Thursday, August 8, 2013

பாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள் தொடர்ச்சி


[சென்ற இதழின் ச்சீ..... சென்ற பதிவின் தொடர்ச்சி..!]

(..............கபடி என்று அல்லவா ஆரம்பித்தான் இவன், என்னமோ சொல்லிக் கொண்டு இருக்கிறானே என்று நீங்கள் பொறுமை இல்லாமல் ஸ்க்ரால் செய்வது தெரிகிறது. என்ன செய்ய எந்தத் தலைப்பில் பேத்த, ச்சே... ஸாரி, பேச ஆரம்பிக்கிறேனோ...ஓ ... அதுவும் தவறா? சரி, எழுத ஆரம்பிக்கிறேனோ அந்தத் தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குக் கடைசியில்தானே வருவேன்.... உங்களுக்கே தெரியுமே....  )

ஆக, நான் எதற்காக இந்த விளையாட்டில் பங்கு கொண்டேனோ, அந்த நோக்கமே பாழானது. அன்று இரவே கபடி மேட்ச் இருந்தது. மற்ற ஆட்டங்களைப் பார்ப்பதும், சுற்றுவதுமாகப் பொழுது போக, கபடி விளையாட வேண்டிய அந்த அந்த நேரமும் வந்தது.

அவ்வப்போது, ஆங்காங்கே இந்த ஆட்டத்தை நான் பார்த்திருந்தாலும் நுணுக்கமெல்லாம் தெரியாது. எங்கள் டீம் கேப்டன், டீமில்  ஒருவனைப் பார்த்து 'முதல்ல நீ போ... போய்ப் பாடிட்டு வா' என்றபோது, ஆட்டம் தொடங்கும்போது ஏதோ சம்பிரதாயப் பாடல் ஒன்று உண்டு போலும் என்றுதான் எண்ணினேன். பாடிவருவது என்பது 'கபடி...கபடி...' என்று மூச்சு இடைவெளி விடாமல் சொல்லியபடிச் சென்று வருவதைத்தான் சொல்கிறார்கள் என்று அப்புறம்தான் தெரிந்தது.

கபடி ரூல்ஸ் உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும். எனவே நான் வாயை விடவில்லை! ஏனென்றால் எனக்கு அவ்வளவாகத் தெரியாது! நடுக் கோட்டைத் தாண்டும்போதே 'கபடி....கபடி...' என்று சொல்லிக் கொண்டே செல்ல வேண்டும். இடைவெளி விட்டு மூச்சு வாங்கக் கூடாது. எதிரணியினர் அவ்வப்போது நடுநடுவே 'மூச்சை விட்டுட்டான்' என்று நடுவரிடம் கம்பிளெயின்ட் செய்வதும் உண்டு. எதிர்முகாமுக்குள் சென்று எவ்வளவு பேரைத் தொடமுடியுமோ, தொட்டுவிட்டு மூச்சு முட்டுவதற்குள் தன்முகாம் திரும்ப வேண்டும். தொடப்பட்டவர்கள் அவுட். அதற்குள் எதிர்முகாம் ஆட்கள் 'பாடி வருபவனை' மடக்கிப்  பிடித்து வீழ்த்தி நடுக்கோட்டைத் தொடமுடியாமல் செய்து விட்டால் இவன் அவுட்!


பாடி வருவதில்தான் எத்தனை வகை? 

 


'கபடி....கபடி...' என்று மட்டுமே பாடி வருவது ஒருவகை.

'கபடி....கபடி...காசுக்கு ரெண்டடி... சோளப்பொறியடி... சொக்கட்டான்...சொக்கட்டான்...சொ
க்கட்டான்...' என்று பாடிவருவது இன்னொரு வகை.

கொஞ்சம் தோற்கும் நிலையில் இருக்கும் டீம் ஆள் ஒருவன் ' தோத்த கட்சி ஜெயிக்கவே தோலுஞ்சப்பரம் (தோலினால் செய்த தேர்) கட்டுவேன்..நாய் குலைக்க.... நரி குலைக்க..நாய் குலைக்க.... நரிகுலைக்க...' என்று ஆவேசமாகப் பாடி வருவார்..


