Tuesday, April 22, 2014

காங்கிரஸ் கோஷ்டி ஆரசியலும் சினிமா விமர்சனமும் -1930 ஸ்டைல்!காங்கிரசில் கோஷ்டி இருப்பது இப்போதல்ல, 1930 களிலேயே இருந்திருக்கிறது. தீரர் சத்தியமூர்த்தி ஒரு கோஷ்டி. ராஜாஜி ஒரு கோஷ்டி.

இது சம்பந்தமான சுவையான ஒரு சம்பவம்.

நாடகங்களிலிருந்து திரைப்படங்களுக்கு தமிழகம் பழக்கப் பட்டுக் கொண்டிருந்த சமயம். நிறைய படங்களில் பெண் வேஷத்தை ஆண்களே ஏற்று நடிப்பது சாதாரணமாய் இருந்தது. நாடக மேடையில் செய்வதை அப்படியே திரையிலும் செய்து கொண்டிருந்ததற்குக் காரணம் பெண்கள் அந்தக் காலத்தில் சினிமாவில் நடிக்க அதிக அளவில் வரவில்லை. வந்தாலும் கட்டுப்பாடுகள் இருந்தன.

பிராமண விதவை வேடத்தில் நடிக்க மொட்டை போட்டுக்கொள்ள வேண்டுமென்றால் அந்த நடிகை தயாராக இல்லை. எனவே அந்த வேடத்தில் ஒரு ஆணே நடித்திருந்தார். (படம் மேனகா)

   
எஸ் ஜி கிட்டப்பா மறைவுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கை வைத்திருந்த கே பி சுந்தராம்பாளை நந்தனார் படத்தில் ஆண் (நந்தனாராக)  வேடத்தில் நடிக்க வைக்க ரூபாய் ஒரு லட்சம் அந்தக் காலத்திலேயே கொடுத்து ஒப்பந்தம் செய்து படமெடுத்தது எல்லோருக்கும் தெரியும். இதற்கு கே பி எஸ் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. நந்தனாராக (ஆணாக) நடிப்பதால் வேறொரு ஆண்மகனோடு ஜோடி சேரவேண்டிய அவசியம் இல்லை என்பதும், சத்யமூர்த்தி அவர்களும் சிபாரிசு செய்தார் என்பதாலும் ஒத்துக் கொண்டார். 
 
            

இந்த முயற்சி கூட ஒரு போட்டியின் விளைவாகத்தான் அவசரம் அவசரமாக எடுக்கப் பட்டதாம். எஸ்.டி சுப்புலட்சுமியை வைத்து டைரக்டர் கே. சுப்பிரமணியம் 'பக்த குசேலா' என்று படம் எடுத்துக் கொண்டிருந்தாராம். அதில் எஸ் டி எஸ் (சோமசுந்தரம் அல்ல!) தான் கிருஷ்ணராம். அந்தப் படம் வெளிவருமுன் நந்தனாரை வெளியிட்டுவிட முடிவு செய்து, அதேபோல வெளியிட்டும் விட்டார்களாம்.

இந்தப் படத்துக்கு எதிர் கோஷ்டியான ராஜாஜியின் ஆதரவாளரான கல்கி விகடனில் எழுதிய விமர்சனம் " நந்தனார் படத்தில் பனைமரம், எருமைக்கடா, வெள்ளாடு ஆகியவை சிறப்பாக நடித்திருந்தன"

அந்த சமயம் உண்மையிலேயே பத்திரிகைகளில் ஆண் வேடத்தைப் பெண்களும், பெண் வேடத்தை ஆண்களும் சினிமாவில் நடிப்பதற்கு எதிர்ப்பு இருந்ததாம்.

இந்த எதிர்ப்பினாலும் 'பக்த குசேலா' எடுத்த கே சுப்பிரமணியம் அதில் நடித்த எஸ் டி சுப்புலட்சுமியை அழைத்துக் கொண்டு கல்கியை நேரில் சந்தித்து அந்தப் படத்துக்கான பிரத்தியேகக் காட்சியைப் பார்க்க அழைத்தாராம். கல்கி 'பெண் ஆண் வேடம் இது நடிப்பதற்கு நானும் எதிர்க் கருத்து உடையவன்தான், தெரியுமில்லையா?' என்று கேட்டாலும் மகள் ஆனந்தியோடு படத்தைப் பார்த்தாராம். கிருஷ்ணரைப் பார்த்த ஆனந்தி 'அது கிருஷ்ணனேதான்' என்று கத்தி விட, 
 
                        

சத்தியமூர்த்தி ஆதரவு பெற்ற நந்தனார் படத்துக்கு 'அப்படி' விமர்சனம் எழுதிய கல்கியின் பேனா, இந்தப் படத்துக்கு 'முல்லைச் சிரிப்பு எஸ் டி சுப்புலட்சுமி' என்று பாராட்டியிருந்தாராம். கூடுதல் தகவல் இந்தப் படத்தில் எஸ் டி சுப்புலட்சுமி அவர்கள் கிருஷ்ணனாக மட்டுமல்லாமல் மிசஸ் குசேலனாகவும் நடித்திருந்தாராம்!


