செவ்வாய், 8 ஏப்ரல், 2014

அலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப்



80 களின் பிற்பகுதி.

மதியம் சாப்பிட்டு விட்டு மீண்டும் அலுவலகம் கிளம்பியபோது தொலைபேசி சிணுங்கியது. மகன் பதட்டமாகப் பேசினான். அவன் அப்போதுதான் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். கணக்கு முடிக்கும் நேரம் 10,000 குறைவதாகவும், அதை மாலை அலுவலகம் முடியும் நேரத்துக்குள் கட்டச் சொல்லி மேனேஜர் சொல்வதாகவும் சொன்னான்.

'கவலைப்படாதே, பதறாதே' என்று அவனுக்குச் சொல்லி விட்டு அலுவலகம் வந்து கோவிந்தனுக்கு தொலைபேசினான் ஈஸ்வரன்.

கோவிந்தன் இவன் நெருங்கிய நண்பன். கைகொடுக்கும் தெய்வம். இந்த சமயமும் உடனே கைகொடுத்தான்.

பணத்தை எடுத்துக்கொண்டுபோய் ஊரிலிருந்து ஒருமணி நேரப் பயணத்தில் இருந்த மகன் ஊர்
சென்று, வங்கியில் கட்டச் சொல்லிக் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.

ஒரு வாரத்தில் பணம் திரட்டி கோவிந்தன்
வீட்டுக்கு வந்தபோது அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டான்.

கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கோவிந்தன் கிளம்பிச் சென்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் கோவிந்த
னிடமிருந்து ஃபோன் வந்தது. பணத்தைக் காணோம் என்றும், கிளம்பும்போது வீட்டு வாசலில் விழுந்திருக்கலாம் என்றும், பணம் ஏதாவது விழுந்திருக்கிறதா என்று வாசலில் சென்று பார்க்கச் சொன்னான். மஞ்சள் பையில் வைத்து எடுத்துக் கொண்ட பணம் காணோமாம். 

ஈஸ்வரனும் வாசல் பக்கம் போய் நன்றாகத் தேடித் பார்த்தான். 

ஊஹூம்.

மறுநாள் அலுவலகம் முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து வழக்கமாக் கூடும் இன்னொரு நண்பனின் கடையில் குழுமி பேசிக்கொண்டிருந்தபோது இதை அவர்களிடம் சொன்னான் ஈஸ்வரன்.
 
குழுவில் இருந்த கோபால் என்னும் இன்னொரு நண்பன் மிகவும் ஆச்சர்யப்பட்டு போய், அன்று சம்பளக் கணக்கு அலுவலகம் சென்றுவந்தபோது தானும் 10,000 ரூபாயைத் தொலைத்து விட்டதாகவும், மனைவியின் நகையை வைத்து 10,000 ரூபாய் ஏற்பாடு செய்ததாகவும் கூறினான்.
நண்பர்கள் என்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும் என்று பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

அப்புறம் நண்பர்கள் அவரவர்கள் அவ்வப்போது பணம், நகை தொலைத்த அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  கலைந்து அவரவர் வீடு சென்றார்கள்.

மறுநாள் காலை அந்த கடைக்கார நண்பன் ஃபோன் செய்தான். "ஈஸ்வரா... கடைல திருட்டு போயிருக்குடா... சுவத்தை உடைச்சு கல்லாப்பெட்டியை உடைச்சிருக்காங்க... திருட்டுப்போன பணம் எவ்வளவு தெரியுமா? 10,000! நானும் நம்ம நண்பர்கள் லிஸ்ட்ல சேர்ந்துட்டேண்டா..."
குரலில் கவலையை விட உற்சாகம்தான் தெரிந்தது!

திருட்டுப் போனது கூட இரண்டாம்பட்சமாகி நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்ததாய்ச் சொன்ன அந்த நண்பனை என்னவென்று சொல்ல!

