஆகாயத் தாமரையின் மேல் பரப்பில் தெளித்தால், இரண்டே நாட்களில் பட்டுப் போய் விடும். இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால், நீர் நிலைகளில் இதை தெளிப்பதன் மூலம், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நீரில் உள்ள பாக்டீரியாக்கள், "லார்வாக்கள்' எனும் கொசுக்களின் முட்டைகள் போன்றவற்றையும் அழிக்கிறது.ஆகாயத் தாமரைகளை, நீர் நிலைகளிலேயே பட்டுப்போகச் செய்வதால், எவ்வித துர்நாற்றமும் வீசாது. தற்போது, ஒரு லிட்டர் பயோ பைனை, 350 ரூபாய்க்கு தயாரிக்கிறோம். உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், விலையை குறைக்கலாம். தொடர்புக்கு: 94439 98480.
             
5) சென்னை நகரில் மன நிலை பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பலர் திரிகின்றனர். அவர்களை பெரும்பாலோர் வேடிக்கை பார்ப்பர்; சிலர் பரிதாபப்படுவர்; சிலர் மட்டுமே உணவு வாங்கி தந்து செல்வர்.ஆனால், அவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால், இரவு, பகல் பார்க்காமல் எந்நேரமும் ஆஜராகி அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மீட்டு ஆதரவற்றோர் முகாமில் சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளார் சமூக சேவகர் வெங்கடேஷ், 48.திருவான்மியூரை சேர்ந்த இவர், பணிநேரம் தவிர மற்ற நேரத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...        
                                                     
மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? 
   
கடந்த, 1995ம் ஆண்டு, நான் கூரியர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். வேலை தொடர்பாக பழைய மகாபலிபுரம், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் நிர்வாண நிலையில் சாலையில் சுற்றி கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கானோர் பார்த்தபடி சென்றனர். அந்த பெண்ணின் நிலைமை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. உடனடியாக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று பழைய புடவை ஒன்று வாங்கி, அந்த பெண்மணிக்கு போர்த்திவிட்டு, அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆதரவற்றோர் இல்லத்தை தேடி ஒப்படைத்தேன்.அன்று எனக்கு ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த செயல் எனக்கு மிகவும் பிடித்து போனது. அன்று முதல் அதை ஒரு கடமையாக செய்து வருகிறேன். 
இந்த பணியில் ஒத்துழைப்பு இருக்கிறதா? நேரம் காலம் பார்ப்பீர்களா?
   
தற்போது, சென்னையில் ஆதவற்றோரை பார்த்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டுவிடுகின்றனர். போலீசாரும் அழைத்து தகவல் கொடுக்கின்றனர்.கடந்த 2007ம் ஆண்டு, அரசு பணி கிடைத்த பின்னும், இந்த கடமையை விட்டு விடவில்லை. பணிநேரம் தவிர மாலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை இந்த கடமையை செய்து வருகிறேன். 
      
இதற்கு மன அளவில் எப்படி தயாரானீர்கள்?
                
பல இடங்களில் பாதிக்கப்பட்டோர், பார்க்கவே அருவருப்பாக, நெருங்கவே முடியாத நிலையில் இருப்பர். அவர்களிடம் இருந்து கடும் துர்நாற்றம் வீசும். துவக்கத்தில் சங்கடமாக தான் இருந்தது. பிறகு அதுவே பழகி விட்டது. அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று, நம்மை போல மனிதர்களாக உருமாறியதை பார்க்கும் போது மிகவும் பெருமைப்பட்டு கொள்வேன். அவ்வாறு மாறிய ஒவ்வொருவரையும் என் கடமைக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.

மிக சிரமமான இந்த பணியில், பொருளாதார ரீதியில் எப்படி சமாளிக்கிறீர்கள்? 
                  
நான் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியவன். ஆனால், எனக்கு உதவி செய்வதற்காக சென்னை நகரின் பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், 20க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் உள்ளனர்.சில தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போன் செய்தால் உடனடியாக வந்து விடுவர். பலர் பணம் வாங்கமாட்டார்கள். ஒரு சிலர் கொடுப்பதை வாங்கி கொள்வர். இந்த பணிக்கு என் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். பல நேரங்களில் என் மகள், என்னுடன் வந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுள்ளார். இதில், என் அடுத்த வாரிசாக அவர் உருவாவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் தான்.

                 
6)  ஈரோட்டில் திரு .வெங்கட்ராமனால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீஏ எம் வி ஹோட்டல்.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மத்தியில் மிகப் பிரபலம்.


இவ்வுணவகத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள்.

                             
             
விழியிழந்தோருக்கு-20%தள்ளுபடி.

உடல் ஊனமுற்றோருக்கு-10 % தள்ளுபடி.
அரசுமருத்துவமனைக்கு வரும் மிகவும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.  
7) சிலி நாட்டில் ஒரு வீட்டில் திடீரென்று தீ பிடித்து கொண்டது. கார் குண்டு வெடித்ததால் அந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் ஒரு நாயும் பிறந்து 15 நாட்களே ஆன நாய் குட்டிகளும் இருந்தன.

அமெண்டா என்ற அந்த நாய் தான் ஈன்ற குட்டிகளை நெருப்புக்குள் பாய்ந்து ஒவ்வொன்றாக வாயால் கவ்வி எடுத்து கொண்டு வந்து தீ அணைப்பு வாகனத்தில் வைத்து காப்பாற்றியது.

         

தீ அணைப்பு வீரர்கள் அந்த நாயின் செயலை ஆச்சரியமாக பார்த்தனர். எல்லா நாய் குட்டிகளையும் காப்பாற்றிய அமெண்டா குட்டிகளின் பயத்தை போக்க அவைகளை அணைத்தபடியே படுத்து கொண்டு இருந்தது.
 
ஒரு நாய் குட்டி மட்டும் தீ காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது.கால்நடை மருத்துவருக்கு போன் செய்து அந்த நாய் குட்டிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
     
எங்கு பார்த்தாலும் வெடி குண்டு கலாச்சாரம் .இந்த நாய்க்கு இருக்கும் தாய் பாசம் கூட வெடிகுண்டு வைக்கும் அந்த நாய்களுக்கு இருப்பதில்லை. (முகநூல் -ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கம்) 
   
8) ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்த பெண், குதிரையின் மீது சவாரி செய்து கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக பெண்ணும் குதிரையும் சேற்றில் சிக்கி கொண்டனர்.    
                           

