திங்கள், 19 ஆகஸ்ட், 2013

சைக்கிள் வண்டி மேலே 02

                
முதல் பகுதி சுட்டி இங்கே! 
    
நாங்கள் திகைத்தது இரண்டு விநாடிகள்தான்! முதலில் சுதாரித்துக் கொண்டவன் அண்ணன்தான்! 
         
என் அண்ணன் என்னைப் பார்த்து, "இப்போ பாரு என் நடிப்புத் திறமையை .... " என்று சொன்ன மறுநொடி - அந்த விடாக்கண்டரின் முன்னால் பிரசன்னமானான்!  
      
அட யாரு இவனுடைய சட்டையின் கையை இப்படிக் கிழித்து விட்டது? அது மட்டுமா - கையில் கிழிந்த இடத்தில் கொஞ்சம் செம்மண் - யார் அங்கே தீற்றியது? கண்களில் கண்ணீர் எங்கேயிருந்து வந்தது! 
    
அது மட்டுமா? மூன்றரை வினாடிகளுக்கு ஒரு முறை மூச்சை 'மூஸ்  .... மூஸ்  ...' என்று இழுத்து, 'விசுக் ...விசுக்'என்று விட்டவாறு, அவரிடம் " அய்யா நீங்க என் மேலே வாடகை சைக்கிளை மோதி ....  .... என்னைக் கீழே தள்ளிவிட்டு ... ... என் கையை ஒடித்துவிட்டு (கையை பாகப்பிரிவினை சிவாஜி மாதிரி வைத்துக் கொண்டிருந்தான்) ... .... இப்படியே போறீங்களே !! ... ... இது நியாயமா? ...  ... இப்படியே போனீங்கன்னா பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடி இருக்கு ... ... போலீஸ் ஸ்டேஷன் ... அங்கே போவோம். ... அங்கே என்னுடைய அப்பா ... ... ரைட்டரா இருக்கார் (அடப் பாவி - ஒரு நொடியில் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு போஸ்ட் உருவாக்கி, அங்கே எங்க அப்பாவை அப்பாயிண்ட் பண்ணிட்டானே!) அவர்கிட்டே நாம நியாயம் கேக்கலாம்......."  
     
(மூன்று புள்ளிகள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் 'மூஸ் மூஸ்' மற்றும் 'விசுக் விசுக்' என்ற அவனுடைய சுவாச ஜாலங்களை சேர்த்துக் கொள்ளவும்)  

விடாக்கண்டர் திகைத்துப் போய் விட்டார்.  சைக்கிளை என்னுடைய அண்ணன் கைகளில் திணித்துவிட்டு, குதிகால் பிடரியில் இடிபட ஓட்டமும் நடையுமாகப் போனார்! 
    
என்னால் வியப்பைத் தாங்க முடியவில்லை! "டேய் - எப்பிடிடா இப்பிடி எல்லாம் ஆக்ட் கொடுக்கிறே! - கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி, வசனம் பேசி, நடித்து, பரிசும் வாங்கிட்டே!" என்று கேட்டேன்.  
   
"ஓ அதுவா? அண்ணன் கே ஜி என்னை அடிக்க வரும் பொழுதெல்லாம் - நான் என்ன பண்ணுவேன் என்று பார்த்திருக்கின்றாயா - அவர் கை என் கிட்டே வருவதற்குள்ளாகவே ' ஓ ' என்று அலறி, அவர் அடித்து, அதனால் எனக்கு என்னென்ன ரியாக்ஷன் வருமோ எல்லாவற்றையும்  முன் கூட்டியே கொண்டு வந்து, அம்மா அடுக்களையிலிருந்து வந்து பார்க்கும் பொழுது, மூன்றாவது அண்ணனை அக்னிப் பார்வை பார்க்க வைப்பேனே  ... ஞாபகம் இருக்கா?" 
   
