மலரும் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலரும் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.8.13

பாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள்


கபடி விளையாடியிருக்கிறீர்களோ.... நான் விளையாடி இருக்கிறேன். எங்கள் டீம் ஜெயிக்க நான் காரணமாயும் இருந்திருக்கிறேன்.

நம்புங்கள். நிஜம்.

தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் இருந்த காலம். சுதந்திரதினம், குடியரசுதினம் வந்தால்  போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று காலனியே அமர்க்களப்படும். சுமார் 300 வீடுகள்.

                                               
சந்தோஷமான பதின்ம தினங்கள்! உற்சாகமாக எல்லோரும் பங்கு கொள்வோம். பெரும்பாலும் நான் பார்வையாளனாகப் பங்கு கொள்வேன்.

பின்னே?

எல்லோரும் போட்டியிடச் சென்று விட்டால் ஆடியன்ஸாக யார் இருப்பது? யார் கை தட்டுவது? எனவே அந்தப் பணியை நான் சிறப்பாகச் செய்து வந்தேன்.

                     

ஆனாலும் வயசுக் கோளாறு! 'சில' காரணங்களால் சில நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவேண்டி வந்தது. அதில் கிரிக்கெட் மேட்ச் ஒன்று. இன்னொன்று கபடி. கிரிக்கெட் மேட்சில் பெயர் கொடுத்ததும் காலனி முழுக்க ஒரே பேச்சாயிருந்தது. 'ஸ்ரீராம் விளையாடறானாமே.. பெயர் கொடுத்திருக்கானாம்.....' என்று. எந்தத் தெருவுக்குப் போனாலும் இதே பேச்சு. 

பேசியவர்கள் யார்? பேசியவர்'கள்' இல்லை, பேசியது............. நான்தான்!

நான் நல்ல பேட்ஸ்மேன் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. முதல் வாரம் முழுவதும் பயிற்சி பொறி பறந்தது.

                                                          

விளையாடும் நாள் அன்று எங்கள் டீம் கேப்டன் டீமை அறிவித்தார். நான் '12த்' மேன். வெறுத்துப் போனேன். வெள்ளை பேன்ட் வெள்ளைச் சட்டை, வெள்ளைத் தொப்பி என்று கடன் வாங்கிப் போட்டு வந்திருப்பது, விளையாடுபவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கவும், பந்து பொறுக்கிப் போடவும்தானா?  ஓரமாக நின்று நான் வெறுப்புடன் வேடிக்கை பார்க்க, ஆட்டம் தொடங்கியது.

முதல் இரண்டு ஓவர் முடிவதற்குள்ளாகவே சிறிய பரபரப்பு இருந்தது. தர்ட் டவுன் இறங்கவேண்டிய பேட்ஸ்மேன் வரவில்லை. என் நண்பர்கள் அப்போதே என்னைப் பார்த்தபடியே கை தட்ட ஆரம்பித்து விட்டார்கள். கேப்டன் என் அருகில் வந்து காதைக் கடிக்க, ('ஆ....வலிக்கிறது' என்று நான் அலறவில்லை) போர்டில் மூன்று ஓட்டங்கள் இருந்த நிலையில் இரண்டு பேர்கள் 'பெவிலியன்' திரும்பி இருந்தார்கள்.

                                                     

பெவிலியன் என்ன பெவிலியன்?  பெவிலியன் என்பது மைதானத்துக்கு அருகில் இருந்த பாலர் பள்ளிதான். எனவே, நான் உடனே இறங்க வேண்டிய கட்டாயம். 

'நல்லா அடித்து ஆடு.... ஸ்கோர் ஏறணும்...'  கேப்டன் சொல்லி அனுப்பினான். மண்டையை 'ஓகே'  என்ற அர்த்தம் வரும் வகையில் ஆட்டினேன். கட்டைவிரலை உயர்த்திக் காட்டி விட்டு 'பேட்டை'க் கையில் எடுத்தேன்.  

'பேட்டை'க் கையில் வைத்து சுழற்றியபடி நான் மைதானத்தின் உள்ளே நுழைந்தேன். டிவியில் பார்த்ததில்லையா என்ன?

