செவ்வாய், 21 ஏப்ரல், 2015

திரை - எஸ் எல் பைரப்பா



இவரது மூன்று நாவல்கள் திரைப்படமாகி இருக்கின்றன. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான வம்சவிருக்ஷா உட்பட.



1931 ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்.


35 பதிப்புகள் கண்ட புத்தகம்.  வெளியான பத்து மாதங்களுக்குள் 14 பதிப்புகளைக் கண்டது இந்தப் புத்தகம். வெளியான ஆண்டு 2007. கன்னடம் தவிர, தமிழ் ஹிந்தி மராத்தி, குஜராத்தி ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

அடுத்து என்ன எழுதப் போகிறார் என்ற ஆவலை ஏற்படுத்தும் எழுத்தாளர்.  எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எழுத்தாளர்.  'ஆவரணா' என்ற இந்த 'திரை'  எழுதியபின், பைரப்பா 'கவலு' (வெளியான 4 நாட்களுக்குள் 4 பதிப்புகள் கண்டு அத்தனையும் விற்றுத் தீர்ந்து விட்டதாம்) என்ற பெண்ணியத்தைத் தாக்கும் கதை ஒன்றையும்,  'யானா' என்கிற விண்வெளிப் பயணம் மற்றும் மனித ஒழுக்க நெறிகள் பற்றியும் சொல்லும் கதை ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.  மகாபாரதம் பற்றி 1979 ல் இவர் 'பருவா'  என்ற பெயரில் நாவல் எழுதியுள்ளார். (எந்தப் பதிப்பகம் என்றுதான் தெரியவில்லை. பாவண்ணன் மொழிபெயர்ப்பு என்று தெரிகிறது)

ஒரு க்ரைம் ஸ்டோரி என்ற அளவிலோ காதல் கதைகள் என்ற அளவிலோ இவர் படைப்புகளிருப்பதில்லை.  ஒவ்வொரு படைப்புக்கும்,  அதை எழுது முன் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆராய்வது, குறிப்பெடுப்பது அப்புறம் அதைப் பற்றி எழுதுவது என்று கொள்கை வைத்திருக்கிறார் இந்த ஓய்வு பெற்ற மனோதத்துவப் பேராசிரியர்.  எனவே இவரது படைப்புகளை ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்குக்காக வாசித்துத் தாண்டிவிட முடியாது என்று தோன்றுகிறது.




நான் 'திரை' மட்டுமே படித்திருக்கிறேன். சத்தியத்தை மறைக்கும் வேலைக்கு ஆவரணமென்று பெயர்.  (அசத்தியத்தை வெளிக்கொணரும் செயலுக்கு விக்ஷேபம் என்று பெயராம்)  சரித்திரம் கலந்து எழுதப் பட்டிருக்கும் சமூக நாவல். அதுவும் தமிழில்.  எதுவும் அந்தப் படைப்புகள் எழுதப் பட்ட அசல் மொழியிலேயே படிப்பதே சிறந்தது என்ற கருத்தை இவரே இந்தப் புத்தகத்தில் மறைமுகமாகச் சொல்லவும் செய்கிறார். (அக்பர் சக்கரவர்த்தியின் சமகாலத்தில் அவரோடு இருந்தவர்களால் எழுதப்பட்ட மாஸிர்-இ-ஆலம்கிரி என்ற பார்சி மொழியில் எழுதப்பட்ட படைப்பைப் பற்றிச் சொல்லும்போது)


ஏனென்றால் திரு ஜெயா வெங்கட்ராமன் மொழிபெயர்த்துள்ள இந்நூலில் நிறைய இடங்களில் கதையை விவரித்துக் கொண்டு வரும்போது தன்னிலை, மூன்றாம் நிலை விளக்கக் குழப்பங்கள் இருக்கின்றன.

