Saturday, August 3, 2013

பாசிட்டிவ் செய்திகள் 28, ஜூலை 2013 முதல், 3, ஆகஸ்ட், 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 

1) சந்தோஷ் என்கின்ற பழநி மாரியப்பன்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர், இருபத்தியொரு வயதாகும் இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட பார்வைக்கோளாறு படிப்படியாக அதிகமாகி தற்போது பார்வையை முழுமையாக இழந்துள்ளார், மேலும் கேட்கும் சக்தியும் குறைவு, இத்துடன் சிறுவயதில் ஏற்பட்ட சர்க்கரை நோய் காரணமாக தினமும் இரண்டு முறை இன்சுலின் போடவேண்டும்.
                                                       

இவ்வளவு பிரச்னை உள்ளவர் எப்படி இருப்பார், எப்போதும் வீட்டில் முடங்கிக் கிடப்பார் என்றுதான் யாருக்கும் எண்ணத்தோன்றும், ஆனால் உண்மையில் அப்படியில்லை கவலைப்படுவதால் குறைகள் குறையப்போவதில்லை என்ற யதார்தத்தை உணர்ந்து, தான் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்துகொண்டு தற்போது பல துறைகளில் சாதனை புரிந்தவராக உள்ளார்.

செல்லப்பிள்ளை:

தென்காசி அருகே உள்ள ஆயக்குடி ஜெபி கல்லூரியில் பிஎட் படித்துவரும் இவரை முதலில் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் சேர்ப்பதற்கு தயக்கம் காட்டியது. காரணம் சாதாரணமாக உள்ள கல்லூரி மாணவர்களோடு கலந்து அவர்கள் வேகத்திற்கு படிக்க முடியாதே என்பதால், ஆனால் கல்லூரியின் செல்லப்பிள்ளையே இப்போது சந்தோஷ்தான்.

காரணம் கல்லூரியின் சார்பில் நடைபெறும் பேச்சுப்போட்டி, வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகிறார். கல்லூரியின் முதல்வர் முதல் வாயில் காப்பாளர் வரை சந்தோஷ் என்றால் இப்போது எல்லாம் தனி கவனம்தான், கவனிப்புதான்.

சந்தோஷ்க்கு மேலும் பல திறமைகள் உண்டு, நமக்கெல்லாம் இப்போதும் குடும்பத்தில் உள்ளவர்களின் போன் எண்ணைக் கேட்டால் மொபைலில் பார்த்துதான் சொல்வோம், ஆனால் சந்தோஷிடம் ஒருமுறை உங்கள் போன் எண்ணையும் பெயரையும் கூறிவிட்டு பிறகு எப்போது உங்கள் பெயரைச் சொன்னாலும் உங்கள் மொபைல் போன் எண்ணை உடனே சொல்லிவிடுவார்.


பேச்சாற்றல்:

அடுத்ததாக ஒரு ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து பேசுங்க தம்பி என்று சொன்னால் போதும் அடுத்த சில நிமிடங்களிலேயே நல்ல தமிழில் கொடுத்த தலைப்பில் சரளமாக பேசக்கூடிய வல்லமை உண்டு. இவரது தந்தை அம்பலவாணன் ஒரு பள்ளி ஆசிரியர், தன் பிள்ளையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யக்கூடியவர், தலையை அடகு வைத்தாவது அவன் விருப்பத்தை நிறைவேற்றும் பாசக்கார தந்தை. இவரை ரோல் மாடலாகக் கொண்டு தானும் ஒரு ஆசிரியராக வரவேண்டும் என்பது சந்தோஷின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்ற இவரது தந்தையும், தாய் சண்முகமாலதியும், தம்பி சச்சின் பிரபாகரனும் நிறையவே துணை நிற்கின்றனர். இவர்களைத் தாண்டி இவர்களது உறவினர் அலங்கார் ரிசார்ட்ஸ் சின்னவர் ஈஸ்வர்ராஜ், சந்தோஷை சந்தோஷப்படுத்தவும், மேடையேற்றி பிரபலப்படுத்தவும் நிறைய பாடுபட்டு வருகிறார்.

அதிலும் தாய் சண்முகமாலதியின் பங்கு அலாதியானது தனது மகனுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவிற்கும் தன்னை வருத்திக் கொள்ளத் தயங்காதவர், மருத்துவ செலவை சரிக்கட்ட வேண்டும் என்பதற்காக வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். சந்தோஷ்க்கு தாய்க்கு தாயாக மட்டுமின்றி, நல்ல தோழனாக, நல்ல ஆசிரியராக, நல்ல குருவாக என்று எல்லாமாக இருந்து வழிகாட்டி வருகிறார். இப்போது கூட பார்வை இல்லாதவர்களுக்கு பயன்படும் வகையில் வெளிநாட்டில் வாய்ஸ் கம்ப்யூட்டர் இருப்பதாக அறிந்து அந்த கம்ப்யூட்டரை தனது மகனுக்கு எப்படியாவது தருவித்து கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார், தெரிந்த வாசகர்கள் வழிகாட்டி உதவலாம். சண்முகமாலதியின் எண்: 9865664016.

