Thursday, April 2, 2015

பர்மாவிலிருந்து நடையாய் நடந்து..


இரண்டு வருடங்கள் தேடிக் கிடைத்த புத்தகம்.
 

ஒரு மனிதனால் எவ்வளவு துன்பத்தைத் தாங்க முடியும்?  அப்படித் தாங்க எவ்வளவு மன உறுதியும் பாஸிட்டிவ் எண்ணமும் வேண்டும்?

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் பேர்ல் ஹார்பரைத் தாக்கி, சீனாவைத் தாக்கி, மலேஷியா, சிங்கப்பூர், என்று பர்மாவின் மீதும் குண்டு வீசத் தொடங்கியபோது இவர்களின் அமைதி தொலைகிறது.

விமானங்களிலிருந்து குண்டு போடுவதோடு,  பீதியில் தெருவில் ஓடும் அப்பாவி மக்களை மிஷின்கன் வைத்து சுட்டுத் தள்ளினார்கள் ஜப்பானியர்கள்.

பசுபதி ஐயர்.  1905 இல் பிறந்தவர்.  1924 இல் பர்மா  சென்று செட்டில் ஆகிறார். 1928 ஆம் வருடம் திருமணம் செய்து கொள்கிறார்.  செப்டம்பர் 1941இல் மதராஸ் வந்து பர்மா திரும்பும் அவரை அவரின் 75 வயதுத் தகப்பனார் தடுக்கிறார்.  ஜாதகப்படி வரும் சித்திரையில் அவருக்குக் கண்டம் இருக்கிறதென்றும்,  பிரிய வேண்டாம் என்றும் கூறுபவரைச் சமாதானப்படுத்திக் கிளம்புகிறார் பசுபதி.   அவர் தந்தை அவர் கணித்தபடியே அவர் சொன்ன நாளில் இறந்து விடுகிறார் என்பது பின்னர் தெரிகிறது.   திரு பசுபதி ஐயர் சங்கீதக் கலாநிதி ஜி என் பி யின் அத்யந்த நண்பர்.
 
 
 
அந்த டிசம்பரில் பர்மாவில் ஜப்பான் குண்டு வீசுகிறது.  தேசிய ஹாக்கி டீமில் இடம் பெற்று விளையாடி வந்தவர் பசுபதி ஐயர்.  அங்கேயே அரசு அலுவலகத்தில் பணி.  

போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் இந்தியாவுக்குச் சென்று விடும் அவர் முயற்சிகள் பற்றிச் சொல்கிறார்.  இவருடன் நட்பான உயர் போலிஸ் அதிகாரி. அவரால் கிடைக்கும் உதவிகள்.   அதனாலேயே பொறாமையில் இவருக்குக் கெடுதல் செய்யும் இவரது உயர் அதிகாரிகள்..
 
 

முன்னரே மனைவியையும் குழந்தைகளையும் விமானம் மூலமோ, ரயில் மூலமோ இந்தியா அனுப்பிவிட இவர் செய்யும் முயற்சிகள் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுப் போகின்றன.  இவர் மனைவியே கூட இவரை விட்டுப் பிரிய மறுக்கிறார்.  அது எவ்வளவு ஆபத்தை இவர்களுக்குப் பின்னால் தருகிறது என்று பின்னர் தெரிகிறது.  அது மட்டுமல்லாமல் தனது உற்ற நண்பனின் குடும்பத்தையும் காப்பதாக இவர் தரும் வாக்குறுதியும் இதே போன்ற துன்பத்தைத் தருகிறது.

பணத்துக்கு மதிப்பே இல்லை என்ற நிலையை எல்லாம் சந்திக்கிறார்கள்.  கையில் இருக்கும் தங்கமோ, வைரமோ, வெள்ளியோ ஒரு கவளம் அன்னத்தைப் பெற்றுத் தர உதவ மாட்டேன் என்கிறது.

முதலில் ரயிலின் மூலமும், பின்னர் மாட்டு வண்டியிலும், பின்னர் நடைப்பயணமாயும் இந்தியா திரும்பும்போது இவர்கள் சந்திக்கும் இழப்புகள்..

கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படிக்கத் தோன்றும் புத்தகம்.  தனது 84 ஆவது வயதில் 1988 ஆம் வருடம் காலமான பசுபதி ஐயரின் குறிப்புகளை வைத்து 1984 ஆம் வருடமே புத்தகமாகப் போடத் தயார் செய்தும்,  2010 ஆம் வருடம்தான் புத்தகம் வெளிவந்திருக்கிறது.
 