18 comments:

Chellappa Yagyaswamy said...

ராஜாஜி அவர்கள் சிறந்த தலைவர்தான், ஆனாலும் அவரது பல முடிவுகள், குறிப்பாக சத்தியமூர்த்திக்கு எதிராகவும் காமராஜருக்கு எதிராகவும் செயல்பட்டது - தமிழகத்தில் பிராம்மணர்களுக்கு மிகுந்த துன்பங்களையும் துயரங்களையும் கொண்டுவந்தது என்றால் மிகையில்லை. 'விஷக்கிருமிகள்' என்று வர்ணிக்கப்பட்ட திமுக-வுக்கு அவர் அளித்த ஆதரவின் விளைவுதானே இந்த 47 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழர்கள் வாழ்வையே சிதைத்து விட்டன!

kashyapan said...

தமிழக அரசியலில் கோஷ்டிகள் இருந்தன என்பது உண்மையே ! சத்திய மூர்த்தியின் பிரதம சீடர் காமராஜர் ! ராஜாஜியின் பிரதம சீடர் சி.சுப்பிரமணியம் ! முதலமைச்சர் பதவிக்கு இருவருமே வேட்பாளர்கள் ! காமராஜர் முதலைச்சரானர் ! சி.சு அமைசராக அவரோடு ஒத்துழைத்து பணியாற்றினார் ! குறைந்த பட்ச அரசியல் நாகரீகம் இருந்தது ! இருவருமே தமிழகத்தை நிமிரச்செய்தவர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லதான் ! இன்றைய தமிழக கங்கிரஸ் பற்றி அப்படி சொல்ல முடியவில்லையே !---காஸ்யபன்.

திண்டுக்கல் தனபாலன் said...

கல்கியை ஸ்டைலான அடித்தார் கே சுப்பிரமணியம் அவர்கள்...

Bagawanjee KA said...

காங்கிரஸ்காரங்க 'நாங்க அன்னைக்கே அப்படி 'ன்னு காலரை தூக்கி விட்டுக்கப் போறாங்க !

geethasmbsvm6 said...

ஹூம், காந்தி காலத்தில் இல்லாத கோஷ்டியா?? நேதாஜிக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு பயந்த காந்தி பட்டாபி சீதாராமையாவைக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியாக நிறுத்தியதையும், நேதாஜி ஜெயிச்சதும், பட்டாபியின் தோல்வி என் தோல்வி என பகிரங்கமாக காந்தி நேதாஜியின் வெற்றியை அங்கீகரிக்காததும், அப்போதும் நேதாஜி காந்தியிடம் இருந்த அளவிட முடியா பக்தி காரணமாகத் தலைவர் பதவியை விட முடிவு செய்ததும்! ..........

geethasmbsvm6 said...

ஒழுங்கா நேதாஜியை வர விட்டிருக்கலாம். இல்லாட்டி சுதந்திரத்துக்குப் பின்னாடியாவது படேலைப் பிரதமராக்க முடிவு செய்திருக்கலாம். நாடு இன்றிருக்கும் நிலைமைகளுக்கு இவை எல்லாமும் ஒரு காரணம். :(

geethasmbsvm6 said...

ராஜாஜியைக்குறித்த என் கருத்துகளைப் பதிவு செய்யப் பார்த்தபோது திரு செல்லப்பா யக்ஞசாமி அவர்கள் சொல்லி இருப்பதைப் படித்தேன். அதை அப்படியே வழிமொழிகிறேன். இந்த இரு பெரும் தலைவர்களே இந்தியாவின் நிலைமைக்கும், தமிழ்நாட்டின் நிலைமைக்கும் காரணம். தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நாடு துன்பம் அனுபவிக்கிறது. :(

கோவை ஆவி said...