லட்சியம்:

சந்தோஷைப் பற்றி நிறைவாக சொல்ல வேண்டும் என்றால் அவர் தனது குறைகளைப்பற்றி ஒரு போதும் கவலைப்பட்டவர் கிடையாது. தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தன்னால் இந்த சமூகமும் சந்தோஷமாக இருக்கவேண்டும், நல்ல ஆசிரியராகி அடுத்த தலைமுறைக்கான அற்புதமான மாணவர்களை உருவாக்கவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார் அவரிடம் பேசுவற்கான எண்: 9659294079. இவர் போனை எடுக்கவில்லை என்றால் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம் ஆகவே இரவு ஏழு மணிக்கு மேல் பேசவும், பேசுபவர்கள் சந்தோஷ்க்கு கொஞ்சம் காதிலும் பிரச்னை என்பதை புரிந்து கொள்ளவும். நன்றி! [முகநூல்]

2) இரண்டு கைகளும் இல்லாத நிலையில் நீச்சல் போட்டிகளில் தேசிய அளவில் சாம்பியன், மாநில அளவில் இரண்டு முறை, தென்னிந்திய அளவில் இரண்டு முறை சாம்பியன் என, 100க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளார், தர்மபுரி மாவட்டம் ஒட்டபட்டியை சேர்ந்த வெங்கடேஷ், 28. இவர் தற்போது தர்மபுரியில் உள்ள முக்கனல்லி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
                                                      

சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில், 50 மீ., தூரத்தை 56 வினாடிகளில் கடந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அவரிடம் பேசியதில் இருந்து...

விளையாட்டு வீரராக ஆக வேண்டும் என, எப்போது நினைத்தீர்கள்?

எனது 10 வயதில் மின் அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட இரண்டு கைகளும், நீக்கப்பட்டன. மூன்று ஆண்டுகள், வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தேன்.அதற்கப்புறம் ஆறாம் வகுப்பில் இரண்டு கைகளும் இல்லாமல் தான், பள்ளியில் போய் அமர்ந்தேன். அப்போது மாணவர்கள் என்னை ஒரு காட்சிப்பொருளாக தான் பார்த்தனர்.பள்ளி படிப்பை முடித்த பின்பு தான், நான் வேறு எதையாவது செய்து சாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீச்சல் என, எல்லாவிளையாட்டுகளையும் பழகிக் கொண்டேன்.

நீச்சல் எப்படி கற்று கொண்டீர்கள்?

எங்கள் ஊரில் கிணறு இருந்தது. கைகள் நன்றாகஇருந்த போதே ஓரளவு நீச்சல் தெரியும். கைகள் இல்லாத நிலையில், மற்றவர்கள் நீச்சல் அடிக்க என்னை அவர்களின் துணிகளை பார்த்து கொள்ள சொல்வார்கள். அதை தான் பல காலம் செய்தேன்.பின்னர், நானே நீச்சல் அடிக்க ஆரம்பித்தேன். முதலில் பல இடங்களில் அடிபட்டது. ஊர்க்காரர்கள், 'இவன் ஏன் நீச்சல் அடிக்க எல்லாம் போகிறான்?' என்பார்கள். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நீச்சல் கலை கைவந்தது.நீச்சல் அடிப்பது ஒரு திறமையாக

உங்களிடம் உள்ளது என்பதைஎப்போது கண்டுகொண்டீர்கள்?

கடந்த, 2009ல் மதுரையில் தென்னிந்திய அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள சென்றேன். ஆனால், முடியவில்லை. அப்போது நீச்சல் பந்தயம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு, 21 மீ., தூரம் நீச்சல் அடிப்பதில் இரண்டாம் இடத்தை பிடித்தேன். அன்றிலிருந்து, மாநில, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.

நீச்சல் வீரராக இருந்து கொண்டே, தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றிவருகிறீர்கள். எப்படி?

நான் நீச்சல் வீரராக இருப்பதால் மாணவர்களுக்கு இயல்பிலேயே என் மேல் ஒரு ஆர்வம் கலந்த பயம் இருக்கிறது.விளையாட்டு வீரர்களுக்கு நேரம் தவறாமை மிக முக்கியம். இந்த பண்பு மாணவர்களிடம் வளர்கிறது. மேலும் மாணவர்களும் நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.என்னுடைய பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான வாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு நான் உதவ முடிகிறது.மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறேன் என்பது எனக்கு மனநிறைவை தருகிறது.மேலும், நான் ஆசிரியராக இருப்பதால், மாணவர்கள் இப்போது யாரவது ஒரு மாற்றுத் திறனாளிமாணவனை கண்டால், ஒரு வேற்று கிரகவாசியை போல பார்ப்பதில்லை.

அப்படியானால், விளையாட்டு வீரர், தமிழாசிரியர் என்பது தனிப்பட்டஒருவரின் திறமை மட்டுமில்லைஎன்கிறீர்களா ?

ஆமாம். இதை நான் சமூக மாற்றத்திற்கான அடையாளமாக தான் நினைக்கிறேன். அந்த திறமை சமூகத்தில் எங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று தரும்.அரசு, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகளில் வெல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு அளித்து கவுரவித்தால், அவர்கள் மேலும் வெற்றி குவிப்பர்.மேலும், போட்டி நடைபெறும் நீச்சல் குளங்களில் இலவசமாக ஆண்டுதோறும் பயிற்சி அளித்தால், பலரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முன்வருவர். [முகநூல்]

3) மின் கம்பி அறுந்தால் ஆபத்தில்லை!

சூறைக்காற்றால், அறுந்து விழும் மின் கம்பிகளிலிருந்து பாயும் மின்சாரத்தை, தானியங்கி முறையில் நிறுத்தும் கருவியை கண்டுபிடித்த, ஹரிஷங்கர்: நான், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவன். வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில், "எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' படிக்கிறேன். தானே புயல் போன்று, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் போது, மின் கம்பிகள் அறுந்து விழுவதால், எதிர்பாராத மனித இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடித்ததே, இந்த தானியங்கி கருவி. 
                                                     

"டிரான்ஸ்பார்மரில்' இருந்து செல்லும், ஒவ்வொரு மின் கம்பியிலும், மின்சாரத்தின் அளவை உணரும், "சென்சார்'களை இணைத்தேன். புயல் மற்றும் பலத்த காற்று வீசும் போது, மின் கம்பிகள் அறுந்து, நிலத்தில் பட்ட உடன், நிலம் அதிக அளவு மின் சாரத்தை உறிஞ்சுகிறது. இதனால், மின் கம்பியில் இருந்து சாதாரண நிலையை விட, பல மடங்கு மின்சாரம் வெளியிடப்படுகிறது. அதிக அளவு மின்சாரம் வெளியிடப்படுவதை, சென்சார்கள் உணர்ந்ததும்,