மீட்பு பணியாளர்கள் வரும்வரை குதிரையின் தலை சேற்றில் மூழ்காதவாறு தன் குதிரையின் கழுத்தை மூன்று மணி நேரம் தூக்கி பிடித்தபடியே இருந்தாரம் இந்த பெண்.  
                   
தானும் ஆபத்தில் சிக்கி இருந்தாலும் தன உயிருக்கு ஈடாக தன குதிரையின் உயிரையும் எண்ணி காப்பாற்றிய இப் பெண்ணை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். (முகநூல் -ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கம்)
9)பெங்களூரு: சிறுவயதில் பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையைத்துவக்கி, கடுமையாக உழைத்து, தற்போது கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் படிக்கவுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை, மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  
சிவக்குமார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மிகவும் ஏழ்மையான தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது 5வது வகுப்பு முதல் பேப்பர் போடும் தொழிலை மேற்கொண்டு வரும் தன்னம்பிக்கை மனிதர். தன்னுடைய வாழ்க்கை குறித்து சிவக்குமார் குறிப்பிடுகையில், "நான் எனது 5வது வகுப்பு படிக்கும் போதில் இருந்து பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த எனக்கு ஒரு தொழில் தேவைப்பட்டது. பின்னர் எனது 10ம் வகுப்பு முதல் தனியாக ஏஜென்சி ஒன்றை எடுத்து தற்போது வரை பேப்பர் விநியோகம் செய்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.
   
அந்த வருமானத்தில் இன்ஜினியரிங் முடித்துள்ள சிவக்குமார், கேட் தேர்வு எழுதி தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கல்வி பயில உள்ளார். "மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எனது வேட்கைக்கு என் தொழில் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஏனெனில் நான் எனது தொழிலை விரும்புகிறேன். இதன் மூலம் எனது குடும்பத்தை சிறப்பாக கவனித்துக்கொள்வதால், ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது" என்கிறார் சிவக்குமார்.
     
சிவக்குமாரின் தாயார் ஜெயம்மாவுக்கு தனது மகன் குறித்து மிகவும் பெருமிதம். 5ம் வகுப்பிலிருந்து தற்போது வரை அவன் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தளவு அவன் முன்னேறியது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அந்த தாய்.
                                       
சிறுவயதில், வறுமை காரணமாக, குடும்பத்தினரால் படிப்பிற்கு உதவமுடியாத சூழல் வந்த போது, தனது படிப்பிற்கு உதவும்படி ஒருவரை அணுகியுள்ளார் சிவக்குமார். அவருக்கு சிவக்குமாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், சிவக்குமாருக்கு உடனடியாக உதவி செய்யாமல், அவர் கல்வி கற்கும் பள்ளிக்கு வந்து அவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பின்னர், அந்த ஓராண்டிற்கான படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.
                        
எனது எதிர்கால நடவடிக்கை குறித்து சிவக்குமார் கூறுகையில், கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மில் தனது படிப்பை முடித்த உடன், எஜூகேட் இந்தியா பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அளிப்பதே தனது லட்சியம் என்கிறார் இந்த லட்சிய மனிதர்.
                  
10) எங்கள் விஎம் பவுண்டேசன் வழியாக நடத்தப்படும் பி.எஸ்சி டிஜிட்டல் பப்ளிசிங் பட்டப்படிப்பு முழுமையாக இலவசம். ஒரே தகுதி : +2 பாஸ் மற்றும் எங்கள் நுழைத்தேர்வில் தேர்ச்சிபெறவேண்டும். மேலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்தியாவிலேயே படிப்பதற்கு பணம் தருபவது இங்கேவாகத்தான் இருக்கும் :)

வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்களுக்கு இந்த பட்டப்படிப்பு ஒரு வாய்ப்பாக அமையும் .உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை தெரிவியுங்கள் நண்பர்களே!!

மேலும் விபரங்களுக்கு விஎம் பவுண்டேசன். : 04341252425, 9943094945
===============  
11) அகமதாபாத் ஆட்டோ ஓட்டுனர் ராஜு பர்வாத். 
       
  
ஒரு 'நோ பால்' போட சில லட்சங்கள், ஒரு 'ஒய்ட் பந்து' வீச மேலும் சில லட்சம் என்றெல்லாம் பேரம் பேசி சம்பாதிக்கின்ற இந்த நாட்களில், தன் பெயருக்குக் கொடுக்கப்பட்ட, தனக்கு உரிமை உள்ளதாகக் கருதப்பட்ட, ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் ரூபாய்கள் மதிப்புள்ள காசோலையை, திருப்பித் தந்துள்ளார், ராஜு.   
    
யார் கொடுத்தார்கள்? 
               
குஜராத் வாணிப வளர்ச்சிக் கழகம். (GIDC)  
    
ஏன் பணம் கொடுத்தார்கள்?    
    
டாட்டா நானோ கார் தொழிற்சாலைக்கு சனந் நகரில், ராஜூவின் மூன்று பிகா (சற்றேறக்குறைய ஒரு ஏக்கர்) நிலம் கையகப் படுத்தப் பட்டதற்காக. அரசாங்க ஏடுகளில் அந்த நிலம், ராஜு பெயரில் காட்டப்பட்டிருந்தது.   
       
ஏன் திருப்பிக் கொடுத்தார்? 
     
ராஜுவின் மூதாதையர்கள் வழியாக, அவர் பெயரிலும் ராஜுவின் அம்மா பலுபென் பெயரிலுமாக சேர்ந்து, பத்து பிகா நிலம் இருந்தது. அந்தப் பகுதியில் மூன்று பிகா நிலத்தை, முப்பது வருடங்களுக்கு முன்பு, ஐந்து லட்ச ரூபாய்களுக்கு ராஜூவின் தாத்தா விற்றிருந்தார். ஆனால், இந்த விற்பனை அரசாங்க ஏடுகளில் பதியப்படவில்லை. தன் பெயரில் நிலம் இருந்தாலும், அதில் தனக்கு உரிமை ஏதும் இல்லை என்பதால், காசோலையைத் திருப்பித் தந்தார்.   
     