அடுத்த இரண்டு ஓவர்கள் நான் ரன்னராகவே நிற்க வேண்டி இருந்தது. அவ்வளவு பயிற்சி எடுத்திருந்த எனக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காதது குறையாகவே இருந்ததற்குக் காரணம் என் திறமையில் எனக்கிருந்த நம்பிக்கை. அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஒரு சிங்கிள் எடுக்க, எனக்கு வந்தது வாய்ப்பு. நான் ஏற்பாடு செய்து வைத்திருந்த இரண்டு மூன்று பேர்கள் சோகையாக கை தட்டினார்கள்.

பௌலர் ஓடி வந்தான்.

                                                    

எப்போது பந்தை வீசினான், எப்போது ஸ்டம்ப் பெயர்ந்தது என்று தெரியாது. ஸ்டம்ப் பெயர்ந்தது தெரியாமல் நான் சில நொடிகள் நின்று விட்டு, அப்புறம் எல்லோரும் திட்டிய பிறகு திரும்பி ஸ்டம்பைப் பார்த்து விட்டு உள்ளே வந்தேன். பௌலருக்கு என்னைப் போலவே அவன் திறமையில் நம்பிக்கை இருந்திருப்பதும், அவன் முந்தின வாரம் மட்டுமல்ல, தினமுமே ப்ராக்டீஸ் செய்வதும்  பின்னர் தெரிய வந்தது. எங்கள் டீம் பத்து ரன்னுக்கே அவுட் ஆனதும், எதிரணியினர் அதை இரண்டே ஓவர்களில் எடுத்ததும் உங்களுக்குத் தெரிய வேண்டாம்.

கபடி என்று அல்லவா ஆரம்பித்தான் இவன், என்னமோ சொல்லிக் கொண்டு இருக்கிறானே என்று நீங்கள் பொறுமை இல்லாமல் ஸ்க்ரால் செய்வது தெரிகிறது. என்ன செய்ய எந்தத் தலைப்பில் பேத்த, ச்சே... ஸாரி, பேச ஆரம்பிக்கிறேனோ...ஓ ... அதுவும் தவறா? சரி, எழுத ஆரம்பிக்கிறேனோ அந்தத் தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குக் கடைசியில்தானே வருவேன்.... உங்களுக்கே தெரியுமே....

22.5.13

சந்தோஷங்கள்


பழைய நினைவு ஒன்று. நானும் தாத்தாவும் அந்த ஹோட்டலுக்குள் நுழைகிறோம். என்னென்னவோ வாசனைகள் நாக்கின் சுவை நரம்பைத் தூண்டி எதிர்பார்ப்பைக் கிளப்புகின்றன.

தாத்தா ஆர்டர் கொடுக்கிறார். (என்னைக் கேட்காமலேயே)

                                            

"ரெண்டு பேருக்கும் ரெண்டு இட்லி, ஒரு தோசை"

என்னென்னவோ ஹோட்டலில் இருக்கும்போது இவர் ஆர்டர் செய்ய இதுதானா கிடைத்தது என்று நினைத்துக் கொள்கிறேன்.

அப்புறம் ஒருமுறை மாமாவுடன் ஹோட்டல் சென்றபோதும் இதே அனுபவம்.

என்னவோ அவர்களுக்கெல்லாம் ஹோட்டல் போனால் இதைத்தான்-இதை மட்டும்தான் சாப்பிட வேண்டும் - என்று எண்ணம் போலும்.

                   

பரோட்டா என்கிற வஸ்துவை அப்புறம்தான் பார்த்தேன், சந்தித்தேன்! அதை நாங்கள் அப்போது புரோட்டா என்று சொல்லுவோம். ஆமாம் இந்த பரோட்டா எத்தனை வருடங்களாகத் தமிழ் நாட்டில் அறிமுகம்? கூகிள் செய்து பார்க்க வேண்டும்!

தோசை, இட்லி, சேவை நாழி வைத்து கிரேசி தீவ்ஸ் படத்தில் வருவது போன்ற தொடர்ச்சியான மென்மையான, அழகான சேவை, உப்புமா வகையறாக்கள் சப்பாத்தி, குருமா என்று சகலமும் வீட்டிலேயே கிடைத்து வந்த நாளில் இவர்கள் எல்லாம் ஹோட்டலுக்குப் போயும் இதே இட்லி, தோசையைச் சாப்பிடுவது எரிச்சலாக இருந்தது. என்ன செய்ய? அதாவது கிடைக்கிறதே என்று சாப்பிடுவோம்.