"மைக்ரோ கன்ட்ரோலரு'க்கு, சிக்னல் மூலமாக தகவல் அனுப்பும். அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை, நிறுத்த வேண்டும் என்ற கட்டளையை, ஒரு, "சிப்'பில் புரோக்ராமாக பதிவு செய்து, மைக்ரோ கன்ட்ரோலரில் பொருத்தி, டிரான்ஸ்பார்மருடன் இணைத்துள்ளேன். இதனால், சென்சாரில் இருந்து தகவல் கிடைத்ததும், மைக்ரோ கன்ட்ரோலர், தன் கட்டுப்பாட்டில் உள்ள, "ரிலே' சுவிட்ச்சை ஆப் செய்யும். இதன் மூலம், அந்த கம்பி வழியாக மின்சாரம் சப்ளை செய்யப்படுவது தானாக நிறுத்தப்படும். 

மழை மற்றும் வெயில் காலம் என, எல்லா சூழ்நிலையிலும், 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் தன்மை, இத்தானியங்கி கருவிக்கு உள்ளது. மின்கம்பி அறுபட்டுள்ளதை, அருகில் உள்ள மின்சார அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட லைன் மேனுக்கு தெரியப்படுத்த, மொபைல் போனில் உள்ள, ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பம் மூலம், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் கூடுதல் வசதியும் இதில் உள்ளது. 

தொடர்புக்கு: 96590 95472. [முகநூல்]

4) தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு?

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 32 அறங்களில், தண்ணீர் பந்தல் வைத்தலும் ஒன்று. சென்னையில் கடந்த கோடையில் தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்ட விதம், பத்திரிகைகளில் பல விதமாக வெளிவந்தது.ஆனால், தண்ணீர் பந்தலை வித்தியாசமாக வைக்க முடியும் என, நிரூபித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ரகுபதி,29. மதுராந்தகம், ஓணம்பாக்கம் தாலுகா அருகில் உள்ள பவுந்தன் கருணை கிராமம். இவரது தந்தை பக்தவத்சலம், மில் ஊழியர். அம்மா கோவிந்தம்மாள். எட்டாவது வரை படித்துள்ள ரகுபதி,தற்போது சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் தங்கி,திருவான்மியூரில், ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் குடிநீர் வைத்துள்ளதோடு, 'மக்களுக்காக நடமாடும் இலவச குடிநீர்' என, தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதி வைத்து உள்ளார்.
                                               

தண்ணி கிடைக்கல...:

ஆட்டோவில் இலவச குடிநீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது குறித்து இவ்வாறு கூறுகிறார்:நான் ரெண்டு வருஷமா ஆட்டோ ஓட்டு றேன். ஆட்டோ ஓட்டும் போது எங்கேயாவது இறங்கி ஓட்டலில் தண்ணி கேட்டா, இது கேன் தண்ணி, காசு குடுத்து வாங்கினது... தர முடியாதுன்னு சொல்வாங்க.பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும், தனியா கேனில் தண்ணி எடுக்க கூடாதும்பாங்க... எனக்கு மட்டும் இல்ல, யாருக்குமே எந்த பெரிய ஓட்டல்லேயும், இலவசமா தண்ணி கிடைக்கிறதில்ல. ஒரு நாளைக்கு 30, 40 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் சம்பாதிக்கிற ஓட்டல்களிலேயே இலவச தண்ணி கிடையாது.ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிற நாமளே இலவசமா, தண்ணி தந்தா என்னன்னு தோணிச்சு. நாம செய்ய ஆரம்பிச்சா, யாராவது அதை பார்த்து செய்வாங்க இல்லியா? ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் சொந்தமா ஆட்டோ வாங்கின பிறகு, என்னோட சொந்த ஆட்டோவில் தண்ணி வசதிய வெச்சுட்டேன். தாகத்திற்கு தண்ணி கூட தரமா, சம்பாதிக்கிற பணத்தை வைச்சு இவங்கஎல்லாம் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல. இவ்வாறு அவர் தன் மன ஓட்டத்தை வெளிப்படையாக சொன்னார்.

ரூ 4 ஆயிரம் :

இதற்கு எவ்வளவு செலவுசெய்கிறார்? அதையும் அவரே சொல்கிறார்:'டிரைவர் சீட்' பக்கத்தில் கம்பி போட்டு வைக்கிறதுக்கும், திருவள்ளூவர் படம் ஸ்டிக்கர் ஒட்டி, பேர் எழுதுவதற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவானது.ஒரு நாளைக்கு 30 ரூபாய் கேன், மூணு கேன் ஆகும். வாரத்தில் ஒரு நாள் 70 ரூபாய் பிஸ்லெரி கேன் மூணு வைப்பேன். அது தான், பார்க்க சுத்தமாக இருக்கும்.தண்ணிக்கு ஒரு மாதத்திற்கு நாலாயிரம் ரூபாய் வரை செலவாகும். மே மாதத்தில் தண்ணி கேன் வைக்கிறேன். இதை குடிப்பதோடு, பாட்டில்லேயும் பிடிச்சுட்டு போலாம்.இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.இந்த குடிநீர் கேன், ரகுபதிக்கு சமூகத்தில் தனிப்பட்ட அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