இன்னொரு பார்ட்டி வெறும் 'சல்ல்ல்ல்ல்ல்ல்ல்...' என்று சொல்லியபடியே போய்வந்து விடும்.


நடுக்கோட்டைத் தாண்டுமுன்
'ஒரு தொடக்கம்' வேண்டி ஒருகணம் நிற்பார்கள். சிலர் தங்கள் விரலை முத்தம் கொடுத்துக் கொள்வார்கள்! சிலர் கீழே குனிந்து கொஞ்சம் மண் எடுத்து இருகைகளிலும் லேசாகத் தடவிப் பூசிக் கொள்வார்கள்.

பாடிக் கொண்டே உள்ளே சென்று யாராவது ஒருவனைத் தொட்ட உடனேயே பாடிக் கொண்டே தொட்ட ஆளை நோக்கி சொடக்குப் போட்டு 'தொட்டு விட்டேன்... இவன் அவுட்' என்னும் அர்த்தம் வரும் வகையில் அந்த ஆளைச் சுட்டுவார்கள். சிலர் உடனே ஒத்துக் கொண்டு வெளியே செல்வார்கள். சிலர் மறுப்பார்கள், அல்லது அதுதான் தொட்டு விட்டானே, இனி என்ன என்பது போல பாடி வந்திருப்பவனைப் பிடித்துப் போடப் பாய்வார்கள்.

 இப்படி ஆடும் ஆட்டத்தில் அன்று நானும் ஒரு டீமில்! மாற்றி மாற்றி 'பாடி வந்த' வேளையில் அவ்வப்போது என்னையும் போகச் சொன்னான் என் கேப்டன்.

என்னைப்பற்றி இங்கு சொல்ல வேண்டும். என்னுடைய அப்பாவுக்கு ஒரு ஆஸ்தான டெய்லர் ஐயங்கடைத்தெருவில் இருந்தார். ஏழுமலை என்று பெயர். 'நீதி' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் சந்திரபாபு 'முத்தமிழின் செல்வன் வாழ்க... முக்குலத்தின் கண்மணி வாழ்க' என்று பாடி ஆடும்போது அவர் போட்டிருக்கும் டிராயரைப் பார்த்திருக்கிறீர்களா? (இதில் டைட்டிலில் 'கவுரவ வேடத்தில் சந்திரபாபு' என்று வேறு போடுவார்கள்!!!) அந்த மாதிரி டிராயர்கள் தைப்பதில் வல்லவர் அந்த ஏழுமலை. அந்த டிராயர்தான் ஸ்கூலுக்கும் கூட. கேம் என்பதால் எல்லோரும் சட்டையைக்  கழற்றி விட்டு, முண்டா பனியனோடு இருக்க, நானும் அப்படியே! ஆனால் என்ன, நான் கை வைத்த பனியன் போடும் வழக்கமுடையவன். துவைத்தபின் அந்த பனியனின் இரு கைகளும் காரே மூரே என்று கண்டபடி நீட்டிக் கொண்டிருக்கும். அதை சுருட்டிச் சுருட்டி விட்டுக் கொள்வேன்.

நான் 'பாடி வர' போகும்போது இரண்டு முறையும் எதிர் டீம் நண்பர்கள் என்னை இழுத்து கோழி அமுக்குவது போல அமுக்கி விட, இரண்டு முறை வெளியில் சென்று, அப்புறம் அடுத்தவர்கள் புண்ணியத்தில் உள்ளே வந்தேன். அப்புறம் தலைவன் என்னைப் 'பாட' அனுப்பவில்லை.


ஆனால் ஒரு கட்டத்தில் எல்லோரும் வெளியில் நிற்க, நான் மட்டும் உள்ளே.


