புதன், 8 ஏப்ரல், 2015

நாய்களின் துக்கம், மிரண்ட குழந்தை, டிமென்ஷியா - டிட் பிட்ஸ்.


1)  மெக்ஸிகோவில் வசித்த மார்கரிடா சுவாரெஸ் நாய்கள், பூனைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். தினமும் அவரது வீட்டு வாசலில் தெரு நாய்களும் பூனைகளும் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. சமீப காலமாக உடல்நலமின்றி இருந்த மார்கரிடா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்கு வீட்டில் நடைபெற்றது. திடீரென்று மார்கரிடா உணவளித்த நாய்கள் எல்லாம் வரிசையாக வீட்டுக்குள் நுழைந்தன. 


தெரு நாய்கள் உள்ளே நுழைவதை அதிர்ச்சியோடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். மார்கரிடா வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு அருகில் சில நிமிடங்கள் அமைதியாக நின்றன. பிறகு சோகமாகப் படுத்துவிட்டன. உடலை எடுத்துச் சென்றபோது, நாய்கள் குதித்து எட்டிப் பார்த்துவிட்டு, அங்கிருந்து அமைதியாகக் கிளம்பின. “நாய்கள் அஞ்சலி செலுத்துவதை இதுவரை பார்த்ததில்லை. மிகவும் அதிசயமான நிகழ்வாக இருக்கிறது’’ என்கிறார்கள் இறுதிச் சடங்கு நடத்தியவர்கள். 

                       Image result for dogs mourn the death of its owner  Image result for dogs mourn the death of its owner


நாய்களுக்கு நுண்ணறிவு உண்டுதான்… ஆனால் இதெல்லாம் அதிசயமாதான் இருக்கு!

யானைகள் செலுத்திய மரியாதை நினைவுக்கு வருகிறதா?





2)  பிஞ்சு முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.
 

இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். 



 
சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.



3)  டெமென்ஷியா



மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்தில் முத்திரை பதித்து வரும் ஸ்கார்ஃப் (scarf), முதியவர்களுக்கு ஏற்படும் டெமென்ஷியாவை (ஞாபக மறதி நோய்) கையாள, இன்ஃபோசிஸ்  பவுண்டேஷன் நிதியுதவியுடன் புதிய மையத்தைச் சென்னையில் தொடங்கி இருக்கிறது.  மனநல மருத்துவர் ஸ்ரீதர் வைத்தீஸ்வரன் இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.  அவரைச் சந்தித்தபோது...


அது என்ன டெமென்ஷியா?
 
                                                                           Image result for dementia images


எல்லோருக்கும் ஞாபக மறதி ஏற்படும்.  அது டெமென்ஷியா கிடையாது.  ஆனால் வார்த்தைகளை மறந்து விடுவதும், பேச்சு சரியாக வராததும், மற்றவர்கள் பேசும்போது புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதும், உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போவதும், சமையலறைக்குள் நுழைவதாக நினைத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைவதும், பல வருடங்களாக ஒரே இடத்தில் வசித்தும் கூட வெளியில் சென்று வீடு திரும்பும்போது வழி தெரியாமல் தவிப்பதும், வயதானவர்களுக்கு ஏற்பட்டால் அது கவனிக்க வேண்டிய நிலையாகும்.  இது டெமென்ஷியவின் ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.


டெமென்ஷியாவுக்கு முதுமைதான் காரணம்.  மறதிநோய் தொடர்பான ஒரு கணக்கெடுப்பின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 சதவிகித ரிஸ்க், 75 க்கு மேல் 10 சதவிகித ரிஸ்க்,  85 வயதுக்கு மேல் 20% ரிஸ்க், 95 வயதுக்கு மேல் 40% ரிஸ்க் இருப்பதாகத் தெரிகிறது. 
 
                                             Image result for dementia images

ஆனால் எல்லா முதியவர்களையும் டெமென்ஷியாதாக்கும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.  இது வராமல் தடுப்பதற்கு நிறைய முறைகள் உள்ளன.  இதயத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்கிறீர்களோ, அவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும்.  எப்போதும் க்ரியேட்டிவ்வாக, சுறுசுறுப்பான முறையில் இயங்கினாலே இந்த நோய் வருவதைத் தவிர்க்கலாம்.

டெமென்ஷியாவை எப்படி அடையாளம் காண்பது?

கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்பார்கள்.  உணவு சாப்பிட்ட பிறகும் கூட உடனே வந்து மறுபடியும் சாப்பாடு போடச் சொல்வார்கள்.  இரவு பகல் தெரியாமை, நேரத்தை உணர முடியாத நிலை போன்ற அறிகுறிகள் அடிக்கடித் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.