1000 அடி உயரத்தில் சூரியனைப் பார்க்காத மழைமலைப் பாதைகளில் குறுகிய பாதைகளில் (ஒரு அடி, ஒரு கால் சறுக்கினாலும் அதலபாதாளத்தில் விழுந்து மரணம்) மூங்கில் குச்சியை ஊன்றிக் கொண்டு தாண்டும் சாகசங்கள்,  நடு இரவில் ஓய்வெடுக்கும் குழுவைச் சுற்றி நெருக்கத்தில் நிற்கும் புலிகள், காட்டின் நடுவே கடிக்கும் அட்டை,  பெரிய பெரிய பூச்சிகள், கதண்டுகள், பாம்புகள்  ஆகியவற்றின் பயங்கரங்கள்,  காட்டாற்றைக் கடக்கும் சாகசங்கள், நட்புகளையும் உறவுகளையும் கண்முன்னே பறிகொடுக்கும் சோகங்கள், அவற்றை லட்சியம் செய்து மயங்கித் தயங்கி நின்றால் மற்றவர்களாலும் இந்தியாவை அடைய முடியாது என்கிற நிதர்சனங்கள்.. அப்பப்பா...  படிக்கும்போது என்னவோ செய்கிறது.
 

பயணத்தின் இடையே கிடைக்கும் நட்பும் உண்டு.  உயிர்காத்த நட்பும் உண்டு.  துரோகங்களும் உண்டு.  

உற்ற நட்பு கண்முன்னால் அதலபாதாளத்தில் விழுகிறது.  நட்போ உறவோ, வழியில் மரணமடைந்து விட்டால் அந்த உடலை அப்படியே விட்டு விட்டு, தங்கள் பயணத்தைத் தொடர வேண்டிய சூழல்கள்.

பசுபதி பர்மாவிலிருந்து கிளம்பும்போது அவர் செல்ல வளர்ப்பைப் பற்றிச் சொல்லும் வரிகள் மனத்தைக் கலங்கடித்தன.  இவர் போர்க்காலத்தில் வார்டனாகப் பணிபுரிந்த நேரத்தில் இவருக்கு உற்ற துணையாய் இருந்த டிக்கி பற்றியது.  பலமுறை இவர் கையை வலிக்காமல் கவ்வி மரணத்திலிருந்து காத்த நாய்.  இவர் குடும்பத்தை பதுங்கு குழிகளுக்குள் குதிக்க உதவி செய்யுமாம் அது.  அவர் எழுத்துகளைக் கீழே தருகிறேன்.
 
"லாரியில் ஏறினோம்.  எங்களுடன் எங்கள் நாய் டிக்கியும் ஓடி வந்து ஏறியது.  லாரியில் இருந்தவர்கள் ஒரே குரலாக அதை ஏற்றிக் கொள்ளக்கூடாது, இடமில்லை என்று தடுத்தார்கள்.

இரவு பகலாக வேலையில் நான் செல்லும்போது கூட குண்டுகளின் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் என்னைவிட்டுப் பிரியாத அந்த புனிதப் பிறவியைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன தெரியும்?  கேவலம் ஒரு நாயாகப் பார்த்தனர் அந்தப் பாமரர்கள்.  அதை அடித்து விரட்டினார்கள்.

அவன் மேல் விழுந்த ஒவ்வொரு அடியும் என்னை அடிப்பது போல என் இதயத்தைப் பிழிந்து எடுத்தது.

"அவனை அடிக்காதீர்கள்"  என்று கத்தி விட்டு கீழே இறங்கி டிக்கியை அழைத்தேன்.  வர மறுத்து அழுதது. பிறகு இனிமேல் சமாளிப்பது கஷ்டம் என்று குண்டு கட்டாகத் தூக்கி டிக்கியைக் கீழே விட்டேன்.  லாரியின் கதவை அறைந்து மூடினார்கள்.

டிக்கி குரைத்துக்கொண்டே கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் கூடவே ஓடி வந்தது.  வண்டியில் அது ஏற அது எம்பிக் குதிப்பதும், அழுது குரைத்ததையும் நினைத்தால் இன்னும் மனம் கலங்குகிறது.

லாரி வேகமாகப் போகத் தொடங்கவே, என் நண்பன் பின் தங்க வேண்டியதாயிற்று. 