தனது சேவைக்கு மக்களின் வரவேற்பு குறித்து, சிலாகித்து பேசுகிறார்:எல்லாரும் பாரட்டுறாங்க. ஒருமுறை ஒரு கர்ப்பிணி பெண்ணை, சோழிங்கநல்லூரில் இருந்து பெசன்ட் நகர் வரை அழைச்சிட்டு போய் விட்டு வந்தேன். அவங்க, இப்போ ரெகுலர் சவாரி வராங்க. இதுவரை, 10 பயணிகள் என்னோட போன் நம்பரை வாங்கி வைச்சி கூப்பிடுறாங்க.நாலு பேர், அவங்க விசிட்டிங் கார்டு கொடுத்து எந்த உதவி வேணுமானாலும் கூப்பிடுன்னு சொல்லிருக்காங்க... ரோட்டுல போகும் போது பலரும் கை காட்டி, கட்டை விரலை உசத்தி காண்பிச்சுட்டு போவாங்க. ஒருமுறை, ஈஞ்சம்பாக்கத்துல இருக்கிற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., காரில் சாலையை கடந்து போகும் போது, பக்கத்துல வந்து கட்டை விரலை உயர்த்தி வாழ்த்திட்டு போனாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க பேர் தெரியல (விஜயதாரணி).கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணி குடிக்கும் போது, போக்குவரத்து எஸ்.ஐ., ஒருத்தர், 'உன் ஆட்டோவுக்கு இந்த லைன்ல கேசே கிடையாது' ன்னு சொன்னார்.

வரவேற்பு:

நெகிழ்ச்சியுடன் சொன்ன ரகுபதி, மும்மொழியில் எழுதி வைத்திருப்பது, வள்ளுவர் படத்தின் பின்னணி குறித்து உற்சாகம்குறையாமல் சொல்கிறார்: சென்னையில வட மாநில தொழிலாளர்கள் நிறைய பேர் இருக்குறாங்க சார். அவங்களுக்கு தமிழ், ஆங்கிலம், படிக்கவும் தெரியாது. யார்கிட்டயும் போய் பேசவும் மாட்டானுங்க. இந்தியில எழுதியிருந்தா அவங்களே வந்து குடிப்பாங்க. அதுக்காக, மூணு மொழிகள்ள எழுதியிருக்கேன். இலவச குடிநீர் கேன் பெயரை, ஒரு படம் போட்டு வைத்தால், நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. எல்லாருக்கும் பொதுவான படம் போடலாம்னு நினைச்சேன். அதனால், திருவள்ளுவர் படம் போட்டேன்.ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் எப்படிவரவேற்பு இருந்தது? அதையும் அவரே சொல்கிறார்... செலவ எப்படி சமாளிக்கிறேன்னு எல்லாரும்கேட்பாங்க. செம்மஞ்சேரி, இ.சி.ஆரில் ரெண்டு ஆட்டோ டிரைவர்கள், நாங்களும் இந்த மாதிரி தண்ணீர் வைக்கிறோம்?னு சொன்னாங்க.அரக்கோணத்துல ஒரு ஆட்டோ டிரைவர், இதை எங்க ஊர்ல செய்றேன்னு சொன்னார். அவர் ஆரம்பிச்சிருப்பார்.எனக்கு இப்ப வர்ற பணம் போதும் சார்.ஆட்டோவை, பாதி பணம் கட்டி தான் எடுத்தேன், மீதி மாத வாடகையில் தான் கட்டி வருகிறேன். எனக்கு இந்த செலவு ஒரு விஷயம் இல்லை. நான் சமாளிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.தண்ணி வைச்சதால, பயணிகளின் வருகை கூடியிருக்கிறதான்னு தெரியல, ஆனா கொஞ்சம் நட்போட இருக்காங்க... அந்த வித்தியாசம் தெரியுது.

ஜனங்ககிட்ட, நல்ல விஷயத்தை நேரடியாக கொண்டு போகணும்னு தான் என் விருப்பம். என்ன மாதிரி சாதாரண ஆளே, இந்த மாதிரி தண்ணீர் வைக்க முடியுதுன்னா, நாட்ல வசதியா இருக்குறவங்க ஏதாவது நல்லது செய்ய முடியாதா என்ன? [முகநூல்]
5)  பேசும் படம் 1


6)  பேசும் படம் 2
                                            

7) இந்த வார ஈர நெஞ்சச் செய்தி. கோவை உப்பிலிபாளையம் போக்குவரத்து சிக்னல் அருகே சாக்கடை ஓரமாக நான்கு நாட்களாக இருந்த சக்திவேல் வயது 45 என்பவரை கடந்த 27/07/2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பினரால் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து சக்தி வேல் அவருக்கு உறவினர்கள் இருப்பதை அறிந்து அவரது உறவினர்களை தேடும் முயற்சியில் இறங்கியது .

அதனை தொடர்ந்து சக்திவேல் இருபது நாட்களுக்கு முன் திருச்சியில் இருந்து கோவைக்கு வேலை தேடிவந்ததாகவும் திடீர் என்று உடல் நோய்வாய்பட்டு சாலையில் விழுந்து விட்டதாகவும் உதவிக்கு யாரை அழைத்தாலும் தான் குடிபோதையில் இருப்பதாக நினைத்து உதவ மறுத்ததாகவும் கூறினார். மேலும் அவர் தான் திருச்சியில் எட்டரை என்னும் பகுதியை சேர்ந்தவர் என்று தனக்கு மனைவி அமுதா, மகன் சதீஷ், மகள் சாந்தி இருப்பதாகவும் மேலும் தெரிவித்த சில தகவலை வைத்துக்கொண்டு .சக்திவேலின் உறவினரை தேடும் முயற்சியில் இறங்கியது.
                                                      
அதனை அடுத்து ஈரநெஞ்சம் அமைப்பு திருச்சி அருகே இருக்கும் சொம்பரசன் பேட்டை காவல்நிலைய உதவியுடன் சக்திவேலின் உறவினர்களை கண்டறிந்து சக்திவேலின் மகன் சதீஷ் மற்றும் அவர்களது உறவினர் செல்வகுமார் , வினோத் அவர்களை உடனடியாக கோவைக்கு வரவழைக்கப்பட்டு காப்பகத்தில் இருக்கும் சக்திவேல் அவர்களை அவர்களுடன் அனுப்பிவைத்தது.
  