21 கருத்துகள்:

  1. அப்பவே பத்தாயிரம் தொலைச்சவங்க இப்போ எவ்வளவு தொலைக்கிறாங்களோ?

    பதிலளிநீக்கு
  2. நண்பர்கள் குழுவில் தான் மட்டும் விடுபட்டுப் போவதை விரும்பாமல் அவரே அப்படியொரு ஏற்பாட்டை செய்திருப்பாரோ? ச்சே! எப்படியெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. பின்னே? உற்சாகமாகச் சொன்னால்... அப்படித்தானே தோன்றும்!

    பதிலளிநீக்கு
  3. சொல்லி வைத்த மாதிரி பத்தாயிரம். ஆச்சரியம்தான்.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா, என்னோட பின்னூட்டங்களிலும் 10,000 பின்னூட்டங்களைக் காணோமே! என்ன செய்யலாம்?

    ஹிஹிஹி, பின்னே? பத்தாயிரம் பணத்துக்கு நான் என்ன செய்யறது? சுலபமா இதான் கிடைச்சது. :))))

    பதிலளிநீக்கு
  5. இழப்பிலும் நட்புகள் ஒன்று போலவே...

    பதிலளிநீக்கு

  6. எனக்கு ஆஞ்ச்யோப்லாஸ்டி நடந்து முடிந்தபின் என்னை பார்த்த ஒரு நண்பன் இதய நோயாளி நண்பர்களில் நானும் ஒருவனாகிவிட்டதைச் சொன்னது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  7. ஜி எம் பி சார்! மொனாபலி என்பது நாம் அந்தக் காலத்தில் விளையாடிய டிரேட் விளையாட்டின் (பாம்பே கல்கத்தா டெல்லி என்றெல்லாம் ஊர்கள் வாங்கி கோடவுன் கட்டுவோமே) இந்தக் காலத்துப் பெயர். அதில் நாம் கொடுப்பது அட்டை ரூபாய்கள்தானே! அதைத்தான் சொல்கிறார் துரை.

    பதிலளிநீக்கு

  8. திருட்டுப் போனது கூட இரண்டாம்பட்சமாகி நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்ததாய்ச் சொன்ன அந்த நண்பனை என்னவென்று சொல்ல!

    உற்சாகமான நட்புகள்..!

    பதிலளிநீக்கு
  9. பதிலளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இது நிஜமாக நடந்ததுதான். கடை வைத்திருந்த நண்பருக்கு வருத்தம் இல்லாமல் இல்லை. அது ரெண்டாம் பட்சமாகியிருந்தது. .கொஞ்சம் வசதியானவர்கள். கொஞ்சம் சிறிய ஊர் என்பதால் 'கன்னம்' வைத்த ஆளை அடையாளம் தெரிந்து அப்புறம் பிடித்து விட்டார்கள்!

    பதிலளிநீக்கு
  10. //தொலைச்சது மொனாபலி பணமோ?// அப்பாதுரை சார்.. ஹஹஹா..

    பதிலளிநீக்கு
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!

    பதிலளிநீக்கு
  12. நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்! :)))

    பதிலளிநீக்கு
  13. அதெப்படி, எல்லோரும் 10,000 ரூபாயையே தொலைத்தார்கள்? ஆச்சரியம்தான்!
    எங்கள் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் சர்க்கரை உண்டு. எனது கடைசி மைத்துனர் தனக்கு அது வரவே வரத்து, அதை தடுக்க எல்லா முன்னெச்சரிக்கைகளையும் தான் எடுத்துவிட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் அவருக்கும் பார்டரில் சர்க்கரை இருப்பது தெரிந்தவுடன் மற்ற அண்ணன்கள் எல்லோரும் இப்போதுதான் நீ நம் குலப்பெருமையை காப்பாற்றியிருக்கிறாய் எங்கள் குழுவில் சேர்ந்துவிட்டாய் என்று சொன்னபோது எல்லோருடனும் சேர்ந்து சிரித்தாலும் வருத்தமாக இருந்தது உண்மை.


    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!