உள்ளுக்குள்ளேயே நாயகி எழுதும் ஒரு கதையைச் சொல்லி வருவது தனி உத்தியாக நடுவில் திடீர் திடீரென வருகிறது. அந்தக் கதை பெரும்பாலும் அந்தப் பெண்ணின் தந்தை படித்துச் சேர்த்து வைத்த ஆதாரங்கள், விவரங்கள் என்ன என்பதைச் சொல்லவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது பாதியிலேயே முடிவு தெரியாமல் நின்று விடுவது மூலத்திலும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். நோக்கம் முடிந்து விடுகிறது அல்லவா...

இது போன்ற படைப்புகளில் ஒரு படைப்பாளி தான் சொல்லவரும் கருத்தைச் சொல்ல ஒரு பாத்திரத்தைத் தன் படைப்பில் உருவாக்கிக் கொள்கிறான். அந்த வகையில் இந்த நாவலில் பைரப்பா சொல்ல வரும் கருத்தை லக்ஷ்மி என்கிற ரசியா பேகம் என்கிற லக்ஷ்மி பேசுகிறாள்.

"உண்மையான வரலாற்று நிகழ்வுகளைத் திருத்தி, மாற்றித் தவறான சரித்திரத்தை எழுதி அதை மக்களிடையே வெகுஜன ஊடங்களின் வாயிலாக பிரசாரம் செய்து வருகின்றனர்.  உண்மையான சம்பவங்களைத் தொகுத்து தகுந்த வராற்று ஆதாரங்களுடன் எழுதப் பட்டுள்ள ஆராய்ச்சி நூல்களை எல்லாம் திட்டமிட்டு ஒதுக்கித் தள்ளி விட்டு,  குறுகிய அரசியல், பதவி மற்றும் பொருளாதார ஆதாயங்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்படுபவைகளே பாடப் புத்தகங்களிலும், நூலகங்களிலும் இடம் பிடித்து வருகின்றன" என்கிறது முதல் முன்னுரை.

"இது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை. சரித்திரத்தைத் தப்பும் தவறுமாக எழுதுபவர்களைத்தான் சாடியுள்ளார்"  என்கிறது சதாவதானி ஆர். கணேஷின் முன்னுரை. 

தனது முன்னுரையில் ஆசிரியர், "சரித்திரப் புள்ளி விவரங்களில் எனது சொந்தக் கற்பனை எதுவும் இல்லை" என்கிறார். 

"சரித்திரத்தின் உண்மையில் கலையின் பாவம் கலந்து வந்திருந்தால் அந்த மட்டத்தில் இது ஒரு வெற்றிகரமான இலக்கியம் ஆகிறது"

"இந்த நாவலின் ஒவ்வொரு விவரத்தையும் அல்லது அதன் நடைக்கும் இருக்கும் ஆதாரங்களில் இலக்கியத்தின் திறனை இந்த நாவலில் அதைத் தாங்கும் வகையில் ஒரு பகுதியாக அமைத்திருக்கிறேன்.   நாவலின் கையாளும் உத்தியில் அந்த உண்மையை வெளிப்படுத்துவதற்கு இந்த நாவலின் அமைப்புக்குள்ளேயே வடிவமைத்திருக்கிறேன் என்கிற உண்மையை எல்லா ஆக்கபூர்வமான எழுத்தாளர்களும், ஆழ்ந்த சிந்தனை உள்ள வாசகர்களும் உணர்ந்து கொள்ளலாம்.   எஞ்சியுள்ள ஆதாரங்களை இந்த நாவலின் உள்ளே இருக்கும் பாத்திரங்கள் மூலம் தேவையானவைகள் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இவை எல்லாவற்றிற்கும் ஒரு வடிவம் கொடுத்திருப்பது மட்டுமே எனது சொந்த முயற்சி"

"சரித்திரத்தின் உண்மைகளைப் பற்றி ஒரு எழுத்தாளர் எழுதப் புகும்பொழுது அதன் முழுப்பொறுப்பும் அவருடையதாகிறது"

"நமது முன்னோர்களின் எந்தெந்தச் செயல்களை நிராகரிக்க வேண்டும், எந்தெந்த சாதனைகளினால் கவரப்படவேண்டும் என்கிற விவேகம் இல்லாமல் இருந்தால் நாம் வளருவதில்லை. சரித்திரத்தின் மூலம் நாம் பெற்றுக் கொள்வது போலவே, அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதும் ஒரு முதிர்ச்சியின் அறிகுறி. இது ஒவ்வொரு மதம், ஜாதி, குழுக்களுக்கும் பொருந்தும் ஒரு வாசகம்."