தனது தந்தை சாலையோரமாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்து காப்பாற்றிக் கொடுத்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு சக்திவேலின் மகன் சதீஷ் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
  
சக்திவேலின் உறவினரை கண்டறிய உதவிய சொம்பரசன் பேட்டை காவல் நிலையத்திற்கும் மற்றும் அணைத்து நண்பர்களுக்கு ஈரநெஞ்சம் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்வதோடு .பிரிந்த உறவினை தங்கள் குடும்பத்திடம் சேர்த்து வைத்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மனநிறைவு அடைகிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


8) Indian high school girl Remya awesome invention: Washing + Exercise Machine

Remya, a high school girl from Kerala was forced to do laundry when her mother fell sick. Out of her dislike to wash clothes by hand, Remya invented a pedal-powered washing machine at the age of 14. It Runs without any electricity !!
                                                 

View the Video Demonstration by her on how it works here :: http://bit.ly/16q0DEp

9) படித்தது பி.காம்., (பாரின் டிடேடு); ஆனால், பார்ப்பதோ, சலூன் கடை வேலை; ஆண்களுக்கு மிக நேர்த்தியாக கட்டிங், சேவிங் செய்து அசத்துகிறார், பல்லடத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டை சேர்ந்தவர் தங்கவேலு, 55; சலூன் கடைக்காரர். மனைவி கமலம், 48. மகள் தேவி, 30; பி.காம்., பட்டதாரி. இவர், பல்லடம் முனியப்பன் கோவில் எதிரே, சலூன் கடை நடத்தி, ஆண்களுக்கு முடி வெட்டுகிறார்; சேவிங் செய்கிறார். பெண்கள், சிறுமியருக்கு சிகை அலங்காரமும் செய்கிறார். மிகவும் நேர்த்தியாக செய்யப்படும் கட்டிங், சேவிங்க் குறித்து கேள்விபட்டு பலர், வாடிக்கையாளர்களாகி வருகின்றனர்.
                                                       

தேவி கூறியதாவது: "திருப்பூரிலுள்ள சிக்கண்ணா கல்லூரியில் பி.காம்., (எப்.டி.,- பாரின் டிரேடு) படித்தேன். அரசு வேலைக்கு பலமுறை முயற்சித்தும் பலனில்லை. போலீஸ் எஸ்.ஐ., வேலைக்கு மூன்று முறை முயற்சித்து, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன்; எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைய வில்லை. அரசு வேலை கனவு தற்காலிகமாக முடங்கியது.
குடும்பத்தில் வறுமை தலைதூக்கத்துவங்கியது. இருபது ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வரும் என் தந்தை தங்கவேலு, சர்க்கரை நோய் பாதிப்பால், கடையை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

குடும்பத்தை வழிநடத்த, தந்தை தொழிலை, நானே செய்ய முடிவு செய்தேன்.சிறு வயதில் பள்ளியில் இருந்து வந்ததும், சலூன் கடையில் அமர்ந்திருப்பேன். இதனால், எவ்வாறு முடி வெட்டுவது; சவரம் செய்வது என தெரிந்து கொள்ள முடிந்தது. முனியப்பன் கோவில் எதிரே புதிதாக சலூன் கடை திறந்தேன். முடி வெட்டுவது, சேவிங் செய்வது பெண் என்பதால், ஆண்கள் முதலில் கடைக்கு வர கூச்சப்பட்டனர். சிலர் கேலியும், கிண்டலும் செய்தனர்.

ஆண்களுக்கு முடி வெட்டி, சேவிங் செய்யும் நேர்த்தி கவர்ந்ததால், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சலூன் கடை அமைக்கவும், குடும்ப செலவுக்கும் ரூ.50 ஆயிரம் வரை, தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளேன். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக, அந்த நிறுவனத்திற்கு பகலில் வேலைக்கு செல்கிறேன். காலை 6.00 - 9.00 மணி, மாலை 6.00 - இரவு 10.00 மணி வரை பகுதி நேரமாக சலூன் கடை நடத்தி வருகிறேன். கடன் முடிந்ததும், முழு நேரமாக கடையை நடத்துவேன்இவ்வாறு, தேவி கூறினார். [தினமலர்]

10) புற்றுநோயிலிருந்து முழுமையாக மீளலாம்... பிரிட்டன் விஞ்ஞானிகள் நம்பிக்கை 
புற்றுநோய் தாக்கியவர்களை முழுவதுமாக குணப்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
                                             
புற்றுநோய் தாக்கியவர்களில் மீண்டவர்கள் ஒருசிலர்தான். ஆனால் புற்றுநோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றும் சில நோயின் தீவிரம் தாங்கமுடியாமல் மரணிக்கின்றனர். நோய் தாக்குதலை விட நோய் பற்றிய அச்சம்தான் பலரது மரணத்திற்கு காரணமாகிறது. 
பிரிட்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் வார்த்தைகள் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பிரிட்டன் சதாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் புற்றுநோயை குணப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது, eEF2K என்ற புரதமே புற்றுநோய் செல்லின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும், எனவே eEF2K புரதத்தின் வளர்ச்சியை தக்க மருந்துகள் மூலம் தடுப்பதனால் புற்றுநோய் செல்லின் வளர்ச்சியையும் முறியடித்துவிடலாம் எனவும் அவர்களை நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புற்றுநோய் செல்லின் வளர்ச்சி, உடலின் வளர்ச்சிக்கு உதவும் மற்ற செல்களின் வளர்ச்சியை காட்டிலும் அபரிமிதமாக இருக்கும். eEF2K புரதத்தில் உள்ள உள்ள ஒரு செல்லுலார் கூறுதான் கேன்சர் செல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆரோக்கியமான செல் பாதிக்கப்படாத அளவிற்கு eEF2K புரதத்திலுள்ள செல்லுலார் கூறின் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் புற்றுநோயிலிருந்து மனிதன் இறப்பதை தடுத்து விடலாம். எனவே தற்போது, eEF2K புரதத்தின் வளர்ச்சியை தடை செய்யும் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பல்வேறு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சிசிக்சை முறை இன்னும் 5 வருடத்திற்குள் நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
http://www.pierce-antibodies.com/eEF2k-antibody-Polyclonal--PA517720.html
— with Rawlin Augustine and Sirkali Sivachidambaram
 