பிறகு என்ன செய்தார்?   
    
நிலம் யாருக்கு உரிமையோ அவர்களின் விவரம் அரசாங்க ஏடுகளில் இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டார். அவர்களிடம் பணம் சென்று சேர ஏற்பாடு செய்தார். 
     
ராஜூ என்ன சொல்கிறார்? 
          
தன் மனைவி, மூன்று குழந்தைகள், வயதான அம்மா ஆகியோருடன், இரண்டே அறைகள் கொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் ராஜூ கூறுகிறார்: " என்னுடைய பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம், நேர்மை. நேர்வழியில் அல்லாது வந்த பணம் என் குடும்பத்திற்கு வேண்டாம். இப்பொழுது எனக்கு வருகின்ற மாத வருமானம் ஆறாயிரமும், என் பெயரில் உள்ள நான்கு பிகா நிலமும், நானும் என் குடும்பமும் கண்ணியமாக இன்றும், என்றும் வாழ போதுமானது!"
           
குஜராத் வாணிப வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரி நவீன் படேல் கூறுகிறார்: "எவ்வளவோ நிலத் தகராறுகள் எங்கள் கவனத்தில் வந்துள்ளன. இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை வேண்டாம் என்று ஒருவர் திருப்பி அளித்தது இதுவே முதன் முறை." 
              

11.5.13

பாசிட்டிவ் மே 5, 2013 முதல் மே 12, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   


- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   


- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

1) படம் சொல்லும் பாடம். வெட்டிக் காரணங்களுக்கு மரங்களை வெட்டுவோர் மத்தியில் வீடு கட்டியும் அங்குள்ள மரத்தைக் காப்பவர். (முகநூலிலிருந்து)

                           



2) படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர் ஜோலார் பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர். 1963-ல் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளிகளை தேடிச்சென்று சிகிச்சை அளித்து வருகிறாராம்...
                                                 


சொந்தமாக கிளினிக் இல்லை, மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ்டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை,
ஸ்கேன் கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்களுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில் தான், இத்தகு எளிமையான, சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திர வதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? வெறும் இரண்டு ரூபாய்தான்...

இவர் ஆயிரத்தில் ஒருவர் அல்ல, கோடியில் ஒருவர், இந்த கமிஷன் உலகத்திலும் மருத்துவ தொழிலை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வரும் மருத்துவர் திரு. சந்திரவதனனுக்கு பெருமையுடன் ஒரு சல்யூட் அடிப்போம்...!


 

 

13.4.13

பாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 7, 2013 முதல் ஏப்ரல் 13, 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


1) பெங்களூருவின் பசுமைப் புரட்சிக்கான முதல் வித்து- ஜேனட் யக்னேஷ்வரன்!
                                    


‘பூங்கா நகரம்’ என்கிற பெருமையுண்டு பெங்களூருக்கு. இன்று திரும்பின பக்கமெல்லாம் பச்சைக்கம்பளம் விரித்தது போல அழகாக வரவேற்கும் அந்த நகரத்தின் 10 வருடங்களுக்கு முந்தைய நிலைமையே வேறு! மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பொட்டல்வெளியாக மாறிக்கொண்டிருந்த அந்த நகரத்தை மீட்டு, அழகு நகரமாக, பசுமைப் பிரதேசமாக மாற்றிய புண்ணியம் ஜேனட் யக்னேஷ்வரனையே சேரும். கணவரின் நினைவாக அவர் தொடங்கிய ‘ட்ரீஸ் ஃபார் ஃப்ரீ’ அமைப்புதான், இன்றைய பெங்களூருவின் பசுமைப் புரட்சிக்கான முதல் வித்து!

‘‘முப்பது முதுகலை டிகிரி, 14 டிப்ளமோ, இன்னும் எக்கச்சக்க படிப்புகள் படிச்சு, லிம்கா சாதனைப் புத்தகத்துல இடம்பிடிச்சவர் என் கணவர் யக்னேஷ்வரன். 10 வருடங்களுக்கு முன்னாடி, சிறுநீரகம் செயலிழந்து இறந்துட்டார். அந்தத் துக்கத்துலேருந்து மீண்டு வர்றது எனக்கு அத்தனை எளிதானதா இல்லை. இறந்த பிறகும் தன்னோட உடலை ஆராய்ச்சிக்கு தானமா கொடுத்த அவரைக் கவுரவப்படுத்தற மாதிரி ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அந்த நேரம் என் துயரத்துக்கும் ஒரு மருந்து தேவைப்பட்டது.

பெங்களூருல மரங்கள் பெருவாரியா வெட்டப்பட்டுக்கிட்டிருந்த நேரம் அது. லேன்ட்ஸ்கேப்பிங் பண்ணிட்டிருந்ததால, ‘மரங்களை வெட்டறதைத் தடுக்க ஏதாவது செய்யக் கூடாதா’ன்னு மக்கள் என்னைக் கேட்க ஆரம்பிச்சாங்க. பெருகிட்டிருக்கிற போக்குவரத்தைக் கட்டுப்படுத்த, சாலைகளை அகலப்படுத்த, மரங்களை வெட்ட வேண்டிய கட்டாயத்துல இருக்கிற அதிகாரத்தோட சண்டை போட்டுப் பலனில்லைன்னு தெரிஞ்சது. மரங்களை வெட்டறவங்களோட போராடறதுக்குப் பதில், புதுசா மரங்களை நடறதுதான் சிறந்ததா பட்டது எனக்கு.