இதெல்லாம் ஆசிரியர் தனது முன்னுரையில் சொல்லியிருப்பவை.

கதை என்று எடுத்துக் கொண்டால், கலைத்துறையில் இருக்கும், காதல் மணம், கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதியர்.  கணவன் முஸ்லிம்.  மனைவி இந்துவாக இருந்து, கணவனின் வற்புறுத்தலுக்காக முஸ்லிமாக மாறியவள்.  ஆழ்ந்த இந்து நம்பிக்கைகளை உடைய பெண்ணின் தந்தை மகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்.  மகள் கணவன் வீட்டாரின் வற்புறுத்தலில் முஸ்லிம் சம்பிரதாயங்களைப் பின்பற்றத் தொடங்கி, (முஸ்லீம்களின் பழக்கவழக்கங்கள் ஆங்காங்கே சிறு சிறு விவரங்களாய் சொல்லப்படுகின்றன)  காலப்போக்கில் இந்துத் தெய்வங்களை அல்லது நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை இழக்கும் நிலையில் அவள் தந்தை ஊரில் சில நாட்களுக்கு முன்னால் காலமாகி விட்ட செய்தி வருகிறது.
பற்பல வருடங்களுக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பும் அவள், தந்தை தன்னை மறக்கவில்லை, தன் செயல் காரணமாக வருந்தியவர், பின்னர் முஸ்லீம் மதம், மன்னர்கள் பற்றி எல்லாம் ஒரு மிக விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தெரிந்து, அதைப் படிப்பதில் ஆர்வமாகி, படித்து, பிரமித்துப் போகிறாள்.

இப்போது அவள்,  முதலில் சில நிர்பந்தங்கள், தந்தை மேலுள்ள பாசம் காரணமாகவும், பின்னர் சொந்த விருப்பத்தின் பேரிலும் இந்துவாகவே வாழத் தொடங்குகிறாள்.  இந்தக் காலங்களில் கணவனை முற்றிலும் மறந்து, அவ்வப்போது சென்று பார்த்தாலும், திரும்ப சொந்த ஊர், தந்தை வீடு வந்து அங்கேயே வாசிக்கிறாள்.   இங்கு தன் ஊரிலேயே இருக்கும் இவளின் கணவன் இவளின் வீடு திரும்பாமையாலும், அவனின் தாய் தந்தையர், ஊர்ப் பெரியவர்கள் வற்புறுத்தலாலும் வேறு திருமணம் செய்கிறான்.

இவர்களுக்குத் திருமணம் செய்துவைத்த, இவர்கள் ஊர்க்காரரான 'சாஸ்த்ரி' என்பவர் ஒரு  அறிவுஜீவியாக அடையாளம் காணப்படுபவர்.  ("அவர் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அவருக்குப் பணம் எங்கிருந்தோ வருகிறது") அந்தப் போலி கௌரவத்தாலேயே தன்னுடைய சொந்தத் தந்தை இறந்ததற்கான சம்பிரதாயங்களை, ஒரு மூத்த மகனாக செய்ய முடியாமல் போகிறது.  அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவர். அவரின் மனைவி மதம் மாறாமல் கிறித்துவ மதத்திலேயே இருப்பவர். மனசாட்சிக்குப் பயந்து யாருக்கும் தெரியாமல் தந்தையின் 'காரியங்'களை காசியில் ரகசியமாகச் செய்கிறார். 