பார்த்த ஞாபகம் வந்தது. அட! இதுதான் டெக்னிக்கா! இனிமேல இதை நான் இவன் விஷயத்தில் ஃபாலோ பண்ணலாமே என்று நினைத்தேன். 
   
"அது சரி. ஆனால் - ரோலிங் மில்லில் கோ ஆப்பரேடிவ் ஸ்டோரில் வேலை பார்க்கும் அப்பாவுக்கு ஏன் அவசரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றல் உத்தரவு கொடுத்தாய்?"
           
"ஐயோ, நீ என் தம்பின்னு சொல்லிக்கவே லாயக்கு இல்லை. சைக்கிளை பறித்துச் சென்றவர் ரோலிங் மில் தொழிலாளி - அவரிடம் போயி எங்க அப்பா ரோலிங் மில் ஸ்டோர்ல வேலை பார்க்கிறார் என்று சொன்னால், அவரு நேரா போயி, நம்ம அப்பாகிட்ட சொல்லி, அவரு கிட்டேயும் திட்டு வாங்கிக் கொடுத்துவிடுவார் என்பது உனக்குத் தெரியலையா!" அதுவுமில்லாம போலீஸ் ஸ்டேஷன் என்று நான் சொன்னதும் அவரு மூஞ்சி காத்துப் போன சைக்கிள் டயராட்டம் ஆயிடுச்சே பார்த்தியா ? " என்று சொல்லிக் கொண்டே மாரியம்மன் கோவில் வாசலில் கப்பில் இருந்த குங்குமத்தை ஒரு கையளவு அள்ளினான். 
   
"இது எதுக்குடா?"என்று நான் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே பக்கத்தில் தெருக்குழாய் மேடையில் தேங்கியிருந்த  தண்ணீருடன் அந்தக் குங்குமத்தைக் கலந்து, அதைக் குழைத்து, 'குன்னக்குடி நெற்றிப்பொட்டு ' அளவுக்கு கையில், சட்டை கிழிந்த செம்மண் படர்ந்த இடத்தில் இட்டுக் கொண்டான். 
   
"இது என்ன? ஏதாவது வேண்டுதலா?"
   
"அடப் போடா - ஏற்கெனவே தொத்தல் சைக்கிள். இப்போ இடிபாடுகளில் சிக்கி கொஞ்சம் பார்ட்ஸ்தான் மீதி இருக்கு. இதை வாடகைக்குக் கொடுத்த பாபு கிட்ட போயி, இந்தா எல்லா பார்ட்டும் இருக்கா எண்ணிப் பாத்துக்க என்று சொன்னால், அவன் என்னுடைய எலும்பை எண்ணிவிடுவானே!" என்று சொல்லிக் கொண்டே வந்தான்.
   
சைக்கிள் கடை அருகே வந்ததும், மீண்டும் பாகப்பிரிவினை சிவாஜி வேடம் ஏற்று, எக்ஸ்ட்ராவா காலையும் சற்று நொண்டிக்கொண்டே சென்று, " பா .. பு - ப்ரேக் பிடிக்கின்ற சைக்கிளா கொடுத்திருக்கக் கூடாதா ..." என்று ஈனஸ்வரத்தில் முனகியபடி, கை காயம்(!) பாபுவின் கண்களில் படும்படி காட்டியபடி, சைக்கிள் வாடகையை கொடுத்தான். அண்ணனுடைய காயத்தையும், சட்டையையும், நொண்டிக்கொண்டே வந்ததையும் பார்த்த பாபு, அதிர்ந்து போய், அண்ணனிடம் வாங்கிக் கொண்ட சில்லறையை எண்ணிக்கூடப் பார்க்காமல் கல்லாவில் போட்டுக் கொண்டு, 'சரி, சரி, போயிட்டு வா' என்பது போல தலை ஆட்டினான். 
          ------------------ X -------------------- 
     
 மேற்கண்டவைகள் யாவும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது என்று யாராவது சொன்னால் என் நினைவுக்கு வருகின்ற முதல் விஷயம்.  
         