மரங்கள் வெட்டப்படறதை நினைச்சுக் கவலைப்பட்ட மக்களுக்கே, புதுசா மரங்கள் நடறதை ஏத்துக்க முடியலை. மரங்கள்லேருந்து குப்பைகள் விழுமே, டூ வீலர், கார்களை நிறுத்த இடமிருக்காதேன்னு யோசிச்சவங்கதான் அதிகம். ‘ட்ரீஸ் ஃபார் ஃப்ரீ’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். ஆரம்ப காலத்துல வீடு, வீடா போய், ‘மரம் நட ஒரு சின்ன இடத்தை மட்டும் கொடுங்க… நாங்க நட்டுட்டுப் போற மரத்துக்கு தண்ணீர் விட்டுப் பார்த்துக்கோங்க’ன்னு தேடிப் போய் கேட்டுத்தான் விழிப்புணர்வைக் கொண்டு வந்தேன். இப்ப, மக்களே எங்களை அணுகி, மரம் நட்டுத் தரச் சொல்லிக் கேட்கற அளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்திருக்கறதுல சந்தோஷம்’’ என்கிற ஜேனட், மரங்களுக்கு இழைக்கிற கொடுமைகளைப் புரிய வைத்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகளுக்கும் போதிக்கிறார்.

ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மா, சப்போட்டா மாதிரியான பழ மரங்களை நட்டுத் தருவதாகவும், அதன் மூலம் அவர்களுக்கு வருமானம் பெருகும் என்றும் சொல்கிற ஜேனட், மரக்கன்றுகளை யாருக்கும் தானமாகத் தருவதில்லையாம். விருப்பமுள்ளோருக்கு, அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று, தம் குழுவினரே நட்டுக் கொடுத்து விட்டு வருவதாகச் சொல்கிறார். இப்போதைக்கு பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மட்டுமே இந்தச் சேவையைச் செய்கிறவர், விரைவில் விரிவுபடுத்தும் திட்டத்திலும் இருக்கிறாராம்.

மரங்கள் நடுவதில் முன்னோடியான திம்மக்காவை சந்தித்ததைத் தன் வாழ்க்கையின் வசந்தகால அனுபவமாகக் குறிப்பிடுகிறார் ஜேனட்.‘‘எங்கக் குழு மொத்தமும் திம்மக்காவோட இருப்பிடத்துக்கே போயிருந்தோம். 3 கி.மீ. தூரத்துக்கு வெறும் மரங்கள் அடர்ந்த பாதையில, பறவைகளோட கிரீச் சத்தத்தையும், பட்டாம்பூச்சிகளோட பட்டு ஸ்பரிசத்தையும், இலைகள் உரசற ஒலியையும் கேட்டபடி, நடந்த அந்த அனுபவத்தை இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது. எங்க அமைப்போட முதல் ஆண்டுவிழாவுக்கு திம்மக்காவை சிறப்பு விருந்தினரா அழைச்சிருந்தோம். 3 நாள் எங்களோட தங்கியிருந்தாங்க. அவங்களோட உழைப்பும் உற்சாகமும்தான் எங்களுக்கான ஊக்கம்’’ என்கிற ஜேனட், வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

‘‘மாட மாளிகையோ, ஓலைக் குடிசையோ… உங்க வீட்டைச் சுத்தி கொஞ்ச இடத்தையாவது பசுமைக்கு ஒதுக்குங்க. உங்க ஆரோக்கியம், உங்க வீடு எத்தனை பெரிசு, எத்தனை பெட்ரூம் இருக்குங்கிறதைப் பொறுத்த விஷயமில்லை. உங்க வீட்டைச் சுத்தி பசுமைக்கு எவ்வளவு இடம் இருக்குங்கிறதைப் பொறுத்தது. உங்க ஆரோக்கியத்தைக் காப்பாத்தற செலவில்லாத, சிம்பிளான டாக்டர், மரங்கள் மட்டுமே...

நன்றி ஆந்தை ரிப்போர்டர்   (முகநூலிலிருந்து)

2)
இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூல் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான் அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது இவர் சரியாக ஒரு நாளைக்கு .
                                                 

..பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் ,மேலும் கம்மங்கூல் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பானை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார் இந்த
பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் (முகநூலிலிருந்து)

3)
இந்தியாவின் பழங்குடி இனங்களில் ஒன்று குறவர் இனம். குறவர்கள், தங்களது தனித் தன்மையான சில பழக்க வழக்கங்களால், சமுதாய நீரோட்டத்தில் கலந்தும் கலக்காமலும் உள்ளனர்.அவர்களது நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என்ற நோக்கில், குறவர் குடும்ப குழந்தைகளுக்கு, கல்வி பயிற்சி கொடுத்து வருகிறது
                                                          