                                              

ஆனால் இது மாதிரி ஹோட்டலுக்குப் போகும் அனுபவம் கூட வருடத்துக்கு ஒருமுறை கிடைக்கலாம், அவ்வளவுதான்! அப்புறம் ஹோட்டலுக்குப் போகும் ஆசை அதிகமானது. அப்பா தஞ்சையிலும் மதுரையிலும் ஆபீசிலிருந்து வரும் வழியில் கேண்டீனிலிருந்தும், மதுரையில் தலைமை தபால் அலுவலகம் அருகே இருந்த பரபரப்பான பஜ்ஜி, போண்டாக் கடையிலிருந்து பஜ்ஜி, போண்டா, வடை வகையறாக்கள் கடப்பா மற்றும் சட்னியுடன் வாங்கி வருவது தவிர ஹோட்டல் அனுபவம் எப்போதாவது வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும் சமயங்களில் இருக்கலாம். அப்போதும் பெரும்பாலும் புளியோதரை தயிர்சாதம் அவற்றை அடித்து விடும்!

என் ஹோட்டல் ஆசை அத்தனையையும் அந்நாளில் நிறைவேற்றி வைத்தவர் என் நண்பர் சுகுமார். (பின்னாளில் அவர் எங்களுக்கு உறவுதான் என்றும் தெரிந்தது). மதுரையில் புகழ் பெற்ற டிவி சர்விஸ் நிபுணர். அப்போது டிவி எந்த அளவு கோலோச்சியது என்று சொல்லத் தேவையில்லை. பணம் கொட்டும். பணத்தை தனக்கென வைத்துக் கொள்ளத் தெரியாதவர். அடுத்தவர் சந்தோஷத்தைப் பார்த்து சந்தோஷப்படும் குணமுள்ளவர். வித விதமான, சின்ன பெரிய எல்லா ஹோட்டல்களுக்கும் அழைத்துச் சென்று, வித்தியாசமான ஐட்டங்களையும் அறிமுகப் படுத்துவார். மதுரையில் பூச்சி ஐயங்கார்க் கடை சீவல் தோசை, நாராயணா ஹோட்டல் வெள்ளை அப்பம், பஞ்சாபி ஹோட்டல், ஹேப்பி மேன் முந்திரி அல்வா, என்று  சின்னச் சின்ன சந்துகளில் இருக்கும் சுவைகளை எல்லாம் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

எதிர்பாராத விஷயங்களை, எதிர்பாராத நேரங்களில் செய்து திகைக்க வைத்து விடுவார். எங்கள் உறவு வட்டத்திலும் இவர் பிரபலம்.

ஒருமுழம், இரண்டு முழம் பூ வாங்கும் இடத்தில் விற்பவரும், உடன் நிற்பவர்களும் அதிர்ச்சி அடையும் வகையில் அந்தக் கூடைப் பூவையும் வாங்கி விடுவார். அப்புறமென்ன? அந்தத் தெரு முழுதும் பூ விநியோகம்தான். பூ விற்கும் அந்தப் பையன் அப்புறம் இவர் என்ன வேலை சொல்வார், செய்யலாம் என்று காத்திருந்து முடித்துக் கொடுப்பான்!

ஒரு தாத்தா "புவனேஸ்வரி ஸ்நானப் பவுடர்,ஊது பத்தி " என்று குரல் கொடுத்தபடி ஊதுபத்தி, ஸ்நானப் பவுடர் போன்றவை விற்றுக் கொண்டு வருவார். அப்போது அவருக்கு 70 வயது இருக்கலாம். அவருடைய வயது காரணமாக, அவர் அலையக் கூடாது என்று நினைப்பின் காரணமாக இவர் அவரிடம் உள்ள ஸ்டாக்கில் 80 சதவிகிதம் வாங்கி விடுவார். அவருக்கு தண்ணீர், காபி என்று உபசரணைகள் செய்து அனுப்புவார். வியாபாரத்துக்கு வரும் போதெல்லாம் இவரும் அவரும் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எங்கள் வீட்டு மோதி அவர் கொடுத்ததுதான். கண் திறந்த உடனேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாலும் அவரை அது தூரத்தில் வரும்போதே அடையாளம் காணும் அழகு இருக்கிறதே....