அவர் கூட்டும் ஒரு சமூக நல்லிணக்க மாநாடு - அதில் போலி மதச் சார்பின்மை பேசும் அறிவுஜீவிகள் -  மறுத்து, உண்மையை ஆதாரங்களுடன் பேசும் இந்தப் பெண்ணை (கதாநாயகி) அடுத்த கூட்டத்தில் புறக்கணித்து அவர்கள் எழுத நினைத்த சரித்திரத்தை எழுதத் தொடங்குகிறார்கள்.

வெகுண்ட இந்தப் பெண், இத்தனை வருடங்களில் தன் அப்பா சேமித்து வைத்திருந்த ஆதாரங்களை (கேசவபெருமாள் கோவிலை நிர்மூலமாக்கி மதுராவை இஸ்லாமாபாத் ஆக்கியது, புனித க்ஷேத்திரமான பிரயாகையை இலாஹாபாத் ஆக்கியது, காசி விஸ்வநாதர் ஆலயத்தை அழித்து 'ஞானவாபி மசூதி' ஆக்கியது போன்ற நிறைய விவரங்கள்) வைத்து ஒரு நூல் வெளியிட....

இப்படிப் போகும் நாவலில் ஆசிரியர் தன்னுடைய நூலுக்கான ஆதாரங்களை எந்தெந்த நூல்களைப் படித்து எடுத்தார் என்பதை இந்தப் பெண், லக்ஷ்மியாக இருந்து பேகம் ரசியா குரைஷியாக மாறி, மறுபடியும்  லக்ஷ்மியாக மாறும் பெண் மூலமே 15 பக்கங்களுக்கு அடுக்குகிறார்.
புத்தகத்தில் அவரின் சில கருத்துகள் :

மதம் மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிறந்த மதத்தை விட்டாலும் அது போகாது. 

தத்துவத்தின் எந்த மட்டத்தில் இருக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் கடவுளையும் சிருஷ்டிக்கிறோம்.

தனது முன்னோர்கள் என்று கருதுபவர்களை சரி, தப்பு என்று பேதப்படுத்தித் தனது வாழ்க்கையின் பாதையை நிச்சயம் செய்துகொள்ள, சரித்திரத்தின் படிப்பு உதவ வேண்டும்.




திரை
கன்னட மூலம் : எஸ் எல் பைரப்பா
தமிழில் : ஜெயா வெங்கட்ராமன்
விஜயபாரதம் பதிப்பகம்
300 ரூபாய்.


21 கருத்துகள்:

  1. செம செம அருமை ஸ்ரீராம்.

    நான் கூட பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் இது போல சில சரித்திரக் கதைகள் எழுதலாம் என யோசிப்பேன். ஆனால் அதற்கு முதலில் நாம் கடினமாக உழைத்து ஆதாரங்கள் தேடணும். லைப்ரரி போய் நிறைய வாசித்து குறிப்பு எடுக்கணும். அது போக நாம் செல்லும் இடங்களில் , அதன் பக்கங்களில் சில காலம் வாழ முடிந்தால்தான் அதைப்பற்றி முழுமையாக எழுத முடியும். அந்த லோக்கல் மொழி அறிவது முக்கியம். அந்த மக்களோடு மக்களாக கலந்து உரையாடுவது முக்கியம்.

    ஹாஹா நிறைய எழுதிக்கொண்டே போகிறேன். எழுதணும் முடியுமா தெரியல..:)

    பதிலளிநீக்கு
  2. //ஒவ்வொரு படைப்புக்கும், அதை எழுது முன் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆராய்வது, குறிப்பெடுப்பது அப்புறம் அதைப் பற்றி எழுதுவது என்று கொள்கை வைத்திருக்கிறார் இந்த ஓய்வு பெற்ற மனோதத்துவப் பேராசிரியர். //

    மிகக்கடினமான உழைப்புத்தான்.