"ரீயூனிட் டூ ரீடிபைன் இந்தியா' (ஆர்.ஆர்.ஐ.,) என்ற தொண்டு நிறுவனம். அதன் செயலர் அகிலனிடம் உரையாடியதில் இருந்து...
கல்வி பயிற்சிக்கு குறவர்களை தேர்ந்து எடுத்ததன் பின்னணி என்ன?
சுதந்திரம் அடைந்து, 66 ஆண்டுகள் ஆகியும், பல்வேறு சமூக மாற்றங்கள் வந்த போதிலும், தங்களது வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளாதவர்கள் குறவர்கள் மட்டுமே.தங்களது தொழிலுக்கு ஏற்ப இடம்பெயர்வதால், அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கே வாய்ப்பிருக்காது. அவர்களின் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உந்துதலில், குறவர்களின் வாழ்விடங்களை கண்டறிந்து, முகாம்கள் நடத்தினோம்.இதற்காக, பல ஆண்டுகள் முயன்றும், ஒருங்கிணைக்க முடியவில்லை. திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தில், அதிகளவு குறவர்கள் தங்குவதாக கேள்விப்பட்டு, கிராம தலைவரின் உதவியோடு, விழிப்புணர்வு முகாம் நடத்தினோம். அவர்களின், 65 குழந்தைகள் தற்போது பள்ளிக்கு செல்கின்றனர்.
எந்த விதத்தில் அவர்களின் ஒத்துழைப்பு இருந்தது?
துவக்கத்தில், பெரும் சிரமமாக இருந்தது. குறவர்கள் இடம் பெயர்வதற்கு காரணமே, குடியிருக்க நிரந்தர இடமும், வருமானம் தரும் நிலையான தொழிலும் இல்லாதது தான்.கிராம தலைவர் உதவியோடு, அந்த கிராமத்தில், 100 குடும்பங்கள் தங்க, அரசின் இலவச வீடுகள் கட்டி தரப்பட்டன. தோட்டம், கிராம வேலைகளில் ஈடுபடுத்தி வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்ததால், இடம் பெயரும் எண்ணத்தை கைவிட்டனர்.குழந்தை வளர்ப்பு முறை, தன் சுத்தம் ஆகியவற்றை எடுத்து கூறினோம். நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும், தொடர் முயற்சியால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஒத்துழைத்தனர்.கிராம பள்ளி தலைமையாசிரியர் உதவியோடு, 65 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு கிராமத்தில் உள்ள, 100 குடும்பங்களில் கல்வியை கொண்டு வருவதற்கே, 3 ஆண்டுகளாகி விட்டன.
சிறப்பு வகுப்புகளின் அம்சங்கள்?
எழுதக் கற்பித்தல், பின் எழுத்து கூட்டி வாசிப்பு, செய்தித் தாள் வாசிப்பு என, பல கட்டங்களாக கற்பித்தல் நடக்கிறது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு, ஆடியோ உதவியுடன் ஆங்கில வார்த்தை உச்சரிப்பு கற்று தரப்படுகிறது.எளிமையான ஆங்கில வார்த்தைகள், அவற்றின் பொருள் ஆகியவை கற்று கொடுக்கப்படுகின்றன. மாதந்தோறும் தேர்வு நடத்தி, பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, பல நாட்கள் அலுவலக விடுப்பு எடுத்து, தொடர்ச்சியாக மாணவர்களை ஒன்றிணைத்ததால், முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
இந்த முயற்சிக்கான உந்துதல் என்ன?
எங்கள் அமைப்பில், 10 பேர் மட்டுமே உறுப்பினர்கள். கல்லூரியில் படிக்கும் போதே, சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. தற்போது ஒவ்வொரு துறையிலும் உள்ள, நண்பர்களின் உதவியோடு, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.கடந்த, 2009ல் இந்த அமைப்பை துவக்கினோம். தற்போது சென்னை மட்டுமின்றி, கோவை, சேலம், டில்லி ஆகிய இடங்களிலும், எங்கள் அமைப்பு செயல்படுகிறது.குறவர் இனம் மட்டுமின்றி, ஏழை குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் முயற்சியில், இந்த அமைப்பை சேர்ந்த, 500 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், கல்லூரி மாணவர்கள் தான். rrindia.org என்ற இணையதளத்தில் எங்கள் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.   (தினமலர்)

 
4) R. பத்மகுமாரி மதுரை மதிச்சியத்தில் செய்யும் சேவைகளைப் பற்றி முகநூலில் படித்தேன். பல்வேறு விதத்தில் ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பங்களின் குழந்தைகளை அழைத்து பாடத்திலும், சொந்த விஷயங்களிலும் ஆலோசனைகளை, தினசரி மாலை 6 மணி முதல் 8.30 வரை வழங்குகிறார். அவரைப் பற்றியும் அவர் சார்ந்திருக்கும் அமைப்புப் பற்றியும் விளக்கமாகப் போட்டிருக்கிறார்கள்.

                          


5) விளக்கம் தேவையில்லை 1



6) விளக்கம் தேவையில்லை  2

9.3.13

பாசிட்டிவ் செய்திகள்... மார்ச் 3/2013 முதல் மார்ச் 10/2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  

=============================================================   
 1) மத்திய அரசின், "இளம் விஞ்ஞானி' விருது பெற்ற, சென்னை மாநிலக் கல்லூரி மாணவன், பிரபாகரன்:

                                   
பழநி அருகேயுள்ள, ஆண்டிப்பட்டி கிராமம் தான், என் சொந்த ஊர். அப்பா மயில்சாமி, விவசாயம் செய்கிறார். அப்பா, அம்மா படிக்கவில்லை என்றாலும், என்னை, நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். எங்கள் தலைமுறையில், முதல் பட்டதாரி நான் தான்.
கோவையில், பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜியும்; பழநி யில், எம்.எஸ்சி., தாவரவியலும்; மதுரையில் எம்.பில்., லும் படித்தேன். தற்போது, சென்னை மாநிலக் கல்லூரியில், ஆய்வு மாணவராக ஆராய்ச்சி செய்கிறேன்.
இதுவரை, 10 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து, இந்தியாவிலும், சர்வதேச அளவிலும், பாராட்டு பெற்றேன். என் ஆய்வு கட்டுரைகளைப் பாராட்டிய மத்திய அரசு, "இளம் விஞ்ஞானி' விருது வழங்கியது. மாநிலக் கல்லூரியின் வரலாற்றில், முதல் மாணவனாக, இவ்விருதைப் பெற்றேன்.
ஒரு முறை, அப்பா, அதிக அளவில் துவரை பயிரிட்டார். பூச்சிகளின் தாக்குதல் அதிகளவு இருந்ததால், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே, பூச்சிகள் தாக்க முடியாத, துவரை இனத்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டேன். சாதாரணமாக துவரையை பயிரிட்டால், துவரை செடியில் ஒரு தண்டு உருவாகி, கிளை பிரியும். ஆனால், என் கண்டுபிடிப்பில், மூன்று முதல் ஆறு தண்டுகளைக் கொண்ட செடியாக வளர்ந்து, அதிக மகசூலை தருவதுடன், பூச்சிகளின் தாக்குதலும் இருக்காது. பரிசோதனை வெற்றியில் முடிந்ததால், அரசின் அனுமதி பெற்று, விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

உணவு மற்றும் மருந்துகளுக்கு, இயற்கையாக நிறங்களை தரும் நிறமிகளை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.

இதற்கு, வெளிநாடு செல்லவும், அரசு அனுமதித்துள்ளது. ஆய்வுகள் இறுதி கட்டத்தில் இருப்பதால், உணவு மற்றும் மருந்துகளில், இயற்கை நிறமிகளை எதிர்பார்க்கலாம்.

2) ‘‘அரசு வழங்குகிற முதியோர் உதவித்தொகை வாங்குகிறீர்களா?’’ என்று கேட்டால் பாட்டியின் முகம் கோபத்தில் சிவக்கிறது. வயது 103.