சில வகையான டெமென்ஷியாக்கள் அல்லது டெமென்ஷியாவின் சாயலை ஒத்த நோய்கள் ஒருவருக்கு இருந்தால், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து இந்த மையம் சிகிச்சை அளிக்கும்.  இந்த நோய்க்கான தீர்வு முறைகளையும், நோய் வந்தவர்களுக்கு உதவும் வகையில் செயல் முறைகளை வகுப்பதும் இங்கு மேற்கொள்ளப்படும்.  விட்டமின் பற்றாக்குறையாலும், தைராய்ட் பிரச்னை போன்ற ஹார்மோன் குறைபாடுகளினாலும் இது போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.  அந்த மாதிரியான தருங்கங்களில் மருந்து மாத்திரைகள் தரலாம்.  டெமென்ஷியாதான் என்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் வேகமாக மோசமான நிலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் மருத்துவ சிகிச்சைகளும் இங்கு உண்டு. 

இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோய் வராமல் தடுக்கும் முறைகள், வந்து விட்டால் நோயாளிகளைப் பொறுமையுடன் எப்படிக் கையாளுவது ஆகியவற்றையும் இம்மையம் சொல்லித் தரும்  (சென்ற மாதம் கல்கியில் வெளிவந்தது - ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே பகிர்ந்தது.



படங்கள்   :   இணையம்

22 கருத்துகள்:


  1. அனைத்தும் பயனுள்ள தகவல் களஞ்சியம் நண்பரே சிரியா குழந்தையின் படம் சமீப காலமாக பலரது மனதையும் கணக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. மூன்று சம்பவங்களுமே வியப்பளிப்பதாக உள்ளன.

    நாய்களுக்குத்தான் எவ்வளவு நன்றி விஸ்வாசமும், நுண்ணறிவும் இயற்கையாகவே அமைந்துள்ளன ! ஆச்சர்யம் !

    மிரண்ட குழந்தை பற்றிப்படிக்க மிகவும் வேதனையாக உள்ளது.

    தீவிர டெமென்ஷியா நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகளை நினைத்தாலே பயம் ஏற்படுத்துவதாக உள்ளது.

    பயனுள்ள பகிர்வுகளுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. விலங்குகள் னுண்ணறிவு படைத்தைவைதான். அவற்றிற்கும் உணர்வுகள் உண்டு. நம்மைப் போல் வெளியில் காட்டத் தெரியாது. வேறு விதமாகக் காட்டும்.

    டெமன்ஷியா எனது மாமனார் அல்ஜிமர்...இதுவும் டெமன்ஷியா பகுதிதானே...வந்து நாங்கள் மிகவும் கவனித்துக் கொண்டு இறுதியில் சாப்ப்பாடுகூட சாப்பிடத் தெரியாமல்...பேச்சும் நின்று....ம்ம்ம்ம் காலமானார். அதே போன்று எனது அப்பாவின் அம்மாவும் என்னுடன் தான் இறுதி வரை இருந்தார்.92 வயது மாமானார் 90. பாட்டிக்கு கடைசி 8 மாதம் ...அவரைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமில் வைத்துத்தான் குளிப்பாட்ட வேண்டும். அப்படி ஒரு 4 மாதம்....நானும் எனது மகனும் தான் செய்வோம். அப்படி ஒரு நாள் தூக்கிக் கொண்டு வைத்ததும் மாற்றம் ஏற்பட்டு சரிந்தார்....டெமன்ஷியா அனுபவங்கள். நம்மைச் சுறு சுறுப்பாகவும், வயதானாலும் வாசிக்கும் பழக்கம், நிறைய பேருடன் பழகுவது, முடிந்தால் கை வேலை கள் செய்வது, பாட்டு பாடுவது, கேட்பது, ஏதேனும் ஒரு ஆக்டிவிட்டி இப்படி நம்மை வைத்துக் கொண்டால் இதைத் தடுக்கலாம் என்றும், தள்ளிப் போடலாம் என்றும் எங்கள் மருத்துவர்கள் அறிவுரை சொன்னார்கள். மட்டுமல்ல இது குடும்பத்தில் பரம்பரையாகவும் கூட வர வாய்ப்புண்டு என்றும் அதனால் ஏதேனும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். டயபட்டிக் என்றால் இன்னும் சீக்கிரமே வருமாம். முக்கியமாக நிறைய நண்பர்கள் இருந்தால் நல்லது நண்பர்கள், உறவினர்கள் அன்புடன் சேர்ந்து கொண்டாடுவது, களிப்பது என்று இருந்தால் நல்லது என்றார்...ம்ம்ம்ம் உலகம் போற போக்கைப் பார்த்தால் டெமன்ஷியா இன்னும் கூடும் போலத்தான் தெரிகின்றது...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் ஜேம்ஸ் ஹீரியட் (வெட்னரியன், இங்கிலாந்து) அவர் எழுதிய புத்தகங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். பல அனுபவங்களை அதில் எழுதியிருப்பார். மிகவும் அருமையாக இருக்கும். சுவாரஸ்யமாகவும் இருக்கும்....

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    ஐந்தறிவு உள்ள விலங்குகளின் செயல் வியக்கவைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி
    த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. நாய்கள் செலுத்திய அஞ்சலி நெகிழ வைப்பதோடு ஆச்சரியமும் அளிக்கிறது. அதேபோல யானைகள் தேடி வந்தது.

