செவ்வாய், 31 மார்ச், 2015

நினைவுகள் 1946 : நாளச்சேரிப் பாட்டி


நாளச்சேரிப் பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார்.  90 வயது.  பருத்த உடம்பு.  ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காத்தாடிக் கொண்டிருக்கும்.  கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக்கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.

அப்போதெல்லாம் ரேடியோவே பார்த்ததில்லை.  பொழுது போக வேண்டுமே...  மின்சாரமே சில வீடுகளில்தான் இருக்கும். பாட்டியின் விசேஷம் பேய்க்கதைகள்.  
என் அம்மாவும் பதிலுக்கு பயம் காட்டுவார்.  " வெளக்கு வச்சப்புறம் கொல்லைக் கதவைத் தற்செயலாத் தெறந்தேனா? சரசரன்னு புடைவைச் சத்தம்.  கோடி வீட்டு மங்களம் - குளத்துல விழுந்து செத்தாளே - அவ... சரேல்னு முள் வேலிக்குக் குறுக்கேப் பாஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்... ஒரு பலத்த சிரிப்பு... போயிட்டா...!"அதிலிருந்து எனக்குக் கொல்லைக் கதவைத் திறக்கவே பயம்.  திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும்.  பகலில் கூட அந்தக் கதவுப் பக்கம் போவதில்லை.


பாட்டி சர்வ சாதாரணமாகக் கேட்டாள்.. "கொள்ளிவாய்ப் பிசாசு பாத்திருக்கியா நீ?"


'நல்லவாய்ப் பிசாசையே பார்த்ததில்லை... இதுல இது வேற...  அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும்..  இனி இந்தப் பாட்டி வந்தால் உள்ளே விடாதேன்னு'  என்று நினைத்துக் கொண்டே,  "ரொம்பக் கேள்விப் பட்டிருக்கேனே.."


"நேத்து கூட நான் பாத்தேன்.  கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது..  வாயை அடிக்கடித் தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும்.  யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில தீத்துப்புடும்"


பாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.


"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா..  ஒரு சுருட்டு பத்த வச்சுகிட்டு வயப்பக்கம் வந்தேன்.  பாத்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு...  நெருப்பா கொட்டுது, அணையுது...  கொட்டுது, அணையுது...   குளத்தாண்டைத் திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்...  ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்."


நான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.


"பாட்டி... நீ நெஜமா அதப் பாத்தியா...?"

"பின்ன...? ஒனக்கும் பாக்கணுமா?"


அம்மா பேச்சை மாற்றினார்.  இதுமாதிரி எவ்வளவோ கதைகள் கேட்டவர் அவர்.  பாட்டி அடுத்த சப்ஜெக்டுக்குப் போய்விட்டார்.  எதிர் வீட்டுப்பெண் வாசல்ல வந்து நின்னு 'பசங்கள'ப் பார்க்கும் செய்தி தொடங்கியது.


இப்படி ஏழு, ஏழரை வரை பேசிக் கொண்டிருந்தால் மெல்ல இரவு உணவு நேரம் வந்து விடும்.  இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு பாட்டி கையை ஊன்றி அலுப்புடன் எழுந்து நடந்தால், அடுத்து நாலைந்து நாள் ஆகும் மறுபடி ரொடேஷனில் அவர் எங்கள் வீட்டுப்பக்கம் வர!


பாஹே  -

படங்கள்  :  இணையம்! 

21 கருத்துகள்:


 1. கொள்ளிவாய்ப் பிசாசு
  நல்லவாய்ப் பிசாசு

  ஹா ஹா ஹா
  ரசித்தேன் நண்பரே....

  பதிலளிநீக்கு
 2. இப்போதெல்லாம் அதிகமாய் யாரும் பேய்க்கதைகள் கதைப்பதில்லை. மனிதர்களே பேய் போன்றல்லவா மாறிப்போய்விட்டார்கள்! இன்றைய குழந்தைகளைக் கூட அங்க பூதம் இங்க பூதம்னு ஏமாத்த முடியாது. சோட்டா பீம் மாதிரி அடித்து தள்ளிவிடுவார்கள்.ஆனால் பேய் பற்றிய கதைகளும் செய்திகளும் என்றும் நமக்கு ஒரு ஜில் கலந்த சுவாரஸ்யம் தான்.

  வானவில் பக்கமும் வாங்க...

  பதிலளிநீக்கு
 3. படங்களைப்பார்க்கவும், பதிவினைப் படிக்கவும் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.

  பாட்டியின் உருவமும், நடை உடை பாவனைகளும், பேச்சுக்களும் வெகு இயல்பாகவே உள்ளன.