    தங்களின் இந்தப்பதிவு மிகப்பெரிய அலசலாக உள்ளது. இருப்பினும் நல்ல சுவாரஸ்யமாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  3. தத்துவம் புரிந்து யாரும் அதற்கேற்ற கடவுளை சிருஷ்டிப்பதில்லை. புரிதல்களில் உள்ள கோளாறுகளே அதற்கேற்ற கடவுளரை சிருஷ்டிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. தத்துவம் புரிந்து யாரும் அதற்கேற்ற கடவுளை சிருஷ்டிப்பதில்லை. புரிதல்களில் உள்ள கோளாறுகளே அதற்கேற்ற கடவுளரை சிருஷ்டிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் விமர்சனத்தைப் படித்தால் , இவருக்கு சாகித்திய அகாடமி பரிசு ,இந்த bjp ஆட்சியின் போதே கிடைக்கும் என்று தோன்றுகிறது :)

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    மகத்தான் மனிதன் பற்றி மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  8. வாழ்வில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்... முடிவில் சில கருத்துகள்... 100% உண்மை கருத்துகள்...

    நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  9. புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டது உங்கள் விமரிசனம். நான் பைரப்பா நாவல்கள் ஏதும் படித்ததில்லை. இந்த நாவல் வெளிவந்ததுமே சர்ச்சை கிளம்பியது மட்டும் நினைவில் உள்ளது. மற்றபடி தத்துவங்களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் பக்தி என்பது வேறு தத்துவங்களைப் புரிந்து கொள்தல் வேறு என்றே எண்ணுகிறேன்.

    மிக ஆழமாக அலசி இருக்கிறீர்கள். சரித்திரத்தில் இப்படி முன்பின் முரண்பாடுகள் நிறைய உண்டு என்றாலும் மதுரா மாறினதும், காசி மாறினதும் அங்கே போய்ப் பார்த்த அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?

    பதிலளிநீக்கு
  10. பைரப்பாவின் கதைகள் எதையும் படித்ததில்லை/வம்ச விருக்க்ஷா என்னும் திரைப்படம் பார்த்தநினைவு வருகிறது

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  12. தங்கனின் விமர்சனமே பிரமாண்டமாக இருக்கிறது நண்பரே கண்டிப்பாக வாங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே.

    நல்லதொரு நூலை நீங்கள் ஆழமாக அலசி சிறந்த விமர்சனம் தந்தது அருமை.படிக்க படிக்க கதை சுவாரஸ்யமாக இருக்கிறது.
    அந்தந்த இடங்களுக்குச் சென்று ஆராய்ந்து குறிப்புக்கள் எடுத்த பின் எதையும் எழுதும் அவரின் கொள்கைகளுக்கு தலை வணங்குவோம். அருமையான மனிதர். இது வரை இவர் எழுதியதை படிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இனி கிடைத்தால் நல்லது.படிக்கலாம்.இவரைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. பைரப்பா நூல் விமரிசனம் மிகத்தெளிவாக வந்திருக்கிறது. அந்த உழைப்பின் பயன்தான் அவர் படைப்புகளின் சிறப்பு.

    மாவுக்கேத்த பணியாரம்...

    பதிலளிநீக்கு
  15. உங்க விமரிசனம் ..முழு புத்தகத்தையும் வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது ..மெயின் லைப்ரரிக்கு சென்று பார்க்கணும்

    பதிலளிநீக்கு
  16. வாசித்ததில்லை....தங்கல் நீண்ட விமர்சனம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது...

    //"சரித்திரத்தின் உண்மைகளைப் பற்றி ஒரு எழுத்தாளர் எழுதப் புகும்பொழுது அதன் முழுப்பொறுப்பும் அவருடையதாகிறது"// ஆம் இதற்கு நிறைய உழைப்பும், தேடலும் மிக மிக அவசியம். ஏனென்றால் வரலாறுகள் அவ்வப்போது மாற்றப்பட்டு, இடைச்செருகல்கல் செய்யப்படுவதால்...உணமையைத் தோண்டி எடுப்பது என்பது மிகவும் கடினம்...தகுந்த ஆதாரங்கள் அவசியமாகின்றது....