                                              
 ‘‘உழைக்காம வாங்குற காசு உடம்புல ஒட்டுமா..? என் உழைப்பால வர்ற காசு எனக்குப் போதும். உடம்புல வலு இருக்கிற வரைக்கும் என்னால உழைச்சுச் சாப்பிட முடியும். புள்ளைகளுக்கே சுமையா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் இன்னமும் யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அரசாங்கத்துக்கு சுமையா இருக்கச் சொல்றீகளே... வேணாம் தம்பி...’’ என்கிறார் சீதாப்பாட்டி.

3) மது அரக்கனால் பாதிக்கப்பட்ட பலப்பல குடும்பங்களில் பெண்களின் கண்ணீர் கண்டு அந்தப் பெண்களை ஒன்று திரட்டி 'அக்னியஸ்த்ரி ' என்ற அமைப்பை உருவாக்கி போராக் கற்றுத் தருகிறார் நிர்மல்.

                                              

4) ‘‘நேர நிர்வாகம்கிற வார்த்தை ஜாலம் பத்தியெல்லாம் எங்க கிராமத்து மக்களுக்குத் தெரியாது. ஆனா, அவங்க அளவுக்கு வேற யாரும் நேரத்தை முறையா நிர்வாகம் பண்ண முடியாது. மரபுவழி வந்த அவங்க வாழ்க்கை முறையிலேயே எல்லா இலக்கணங்களும் உள்ளடங்கியிருக்கு... - கனிவும் பணிவுமாகப் பேசுகிறார் சாந்தி மதுரேசன்.


                                           

இந்தத் தோழியின்
பன்முகங்கள்
‘தானம்’ மக்கள் கல்வி
நிலையத்தின் இயக்குனர்

‘களஞ்சியம்’ பரஸ்பர
இயக்கத்தின்
முதன்மை நிர்வாகி

இந்திய குறுநிதி
கூட்டமைப்புகளுக்கான
பேரிணையத்தின் (இன்போஸ்) முதன்மை நிர்வாகி

பத்தரை லட்சத்துக்கும் அதிக அங்கத்தினர்களை உள்ளடக்கி சத்தமேயில்லாமல் மிகப்பெரும் மக்கள் புரட்சியை நிகழ்த்தி வரும் மதுரை ‘தானம்’ அறக்கட்டளையின் தூண்களில் ஒருவர். இந்திய பிரதமரையே கால் தொட்டு வணங்க வைத்த சின்னப்பிள்ளையைப் போல ஆயிரக்கணக்கான கிராமியத் தலைவிகளுக்கு அடையாளம் கொடுத்தவர். 12 மாநிலங்களைச் சேர்ந்த ஐந்தரை லட்சம் பெண்கள் ஒருங்கிணைந்து இயங்குகிற களஞ்சியம் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறாக ஓடிய கள்ளச்சாராயத்தை பெண்களைத் திரட்டி அழித்தொழித்தவர்.

அகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் ‘மேனேஜ்மென்ட் எஜூகேஷன் புரோகிராம்’ படித்த சாந்தி, இப்போது பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து லட்சக்கணக்கான பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இவர், தனது வெற்றிக்கான அடிப்படையாக நேர நிர்வாகத்தையே சுட்டிக்காட்டுகிறார்.

 இவரைப் பற்றிய விவரமும், இவர் எப்படிப் போராடி இந்த அமைப்பி முதலில் பிரதான் என்ற பெயரிலும் பின்னர் களஞ்சியம் என்ற பெயரிலும் உருவாக்கினார், நேர மேலாண்மையை  கடைப் பிடிக்கிறார் என்பது பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார்கள் இந்த முகநூல் பக்கத்தில்.

முதல் கட்டமா கடலூர்ல நடந்த ‘அக்னிஸ்திரீ’ விழிப்புணர்வுக் கூட்டத்துல 80 ஆயிரம் பெண்கள் கலந்துக்கிட்டாங்க. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க முழுவேகத்துல களமிறங்கப் போறாங்க எங்களோட நெருப்புப் பெண்கள்...’’ என்கிறவரின் பேச்சில் அத்தனை ஆதங்கம், ஆவேசம்!
‘‘அக்னிஸ்திரீ’ அமைப்புல சில திட்டங்களையும் பயிற்சிகளையும் வச்சிருக்கோம். குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ற ஆண்கிட்ட சண்டை போடாம, திட்டாம, அவர் நிதானத்துக்குத் திரும்பின பிறகு, குடும்ப உறவுகள் சூழ உட்கார்ந்து அவர் ஆழ்மனசைத் தொடற மாதிரிப் பேசறதுக்கான பயிற்சிகள் இதுல உண்டு.

பாதிக்கப்பட்ட நபரே, தன் தவறை உணர்ந்து, குடிப்பழக்கத்தை விட்டு விலகச் செய்யற அளவுக்கு ரொம்பவும் சக்தி வாய்ந்த பயிற்சி இது. அடுத்து ‘நமக்கு நாமே’ங்கிற திட்டத்துல மது அடிமைகளைக் கூப்பிட்டு, அவங்களோட தனிப்பட்ட தகுதிகளை அவங்களை விட்டே எழுதச் சொல்லி, உளவியல் நிபுணரோட ஆலோசனைகளையும் கொடுத்து, மனம் திருந்த வைக்கிறது. ‘குடும்பங்களின் குடும்பம்’னு இன்னொரு திட்டம். உன் வீட்டு ஆம்பிளை குடிச்சிட்டு, அடிதடியில இறங்கினா ‘எனக்கென்ன’ன்னு போகாம, ஊரே திரண்டு வந்து அநியாயத்தைத் தட்டிக் கேட்கறது... இப்படி இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கு.

ஒவ்வொரு ஊர்லயும் பத்து பெண்கள் சேர்ந்து, எங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அவங்க அக்னிஸ்திரீ அமைப்புல இணைய அங்கீகாரம் கொடுப்போம். இந்த உலகத்துலயே மிகச்சிறந்த முதலீடு, மனித முதலீடு. பெண்கள் நினைச்சா, எதையும் சாதிக்கலாம். ‘தனியாக இருக்கிறபோது எதுவுமில்லாதவர்கள், சேர்ந்திருக்கும்போது எல்லாம் ஆகிறார்கள்’னு சொல்வாங்க. பெண்கள் சமுதாயம் ஒன்று சேர்ந்தா, எந்த இடத்துலயும், யார்கிட்டயும், எதுக்காகவும் ஏமாறாம வாழ முடியும்.