11) புதுடில்லி:டில்லியில், பக்கத்து வீட்டு பெண்ணின் செயினை திருடி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிய திருடர்களை, துணிச்சலாக மடக்கி பிடித்த இளம்பெண், துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனாலும், துப்பாக்கியை பார்த்து பயப்படாமல், திருடர்களிடம் இருந்து செயினை மீட்ட, அந்த இளம் பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடைபயிற்சி:

கிழக்கு டில்லி பகுதியில் வசிப்பவர், அன்சு. நேற்று முன் தினம் அதிகாலையில், இவர், நடை பயிற்சியை முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளில் வந்த, இரு மர்ம நபர்கள், அவரை பின் தொடர்ந்தனர். பீதியடைந்த அன்சு, வேகமாக நடந்து, தன் வீட்டுக்கு அருகில் வந்தார். அந்த மர்ம நபர்கள், அன்சு அணிந்திருந்த தங்க செயினை பறித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சித்தனர்.அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் கோமல், 26, தன் வீட்டுக்கு வெளியில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அன்சுவின் அலறல் சத்தத்தை கேட்ட அவர், மோட்டார் சைக்கிளில், மர்ம நபர்கள் தப்ப முயற்சிப்பதை பார்த்தார்.தன் கையிலிருந்த துடைப்பத்தை, அவர்கள் மீது வீசினார். இதில், திருடர்கள் நிலை குலைந்தனர். உடனடியாக, பாய்ந்து சென்ற கோமல், திருடர்கள் வைத்திருந்த செயினை பறிக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த திருடர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, கோமலை நோக்கி சுட்டனர்.

                                                   


துளைத்த குண்டுகள்:

இதில் ஒரு குண்டு, கோமலின் கை விரலிலும், மற்றொரு குண்டு, அவரது மார்பிலும் பாய்ந்தது. குண்டு பாய்ந்த இடங்களிலிருந்து ரத்தம் கொட்டியது. அதை பொருட்படுத்தாது, திருடர்களிடமிருந்து, அன்சுவின் செயினை பறித்தார்.அதற்குள், அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள், திரண்டனர். இரண்டு திருடர்களும் தப்பி ஓடி விட்டனர். அன்சுவிடம், செயினை ஒப்படைத்ததும், கோமல் மயங்கி விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.அவரின் மார்பில் பாய்ந்திருந்த குண்டு, அகற்றப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையிலும், திருடர்களிடமிருந்து, செயினை திரும்ப பறித்த, கோமலின் துணிச்சலை, டில்லி போலீசாரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
12)  பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.
எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரை யாவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்
ஏமாற்றிக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.
                                        
அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

                                               

 
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்
அப்போதுதான் ஆரம்பிக்கிறது. அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார். தினமும்
தாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.

அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர் பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக. ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.

போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
[முகநூல்]

13)  படித்தது பத்தாம் வகுப்பு; பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்!

""பத்து மார்க் குறைஞ்சதுக்கெல்லாம் இப்போ "சூசைடு' பண்ணிக்கிறாங்க பசங்க. பத்தாம் வகுப்புல நான் எடுத்த மொத்த மார்க்கே 150தான்; ஒரு பாடத்துலயும் "பாஸ்' ஆகலை; அதுவரைக்கும் எப்படி "பெயில்' ஆகாமப் படிச்சீங்கன்னு கேக்குறீங்களா? டீச்சர்களுக்கு மத்த பசங்க "டீ' வாங்கிட்டு வந்தா, சூடே இருக்காது; ஆனா, நான் வாங்குன நொடியில, "சிட்டா' பறந்து வந்து "ஹாட்டா' கொடுப்பேன். அதுக்காகவே, ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் என்னைய "பாஸ்' போட்டு விட்டாங்க.

எந்த வேலை செஞ்சாலும், அதை ஈடுபாட்டோட செய்றதுதான் என்னோட வழக்கம். அந்த ஈடுபாடுதான், ஐ.நா.,சபை இளைஞர்கள் மாநாட்டுல, எனக்குப் பேசுற வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு...'' என, யதார்த்தமாய் பேசுகிறார் நித்யானந்தன் 41. ஏதோ, பத்தாம் வகுப்பில் "பெயில்' ஆகி, அதன்பின் படித்து, பெரிய பொறுப்புக்கு வந்ததால், ஐ.நா., சபை இளைஞர்கள் மாநாட்டில், அவரைப் பேச அழைத்திருப்பார்கள் என்று, அவசரப்பட்டு யோசிக்க வேண்டாம். இப்போது வரையிலும், அவரது அதிகபட்ச கல்வித் தகுதியே அதுதான். அப்புறம் எப்படி சாத்தியமானது இந்த சாதனைப் பயணம்...?.