ஆக - சைக்கிள் விடுவது என்பதை பாடம் பாடமாகப் பிரித்து - சைக்கிளின் அங்கங்கள் என்னென்ன, சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடப்பது எப்படி என்கிற எல் கே ஜி, யு கே ஜி பாடங்களை ஒதுக்கி விட்டுப் பார்ப்போம். சைக்கிளில் உந்தி ஏறுவது, சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்து பாலன்ஸ் செய்து ஓட்டுவது, இலக்கை அடைந்தவுடன் சைக்கிளிலிருந்து லாவகமாக இறங்குவது ஆகிய மூன்று மேஜர் ஸ்டெப்ஸ்தான். 
         
முதல் பாடமாகிய உந்தி ஏறுவதை கற்றுக் கொள்ள, நான் எங்கள் (வாடகை) வீட்டு சுவற்றைத்தான் மலை போல நம்பி செயல் பட்டேன். சைக்கிளை, எனக்கும் சுவற்றுக்கும் இடையில் நிறுத்திக் கொள்வேன். சில சமயம் சுவற்றின் மீது சார்த்தி வைத்தே ஆரம்பிப்பேன். பெடலை வாகாக வைத்துக் கொண்டு, பெடல் மீது இடது கால் கொண்டு ஓர் உந்து உந்துவேன். சைக்கிள் முன்னோக்கி நகரும். சொல்ப நேரத்தில் சைக்கிள் என் பக்கம் சாய்ந்தால் - ப்ரேக் பிடித்தபடி காலை ஊன்றிக்கொண்டு நின்றுவிடுவேன். சைக்கிள் சுவர் பக்கம் சாய்ந்தால் - வலது பக்க ஹாண்டில் பார் - (நான் அவசரமாக என் வலது கையை அகற்றிக் கொள்ள) சுவற்றில் 'டர்ர்..ர்ர்ர்... ' என்று அழியாத கோலங்கள் இட்டு, நிற்கும். நாளடைவில் ஹாண்டில்பார், சுவற்றின் காரையைப் பெயர்த்து, செங்கல் எல்லாம் கண் திறந்து சுவற்றைப் பார்ப்போரைப் பார்த்துப்  பல்லிளித்தன!  சுவற்றை ஹாண்டில்பார் கொண்டு, அகலமாகவும் ஆழமாகவும் உழுது வைத்திருந்தேன். 
          
வீட்டு வாடகையை வாங்கிக் கொள்ள மாதா மாதம் வருகின்ற மகாதேவன் என்பவர், சாதாரணமாக வாடகையை வாசலோடு வாங்கிக் கொண்டு சென்று விடுவார். அவரிடம் ஒவ்வொரு மாதமும் அப்பா வாடகைப் பணம் கொடுக்கும் பொழுது வீட்டில் பார்க்கப்பட வேண்டிய பழுதுகள் பற்றி சிறு குறிப்பு வரைவார். மகாதேவன் 'ஆள் அனுப்புகிறேன்' என்று சொல்லிக் கொண்டே, பணத்தை எண்ணியபடி சென்று விடுவார். 
         
அந்த மாதம் வாடகைப் பணம் வாங்க வந்த மகாதேவனிடம், அப்பா 'வீட்டு சுவர் எல்லாம் காரை பெயர்ந்து உதிர்கிறது. கொத்தனாரை அனுப்பி சரிசெய்யச் சொல்லணும்' என்றார். வழக்கம் போல தலை ஆட்டி, 'ஆள் அனுப்புகின்றேன்' என்று சொல்லிச் செல்வார் என்று பார்த்தால், அவர் 'அப்படியா? எங்கே? நான் பார்க்கிறேன் ... ' என்று சொல்லியவாறு படி ஏறி (எங்கள் வீட்டுக்கு ஏழு படிகள்!) வர ஆரம்பித்தார். 
    