    படம் 2. முகநூலில் கண்டேன்.

    3. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  7. இந்த சிறு வயதிலேயே என்ன ஒரு துன்பம் ,பார்க்கவே பாவமாய் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  8. பவ் பவ்ஸ் ஆர் கிரேட் ! இன்னோர் சம்பவம் இத்தாலியில் உரிமையாளர் இறந்த பின் அவர் வளர்த்த செல்லம் funeral சர்விஸ் நடந்த சர்ச்சுக்கு தினமும் வருதாம் !
    அந்த பிஞ்சின் போட்டோ :( அழுகை வருது
    இன்று காலை கூட நானும் கணவரும் அல்சைமர் பற்றி பேசிகிட்டிருந்தோம் ..இங்கே நிறைய பேர் பார்த்திருக்கேன்
    என் கல்லூரி பேராசிரியை ஒருவரும் dementia வால் பாதிக்கபட்டுல்லார்..போன முறை சென்னையில் பார்த்தேன் ,சாப்பிட்டு முடித்து 10 நிமிடத்தில் மீண்டும் உணவு பரிமாற கேப்பாராம் ..

    பதிலளிநீக்கு
  9. நாய்களின் செயல் மெய் சிலிர்க்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  10. குழந்தையைப் பார்த்ததும் மனதில் வேதனை பொங்கியது. டிமென்ஷியா என்ன எந்த நோயுமே யாருக்குமே வராமல் இருக்கணும். விலங்குகளின் அன்பு மிகவும் போற்றத்தக்க ஒன்று. மறக்க முடியாத ஒன்றும் கூட!

    பதிலளிநீக்கு
  11. சிறு குழந்தையின் படம்
    மனம் கனக்கிறதுநண்பரே
    என்ன உலகம் இது

    பதிலளிநீக்கு
  12. விலங்குகள் பல சமயங்களில் மனிதர்களைவிட மேலானவை என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
    குழந்தையின்மனம் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கும்.?
    டெமென்ஷியா புதிய பெயராக இருக்கிறதே

    பதிலளிநீக்கு
  13. அந்தக் குழந்தையின் முகம் மனதை விட்டு அகல வெகுநேரம் ஆனது...

    பதிலளிநீக்கு
  14. மனதை தொடும் தகவல்கள்...

    இதில் நாய்கள் பற்றிய செய்தியை குழந்தை படத்துடன் இணைத்து யோசிக்கிறது மனம்...

    அந்த நாய்களுக்கு இருக்கும் ஈர மனதின் பாதியாவது மனிதனுக்கு இருக்குமானால் அந்த குழந்தைக்கு இந்த நிலை வந்திருக்காது அல்லவா ?

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  15. அனைத்துமே சிறப்பான தகவல்கள்.
    அந்த குழந்தையை பார்க்கும் பொழுது மிகவும் கலக்கமாக இருக்கு..

    பதிலளிநீக்கு
  16. குழந்தையின் மிரட்சி மனதைப் பிழிகிறது. நாய்கள் ஒரு பாடம் நமக்கு. முன்னமே போட்ட பெரிய காமேண்டைக் காணோம்னு திரும்பப் போடுகிறேன்..

    பதிலளிநீக்கு
  17. மோகன்லால் நடித்த 'தன்மாத்ரா' படத்தில் அல்சீமர் பற்றி தெரிந்து கொண்டேன்.. டெமென்ஷியா இப்போதான் கேள்விப் படுகிறேன்..

    பதிலளிநீக்கு
  18. நாய்களின் நன்றியுணர்ச்சி வியக்க வைத்தது! சுவையான தகவல்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  19. நல்ல தகவல்கள்.

    குழந்தையின் புகைப்படம் மனதைக் கலக்கியது....

    பதிலளிநீக்கு
  20. எனக்கு மிகத் தெரிந்தவருக்கு இது இருக்கிறது. என்னது டயபெடிஸ் இருந்தால் சீக்கிரம் வருமா. சாமி காப்பாத்து.
    அந்தக் குழந்தைக்கு வந்த துன்பம் யாருக்கும் வரக் கூடாது.
    யானைகள் நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே!

    நாய்களின் நன்றியுணர்ச்சி மெய் சிலிர்க்க வைத்தது.நன்றியை மெய்படுத்தவே பிறந்த விலங்கு.

    அந்த குழந்தையின் முகத்தில் தோன்றிய பயஉணர்ச்சி நெஞ்சை நெகிழ வைத்தது.

    புதுமையான வியாதி குறித்து படித்ததும் அதிர்ச்சியாயிருந்தது. வயதானால் மறதி வரும் என கேள்வி பட்டுள்ளேன். இப்படியா?

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. மிரண்ட குழந்தையின் படம் மனதை உருக்குவதாக உள்ளது. டிமென்ஷியா பற்றி ஏற்கெனவே தெரியும்.நாயின் சோக அஞ்சலி வியப்பை ஏற்படுத்தியது. விலங்குகளுக்கும் தாம் எவ்வளவு அறிவு?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!