""படிப்புதான் வரலையே தவிர, சின்ன வயசுல இருந்தே ஊருக்கு ஏதாவது செய்யணும்கிற ஆசை நிறையவே இருந்துச்சு. எய்ட்ஸ் விழிப்புணர்வு பணியிலதான் என்னோட சமூகசேவை ஆரம்பிச்சது. கோவை மாவட்டத்துல 440 கிராமங்கள்ல எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் பண்ணுனேன்.

அப்ப இருந்தே, நான் செய்யுற எல்லா வேலையையும் "டாக்குமென்ட்' பண்ண ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு, கலெக்டர் முருகானந்தம் பாராட்டுனாரு. அடுத்ததா மகளிர் சுய உதவிக்குழு, இளைஞர் சுய உதவிக்குழு அமைக்கிற பொறுப்பு கிடைச்சது. மகளிர், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற நிகழ்ச்சிகள் நிறைய நடத்துவேன். ஊர் ஊர்ன்னு அலைஞ்சு, அடிக்கடி "லீவு' போட்டதுல, நான் வேலை பார்த்த கம்பெனியில என்னை 7 தடவை"சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க.

கடைசியா, "டிஸ்மிஸ்' ஆகுற நிலைமையிலதான், எங்க முதலாளி (எல்.எம்.டபிள்யு.,நிறுவனம்) ஜெயவர்த்தனவேலு சாரைப் போய்ப் பார்த்து, "இந்த வேலையெல்லாம் நான் செய்யுறேன்'னு சொன்னேன். அவர் அதெல்லாம் பார்த்துட்டு, "நீ நாட்டுக்கு வேலை பாரு. உனக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன்'னு சொல்லி அனுப்பிட்டாரு. அதுலயிருந்து முழு நேரமும் ஊர் வேலைதான்...'' என, தனது பணிக்கு சாட்சியம் சொல்லும் "கனமான' ஆவணங்களைப் புரட்டிக் காண்பித்தபடியே, பேசுகிறார் நித்யானந்தன்.

பெற்றோர், மனைவி, இரு குழந்தைகளுடன் கோவை சிங்காநல்லூரில் வசிக்கும் இவருக்கு இன்று வரையிலும் வறுமைதான் அடையாளம். இதுவரை, தனது மனைவி கவிதாவின் நகையை 17 முறை அடகு வைத்திருப்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். இலக்குகளோ, எதிர்பார்ப்புகளோ வைக்காமல் இவர் செய்த சமூகசேவை, எப்படியோ மத்திய அரசின் உளவுத்துறையை எட்டியிருக்கிறது. அவர்கள் வந்து, இவரைப் பற்றியும், இவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துச் சென்றனர்.

                                        


அவரும் அதை மறந்து விட்ட நிலையில், கடந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து வந்தது அழைப்பு. வாஷிங்டன்னில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன் உட்பட 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்; எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான இவரது ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பிக்கப்பட்டது.

ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், வரும் ஆக.,7, 8 மற்றும் 9 ஆகிய 3 நாட்கள், ஐ.நா.,சபை தலைமையகத்தில் நடக்கவுள்ள ஐ.நா.,சபையின் 12வது இளைஞர்கள் மாநாட்டில், உரையாற்றுவதற்கான அழைப்பு, நித்யானந்தனுக்கு வந்துள்ளது. 26 வயது வரையுள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த இளைஞர்கள் மாநாட்டில், 41 வயதில் பங்கேற்கும் இளைஞர் இவர் மட்டுமே.

அங்கு தனது 20 ஆண்டு கால சேவையை விளக்கவுள்ளார் நித்யா. இவருக்கான உரையைத் தயாரிக்க உதவுகிறார், தலைமைச்செயலகத்தில் கல்வித்துறையில் பணியாற்றும் பாலுசாமி. நித்யானந்தனின் இப்போதைய கவனமெல்லாம், மரங்களின் மீதுதான். "சிறுதுளி', "ராக்' அமைப்புகளின் உதவியுடன் அரசூரில் 10 ஏக்கர் பரப்பில் மரப்பூங்காவை விதைத்துள்ள இவர், அடுத்ததாக மயிலம்பட்டி கிராமத்தில் 20 ஏக்கரில் சோலையை உருவாக்க, களம் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்கா சென்று வந்த பின், காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் அங்கேதான் இருப்பேன் என்று சொல்லும் நித்யானந்தனுக்கு காத்திருக்கின்றன இன்னும் பல கவுரவங்கள்.

நீங்களும் அழைத்து ஒரு வாழ்த்து சொல்லுங்களேன்...95667 57074.


14) நீர்நிலைகள் தோறும் வளர்ந்து நிற்கும் ஆகாயத்தாமரையிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம்.

திருத்துறைப் பூண்டியை அடுத்த ஆதிரெங்கத்தில் உள்ள இயற்கை வேளாண்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர். ஜெயராமன் ,  நம் முன்னோர்கள் எருக்குழியில் இட்டு மக்க வைத்து உரமாகப் பயன்படுத்தினர் எனக் கூறுகிறார்.

தற்போது இதை 4 அடி அகலம் , 15 அடி நீளத்தில் 6 அடி உயரத்துக்கு ( ஒரு அடி உயரத்துக்கு ஒரு முறை ) ஆகாயத்தாமரை செடிகளைப் பரப்பி அதன் மீது மாட்டுச் சாணம் அல்லது மக்கிய தொழு உரத்தைத் தூவவேண்டும். இவ்வாறு ஆறு அடுக்குகளாக அடுக்கி வைத்து வாரம் ஒரு முறை ஒரு மாதத்துக்குத் தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்போது 6 அடி உயர அடுக்கு 3 அடியாகக் குறைந்துவிடும்.