"நாயினும் கடையேன்', 'நாய்ப்பிறவி' என்றெல்லாம் கேவலமாகச் சொல்கிறோம். அன்று என் டிக்கி என்ன நினைத்திருக்கும்?

"இவனும் நன்றி கெட்ட மானிடன்தான்.  உயிரையும் துச்சமாக மதித்து, அவனுக்கு உழைத்த என்னை விட்டு விட்டுப் போகிறான்.  அவனுடைய பிள்ளையை மட்டும் இப்படி விட்டு விட்டுப் போவானா?"


 
 
பர்மாவிலிருந்து நடையாய் நடந்து
ஆசிரியர் : பசுபதி
ஐயர்.
தொகுப்பு : ரா. ச. கிருஷ்ணன்.
மணிமேகலைப் பிரசுரம்.
280 பக்கங்கள் ; விலை: 110

 

21 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

ரூபன் said...

வணக்கம்
ஐயா
படித்தபோது எவ்வளவு துன்பம் நேர்ந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது உண்மையில் படிக்க தூண்டுகிறது... இந்த புத்தகம் த.ம1

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

படிக்கும்போதே மனதை என்னவோ செய்கிறது.நாயை விட்டுவந்ததை விவரித்தது எப்பேர்பட்ட கல்மனதையும் கரைக்கக் கூடியது.

Geetha Sambasivam said...

டிக்கியை விட்டு வந்தது அழ வைத்து விட்டது! பாவம்! மனது வேதனைப் படுகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை கனக்கச் செய்தது... சே...!

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் அருமையான புத்தகம். படிக்கும்போதே எவரையும் கலங்கடிக்கும் புத்தகம். படித்த அனுபவம் எனது பக்கத்திலும் எழுதி இருக்கிறேன்......

rajalakshmi paramasivam said...

திரவியம் தேடச் செல்லும் இடத்தில் தமிழர்கள் பட்ட பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மனம் கனக்கின்றது. புத்தக விமரிசனத்தைப் படிக்கும் போது ஏமன் நாட்டில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

G.M Balasubramaniam said...


என் அம்மா வழித் தாத்தா பர்மாவில் பணி புரிந்தவர். நான் மிகச் சிறியவனாக இருந்தபோது அவர்கள் யுத்தம் பற்றியும் பர்மாவிலிருந்துதப்பி வருவது பற்றியும் பேசுவதைக் கேட்டிருப்பேன் போலும். ஆழ்மனதில் அப்படித்தப்பி வந்தவர் பற்றி எழுத வேண்டும் என்னும் எண்ணத்தை நான்”பார்வையும் மௌனமும் “என்னும் எனது சிறு கதையில் நிறைவேற்றிக் கொண்டேன் சுட்டி இதோ .படித்துப் பார்க்கலாமே
http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_19.html

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு நூலைப் பற்றிய அறிமுகம். நன்றி.

பர்மா யுத்தம் பற்றி சில சிறுகதைகள் வாசித்திருக்கிறேன். போர்க்காலமும் மக்கள் படும் துன்பமும் உலகின் சாபக்கேடுகள்.

டிக்கி ஓடி வரும் காட்சி மனதில் தோன்றிக் கலங்க வைக்கிறது.

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அருமை. நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கையில் இருக்கும் தங்கமோ, வைரமோ, வெள்ளியோ ஒரு கவளம் அன்னத்தைப் பெற்றுத் தர உதவ மாட்டேன் என்கிறது.//

மனதை நெகிழச்செய்யும் வியப்பான விமர்சனம்.

அதுவும் அந்தக் கடைசி பத்தி கலங்கடித்தது.

பகிர்வுக்கு நன்றிகள், ஸ்ரீராம்.

‘தளிர்’ சுரேஷ் said...

படிக்கத் தூண்டி இழுக்கிறது நூல் விமர்சனம்! நேரம் கிடைக்கையில் வாங்கி படிக்கிறேன்! அருமையான பகிர்வுக்கு நன்றி!

KILLERGEE Devakottai said...

மனம் கணத்து விட்டது நண்பரே...
கண்டிப்பாக நூல் வாங்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

இப்படி ஒரு அற்புதப் படைப்பு இருப்பதை நீங்கள் அறிமுகம் செய்துதான் தெரிகிறது. உணர்ச்சிக் குவியலாக வரலாறு சித்தரிக்கப் பட்டிருகிறது. அது ஒரு தனிக்காலம். மிக நன்றி ஸ்ரீராம்

Bagawanjee KA said...