  பதிலளிநீக்கு
 4. பாட்டிக்குப் பயமே கிடையாதா. படித்து விட்டு அடுத்த ரூமுக்குப் போகும் போது சரக் சார்க் சத்தம் வருவது போல் இருக்கிறதே.
  பேய்க் கதைகள் என்றால் கொஞ்சம் பயம் தான்.அதற்கேப படங்கள் வேறு போட்டு இன்னும் பயம் அதிகமாகிறது.

  பதிலளிநீக்கு
 5. நாளாச்சேரி பாட்டி இப்போ பேயாய் அலைந்து கொண்டிருப்பதாய் அலைந்துக் கொண்டு இருப்பதாக கேள்விபட்டேனே ,பார்த்தீர்களா :)

  பதிலளிநீக்கு
 6. பதிவு சுவரசியம் என்றால் பாட்டிக்காக தேர்வு செய்த படம் அட்டகாசம்!

  பதிலளிநீக்கு
 7. நாளச்சேரிப் பாட்டியின் நாளம் முழுவதும் பேய்கள் நிரம்பிக் கிடந்திருக்குது போல...1946 லிஏயே 90 நா கண்டிப்பா இப்ப பாட்டி பேய்தான்...அப்ப நிறைய கதைகள் இருக்கும் பேய்கள் உலகத்துல...சே பாட்டிய வரச் சொல்லுங்க...நண்பரே! சுவாரஸ்யமா இருக்கும்...

  கொள்ளிவாய், நல்லவாய் ரொம்பவே ரசித்தோம்......

  பதிலளிநீக்கு
 8. பேய்க்கதைகள்லயும் ஒரு தில் இருக்குதுங்க.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ஐயா
  படங்களுடன் பதிவு அசத்தல் த.ம 1
  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-1

  பதிலளிநீக்கு
 10. சுவாரசியமான இடத்திலே நிறுத்திட்டாரே! இப்போத் தொலைக்காட்சித் தொடரிலே கூடப் பேய் வருதே! ஜாலியா இருக்கு பேயைப் பார்க்கும்போது. நல்லாச் சிரிக்க வைக்குது பேய்! :)

  பதிலளிநீக்கு
 11. நாளச்சேரி பாட்டியை நினைத்தாலே பேயும் வந்து நிற்கும் போலிருக்கிறதே.

  பதிலளிநீக்கு
 12. //இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு // ஹா..ஹா..

  சுவாரசியமான பாட்டி..

  பதிலளிநீக்கு
 13. தாத்தா பாட்டிகள் சுவாரசியமாக கதை சொல்வதில் தேர்ந்தவர்கள்

  பதிலளிநீக்கு
 14. ஸ்வாரசியமான பாட்டி.....

  எங்கள் அத்தைப் பாட்டி நினைவுக்கு வந்தார்......

  பதிலளிநீக்கு
 15. எல்லாத்தையும் விட பாட்டி சுருட்டைப் பற்ற வைத்ததுதான் சிரிப்பு வந்தது. அந்தப் பிசாசும் பாட்டியை ப் பார்த்து ஓடியிருக்குமோ என்னவோ .படங்கள் அருமை ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 16. கில்லர்ஜி, மோகன்ஜி, வைகோ ஸார், ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம், பகவான்ஜி, மனோ சாமிநாதன் மேடம், துளசிஜி, அப்பாதுரை, பழனி.கந்தசாமி ஸார், ரூபன், கீதா மேடம், கரந்தை ஜெயக்குமார், டிடி, ஜி எம் பி ஸார், ராம்வி, முரளி, வெங்கட், வல்லிம்மா....

  பாஹே சார்பில் அனைவருக்கும் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 17. திரை போட்டு விட்டீர்கள் போலயே:).

  பாட்டி பல நினைவுகளைக் கிளறி விட்டார். பேய்க் கதைகள் கேட்டு இரவில் காற்றில் ஆடும் மரங்களைப் பார்த்து நடுங்கியதுண்டு சிறுவயதில்:).

  பதிலளிநீக்கு
 18. கதைகள் மிகவும் சுவாரசியமா யிருக்கின்றன. அக்காலக் குழந்தைகளுக்கு இந்த மாதிரி பாட்டிகள் தாம் கதைகள் சொல்லிப் பயத்தோடு கூடவே கற்பனையையும் தூண்டினார்விட்டார்கள்.ரொடேஷனில் நாலைந்து நாள் ஆகும் மறுபடி வீட்டுக்கு வர என்பது நல்ல தமாஷ்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!