    தத்துவத்தின் எந்த மட்டத்தில் இருக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் கடவுளையும் சிருஷ்டிக்கிறோம்.// இருக்கலாம் ஆனால், தத்துவம், இறை பக்தி, ஆன்மீகம் இந்த மூன்றும் வேறு வேறு இல்லையோ.......

    பதிலளிநீக்கு
  17. நன்றி தேனம்மை லக்ஷ்மணன். கட்டாயம் ஒரு சரித்திரக்கதை எழுதுங்க.

    நன்றி வைகோ ஸார்.

    நன்றி கிருஷ்ணமூர்த்தி ஸார். அபூர்வ வருகை!

    பகவான்ஜி... 75 லேயே இவர் சாஹித்ய அகாடமி வாங்கி விட்டார். மார்ச்சிலும் Sahithya Akademi Fellowship வாங்கியுள்ளார்.

    நன்றி ரூபன்.

    நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    நன்றி DD.

    நன்றி கீதா மேடம். நான் ஆங்காங்கே படிக்கும் விமர்சனங்கள், புத்தகங்களின் உள்ளடக்கம் அறிந்து புத்தகங்கள் வாங்கிப் படிக்கிறேன். அப்படிப் படித்ததுதான் இதுவும். மகாபாரதம் தழுவி அவர் எழுதியிருப்பது படிக்க ஆவல்!

    நன்றி ஜி எம் பி ஸார்.

    நன்றி நண்பர் கில்லர்ஜி.

    நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

    நன்றி மோகன்ஜி.

    நன்றி ஏஞ்சலின்.

    நன்றி துளசிதரன்ஜி.

    பதிலளிநீக்கு
  18. படிக்கத் தூண்டும் விமர்சனம்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தத்துவம் எங்குண்டோ அங்கு தத்துவன் இருக்கின்றான் என்கிறார் திருமூலர்.
    அத்வைத தத்துவம் என்றால் அங்கு நினைவுக்கு வருபவர் ஆதி சங்கரர்.
    அதைப்போல்தான் ஒவ்வொன்றும். தத்துவத்தையும் தத்துவனையும் நாணயத்தின் இரு பக்கங்கள்போல் பிரிக்க முடியாது.
    ஆனால் இரண்டையும் அறிந்துகொள்பவன் நமக்குள் இருக்கின்றான். அவன் யார் என்பதை நாம் அறிந்துகொண்டால். அனைத்தையும் அறிந்தது போலாகும் ஆனால் நான் அதை செய்வதில்லை. வெளியிலேயே ஆடு மாடுகள்போல் புலன்களின் பின்னே சென்று கொண்டு கிடைத்ததை உண்டு களிக்கிறோம் காலத்தை கழிக்கிறோம்.
    கடைசியில் மண்ணுக்குள் சென்று விண்ணில் சில காலம் சுற்றிவிட்டு மீண்டும் மண் வழியாக மேலே வருகிறோம். முடிவில்லா தொடர்கதையாக. .

    பதிலளிநீக்கு
  20. ஆவரனா என்கிற இந்த நாவலை ஆங்கிலத்தில் படித்துவிட்டேன்; கொடூரமான முகலாயர்கள் இந்து மதத்தை எப்படியெல்லாம் அழிக்க முயன்று தோற்றார்கள் என்பதன் பதிவு. உண்மையான முகலாயர்களின் வரலாற்றை இந்தியாவில் அனைவரும் படித்தால் ஒரு மசூதி கூட இந்தியாவில் இருக்காது என்பது மட்டும் உண்மை

    பதிலளிநீக்கு
  21. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு மதம் மற்ற மதங்களை அழித்தது என்பதுதான் வரலாற்று உண்மை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!