நன்றாகச் சமைப்பார். ஒரு பொழுது போகாத ஞாயிற்றுக் கிழமையில் 'திரட்டுப் பால் செய்யத் தெரியுமா' என்று கேட்டவுடன், அங்கு இருந்த 'ஆவின் பூத்'தில் மீதம் இருந்த பால் பாட்டில் (அப்போதெல்லாம் அரை லிட்டர் பாட்டிலில்தான் பால். அதற்கும் முன்பு பெரிய கேனில் கொண்டு வந்து விநியோகம் செய்வார்கள்!) அத்தனையையும் வாங்கி, தெரு மணக்க, திரட்டுப் பால் செய்து விநியோகம் செய்தார்! இவர் செய்யும் புளிக்காய்ச்சல் போல நான் வேறெங்கும் சாப்பிட்டதில்லை. ஒருமுறை எங்கள் அலுவலக விழா ஒன்றுக்கு இவர் செய்து கொடுத்த கல்கண்டு சாதமும், வெஜிடேபிள் சாதமும் எல்லோரையும் கவர்ந்தன.

                                                                                                                  

சினிமாக்களை முதல் நாள் பார்க்க வைத்தார். அவர் வைத்திருந்த வண்டியில் அமர்ந்து ஊர் முழுதும் சுற்றும் அனுபவம் தந்தார்.

இப்போதெல்லாம் ஹோட்டலுக்குப் போனால் (எப்போதாவதுதான் போகிறேன்!) நானும் தோசையைத்தான் தேடுகிறேன்.  ரவா தோசை!

                                    

இப்போது சுகுமார் என்னை ஆன்மீகத்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டிருக்கிறார். கேனோபநிஷத், முண்டகோபனிஷத் புத்தகங்கள் தந்து படிக்கச் சொல்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரம் சொல்கிறார். மகா பெரியவரின் தீவிர, அதி தீவிர பக்தர். தெய்வத்தின் குரல் பலமுறை படித்திருக்கிறார் என்பதால் அதிலிருந்து பல விஷயங்கள் சொல்வார். அவருக்கு எதாவது சந்தேகம் வந்தால், பிரச்னை வந்தால் 'தெய்வத்தின் குரல்' எடுத்து எதாவது ஒரு பக்கத்தைப் பிரித்தால் தீர்வு கிடைத்து விடும் என்கிறார். சில சமயங்களில் அப்போது கேட்கும் நொச்சூர், வேளுக்குடி  கூட தீர்வு கிடைக்கிறது என்பார். பயங்கர ஆன்மீகர்.

சமீபத்தில்கூட திருப்பதி சென்று வந்த அனுபவம் பற்றிச் சொல்லி, அங்கு ஒருவர் கூண்டுகளில் காத்திருக்கும் நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் சத்தமாகச் சொல்ல ஆரம்பிக்க, இன்னொருவரும் கூடவே தொடங்கி விட்டு, ஸ்ரீ சுக்தம், புருஷ சுக்தம் எல்லாம் சொன்னாராம். கொஞ்ச நேரம் கழித்து இவர் அவரிடம் விஷ்ணுசகஸ்ரநாமம் பொதுவில் சொன்னது சரி, மற்றதெல்லாம் இப்படிப் பொதுவில் சொல்லக் கூடாது என்று எடுத்துரைத்ததைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

சும்மா இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த தலைப்பு சந்தோஷம்தான்! ராமகிருஷ்ணர் பற்றி, பெரியவர் பற்றி என்று சளைக்காமல் மணிக் கணக்கில் பேசுவார். நான் 'உ..ம்' கொட்டுவதோடு சரி....!

நன்றி சுகுமார்.

6.5.13

காசு டப்பா


 'பொன்னியின் புதல்வர்' புத்தகம்  எழுதிய சுந்தா நூற்றாண்டு விழாவில் பேசிய திருமதி சீதாரவி குறிப்பிட்ட தகவல் என்று கல்கியில் படித்தது : "சம்பளத்தை வாங்கிக் கொண்டுவந்து அப்படியே ஒரு பெட்டியில் போட்டு விடுவாராம் சுந்தா. மனைவி, மகள்கள் என்று வேண்டுவோர் வேண்டுகிற பணத்தை எடுத்துக் கொண்டு செலவு போக மீதியை அதிலேயே போட்டு விடுவார்களாம் இப்படி எத்தனை வீடுகளில் பார்க்க முடியும்?"