கூட நின்ற இருவரை எதிர் டீம் ஆள் வந்து தொட்டு விட்டுப் போயிருந்தான். என் டீம் ஆட்கள் மொத்தமும் நம்பிக்கையிழந்து போக, தலைவன் என்னிடம் வந்து ஆலோசனை சொல்லிச் சென்றான்.


நடுக் கோட்டில் போய் நின்றேன். 'கபடி...கபடி...' என்று சொல்லிக் கொண்டே ஒரு மூலையை நோக்கி ஓடினேன். எதிரிகள் சுற்றி வளைக்க ஆயத்தமாகும்போது  திரும்பி வந்த வழியே ஓடி வருவது போல பாவ்லா காட்டி (அவர்களை ஏமாற்றுகிறேனாம்) இன்னொரு பக்கமாக ஓட முயல, அவர்களும் சுழன்று திரும்பி என்னை நோக்கி ஓடிவர,  கீழே கால்களுக்கு இடையே வழி கிடைக்குமா என்று நான் குனிந்து முயற்சித்ததில் என்னைப் பிடிக்கக் குனிந்த இருவர் சறுக்கி விழ, அவர்கள் மேல் மின்னலென கால் வைத்து தாண்டி ஓடியதோடு அருகில் நின்றவன் மேலும் கைகளால் தொட்டு விட்டு ஓடி வந்து விட்டேன். என்ன செய்தேன் என்று எனக்கே தெரியாத நிலையில் என் டீம் ஆட்கள் முக்கியமான  3 பேர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். எனக்கு ஒரே பாராட்டுதான்!


அப்புறம் என்ன, எப்படியோ என் டீம் ஜெயித்து விட்டது. எல்லோருமே அது தன்னால்தான் என்று சொல்லிக் கொண்டபோது நானும் விளையாட்டின் இந்த கட்டத்தைச் சொல்லி, 'என்னால்தான்' என்று சொன்னேன். அவர்கள் முழு மனதோடு ஆதரிக்கவில்லை. அப்புறம் 'என்னாலும்தான்' என்று கொஞ்சம் மாற்றிச் சொன்னேன். பின்னே? எனக்கும் வெற்றியில் பங்கு வேணுமே....ஓரளவு  ஒத்துக் கொண்டார்கள்!


என் டீமுக்கு ஆளுக்கு ஒரு எவர்சில்வர் டம்ளர் கிடைத்தது. பரிசு வாங்க நிற்கும்போது அவ்வளவு பெருமை. என் அம்மா ரொம்ப நாள் அதை பீரோவில் வைத்திருந்தார்.


கீதா மேடம் "இதைத் தொடர்பதிவாக்குங்களேன், நன்றாயிருக்கும்" என்று சொல்லியிருக்கிறார். நாம சொல்லி யார்  கேப்பாங்க.... இருந்தாலும் 'இரவின் புன்னகை' வெற்றிவேலையும்,  'மனசு' சே. குமாரையும் தொடர அழைக்கிறேன்! அவர்களும் இருவரைத்  தொடர அழைக்கலாம்!

14 comments:

geethasmbsvm6 said...

hihihihihi

rajalakshmi paramasivam said...

கபடி விளையாட்டின் ரூல்ஸ் எல்லாம் ஒன்று விடாமல் எழுதி விட்டீர்களே. உங்களுக்கு மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது.

இரவின் புன்னகை said...

வணக்கம்...
என்னை அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றி... தங்கள் அனுபவம் எல்லாம் அழகாக சொல்லியுள்ளீர்கள்,,,

சீனு said...

ஹா ஹா ஹா சந்திரபாபு போல் கவுரவ வேடத்தில் தோன்றினாலும் டீமின் மானத்தை கப்பலேற்றாமல் கரையேற்றி விட்டீர்கள்...

தொடர்பதிவு ஆரம்பமா.... கலக்குங்க கலக்குங்க...

சே. குமார் said...

உங்கள் பகிர்வு அருமை...

இப்பத்தான் சந்தோஷ தருணங்கள் அப்படின்னு ஒரு தொடர்பதிவு முடிந்தது. அடுத்து கபடி ... ஆஹா... கிராமத்து நினைவுகள்ல... எழுதிருவோம்...