                                                    

அப்போது இதில் ஒரு கிலோ மண்புழுவை இட்டு  மேல்புறத்தில் மாட்டுச் சாணம்,  வெல்லம், புளித்த தயிர் ஆகியவை கொண்ட கலவையைத் தெளிக்க வேண்டும். இதைத் தின்று இனப்பெருக்கும் செய்யும் மண்புழுக்கள் மக்கிய ஆகாயத்தாமரையைத் தின்று வெளியேற்றும் கழிவு நல்ல தரமிக்க உரமாகும்.

இது விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயன்படும் என்பதால் இங்கே பகிர்ந்தேன். ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்பு எண்  94433  20954.
                 
[தேனம்மை லக்ஷ்மண் பக்கத்திலிருந்து]   


15) மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்கும் முகாம்.
Camp provides artificial limbs and caliper.

விபத்தினால் கால்களை இழந்த மற்றும் போலியோவினால் நடக்க இயலாத குழந்தைகலுக்கு செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்க 10/08/2013 சனிக்கிழமை அன்று சென்னையில் அண்ணாநகரில் உள்ள அகவாழ் அறக்கட்டளை சார்பில் முகாம் நடைபெற உள்ளது. அன்று அளவேடுக்கப்படும் தகதியுள்ள 50 பேர்களுக்கு, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்ப்படும்.

                                                
Photo
 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
ஏ.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட், AC -124, சாந்தி காலனி மெயின் ரோட், அண்ணாநகர் சென்னை- 600 040.
தொலைபேசி:- 044-26264661,
கைப்பேசி: 98400 66111, 99414 66478.

A.C.Agarwal Charitable Trust, AC - 124, Santhi Colony Main Road, Anna Nagar, Chennai - 600 040.
Phone:- 044-26264661,
Cell: 98400 66111, 99414 66478.

 **********************************

பார்வையற்றோருக்கு இலவச கணினி பயிற்சி.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், சென்னையில்  ஓராண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.   இதில் கம்ப்யூட்டர் திறன் வளர்ப்பு பயிற்சி,ஹிந்தி பேச்சு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். பயிற்சி காலத்தில் தங்குமிடமும், மாதம் 200 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.இந்த மாதம் ஆகஸ்ட் 15ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, கீழ்காணும் மொபைல் எண்களில் தொடர்புக் கொள்ளுங்கள்.

94445 49865
89257  67989


** இதை வாசிக்கின்ற நண்பர்கள் அனைவரும், தங்கள் பக்கங்களில் மறுபதிவு இடுவதுடன், உங்களுக்கு தெரிந்த, தமிழ்நாட்டை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இருப்பின் தகவல் தெரிவித்து பயனடைய செய்யும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

[முகநூலில் சீனா ஸார் share செய்திருக்கும் தவப்புதல்வன் பத்ரிநாராயணன் பக்கத்திலிருந்து]   
          

12 comments:

இராஜராஜேஸ்வரி said...

நம்பிக்கை விதைக்கும் நல்ல நிகழ்ச்சிகள் தொகுப்பு ..!

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கை தரும் பல பாடங்கள்...

கவியாழி கண்ணதாசன் said...

தங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள். ஒரு வாரம் நடந்த எல்லாமே நல்ல செய்திகளாய் எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

ஏ அப்பா எவ்வளவு நல்ல செய்திகள்! நல்ல மனிதர்களையும் துடிப்புள்ள இளைஞர்களையும் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி பொங்குகிறது.
தண்ணீர் கொடுக்கும் ஆட்டோக் காரர்,
நல்ல விதமாப் பேசி சேவை செய்யும் கண்டக்டர், வாஷிங் சைக்கிள் கண்டுபிடித்த குட்டிப் பொண்ணு.,கைகள் இல்லாமல் சாதனை படைக்கும் நீச்சல் வீரர். ஸ்ஸ்ஸ்!!வணக்கங்கள். மனசுக்கு ரொம்ப நிறைவாக இருக்கிற்து. இதற்குப் பின் உங்கள் அயராத உழைப்பும் தெரிகிறது.

ராஜி said...

கொலை கொள்ளை, கற்பழிப்பு, நில மோசடின்னு எங்க பாத்தாலும் கெட்ட செய்திகளை படித்தே பழக்கப்பட்ட கண்கள் அனைத்தும் நல்ல விதமான செய்திகளை படித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி சகோ!

Geetha Sambasivam said...

பேசும் படங்கள் கண்ணில் நீரை வரவைச்சது என்றால் முதலிலே கொடுத்த "சந்தோஷ்"செய்தி மனதை சந்தோஷமடைய வைத்தது. அனைத்துமே நல்ல அற்புதமான, உண்மையிலேயே இன்றுவரை தெரியாத அறியாத செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

T.N.MURALIDHARAN said...

ஏராளமான நம்பிக்கை செய்திகள். இத்தனை நல்லவர்கள் நம்மிடையே இருக்கிறார்களா? இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது

வெங்கட் நாகராஜ் said...

நம்பிக்கை தரும் பல செய்திகள்......

சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

தகவல் சுரங்கம் இந்த வாரம். இத்தனை நல்லவங்க இருக்கறதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்யுது.

rajalakshmi paramasivam said...

உங்களுடைய நம்பிக்கை நட்சத்திரங்கள் எல்லோரும் மனதில் நம்பிக்கை விதைக்கிரார்கள். முக்கியமாக புற்று நோய்க்கு மருந்து --எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாய் இருக்கும். மருத்துவம் மண்டியிடும் புற்று நோய்க்கு மருத்துவமே ஒரு முற்றுப் புள்ளி வைத்தால் மிக மிக மிக சந்தோசம்.

ராமலக்ஷ்மி said...

மனதுக்கு நிறைவு தரும், நம்பிக்கை அளிக்கும் செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

சீனு said...

அட எங்க ஊரில் இருந்தும் ஒரு சாதனை மாணவன்... நிச்சயம் போன் செய்து பேசுகிறேன் ஸார்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!