                                                           

எங்கள் வீட்டில் பார்க்க முடியும். 

இந்த வரிகளைப் படித்தவுடன் எங்கள் வீட்டு ஞாபகம் வந்து விட்டது!

அப்பா சம்பளம் வாங்கியவுடன் வீட்டுக்கு வந்து பணத்தை சுவாமிக்கு முன்னாடி வைத்து விடுவார். அப்புறம் கை கால் அலம்பிக் கொண்டு வந்து, அவருடைய பீரோவிலிருந்து காசு டப்பாவை எடுத்துக் கொண்டு வருவார் அப்புறம் அந்தப் பணத்தை அம்மாவை விட்டு எடுத்து வரச் செய்து, அம்மா கையாலேயே 'காசு டப்பா'வில் வைக்கச் சொல்வார்.அந்தக் காசு டப்பா என்பது அலுமினியத்தாலான ஒரு மெல்லிய பழங்காலத்து சிகரெட் பெட்டி. என்னுடைய தாத்தா உபயோகித்தது என்று ஞாபகம். (சிகரெட் பிடிக்க அல்ல!) அதில் வைக்குமளவுதான் சம்பளம் வரும்.

                                                       

எப்போதுமே அம்மாதான் காசு டப்பாவில் சம்பளப் பணத்தை வைப்பார் என்றாலும், சில சமயங்களில் எங்களைக் குஷிப் படுத்தவும், சில சமயம் அந்த மாத அதிருஷ்டத்தை எங்கள் மூலம் சோதிக்கவும், ஒன்றிரண்டு சில்லறை நோட்டுகளை எங்கள் கையாளும் உள்ளே வைக்கச் சொல்வார். சில சிறிய டினாமிநேஷன் நோட்டுகள்தான்! பெரிய நோட்டுகள் எப்பவுமே அம்மா கையால்தான்.

                                                    

நாங்கள் யார் வேண்டுமானாலும் காசு டப்பாவில் கை வைக்க முடியாது என்றாலும் செலவென்ன என்று சொன்னால் அம்மா மூலம் சொல்லப் பட்டு மறுநாள் காலை அப்பா அலுவலகம் செல்லுமுன் செலவுகளின் அவசியங்கள் ஆராயப் பட்டபின் வழங்கப் படும். சில சமயம் குறைக்கப்படும், அல்லது மறுக்கப்படும், அல்லது ஒத்தி வைக்கப்படும்!

          

அடுத்த மாத சம்பளம் வரும்வரை சம்பளம் தீர்ந்து விட்டாலும் (காசு காலியாகி விட்டாலும்!) ஒரு ஒரு ரூபாய் நோட்டாவது டப்பா துடையாமல் அதில் இருக்கும்! 25 தேதிக்குமேல் அடிக்கடி ஒரு ரூபாய்தான் அதில் இருக்கும்!

                                               

இப்போது எங்கள் வீட்டிலும் பணம் மொத்தமாக ஒரு பையில் வைக்கப் பட்டிருக்கிறது, பணப்பை! குடும்ப அங்கத்தினர்கள் என்ன செலவு என்று சொல்லி விட்டு யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார்கள்!

திருமணமான புதிதில் சம்பளம் வந்தவுடன் மளிகைக்கு இவ்வளவு, பாலுக்கு இவ்வளவு, காபிப்பொடி வெண்ணெய்க்கு இவ்வளவு, என்று ரப்பர் பேன்ட் கட்டி சிறு பேப்பரில் எழுதி வைத்துச் செலவு செய்து கொண்டு இருந்தோம். மிசலேனியஸ் என்று போட்ட கட்டில் மீதி இருக்கும் பணத்தைக் கட்டி வைத்து விட்டு அதிலிருந்துதான் எக்ஸ்ட்ரா செலவுகள் செய்வோம்!!!

                                      
 
இப்போது அப்படி இல்லை! அதெல்லாம்,  அந்தக் காலமெல்லாம் போச்!