ஊர்கூடித் தேர் இழுக்கற ‘அக்னிஸ்திரீ’யோட கதவுகள், பெண்களுக் காக எப்போதும் திறந்தே இருக்கும். அப்பா, சகோதரன், கணவன், பிள்ளைகள்னு குடிகார ஆண்களோட வன்முறைச் செயல்கள், இனி அடுத்த தலைமுறைப் பெண்களை நிச்சயம் தாக்காது...’’ - நம்பிக்கையளிக்கின்றன நிர்மலின் வார்த்தைகள்.

5) தேக்கடி வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி ஆவணங்களுடன் தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாயை நேர்மையான ஓட்டல் தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்.தேக்கடி தனியார் ஓட்டலில் வேலை பார்ப்பவர் சுகுமார் (35). இவர் குமுளி காந்தி நகர் காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் குமுளி ஆனவச்சால் பகுதி வழியாக வரும்போது, கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தார். அதில் வெளிநாடு சுற்றுலா செல்லும் ஆவணங்களும், ஸி50 ஆயிரமும் இருப்பது தெரிந்தது. உடனடியாக சுகுமார் அந்த பையை குமுளி போலீசில் ஒப்படைத்தார்.

                                                                             
போலீசார் பையை சோதனை செய்தனர். அதில் இருந்த ஆவணங்கள் மூலம் அதன் உரிமையாளர் ஜெர்மனி ஏர்போர்ட் இன்ஜினியராக உள்ள என்ரிக்கோ (41) என தெரியவந்தது. பையில் அவரது ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பான் கார்டு, இந்திய ரூபாய் 7,500, ரூ.42 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய யூரோ கரன்சி ஆகியவை இருந்தது. பையில் இருந்த தொலை பேசி எண் மூலம் போலீசார், என்ரிக்கோவு க்கு தகவல் தெரிவித்தனர்.

குமுளி வந்த அவர், சுற்றுலா வந்தபோது பையை தவற விட்டதாக தெரிவித் தார். பின்னர் அவரது பையை, ஓட்டல் தொழி லாளி சுகுமார் கையாலேயே பெற்றுக் கொண் டார்.இதுகுறித்து என்ரிக்கோ கூறுகையில், ‘இந்தியர்கள் நேர்மையானவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இப்போது அதை நேரில் பார்த்து விட்டேன்’ என்றார்.
பின்னர் அவரது பையை, ஓட்டல் தொழிலாளி சுகுமார் கையாலேயே பெற்றுக் கொண் டார்.


6) பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளி வருகிறது ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவை ஓட்டி வருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணை பார்த்து, பலரும் வாழ்த்து தெரிவிக் கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி, தன் பயணத்தை தொடர்கிறார். இவரது இந்த ஆட்டோ ஓட்டுனர் பணி, இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் முதல், இவர் காக்கி சீருடையை கழட்டி வைத்துவிட்டு, கறுப்பு கவுனை மாட்டி, நீதிமன்றத்தில் வாதாடப் போகிறார்.

                                                 
ஆம்... ஆட்டோ டிரைவர் வெங்கடலட்சுமி, வழக்கறிஞர் வெங்கடலட்சுமி ஆகிறார். இது ஒன்றும் ஒரு நாள் கதை அல்ல, அவரது மனதிற்குள் விழுந்த பல நாள் விதை. எளிய குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமிக்கு, டிகிரி முடித்த கையோடு திருமணம் ஆகி விட்டது. கணவர் வெல்டிங் வேலை செய்பவர். திருமணத்திற்கு சாட்சியாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
பெண் குழந்தையை நல்லதொரு பள்ளியில் சேர்த்தார். படிப்பு செலவு அதிகமானது. கணவரது வருமானம் போதவில்லை. தனக்கு தெரிந்த சமையல் வேலையை மேற்கொண்டார். ஐம்பது, நூறு பேரின் தேவைக்கு, வீட்டிலேயே சமைத்து, எடுத்துப்போய் கொடுத்து, வருமானம் பார்த்து வந்தார். சமைத்த உணவுகளை எடுத்துப் போக வேண்டிய ஆட்டோ டிரைவர், பல சமயம் வராமல் போய், தொழிலில் சங்கடத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, இவரே ஆட்டோ ஓட்டுவது என்று முடிவு செய்தார்.
ஆட்டோ வாங்கியதும், பலரும் இவரது ஆட்டோவில் பயணம் செய்ய விருப்பப்படவே, சமையல் தொழிலை விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுனராகி விட்டார். மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பது இல்லை. வாடிக்கையாளரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசுதல் போன்றவற்றால், இவருக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடியது. இப்படியே சில ஆண்டுகள் ஓடியது. இந்த நிலையில் தான் ஒரு நாள், ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் இவரை தாக்கி, கடத்தி, விபச்சார கும்பலிடம் விற்பதற்கு முயன்றது. மிகவும் போராடி தப்பிய வெங்கடலட்சுமி, உடனே, போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இவரது புகார் அங்கே கண்டு கொள்ளப்பட வில்லை. "நாளைக்கு வாம்மா, அப்புறம் வாம்மா' என்று அலைக்கழிக்கப்பட்டார். குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில், தீவிரமாக இருந்த வெங்கடலட்சுமி, வழக்கு பதிவு செய்ய மிகவும் சிரமப்பட்டார். கோர்ட்டில் வெங்கடலட்சுமி சார்பில் வாதாடிய வழக்கறிஞரின் வாதத்தில் உயிரே இல்லை. மேலும், இந்த வழக்கை கோர்ட்டிற்கு கொண்டு வருவதற்கே பதிமூன்று ஆண்டு களாகி விட்டது.
தன்னைப் போல எத்தனை அபலைப் பெண்கள் இப்படி சத்தில்லாத, உணர்வில்லாத, உயிரில்லாத வாதத்தால் மோசம் போய்க் கொண்டு இருக்கின்றனர் என்று உணர்ந்து, அப்போதே தானும் ஒரு வழக்கறிஞராவது என்று முடிவு செய்தார். சட்டக்கல்வியை தபால் மூலம் படிப்பதால் பலன் இல்லை என்பதால், தன் 36வது வயதில், கல்லூரியில் சேர்ந்தார். காலை 8:00 மணியில் இருந்து, மதியம் 2:00 மணி வரை கல்லூரி வாழ்க்கை. பிறகு மதியம் 2:00 மணி முதல், இரவு வரை ஆட்டோ ஓட்டும் பணி. ஆட்டோவிலேயே பாட புத்தகங்களை வைத்திருப் பார். வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் நேரத்திலும், ஆட்டோவை ஓட்டாத நேரத்திலும், பாட புத்தகங்களை படிப்பார். வீட்டிற்கு போனதும், அன்றைய பாடக் குறிப்புகளை படித்து முடித்து விட்டே தூங்கப் போவார்.