நாங்கள் மூன்று பேரும் (சென்ற அத்தியாய இறுதி போலவே)  'செய்வதறியாது திகைத்தோம்.' 
      
(தொடரும்) 
          
பின் குறிப்பு:
கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடித்து விடப் பார்க்கின்றேன்! 
   
பின் பின் குறிப்பு: 
இன்னும் தொடர்வதற்கு பதிவர்கள் கிடைக்கவில்லை! 
             

12 கருத்துகள்:

  1. தொடர் பதிவா...? முதல் பதிவின் சந்தோசம் என்னாச்சி...?

    பதிலளிநீக்கு
  2. //அது சரி. ஆனால் - ரோலிங் மில்லில் கோ ஆப்பரேடிவ் ஸ்டோரில் வேலை பார்க்கும் அப்பாவை ஏன் அவசரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றல் உத்தரவு கொடுத்தாய்?"//

    சே, முதல்லேயே தெரியாமப் போச்சு, தெரிஞ்சிருந்தால் நாங்களும் எத்தனை மாற்றல் வாங்கிக் கொண்டிருப்போம்! :))))

    மஹா அறுவை! இது கேஜி, அல்லது கேஜிஜி, அல்லது கேஜே அல்லது டாஷ், டாஷ், டாஷ் யார் எழுதினது?

    பதிலளிநீக்கு
  3. வெங்கட் எந்த இடம் பதிவுக்கப்புறமாக் கிட்டத்தட்ட பதின்மூன்று பதிவுகள் போட்டதுக்கப்புறமும் உங்களுக்கு அப்டேட் ஆகவே இல்லை. ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  4. //கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடித்து விடப் பார்க்கின்றேன்! // ஹா ஹா ஹா ம்ம்ம்ம் நடத்துங்கள் நடத்துங்கள்

    பதிலளிநீக்கு
  5. //இன்னும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடித்து விடப் பார்க்கின்றேன்! //

    முன்னெச்சரிக்கைக்கு மிக நன்றி!!

    பதிலளிநீக்கு
  6. என்ன ஒரு சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்! சின்ன வயது adventures எல்லாம் இப்படித்தான் நினைக்க நினைக்க மணக்கின்றன!!

    பதிலளிநீக்கு
  7. சைக்கிள் பயணம் சுகமாய்த்தான் போகிறது...

    பதிலளிநீக்கு
  8. யாராவது சைக்கிள் ஓட்டக்கத்துக்கிறேன்னு சொன்னா மேற்ச்சொன்ன எல்லாமும் ஞாபகத்துக்கு வருமாப்பா?

    குழந்தைப்பருவத்தில் இருந்து மாணவப்பருவம் வரை பிள்ளைகள் செய்யும் அட்டகாசங்கள் எழுத இந்த ஜென்மம் போறாது சாமி.. என்னையும் சேர்த்து தான் சொல்றேன்..

    இதிகாசம்பா இதிகாசம்.. யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா பிள்ளைகளா :)

    என்னா நடிப்பு என்னா நடிப்பு...

    சைக்கிள் ஓட்டனும்னு நினைச்சாலே திகில் தான் இப்பவும்... :)

    தொடருங்க தொடருங்க... நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
  9. சுவையாக இருக்கிறது சைக்கிள் அனுபவங்கள்! தொடர்கிறேன்! நன்றி

    பதிலளிநீக்கு
  10. அண்ணன் நடிப்பு பயங்கற நடிப்பாக இருக்கே!

    நான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்ட அனுபவங்கள், வாடகை சைக்கிள் கடையில் இருப்பத்தில் நல்லதாக பார்த்து வாங்கி வந்த அனுபவம் எல்லாம் இருக்கிறது, நினைவுகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்களின் அனுபவப் பதிவுகளுக்கு ஒரு நாளை டெடிகேட் செய்யலாமா என்று ஒரு சிந்தனை

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!