சில ஐடியா நல்லாயிருக்கே.. ஆவி டாக்கீஸ் விமர்சனத்துக்கு தேவைப் படும்போது உபயோகப் படுத்திக்கிறேன்.. ஹிஹிஹி.. ;-)

ராமலக்ஷ்மி said...

அறியாத தகவல்கள்.

Ranjani Narayanan said...

எம்எஸ் நாரதராக நடித்த சாவித்திரி படத்தைக் கூட கல்கி ரொம்பவும் கிண்டல் அடித்து எழுதியதாக எங்கள் அம்மா சொல்லுவார்.

நம்நாட்டில் கோஷ்டிக்கு என்றைக்குக் குறைவு இருந்தது?

G.M Balasubramaniam said...


தான் கொண்ட கொள்கைகளுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் புது கட்சியை ஆரம்பிப்பதும் தனக்குச் சாதகமாக இருந்தால் கூட்டு சேர்வதும் என்றக்கும் நடந்ததுதான். இருந்தாலும் காமராஜ் -சுப்பிரமணியம் , நேரு படேல் போல நாட்டின் மொத்த நலனுக்காக அனுசரித்துப்போனவர்களும் இருந்திருக்கிறார்கள் சினிமாவில் ஆண்வேடப் பெண்கள் பெண்வேட ஆண்கள் என்னும் கருத்திலிருந்து பின்னூட்டங்கள் எங்கோ போகின்றன.

ஸ்ரீராம். said...


செல்லப்பா ஸார், காஷ்யபன் ஐயா,

நல்ல தகவல்கள் பகிர்ந்தீர்கள். நன்றி. ஆனாலும் ஜி எம் பி ஸார் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்!

நன்றி DD, பகவான் ஜி.

கீதா மேடம்... நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! ஆனால் ஜி எம் பி ஸார் சொல்லியுப்பதைக் கவனியுங்கள்!

ஆவி.... //சில ஐடியா நல்லா இருக்கே// என்ன ஐடியா ஆவி?

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி ரஞ்சனி மேடம்.. நான் கூட படித்த ஞாபகம் இருக்கிறது!

ஜி எம் பி ஸார்... நன்றி.

வல்லிசிம்ஹன் said...

கடைசியில் நல்ல நடிப்பு வென்றால் நல்லதுதான். படங்கள் நமக்காக எடுக்கப்பட்டாலும் நாம் மதிப்பவர்களின் கருத்து வேறு பட்டால் எவ்வளவு பாதிப்பு. அர்ஜுனனே காலக் கட்டாயத்தில் பிருகன்னளையாக மாற வேண்டி இருந்தது. நல்ல பதிவு ஸ்ரீராம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.....

சினிமாவிலிருந்து அரசியலுக்கு போய்விட்டது பின்னூட்டங்கள்! :)))

கோவை ஆவி said...

என்ன ஐடியா ஆவி?

//நந்தனார் படத்தில் பனைமரம், எருமைக்கடா, வெள்ளாடு ஆகியவை சிறப்பாக நடித்திருந்தன"//

நடிப்பு நல்லால்லேன்னு சொல்லாம இப்படி சொன்ன ஐடியா..

Geetha Sambasivam said...

//கீதா மேடம்... நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! ஆனால் ஜி எம் பி ஸார் சொல்லியுப்பதைக் கவனியுங்கள்!//

ஹிஹிஹிஹி, தேர்தல் நேரம் இல்லையா? அதான் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். :))))) மத்தபடி ஆண் நடிகர் பெண் வேஷம் போடறதைப் போல ஒரு கொடுமையான விஷயம் வேறு ஏதும் இல்லை.

Geetha Sambasivam said...

பிராமண விதவைப் பாத்திரத்துக்கு இப்போவும் நடிகைகள் முன் வருவது இல்லைனே நினைக்கிறேன். விதிவிலக்காக காந்திமதி ஏதோ ஒரு படத்தில், (மெட்ராஸ் டு பாண்டிச்சேரி?) முக்காடு போட்ட பிராமண விதவையாக வருவார்.

Geetha Sambasivam said...

சிலவருடங்கள் முன்னர் ராஜ் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்த விஸ்வரூபம் தொடரில் பிராமண விதவையாக ஒரு ஆண் தான் நடித்திருப்பார். அவரையே ஆணாகவும் இன்னும் பல தொடர்களில் பார்க்கலாம். பெயர் தெரியவில்லை. :))) ஆனால் விஸ்வரூபம் தொடரில் (பாம்பே கண்ணன்?) அருமையான நடிப்பு. தொடர் முற்றுப்பெறவே இல்லை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!