இப்படியான இவரது ஐந்து ஆண்டு படிப்பு வீண் போகவில்லை. நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றிகரமாக, எல்.எல்.பி.,படித்து முடித்தார். ஆனாலும், பார் கவுன்சில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான், வழக்குகளில் ஆஜராக முடியும் என்ற நிலை. அந்த தேர்வையும் வெற்றிகரமாக முடித்ததன் எதிரொலியாக, வருகிற மார்ச் மாதம் முதல் கோர்ட்டிற்கு வழக்கறிஞர் வெங்கட லட்சுமியாக செல்ல இருக்கிறார். "ஒரு நியாயமான ஆட்டோ ஓட்டுனராக இருந்த நான், இனி நேர்மையான, அதே நேரத்தில், சமூகத்தில் நீதி கிடைக்காத பெண்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக இருப்பேன்...' என்கிறார் உறுதியாக. பெண்கள் தினம் கொண்டாட இருக்கும் இத்தருணத்தில், இவரது சாதனையை பாராட்டி வாழ்த்துவோம்.


7) வரும் 18ந் தேதி இ2ஓ எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா ரேவா கூட்டணி. இந்தியாவின் முதல் 4 சீட்டர் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது.

இந்த புதிய எலக்ட்ரிக் காரில் 39.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                                          
பெங்களூரில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில், "எதிர்காலத்துக்கு தேவையான போக்குவரத்து தீர்வாக இந்த எலக்ட்ரிக் காரை முன்னோடியாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்," என்றார்.

லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை செல்லலாம் என மஹிந்திரா ரேவா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் காரில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு 50 பைசா மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


18ந் தேதி அறிமுகமாகிறது 4 சீட்டர் எலக்ட்ரிக் கார்! வரும் 18ந் தேதி இ2ஓ எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா ரேவா கூட்டணி. இந்தியாவின் முதல் 4 சீட்டர் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது.


8) மும்பையின் ஒர்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் எம். பிரகாஷ் (35) என்ற தமிழர், மார்ச் 8ம் தேதி அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்த இருக்கிறார். கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து ராய்கட் மாவட்டம் ரேவாஸ் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரம் நீந்தி பிறகு அங்கிந்து திரும்புவார். இந்த 42 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி நேரத்தில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். பிரகாஷ் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் பாதிக்கப் பட்டவர்.

                                                          
எனினும் தனது அயராத முயற்சியால் பல சாதனைகளை செய்துள்ளார். நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 81 தங்கம், 29 வெள்ளி மற்றும் 27 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, மும்பை-ரேவாஸ்-மும்பை ஸ்விம்மதான் போட்டியில் கலந்து கொண்டு இந்த உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார். ஒர்லி, மோதிலால் நகரில் உள்ள மதராஸ்வாடியில் பிறந்த பிரகாஷ், அங்கேயே வசித்து வருகிறார். அந்த பகுதியில் அரபி கடலில் கடக்கும் ஒரு சாக்கடை நீரில்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் நீச்சலை அவர் கற்றுக் கொண்டார்.

பின்னர் உள்ளூரில் நடந்த நீச்சல் போட்டி ஒன்றில் அவர் பங்கேற்றார். அதை நேரில் பார்த்த மூத்த போலீஸ் அதிகாரியான பாலாசாகேப் காட்கே (தற்போது உதவி போலீஸ் கமிஷனராக இருக்கிறார்) பிரகாசிடம் மறைந்து கிடக்கும் திறமையை கண்டு ஆச்சரியமடைந்தார். ஒர்லி, போலீஸ் முகாமில் உள்ள நீச்சல் குளத்தில் பிரகாஷுக்கு முறைப்படியான நீச்சல் பயிற்சி அளிக்க அவர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

தனது நீச்சல் திறமைக்கும், நீச்சல் போட்டிகளில் இத்தனை பதக்கங்கள் கிடைத்ததற்கும் போலீஸ் அதிகாரி காட்கேதான் காரணம் என்று பிரகாஷ் நன்றியுடன் குறிப்பிட்டார். மேலும் வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச பெண்கள் தினம் என்பதால் அந்த நாளில் இந்த உலக சாதனையை நிகழ்த்தி அதை தன் தாயார் எம்.பாலசுந்தரிக்கு அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

பிரகாஷ் கடந்த 18 ஆண்டுகளாக நீச்சலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சுவாபிமான் சங்கட்டணா தலைவர் நிதேஷ் ராணே மற்றும் வருமான வரி கமிஷனர் வி.மகாலிங்கம் ஆகியோர் கொடுத்த ஊக்கம் காரணமாகவே வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைக்க உள்ளார்.

பிரகாஷுக்கு சத்யா என்ற மனைவி, 6 வயதில் ஹரிஹரன் என்ற மகன் மற்றும் 4 வயதில் வர்ஷினி என்ற மகள் உள்ளனர்

9) தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.

இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு "டாஸ்மாக்' கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.

                                       

சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி:

ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.

மூக்கம்மாள், சரந்தாங்கி:

மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.


10) படத்திலிருப்பவர் பெயர் ராதாகிருஷ்ணன் என்று படித்த நினைவு. படித்த இடத்திலேயே பெயர் தவிர வேறு விவரம் இல்லை. படங்கள் பேசும் இவர் சேவையை என்று மட்டுமே பார்த்தேன். குறித்து வைத்திருந்த அந்தப் பெயர் விவரம் சேமிக்கப் படாததால் சரியான விவரம் கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும்.