கஷ்டப் பட்டு சம்பாதித்த செல்வம் ஒரு கவளச் சோற்றுக்கும் உதவாதது எவ்வளவு கவலையைக் கொடுத்து இருக்கும் ?நீங்கள் சுட்டிக் காட்டி இருக்கும் பாகம் ,புத்தகத்தின் சிறப்புக்கு சாட்சி !

Thenammai Lakshmanan said...

மனதை உலுக்கியது.

சிலநாள் முன்புதான் சொல்வனத்தில் அருணகிரி என்பவர் எழுதியிருந்த பர்மாவில் செட்டியார்கள் கட்டுரை படித்தேன். அதை முகநூலில் நகரத்தார் பக்கத்தில் பகிர்ந்தபோது அங்கே இன்னும் நிறையப் பகிர்ந்தார்கள். படித்து இதைப் போலவே கலங்கினேன்.

Thulasidharan V Thillaiakathu said...


எத்தனை கஷ்டங்கள்! மிகவும் அருமையான ஒரு மனிதர் பசுபதி ஐயர் என்பது மட்டும் புரிகின்றது!
மனம் கனத்து விட்டது. இதோ இப்போது கூட கண்ணில் நீர் வந்து கொண்டே இருக்கின்றது. பாதிதான் வாசித்தேன்...நாய் என்றவுடன் அதை அப்படியே நிறுத்திவிட்டேன். என்னால் மேற்கொண்டு தொடர முடியவில்லை. வாசிக்கும் மனோதைரியம் இல்லை. இதை அடித்துக் கொண்டிருக்கும் போது இதோ என் அருகில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் என் கண்ணழகி மனதில் தோன்ற டிக்கி மனதில் தோன்ற......வேண்டாம் இது போன்ற ஒரு அவலனிலை சாரி முடியவில்லை....அதற்கு மேல் வாசிக்கவில்லை

கீதா

saamaaniyan saam said...

மனதை தொடும் புத்தகத்தை பற்றி மனதில் பதியும்படியான விமர்சனம் ! படிக்க முயற்சிக்கிறேன்...

நன்றி
சாமானியன்

கோவை ஆவி said...

கடைசி வரிகள் அசத்தல் சார். விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்று நீங்களே சொன்னப்புறம் எப்படியாவது படிச்சுடறேன் ஸார்.

Kalayarassy G said...

சிறுவயதில் ரங்கூனிலிருந்து நடந்து வந்த ஆண்டாளு ஆத்தா என்பவர் விவரித்த சொந்தக் கதையைக் கேட்டபோது மிகவும் வருத்தமாயிருந்தது. அதன் பின் டாக்டர் மு.வரதராசனார் இந்தப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து எழுதிய அந்த நாள் என்ற புதினத்தை வாசித்திருக்கிறேன். நீங்கள் சொல்லியிருக்கும் புத்தகம் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். கண்டிப்பாக வாசிப்பேன். நல்லதொரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!

ssk tpj said...

தோப்பு தனி மரம் ஆனது என்று முடித்திருப்பார் ....படித்தவர் மனம் அழ முடியாமல் இருக்காது.
சாமிநாத சர்மா இதே போல் எழுதி உள்ளார். ஆனால் அவர்கள் வேறு வழியாக ஓரளவிற்கு எளிதாக வந்து விட்டனர். பசுபதி அவர்கள் மற்றும் லட்ச கணக்கானோர் அதிக தூரம் எடுக்கும் அஸ்ஸாம் வழியை தேர்ந்து எடுத்தது காரணம் என்று நினைகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது பசுபதி அவர்கள் சென்ற பாதையில் இப்போது போய் பார்க்க உள்ளேன். இது வரை யாங்கோன் மட்டுமே சென்று உள்ளேன். அங்கு இருக்கும் தமிழர் நிலை இன்றும் நன்றாக இல்லை, மற்ற சிங்கை, மலேசியா நாடுகளுடன் ஒப்பிடும் போது. தமிழர்களால் அந்த நாடே பொன் விளையும் பூமியாக இருந்தது. பல தலை முறை தமிழர்கள் இன்றும் உள்ளார்கள். இன்று அங்கு சன் டிவி சென்று தமிழகத்தை தரிசனம் செய்ய செய்து அங்கும் சீரியல் தொல்லைகள் உள்ளன .

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!