தங்கள் அழைப்புக்கு நன்றி....

கண்டிப்பாக எழுதுகிறேன்...

கோவை2தில்லி said...

ஆஹா! உங்க டீமையே ஜெயிக்க வைத்த பெருமை உங்களுக்கே உங்களுக்கு தான்...:)

கபடி நினைவுகள் அருமை..

Geetha Sambasivam said...

//அவர்களும் சுழன்று திரும்பி என்னை நோக்கி ஓடிவர, கீழே கால்களுக்கு இடையே வழி கிடைக்குமா என்று நான் குனிந்து முயற்சித்ததில் என்னைப் பிடிக்கக் குனிந்த இருவர் சறுக்கி விழ, அவர்கள் மேல் மின்னலென கால் வைத்து தாண்டி ஓடியதோடு அருகில் நின்றவன் மேலும் கைகளால் தொட்டு விட்டு ஓடி வந்து விட்டேன். என்ன செய்தேன் என்று எனக்கே தெரியாத நிலையில் என் டீம் ஆட்கள் முக்கியமான 3 பேர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். எனக்கு ஒரே பாராட்டுதான்! //

காலம்பர ஒரே அவசரமா வந்தேன். கடைசிப் பத்தியை மட்டும் படிச்சுட்டு, சந்தோஷத்திலே ஹிஹிஹி னு சொல்லிட்டு, ச்ச்சீ எழுதிட்டுப்போயிட்டேன். இப்போத் தான் முழுசும் படிச்சேன்.

மேலே நீங்க எழுதி இருப்பதைக் கற்பணை பண்ணிப் பார்த்துட்டுச் சிரிச்சுட்டு இருக்கேன். கபடி ரூல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிரமாதம் போங்க! :))))

Geetha Sambasivam said...

நாங்க கபடி எல்லாம் விளையாடியதில்லை. விளையாடறச்சே பார்த்திருக்கோம். :))) மதுரையிலே கபடி ஆட்டம் ரொம்பவே பிரபலம். சடுகுடுனு சொல்லுவாங்க. பலீஞ்சடுகுடு, சடுகுடு சடுகுடு, குடு குடுனு சொல்லிட்டே உள்ளே போவாங்க. காப்டனை "வாத்தியார்"னு அழைக்கும் பழக்கமும் இருந்தது.

Geetha Sambasivam said...

நீங்களும் தொடர்ந்து மத்தவங்களையும் தொடர வைச்சால் தான் தொடர் பதிவோ? :P:P:P:P

வல்லிசிம்ஹன் said...

எங்கள் ஊரிலும் சடுகுடு தான். நீங்கள் வெற்றி பெற்றது மிக சந்தோஷம் .எல்லோர் உழைப்பும் சேர்ந்தால்தானே வெற்றி.

s suresh said...

கபடி அனுபவம் களை கட்டியது! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

கபடி ஆடிய காட்சி கண்முன்னே......

ரசித்தேன்....

அட இதிலும் தொடர்பதிவு..... ஆரம்பமாகட்டும் இன்னுமொரு தொடர் பதிவு!

கோமதி அரசு said...

என்ன செய்தேன் என்று எனக்கே தெரியாத நிலையில் என் டீம் ஆட்கள் முக்கியமான 3 பேர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். எனக்கு ஒரே பாராட்டுதான்!

அப்புறம் என்ன, எப்படியோ என் டீம் ஜெயித்து விட்டது.//

ஆஹா! நிச்சயம் உங்கள் குழு வெற்றியில் உங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

ராமலக்ஷ்மி said...

/அப்புறம் 'என்னாலும்தான்' என்று கொஞ்சம் மாற்றிச் சொன்னேன். /

நிச்சயமாய். வெற்றியில் உங்கள் பங்கே அதிகம்.

சும்மா சல்ல்ல்ல்ல்ல்ல்லுன்னு இருக்கு பகிர்வு:)!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!